இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்னபிற – சில ‘டயரி’ குறிப்புகள்

October 16, 2013

(அல்லது) டீடலஸ், இகரஸ் –  நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)

இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))

<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>

சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே  நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-(  ம்ம்ம் B-)!

ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…

என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான  தீர்வு இருந்தது.

கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.

எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது.   இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.

இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம்  என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.

ஆக, என் அதீத தன்னம்பிக்கைப் புல்லரிப்புக்குக் கேட்பானேன்! (… …  மெக்காலேயும் நானும் … …)

இளமையில், அது கொடுத்த லாகிரியில் – நான் செய்திருக்கும் தவறுகள், எண்ணிலடங்கா.

ஹ்ம்ம்… ஆனால், நான் இப்போது செய்து கொண்டிருக்கும் தவறுகளை, எண்ணிக் கொண்டுதான் செய்கிறேன். சும்மாவா சொன்னார், நம்முடைய திருவள்ளுவர், ‘எண்ணித் துணிக கருமாந்திரம்’ என்று?

சரி, இப்போது என்னுடன் அலைந்து கொண்டிருந்த கும்பலில் ஒரு பையனைப் பற்றி.

இவன் ஒரு புத்திசாலிப் படிப்பாளிப் பையன்; மகா துருதுரு – என் கும்பலில் இருந்த இரண்டொரு விதிவிலக்குகளில் ஒருவன். (இவன் ஒரு நாயுடுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கடைக்குட்டி. அப்பா ஒரு ஒரிஜினல் திமுக ஆள். நல்ல நேர்மையான மனிதர். அண்ணா தான் மூச்சு. 1960களில் கருணாநிதி மேலெழும்பி வந்தபோது அரசியலை விட்டே மனம் வெதும்பி வெளியேறிய பக்கா  சுயமரியாதைக் காரர்களில் ஒருவர். பின்னர், ஒரு காந்தியராக, கர்மயோகியாக மாறியவர். மரியாதைக்குரிய பெரியவர்.)

இவனுக்குப் பாவம், கவிஞனாக வேண்டும் என்று ஆசை. கவிஞனாக ஆவதற்கு கவிதைகள் எழுதவேண்டும், மகாமகோ கவிதைக்காரர்களைப் படிக்கவேண்டும், கட்டுடைப்பு செய்வதற்கு முன்னால் கட்டமைப்புகளைக் கற்றுக் கொள்ள வேண்டும், விடாமுயற்சி செய்யவேண்டும்  என்றெல்லாம்தானே நீங்கள் நினைப்பீர்கள். அவன் நல்ல படிப்பாளிதான் – இருந்தாலும், அவன் முதலில் தனக்கு ஒரு சரியான புனைபெயர் வைத்துக் கொள்ளவேண்டும், பின்னர் சாவகாசமாக கவிதை எழுத ஆரம்பிக்கலாம் என்ற எண்ணமுடையவனாக இருந்தான். வயதுக் கோளாறு, வேறென்ன சொல்ல…

மவுன்ட்ரோட் ‘த ஹிந்து’ அலுவலகத்திற்குப் பக்கத்திலிருந்த காதி க்ராமோத்யோக் பவனில் (இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை; இது மின்னணுவியல் கச்சாப் பொருட்கள் கிடைக்கும் ரிட்சீ தெரு பக்கத்தில் இருந்தது) இரண்டு பழுப்புக் கலர் மொடமொட மொரட்டுக் குர்த்தாக்களும் வாங்கியாயிற்று. கவிஞர் தயார். கவிதைகள் தான் பாவம், இன்னமும் வெளிவரவில்லை. பிரசவ வேதனை மட்டும்தான்.

மொதல்ல நோட்டுப் புத்தகம் வாங்குடா, எழுத ஆரம்பிடா, புனைபெயர் எழவ அப்றம் பாத்துக்கலாம், என்றேன். எப்படியும், ஒன்னோட உண்மையான பேரே நல்லாத்தான இருக்கு என்றேன்.

அவனுக்கு, தனக்கேற்ற ஆழமும் வீச்சும் வீரியமும் மிக்க இளமைத் துடிப்பை உள்ளடக்கிய பெயரை, கவிஞாவேசத்தை வெளிக்கொணரும், யுகப் புரட்சியை உணர்த்திடும் உன்னதப் புனைபெயரை வைத்துக் கொள்ள ஆசை.

‘அக்கினிக் குஞ்சு’ எப்டீடா இருக்கு என்று கேட்டான்.

ஆனால் எனக்கு அந்தப் பெயரில், ஏற்கனவே ‘சந்தேகாஸ்பதமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த’  இரண்டு இளம் ’தாடி-வுட்டுக்கின’ கவிஞர்களைத் தெரியும். ஆகவே சொன்னேன் – கொஞ்சம் சூடாவும் அசிங்கமாகவும் இருக்குடா. ஏற்கனவே வேற ரெண்டு பேர் இந்த பேர்ல எழுதறாங்க. அப்பால, பாரதியை ஒனக்கும் பிடிக்கும் தான? அவரை விட்டுர்ரா. இல்லேன்னாக்க, அவரை பொரியல் செஞ்சு சாப்டு. அதுவும் இல்லேன்னாக்க வெண்டக்காய் கத்ரிக்காய்னு…

அவனுக்கு, நான் சொன்னது பிடிக்கவில்லை. சும்மா சிலேடை பண்ணாதடா குசும்புப் பாப்பானே என்றான். ‘அக்கினிபுத்திரன்??’

என்னடா ஒனக்கென்ன திமிரா, ஏற்கனவெ ஒங்கப்பா கட்சீல ஏற்கனவே ஒரு அக்கினி யிருக்காரு, தெரியாதா? நீ வேண்டுமானால் இரண்டாம்  அக்கினிபுத்திரன் – அப்டீன்னு வெச்சிக்கோ? சரியா? இல்லன்னா அவ்ரு லாயிட்ஸ் ரோடு அக்கினி. நீ வண்ணாரப்பேட்டை அக்கினி! சபாஷ், சரியான போட்டி! தீப்பத்தி எறிய வையுங்கடா இந்த கவிதையுலகத்த… வண்ணை அக்கினி-ன்னிட்டு மட்டும் சுருக்கிடாத – ஏதாவது குசும்பு விமர்சகன் ஒன்னை வெண்ணை + அக்கினி = நெய்-யின்னு உருக்கிச் சாப்டே விடுவான், பாத்துக்கோ.

போடா, வேற ஏதினாச்சும் ஐடியா இருக்கா? புரட்சி பூபாளம் செங்குயில் மாரி ஏதாவது சொல்லுடா மச்சி, எனக்கு மண்ட காயுது…

ஹ்ம்ம்… இல்லன்னாக்க, டேய், நீ ஒரு நாய்டு மனவாடு தான, அத்தொட்டு ஏதாச்சும் வானம்பாடி  கட்பாடி, ஜம்பர், நாய்டுஹால் பாடி-ன்னிட்டு மவனே, போவாத ஊருக்கு மார்புக்கச்சைய போட்டுக்கினு போவப்போறியா? சாண்டில்யன் வந்து அந்தக் கச்சையை நெகிழ்த்திடுவார்டா, மச்சான், டேஞ்சர்.  ராஜமுத்திரை படிச்சிருக்கயில்ல? டேய், நீ ஏன் – ஜலதீபன் அப்டீன்னு வெச்சுக்கக் கூடாது?

டேய், கிண்டல் பண்றன்னிட்டு தெரியுது. ஆனா, ‘வாயுபுத்திரன்’ எப்டிடா இருக்கு?

டேய், நீ அழகாத்தானடா இருக்க? வாயுபுத்திரன்னா ஹனுமான் மாரி வருண்டா.  நீ என்ன என்னமாரி ஹனுமான் போல வாய்வீங்கியா இருக்க? அழகாதானடா இருக்க? மொதல்ல கவிதை எழுதுடா. சும்மனாச்சிக்கும் புனைபெயர் போங்காட்டமெல்லாம் வேண்டாண்டா. இந்த மாரி ஸெக்ஸியாக ஒரு புனைபெயர் வெச்சிக்கணும்னு யார்டா ஒனக்கு சொன்னாங்க? ஒங்கப்பா கிட்ட கேட்டியா?

என்னோட அப்பாவை ஏண்டா இதுல இழுக்கறே?

சரி இழுக்கல. இல்லேன்னாக்க, ஒன்னோட ஆதர்ச கவிஞர் ‘பசுவய்யா” மாரி ஒன்னோட புனைபெயர ‘காளையம்மா’ன்னிட்டு வெச்சுக்கலாமே?

”… …”

அட என்னடா ராக்கப்பா Bulஆக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடா… ஆஆஆ அஞ்சாறு ரூபாய்க்கு கழுதக்கவித… ஒன் நெஞ்சுக்கு பொறுத்தமடா… அட நாயூடூ … புதுக்கவித வைபோகமே… அட பிப்பீப்பீ டும்டும்டும்… (சரியான பாடல் வரிகள்: அடி என்னடி ராக்கம்மா)

… சரி. நீ ஏதோ ஒரு மூட்ல இருக்க. நான் வீட்டுக்குப் போறேண்டா.  நான் என்னிக்காவது திரும்பி ஒங்கிட்ட எப்பனாச்சியும் கருத்துக் கேக்கவந்தேன்னா, சாணீல தோச்ச ஜோட்டால என்ன அடிறா… ஏதோ பெரிய்ய மேதாவின்னு நெனப்பு, விமர்சனம் பண்ண வந்த்டான் பாரு சோமாறி.

-0-0-0-0-0-0-

… … பின்னர், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின் வீட்டுக்கு வந்தான். டேய், என்னோட கவிதைகளப் பத்தி, ஒன்னோட ஃப்ரேங்க் ஒப்பீனியன் குட்றா, எப்டீ இருக்குன்னு… ராவும் பகலும் ஒக்காந்து எழுதினேன்டா. நீ என்ன சொன்னாலும் ஃப்ரேங்கா சொல்லுடா –  நான் கோவிச்சுக்கவே மாட்டேன்.

ஒரு நோட்டுப் புத்தகத்துக்கு அழகாக ஜிகினா காகித அட்டை போட்டு, மணிமணியான எழுத்தில் (எனக்கு ஒரே பொறாமையாக இருந்தது என நினைவு, என் கோழிக்கிறுக்கல் கையெழுத்தை, பொதுவாக என்னாலேயே  படிக்கமுடியாது! ஆனால் அவனுடைய நோட்டோ, அழகான கேல்லிக்ரேஃபி பேனாக்களை வைத்து, இந்தியன் மசி உபயோகித்து அருமையான கருப்புக் கோட்டோவியங்களோடு இருந்தது) – ஆனால் சுமார் 110 பக்கங்களுக்குக் கவிதைகளோ கவிதைகள் – பென்ஸில்ஃபேக்டரி வசனங்கள்… எனக்கு மூச்சு முட்டியது. முன்னுரைக்காக என்று முதல் 5 பக்கங்களை அவன் வெற்றுத் தாட்களாக  விட்டிருந்ததால், கடவுளுக்கு நன்றி சொல்லி… அரை மணி நேரத்திற்குப் பிறகு…

டேய், நீ நம்பளோட தருமு சிவராமு,   ஆத்மாநாம்,   ஞானக்கூத்தன், பசுவய்யாஎல்லாம் படிச்சிருக்கயில்ல. நம்பவே முடியல, இவ்வளவு படு கேவலமா எழுதியிருக்கயே! என்னடா ஆச்சு உனக்கு. சாதா உரைநடைய ஒடச்சி ஒடச்சி போட்டு எதுகைமோனை எல்லாம் சேர்த்தா ங்கொம்மாள, புதுக்கவிதையாயிருமா, இன்னாடா இது? ஒரே பென்ஸில் ஃபேக்டரி (அவனுடைய அப்போதைய ஆதர்சமான ‘இன்குலாப்’ என்ற ஒரு கவிஞரின் பெயரை வைத்து எங்களுடைய கிண்டல்; ink lab — pencil factory) கடபுடாவா இருக்கே! காலனியாதிக்கத் தொழுநோய்த் தேமலை இன்னமும் வெரட்ட முடியலையாடா? ராஜராஜசோழப் புல்லன காயடிச்சி வைக்கோலனா ஆக்கலயா, இவ்ளோ நாளுக்கப்புறமும்? ஏண்டா இப்டியெல்லாம் உச்சாடனவாதத்துல எழுதறீங்க… இதெல்லாம் வெறும்ன வுட்டுட்டு, நீ அழகா வரையற இல்ல, நீ ஒரு ஆதிமூலம் போல ஆகறத வுட்டுட்டு – என்னடா இது கருமாந்திரம்… தூ.

ஒனக்குப் பொறாமைடா, அதுதான் ஒன்ன இப்படி சொல்ல வைக்குது. ஒன்னோட பாப்பார புத்திய காட்டிட்ட பாரு… வந்தேறிங்க கிட்ட பேச்சுக் கேக்க வந்த என்னத் தான் ஜோட்டால அடிச்சிக்கணம்…

… சிரித்துக் கொண்டே எனக்கு நிச்சயம் பொறாமைதானென்று சொல்லி – ஆனாக்க, பாப்பான் வீட்டுக் காப்பிக்கு மட்டும் நேரத்துக்கு டாண்ணுனு வந்திருவ இல்ல என்று – அவன் நோட்டுப்புத்தகத்தின் முதல் பக்கம் சென்றேன்.

அதிர்ச்சி.

அவனுடைய புனைபெயர் – இகாரஸ்தாசன்! (அய்யய்யோ!!)

இந்தச் சமயம் ஒன்று சொல்லவேண்டும்: எங்கள் இருவருக்கும் ஒரளவு கிரேக்கக் கதைகள் பற்றிய அறிவு இருந்தது. இருவருக்கும் பிடித்த கதைகளில், வேறு வேலைவெட்டியற்ற நேரங்களில், எங்களுக்குள்ளேயே க்விஸ் போட்டியெல்லாம் நடத்திக் கொண்டிருப்போம் வேறு.

டேய், ரொம்ப அதிர்ச்சியா இருக்குடா! மொதல்ல அவன் இகாரஸ் இல்ல, அவன் இகரஸ் தான். ஒனக்கு இந்த எழவெல்லாம் தெரியுமேடா?

தெரியும்தான். ஆனாக்க இகரஸ்-னா பேரு குறுகிடிது. இகாரஸ் அப்டீன்னா நெடில், கொஞ்சம் விஸ்தாரமா, ஆசுவாசமா இருக்கு. அதனாலதாண்டா ஒரு கவித்துவமா, கா கா கா. இகாரஸ். ஈ… கா… ரா… ஸூ…  இல்ல, கா தான், புரியுதா?

ஏண்டா, எதற்கெடுத்தாலும் கா கான்னு கத்தி, நம்ப தமிழ்நாட்டையே காக்காக் கூட்டமாக்கிட்டீங்களேடா, கழுதப் பசங்களா? ஒங்க ஆள் வஜனம் எழுதின பராசக்தி பாத்துருக்கயில்ல??

சரி,  அதவிடு, ஆ-ன்னா ஊ-ன்னா நீ நம்பாள் கிட்டவே போயிட்ருக்க பாரு… ந்யூமராலாஜி படி, இகரஸ்ண்றத,  இகாரஸ்-னு வெச்சிக்கிட்டேன்னே வெச்சுக்கோயேண்டா… இதென்னடா, ஒரு சிம்பிள் மேட்டர் தானடா – இத ஒரு பெரீய்ய விஷயம்னிட்டு குதிக்கற… போடாங்…

டேய்! இந்த இகரஸ் பையன் தன்னோட அப்பன் சொன்ன அடிப்படை விதிகளயோ, பொது அறிவயோ – எத்தையும், ஒரு எழவயும் உபயோகிக்காம, புரிஞ்சிக்காம உணர்ச்சிகரமா எத்தையோ செஞ்சி, கடல்ல விழுந்து செத்தான். ஆனா நீ என்னடான்னாக்க ஒன்னோட புனைபெயரை இவனோட பேர பின்பத்தி  வெச்சிக்கிட்ட! நீ முதல்ல, ஒம்பொனபேருக்கான அடிப்படைகளா சொன்னது இளமைத் துடிப்பு + வீரியம் + சாதுர்யம் + பேச்சு + வீச்சு தானடா??

ஆனாக்க மேதாவியே, இந்த இகாரஸ் கதேல ஒரு இனம்புரியாத மெலிதான துயரம் இருக்கே! அதப் பாருடா முட்டாள்…

சரி, மெலிதான கிலிதானன்னு ஒன்னோட சுஜாதாதாசத்தனத்த வெளிக்கொணறாத சரியா? ஏன், ஒன்னோட புனைபெயர் சுஜாதாதாசன் அப்டீன்னு வெச்சுக்கக் கூடாது? இல்லேன்னாக்க கொஞ்சம் அரூபமா ‘சுஜா தாதாசன்’ அப்டீன்னு கூட வெச்சுக்கலாம். அப்பால, தாதாயிஸ்ம், ஸால்வடோர் டாலி இப்டீஅப்டீன்னிட்டு கொஞ்சநாள் ஓட்டலாம். பின்னாடி ஒங்க சாருநிவேதிதா கிட்ட டபக்குனு ஃப்ரென்ட் கூட ஆய்டலாம், என்ன நான் சொல்றது? ஒங்க வண்ணாரப்பேட்டலேர்ந்து அவ்ரோட அண்ணா நகருக்கு பஸ்ஸெல்லாம் இருக்குடா இப்போ! அந்த டீடலஸ் – அவன் என்ன பாவம்டா பண்ணினான், பாவம், அவனுக்கு ஒரு சான்ஸ் கொடேண்டா.

இல்லடா, எனக்கு டீடலஸ் பிடிக்கலே, அவன் கொலைகாரன்; பாவம், அந்த இளமையில் இறந்த இகாரஸ்ஸ, என் மூலமா கொஞ்சம் மீட்டெடுக்கப் பாக்கலாம்னிட்டு நெனக்கறேன்… மெழுகு உருக, சிறகுகள் சிதறிக்கொட்ட பதறி அவன் கடலில் விழும் காட்சி, திரும்பித் திரும்பி என்னோட மனக்கண்ல வருதே!

ஆனாக்க நீதானடா சொன்ன, கவிஞன்னாக்க சிறகடிச்சுப் பறக்கணும் னிட்டு, அவன் யாருக்கும் அடிமையா, தாசனா இருக்கக்கூடாதுன்னிட்டு…

சரி, அப்டீன்னாக்க, ஒன்னோட புண்ணாக்கு பாரதியே தனக்கு ஷெல்லிதாசன் அப்டீன்னிட்டு பேர் வெச்சுக்கலையா, போடா போ போக்கத்தவனே…

டேய், நீ அப்டி சொன்னேன்னிட்டு சொன்னேன், போக்கத்தவனே, எனக்கே திருப்பறியா? பாரதி கிட்ட போகாத நீ.  ஒன் பார்வைல ஒன்னோட கருத்துகள் மூலமாவே நீ செய்யறத பாரு… சரியாவா இருக்கு, நீ பண்றது? நீ தானே சொன்ன – யாருக்கும், எக்காலத்திலும் தாசனா இருக்கக் கூடாதுன்னிட்டு?

ஹ்ம்ம்… சரி, தாசன் வேணான்ற, அப்போ இகாரஸ்குஞ்சு அப்டீன்னிட்டு வெச்சுக்கட்டமா? இதுக்கு என்னடா சொல்ற?

டேய், அந்த குஞ்சைப் பிடிச்சுகிட்டு தொங்காதறா… அந்த இகரஸ் பையன் சின்ன பையன், அவனோடது சின்னதா வேற இருக்கும். ஒனக்கு வேற பேரே கெடக்கலியா? வுட்டுற்றா அந்தப் பையனை, பாவன்டா அவன்.

ஒங்கிட்ட மதிப்புரை கேட்கலாம்னிட்டு வந்தேன், என்ன ஜோட்டால அடிச்சிக்கணும். கொழப்பி விடாதறா…

அய்யோ, மதிப்புரை எல்லாம் என்னால முடியாது. மிதிப்புரை வேணுமா சொல்லு, இப்பவே தர்ரேன். எப்டியும் நீ மதிக்கற கவிஞர் யாராவது பெரீவங்க கிட்ட கேள்றா – நான் என் வாழ்க்கயில ஒரு கவித, கத கூட எழுதல. ஏதோ வளவளான்னிட்டு பேசுவேன், அவ்ளோதான்! நல்லா தெரிஞ்சவன்னிட்டு, என்ன மாரி கண்ட பொறம்போக்கு கிட்டவெல்லாம் தொங்காதடா. ஒன்னோட சுயமரியாதையெல்லாம் என்னடா ஆச்சு? …சோமாறி, எல்லாத்துக்கும் முன்னாடி, மொதல்ல கவிதைன்னு ஒண்ணையாவது எழுதுறா, சோம்பேறி.

போடாங்.. அப்போ என் பெயரை ஃபீனிக்ஸ்குஞ்சுன்னிட்டு வெச்சுக்கப் போறேன். எரியூட்டப் பட்ட பறவை கருஞ் சாம்பல்லேர்ந்து உயிர்த்தெழும் படிமம் அட்டகாசமாக இருக்கும்ல?

எக்கேடோ கெட்டுப்போ. ஆனா, பறவையோடது, மனுஷனோடத விட ரொம்ப ரொம்ப சின்னதுடா…. எப்டிறா ஒன்னப்  போயி அப்டி பாக்கறது! நீ வேற வாட்டசாட்டமா கரியண்ட கடோத்கஜன் மாரி இருக்க! ஆறரையடி ஒசர ஆஜானுபாகு…

இரண்டுபேரும் சிரித்தோம்.

ஏண்டா, எனக்குத் தெரிஞ்சு ‘ஹெர்குலீஸ்’ அப்டீன்னிட்டு யாரும் தமிழ்ல எழுதல – நீ அத வெச்சுக்கலாமேடா! பராக்கிரம, வீரக் குறியீடுக்கு இதை விட என்ன பெட்டர் பெயர் கெட்ச்சுடும், சொல்லு? ஃபாரின் பேருக்கு ஃபாரீன் பேரும் ஆச்சு என்ன சொல்ற?

டேய், ஹெர்குலீஸ்-னாலேயே எங்கப்பா ஓட்ற அந்த டப்பா சைக்கிள் தாண்டா ஞாபகம் வருது. அது ஒரு நடமாடும் லொடலொடா டமாரம். அந்த வெக்கக்கேடோட பேரைப் போய் வெச்சுக்க சொல்றியே! என் அப்பாவே என்ன கிண்டல் பண்ணுவார்டா…

சரி, நெருடாதாசன் கூட பரவால்லடா – அத வெச்சுக்கலாமே! பாப்லோ கோச்சிக்க மாட்டார்டா. அப்றம் — சிலே, புரட்சி, ரத்தக் களறி, ஸால்வடோர் அய்யன்டே அப்டீன்ன்னு விரிச்சிக்கிட்டே போலாமே!

அய்யோ, அது கொஞ்சம் நெரடலாவே இருக்கும்டா…

… … …

ஹ்ம்ம்ம்… சரி – நீ என்னவோ பேரு வெச்சுக்கோ, என்னால ஒனக்கு உதவ முடியலடா, மன்னிச்சிக்கோ. ஆனாக்க, தருமு சிவராமுவ பயமுறுத்தற மாதிரி எழுதுடா மச்சான். ஒன்னால முடியும்டா… எவ்ளோ படிச்சிருக்க, எவ்ளோ மூளயிருக்கு ஒனக்கு! கற்பனையும் இருக்கேடா! ஆனாக்க அந்த பென்ஸில் ஃபேக்டரிய வுட்டுற்றா… கார்பன் காப்பிக் கவிதைங்க நமக்கு வேண்டாண்டா…

இரண்டுபேரும் சிரித்தோம்.

என் அம்மா இரண்டு பேருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார். என்னப்பா வீட்ல அம்மா அப்பால்லாம் சௌக்கியமா?

எனக்கு ஒரே அப்பாதாம்மா.  (என் அம்மாவுக்கு இந்த விரச நகைச்சுவை புரியவில்லை. நான் புளுக்கென்று சிரித்துவிட்டேன்)

ஹ்ம்ம்… வீட்ல சௌக்கியமான்னு கேட்டேம்பா.

வீட்லயும் சௌக்கியம், வெளீலயும் சௌக்கியம். எல்லாம் நல்லா இருக்காங்கம்மா, பெரியவங்க ஒங்க ஆசீர்வாதம்.

அக்கா எப்டி இருக்கா? கல்யாணத்துக்குப் பாத்திண்ட்ருக்காங்கன்னு சொன்னியே?

நல்லாதான் இருக்காம்மா. ஆனா, ஜாதகம் ஒண்ணும் பொருந்தி வரல்லங்கறாங்க.

சரி. பகவான் கிருபையில எல்லார்க்கும் நல்லதே நடக்கும், சரியா? ஒங்க அம்மா அப்பாவை நான் கேட்டதா சொல்லு. உன் அக்காக்கு என் ஆசிகள். ஒரு நாள் அவள வீட்டுக்கு கூட்டிண்டு வா. நான் உள்ள போறேன். நீங்க பேசிண்ட்ருங்க.

சரிம்மா.

-0-0-0-0-0-0-

… அற்புதமான மனிதர்கள்.  அடிப்படை நேர்மையும், படிப்பும், நகைச்சுவை உணர்ச்சியும், தளறா உழைப்பும் கூடி வந்தவர்கள். இவர்களுடன் பழக லபித்ததற்கு, கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் உண்மையிலேயே ஒரு பாக்கியசாலிதான்.

ஆனால், இவர்களுடைய தொடர்புகள் எல்லாம் அறுந்து (உண்மை: நான் நட்புகளை வளர்க்க, போஷகம் செய்யத் தெரியாதவன்) சுமார் 20 வருடங்களுக்கு மேலாகி விட்டன. எங்கு இருக்கிறார்கள் என்றே சரியாகத் தெரியவில்லை – ஆனாலும் இவன் பிற்காலத்தில் – சுமார் பத்து வருடம் கழித்து, ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை, சொந்தக் காசில், சொந்தப் பெயரில் வெளியிட்டான் எனக் கேள்விப்பட்டேன்.

அப்போது சுட்டுப்போட்டாலும் தெலுகு தெரியாவிட்டாலும், இப்போது தெலுகுத் திரைப்பட உலகில் இருக்கிறான் எனக் கேள்விப் படுகிறேன்; எவ்வளவு படுபுத்திசாலிகள் இப்படி இந்த உலகத்தைத் தஞ்சமடைந்து – அற்பர்களோடு கலந்து, சுயத்தை இழக்கிறார்கள் என நினைத்தால், மிக வருத்தமாக இருக்கிறது; ஆனால், எது எப்படியோ, இவர்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.

ஆனால், கொஞ்சம் யோசித்தால் — இவர்களை, இவர்களோடு இயங்கிய தருணங்களை, இப்போது நினைத்தாலும் மிகவும் நெகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இது போதும்தான்.

குறையொன்றுமில்லை, நரைமுடிக்கண்ணா…

-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

3 Responses to “இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்னபிற – சில ‘டயரி’ குறிப்புகள்”

  1. அன்புடன் பாலா Says:

    எழுத்து, நகைச்சுவை என்ற 2 விஷயங்கள் மேல் உங்களுக்கிருக்கும் ஆளுமை என்னை எப்போதும் பிரமிப்பில் வைத்திருக்கிறது. நெஜமா சொல்றேன், நீங்க ஒரு நல்ல எழுத்தாளர் ஆகியிருக்கலாம், ஆனா அது சோறு போட்டு இருக்குமா என்று தெரியவில்லை.. குழப்பம் :)

  2. அன்புடன் பாலா Says:

    Ram,
    When I made the earlier comment, I was actually confused about your identity! Sorry for the confusion
    Please ignore my second sentence in earlier comment. But my first statement is a valid opinion :)


  3. […] முடிந்தால் படிக்கவும் – இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: