எஸ். ராமகிருஷ்ணன், ஜென், மாருதி ஸ்விஃப்ட், வேகன்ஆர், எஸ்டீம், ஆம்னி, 800… க்யூகோ, திரூபா … பேருரை, உரை, நரை, சிரை… அய்யோ! சாருநிவேதிதா!! அய்யய்யோ!!!

August 14, 2013

… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.  அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு  ஒன்றுதானே!

எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு  நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!

… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே!  ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான்எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.

ஹ்ம்ம்… நான் எத்தனை மணி நேரங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கிறேன்? அந்தத் தூக்கத்துக் கனவுகள் எவ்வளவு பேரால் காணப் பட்டிருக்கும்…  வரலாற்றின் காலவோட்டத்தில் அந்தக் கனவுகள் மவுனமாக எவ்வளவு மானுடர்களை அவதானித்துக் கொண்டிருக்கும். அய்யய்யோ! விட முடியவில்லையே இந்த வேதாளத்தை!

நான் எவ்வளவு வேதாளங்களைப் பார்த்திருப்பேன்? எவ்வளவு வேதாளங்களின் கண்கள் என்மேல் கவிந்திருக்கும்… அடச்சே!  சனியன், இந்த நடை நான் எவ்வளவு முறை முயன்றாலும் அவ்வளவு தடவை மீண்டெழுந்து வருகிறதே…

ஆ! இந்த நடை, எவ்வளவு  எஸ்.ராமகிருஷ்ணன்  கட்டுரைகளைப் பார்த்திருக்கும்…

-0-0-0-0-0-0-

வரவர ஏன் இப்படி ( = இப்படி மட்டுமே) எழுதுகிறார் இந்த மனிதர்!  எனக்கு மிகமிகமிகச் சலிப்பாக இருக்கிறது. இவர்தானா முன்னொரு காலத்தில், எனக்குப் பிடித்த சில அழகான சிறுகதைகளை எழுதியுள்ளவர்? என்னால் நம்பவே  முடியவில்லை. எனக்கு வெறுத்து  விட்டது.

ஹ்ம்ம்… கண்டமேனிக்கும், அவருடைய கருத்துக்களை – நேரில் பார்த்தது போல மட்டும் எழுதாமல் – பொத்தாம்பொதுவாகவும் பொளேரென்று ஒரே மட்டையடியாகவும்  மண்டையில் அடிக்கிறார்! எனக்குத் தோன்றுகிறது – ஒரிரு புத்தகங்கள் படித்து, ஒருதலைப்பட்சமாக எழுதி, இவர்,  தமிழ்வாணத்தனமாக ‘மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்’ ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறாரோ?

அல்லது, ஆனியன் பக்கோடா பொட்டலம் கட்டி வந்த நூலை வைத்துக் கொண்டு, ஒருகால்,  ஒரு பெனாரஸ் பட்டுப்புடவையையே நெய்யப் பார்க்கிறாரோ என நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாகவும் இருக்கிறது.

இவருடைய ‘இக்யூவின் காதல்பாடல்கள்’ என்கிற ஒரு அண்மைய கட்டுரைக்கு வருவோம்.

இந்தப் பதிவு இப்படி ஆரம்பிக்கிறது:

”ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே,

ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை,

இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர்.”

இந்த இடத்திலேயே க்றீச்சிட்டுவிட்டது! *ப்ச*

எஸ். ராமகிருஷ்ணன் - ஜென் - கருத்துப் படம்...

எஸ். ராமகிருஷ்ணன் – ஜென் – கருத்துப் படம்…

எங்கிருந்து, எந்தத் திசையிலிருந்து உரிக்க ஆரம்பிப்பது இந்தக் கந்தறகோளக் கட்டுரையை…

>> ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே,

ஜென் கவிஞர்கள் நாடோடிகள் – இதை எப்படி பொத்தாம்பொதுவாக தருக்கமேயில்லாத குதிப்புடன் எழுதுகிறார்? ஒரு தமிழ்நாட்டு டொக்கில்   இருக்கும், நிறையப் படிக்காதவனாகிய அஞ்ஞானியான எனக்குத் தெரிந்தே பலப்பல  அற்புதமான ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இல்லாமல் — மடாலயங்களிலும், தோட்டவேலைகளிலும், சமையல் வேலைகளிலும் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கின்றனர்… செருப்பு தைப்பவர்களாகவும், விவசாயிகளாகவும், தேன் சேகரிப்பவர்களாகவும்,  புணர்ச்சி மட்டுமே கண்ணாக இருக்காமல் மிகவும்  பொறுப்புணர்ச்சி மிக்க குடும்பஸ்தர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

>> நாடோடிகளாக இருந்த காரணத்தால்  அவர்கள், பயணவழிகளில் வேசைகளிடம் சென்று இரவைக் கழித்தார்கள்.

இது இரண்டாவது தர்க்கமற்ற குதிப்பு. இதை எப்படி எழுதுகிறார் அவர்? ஒருவேளை இக்கவிஞர்களை திராவிடக் கொழுந்துகளுடன் இணைத்துக் குழம்பி விட்டாரா? இல்லாவிட்டால், காலயந்திரத்தில் ‘பயணித்து’ எவ்வளவு  ஜென் கவிஞர்கள் வேசைகள் வீட்டிற்குச் சென்றார்கள் எனப் பார்த்திருப்பாரோ? இல்லாக்காட்டீ நம்ப பட்டினத்தார் கூடக் கொஞ்சம் குழப்பியடித்துக் கொஞ்சம் கன்ஃபூஸ் ஆய்டிச்சா?

எப்படி இரவை மட்டும் தான் அங்கு கழித்தி ருக்கிறார்கள்? பகலில் அவர்கள் கூட்டிக் கொண்டிருந்தார்களா? கணக்கு எழவு, சரியாகவே வரமாட்டேன் என்கிறதே!

இதில் என்ன அய்யா இயல்பு  இருக்கிறது? நாடோடிகளாக இருந்தால், பொதுவாக வேசைகளுடன் இரவைக் கழிப்பார்களா? என்ன உளறலய்யா இது! எப்படிப்பட்ட கீழான குற்றச்சாட்டும், மட்ட ரகமான பொதுமைப் படுத்தலுமய்யா இது! ’சிங்களபௌத்தப் பேரினவாத ராஜபக்ஷ’வின் காதில் விழுந்தால்  வம்பாகப் போகாதா?

இப்படி ஏகத்துக்குத் திரித்துத் திரித்து எழுதினால், மெய்க்காப்பாளராக ஏதாவது துணையெழுத்தைக் கூட்டிக் கொண்டு சென்றாலும், அதை மீறி, தேசாந்திரியின் திரியைக் கொளுத்திப் போட்டுவிடமாட்டார்களா?

அல்லது, இது ஏதாவது, மானாவாரியாக மொழிபெயர்ப்புச் செய்ய முயன்றதன் பக்க விளைவா? எல்லாம் அந்த புத்தனுக்கே வெளிச்சம்…

//  ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியோ ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை

அப்படியா என்ன? அதிகம்  என்றால் என்ன? நீங்கள் யார் யாரைப் படித்திருக்கிறீர்கள்? என்னென்ன கவிதைகள் படித்திருக்கிறீர்கள்? அல்லது நீங்கள் படித்த புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பதால் அந்தக் கருத்தைச் சல்லீசாகக் கடன்வாங்கி  ஆடித் தள்ளுபடியில் கூவிக்கூவி விற்கிறீர்களா?

// இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர்  இவர்.

இக்யு மட்டும்தான் இப்படி எழுதினாரா? கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும் – இருக்கும் இருக்கும், நீங்களே  எழுதியிருப்பதால், அப்படித்தான் இருந்திருக்கும். அப்படியே இல்லையென்றாலும் வரலாற்றை மறுவாசிப்பு,  மறுவுருவாக்கம் செய்து விடலாம்… உங்கள் விருப்பம் — வரலாற்றின் பாக்கியம். வரலாற்றின் பாக்கியம் —  ராமசாமி (இது அடியேனல்ல – அப்புசாமி-சீதாப்பாட்டி  புகழ்ப் பெருந்தகையைத் தான் சொல்கிறேன்)

crazyclouds_titlepageசரி – விதிவிளக்கு வீட்டுவிலக்கு போன்ற நம்மாள் சுளபமாக விலக்க முடியாத விவகாரங்கலை விட்டுவிட்டு இந்த Crazy Cloud விஷயத்திற்கு வருவோம்… ஸறீங்க்ளா? அல்லோ,  எங்கேர்ந்து சார் பேஸ்றீங்க? ஹல்லோ, அல்லோ… ஒங்ளோட எஃபெம்ல ஒங்ளுக்கு றொம்ப் நல்லா பிட்ச்ச்ச்ச் பாட்ட இப் சொல்ங்ங்க… ஒங்லுக்காக இப்வே போட்றோம்! வோக்கேவா? அத்கு முன்னாடி ஒர் சின் கம்மர்ஷ்யல் ப்றேக் – வோக்கேங்க்ளா?? (மன்னிக்கவும், நம் திராவிடத் தமிழர்களின் ரேடியோ எழவுகளைச் சிலசமயம் கேட்கவேண்டிவந்து விடுகிறது )

உன்ஸுய்  – அதாவது,  மேக- நீர் எனும் பதம் ஜென் துறவிகளைக் குறிப்பிட / அழைக்க அக்காலங்களில் ஜப்பானில் உபயோகப் படுத்தப்பட்ட ஒரு வெகு சாதாரணப்  பெயர். இதில் மேகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு முன்னால் பைத்தியக்காரன் என்கிற பதத்தைச் சேர்த்து இந்த இக்யு – தன்னைக் க்யொ-உன் – பைத்தியக்கார மேகம் – என்று அழைத்துக் கொண்டார். இதில் அவருடைய வார்த்தைஜாலம் வெளிப்படுகிறதே ஒழிய என்ன எழவு தனித்துவம்  இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.  ஒரு வேளை இப்படி ஜென் – பைத்தியம் – பிச்சு ப்ராந்து எனக் கைவல்ய நிலை விரிந்தால்தான் நம் தமிழர்களுக்கு – அதுவும் மடத் தமிழர்களுக்கு  – மடாலய ஜென் பௌத்தம் பற்றித் தெளிவிக்க முடியும் எனும் எண்ணமா? என்னமோ போங்க

… இக்யுவின் ஆளுமை என்பது மகத்தானதும் அற்புதமானதும், விகசிப்புகள் நிறைந்ததும் தான். ஆனால் — ஆனால்… ஒரு விதமான பின்புலம், முன்புலமும் இல்லாமல் எழுதப்பட்ட எஸ்.ராமகிருஷண கட்டுரையில் – இக்யு யார் (அவர் அப்போதைய ஜப்பானிய மஹாராஜாவின் ‘முறைதவறிப் பிறந்த’ மகன்), அவருடைய முதல் குரு யார், மானசீக குரு யார்,  மகாமகோ குரு யார், சீன வழிபாட்டு மடாலயமுறைகளுக்கும் (கோஸன்) ஜப்பானிய முறைகளுக்கும் இருந்த முரணியக்கங்கள் அதன் விளைவான இக்யுவின் பார்வை-விசாலமானமை, அப்போதைய சமூகச் சூழல் இன்னபிறவும் – எழுதப் படாமல் – கவிதைகளும் கந்தறகோளமாகப் பெயர்ப்பு செய்யப் பட்டுள்ளன… உண்மையில் இந்தக் கட்டுரையின் (அதாவது எஸ் ராமகிருஷ்ண கட்டுரையின்) குவிமையம் என்ன என்பதே எனக்குப்  புரியவில்லை!

ஹ்ம்ம்… இச்சமயம், இக்யுவின் ஓரினச் சேர்க்கை அனுபவங்கள், குடியாட்டம், கூத்து, தற்கொலை முயற்சிகள் பற்றியெல்லாம் எழுத, எனக்கு (= அதாவது, எனக்கே!) கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது – உடனே சாருநிவேதிதா அவர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு, தமிழில் வேற்று நாட்டு ஆட்களைப் பற்றி எழுத, அதுவும் இந்த பாலியல் ‘ஸெக்ஸ்’ விவகாரங்கள் பற்றி எழுத தனக்கு மட்டுமே பாத்தியதை உண்டு,. அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி என்னுடைய அஷ்டகோணல் பக்கங்களில் நான் எழுதியிருக்கிறேன். ஸேடோமேஸோகிஸ்ம் என்கிற மங்கோலிய வார்த்தையை முதலில் தமிழில் உச்சரித்ததே நான்தான். உண்மை இப்படி இருந்தாலும்  எனக்கு ஒரு அற்ப ஞானபீட விருதைக் கூடக் கொடுக்காத நொபெல் கமிட்டியெல்லாம் ஒரு அகில இந்தியக் காங்கிரஸா? ஆகவே, ஓரினச் சேர்க்கை முறைகளை ஒரு முறை கூட பயில நினைக்காத அசோகமித்திரன் ஒரு கயவாளி, ஆகவே, போனஸ் இணைப்பாக இந்த அயோக்கியர் புகழ்ந்த உத்தமத் தமிழ் எழுத்தாளரும் சப்பை – இதனால் இனிமேல், நான் முன்னமே செய்திருக்கும் தியாகங்களைப்போல, இந்தப் பாழாய்ப்போகும் தமிழிலே எழுதவேமாட்டேன், என்னைக் கொண்டாடும் மங்கோலியாவுக்கே போய் ஸெட்டில் ஆகி விடப் போகிறேன், மங்கோலிய மொழியில் எழுதி தெர்மோட்டைனமிக்ஸில் நான் கண்டடைந்த உயரங்களுக்காக  (’ஸீரோ டிகிரி’) இயற்பியலுக்கான நொபெல் பரிசு வாங்கப் போகும் என்னுடைய தகுதியெல்லாம் முண்டங்களான உங்களுக்கு எப்படித் தெரியும் … …   என்று எழுதினால், எனக்குத் தாங்காது.

ஹ்ம்ம்… இந்த ‘இக்யூவின் காதல்பாடல்கள்’  எனும் எஸ்.ராமகிருஷண கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளுக்கு மேலும் முழுவதும் படித்தேன் — மிகவும் கஷ்டப் பட்டுத்தான் – என் பொறுமைக்கு அளவேயில்லை. ஆனால், முழுக் கட்டுரையையும் ‘விமர்சனம்’ செய்ய எனக்குத் திராணியில்லை. மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-0-

இப்போது இவருடைய சமீபத்திய பதிவு – க்யூகோவின் மகள்.

ஸ்ஸ்ஸ்… இதன்மேல் எனக்கு ஆயிரம் பிரச்சினைகள் – இக்கட்டுரை முழுவதுமாக அள்ளித் தெறித்திருக்கும் புள்ளிவிவரங்கள், என்னை  விடவும் மிகமோசமான இலக்கண/எழுத்துப் பிழைகள் உட்பட. ஆனால் என்னை மிகவும் படுத்திய பெயர்ச்சொல் மயக்கங்களை மட்டும் கொஞ்சம் கரித்துக் கொட்டிவிட்டு முடித்துவிடுகிறேன்.

எங்கிருந்துதான் இவர் உச்சரிப்புக்களைப் பிடிக்கிறாரோ, அது அந்த ஆண்டவனுக்கே (அதாவது கருணாநிதி?) வெளிச்சம். அசல் ஃப்ரெஞ்ச் மொழியையும் உபயோகிப்பதில்லை – பரவலான ஆங்கில உச்சரிப்புக்களையும் உபயோகிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு – இரண்டுக்கும் சராசரி உச்சரிப்பை எடுத்து, பின் தமிழ்ப் படுத்தி, படுத்திப்படுத்தி  எடுக்கிறார். இதனால் பல பெயர்கள் இங்கிலாந்தும் போகாமல், ஃப்ரான்ஸிலும் இருக்க முடியாமல் – பாவம், நடுவிலேயுள்ள இங்க்லீஷ் கால்வாயில் விழுந்து உயிரை விடுகின்றன. (உச்சரிப்புக்கள் -> எழுத்துருக்கள் பிணைப்புகளில் நம்  தமிழ் மொழி மலடு தான் – இந்த எழவெடுத்த மொனொஸில்லபரியால் தமிழைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் எவ்வளவு பிரச்சினைகள்)

Victor Hugo- விக்தொஹ் யுகொ – இதை ஆங்கிலப் படுத்தி = விக்டர் ஹ்யூகோ – எனச் சொல்லலாம். ஆனால் இவர் க்யூகோவாக மாறிவிடுகிறார். இந்த க்யூகோ சில சமயங்களில் கியுகோ-வாகவும் மாறி விடுகிறார்!

Adele – அடெல் – இதனை அடில் என்று சொல்லலாம். ஆனால் அடேல் என்று மட்டுமே குறிக்கிறார்.

Les Miserables – லெ மிஸஹாப்ள அல்லது லி மிஸியஹப்ள என்று உச்சரிக்கலாம் – அல்லது லெஸ் மிஸரபிள்ஸ் என்று ஆங்கிலமாகவே கூடச் சொல்லலாம். ஆனால் இவர் இதனை லே மிஸ்ரபிள்ஸ் என்றே குறிப்பிடுகிறார்.

Francois Truffault – ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ – இதனை இவர் ஃப்ரான்கோயிஸ் ட்ரூஃப்ஃபால்ட் என்று கூடக் குறிப்பிட்டிருக்கலாம் – ஆனால் இவர் உபயோகிப்பது த்ரூபா – எனக்கு முதலில் யார்டா இந்த த்ரூபாப்பய எனத்தான் தோன்றியது.

Nova Scotia – நோவ ஸ்கொஷிய – இதனை இவர் நோவாஸ்கோடா என்று எழுதுகிறார். ஏதோ வெங்காய பக்கோடாவுக்கு அத்தை பையன் போல, அவ்வளவு செல்லம்

… நீங்கள் கேட்கலாம் – இந்த வேற்றுமொழி உச்சரிப்புக்கள் அவ்வளவு முக்கியமா? என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியம் – மூன்று காரணங்கள்:

  1. தொழில் சுத்தம் என்று ஒன்று இருக்கிறது. இந்த உச்சரிப்பைக் கூடச் சரியாக்கவில்லையானால் சிரத்தை என்ற வார்த்தைக்கு மதிப்பு இல்லை என்பதுதான் பொருள்.
  2. இந்த இணைய இழவு பல்கிப் பெருகியிருக்கும் காலங்களில், கண்டமேனிக்கும் தரவிரக்கம் செய்து மினுக்கிக் கொள்வது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபம், உச்சரிப்புக்களைச் சரி பார்த்துக் கொள்வதும்.
  3. இவர் பெயரை எச். ரமக்ருஸ்ஹ்னன் என்று ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்தி நாம் க்ரந்த எழுத்துக்களுடன் கந்தறகோளமாக எழுதினால் நாராசமாகத்தானே இருக்கும்?

இன்னொரு காரணம் – நான் ஏதாவது இக்கட்டுரையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டாமா? சரியான உச்சரிப்புக்களும்கூட இல்லையென்றால், வேறு என்னதான்  இருக்கிறது இதில்?

… இன்னொன்றும் நீங்கள் கேட்கலாம் – இவர் இலவசமாகத் தானே தன் எழுத்துக்களை பதிக்கிறார். நீ துட்டா கொடுக்கற, தரத்த எதிர்பாக்கறத்துக்கு… சும்மா நொள்ள சொல்லாம அத்தப் படிச்சிக்கினு போவியா…

நான் சொல்லுவேன் – இலவசமாகக் கொடுப்பதினால் அதைக் கந்தறகோளமாகத்தான் கொடுப்பேன் என அழிச்சாட்டியம் செய்வது  தவறு. இது தொழில் தர்மத்தைச் சுட்டாது. சிரத்தையின்மையை, தொழில்முறை ஒழுக்கமின்மையைத்தான் சுட்டும்.

-0-0-0-0-0-0-

உண்மையாகவே, எனக்குப் பயமாக இருக்கிறது. வரவர மாமியார் கழுதை போலாகிப் பின் அது தேய்ந்துக்  கட்டெறும்பாகி, பின்னர் அதுவும் நசுங்கி வ்ளைந்து நெளிந்து குழைந்து ஊதப்பட்டுப் பின் சூனியமாகச் சுருங்கி  லக்கிலூக்ஆன்லைன்.காம் ஆனதைப் போல – நீங்கள் அதல பாதாளத்தில் விழப் போகிறீர்களோ?

அப்படியானால், தேவரீர் கவனித்து   விழவும். அந்த மகாமகோ கிடுகிடு அதலபாதாளத்தின் அடியாழத்தில், தன் கடன்,  சுட்டிகள் சுட்டுவதைச் சுடுவதே  என்று காப்பிக்கடை நடத்திக் கொண்டிருக்கும் கர்மயோகி ‘யுவகிருஷ்ணா’ அவர்கள் மேல் விழுந்து வைக்கப் போகிறீர்கள்… பாவம் அவர். நீங்களும் அவரை விட்டுவிடுங்கள். நானும் அவரை விட்டுவிடுகிறேன்.

… ஆனால், அவர் மட்டும் பாவமில்லை – நாமும்தான் பாவம். நீங்கள் இப்படி தொபுக்கடீர் என்று அவர்மேல் விழுந்து அவர் கூழாகி விட்டால், பின்னர் எவரால்தாம் தெலுங்குப் படவிமர்சனக் கஞ்சிகள் செய்து தமிழில் பரிமாறி நம்மை உய்விக்க முடியும்? நமக்கு எப்படித்தான் மற்றைய திராவிடமொழிகள் ஊடான மேன்மையான சிந்தனைகள் வந்து சேரக்கூடும்? எப்படித்தான் தமிழ் மேன்மையுறும்?

ஆகவே, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! தயை செய்து யோசியுங்கள்.  தமிழில் பொதுவாக நிறைய பேர் எழுதுவதில்லை  (ஒப்புக் கொள்கிறேன்: நான்  எழுதுவது தமிழ் அல்ல; எழுதுபவனெல்லாம் எழுத்தாளனுமல்ல) என்கிற நிதர்சன உண்மைப் பின்னணியில், தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற எழுத்தாளர்களும் இப்படி அநியாயத்துக்கு எழுதினால், ட,மில்டாய்க்குப் பொறுக்குமா?

நீங்கள் இப்படி எழுதாமல் உங்கள் தகுதிக்கேற்றவாறு தமிழில் அழகாக – மொழியையும் முழியையும் பெயர்க்காமல் – எழுத ஆரம்பித்தால், உங்களுக்காக நான், வெகு பிரத்தியேகமாகச் செடல் உற்சவம் நடத்தி,  உடலின் எல்லா  பாகங்களிலும் அலகு குத்தி, செக்கிழுத்து, மேலதிகமாகத் தோலைப் பிய்த்துக் கொண்டு ட்ராக்டர், டம்பர் லாரி இழுத்து, மார் மேல் மஞ்சள் இடித்து, மிளகாய் அபிஷேகம் செய்துகொண்டு உங்கள் வீட்டிற்குக் காவடி எடுக்கத் தயார்…

ஹ்ம்ம்ம்… ஆனால், யோசித்துப் பார்த்தால், காலத்தின் ஓட்டத்தில் எவ்வளவு பேர் இப்படி உங்களை யோசிக்கச் சொல்லவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்? பன்னீர்க் காவடிகள் எடுக்க முயன்று கொண்டிருப்பார்கள்! காலம்காலமாக எவ்வளவு காவடிகள் பக்தர்களின் தோட்களை வருடி, கழுத்துகளில் உராய்ந்து, செவிகளில் கவிந்து ரகசியம் பேசியிருக்கும்! எவ்வளவு மூளைகள் இப்படி யோசித்து யோசித்து  உருகியிருக்கும். இம்மாதிரி எவ்வளவு உருகல்களிலிருந்து முனகல்கள் கிளம்பி எவ்வளவு செவிகளை அடைந்திருக்கும்? எவ்வளவு கண்கள் அச்செவிகள் மீது பீதியுடன் கவிந்து தொன்மையான சாட்சியங்களைப் பெற்றிருக்கும்?

… அய்யோ! ஆ!! வேதாளம்!!! முருங்கை மரம்!!!!  ஓட்றா

தொடர்புள்ள பதிவுகள்:

6 Responses to “எஸ். ராமகிருஷ்ணன், ஜென், மாருதி ஸ்விஃப்ட், வேகன்ஆர், எஸ்டீம், ஆம்னி, 800… க்யூகோ, திரூபா … பேருரை, உரை, நரை, சிரை… அய்யோ! சாருநிவேதிதா!! அய்யய்யோ!!!”

  1. Mouli Says:

    உங்கள் யுவக்ருஷ்ண லீலை பதிவுகளையும், இந்தப் பதிவையும் படித்து, சிரித்துச் சிரித்து என் வயிறு புண்ணானதற்கு உங்கள் மேல் வழக்குத் தொடுக்கப் போகிறேன்! :)


  2. LOL.
    Was reminded of the following quote when i read this post “The society which scorns excellence in plumbing as a humble activity and tolerates shoddiness in philosophy because it is an exalted activity will have neither good plumbing nor good philosophy: neither its pipes nor its theories will hold water. – John Gardener”.
    please continue the good work.

  3. சான்றோன் Says:

    தேசாந்திரியின் திரியைக் கொளுத்திப் போட்டுவிடமாட்டார்களா?….

    haa….haa…haa…..

  4. tamil Says:

    எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றவர்கள் இப்படி எழுதுவது புதிதல்ல.இன்று சில எழுத்தாளர்களுக்கு தங்களை அனைத்தும் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்ளும் ஆசை இருக்கிறது, அதன் விளைவுதான் இது.ஜென்னைப் பற்றி அறிமுகமே இல்லாத வாசகர்கள் இதை எப்படி புரிந்துகொள்வார்கள், எஸ்.ராவும்,ஜெமோவும் அவர்களுக்கு பேரறிஞர்களாக தெரிவார்கள்.

  5. ramji Says:

    யுவக்ரிஷ்ணா / லக்கி லுக் போபியாவில்
    இருந்து எப்போது வெளி வருவீர்கள் நீங்கள்

  6. சான்றோன் Says:

    சந்தடி சாக்கில் ஜெயமோகன் அவர்களை ஏன் சார் இங்கு இழுக்கிறீர்கள்? உங்களுக்கு ஜெமோ மீது காழ்ப்பென்றால் அதற்கு திரு.ராமசாமி அவர்களை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?

    ஜெயமோகன் ஆழ்ந்த படிப்பாளி….உரிய ஆதார‌ங்கள் இல்லாமல் அவர் எதையும் எழுதுவதில்லை…..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s