இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
February 24, 2013
(அல்லது) மந்த மாணவர்களும் அரைகுறைக் களப்பணியாளர்களும்…
எச்சரிக்கை: இந்தப் பதிவு மிகவும் நீளம். பொறுமையாகப் படிக்கவும்.
பத்ரி சேஷாத்ரி அவர்களின் ஒரு பதிவின் பரிந்துரைப்படி, ஒரு வழியாக, நானும் என் மனைவியும், விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ நிகழ்வை (கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்வு – ஆனால் யூட்யூப் தரவிரக்கம் – எங்கள் மடிக்கணினிக்கு முழுவதும் வந்து சேர நான்கு மணி நேரமாகிவிட்டது!) இன்று நேற்று பார்த்தோம். அவளும் சுற்று வட்டாரப் பள்ளிகளில் அறிவியல், கணிதத்தைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறாள்.
முதல் பத்து நிமிடம் பார்த்தவுடன் கொஞ்சம் நேர விரயமோ எனச் சந்தேகமாக இருந்தது – ஆனால் தொடர்ந்து பார்த்ததில் – இது நாங்கள் சில சுவையான படிப்பினைகள் பெற்ற அனுபவம், பல விதங்களில்; களப்பணியாளர்களில் ஒரு சாரார், அதாவது களப்பிணியாளர்கள், ஊடகங்களின் செல்லப் பிள்ளைகள், எப்படி இருக்கிறார்கள் என்பது தெரிய வருவது ஒரு முக்கியமான விஷயம்தானே?
ஆக, இந்தப் பதிவைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவதற்கு, நீங்கள் இந்த நிகழ்ச்சியை அது ஒளிபரப்பானபோதே பார்த்திருக்க வேண்டும் – இல்லையானால் இதனை யூட்யூப்-ல் இருந்து தரவிரக்கம் செய்து பார்க்கவேண்டும், பத்ரி அவர்கள் எழுதியது போல: ”பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.” இது முக்கியம். (ஆனால் பார்க்கப் பிடிக்காமல் இருந்தால் கூட, கீழே தாராளமாகப் படிக்கலாம் – என்ன, கடைசிப் பகுதியில் உள்ள புறநானூற்று ஒப்புமைகள் கொஞ்சம் புரியாது அவ்வளவே!)
… ஹ்ம்ம். எங்கள் இருவருக்குமே (மனைவி+அடியேன்) இந்த நிகழ்ச்சியில், முதிரா இளைஞர்கள் / மாணவர்கள் தரப்பு கொஞ்சம் தமாஷாகவும், குழந்தைத்தனமாகவும், பரிதாபமாகவும் – களப்பிணியாளர்கள் தரப்பு நிறைய அபத்தமாகவும், சவடால்கள், வழக்கமான பொய்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இருபக்கங்களிலும் அரைகுறைகள்.
-0-0-0-0-0-
முதலில் நான் இதனைத் தெளிவுபடுத்தி விடவேண்டும்.
எங்கள் வீட்டில் கடந்த சுமார் 20 வருடங்களாகத் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லை – தலைக்கு மேலிருக்கும் சந்தோஷமான வேலைகளுக்கும், பயிற்சிகளுக்கும், குவிந்து கிடக்கும் புத்தகங்களுக்குமே இருக்கும் நேரம் போதமாட்டேன் என்கிறது. (இப்போது ஒத்திசைவுக்கும் வாரம் நான்கு மணிநேரமாவது முக்கி முனகிச் செலவழிக்க வேண்டியிருக்கிறது வேறு – எனக்குத் தமிழில் எழுதுவதும் பிடிக்கும் என்றாலும்!) எப்பொழுதாவது சொந்தக்காரர்கள் வீட்டிற்குப் போனால் (பொதுவாக வருடத்துக்கு ஒரிரு மணி நேரம் என்கிற விகிதத்தில்) வேறு வழியில்லாமல் அந்த ஆபாசக் கிடங்காக மாறியிருப்பதைப் பார்ப்பதுண்டு – எல்லோரும் அந்த எழவெடுத்த டிவியை அவர்கள் முக்கிய அறையில், கூடத்தில் – நடுநாயகமாக வைத்திருக்கிறார்கள்! இதற்குப் பயந்து கொண்டே நாங்கள் யார் வீட்டிற்கும் போக முடியாத பதட்டமான சூழ்நிலை வேறு. வெட்கக் கேடு. (இங்கு சொல்லவேண்டும்: ஒரு விதிவிலக்காகச் சென்ற வருடம் ‘பொதிகை’ தொலைக்காட்சியை டிஸெம்பரில் ஏழெட்டு மணி நேரம் பார்த்தேன். நன்றாகவே இருந்தது.)
எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை என்றால், தொலைக்காட்சி அதன் பல்வேறான அலைவரிசைகள் தொடர்பான விஷயங்கள், மிகவும் தொலைவுக் காட்சிகளே எனக்கு – ஆகவே – விஜய் டிவியின் (டிஆர்பி எண்ணிக்கை, வருமானம் தவிர) நோக்கங்கள் என்ன, கோபிநாத் என்பவர் யார், எப்படிப்பட்ட மனிதர், இந்த ’நீயா நானா’ எந்தப் பின்புலத்தில் எப்படி நடக்கிறது, அதன் பொதுவான பாடுபொருள் என்ன, எவ்வளவு நாளாக நடக்கிறது, நம் சமூகத்தின் மீதான அதன் தாக்கத்து என்ன, அதன் குறிக்கோள் என்ன, வந்திருந்த களப்(!)பணியாளர்கள்(!!) எப்படித் தெரிவு செய்யப் பட்டனர், இவர்கள் யார், என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என ஒன்றும் தெரியாமல் தான் – இந்த நிகழ்ச்சியின் ஒரு பதிவுவடிவத்தை (வர்ஷனை) மட்டும் பார்த்து அதுவும் முழுமையானதா எனத் தெரியாமல் தான், என் எதிர்வினைகளைக் கொடுக்கிறேன்.
-0-0-0-0-0-
‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ நிகழ்வைப் போல ஒரு அரைவேக்காட்டுக் கயமை நிகழ்ச்சிதான், தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்றால், படு கேவலமாக இருக்கிறது – என்னால் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை – மற்ற நிகழ்வுகளின் தரம் (!) எப்படி இருக்கும் என்பது.
-0-0-0-0-0-
பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் காரணத்தாலும், என்எல்பி போன்ற மனோதத்துவக் கருவிகளின் பரிச்சயம் காரணமாகவும், இப்பொழுதெல்லாம் மனிதர்கள் பேசும் போது பதிலுக்கு மிகவும் பேசாமல், உரையாடாமல், அவர்கள் என்னவற்றை, எப்படிச் சொல்கிறார்கள் எனக் கூர்ந்து கவனிக்கிறேன். ஆக, அவர்கள் மனதறிந்து பொய் சொல்லும்போதும், தரவுகள் இல்லாமல் தடாலடியாக, யார் நாம் சொல்வதைச் சரிபார்க்கப்போகிறாரகள் எனப் பேசும் போதும், தாங்களே காலேஅரைக்கால்குடமாக இருக்கும் ப்ரக்ஞை இல்லாது ஆனால் தளுக்காக மிகவும் தளும்பும் போதும், தனக்கே ஒன்றும் தெரியாதிருக்கும்போதும், பிறருக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்று மஹாதைரியத்துடன் முனகும் போதும், உடனே தெரிந்து விடுகிறது – அவர்களுடைய அற்ப வேடங்கள்… சே என்றாகி விடுகிறது.
ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. – ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறது. தொலைக்காட்சி வேண்டாம் என இருக்கும் நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்! யாருக்கு வாய்க்கும் இம்மாதிரி வாழ்க்கை! எவ்வளவு படிக்க முடிகிறது! எவ்வளவு குப்பைத்தனமான எதிர்மறை விஷயங்கள் தெரியாமல், குண்டுவெடிப்புகளில் மனிதவுடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கத் தேவையில்லாமல், வயிற்றில் அனாவசிய அமிலம் சுரக்காமல், ஆரோக்கியத்துடன் இருக்க முடிகிறது!
-0-0-0-0-0-
சரி – விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா நிகழ்வில் பங்கு பெற்ற களப்பிணியாளர்களில் ஆத்மார்த்தமாகப் பேசினவர் ஒருவர் இருந்தார் தான் – ஒரு வேட்டி கட்டிய நடுவயதினர், குடிப்பழக்கத்தினைப் பற்றிப் பேசினார். பேசியவர்களில் இவர் ஒருவர் தான் அடிப்படை நேர்மையுடன் பேசியதுபோலத் தோன்றியது.
-0-0-0-0-0-
சரி, ஏன் நான் இந்த நிகழ்வை ஒரு நேர்மையற்ற, அயோக்கிய, அரைகுறை விஷயம் எனச் சொல்கிறேன் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
- விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ – பல விதங்களில் சமமானவர்களுடன் இம்மாதிரி உரையாடல்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல், ஒரு பக்கம் பழம் தின்று கொட்டையும் போட்ட, அவரவர்களுக்கு முடிந்த தொழில்முறை களப்பிணியில் தேர்ந்த, அதில் பல வருடங்களாக ஊறியிருக்கும், பெரும்பாலும் மற்ற பங்கேற்பாளர்களையும் அறிந்த, கும்பலாக வேட்டையாடக் கூடிய மந்தை மனிதர்கள். இன்னொரு பக்கம் – அனைவரும் முதிரா இளைஞர்கள் – இன்னமும் படித்துக் கொண்டிருப்பவர்கள் – என்ன இழவு படிக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாவிட்டாலும். ஒருவருக்கொருவர் முன் அறிமுகமில்லாதவர்களும் கூட. இந்த அசமன்களால் மட்டுமே இந்த நிகழ்வு ஆரம்பட்திலேயே க்றீச்சிட்டுவிடுகிறது.
- கோபினாதனார் + களப்பிணியாளர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்கள் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருப்பவை (அவை பெரும்பாலும் உண்மை அல்லது சரி என்றில்லை, உளறல்கள் தான்) பற்றி மாணவர்களிடம் கேட்கிறார்கள். பின் அவர்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று எள்ளி நகையாடுகிறார்கள், இளப்பமாகப் பேசுகிறார்கள், கோபப் படுகிறார்கள்.
- நான் கேட்கிறேன் – இந்த மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து – மாக்ஸ்வெல் சமன்பாடுகள் பற்றி – இதைக் கூட விடுங்கள் – வெறும் அடிப்படை அறிவியல், புவியியல் போன்ற துறைகளிலிருந்து ஆறாம் வகுப்புப் பாடத்திட்டக் கேள்விகளை இந்த களப்பிணியாளர் கும்பலிடம் கேட்டால் – மாணவர்களும், ஏன், நாமும் கூட இந்தக் களப்பிணியாளர் கும்பலைப் பார்த்து நக்கலாக ‘அட அறிவிலிகளே’ எனச் சிரிக்கலாம். ஏனெனில் இவர்களெல்லாம் ஆறாம் வகுப்பாவது அடிப்படையில் ஒரு காலத்தில் படித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் கவனிக்கவும்: மாணவர்களுக்கு, சமுதாயப் பிரச்சினைகள் பற்றி யோசிப்பதற்குப் பயிற்சியே இல்லை! ஆக, இந்த அநியாய சமமின்மை ஏன்?
- மாணவர்கள் முட்டாள்கள், சமூகப் ப்ரக்ஞை அற்றவர்கள் என்கிற முன் முடிவை நோக்கியே இந்த நிகழ்வு நடத்தப் பட்டதா? அப்போது, களப்பிணியாளர்கள் அயோக்கியர்கள் என் ற (சரியான) முன்முடிவுடனும் ஏதாவது நீயாநானா நடக்குமோ?
- கோபினாதனார் அவர்கள் – அந்த மாணவர்களை இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போது அவர்களிடம் என்ன கேட்கப் போகிறார், என்ன மாதிரி உரையாடல்கள் நடக்கப் போகின்றன என்பதைச் சொல்லவேயில்லை எனத் தோன்றுகிறது (சொல்லியிருந்தால், எங்கிருந்தாவது அதற்கெல்லாம் கோனார் உரை தேடிப் படித்துவிட்டு வந்திருப்பார்கள், இந்த மந்த மாணவர்கள் – டிவி என்கிற காரணத்தாலாவது). அதேசமயம் இந்தக் களப்பிணியாளர்களுக்குத் தாங்கள் என்ன வேடமணியப் போகிறோம் என்பது தெரிந்திருக்கிறது, பழக்கமும் இருக்கிறது. நாக்கைச் சுழட்டிக் கொண்டு, அலகைத் திருப்பிக் கொண்டு கேள்விஞானிகள் கேள்விகள் பல கேட்கிறார்கள். மாணவர்கள் முழிக்கிறார்கள்.
- மாணவர்களில் எண்ணங்களைக் கேட்கிறார்கள் ’சும்மா ஃப்ரீயா சொல்லுங்க, ஆனஸ்டா சொல்லுங்க’ என்று – ஆனால் இந்த மந்த மாணவர்கள் – பயிற்சி இல்லாததால், முன்னறிவிப்பு இல்லாததால் – வாய்க்கு வருவதைச் சொல்கிறார்கள் – அவர்கள் இப்படி ஃப்ரீயா ஆனஸ்டா பதில் சொன்னால் – போட்டுக் கிழிக்கிறார்கள், வறுத்தெடுக்கிறார்கள். என்ன நியாயம் இது.
- முகத்தை சுழித்து மந்தஹாசப் புன்னகையுடன் கோபினாதனாருடன் சேர்ந்து நக்கலடித்து – அடிப்படை நேர்மை நியாயம் இல்லாமல் அவ்விளைஞர்களின் கல்லூரி மேனேஜ்மெண்ட் பற்றிய தர்மசங்கடமான கேள்விகள் வேறு. முன் தயாரிப்பு இல்லாமல் வந்த அவர்களை இப்படிப் பேச வைத்து (என்னதான் அவர்கள் சொல்வதை பீளீப்’ செய்து அமுக்கினாலும்) – அவர்கள் சொல்லியிருக்கக் கூடிய எதிர்மறை விஷயங்களை நம் கற்பனைக்கு விடுகிறார்கள். பாவம் அந்தக் குழந்தைகள் – என்ன பாடு படுவார்களோ, ஜேப்பியார்களின் பிரம்படிகளுக்கு பயந்து கொண்டு – எவ்வளவு நேரம் ஆகப் போகிறது அக்கல்லூரிக் கல்வித்தந்தைகளுக்கு இவ்விஷயத்தைக் கறக்க…
- அதே சமயம் இந்த கோபினாதனார் ஒரு பேச்சுக்குக் கூட அந்தக் களப் பிணியாளர்களிடம் – போன ஆட்சியில் கருணாநிதி கிழித்தகிழிப்பால் தமிழ் சமூகத்துக்கு, களப்பிணிகளுக்கு, என்ன பிரச்சினைகள் வந்தன என்று ’சும்மா ஃப்ரீயா சொல்லுங்க, ஆனஸ்டா சொல்லுங்க’ என்று கேட்கவில்லை. ஜெயலலிதாவால் தமிழ் சமூகத்துக்கு என்ன பிரச்சினை வருகிறது என்று ’சும்மா ஃப்ரீயா சொல்லுங்க, ஆனஸ்டா சொல்லுங்க’ என்று கேட்கவில்லை. அவர்கள் சொல்வதை பீளீப்’ செய்து அமுக்கினாலும் அவர்கள் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயம்தானே?? என்ன கேனத்தனமான நபும்சகத்தனம் இது! …த்தூ! பேடிகள்.
- சரி பேசுங்க என்று மாணவர்களிடம் சொல்லி, அவர்கள் பேச ஆரம்பித்த அடுத்த வினாடியிலிருந்து தொடர்ந்து இடைமறித்து, உரக்கப் பேசிக் கொண்டே இருப்பது, ஏளனமாக வாயைச் சுழித்துச் சிரிப்பது போன்ற சர்வாதிகாரமான அரைகுறை வேலைகளை இந்தக் களப்பிணியாளர்கள் தொடர்ந்து செய்தனர்.
- அடிக்கடி இந்த கோபினாதனார், அவர் கூட்டியிருந்த மாணவர் கும்பலை – இது ஒரு ‘தமிழ்நாட்டின் சராசரி வகுப்பறை’ என எடுத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார். ஆனால் அவரே, கல்லூரிகளுக்கு ’நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை அனுப்பச் சொன்னதாகவும்’ சொன்னார். ஆக – இது எப்படி ‘தமிழ்நாட்டின் ஒரு சராசரி வகுப்பறை’யாக இருக்க முடியும்?
- அதே சமயம் – வந்திருந்த அந்த களப்பிணியாளர்களும் ‘தமிழ்நாட்டின் சராசரி களப்பணியாளர்களை’ பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கொள்ள முடியுமா? ‘தமிழ்நாட்டின் சராசரித்தனமான களப்பிணியாளர்களை’ பிரதி நிதித்துவப் படுத்துவதாக வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம்.
- இந்தக் களப்பிணியாளர்கள் பற்றிய ஒரு பொதுப்பிரமை: அவர்கள் – சிறுமை கண்டு பொங்குபவர்கள். சமூக மேன்மைக்குப் பாடுபடுபவர்கள், விடிவெள்ளிகள். தங்களை உருக்கிக்கொண்டு, அலுக்காமல், எம் கடன் பணி செய்து கிடைப்பதே என பணியாற்றுபவர்கள் – சரியா? ஆனால், அதிசயம், அதிசயம் – இந்த களப்பிணியாள பெருமாக்களில் ஒருவர் கூட இந்த – அவர்கள் கண்களெதிரே அவர்களே செய்யும் அநியாயத்தை, அராஜகத்தை – அந்தக் குழந்தைகளை வறுத்தெடுப்பதை – அறிந்து கூடக் கொள்ள முடியவில்லை. என்ன மசுத்துக்கு இவர்கள் சமூக மேன்மைக்குப் பாடுபடுகிறார்கள் என்றே புரியவில்லை.
- நம் நாட்டில், இன்னமும், நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு – தங்களை விட வயதில் பெரியவர்களிடமும், அதிக அனுபவம் உள்ளவர்களாகக் கருதப் படுபவர்களிடமும் – ஒரு இனம் புரியாத மரியாதை இருக்கிறது. இந்த உணர்வை – களப்பிணியாளர்களும், கோபினாதனாரும் கேவலமாக உபயோகித்து – இளைஞர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறனர். இதுவே, ஏதாவது வெளி நாடாக இருந்திருந்தால், இந்தக் கும்பலை – இளைஞர்கள் நன்றாகக் ‘கவனித்து’ அர்ச்சனை செய்திருப்பார்கள்.
- இதைத் தவிர ந்யூட்ரினோ, கூடங்குளம், இட ஒதுக்கீடு. பெரியார், முஸ்லீம்களின் பிரச்சினைகள், ரேன்டம் ஸாம்ப்ளிங் (புள்ளியியல் உளறல், கோபினாதனார் அடித்த ஒரு டன் ஜல்லி) எனத் தொடர்ந்து அரைகுறையான ஜல்லியடித்தல்கள், அபத்தமான உளறல்கள்…
- இந்த அழகில், அவர்களுடைய ‘பெரிய மனது பண்ணி’ உயர்ந்த பீடத்திலிருந்து உதிர்த்த புத்தகப் பரிந்துரைத்தல்கள் – (அல்லது) ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! இவர்களுடைய புத்தகப் படிப்பே (அல்லது படிப்பே) பாவமாக இருக்கிறது. ஆனாலும், மாணவர்கள் அவசியம் படிக்கவேண்டியவைகள் – என்பதாகப் பெரும்பாலும் ஒரு தண்ட, கண்றாவி ஜாபிதா – இந்தத் துன்புறுத்தும் நகைச்சுவை வேறு! வாய்க்கு வந்ததை, நினைவுக்கு வந்ததை அள்ளிவிட்டார்கள் – தூக்கிட்டு ஓடுங்கடா என்பதைப் போல – ராஹுல் சாங்க்ருத்யாயனின் கற்பனை நாவல்கள் (இந்தக் களப்பிணியாளர்கள் இவற்றை வரலாறு எனவேறு நம்புகிறார்கள்!), ஜான் பெர்க்கின்ஸ் எனும் ஒரு அரைகுறை எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ போன்ற அதிகுப்பைகள். ’எரியும் பனிக்காடு’ ஒரு முக்கியமான நாவல் தான் – ஆனால் கு. சின்னப்ப பாரதியை இவர்கள் கேள்விகூடப் பட்டிருக்க மாட்டார்கள். ஈழம், அது இதென்று பேசுபவர்களுக்கு ஒரு தருமு சிவராமுவோ, கைலாசபதியோ, தார
கைகி சிவராமோ தெரியவே தெரியாது. பெரியார் என்று அளவுக்கதிகமாக புளகாங்கிதம் அடைபவர்களுக்கு ஒரு அயோத்திதாசர் பற்றியோ அல்லது நாராயணகுரு பற்றியோ – ஒரு சுக்குக்குக் கூட, பெயரையோ புத்தகத்தைக் கூடச் சொல்ல முடியவில்லை என்பது படு கேவலம்! (இவர்கள் சொன்னவற்றில் மாணவர்களுக்கு உண்மையிலேயே உபயோககரமாக அம்பேத்கர் புத்தகங்கள்தாம் இருக்கலாம் – அதிலும் அவருடைய அனைத்து எழுத்துக்களும் அப்படியல்ல)
- இந்த களப் பிணியாளர்கள் பெரியாரைப் படி, அம்பேட்கரைப் படி என்று சொல்கிறார்கள் – பெரியார் எழுதிய புத்தகங்களைப் படிப்பதற்கும், பெரியாரையே படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. பின்னது கடுமையானது. சமூகமானுடவியல், அறவியல் பாற்பட்டது – எப்படி இவர்கள் உருவானார்கள், சமூகக் காரணிகள் என்ன? தாங்கள் எழுதியது படியே அவர்கள் நடந்தார்களா? அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த அறச் சிக்கல்கள், தர்ம மயக்கங்கள் என்ன – எப்படி சமரசம் செய்து கொண்டு அவர்கள் கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வளர்ந்தார்கள் – எனப் பல கேள்விகளுக்கு பதில் காண முயல்வது. முன்னது – பெரியார் எழுதிய புத்தகங்களைப் படிப்பது – மிகவும் எளிமையானது.
- இந்த களப் பிணியாளர்கள் (ஒரு பேச்சுக்கு) பெரியார், அம்பேதட்கர் (இவர்களையல்ல, இவர்கள் புத்தகங்களை மட்டுமே) படித்திருக்கிறார்கள் என்றேகூட வைத்துக் கொள்ளலாம். அப்படியே இருந்தாலும் கூட – அவர்களுடைய ரெடரிக்-கை – பேச்சு, எழுத்து வழக்கை, அதன் தனிப் பாங்கான நடையை – கண்டு கொண்டு, அவற்றை மந்திர உச்சாடனம் மாதிரி உருப்போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் எழுத்துக்களின் ஆன்மாவைப் புரிந்து கொண்டார்களா, அவர்கள் சிந்தனகளுக்கான ஊற்றுக் கண்களை அறிந்து – அவர்கள் சிந்தனைகளை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்களா, சமகால தத்துவ விசாரங்களோடு இணைத்து, அவர்களுடைய (அயோத்திதாசர், அம்பேட்கர் போன்றவர்களுடைய) சிந்தனைகளை மேலெடுத்துச் செல்கிறார்களா என்றால் இல்லவே இல்லை – அம்பேட்கர் போன்ற ஆளுமைகளை வெறும் நீலமடித்த கற்சிலைகளாக்கி விட்டார்கள், பாவிகள்.
இம்மாதிரி, பல கல்யாணகுணங்களைக் கொண்ட இந்த களப்பிணியாளர்களுக்கு – அதிலும் ஒரு சிலருக்குத் தான் – தாங்கள் யாருக்காக உழைக்கிறோம் என்றே புரியவில்லை என்கிற ஆத்மவிசாரம் ஏற்பட்டது.
நல்லது. இனிமேலாவது நீங்கள் – நேர்மையாக, பொய் புனை சுருட்டு இல்லாமல் – கருத்தாலோ கரத்தாலோ உழைக்க ஆரம்பிப்பீர்கள் என நினைக்கிறேன்.
இப்போது மேலே சில கேள்விகள்…
- வேறு களப்பணியாளர்களே கிடைக்கவில்லையா? மருந்துக்குக் கூட ஒரு அமைதியான, குன்றிலிட்ட விளக்காக, அலட்டிக் கொள்ளாமல், ஆரவாரமில்லாமல், குடுகுடுப்பைத்தனமில்லாமல் பணிபுரியும் ஆள் கிடைக்கவில்லையா? வினோதமாகத்தான் இருக்கிறது!
- அல்லது உண்மையான களப்பணியாளர்கள் அவர்களுடைய வேலைகளை செய்துகொண்டு இருப்பதால், களப்பிணியாளர்கள் மட்டும் தான் வெட்டிப் பேச்சுக்குக் கிடைத்தார்களா? ஒரு குக்கிராமத்தில் இருக்கும் எனக்கே குறைந்த பட்சம் 100 நேர்மையான இயக்கம்சாரா களப்பணியாளர்களையாவது தெரியும். காந்திய, மடங்கள் சார், பசுமை இயக்கம் சார், ஆர்எஸ்எஸ் போன்ற சமூக இயக்கங்களையும் சேர்த்தால், எவ்வளவு சமூக அர்ப்பணிப்பு மிகுந்த களப்பணியாளர்கள் கிடைப்பர்? தமிழ் நாட்டை நாற அடித்துக் கொண்டிருக்கும் இயக்கங்கள் மட்டுமே பெரும்பாலும் இந்த நீயாநானா-வில் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்ட காரணம் என்ன?
- எழுத்து-பேச்சு-இயக்கம் சார் இந்தக் களப்பிணியாளர்களுடன் வேறு ஒரிஜினல் அக்மார்க் களப்பணியாளர்களை (எடுத்துக் காட்டாக – வேளாண்மை, காடுவளர்ப்பு போன்ற துறைகளில் இருந்து) பேச விட்டாலே இந்தப் நடிப்புச் சுதேசிப் பிணியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறி விடுமே!
- என் எட்டாவது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களைஅனுப்பியிருந்தாலே இந்த களப்பிணியாளர்களை, தொகுப்பாளரை நீயா நானா என்று ஒரு கை பார்த்திருப்பார்களே! அவர்கள் படிப்பிலும் சரி, விழிப்புணர்ச்சி நிலையிலும் சரி, செயலூக்கத்திலும் சரி, மிக முக்கியமாக, நேர்மையிலும் சரி – விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ நிகழ்வில் பங்கு பெற்றவர்களை (இரு தரப்புகளையும்) விட உயர்வானவர்கள்.
- மேலும், இதில் பங்கு பெற்ற இளைஞர்களை விட ஆழத்திலும் வீச்சிலும் வீரியமிக்க இளசுகளளை, விடிவெள்ளிகளை, நேரடியாக நான் அறிவேன். கொஞ்சம் பிரயத்தனப் பட்டால் எந்தக் கழுதைக்கும் இந்த இனங்கண்டுகொள்ளல் முடியும். இப்படிச் செய்யாதது இந்த நீயா நானா நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை சொட்டும், டிஆர்பி மதிப்பு ஏற்றும் விஷயம் என்பதாலா?
-0-0-0-0-0-
எனக்கு வெறுத்துவிட்டது – ஆக நான், நமது பாவப்பட்ட சங்க இலக்கியமான புறநானூறு வழியாக, விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’ நிகழ்ச்சியின் அற்புதக் கதாநாயகர்களில் சிலரை அறிமுகம் செய்து இறும்பூதடைகிறேன்…

பாண்டரங்கண்ணனார் (பாண்டரங்கம் கூத்து விற்பன்னர். விஜய் டிவி அரசவையின் போராதிகாரி – புறாநானூறு கண்ட (அவற்றை அடித்துச் சாப்பிட்ட) மழபுல, உழபுல வஞ்சித் திணைக் கோன்)

மழபுல வஞ்சி (பாவப்பட்ட எதிரி இளைஞர்களை மறித்து மறித்து எரித்துப் பேசிச் சொள்ளை பல சொல்லிக் கொள்ளையடித்து, கொள் எனச் சிரித்து கொளை பல செய்த மாதரசி)

மாந்தரஞ்சேரல் இரும்பொறை (இவர் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியால் போரில் வெற்றிகொள்ளப்பட்டு வாயடைக்கப் பட்டார்)

சோழன் நலங்கிள்ளி (கல்விபுரத்து இளைஞமக்கள் இச்சோழனது ‘இவங்களுக்கு ஒண்ணுமே தெரியல’ மறமாண்பைக் கேட்டு, மிதப்பான சிரிப்பால் அடைக்கப்பட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினர்)

ஔவையார் (இவர் மு. வரதாராசனாரின் முன்னோ பின்னோ ஒரு இழவையும் படிக்காமலேயே எம்ஏ(தமிழ்) வெற்றிகொண்டு, புன்சிரிப்புடன் How? Why? யார்? எனப் பொதுவாக, மந்தஹாசமாகக் கேட்டு, மலங்க மலங்க விழித்து, முகமலர்ந்தார்)
-0-0-0-0-0-
என் பள்ளிச் சிறுவர்களின் மொழியில் சொல்வதானால்:
களப்பிணியாளர்கள் = காமெடி பீஸ்
மாணவர்கள் = டம்மி பீஸ்
-0-0-0-0-0-
தொடர்புள்ள பதிவுகள்:
February 25, 2013 at 10:37
fantastic…
February 25, 2013 at 14:25
Marvels analysis and writing…
February 25, 2013 at 15:48
Brilliant
February 26, 2013 at 01:14
நான் படித்தவற்றில் வேருபட்டிருந்தது. பதிவிற்கு நன்றி.
புறநானூறு கொண்டு பேசியது சுத்தமாகப்புரியவில்லை ஆனால் புறநானூறு படிக்கவேண்டுமென்ற ஆவல் மிகுந்துள்ளது.
பலர்…நிறைய பேசுவார்கள்
சிலர்…நிறைய படிப்பார்கள்
மிகச்சிலர்…நிறைய சிந்திப்பார்கள்
February 26, 2013 at 14:55
We will have to be careful with ramasami and people like him
February 26, 2013 at 22:57
க க க போ …..பிரித்து மேய்ந்துவிட்டீர்கள் ….களப்பணியாளர்களை…
February 26, 2013 at 23:02
[…] நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன். […]
February 26, 2013 at 23:40
நிகழ்ச்சி முழுதும் பார்க்கவில்லை; பாண்டரங்கண்ணனார் “தமிழ் எழுத்தாளர்கள் சிலர் பெயர் சொல்லுங்கள்” என்று கேட்க, எம்.ஏ. தமிழ் அவ்வையார் கொஞ்சம் புன்னகைத்து யோசித்து “மௌனி…” “அப்புறம்” “தெரியாது” என்று மைக்கை பக்கத்தில் கொடுத்தவுடன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டேன்.
உங்கள் கட்டுரை அருமை.
-வெங்கி
February 26, 2013 at 23:46
மன்னிக்கவும்; அவ்வையார் “மு.வா” என்றார் (மௌனி அல்ல).
February 27, 2013 at 09:00
veru vidhamana paravai kududhamaiku……nandri
February 27, 2013 at 13:18
// ஒரு குக்கிராமத்தில் இருக்கும் எனக்கே குறைந்த பட்சம் 100 நேர்மையான இயக்கம்சாரா களப்பணியாளர்களையாவது தெரியும். காந்திய, மடங்கள் சார், பசுமை இயக்கம் சார், ஆர்எஸ்எஸ் போன்ற சமூக இயக்கங்களையும் சேர்த்தால், எவ்வளவு சமூக அர்ப்பணிப்பு மிகுந்த களப்பணியாளர்கள் கிடைப்பர்? //
இப்பொழுது புரிகிறது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று.
ஆர்.எஸ்.எஸ். சமூக அர்ப்பணிப்பு மிகுந்த களப்பணியாளர்களா? என்னே உங்கள் நேர்மை?
March 1, 2013 at 21:56
ஆஹா ஆஹா அடடா அடடா … கரெக்ட்-டா பாயிண்ட புடிச்சிட்டீங்க பாருங்க, அங்க-தான் நிக்கிறீங்க காடையன் நீங்க.
February 27, 2013 at 21:17
one hundred percent what you have written is correct.
February 28, 2013 at 06:20
What a wisdom to compare Gandhian activists with RSS activists!!
You are praising both Gandhians and killers of Gandhiji!!
Except the above rest of your article makes sense to me.
February 28, 2013 at 08:15
PLEASE READ THIS ARTICLE ALSO
http://govikannan.blogspot.com/2013/02/blog-post_28.html