சென்னை புத்தகச் சந்தை நினைவுகள்…
January 20, 2013
சரியாக நினைவில்லை எந்த வருடம் என்று. 1992 / 3 /4 ஆக இருக்கலாமோ?
ஆனால் அன்று காலை 5:30 மணி போல அகாலமாக அழைப்புமணி அடித்தது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது.
யார்டா இது இவ்வளவு காலையில் என்று முணுமுணுத்துக் கொண்டே திறந்தால், மகாதேவன். (முன்பு ஒரு பதிவில் இவனைப் பற்றி எழுதியிருக்கிறேன்).
முந்தின நாள் இரவு மிகத் தாமதமாகத்தான் புத்தகச் சந்தையை விட்டுக் கிளம்ப முடிந்திருந்தது, எங்களால்… மிகவும் அலுப்பினால் அவதிப்பட்ட காலங்கள் அவை – அவனுக்கும் எனக்கும் புத்தகங்களைத் தவிர, அங்கும் இங்கும் ஓடிஓடி அற்புதமான படங்களைப் பார்ப்பதைத் தவிர, பல ஈடுபாடுகளும் தொழில்களும் இருந்தன அக்காலங்களில்.
‘முன்றில்’ என்ற பெயரில் அவன் சந்தையில் ஸ்டால் வைத்திருந்தான் (தி நகர், ரங்கனாதன் தெரு கொசகொசப்பில், ஒரு இரண்டாம் மாடியிலிருந்து நெடுநாள் அக்கடை இயங்கியது கூட) – நான் அவனுடைய எடுபிடியாகவும், ஓட்டுனனாகவும், அடியாளாகவும், கடன்காரனாகவும் இன்னும் பலவாகவும் பல வருடம் இருந்திருக்கிறேன். அற்புதமான ஆசாமி இவன். உற்ற நண்பன். ஒரு ஆணழகனும் கூட – இப்படிச் சொன்னால் வெட்கப் படுவான், படட்டும் ராஸ்கல்.
நான் பல வகைகளில் மிகவும் கொடுத்து வைத்தவன். வேறென்ன சொல்ல.
=-=-=-=
அந்த காலையில், வழக்கமான மந்தகாசப் புன்னகை இல்லாமல் மகாதேவன் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. கிளம்பலாமா புத்தகச் சந்தைக்கு என்றான். ஏன் இப்பவே என்றேன்; ந்யூஸ் கேட்டியா என்றான். இல்ல, ஆனா வர்ரேன், கொஞ்சம் இரு, பால் சாப்பிட்றயா? இல்ல, நாம சீக்கிரமா போகணும்.
ஜகத்தல் (ரித்விக் கட்டக் அவர்களின் அழகான திரைப்படங்களில் ஒன்றான அஜாந்த்ரிக் பார்த்திருக்கிறீர்களா?) என்று செல்லமாக அழைக்கப்பட்ட என் ராஜ்தூத் வண்டியில், ஒரு ஐந்து நிமிடத்தில் கிளம்பினோம். விக்ராமசாமி பின் வழக்க வேதாளமாக அவன்.
என்ன மகாதேவன் இந்த கெடுபிடி என்றேன். ம் சொல்றேன், தீ விபத்தில் புத்தகச் சந்தை காலி என்றான்.
எனக்கு உடனே ஸ்பின்க்டர் தசைநார்கள் இளகி… அய்யோ என்றேன்.
=-=-=-=
அப்போது நான் நங்கநல்லூரில் வசித்துக் கொண்டிருந்தேன். அவன் பக்கத்திலிருந்த பழவந்தாங்கலில்.
ஜகத்தல் ஒரு அற்புதம். நில்லென்றால் ஓடும். ஓடென்றால் நிற்கும். அது ஒரு தன்னிச்சையான ஜந்து. ஆனால் தடவிக் கொடுத்து, வாஞ்சையுடன் கொஞ்சம் அதனுடன் பேசினால், தேசிங்கு ராஜன் குதிரை மாதிரிப் பறக்கும். எப்படியோ, ஒரு பேச்சு பேசாமல், சுமார் 30 நிமிடத்தில் போய்ச் சேர்ந்தோம்.
ஸ்பென்ஸர் டவர் அருகேயுள்ள பெண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில்தான் இந்தச் சந்தை வழக்கமாக நடைபெற்று வந்தது அக்காலங்களில். அச்சமயமும் அப்படியே.
ஒரு பெரிய சுடுகாடு (மஹாமசானம்!) போல இருந்தது அச்சந்தை. வெளியே நிறைய தீயணைப்பு வண்டிகள், வேலையை முடித்து விட்டு நின்று கொண்டிருந்தன. காவல் துறையினர் சிலர் உள்ளே. அவ்வளவுதான். இந்தக் காலமாக இருந்திருந்தால் 100000 டிவி காரர்கள் வந்திருப்பார்கள் வளவளா என்று உளறிக்கொண்டு, தமிழை, ஆங்கிலத்தை, கொன்றுகொண்டு – ஆனால் அன்று ஒரு ஊடக ஆள் கூட இல்லை. அகிலன் கண்ணன் சில அரசு ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என நினைவு.
திலீப்குமார் வழக்கம்போல புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தார் என நினைவு. என்ன அழகான மனிதர் இவர்.
ஐந்திணை குழ கதிரேசன் கூட இருந்தார் – கொஞ்சம் விலகி நடந்தேன் – அந்தச் சமயம் தான் புதுமைப் பித்தன் விஷயமாக ஏதோ சச்சரவுகள் நடந்து கொண்டிருந்தது போல ஞாபகம்.
உள்ளே சேற்றுத் தண்ணீரும், சாம்பலும், பாதி எரிந்த புத்தகங்களும், மரச் சட்டங்களும், பேயறைந்தாற் போல் நடமாடிக் கொண்டிருந்த புத்தக்கடை வைத்திருந்தவர்களும், துக்கம் தொண்டையில் அடைக்க நாங்களும்… ஒன்றிரண்டு இடங்களில் இன்னமும் மெலிதாகப் புகை வந்து கொண்டிருந்தது. (குருக்ஷேத்ரம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், ஒவ்வொரு காலையிலும்).
மோதிலால் பனார்ஸிதாஸ் பணியாளர் ஒருவர், பாதி எரிந்த புத்தகங்களுக்கு நடுவில், சாம்பல் குவியலில் உட்கார்ந்து கொண்டு, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. முந்தின நாள் தான் அவர்களுடைய சில அற்புதமான இண்டோலொஜி புத்தகங்களை அளவிலாக் காதலுடன் தடவிப் பார்த்து, விலையைப் பார்த்து துணுக்குற்றுத் திருப்பி ஏக்கத்துடன் வைத்திருந்தேன்.
எவ்வளவோ பிணம் தூக்கியிருக்கிறேன். எரியூட்டுதல்களுக்கும் போயிருக்கிறேன், பாதி வெந்தும் வேகாதும் இருந்த பிணங்களையும் பார்த்திருக்கிறேன் – ஆனால் பாதி எரிந்த புத்தகங்களைப் பார்க்கும் துக்கம் போல எதுவுமே அவ்வளவு நெஞ்சத்தைப் பிழிவதாக இல்லை – ஏனெனில் மனிதன் எரியும்போது அவன் உடலின் காலம் முடிகிறது, முடிய வேண்டும்தான், அவ்வளவே. ஆனால், புத்தகம் எரியும்போது அதன் மூலம் ஏற்படக் கூடிய பல்வேறு சாத்தியக் கூறுகள், பல தலைமுறைகள் தாண்டிய எதிர்காலங்கள் இல்லாமல் போகின்றன என நினைக்கிறேன். (போதும் வெட்டி வேதாந்தம்)
ஒரு வழியாக மிஞ்சியிருந்த புத்தகங்களை (அதில் பல, பீச்சப்பட்ட தண்ணீரினால், அழுகின பிணங்கள் போல உப்பியிருந்தன) எடுத்தோம் – எங்கள் ஸ்டாலில், எங்களுடைய பதிப்பகப் புத்தகங்கள் அதிகம் இருந்திருக்கவில்லை – பெரும்பாலானவை மற்ற பதிப்பகங்களுடையது தான். எங்களுடைய மர அலமாரிகள் சேதம் அடைந்திருந்தன. எதற்கும் ஒரு இழவு இன்ஸ்யூரன்ஸும் செய்யவில்லை. துந்தனாதான். ஹ்ம்ம்… எப்படியும், லாபத்தை எதிர்பார்த்து நடத்தப் படவில்லை முன்றில்.
பக்கத்திலிருந்த அல்லைட் பப்ளிஷர்ஸ், ஸ்டாலை நடத்தியவர் அவர்களுடைய விதம் விதமான டிக்ஷனரிகளை, தலா 20 ரூபாய் விகிதமாகவோ என்னவோ, அல்லது இலவசமாகவோ கொடுத்தார். கேட்பாரற்று மண்ணில் விசிறப் பட்டிருந்த சில புத்தகங்களும் கிடைத்தன.
பக்கத்தில், அகர்சந்த் மேன்ஷன் சந்து ஸரொவரா உணவகத்தில் காபி சாப்பிட்டுவிட்டு, கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பினோம். நான் அன்று அலுவலகம் செல்லவில்லை. நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் அம்மா கேட்டார் – சொன்னேன். சரி நடந்தது நடந்துருத்து, எல்லாம் சரியாய்டும். ஆனா அந்தப் பிள்ளை மகாதேவன் காலேல ஒரு பால் கூடக் குடிக்காம போயிட்டானே, மொகம் வாடியிருந்தது பாவம் என்றார்.
=-=-=-=-=
- பிசாத்து அரசு நூலக ஆர்டரை நம்பி என்ன பிடுங்க முடியும். தமிழகத்தில் 1000 பிரதிகளுக்கு மேல் ஒரு தரமான புத்தகத்தை விற்க முடியாததற்குக் காரணங்கள் என்ன? இந்தப் பின்புலத்தில், மகாதேவனும் நானும் ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தது (1988 – 91) – மிகவும் பொருட்படுத்தத் தக்க, தவிர்க்க முடியாத, பல்வேறு தளங்களில் இயங்கும், ஆழமும் வீச்சும் நிறைந்த, அழகுணர்ச்சியும் செய்நேர்த்தியும் மிக்க ஆயிரம் புத்தகங்களை, உயர்ந்த தரத்தில் ஒரே சமயம் பதிப்பிக்க வேண்டும். அவற்றை வாசகனிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், புதிய வியாபார உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இது நம்மால் முடிய வேண்டும். ஆக நாங்கள் பலவாறு யோசித்து, பல ஜாபிதாக்கள் போட்டு, ப்ரொபோசல்கள் தயாரித்து முதலீடு சேகரிப்புக்காக, கடன்களுக்காக அலைந்தோம். சில வருடங்கள் பின்பு பல காரணங்களால் இந்த முனைப்பைக் கைவிட்டோம். ஹ்ம்ம்.
- தீ விபத்துக்குப் பின் ‘முன்றில்’ சாக்குப்போக்குச் சொல்லாமல், எல்லா பதிப்பாளர்களுக்கும் கணக்கை சரியாகக் காட்டி, எரிந்த/எரியாத புத்தகங்களுக்குப் பணம் கொடுத்தது. (பல பதிப்பாளர்கள் / ஸ்டால் வைத்திருந்தவர்கள் இப்படிச் செய்யவில்லை – விற்ற புத்தகங்களுக்குக் கூட பணம் கொடுக்காமல் எல்லாம் எரிந்து விட்டது என்று கணக்குக் காட்டியிருக்கிறார்கள்)
- விடமாட்டேன், ‘முன்றில்’ தொடர்ந்து நடத்தப் படும் என்றான் மகாதேவன் – இதன் பிறகு பல வருடங்கள் நடத்தியுமிருக்கிறான். நான் வேறு வேலைகளில் மும்முரமாகி விட்டேன்.
- அடுத்த சந்தையிலிருந்து தீயணைப்பு வண்டிகளை, வளாகத்திற்குப் பக்கத்தில் நிறுத்திவைக்க ஆரம்பித்தார்கள், பபாஸி அமைப்பினர்.
- சுமார் இருபது வருட இடைவெளிக்குப் பின்னர், சென்ற வருடம் (2012) நடந்த சென்னைச் சந்தைக்குச் சென்றிருந்தேன் – பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு கடைகள். தலை சுற்றியது. சந்தோஷமாகவும் இருந்தது. கிழக்கு, சந்தியா, காலச்சுவடு, தமிழினி என, பல பதிப்பகங்கள் தூள் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
- கையில் சுமார் 230 புதுக்கருக்கு மறையாத புத்தகங்கள் படிக்க இருக்கின்றன – இது தவிர நூலகத்தில் இருந்து கடன் வாங்கும் இருவாரத்துக்கு 5 புத்தகங்கள், மின்புத்தகங்கள், மறுவாசிப்புகள். இன்னும் ஒரு வருடத்துக்காவது சந்தோஷமாக வண்டி ஓடும்.
ஆக, இந்த வருடமும் நான் சந்தைக்குச் செல்லவில்லை. எப்படியும், நான் சென்னைவாசியும் அல்லன். ஃப்லிப்கார்ட், இன்ஃபிபீம், டயல்ஃபார்புக்ஸ், உடுமலை.காம் இருக்கும்போது, குறையொன்றுமில்லை, கைக்காசு சந்தோஷமாகக் கோவிந்தாதான்.
January 21, 2013 at 11:11
அச்சிலேற்றியதால் தமிழ் நூல்களை அழியாமல் காத்தனர் புத்தக பதிப்பாளர். இல்லாவிட்டால் தமிழினம் இன்னும் கேவலப்பட்டிருக்கும். வாசகன்? என்கிற வகையில் புத்தகம் வெளியிடுவதிலுள்ள சிரமங்கள் அறிந்தது கொஞ்சம். அறியாதது அதிகம். எழுத்துலக பிரம்மாக்கள், பதிப்புலக தியாகிகள் இவர்களைப் பற்றி தங்கள் அநுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.