பேருரை (அய்யய்யோ!)
January 18, 2013
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருரை நிமித்தம் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.
உட்கார நிற்க, நம் தமிழர் பண்பாட்டில், அது படும் பாட்டில், எந்த ஒரு கருத்தார்ந்த, செறிவுமிக்க விஷயத்தைப் பற்றிய கூட்டமும், என்னதான் அதன் பாடுபொருள் மிகமிக முக்கியமாக இருந்தாலும், உரையாடலுக்கு மகாமகோ அவசியம் இருந்தாலும் – அதற்கு நூறு பேர் வந்தாலே மிக அதிகம் – கடந்த பல்லாயிரம் வருடங்களாக இதுதாம் நம் பண்டமிழ் முறை, தொல் மரபு. ஆனால் விதம் விதமான பட்டி விக்கிரமாதித்த மன்றங்களுக்கு, அல்லது வழக்காடும் கிழட்டு மன்றங்களுக்கு, இன்னல்பிற நிகழ்ச்சிகளுக்கு, கெக்கெக்கெ என்று சிரிக்க, கூட்டம் அலை மோதும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை என்றால் கேட்கவே வேண்டாம். நிரக்ஷரகுக்ஷிகளின், அரைகுறைகளின் சொர்க்கங்களல்லவா அவை?
இது போதாதென்று, மேற்கண்ட முற்றும் (அறிவையும் சேர்த்து) துறந்த மெய்ஞானிகளின் வாரிசுகள் ட்விட்டரில் கீச்சுவதும், ஃபேஸ்புக் சுவர்களில் பீச்சுவதும் – என இணையக் கும்பல்களில் அலை மோதுகின்றனர். இணையத்தின் மகத்தான சக்திகளை, அதன் சாத்தியக் கூறுகளை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல், இந்த கிக்கிக்கீகளில், கிச்சுகிச்சுக்களில், கிசுகிசு வம்புகளில், அற்பமாகச் செலவழிக்கின்றனர். ஹ்ம்ம்.
உதாரணமாக, பத்ரி சேஷாத்ரி அவர்களுடைய இந்தப் பதிவு:
சுமார் 30-40 பேர் மட்டுமே இந்தக் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்பது சோகம். எங்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆர்வலர்கள் தேவை. இந்தக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை மக்களிட்ம கொண்டுசேர்க்க, கூட்டம் நடக்கும்போது ஒலி/ஒளிப்பதிவு செய்ய, பதிவுகளை செம்மையாக்கி, சிறிய கோப்புகளாக்கி, அவற்றை இணையத்தில் சேர்க்க என்று ஆர்வலர்கள் தேவை. விருப்பமும் நேரமும் இருப்போர் மட்டும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், பத்ரி அவர்கள் – சாப்பாடு காப்பி TA DA + முதுகில் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை, நிலைமை சரியாகுமோ?
=-=-=-=-=
… நிற்க உட்கார, இப்படியாகத்தானே அந்தச் சிறுகுறுங்கூட்டத்துக்கு நான் போனேன். அங்கு சுமார் 50 பேர் இருந்திருந்தால் அதுவே அதிகம்.
சில அதிமுகவினர், விடுதலைச்சிறுத்தைகள், வன்னியர் சங்கத்தினரும் (குடித்த வாடையில்லாமல், ஆச்சரியம், ஆச்சரியம்!) இருந்தனர். பாடுபொருள்: சமூகக் கட்டமைப்பில் ஜாதிகளின் பங்களிப்பு பற்றி (பின்புலத்தில் தர்மபுரி, கடலூர் எனத் தொடரும் சம்பவங்கள்).
நன்றாகத்தான் ஆரம்பித்தது. பின் என் முறை வந்தது: “இப்போது ராமசாமி அவர்கள் ’பேருரை’ ஆற்றுவார்.”
எனக்கு சுர்ரென்று ஏறியது – சொன்னேன், “நான் பேசத்தான் போகிறேன். உரை கூட ஆற்றப் போவதில்லை. நிச்சயம் அது அந்த, என்ன சொன்னீர்கள், அந்த‘பேருரை’ ஜந்துவாக இருக்கவே இருக்காது. உங்களுக்குச் சம்மதமென்றால், வேண்டுமானால் தொடர்கிறேன்.”
பேருரை ஆற்றவந்த மொத்தம் மூன்று பேரில் முதலில் ஒரு சண்டிக் குதிரை. நிசப்தம். நெளிசல்கள். கடைசியில், “நீங்கள் மூன்றாவதாகப் பேச முடியுமா?”
எப்படியோ, ஒரு வழியாக – இரண்டு பேருரைகளும், ஒரு பதினைந்து நிமிடப் பேச்சும் முடிந்தன. உரையாடல்களும், ஓரளவு திறந்த மனத்துடன் நடந்தன.
ஆனால், எனக்குப் பேருரைக் கொதிப்பு அடங்கவில்லை.
=-=-=-=-=
நம் தமிழர்கள் இரண்டு அணிகளுக்கிடையே ஊசலாடுபவர்கள் – நான் அந்த எழவெடுத்த திமுக – அதிமுக அரசியலைப் பற்றிச் சொல்லவரவில்லை இங்கு. இல்பொருள் உவமை அணியையும், உயர்வு நவிற்சி அணியையும் தான் சொல்கிறேன்.
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தொடர்ந்து, துளிக்கூடச் சம்பந்தமில்லாமல், நம்மை நாமே புகழ்ந்து கொள்வதில், மற்றவர் நம்மைத் திகட்டத் திகட்டப் புகழ விடுவதில் (அவர்கள் புகழும்போது செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே அவர்களைத் தட்டிக் கொடுப்பதில்) என்ன அற்ப சுகம் நமக்கு!
புர்ச்சித்தலைவரிலிருந்து, எழ்ச்சித் தமிழர் வரை…
கலைஞரிலிருந்து கவிப்பேரரசு வரை…
எல்லாம் பொறுக்கி் நடைத்தமிழின் பரிமாணங்கள் தாம், வேறென்ன சொல்ல!
ஹ்ம்ம். ஒருக்கால், நாம் மிகவும், அளவுக்கு அதிகமாக நகைச்சுவை உணர்ச்சி உடையவர்களோ? இது பற்றிப் புரிந்து கொள்ள எனக்குத்தான் நகைச்சுவை உணர்ச்சி இல்லையோ என்ன எழவோ.
எது எப்படியோ… சரி, இப்போது நாம் ‘பேருரை’க்கு வருவோம்.
- பேசப்படுவது பேச்சு. உரைக்கப் படுவது உரை. ஆக உரத்த குரலில் உரைப்பது பேருரையோ?
- அல்லது உரை உரையென்று குரைத்து, கேட்பவர்களுக்கு நரையேற்றுவதுதான் அதுவோ?
- உரையைப் பிடித்து, அதன் பாடுபொருளைக் குலுக்கி அதன் குடுமியைப் பிய்த்து, பல்லை உடைத்து, உற்சாகமாக அந்தப் பல்லை, கேட்க வந்திருப்போருக்குக் காட்டி, கையையும் தலையையும் ஆட்டி ஆட்டிப் பேசி மகிழ்வதுதான் பேருரையா?
- ஏதோ, சும்மனாச்சிக்கும், பேருக்கு ஒரு உரை ஆற்றினால் அது பேருரையா?
- அல்லது பேருக்கு ஒருவன் கூட என்ன பேசுகிறான் எனப் புரிந்து கொள்ளாதமுடியாதபடிப் பேசுவதுதான் பேருரையா?
- அல்லது பேருக்கு ஒரு உரையை நுரை பொங்க ஆற்றினால் (நரசுஸ் காப்பி போல), சுவாரசியம் மிளிர நகைச்சுவையோடு, நக்கலோடு பேசினால் அது பேருரையா?
- அல்லது நீளமாக, நீட்டிமுழக்கி 2-3 மணி நேரங்களுக்கு மேல் பேசி, கேட்க வந்தவர்கள் (யானையைக் கட்டியோ கட்டாமலோ) போரடித்து, அவர்கள் போர்க்கால ரீதியில், புறமுதுகிட்டு, முண்டியடுத்து வெளியேற முயற்சிக்கும் போது ’போர்’ கால் உடைந்து அது ‘பேர்’ஆகி, அவர்கள் ’உரை’ந்து போய் மூளை குழம்பி நிற்பதனால் அது பேருரையோ?
என்ன எழவோ, எனக்கு இந்தப் ‘பேருரை’ என்கிற வார்த்தைப் பிரயோகமே கூசிக் கூனிக்குறுக வைக்கிறது. அதனை நான் படிக்கும் போது கூட எனக்குள் ஒரு பதற்ற உணர்ச்சி – நான் அதனை நகைச்சுவையாக மாற்றி ஒரு ஆசுவாசம் பெறுவதற்குள், வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.

கூக்ள் பிம்பத் தேடலில் (google images), ‘பேருரை’ என்று அடித்துச் சொடுக்கினால் முதலில் வந்த பிம்பம் இது. எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு ஒன்றும் பிணக்கு கிடையாது. அவர் எழுதியவை பல படித்திருக்கிறேன். அவர் ஷங்கண்ணாவாக இருந்த காலத்திலிருந்தே, அவர் கையெழுத்துப் பிரதியைக் கூட… நன்றாக, அழகாக எழுதக் கூடியவர்தான்- உபபாண்டவம், துணையெழுத்து போன்றவைகள் எனக்குக் கொஞ்சம் தாள முடியாமலிருந்தாலும், அவருடைய பல கதைகளை, நான் விரும்பியிருக்கிறேன்… என்னுடைய பிரச்சினை ’பேருரை’ சம்பந்தப் பட்டது மட்டுமே! அதுவும் ஏழு மகாமகோ பேருரைகளென்றால், எனக்கு என்னவோ வயிறு கலங்கி, மனம் பேதலித்துத்தான் போகிறது (வயிற்றுக்கும்).
எப்படித்தான், நம் பேரிளம் அடலேறுப் பேருரையாளர்கள் ஒரு நமட்டுச் சிரிப்புக் கூடச் சிரிக்காமல் வெகு தீவிரமாகப் பேருரையாற்றுகிறார்களோ, எல்லாம் அந்த ஆண்டவனுக்கே (பிற்காலச் சோழர்கள்?) வெளிச்சம்.
ஏன், நாம் முக்கிய உரை, தலைமை உரை, சிறப்பு உரை போன்ற பதங்களை உபயோகித்தால் குறைந்தா போய்விடுவோம்? சொற்’பொழிவு’ கூடப் பரவாயில்லையே!ஏன் இப்படி இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சிக் குஞ்சாமணிகளைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்? நாம் திருந்துவோமா?
ஆனால், திருவிளையாடல் ’தருமி’ நாகேஷ் சொல்வது போல ‘மாட்டவே மாட்டோம்.’ஏனெனில், நமக்குப் புல்லரிப்புகள் தேவை.
தமிழகத்திணை: நுனிப்புல்லும், நுனிப்புல்லரிப்பைச் சார்ந்த இடமும்.
இப்படிக்கு:
பேருரை தவிர்த்த, பெருமுதுநரை எய்திய, பெரும்பரட்டைத்தாடியுடைத்த (சிரைத்துக்கொள்ளச் சோம்பேறித்தனம்), பேரிணையம் கண்ட(இணையத்தை உபயோகிக்கிறேன்அல்லவா), கலிங்கம் கொண்ட (அண்மையில் ஒடிஷா அடர்கானகம் ஒன்றில் தங்கியிருந்தேன்), அங்கு நறுகோரைப்பாயில் துஞ்சிய, வன்கொடும்புலிகள் அஞ்சிய (எல்லாம் என் வாடை),பரணி பாடப்பெற்ற (100% சரி. நான் நேற்று பரணில் ஏறி சுத்தம் செய்யும்போது பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்) மகாமகோ பேராதிபேராசிரியப் பேராசான் (எல்லாம் ஒரு குட்டி கிராம ஸ்கூல் வாத்திதான்), என் அய்யர், அய்யரப்பன் சாமியே யீ சரணமையப்ப ராமசாமியார்.
January 18, 2013 at 12:54
எதாவது உங்களைப்போல எழுதலமென முயற்சித்தேன். ஒன்றும் வரவில்லை.ஆகையால் எழுதவில்லை.
அது சரி பெங்களூர் வந்தீர்களா? சில நாள் தங்கினீர்களா? புத்தகம் கண்டீர்களா? வாசித்துப்பார்த்தீர்களா? எதாவது தேறும் என்கிறீர்களா இல்லை நான் வெரும் தொல்லைங்களா
January 18, 2013 at 19:59
உண்மைகளை விவேகித்தறிய பட்டிமன்றங்கள் பயன்படுகின்றன. சில சமயங்களில் அதன் நோக்கங்கள் பயன்படாமல் போனால் கூட. ஐந்துக்கு நான்கு பழுதில்லை.