“இன்டர்நெட்டுக்கு வயது முப்பது”
January 22, 2013
அப்படியானால், எனக்கு வயது ஒன்று. நம்பினால் நம்புங்கள் – மேலே படியுங்கள்.
நம்பாவிட்டால் எக்கேடோ கெட்டு (சுஜாதா (PBUH) அவர்களின் அங்கீகாரம் பெற்ற) யுவகிருஷ்ணா அவர்கள் மிக ஜனரஞ்சகமாக எழுதியிருக்கும் ’இண்டர்நெட்டுக்கு வயது முப்பது’ கட்டுரையைப் படித்துவிட்டு வாருங்கள்.
அப்போதுதான், எனக்கு ஒரு வயது என்று பொய் சொல்லியிருக்கிறேன் – ஆனால் நான் பிறக்கவேயில்லை – இருந்தாலும் நான் ஒரு தேவமைந்தனானதால், என்னால் இப்படி எழுதமுடிகிறது என ஒப்புக் கொள்வீர்கள். நான் என் கால்விரல்களால் தட்டச்சு செய்து மூக்கு நுனியால் என் வாலில்லாப்பூச்சியான செல்ல எலியின் கொட்டையைக் கசக்கி உருட்டி, கர்ஸரை நகர்த்தி, காதால் பார்த்து, கண்ணால் கேட்டு, வாயால் கொட்டாவி விடுவதையும் நீங்கள் வெகு இயல்பாகப் புரிந்து கொள்வீர்கள்.
இந்தப் பத்தியை எழுதி முடிக்கும்போது எனக்கு வயது –65,000,000 ஆகி விட்டதே! இந்த கெ-டி பிரிவு தெரிகிறதே! டைனேஸார்கள் எல்லாம் லெமூரியா எல்லாம் அழிகின்றனவே! கபாடபுரத்தில் கபோதியாக இருக்கிறேனே!
அய்யகோ, யாராவது எனக்கு முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? தெரிந்திருந்தால் என் மகனுக்கு விளையாட ஒரு டைரன்னோசார்ஸ் ரெக்ஸ் குட்டியை ஓளித்து வைத்திருப்பேனே, பதுக்கியிருப்பேனே… அடச் சே!
…
…
… ஆ… என்ன பயங்கர கனவு இது! அதுவும் எழவெடுத்த அது TCP/IP மேல உட்கார்ந்து பவனி வருதே!
-0-0-0-0-0-
ஒவ்வொரு வரியிலும் ஒரு தவறாவது இருக்கிறது, யுவகிருஷ்ணா அவர்களின் இந்த வெட்டியுரையில்.
தமிழ் ஆலையில்லா ஊரில்லை. இருப்பினும் இலுப்பைப்பூ சர்க்கரைதான் பிரசாதமாக இணையத்தில் அளிக்கப் படுகிறது என்றால் அது கொஞ்சம் வேதனை தான்.
எனக்கு மகாமகோ வருத்தமாக இருக்கிறது.
புதிய தலைவலி பத்திரிக்கை (’திசைகள்’ மாலன் அவர்களா இப்பத்திரிக்கையின் ஆசிரியர்? நம்பவே முடியவில்லை!) கேட்கிறது என்றாலும், சும்மா உட்கார்ந்த இடத்திலிருந்து சிரத்தை என்கிற ஊரிலேயே பிறக்காமல் விட்டேற்றியாக எழுதினால் இப்படித்தான் இருக்கும்.
தொழில் நுட்பத்தின் வரலாறையும், உடன்படிக்கை மூல வரைவுகளையும் (protocols), இன்டநெட்டையும் (Intenet), அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய வலைப் பின்னலையும் (WWW), அதற்கு மேல்/கூடே உட்காரும் கணினிமென்பொருட்களையும் அடித்துக் குழப்பி, கண்டபடி குறுக்குச்சால் போட்டு உழுது, ஒரு சுக்கு விதையும் போடாமால், சகட்டுமேனிக்கு மானாவாரிச் சாகுபடி செய்திருக்கிறார் இவர்.
ஏன் இந்த கொலவெறி அய்யா? அருணாசலக் கவிராயர் மோகனமாகக் கேட்பது போல, ஏன் பலி கொண்டீர் அய்யா?
பதில் எனக்குத் தெரிகிறது: இதுதாண்டா தமிழிளைஞன்…
-0-0-0-0-0-
ஒரு ஆதங்கத்தில் தான் எழுதுகிறேன்.
இவர் சொல்வது போல ஒரு பேச்சுக்கு 1983ல் தான் இன்டர்னெட் பிறந்தது(!) என்றாலும், அய்யா, நான் 1985ல் கல்வி-ஆராய்ச்சி வலைப்பின்னலை (ERNET – அது அப்போது சோதனையில் இருந்தது – அடுத்த வருடம் விரிவாக்கப் பட்டது) உபயோகித்திருக்கிறேன். இது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் (UNDP) மூலம் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களிலும் (IITs), இந்திய அறிவியல் கழகத்திலும் (IISc), தேசிய கணினிமென்பொருள் தொழில் நுட்ப மையத்திலும் (NCST), மத்திய மின்னணுவியல் இயக்ககத்திலும் (DoE) ஆரம்பிக்கப் பட்டது. எங்களால் செல்லமாக ErrorNet என்று அழைக்கப் பட்டதும் கூட; இப்போதும் இருக்கிறது இது!
பின்னர் விட்டு விட்டுத் தொடர்பில் இருந்திருக்கிறேன் – இந்த கணினி-இணையக் கொண்டாட்டத்தில்…
ஆகவே மிகவும் வலிக்கிறது, அபத்தக் களஞ்சியமான இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்ததற்கு,
ஒரு சோறு பதம்:
“இண்டர்நெட் அறிமுகமான ஆரம்ப வருடங்களில், இந்தியா உடனடியாக அதில் பங்கேற்று விடவில்லை. உண்மையில் அப்போது கம்ப்யூட்டர்மயத்தை எதிர்த்து, நம் நாட்டில் போராட்டங்கள் கூட நடந்துக் கொண்டிருந்தது”
ஒருமை-பன்மை இலக்கண மயக்கத்தையே விடுங்கள் – எனக்கு நினைவிலிருந்தவரை அப்போது ஒரு தலைமுடி போராட்டமும் நடக்கவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்பு தான் வழவழா கொழகொழாவென்று முணுமுணுப்புகள் எழுந்தன. பின் ஐந்தாண்டுகள் கழித்துத் தான் வங்கி ஊழியர்கள் அரைகுறைப் போராட்டம் நடத்தினர்.
-0-0-0-0-0-
எதனைப் பற்றி, எப்படி, யாரால் எழுதப் படக் கூடாது என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை. (இது தன்னிலை வாக்குமூலம் அல்ல)
-0-0-0-0-0-
இது இன்டர்நெட், அது வௌவால் – இன்னாடா சம்பந்தம்?
அண்ணேய், அத்தாண்ணே இது!
(மன்னிக்கவும்)
January 23, 2013 at 09:52
பிரச்சினையை அல்லது எதிர்வினையின் காரணம் அறியும் திறன் எனக்கில்லை.
January 23, 2013 at 15:57
நீங்களாவது உண்மையான வரலாறை எழுதலாமே
July 3, 2018 at 20:04
[…] “இன்டர்நெட்டுக்கு வயது முப்பது”22/01/2013 […]