ர(வண சமுத்திரம்) சு(ப்பையா பிள்ளை) நல்லபெருமாள் – நம்பிக்கைகள்: சில நினைவுகள்

April 20, 2022

என் மதிப்புக்குரிய ரசு நல்லபெருமாள் அவர்களுடைய  (ஏப்ரல் 20, 2011) விண்ணேகுதலின் 11ஆம் ஆண்டு தினமான இன்று, என்னை அக்காலங்களில்(லும்) மிகவும் பாதித்த அப்பெரியவரை நினைவுகூர்கிறேன்.

1978வாக்கில் என நினைவு – நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அர்த்தநாரீஸ்வரர் கோவில் அருகில் இருந்த திரவியம் காப்பிக்கடையில் தான் (இது இன்றும் இருக்கிறதா?)  எனக்கு இவருடன் முதல் அறிமுகம். காப்பிக்கொட்டை வறுத்தரைத்து முடிவதற்குள் அங்கிருந்த மாதாந்தரிகள் பிற சஞ்சிகைகள் தினசரிகள் எனக் கிடைப்பனவற்றையெல்லாம் வெறிபோலப் படித்துவிடுவேன். (அப்போதும் கன்னித்தீவு சிந்துபாத் வந்துகொண்டிருந்தது)

(சில சமயங்களில், அரைத்து முடித்த பின்னரும், ஒருமாதிரித் தயங்கித் தயங்கி ஆனால் நின்றுகொண்டே படித்துக் கொண்டிருப்பேன்; ஒருமுறை கடைக்கார நாடார் அவர்கள், ‘பரால்ல தம்பீ, பட்ச்சிட்டுப் போ’ என ஒருமுறை சொன்ன பின்னர்தான் என் குற்றவுணர்ச்சி அகன்றது….)

-0-0-0-0-0-

கலைமகள் மாதாந்தரியில் 1978 வாக்கில் தொடர்கதையாக வந்ததுதான் இந்த நாவல்.

இதனை ஆர்வத்துடன் நான் படித்ததைக் கவனித்த முதலாளி நாடார் அவர்கள், மிகுந்த தயாள குணத்துடன் ‘வேண்டுமென்றால் அடுத்த இதழ் வந்தவுடன், பழைய இதழின் தொடர்கதைப் பகுதியைப் பிய்த்து எடுத்துக்கொள்’ என்று சொன்னவுடன், எனக்குப் பூலோகமே வைகுந்தமாகி விட்டது. (என்னால் மாதாமாதம் போகமுடியாமல் போனாலும் எனக்காகக் கலைமகள் பின்னிதழ்களைப் பாதுகாத்து வைத்திருந்தார் அவர்)

கீழே, அதன் முதல் + கடைசிப் பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன்.

இன்றுவரை அதனை (பைண்ட் கூடச் செய்யாமல்) அப்படியே வைத்திருக்கிறேன். :-) :-(

-0-0-0-0-0-

இன்று காலையிலும் அதனைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் இதனைப் படிக்கவேண்டும் என நான் விழைவதால், எனக்குப் படும் விஷயங்களை, என் 40+வருட  நினைவுகளிலிருந்து தொகுத்து இப்படிக் கொடுக்கிறேன்:

1. தற்காலத் தமிழ் இலக்கியங்களில் (நாவல் வடிவத்துக்கு அப்பாற்பட்டு) – இது ஒரு முக்கியமான ஆக்கம். ஏனெனில், முக்கியமான விஷயங்களைக் ‘கருத்துத் திணிப்பு’ எனறெல்லாம் செய்யாமல், ஒருவிதமான க்ளினிக்கல் வகையில், வெளியிலிருந்து ஒருவன் நிகழ்வுகளைப் பார்த்துப் பிரதியெடுத்தது போல, ஒருமாதிரி தாமரையிலைத் தண்ணீர் போன்ற அணுகுமுறையில் எழுதியிருக்கிறார். கதையில் – கடவுள் மூர்த்திகள், திருடல், புத்திசாலி இளைஞன், காதல், பண்பாட்டுக் கூறுகள் தொடரவேண்டியதின் முக்கியத்துவம், கர்மா, குற்றம்->தண்டனை அல்லது மீட்பு என, கதையை நகர்த்திச் செல்லவேண்டிய உத்திகளை (அதுவும் அது ஒரு மாதாந்திரியில் வந்ததால்) அழகாகக் கோர்த்து உபயோகித்திருக்கிறார்

2, சிலைத் திருட்டு, அதனைக் கச்சிதமாக நிறைவேற்ற முனையும் படித்த ஆசாமிகளைக் குறித்த க்ளினிக்கல் தகவல்கள், அவர்களுடைய நாடகங்கள்; உள்ளூர் அரசியல்

3. நம் பாரம்பரியங்கள் அழிவதைக் குறித்த கவலை, தாங்கள் கஷ்டஜீவனத்தில் இருந்தாலும், அதனைப் போற்றி வளர்க்கும் (அல்லது குறைந்த பட்சம், அவற்றை அவை இருக்கும் நிலையிலாவது பேண நினைக்கும்) மானுடர்கள் பற்றிய உளவியல்ரீதியான விஷயங்கள். இதில் ‘முறை தவறிப் பிறந்த குழந்தை’ தொடர்பான சங்கிலிப் பிணைப்புகள்

4. எதையுமே (காதல் கத்தரிக்காய் உட்பட) மிகைப் படுத்தாத தன்மை

5. தெய்வம் நின்று கொல்லும் – என்பது நடக்குமா போன்றவை குறித்த அடிநாதங்கள்

6. இடதுசாரி-லிபரல் போன்றவர்களின் பேடித்தலைமை, ஜேஎன்யு சமூகவியல்/வரலாறு சார் பெருந்தகைகள் போன்ற கல்லூரிப் பேராசிரியர்களின் கயமை, அவர்களால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவு.

7. மாதாந்திரத் தொடர்கதைகளுக்கேற்ப விறுவிறுப்பு (+ ‘ஸஸ்பென்ஸ்’) என்பதற்கு அப்பாற்பட்டு, வலிந்து திணிக்கப் படாத நிகழ்வுகள், தொடர்ச்சிகள்

… சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக் காலத்தில் என்னை மிகவும் அலைக்கழித்த நாவலிது. (ஏன், இப்போதும் கூட என்னைப் பாதிக்கக் கூடியதுதான்) – எனக்கு  நல்லபெருமாள் அவர்கள் அறிமுகமானது இதன் வழிதான் – பின்னர் ஏறத்தாழ அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன்.

1990 வாக்கில் – அவர் எழுதுவதை நிறுத்திக்கொண்டபோது, கொஞ்சம் வருத்தப் பட்டேனும் கூட.

(அதே சமயம், எழுதுவதற்கு என ஒரு எழவுமே எப்போதுமே அவர்களுக்கு இல்லாதபோதும், இப்போதும் சிலபலர் தொடர்ந்து எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்களே எனவும் வருத்தப் பட்டுக்கொண்டிருக்கிறேன் – இவர்கள் யார் என்பதை உங்கள் ஊகத்துக்கு(!) விட்டுவிடுகிறேன்!)

-0-0-0-0-0-

இதுவரை நீங்கள் ‘நம்பிக்கைகள்’ நாவலைப் படிக்கவில்லையென்றால் – அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் தான் அது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

…மிகக் குறைந்த பட்சம், இது ஒருமாதிரிக் க்ரைம்-த்ரில்லர் வகை பேஜ்-டர்னர் ஆகவாவது இருக்கும்.

சுட்டி: https://dialforbooks.in/product/1000000005741_/

10 Responses to “ர(வண சமுத்திரம்) சு(ப்பையா பிள்ளை) நல்லபெருமாள் – நம்பிக்கைகள்: சில நினைவுகள்”

  1. Sridhar Says:

    அவருடைய கல்லுக்குள் ஈரம் படித்த நினைவிருக்கிறது. அதில் நினைவில் இருக்கும் ஒரு இடம் – நாயகன், ஒரு கிறிஸ்தவரிடம், ‘எனக்கும் ஒரு நல்ல கிறிஸ்துவரைத் தெரியும். ஆனால் அவரை சிலுவையில் அறைந்து விட்டார்கள்’. இந்த நாவல் கமலஹாசனின் ஒரு படத்திற்கு இன்ஸ்பிரேஷன் – ர.சு. நல்ல பெருமாளுக்கு நன்றியாவது தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.


    • வொலக நாயகக் கோமாளி நடிகர் – முடிந்த இடங்களில் இருந்தெல்லாம் கண்டமேனிக்கும் சுட்ட நேர்மையாளர் – அவர் அட்டைக்காப்பிப் பிக்பாக்கெட் அடித்த ஒரு வேற்றுப்பட டைரக்டர்/தயாரிப்பாளருக்கும், ஒரு சிறு நன்றி தெரிவித்ததாகக்கூட நினைவில்லை. (இப்பார்வை சரியில்லை என்றால் திருத்திக் கொள்கிறேன்)

      சோக நிலைமை இப்படி இருக்கையிலே… நம் நல்லபெருமாளுக்கு மட்டும் ஓரவஞ்சனையா செய்திருப்பார், சொல்லுங்கள்?

      • Kannan Says:

        இப்போ வந்த குட்டி டைரடக்கர் Once Upon Time in America படத்தின் கடைசி சீனை அப்படியே சுட்டு ஊரெல்லாம் நல்ல பேர் வாங்க்கிட்டான்.

        காப்பி அடிப்பது நம்முடைய அடிப்படை உரிமை.ஆனா அடுத்தவன் பண்ணா கேஸ் போடுவோம், கபர்தார்.


      • யோவ். :-( யார் இந்த டாப்டக்கர் டைரடக்கர்?

      • Kannan Says:

        ஆளு அப்பிடியே மாவு பணியாரம் மாதிரி இருப்பான்.

        டுப்பாக்கி,டமால் டுமீல்,காந்தின்னு ஒரே அறச்சீற்றந்தான்.

  2. Sesha a.seshagiri Says:

    என் ஞாபக சக்தி சரியாக இருந்தால் நானும் இதை படித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். காதலை பற்றி சொல்லும் போது நாயகன், நாயகியிடம் தெரு நாய்கள் இரண்டு ஒன்றை ஒன்று புணருவதை சுட்டிகாண்பிப்பான். அது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அப்போது.


    • :-) எனக்கும் நினைவிலிருக்கிறது.

      ஆனால், இந்த எழவெடுத்த ‘காதல்’ என்பதே வெறும் ஜிகினா வஸ்துதான்; அதற்கு அடிநாதமாக இருப்பது காமம், நம் சக ஜீவராசிகளின் அடிப்படை உந்துதல்களில் ஒன்றான புணர்ச்சியை நோக்கிய செயல்பாடுதான்.

      ஆகவே, அம்மாதிரி விஷயங்களை நான் அருவருக்கத்தக்கவையாகக் கருதுவதில்லை. ஓரளவுக்குச் சமனத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

      (ஆனால், காதல் வீரம் மறம் உழபுல/மழபுல வஞ்சி என்றெழுதியே ‘சங்க காலம்’ முதல் தொடர்ந்து ஜிகினா அலப்பரை செய்யும் நமக்கு – இவ்விஷயங்கள் ஒருமாதிரி ஒவ்வாமையை உண்டுபண்ணலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்)


  3. ரசு நல்லபெருமாள் அவர்களின் ‘போராட்டங்கள்’ நாவலின், ஓரளவுக்கு நன்றாகவே வந்துள்ள ஹிந்தி வடிவம் – முழுமையாக இருக்கிறது; ஹிந்தி வாசிக்கக் கூடிய பாக்கியவான்கள், இதனைப் படித்தும் உய்யலாம்:

    ஸங்கர்ஷ – https://archive.org/details/SangharshR.S.Nallaperumal/page/n3/mode/2up


    • இன்றைய கண்டடைவு:

      போராட்டங்கள் நாவல் குருக்ஷேத்திரம் என்ற பெயரில் பிரசுரம் ஆகியிருக்கிறது.

      ஏற்கனவே போராட்டங்கள் என்ற பெயரில் அப்பதிப்பகத்தார் ஒரு நாவல் பதிப்பித்திருந்ததால் இந்த பெயர் மாற்றம் என்று முன்னுரையில் விளக்குகிறார் ரசுந.

      நெடுநாள் தேடி இந்தத் தகவல் தெரியாமல் தவறவிட்டேன்.
      இன்று வானதி பதிப்பகத்தில் ஒரு vintage ஊழியரம்மையார் சொல்லி தான் தெரிந்தது.

      இன்று ஒரு வழியாக வாங்கியமைக்கு இந்த இடுகை காரணம்.

      இனிய ஒராவுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s