“தோசை முரசு”
December 17, 2018
“தோசையே உழைப்பவரின் உணவு. முதலும் முடிவுமற்ற வட்டவடிவில் கருங்கல்லில் வார்க்கப்பட்டு அக்கல்லின் மேல் ஒட்டியிருப்பினும் ஒட்டாதிருப்பது.
திருப்பிப் போடப்பட்டதும் அத்தோசையின் அடுத்தப் பக்கம் அக்கல்லினைப் பார்ப்பதன் மூலம் அது தன்னையே பார்த்துக் கொள்கிறது. குறைந்த அளவு எண்ணெய் குடிக்கும் அது, தன் வார்ப்பில் சத்தம் போடாமலிருக்கும்படி அப்போதிருந்தே ஒடுக்கப்பட்டது. ‘ஏனிந்த சோதனை?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், பெரிது படுத்தாமல் தன் மேலெழும் மெல்லிய குமிழ்த்துளைகளால் அது புன்னகை புரிகிறது. அது சோகம் கலந்த புன்னகை.
தோசைக்கிழத்தி அந்தத் தோசையைப் பார்க்கிறாள். திட்பமான அதன் பரப்பு, மீனவன் உலாவும் கடற்கரை மணல்வெளி போல இருப்பதை எண்ணிப் பெருமூச்செறிகிறாள். ஆ, அது என்ன தோசையின் நடுவில் – மீனா அல்லது கருவாடா? ஓ, இரண்டுமில்லை; கணப்பொழுதில் தோசைக்கிழத்தி கண்ணிமைத்த நேரத்தில் அத்தோசைக்கென்றே பிறந்து பறந்து வந்த ஒரு ஈ தானே! கடலின் மணல்வெளியில் வெப்பத்தில் காயும் கருவாடும், இத்தோசையின் வெப்பத்தில் பொசுங்கும் ஈயும் ஒருவேளை எங்கோ ஒன்றையொன்று சந்தித்தனவோ!
தோசையை எடுத்துத் தட்டில் வைத்த தோசைக்கிழத்தி அதைத் தன் மகனாகவே பார்க்கிறாள்.
“‘தோசையே! நீ உருவானதற்கான தருணம் வந்துவிட்டது. போய் உன் கடமையைச் செய்” என்று தன் கணவனுக்கு அந்தத் தோசைத் தட்டைக் கலக்கத்துடன் வைத்தாள்.”
…என்னருமைச் சக ஏழரைகளில் ஒருவர், இரண்டு மாதங்கள்முன் எனக்கு மேற்கண்ட ரத்தினத்தை அனுப்பினார் – ஆனால் பின்வந்த பல அலைகளில் அதனை விட்டுவிட்டேன். மன்னிக்கவும். சந்திரமௌலி பரசுராமன் எனும் இளைஞர் இதனை எழுதியிருக்கிறார். :-) – இதன் சுட்டி எனக்குக் கிடைக்கவில்லை; கிடைத்தால் பதிக்கிறேன்…
எனக்கு இந்த தோசைவிவகாரம் சுடப்பட்டபோதே சுடச்சுடத் தெரிந்துகொள்ளும் பேறு கிடைக்கவில்லையானாலும் – மதிமாறன் எனும் அற்பத் தெருப்பொறுக்கியின் புடைப்பூக்க உளறலையும், ஜெயமோகனின் படைப்பூக்க வெள்ளப்பெருக்கையும் ஒருங்கிணைத்துச் சுடச்சுடப் பரிமாறத் திறமை வேண்டும்… அது அன்பருக்கு இருக்கிறது.
அன்புள்ள சந்திரமௌலி பரசுராமன்,
அழகான கிண்டல். புதிய வார்ப்பு. நன்றி. :-)
எவ்ளோ பேர்பா இப்டீ கெள்ம்பீகீறீங்கோ, என்பதற்கு அப்பாற்பட்டு ஆகச்சிறந்த எதிர்வினையைத் தந்து இறும்பூதடைவதைத் தவிர என்னால் பிறிதொன்றைச் செய்யமுடியவில்லை. :-))
தனிமையில் தோசைமுரசு கொட்டலன்றித் தொட்டுக்கொள்ள அதிகார மிளகாய்ப்பொடியும் செஞ்சட்டினியும் பிறிதொரு நனிவெங்காயச் சாம்பாரும் சேர்த்தால் – கண்ணில் அறைந்துகொண்டு – சொல்சூழவையிலிருந்து சொற்களற்ற எடைகூடாமல் தளர்ந்த நடையுடன் பெருமூச்சு விட்டுத் தலையசைத்துக்கொண்டிருக்கும் சூதர்களும், ஷத்ரியர்கள் எனும் மானுட அடையாளத்துடன் ஒருங்கிணைந்து உணவு புசிக்கமுடியுமே!
அனைவரும் தத்தம் கடமையைச் செய்து உயிரைத் தத்தம் கொடுத்தால்… அனைவருக்கும் ஆனத்தமின்றி நத்தையின் நுண்கொம்புகளில்லை.
இத்தேமாறீ எள்திக்கினே இர்ந்தா வெண்முரசுப்பகடி என்பது ஒரு குடிசைத்தொழிலாகிவிடுமோ? இந்தத் தொழிலை நடத்துவதற்கும், பிரதமர் நரேந்திரமோதி, முத்ரா முரசாலோசானா என ஒரு கடன் தொல்லை தரும் நாள் வெகுதூரத்திலில்லையோ?
எது எப்படியோ, குடிசைத் தொழில் முன்னேற, வாழ்த்துகள்.
ஆனால், வெண்முரசு ஒருவழியாக முடிந்தபின் நாமெல்லாம் நகைச்சுவைக்கு எங்கே போய் யாரை அறைவது என்பதுதான் பிடிபடமாட்டேனென்கிறது.
:-)
December 17, 2018 at 12:31
அது சாதாரண வாசகனுக்கு இல்லையாம்.அந்த மொழி நடையைப் புரிந்து கொள்ள ஒரு மொழி மேட்டிமைத் தனம் வேண்டுமாம். அது இல்லாதவர்களையெல்லாம் ‘அற்பப்பதர்கள்’என்று கீழே குனிந்து அரைக் கண்ணால் கேவலமாகப் பார்ப்பார்களாம்.
December 17, 2018 at 12:52
அப்படியா? :-(
அப்போது இந்த ஜன்மத்தில் உமக்கும் எனக்கும் விமோசனம் இல்லை. நன்றி!
December 17, 2018 at 21:31
ஆஹா! அந்தச் சிறியேன் நான்தான்! கோடி நமஸ்காரங்கள். _/\_
December 18, 2018 at 04:56
வசமாக மாட்டிக்கொண்டீர்! அடுத்த பாகம் ‘வெங்கல முரசு’ எங்கே?
இப்படியே தொடர்ந்து எழுதி மங்கலமாக விளங்க, வெண்முராசுதாராகப் பொலிய, ஜெயமுரசாக உயர வாழ்த்துகள்!
December 18, 2018 at 08:36
அடுத்து ஊத்தாப்பம், ரோஸ்ட், பணியாரம் என்று
மெனு மேலும் வளர வாழ்த்துக்கள்.
December 18, 2018 at 16:16
Hello Mouli Sir, give the link please.
December 19, 2018 at 17:35
மொத்தமே அவ்வளவுதான் எழுதியிருந்தேன். இதோ: https://www.facebook.com/chandramoulip/posts/10218200867080069
December 19, 2018 at 17:49
ஐயா, வெறும் ஒரு தோசையிலே எங்கள் வயிறு நிரம்பாது. இன்னமும் வார்க்கவும்.
வேகமய்யா வேகம்…
January 19, 2020 at 05:36
[…] “தோசை முரசு” 17/12/2018 […]
January 26, 2021 at 15:58
[…] தோசையாக, பதிலுக்குத் தாங்கள் தோசைமுரசு எனும் தொடர் எழுதமுடிந்தால், […]