வெண்குளிர்க் கருங்கோன் (அல்லது) துரியோதனன் மோட்சம்
October 4, 2018
“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன்.
பெருமூச்சு விட்டுக்கொண்டு பெருவோட்டத்திருந்த துரியோதனன், “என்னால் தாளமுடியவில்லை, என்னை விட்டு நீங்கு! நீ அடுத்த அத்தியாயத்தில்தான் என் பக்கம் வரவேண்டும். இந்த அத்தியாயம் எனக்கே எனக்கு மட்டும்தானன்றி வேறெவர்க்குமில்லை, போ! சென்று வா! பின் பார்க்கலாம்!” என்றான்.
“ஆனால் வேந்தர்க்குவேந்தே! உங்கள் உடலெல்லாம் ஏன் காகிதத் துகள்கள்? யாராவது கூழைக் கொடியோன், குருவம்ச எட்டையப்ப குருகுகன், பாப நாசக்கார சிவன், உங்களைத் தாக்க எத்தனித்தானா?” எனக் கேட்டான் கசங்கன்.
குருபுத்திரன் துரியோதனன் பகன்றான், “நற்பேப்பரில் நன்மசியை வைத்து நேர்த்தியுடன் அச்சிடப்பட்டு கெட்டிஅட்டையுடன் கிழக்குப் பூர்வ திசையில் பதிப்பிக்கப்பட்ட பைண்டு புத்தகத்திருந்து, என் சட்டையையும் அசட்டையில்லாமல் கிழித்துக்கொண்டு வெளியேறுவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. என் செய்வது. வலியின் விதி கொடிது. அப்படித்தான் மருத்துவர் ராமதாஸிடம் ஸுஸ்ருதர் சொன்னார். தோள்வலியால் ஏற்கனவே அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் ஆர்த்திரைட்டிஸ் காரனான எனக்கு இந்த வலிக்கும்கூட ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்யப்படவேண்டுமா எனத் தோன்றுகிறது. ஆனால் மோதிப் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் நம் சனாதன இந்து தர்மம்? மேலும், மருத்துவர்கள் ஸ்ட்ரைக் செய்வதை தர்ம ஸாஸ்திரங்கள் அனுமதிக்கின்றனவா? சரக ஸம்ஹிதை என்ன சொல்கிறது??”
“ஆ! வெகுவேகமாக வெண்முரசினின்றும் வெளியேறிய வேளிர் அடலேறே! உங்களுக்கா இந்த நிலைமை? கொடிது கொடிது காப்பியம் கொடிது! ஏனிப்படி? பழவினைப் பயன் முகிழ்ந்து முக்குளித்து இப்படியானதோ? உங்களை ஓடுகாலி எனச் செப்பிடுவார்களே செப்பிடுவித்தைக்காரர்கள், ஓடும்காலோட உறுகாலில் மூலிகை மருந்தைத் தடவட்டா, உங்களுக்கென்று வடநாடு சென்று ஹிமாலயா ட்ரக்ஸ் மருந்துக்கடையில் வாங்கினேன்!” எனச் சொல்லிச் சிதறிக் கேட்டுக் கேவிக்கேவி அழுதான் ஔடதங்களின் ஓர்மை மிக்க கூர்மை மதியோன், கசங்கன்.
துரிய நிலையைத் துரிதமாக அடைய முயன்றுகொண்டிருந்த துரியோதனன் பகன்றான், “தாள்பணிந்துகேட்டாலும், என்னைத் தயைசெய்து மன்னித்து விட்டுவிடுங்கள் என அவர்காலடியில் உருண்டுபுரண்டு கோரிக்கை வைத்தாலும் எம் ஆசான் விடுவதாக இல்லை, நீயும் அத்தியாயத்துக்கு முந்திவந்து அந்தர்தியானம் செய்ய வைக்கின்றனை. எனக்கும் வெறுத்துவிட்டது. அல்லல் அலுத்துவிட்டது. வாழக்கை பஜ்ஜியாகி விட்டது. ஆகவே காகிதக்கூழ் வெண்முரசை விட்டு நீங்கி, காலவெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு, முற்காலத்தைச் சென்றடைய எத்தனிக்கிறேன்!”
கசங்கன் பதிலுரைத்தான், “ஓ! மன்னரேந்தலே! உங்களை நெடுநாள் அவதானித்தாலும் என்னால் வேழத்தின் ஆழத்தை அறியமுடியவில்லையே! உங்களிடம் ஒன்றை ஒறுத்துச் சொல்லவேண்டும் எனத்தான் ஓடோடி வருகின்றேன், நும் ஆருயிர் நண்பனான கர்ணனைக் கைது செய்துவிட்டார்களாம், அந்தோ!”
துரியோதனன் உடனே ஓட்டத்தை நிறுத்தி, தன் கருமுடித் தலையை நீள்பெரும்சாலையின் தார்ப்படுகையில் அறைந்துகொண்டு, “என்னது, கர்ணன அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களா?” என்று உரக்கப் பிரலாபித்து கண்ணிலிருந்து சுடுநீர்ப் பெருவெள்ளம் பெருக அரற்றினான்.
அறத்தின் மறவோன் அரற்றினாலும், மறப்பானா நண்பனை?
ஆனால் எவ்வளவு நேரம்தான் அவனால் அங்கே அரற்றமுடியும் சொல்லுங்கள்? பின்னாலேயே வாயுவேகம் மனோவேகமாக ஆசான் துரத்திக்கொண்டு வருகிறாரே! :-(
…கர்ண பரம்பரைக்காரரான சிவாஜிகணேசனைப் பிடிக்கும் என்றாலும், துரியோதனனுக்கு, அவருடைய அதிசாகசப் புருவங்களையும் உதடுகளையும் வைத்து அவர் ஏகோபித்து உரத்து நடிப்பது குறித்துக் கோபமே! அதுவும் தம் நண்பனான சூதர்குலத் தேரோட்டி மகனான கர்ணனையே ஹீரோவாக்கினால், தன் ஆளுமை என்னாவது என ஒரு போட்டிமனப்பான்மைவேறு.
…’உள்ளத்தில் நல்லவுள்ளம் உறங்காதென்பது‘ – ஒரு பள்ளத்தில் நன்றாகப் புதைக்கப்பட்ட செவிக்கும் பசுந்தாள் உரம் ஈயப்பட்ட (உரம் + காது எனப் பிரித்துப் படித்துப் பொருள் கொள்ளவும்) அறம்சார்ந்த முன்னோர் முறைமையைச் சுட்டும் என ஆசான் சொன்னதும், ‘வல்லவன் வகுத்தடா’ என்றால் கணிதத்தில் தேர்ச்சியுற்ற ஒருவனுக்கு அடிப்படைக் கணிதம் அவசியம் அத்துப்படுமே எனும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுவதாகவும் அருளியதும் நினைவு வந்து – துரியோதனனின் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது…
இருந்தாலும், இனிவரும் அத்தியாயங்களில் தாம் வீழக்கூடிய சிக்கல்கள் என்னவாக இருக்கும் என மனக்கிலேசமுற்று ஒருமாதிரி அடிவயிற்றுக்கலக்கத்திலும், மனக்குழப்பத்திலுமிருந்த துரியோதனன், மாறாமல் தொடர்ந்து தொடர்மாரத்தான் ஒட்டமோடுவதைவிட, வெண்முரசுடன் மாரடிப்பதே சிறந்ததோ எனவும் எண்ணி அல்லலுற்றான், பாவம். தர்மத்தின்படி கர்மங்களில், கருமாந்திரங்களில் ஈடுபடுவதில் இருக்கும் பிரச்சினைகளே தனித்துவமானவையன்றோ?
…ஆக, வெண்முரசின் கொட்டத்திலிருந்து தப்பித்து ஒட்டமாக ஒடி, வாழ்க்கையின் விளிம்புக்கே, இமாலயத்தின் வெண்பனித் திரள்களுக்கே சென்று உயிரை விடத் தீர்மானித்துக்கொண்டிருந்த துரியோதனனுக்கு அலுப்பாகிவிட்டது.
ஆசானுடன் சமரசம் செய்துகொண்டு – நூறு அத்தியாயங்களுக்கு ஒருமுறைதான், அதுவும் சிலவரிகளுக்கு (ஜிஎஸ்டி 20% தனி) மட்டுமே தன்னால் வரக்கூடும் என ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த ஏற்பாடு செய்துகொள்ளலாமா அல்லது மிளகுரசமே பரவாயில்லையா எனப் பத்தியமாக யோசிக்கையில்…
-0-0-0-0-0-
…செம்புழுதி பறக்கப் புரவியில் தொடர்ந்துகொண்டிருந்த பேராசான் தொலைக் காத தூரத்தில் தெரிந்து தொலைத்தார்; அவருடைய தலையைச் சுற்றிய ஓளிவட்டம் அனலாகக் கனன்று அமோகமாகச் சுழன்றுகொண்டிருந்தது.
அவர் வருகைக்கு முன்னெழும்பிய மாஒலிவட்டத்துக்குப் பரிவட்டம் கொடுக்கப் பரிகள் நரிகளாகவும் நரிகள் பரிகளாகவும், ஏன் கள்ளே விஸ்கியாகவும் மாறி பிரபஞ்ச பிரகிருதியை சத்தாகவும் அசத்தாகவும் விரித்தன. ‘பேராசான் ஜெகஜ்ஜால கஜவீரபாண்டியன் சிம்மகர்ஜனை வாழ்க’ என வாழ்த்தொலிகள் விண்ணில் எதிரொலித்து ஜெகஜ்ஜோதிப் பண்களாக உருமாற்றம் அடைந்தன.
அப்பண்கள் மேன்மேலே உயர்ந்து ரயில்வண்டி அப்பர் பர்த்களாகச் சிதைந்து உயர்பிறப்படைவதை அவதானித்து சுந்தர திருநாவுக்கரசரின் நாவைக் கட்டி அடிமையாக்கின… திருவிளையாடலின் நீட்சியும் நெகிழ்ச்சியும்தான் என்னே!
(துரியோதனனின் முன்னோட்டத்தைக் குறித்த இந்த அத்தியாயத்துக்கான குறியீடுகளாக, ப்ரத்யேகமாக பாப்லொ பிகாஸ்ஸொ வரைந்த விசித்திரம்)
…எதிர்காலத்தின் வெண்முரசுக் கொடுங்குளிரை படுபீதியாக அவதானித்த துரியோதனன் – ஆங்காரத்திலும் ஓங்காரத்திலும் ஆணவத்திலும் எள்ளலும் நக்கலிலும் ஆவேசத்திலும் ஆக்ரோஷத்திலும் பீடிக்கப் பட்டதால் – முக்கியமாக அவன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும், அடிப்படைத் தேவையால் – வேறுவழியேயில்லாமல் அவன் தன் தலைவிதியைத் தொடர்ந்தான்… ஓடினான் ஓடினான் மஹாபாரதத்தின் விளிம்புக்கே ஓடித் தடுக்கி விழுந்தான்.
அங்கு நாகர்களைச் சந்தித்தான்.
அவர்களுடைய இனமே மிகவும் பேசித்தள்ளிக்கொண்டிருக்கும் கும்பல். நாக்கு சுழன்றுசுழன்று பேசிக்கொண்டிருப்பதால் அவை முப்பரிமாணத்திலும் பெரும் வளர்ச்சியடைந்து பரிணாம வளர்ச்சியின் நீட்சியில் நீளமாகிப் பின்னர் அவற்றை வளைத்து, மடக்கி அவற்றுக்குள்ளேயே அவர்கள் வசிக்க ஆரம்பித்தார்கள். நா + கர் = நாகர், இப்போது, கர் என்றால் ஹிந்திமொழியில் வீடு என அர்த்தம் என்பதை ஹிந்திவெறியர்களான நீங்கள் அனைவரும் ஏக் கான்வ் மே ஏக் கிஸான் ரகுத்தாத்தா அல்லவா?
நாக்கைச் சுழற்றிப் பேசி நாக்கு சாதுர்யத்தினாலே, நாக்குக்குள்ளேயே தம்மிலே தனித்துவமாக வாழும் திறம் பெற்றவர்களை நாக்கர்கள் அல்லது நாகர்கள் என அழைப்பதுதான் சரியன்றோ. அது தவிரப் பிறிதொன்றி வேறொன்றுமில்லை.
நாகரத்தார்கள் என்றழைக்கப்பட்டவர்களில் சிலருக்குக் கால்கள் இல்லாமல் போனபோது மொழிவரிவடிவ ரீதியில் நகரத்தார்கள் என்றழைக்கப்பட்டனர் எனப் பட்டவர்த்தனமாக, என் குருவின் குருவுக்கு என் ஆசானின் முதன்மைச் சீடர் சொல்லிக்கொடுத்தார்கள் அல்லவா? இவர்களது மஹாபாரத நீட்சி வழித்தோன்றல்கள்தாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
-0-0-0-0-0-0-0-
நிற்கஉட்கார. ஆற அமர. அமரருள் அடக்கம் உய்க்கும். ஆனால், நல்லடக்கம் கடைசியில்தான். மன்னிக்கவும். துரியோதனானாலும் சரி, வாசக டமாரச் செவிடர்களாக இருந்தாலும் சரி; சங்கூதப்பட வேண்டுமென்றால் சங்கேதத்தின் சங்கீதமானது இருப்பின் அவஸ்தையில் மையம் கொண்டு கடைசியில் நமக்கெல்லாம் வாய்ப்பதுதான் என்பதுதானே காப்பியங்களின் மையச் சரடு?
சரி. தற்கால வரலாற்றிலிருந்து அக்கால வரலாற்றுக்கு மறுபடியும் செல்வோம். சரியா?
…துரியோதனன், தொடர்ந்து மண்ணதிர யோசனை செய்யாமல் யோஜனை தூரம் ஓடினான். அவன் வாழக்காயில் அவன் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதைத் தவிர ஆகச் சிறந்த பிறிதொன்றில்லை.
இப்போது அவன் பின்னே – புழுதி தெறிக்க விண்வரை தூசிப் படலம் படர ஒரு சேனை கிழங்களோடு கிளம்பி வந்தது விண்ணதிர மண்குலுங்க காற்று கதற செந்தீ சிதற ஆகாயம் அகல…. ஆ! அவர்கள் சூதின்வடிவான சூதர்கள். வளமையும் குழைவும் வளைவும் மிகுந்த பெரும் பின்பாகங்களைக் கொண்டவர்கள்.
மருதாணி வகை செஞ்சாயத்தைப் பூசி ரத்தச் செவ்வாரஞ்சு நிறம்படைத்த பெரும்தாடியுடைத்து மீசையற்ற மீமாம்ஸைவாதி போல வாளாவிருந்த வாள் உருவிய ஜிஹாதிக் கிழங்களும், குஃபர்களையும் முஷ்கிரோன்களைக் கொக்கரித்துக் கொல்பவர்களும் அவர்களில் இருந்தார்கள்…
ஆசானுக்கு வாசகர்களாக அல்லாஹ்தவர்களை, மடச்சார்பில்லாதவர்களைக் கழுத்தறுத்தே / பின்னூட்டமளித்தே கொல்வோம் எனச் சூளுரைத்தவர்கள் அச்சூதர்கள்.
அவர்கள் ஏகோபித்த உரத்த குரலில் வீறிட்டெழும்பிக் கேட்டார்கள், வெயிலில் வெடித்த பூமியில் மண்டைகளால் அறைந்து ஆர்பரித்தார்கள்- “எப்படி இந்தத் துரியோதனன் வெண்முரசிலிருந்து தப்பித்து ஓடினான்? வாழ்வியல் என்பதில் சேனைக் கிழங்கில்லாமலிருந்தால் வாழக்காயிருந்தாலும் அது மலையாள அவியலாகக்கூடுமா? கேள்வி ஞானிகளின் வேள்விகளில் பங்குபெறாமல் இருப்பது நம் குலத்துக்கு நலமோ?”
“சபாஷ், சரியான வேள்வி!” – என ஸஞ்சய நம்பியார், கண்ணிருந்தும் குருடனானதால் கண்விளங்காமல் இருந்த திருதராஷ்டிரனிடம் சுயவிலக்கம் இல்லாமல் விளக்கிச் சொன்னார். ஏனெனில் ஸஞ்சய் என்னுடைய நண்பனும்கூட!
…சரி. மேற்படி வறட்டுக் கௌரவக் கிழங்களுக்குத் தலைவனான இருந்த சுமந்திரர் (இவர் வால்மீகி ராமாயணத்திலிருந்து டெம்பரவரியாகக் கடன்வாங்கப்பட்டவர்; ஒரு செவ்விலக்கியப் படைப்பென்பதன் அடிப்படையே, இந்த அடிப்படைகளற்ற தன்மைதான், ஒன்றுக்கொன்று ஒரு தொடர்பில்லாமல் தொடர்ந்தோடும் நைந்தவார்த்தைத் திசைதேர் வெள்ளம்தான் – ஆனால் இந்த முக்கியமாக விஷயம் பலருக்குப் புரிவதில்லை அன்றோ?) உரக்கச் சொன்னார், “துரியோதனா! மாயோன் ஆசானின் தாள் பணிந்து சரணடை, இல்லாவிட்டால் உன்னைக் கொத்துபுரோட்டா செய்துவிடுவோம் என்பது எம் சொலவடை!”
திடுக்கிட்ட துரியோதனன் இன்னமும் த்ராட்டில்/ஆக்ஸிலரேட்டர் கொடுத்து ஓடிக்கொண்டே “உங்கள் பெயர், சுமந்திரர் என்பது நீங்கள்’ ஒரு நல்ல குரங்கு’ – அதாவது, நல்லெண்ணங்களுடைய வெறும் ஒரு மந்தி தான் என்பது எனக்கு மோனியர்-வில்லியம்ஸ் ஸம்ஸ்க்ருத அகராதியிலிருந்து தெரியும் – ஆக நீங்கள் என்னைப் பிறாண்ட வேண்டாம். மன்னிக்கவும். மீறினால் அன்பிறாண்டு செய்துவிடுவேன்!”
-0-0-0-0-0-
…துரியோதனன் தம் பின் தொடரும் கிழ நிழல்களின் குரல்களை விட்டோடிக் கொண்டிருக்கையில் உரத்த குரலில் சொன்னான், “வேண்டும், எனக்கு வேண்டும், வேண்டும், விடுதலை வேண்டும்!”
பின்னாலேயே மூச்சிறைக்க ஓடிவந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர் மணிரத்னம், “அது வசனம், என் வசனம், வேணும், எனக்கு வேணும், வேண்டாம், நீ வேண்டாம்!” என உணர்ச்சி பொங்கக் கையால் மண்ணை அறைந்தார். காலால் விண்ணை உதைத்தார்.
துரியோதனன் விதிர்விதிர்த்து சொன்னான், “ஐயோ! எல்லாம் என் விதிதான். கர்ணன் கிர்ணன் எனப் பயாஸ்கோப் பிலிம் சமைத்துவிட்டு இப்போது என் அடிமடியிலேயே கை வைக்கிறீர்களே! எனக்கு வெண்முரசே பரவாயில்லை! வேண்டும், எனக்கு நன்றாக வேண்டும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!” என உளவிலகலுடன் மண்டையில் அடித்துக்கொண்டே திரும்பிப் போனான். :-(
இப்படித்தான், துரியோதனன் தொடர்ந்து வெண்முரசில் இருக்க, இதுவன்றி வேறுவழியில்லை எனவுணர்ந்து இம்மையிலேயே மறுமையை, யாண்டும் இடும்பை இலாமல் அடைந்தான்.
ஏனெனில் இடும்பை, பீமனின் மனைவி. சீண்டினால் சுளுக்கெடுத்து விடுவாள்.
சுபம்.
அடுத்தபகுதி: அதிகசங்கனின் குதிர்கள்ளம்
முற்றிற்று. (எனக்கு)
October 4, 2018 at 20:53
👆சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு. Enjoyed thoroughly after a long time, நன்றிகள் பல உமக்கு உரித்தாகுக
October 4, 2018 at 21:53
அதே சிரிப்புதான் எனக்கும்… இருந்தாலும் வெண்டமாரத்திற்கு இது பெரிய அளவில் விளம்பரமாகி வாசகர்கள் அதிகரித்தால்??
October 4, 2018 at 22:51
:-) மிடில ஐயா 🙏 ‘If Duriyodhan – a quantum object, what is it inside or outside the new epic that decides whether it is alive or dead or if it even exists?’ – 1/2 பூனையின் மியாவ்
October 5, 2018 at 04:10
நித்த நித்தம் இந்த இழவா?அங்க ரம்பம்;இங்க ஆரம்பம்?
October 5, 2018 at 04:36
Roll On The Floor Laughing My ASSAAN Off!
October 5, 2018 at 05:35
பேருந்தில் படித்து நான் சிரித்த சிரிப்பில் அனைவருமே திரும்பி பார்த்து விட்டார்கள்.”அவன் வாழக்காயில் அவன் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதைத் தவிர ஆகச் சிறந்த பிறிதொன்றில்லை” 😂😂
வயிறு வலியே வந்திருச்சு.ஆசான் இதை படித்தாலும் புன்னகைப்பார்.
உங்கள் நகைச்சுவை உணர்ச்சி வாழ்க வளர்கவே.
October 5, 2018 at 06:28
:) நல்லா கோணங்கித்தனமா இருக்கு.
October 5, 2018 at 07:54
அதிகாசங்களின் குதிர்கள்ளம் எப்போ வரும்? ஆவலுடன்….
June 1, 2019 at 21:14
[…] முன்னமே அறிமுகமாகியுள்ள அதேஅதே அவன்தான் […]
January 19, 2020 at 05:36
[…] […]
April 13, 2020 at 16:01
[…] […]
January 31, 2023 at 22:28
LOL! LOL!! முற்றிற்று. (எனக்கு) Hahaha.
அதென்ன கருமுடின்னு சிம்ப்ளா சொல்லிப் போட்டீங்க. க்ரோபட்சமயிர் என்பது சரியாக இருக்குமோ :-)
போற போக்கில மணியையும் போட்டு பாத்துட்டீங்க. உங்கள் தொண்டு பிறிதொன்றாகாமல் தொடரட்டும்.