எஸ்ராமகிருஷ்ணன், பாவப்பட்ட ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் அவர்களை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!

August 11, 2018

…ஐயா மகாமகோ எஸ்ரா,

உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?

ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-(

(தெம்பிருந்தால் இக்கட்டுரையெழவைப் படிக்கவும். எஸ்ராவுடையதைக் குறிப்பிடுகிறேன்…   கதைகள் செல்லும் பாதை- 10 இரண்டு குற்றங்கள்)

-0-0-0-0-0-

முதலில் அவர் பெயர். அவர் போர்ஹே அல்லர். போர்ஹெஸ்.

ஆங்கிலப் படுத்தி பின் தமிழ்ப்படுத்தி போர்ஜெஸ்  – அல்லது போர்செசு எனத் தூயதமிழ்ப்படுத்தி எடுத்தால்கூடப் பரவாயில்லை.

ஏன் ஜனகணமன ஜயஹே போல போர்ஹே என்று அவர் கதையே முடித்துவிடுகிறீர்கள்? தேவையா?

என்ன அசிங்கமான அசிரத்தை. உங்கள் பெயரை எசு. இரமாகைருட்டிணன் என எழுதிக்கொல்வீர்களா?

-0-0-0-0-0-

“A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது.”

என்று எழுத ஆரம்பித்து விட்டு போர்ஹெஸ் குற்றவாளிகள் குறித்து நிறைய கதைகள் எழுதியிருக்கிறார் என அட்ச்சிவுட்டுவிட்டு – அவர் எழுதிய ஒரு குற்றவாளி (=criminal bucket?) குறித்த கதையை எடுத்துக்காட்டுகிறீர். ஆனால் அந்தத் தொகுப்பு 1954 வாக்கில் வந்தது.

மாறாக நீங்கள் எடுத்துக்கொண்ட கதை இன்னொரு தொகுப்பில் (1974ல்) வந்தது. இதையாவது சரிபார்க்கக் கூடாதா? துப்புரவாக எழுதக் கூடாதா?

“A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது.”

அப்படியா?

அந்தத் தொகுப்பில் (இது அவருடைய முதற்தொகுப்பு – கதைகள் பிற்காலக் கதைகளளவுக்கு போதை தருவதில்லை) மொத்தம் 15 கதைகள்- அதில் ஏழு கதைகள் நீங்கள் சொல்வதுபோல, அதிகம் அறியப்படாத குற்றவாளிகளை முதன்மைப்படுத்தி நிறைய அழகுமசாலா சேர்ந்து இருக்கின்றன – ஆனால், + எட்டு பிற கதைகளும் (கற்பனைப் புத்தகங்கள் பற்றி எனவெல்லாம்) இருக்கின்றன. இந்த முதல் தொகுப்பில் அவர் பலவிதமான பரிசோதனை (=horse inspection) முயற்சிகளைச் செய்திருக்கிறார்.

50% மேலாக சாதா (குற்றவாளியற்ற) கதைகள் – இருந்தாலும் “கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது” எனத் தெகிர்யமாக விக்கிபீடியா அமேஸான் படித்துவிட்டு, ஒருமை-பன்மை மயக்கத்துடன் அட்ச்சிவுட்டிருக்கிறீர்கள். வாழ்க!

“போர்ஹே  சிறுகதையைக் கலைடாஸ்கோப்பில் துண்டுச்சில்லுகள் இணைந்து விசித்திரமான தோற்றத்தை உருவாக்குவதைப் போலவே உருவாக்குகிறார். ஒரு கதைக்குள் நிறையக் கதைகள் இருக்கின்றன. அதாவது நிகழ்வுகளை விவரிப்பதற்குப் பதிலாக பல்வேறுவிதமான கதைகளை ஒன்று சேர்த்து ஒரு சிறுகதையை உருவாக்குகிறார்.”

எஸ்ரா, கலைடாஸ்கோப்பை உபயோகித்ததில்லை என்பது இதனால் திண்ணம். அது விசித்திரமான தோற்றங்களையா உருவாக்குகிறது? அது ஏற்படுத்தும் பிம்பங்கள், பல விதங்களில் ஸிமெட்ரி (அதாவது சமச்சீர்) கொண்டவை. அழகானவை.

மேலும் கலைடாஸ்கோப் பிம்பங்களுக்கு துண்டுச் சில்லுகள் இணைய வேண்டிய அவசியமே இல்லை. அவை குழாயினுள்ளே ஒன்றையொன்று தொடாமலேயிருந்தால் கூடப் பரவாயில்லை. பிம்பப் பிரதிபலிப்புகளினால் ஏற்படும் மாயாஜாலத் தோற்றங்கள் தான் இவற்றில் முக்கியம். மேலும், ஒரு கலைடாஸ்கோப்பினைத் திருப்பி/உருட்டிப் பார்த்தால் அதனால் ஏற்படும் பிம்பத் தோற்ற மாறுதல்களானவை வசீகரம் மிக்கவை.

மேலும் கலைடாஸ்கோப்பின் பல வகைகளில், அதன் குழாய்க்குள் ஒரு சில்லுகூட இருக்கவேண்டிய அவசியமேயில்லை – அவை வெளியிலிருந்து வரும் பிம்பங்களை வைத்தே ரசவாதம் செய்யமுடியும். இம்மாதிரி கலைடாஸ்கோப்புகள் வேண்டுமானால் போர்ஹெஸின் சில கதைகளுடம் பொருத்திப் பார்க்கப்படலாம். வேண்டுமானால்.

மேலும் “ஒரு கதைக்குள் நிறையக் கதைகள் இருக்கின்றன” என எழுதுகிறார். இதில் இரண்டு உளறல்கள்.

1. கலைடாஸ்கோப் எழவில் இம்மாதிரி ஒன்றிற்குள் ஒன்று பாணி ரிகர்ஷன் இல்லை. போர்ஹேஸ் அவர்களே இந்தக் கதை வந்த தொகுப்பின் (Brodie’s Report(1970)) முன்னுரையில் “I have tried (I am not sure how successfully) to write plain tales” என எழுதியிருக்கிறார். போர்ஹெஸ் சிறுகதைகளில் மிகப்பலவற்றில் இருக்கும் அழகான விசித்திரமான ஊடுபாவுகள், வர்ணனை நகாசுவேலைகள் இத்தொகுப்பில் பெரும்பாலும் இல்லை.

2. எஸ்ரா எடுத்துக்கொண்ட ‘The Story from Rosendo Juárez’ கதை சர்வ நிச்சயமாக ஒரு நேரடிக்கதை. போர்ஹெஸின் சிலபல கதைகளில் இப்படி கதைக்குள் கதை வகையாகக் கருதப் படலாம். ஆனால் எஸ்ரா அவர்கள் விடுவது வெறும் கதை, கட்டுக்கதை. புருடா. மன்னிக்கவும். போகிற போக்கில் அட்ச்சிவுட்டுருக்கிறார்.

“போர்ஹேயின் கதையில் உரையாடல்கள் குறைவு. இரவின் மடிப்புகளுக்குள் விசித்திரமான மனிதர்கள் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் மீது வெளிச்சம் படரச் செய்கிறார் போர்ஹே.”

அய்யா, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் கதை ஏறத்தாழ முழுவதுமே உரையாடல்தாம். கதையை ஒழுங்காக, ஒருமுறையாவது படித்தீர்களா? என்ன சோகம்!

மேலும் என்ன அந்த அர்த்தமற்ற இரவின் மடிப்பும் மடிப்பின் ஹம்ஸாவும்? உங்களுக்கும் உங்கள் கூறுகெட்ட நெகிழ்வாலஜி வாசகர்களுக்குமே இது வெளிச்சம்!

-0-0-0-0-

ஒரிஜினல் ஆங்கில மொழிபெயர்ப்பு: I felt, inexplicably, that he had been sitting there for some time, in that chair, before that empty glass.

எஸ்ரா இதனை இப்படிச் சுருக்குகிறார்: “காலியான மதுக்கோப்பையின் முன்பாக ஒருவன் அமர்ந்திருக்கிறான்.”

எஸ்ரா, ஏனய்யா சொதப்புகிறீர். அப்போது அவன் மேஜை மேலேயே உட்கார்ந்துகொண்டிருந்தானா? அப்போது கதை சொல்லி அவன் முதுகைப் பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தாரா? என்னய்யா முழிமாற்றமிது? தூ.

சட்டெனக் கதையில் ஒரு வரி மின்னல்வெட்டு போல வெளிச்சமிட்டுப் போகிறது.  ஒரு மனிதன் பிறந்த இடத்தினை மாற்றவே முடியாது.

ஆனால், மேற்கண்ட வரி கதையில் இல்லை. என்ன வகை கஞ்சா புகைக்கிறார் இந்த எஸ்ரா? பின், ஜோடிக்கப்பட்ட இந்தவரியை வைத்துக்கொண்டு ஒரு மசுரு நெகிழ்வாலஜி!

தான் ஒரு களைச் செடியைப் போல வளர்ந்தேன் என்கிறான் ரோசென்டோ. களைச்செடிகளை யார் கவனிக்கப் போகிறார்கள்.

இதுவும் போர்ஹெஸ்தாசன் எஸ்ராவின் கற்பனை!

ரோசென்டோ யூவாரஸிற்குத் தந்தை யாரெனத் தெரியாது- அவனது தாய் ஒரு சலவைத்தொழிலாளி.

ஆனால், ஒரிஜினல் ஆங்கில மொழிபெயர்ப்பு:

It never occurred to me to find out the name of the father that begot me. Clementina Juárez, my mother, was a good honest woman that earned her living with her iron.

இது எஸ்ரா சுருக்கியதுபடியா இருக்கிறது? மேலும் இஸ்திரி போடுபவருக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுத்து அவரை சலவைத் தொழிலாளியாகவே ஆக்கிவிட்டார். தேவையா?

அட்லஸில் பார்த்துவிட்டு அற்ஹெந்தீனா (அல்லது அர்ஜென்டினா) பக்கத்தில் தானே இருக்கிறது என்று சுஜாதா மெஹிகோ சலவைக்காரி ஜோக்காக இதனை உருமாற்றாமல் விட்டதற்கு வந்தனம்.

“அவனுக்கும் கையில் காயம். ரத்தம் வடிய மதுவிடுதிக்கு வந்து குடிக்கிறான்.”

ஆனால், ஒரிஜினல் ஆங்கில மொழிபெயர்ப்பு: It was only some time later that I realized he’d left his mark on me, too — scratches, though, that was about it.

இதைப் போய், இந்தச் சிராய்ப்புகளைப்போய் சினிமாகதை வசனம் டைரக்டிங் எல்லாம் செய்து காயம் ரத்தம்வடிய என்றெல்லாம் பீலா!

மேற்கண்ட அரைகுறைத்தனங்களுக்கு மேற்பட்டும் ஒரே பிரச்சினை, உளறல், இல்லாததை எழுதுதல், நெகிழ்வாலஜி – என சர்வ வியாதிகளும் (ஒற்றெழுத்து உட்பட: “விவரிக்கபடுகிறது“)

அதாவது முழு எஸ்ரா கட்டுரையும் எஸ்ரா எழுதுவதுபோலவே தான் இருந்தது. இதற்கு நான் கியாரண்டி.

ஆனால் இதனை மேலும் துன்புறுத்துவதற்கு எனக்கு போரடிக்கிறது.

—-0—0—

சரி இப்படியேயும் இல்லாத விஷயங்களையும் எழுதியே முடித்துவிடுவாரோ எனப் பயந்து கொண்டிருந்தேன். எஸ்ராவிஸம் இல்லாமல் என்னை ஏமாற்றிவிடுவாரோ என விசனப்பட்டேன்.

ஆனால் அவர் என்னைக் காப்பாற்றி விட்டார்.

ஒரிஜினல் ஆங்கில மொழிபெயர்ப்பு: To get out of that life, I moved over to Uruguay and became an oxcart driver.

எஸ்ரா உவாச:உருகுவேயிற்குச் சென்று மாடு மேய்க்க ஆரம்பிக்கிறான்.”

ட்ரைவர் என்றால் ஓட்டுநர். ஆக்ஸ் என்றால் எருது, மாடு. ஆகவே உருகுவேயில் நடந்தது என்றால் மாட்டுவண்டியை ஓட்டுபவர், தமிழில் முழிமாற்றினால் மாடு மேய்ப்பவர்.

அதாவது: oxcart driver = மாடு மேய்ப்பவர்.

எஸ்ரா அவர்களுடைய  – தன்னுடைய குப்பைத்தனமான அலக்கியப் பொபழிப்புரைகளுக்கு அப்பாற்பட்டு,  வெறும் தகவல்களைக் கூடச் சரியாகக் கொடுக்காத அக்கிரமும் அசிரத்தையும், ஆனால் மினுக்கிக் கொள்ளலும் – அவர்  பெரும் எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் மனதறிந்து  செய்யும் துரோகம் என்பது மிகவும் சோகம்.

ஆனால் எஸ்ராவின் வாசகர்களுக்கு எஸ்ரா ஒரு மேதாவி, இந்த அரைகுறைகளுக்கு நடுவில் குசும்பன் நான் யார், சொல்லுங்கள்?

 

8 Responses to “எஸ்ராமகிருஷ்ணன், பாவப்பட்ட ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் அவர்களை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!”

  1. jay673 Says:

    “போர்ஹேயின் கதையில் உரையாடல்கள் குறைவு. இரவின் மடிப்புகளுக்குள் விசித்திரமான மனிதர்கள் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் மீது வெளிச்சம் படரச் செய்கிறார் போர்ஹே.” – it is exactly because of this kind of நெகிழ்வாலஜி that i gave up reading esRa. ( yamam was the last book i attempted).

    But I admire you for reading him, despite all the pains you go through, for the sake of educating your 7.5 readers :-)


    • Sir, thanks and congrats.

      But in those lurking under the category 7.5, there is also this self, which is very masochistic.

      So.

      • Prem Says:

        உங்க blog படிச்சதால எஸ்.ரா புத்தகம் ஒண்ணு கூட படிக்கல.


      • ஐயா, களவும் கற்றுமற.

        எஸ்ராவும் படித்துக்கடாச.

        ஏனெனில் – என்னைப்போன்ற ஒரு போக்கத்தவன் பேச்சைக் கேட்காமல் – நீங்களே ஒரு முடிவுக்கு/திடத்துக்கு வருவதுதான் நல்லது.

        மற்றபடி உங்கள் விருப்பம்.

  2. Anonymous Says:

    Sir,
    Coup de grâce…Hope S.Ra will read it . Did you send him the link so as to be in direct touch ? Masochistic ,really ? Neither that Nor sadistic …You’re a satirist and for giving us that much needed hearty laugh, you should be applauded and must be widely-read.
    Thank you Sir.

    Regards

  3. Anonymous Says:

    அந்த” மடிப்பு ஹம்சா” விசித்திரா தானே ?அதனால் விசித்திரம்,என்ன பிழை கண்டீர்?


    • ஐயா, நான் மடிந்தேன்.

      எல்லாமே விசித்திர வீணர் பேரறிவாளர் எஸ்ரா அருளால்தான் நடக்கிறது. ஆகவே, ஆளை விடும்.

  4. venkates Says:

    அந்த மடிப்பு ஹம்சா விசித்திரா தானே ?அதனால் விசித்திரம்,என்ன பிழை கண்டீர்?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s