என்னுடைய பாரதம் மஹோன்னதமானது! (+மழையும்!)

August 15, 2017

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது சுதந்திர தினம், அதிகாலை 1.15 மணியிலிருந்து, ஒரே சீராக மழை பெய்த மணியம்.

தூக்கம்வராமல் அலைக்கழிக்கப்பட்டதால் என் அடித்தளப் பட்டறையில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தவன், அதைவிட்டுவிட்டு சுமார் ஒரு மணி நேரம்  இந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்… ஒவ்வொரு முறை இப்படியாகும்போதெல்லாம் எனக்கு “மழை எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!” எண்ணங்கள் எழும்பும் – என்னுடைய தொடர்ந்த, மாளா ஆச்சரியங்களில் ஒன்று இது.

இரண்டொருமுறை, எப்படி இவ்வளவு மகோன்னதமான அளவுகளில், இந்த நீர் எனும் அழகானது, பஞ்சுப்பொதி மேகங்களில் பொதிந்திருக்கும் என ஒரு காகிதத்தையும் பென்ஸிலையும் வைத்துக்கொண்டு ஒரு குத்துமதிப்புக் கணக்கு போட்டு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு பிரமிப்புதான்!

மேகத்திற் படுநீர்போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான். கடவுள் இல்லாமலிருக்கலாம், ஆனால் மழை எனவொரு அற்புதம் இருக்கிறதே, அய்யன்மீர்!

அண்டம் குலுங்குது, தம்பி! சரி.

ஆனால் இது பெங்களூர் – விழுப்புரம் அல்ல, ஆகவே – தலை ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடவில்லை. திசை வெற்புத் துடிக்கவில்லை. ஆனால், சர்வ நிச்சயமாக, வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார்; அடேய் பாரதி, நன்றி.

நேற்று முழுவதும், எங்கள் குடியிருப்பில், இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான முஸ்தீபுகள். வந்தேமாதரம் + ஜனகணமன பாடப்படப்போகின்றன. குடியிருப்பில் இருக்கும் குழந்தைகள் கிட்டார், வாய்ப்பாட்டு, கீபோர்ட் (இது என் மகன்) வகைகளில் தொடர் பயிற்சி.

…குழந்தைகளும் ஓடியாடி வேலை. சுதந்திரதினக் கொடியேற்றத்துக்கு உள்ளூர் பாஜக+காங்க்ரெஸ் தலைவர்களையும் அருகிலிருக்கும் பள்ளிமாணவர்களையும் அழைத்திருக்கிறோம். +காலை சிற்றுண்டி. மரக்கன்றுகள்  நடுதல். ஆனால் மழையினால் இந்தக் கொண்டாட்டங்கள் எப்படி நடக்கப்போகின்றன எனக் குழந்தைகளுக்கு ஒரே படபடப்பு.

-0-0-0-0-0-0-

ஆக, மழையோசைப் பின்புலத்தில் ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.

சத்தீஸ்கட்டின் ஷங்கர் குஹா நியோகியில் இருந்து கஷ்மீரத்து ராஜீவ் குமார் வரை விகசிப்புகளும் வருத்தங்களும்…

-0-0-0-0-0-0-0-

ஆனால், பெருமூச்சுகளுக்கு அப்பாற்பட்டு – நம் உலகில் –  பல அழகான, மனவமைதியும் மனவெழுச்சியும்  புத்துணர்ச்சியும் தரும் விஷயங்களும் இருக்கின்றனதாமே!

உங்களில் பலர் – 40+ வயதானவர்கள், ‘அந்தக் காலத்தில்’ தூர்தர்ஷன் பார்த்திருக்கக் கூடியவர்கள் – இந்த ‘ஒரே ஸ்வரம்’ பாட்டைக் கேட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.  ‘மிலே ஸுர் மேரா, தும்ஹாரா‘ என மகாமகோ பீம்ஸேன் ஜோஷி அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு சுமார் ஆறு நிமிடம் ஓடும்பாடல் இது.

நமது இருவரின் ஸ்வரங்களும்(அல்லது பாடல்களும் அல்லது சிந்தனைகளும்) இணைந்தால் – எனும் வகையில் இந்தியாவின் சிலபல கலாச்சாரக்கூறுகளை/பிராந்திய மக்களை அவரவர்கள் மொழியில் (14 ‘பெரும்பான்மை’ மொழிகளில், சிந்துபைரவி ராகத்தில்) பாடவைத்து  எடுக்கப்பட்ட அழகு. சிலபல நடிகர்களும், மற்ற பிரபலஸ்தர்களும் பங்குபெறுகிறார்கள். Lilting melody.

அஸ்கர் கான் அவர்களால் தரவேற்றப்பட்ட, ‘ஒரிஜினல்’ தூர்தர்ஷன் ஓலிப்பதிவு – முதல் வடிவம் (நல்ல, தரமான நகரும் பிம்பங்கள்)
இதன் இனிமையும் கற்பனாவளமும் அவை கொடுக்கும் எழுச்சியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்பக் கழக  (MIT) இந்திய மாணவர்களால் ‘நடிக்கப்பெற்ற’ இதே பாடல் வரிகளும் எனக்குப் பிடிக்கும்.

https://www.youtube.com/watch?v=jh2KPaZ3_RE

மேலும், இதில் வரும் இரு இந்திய இளைஞர்களை எனக்குத் தெரியும் என்பது எனக்கு ஊக்க போனஸ். :-)

-0-0-0-0-0-

…கேட்கும்போதெல்லாம் எனக்கு விகசிப்பு தரும் இப்பாடலை – பல வருடங்களுக்கு முன்னால் நமது சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் பாடினோம் – ஹார்மோனியமும், தப்லாவும், ரெகார்டர் எனப்படும் ஒருவிதமான ஊதுகுழலும்தான் பக்கவாத்தியங்கள்; 8-10 வகுப்புக் குழந்தைகளை 14 சிறு குழுக்களாகப் பிரித்து ஒரு  ‘சேர்ந்திசை’ முயற்சி செய்திருந்தேன். நானும் கூடச்சேர்ந்து(!) பாடினேன்(!!). ஆச்சரியம்தான். எனக்கு இளையராஜா அவர்கள் அளவுக்காவது ‘பாடும்’ திறமையிருக்கிறது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது.

பல நாட்கள் பயிற்சி செய்து உச்சரிப்புகளையெல்லாம் திருத்திக்கொண்டு மிக நன்றாகவே பாடினார்கள் என் குழந்தைகள். ஆனால் இதனை நான் படமெடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செய்யவில்லை.

என்ன சொல்லவந்தேனென்றால் நமக்கு, முக்கியமாக எனக்கு,  ஞாபகங்களுடன் மறதிகளையும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் பழைய நினைவுகளில் நீந்திக்கொண்டே தற்காலத்தையும் கழித்துக் கொண்டேயிருக்கலாம். (holmes, borges & valmiki on memories 05/10/2014)

-0-0-0-0-0-0-0-0-0-

 …திரைப்படம், அல்லாடும் அரசியல் கட்சிகள், தொலைக்காட்சிப் பப்பரப்பா பொழுதுபோக்கு, போங்காட்ட நியாயாவேசம், சமூகவலைத்தள போராளித்தனம், ஒருங்கிணைக்கப்பட்ட பாரதவெறுப்பு,  க்ரிக்கெட் (பத்ரிசேஷாத்ரி என்னை மன்னிப்பாரா?) போன்றவற்றால் தற்கால இந்தியாவில் பிணைப்புச் சங்கிலி வடங்கள் இணைக்கப் பட்டாலும் – இசை உள்ளிட்ட கலைகளும் அவை பங்குபெறும் பாரதீய மஹாநதியொழுக்கும் தான், மத-ஜாதி-வகுப்பு போன்ற  பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட நம்முடைய பாரதத்தின் நெடு நோக்கு மரபுத்தொடரைத் தொடர்ந்து பேணி வருகின்றன என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

ஆம். மேரா பாரத் மஹான். என் பாரத ஆழி பெரிது.

ஆழியில் ஆயிரம் கசடுகள், உப்புக் கரிப்புகள், சிடுக்கல்வலைப் பின்னல்கள், எரிமலைகள் இருக்கலாம். பல தீர்க்கவேமுடியாத பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றலாம். மதவாதம் ஜாதிவாதம் போராளிவாதம் போன்றவை மேலெழும்புவதாகத் தோன்றலாம். தொழில்முறைப் பொய்யர்களான ஊடகப் பேடிகள் இவற்றை ஊதியூதிப் பெருக்கியும் விடலாம்.

ஆனால் – ஒவ்வொன்றாக இவற்றையெல்லாம் சரிசெய்துகொள்ளும் மனோபலமும் முதிர்ச்சியும் நம் மக்கள் திரளிடம் இருக்கிறது. முகலாயர்களையும் ஐரோப்பியர்களையும் மீறித்தான் நம் சமூகம் மேலெழும்பி வந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால், தற்காலப் பிரச்சினைகளெல்லாம், எதற்கெடுத்தாலும் போராளித்தனங்களெல்லாம், ரஜினிகாந்த் சொல்வது போல வெறும் ஜுஜூபிகளே. (நிகழ்ந்துகொண்டிருக்கும் தரவுகளை வைத்துச் சொல்கிறேன்: நெடுநாள் நோக்கில், நம் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்)

ஆம். எனக்கு என் பாரத் மஹான் என்பதில் ஐயமே இல்லை.

அதே சமயம் மற்ற நாடுகளை, சமூகங்களை அற்பங்கள் எனச் சொல்லும் மனப்பிறழ்வும் இல்லை. ஏனெனில் நான் – மானுடவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் போன்றவற்றின் ஒரு தரமான தொடரும் மாணவன். இதிலும்  எனக்குப் பெருமைதான்.

பின்குறிப்பு1: சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வரை நான் ஒரு மாதமிருமுறை மின்னஞ்சல் (ஆங்கில, தனிச்சுற்றுக்கு மட்டும் என்கிற ரீதியில்) குறிப்புகளை அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தேன்; அதில் என்னை பாதித்த புத்தகங்கள், இசை, நகரும் பிம்பங்கள், சிந்தனைகள்(!) பற்றி – சில சமயம் சுட்டிகளுடன் சுமார் ஆயிரம் வார்த்தைகளுக்கு மனம்போனபோக்கில் எழுதுவேன். முதலில் எனக்கு நேரடியாகத் தெரிந்த, விரிவாக அளவளாவியிருந்த, பரஸ்பரம் மரியாதை இருந்த ஏறத்தாழ சுமார் 160 நண்பர்களுக்கு இது சென்று கொண்டிருந்தது. சில உபயோககரமான விவாதங்களும் எழும்பின என நினைவு. ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பின், சந்தாதாரர்கள் கிட்டத்தட்ட 600 ஆகி ஏகப்பட்ட முன்அறிமுகமில்லாத அரைகுறைகள் அதில் சேர்ந்து ஒருமாதிரி திருப்பித் திருப்பி அதேபார்வைகளை (=குருட்டாம்போக்குகளை) முன் வைத்து சப்தம் மட்டும் அதிகமானவுடன் – அதனை நிறுத்திவிட்டேன். அதில் ஒருதடவை இம்மாதிரி பாரதீயம் என எழுதியதற்கு என்னை ஜிங்கோய்ஸ்ட் எனக் ‘குற்றச்சாட்டு’ வைத்து பதில் கடிதம் எழுதினார்கள் இந்த கும்பலில் சிலர். (இந்த எழவெடுத்த ஒத்திசைவும் இந்தத்திசையில் போய்க்கொண்டிருக்கிறதோ என எனக்குச் சந்தேகம், பார்க்கலாம்)

…இப்படித்தானே இவர்களுக்கு, நேஷன்(தேசம்), நேஷனலிஸ்ம் (தேசியம்), கல்ச்சர் (பண்பாடு), ஸ்டேட் (அரசு), பவர் (அதிகாரம்), ரெலிஜியன் (மதம்), ஸெக்யூலரிஸ்ம் (மதச்சார்பின்மை)  போன்ற மேற்கத்திய கற்பிதங்களைப் பற்றி, பகுப்புமுறைமைகளை, சட்டகங்களைப் பற்றி – அவற்றின் பின்புலங்கள், தேவைகள், ஊடாடும் களங்கள் என ஒரு நீண்ட பாலபாடமே எடுத்தேன்.

ஏனெனில் – இந்த மேற்கத்திய தத்துவார்த்த வகையறா துணுக்குக் கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மேற்கத்திய முப்பட்டக நிறப்பிரிகைகளின் மூலமாக மட்டுமே – அதுவும் அவற்றையும் அரைகுறையாகப் புரிந்துகொண்டு – நம்முடைய ஆஃப்ரிக, இந்திய, ஜப்பானிய, சீன, ஆதிஅமெரிக்க சமூகங்களைப் புரிந்துகொள்வது என்பது மிகவும் தவறான செயல்.

சரி. இந்த மறுமறுமறுஉரையாடல்களில் பல – கடைசியில் நான் என்ன ஜாதி என்பதில் முடிந்தன. சுபம். ஆகவே, திட்டி வரும் எதிர்வினைகளை, இம்முறை பொருட்படுத்தப் போவதில்லை. அவை கடைசியில் – எதற்கு எப்படி எங்கு போய் சுலபமாக முத்திரை குத்தப்பட்டு முடியும் என்று எனக்குத் தெரியும்.

…சரி.

என்னை நான், நல்லார்களில் ஒருவன் என்று கருதிக்கொள்கிறேன். ஒத்திசைவு காலட்சேபமும் நடந்துகொண்டிருக்கிறது.

நல்லார் ஒருவர் உளறேல், பெய்யெனப் பெய்யும் மழை.

ஆக, மழை இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது.

நன்றி, வணக்கம். மேரா பாரத் மஹான். ஜெய் ஹிந்த். (கூட ஜெய் பாகிஸ்தானும்!)

பாரத சுதந்திரதின வாழ்த்துகள். :-)

பின்குறிப்பு2:  இப்பதிவின் ஒரு ஆதிவடிவம்.

6 Responses to “என்னுடைய பாரதம் மஹோன்னதமானது! (+மழையும்!)”


  1. இந்தியாவில் விமானப்பயணத்தில் கிடைக்கும் சிறு உற்சாகம் – மேகம் திரளும் அழகைப் பார்க்கும் பேரனுபவம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதி உயரங்களில் நீராவி, ஜூனில் பஞ்சாவதும், அதிர்ஷ்டமிருந்தால் கருமேகமாக மாறுவதைப் பார்ப்பது, அலுப்பேர்ப்படாத அனுபவம்.

    மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும்.
    நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
    மேநின்று தாஞ்சுரத்த லான்.

  2. Aathma Says:

    Bitter Ramam sir, I have found a pattern in reader comments. Most comments occur during weekdays (during work hours) and holidays are total silence. This speaks a lot of the readers a??

  3. Prabhu Deva Says:

    வாழ்க பாரத மணித்திருநாடு.

  4. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    சேர்ந்திசைப் பாடல்கள்………. ஒரு முப்பது வருஷம் முன்னர் மிகவும் அருமையான சேர்ந்திசைப் பாடல்கள் தூர்தர்ஷனில் எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பப் பட்டது நினைவுக்கு வருகிறது.

    பள்ளிக் குழந்தைகளுடன் நீங்கள் மிலே ஸுர் மேரா தும்ஹாரா………….. பாடலை முயற்சி செய்தது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    நினைவில் நின்ற அருமையான சில சேர்ந்திசைப் பாடல்களைப் பகிர விழைகிறேன். இவற்றையும் முயற்சித்துப் பார்க்கவும்,

    அத ஸ்வாகதம் சுப ஸ்வாகதம் ஆனந்த மங்கல மங்கலம்……….ஏஷியாட் விளையாட்டுப்போட்டிகளின் போது இயற்றப்பட்ட அருமையான வரவேற்புப் பாடல். இசையமைப்பு….ஸ்ரீ ரவிசங்கர்

    ரேபட்டி பாரத பௌருல்லாரா……….. இல்லல்லாரா………………..தெலெகு மொழி பாரதம் போற்றும் சேர்ந்திசைப் பாடல்

    ஜயோஸ்துதே ஸ்ரீ மஹன் மங்கலே சிவாஸ்பதே சுபதே……………….லதா ஜீ பாடிய பாடல்……… ஸ்வதந்த்ரத்தை தேவியாக உருவகப்படுத்தி மராட்டி மொழியில் இயற்றியவர் ஸ்ரீ வீரசாவர்க்கர். மஹாராஷ்ட்ர ப்ராஸ் பேண்ட்ஸ் குழுவினருக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது.

    ஜய ஜய ஹே பகவதி ஸுர பாரதி தவ சரணௌ ப்ரணமாம:………………மிக அருமையான ஸரஸ்வதி வந்தனா……..தில்லி செயிண்ட் ஜோஸஃப் பள்ளிக்குழந்தைகள் ஸ்வரங்களை முதலில் பாடி பின்னர் ஸாஹித்யத்தைப் பாடும் அழகு அருமை…………….

    எல்லாப் பாடல்களையுமே ஒன்றொன்றாக நீங்கள் முயற்சி செய்யலாம். ப்ராஸ் பேண்ட்ஸ் உங்கள் பள்ளியில் இருந்தால் இன்னமும் அருமை. அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர இவை எல்லாமே மிக அருமையான பாடல்கள். ப்ராஸ் பேண்ட்ஸ் இல்லையென்றால் ஒன்றை நிச்சமாகத் துவங்க முயற்சிக்கவும் ராம். ஆர் எஸ் எஸ் கோஷ்…… குழுவில் வம்சீ போதகனாக எனது பொறுப்பு இருந்திருக்கிறது. என் நினைவலைகளிலிருந்து இந்தப் பாடல்கள்.


  5. […] கூட இப்படியே தான் சொல்வேன். ஏனெனில் என்னுடைய பாரதம் மகோன்னதமானது. […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s