புதிய கல்விக்கொள்கை (2016), வாஸிம் மனெர் – மராட்டிய இளம் திரைப்படக்காரர்: சில கொறிப்புகள்
July 26, 2016
சில சமயங்களில்தான் அத்திபூத்தாற்போல சிலவாய்ப்புகள் ஏற்படுகின்றன.
…கல்வி மண்ணாங்கட்டி தெருப்புழுதி சமூகவியல் பல்கலைக்கிழங்கள், சொத்தைப் பல்செட்டுகள் என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் – வாரம் ஒருமுறை மும்பய் மாநகருக்குப் பயணம் செய்து, லேகிய வியாபாரிகள் பழநி லயன் டாக்டர் காளிமுத்து, சேலம் கவிராஜ் டாக்டர் சிவராஜ் வகையறாக்கள்போல பேச்சோதிபேச்சு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்…
‘…அப்புறம், கலவிக்கு முன்னாடி இந்தக் கல்வி பஸ்பத்தைக் கொழெச்சு நாலு நாளுக்கு ஒருதபா வொங்க நெத்தீல பூசிக்குங்க, அய்யோ அங்கயில்ல சார், ஜோக்கடீக்கிறீங்களா, சரிதான்… நெத்திய சுத்தி தடவிக்கிட்டீங்கன்னா…. அந்த சுத்தியில்ல சார், படாபேஜார் பண்றீங்களே, அத்தால வோங்கித் தடவிக்கிட்டீங்கன்னா மண்டெ வொடஞ்சுபூடும் சார்… …அய்யோ இப்ப இன்னாசார், வொங்க நெத்தீய சுத்திதான் சார்… ம்ம்ம்… இன்னா சொன்னீங்க.. ஆ! மேடம், பாவம், அவ்ங்கள வுட்ருங்க, அவங்களுக்கு தனியா ஒரு அண்டங்காக்கா லேகியம் இருக்குது… இத்தத்தான் எங்க அண்ணன் #எஸ்ரா UniversalCrow Pasteன்னிட்டு மொளிபெயத்திருக்காரு… அத்தோட கோந்துமாறீ உயிர்மை சேத்து அக்குள்ள தடவிக்கிட்டாங்கன்னா மேடம், வொடனடியா படுதீவிர பெண்ணியக்கவிதேங்கள ஏடாகூடமா எளுத ஆரம்பிச்சுடுவாங்க… மனுஷ்ஷபௌத்திரன் சத்தியமா இத்தெல்லாம் நடக்கும். புக்குக்கு ஆட்டாமேடிக்கா கலைஞ்சர் விருது அண்ணாவிருது தம்பீ விருதுன்னிட்டு அட்த்தடுத்த வருடங்கள்ள கெடக்ய நான் கேரண்டீ!…ம்ம்ம்ம் இப்ப இன்னா சொல்லிக்கிட்டு இருந்தேன்… ஆங்… கல்விபஸ்பத்த கொழெச்சி பூசிக்கிட்டிங்கன்னா இந்திரியங்களெல்லாம் மந்திரிச்சாமாறீ ஒடுங்கி, அப்டியே மூள டோட்டலா வளர்ந்து காதுவழியாக தொங்கீ தோளத்தொடும் சார்… ரெண்டே வாரத்துல… இத நம்ப வாத்தீங்களுக்குக் குட்த்தீங்கன்னா, எல்லா பிரச்சினையும் குளோஸ். அவ்ங்க அப்பால, என்னவோணும்னாலும் க்விக்கா கத்துப்பாங்க, கத்துக்கறத்துக்கு முன்னாலேயே கத்துக்குடுப்பாங்க… யோவ், நீ சும்மா டிஸ்டர்ப் பண்ணிக்கினேகீற – கத்துக்கறதுவேற கத்தறது வேற கதற்றது வேற… அல்லாத்தயும் போட்டுக் கொளப்பிக்காதீங்க… இந்த கொளப்பத்துக்குன்னு ஒரு களிம்பு இருக்குது…அத அட்த்த வாரம் தர்ரேன்… சரி… இந்தியா முழுக்க, அல்லா ஆசிரியர்களும்… யோவ் அந்த அல்லாயில்ல… டேய், வொன்னோட எடக்குக்கு மதச்சார்பின்மை சூரணம்தாண்டா கொட்க்கணும்… ங்கொம்மாள… இப்ப இன்னாடா சொல்லிக்கினு இர்ந்தேன்? ம்ம்ம், எல்லா ஆசிரியங்களும் கல்விபஸ்பத்த பூசிக்கினா புதிய கல்விக்கொள்க இம்மீடியட் ஸக்ஸஸ்…
…அப்பால, புதிய கலவிக்கொள்கைக்குப் போவலாம், ரெண்டேமாசத்துல… ஒரு செட் கலவிகப்ஸம் சாப்ட்டா, நாட்டுல அல்லா பாலியல் ப்ராப்ளங்களும் ஒரே வாரத்துல குளோஸ், சரியா? அல்லா ஆண்குறீங்களும் ஆண்டென்னா மாரீ உள்பக்கம் கொல்லாப்ஸாயிட்டு பர்மனெண்டா ஒடுங்கிடும். வெளீல வர்ரவேமுடியாது. ஆட்டம் குளோஸ். அத்தோட ஒரு பாலியல் வக்கிரமும் இருக்காது, மிஞ்சிப்போனா வெறும் தயிரியல் பிரச்சினதான், அத்தையும் லஸ்ஸீ பண்ணீ குட்ச்சிட்லாம், அல்லாகாட்டீ நீர்மோர். அவ்ளோதான். பிரச்சினை குளோஸ்.
… இப்டீயேபோனாக்க அப்பால காஷ்மீர் பிரச்சினைதான் பாக்கி இருக்கும்… அத்துக்கும் எங்கிட்ட சொல்லுஷன் இருக்குது. …அகத்தியர் நிகண்டுல போகர் சூத்துரம் சொல்லியிருக்குது. இன்னா சார் சொன்னீங்க? அய்யோ, அல்லாருக்கும் சூத்துல ரம் வுட கட்டுப்படியாவாதுசார்… இத்து வேறசார்! அத்த அப்பால பாக்கலாம் … இப்ப ஃபீஸ் ரூபா 1008/-, ரொக்கமா கொடுத்துருங்கண்ணேய், ணண்றீ! வணக்கொம். மீண்டும் வருக. கண்ணைப் பார் சிரி. சவுண்ட் வோக்கே ஹார்ணி… பெண்ணுக்குத் திருமணவயது 21. மழை நீரைச் சேமியுங்கள்… மேரா பாரத் மஹான்…”
-0-0-0-0-0-0-
புதிய கல்விக்கொள்கை (2016) குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி நேற்றிரவு சில நண்பர்களுடன் விடுதியறை ஒன்றில்அளவளாவிக்கொண்டிருந்தபோது (சொல்லப்போனால் இன்றுகாலை 5.15 வரை நீண்டதுஅது. :-) இன்றிரவாவது ஐந்தாறு மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும்) அழகான இளைஞர் ஒருவரும் சேர்ந்துகொண்டார். தேவைப்பட்டால் அழகாகப் பேசினார். கல்வி பற்றி காத்திரமான கருத்துகளை மென்மையாகச் சொன்னார்.
பேச்சுவார்த்தைகளில் அனல்பறக்கும் சமயங்களில், இறுக்கத்தைக் குறைக்க நான் பயங்கரமான நகைச்சுவை முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தபோது முதலில் புரிந்துகொண்டு சிரித்தார். புத்திசாலி. பின்னர்அவரும் கூடச் சேர்ந்துகொண்டார் – சிலேடை எனும் பெயரில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் கலந்தடித்து அனைவர் கழுத்தையும் அறுத்தோம் . ஆகவே வேறு வழியேயில்லாமல் அவருடன் எனக்கு உடனடியாகக் காதல் ஏற்பட்டுவிட்டது, என்ன செய்வது சொல்லுங்கள். :-))
…அவருக்கும் அப்படியேதான் என நினைக்கிறேன் – ஏனெனில் எதிர்த் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதென்பது சாதாரணமாக நடப்பதுதானே?
அவர், தன் பெயரைச் சொன்னபோதே ஏதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என நினைத்தேன். பின்பு அவர் திரைப்படங்களைப் பற்றிப் பேசியபோது, தன் முழுப்பெயரைச் சொன்னதும் சடக்கென்று எனக்குத் தெரிந்துவிட்டது.
அவர்தான் வாசிம் மனெர் – குறிப்பிடத்தக்க ஒரு மராட்டித் திரைப்படத்தை எடுத்திருக்கும் இளைஞர். இந்தப் படத்தில் என் மனம்கவர் சதாஷிவ் அம்ராபுர்க்கர், ஒரு முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். (ஹொவு தே ஜராஸா உஷீர் = ‘கொஞ்சம் தாமதம் ஆகட்டுமே!‘)
இந்தப்படம் சாலைப் பயணத்தை மையமாகவைத்து சுயபுரிதல்களை, மனவிசாலத்தை அடையும் பாத்திரங்களை முகாந்திரமாகக்கொண்டு எடுக்கப்படும் ‘ரோட் மூவி’ என்ற வகையறாவைச் சார்ந்தது. (இவ்வகையில் நான் அண்மையில் பார்க்கக் கொடுப்பினை கிடைத்த அருமையான படம் – லாஸ்ட் கேப் டு டார்வின்)
இந்த இளைஞர், தன் சகோதரருடன் இணைந்து ஒரு திரைப்படக நிறுவனத்தை நடத்தி வருகிறார் என என் நண்பர் சொல்கிறார். இந்த இளைஞருக்கு பிரகாசமானதொரு எதிர்காலம் இருக்கிறது.
…கல்விபஸ்பத்திற்கான தன்னார்வக்கோளாறு முனைவுகளைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
நன்றி.