ராபர்ட்க்ளைவின் ஆப்பிள் பகல் + மூன்று படுமோசமான அதிர்ச்சிகள்

April 15, 2016

அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே!  ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள்.

என் அருமையின் அருமையான, செல்லத்தின் செல்லமான எஸ்ரா அவர்களுடைய பதிவுகளை அனுதினமும் படிக்காமல் எனக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது எனும் வரலாற்றுண்மையை நீங்கள் அறிவீர்கள்.

சரி. இந்தத் தன்னிலை வாக்குமூல நிர்மூலத்தை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு வழக்கம்போலவே மானப் பிரச்சினையென  ஒன்றுமே இல்லை. ஏனெனில், எஸ்ரா அவர்களும்கூட சிலசமயங்களில் ஒழுங்காக எழுதிவிடுவாரோ என்று மறுபடியும் மறுபடியும் அவர் எழுத்துகளைப் படித்து,  ஒவ்வொரு முறையும் தவறாமல் ஏமாற்றமடையும் அதிஅற்புத பின்நவீனத்துவ மடையர்களில் ஒருவனல்லவா நான்? வெட்கங்கெட்ட போக்கற்ற தமிழ் வாசகப் பிதாமகர்களில், நல்ல வாசிப்பனுபவத்துக்கான(!) நப்பாசையில், பேய் போல அலையும் சோம்பேறிக் கூவான்களில் ஒருவனல்லவா நான்!

…அதனால் தான், ஆகவேதான் – அன்றாட வேலைகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க, தேர்தலுக்குப் பின் விஜயகாந்தார் முதலையமைச்சராகப்போகும் நாளை எண்ணிப் படபடக்கும் நெஞ்சுடன் பரிதவித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டங்களில்,  நான் மறுபடியும் மறுபடியும் நிபந்தனையற்றுச் சரணடையும், வாய்விட்டுச் (= mouth leaving)  சிரிக்கவைக்கும்  புகலிடம் எஸ்ராவல்.காம் இணைய தளமே!

அவருடைய அண்மையப் பதிவுகளில் ஒன்றைப் படிக்கவும்: டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு

யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம், ங்கொம்மாள

-0-0-0-0-0-0-0-

சம்யுக்தா மாயா, சம்யுக்தா மாயா எனவொரு கவிதாயினி இருக்கிறாராம், பாவம். அவர் கவிதைத் தொகுப்பை (டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு) என்னுடைய பலப்பல செல்லங்களில் ஒன்றான உயிர்மை (= LifeDye) பதிப்பகம் வெளியிட்டிருக்கிறதாம்.

ஆனால், எனக்கு இந்தக் கவிதாயினி அவர்களுடன் ஒரு பிரச்சினையுமில்லை, அவர் கவிதைகளை நான் படித்ததுமில்லை என்பதையெல்லாம் நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என் பிரச்சினையே என் அண்ணன் (ஹ்ம்ம்ம்… உண்மையில் எஸ்ரா என் தம்பியாக, இளவலாகத் தான் இருக்கவேண்டும்) அவர்களின் நைந்த, அர்த்தமற்ற, நெகிழ்ச்சியிஸ, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அரைவேக்காட்டு வார்த்தைக் குவியல்கள்தாம்; அதுவும், இவற்றையெல்லாம் விமர்சனம்/அறிமுகம் என்கிற ரீதியில் பொத்தாம்பொதுவாக ஒப்பேற்றியிருப்பதுதான்.

இது தேவையா?

சரி, இந்த எஸ்ராவிய பதிவில் இருந்து சில பகுதிகளை, அதாவது சிலபகுதிகளை மட்டுமே, கொஞ்சம் பார்க்கலாமா?

-0-0-0-0-0-0-

புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள்.  அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன.
ஙே!
அந்த வரியைச் சட்டென வாசித்துக் கடந்து போய்விடக்கூடாது. மெல்ல அசைபோட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். தொலைவிலிருந்து பசியாற்றும் பழம் என்பது ஒரு புது அனுபவம். அது தான் இக்கவிதையின் திறவுகோல். அதன் வழியே தான் பிரிவு அடையாளப்படுத்தபடுகிறது.
ஙே! ஙே!

நானும் பூசணிக்காயைப் பிளக்கிறேன்
அருகிலிருந்து பசியைப் போக்கும் திறன்
அதற்கு உண்டெனினும்
அதை திருஷ்டிப் பூசணிக்காயாக நினைத்து
உடைத்துப் பிளந்தால்…

ஆச்சு, இன்னொரு புதுக் கவிதை…

சர்தான். இப்படியே நிமிடத்துக்கு ஒரு புதுக்கவிதையை எழுதினால், எஸ்ரா அவர்களும் நொடிக்கு ஒரு அறிமுகம் எனத் தொய்வுடன், வழக்கொழிந்துபோன பிரயோகங்களுடன் – ஆனால் ஒற்றேழுத்துகளற்று – எழுதித் தள்ளிவிடுவார், வாழ்க!

எஸ்ரா முதலில் எழுதுகிறார்:
இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும்.
பின்னர் இப்படி எழுதுகிறார்:
மாயாவின் கவிதைகளில் பெருமளவு புதிய சொற்கள். பிரயோகங்களைக் காணமுடிகிறது.
தனித்துவம் தத்துப்பித்துவம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இவற்றைப் படித்தால், பின்புலத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், தலை எழவு, சுற்றோதிசுற்று சுற்றுகிறது. ‘புதிய சொற்கள்’ என்பவை ‘எளிய வார்த்தைகளாக’ இருக்கக்கூடுமா என்பது புரிபடவில்லை.

பின்னர் இப்படியொரு நெகிழ்வோதி நெகிழ்வு:
காணும் உலகை காணா உலகாக மாற்றும் விந்தையே கவிதையின் சூட்சுமம். இக்கவிதையில் சூரியன் எலுமிச்சையென உருமாறுவதுடன் உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ என நீளும் மூன்றாவது வரியின் வழியே தரும் முற்றிலும் புதிய அனுபவம் உருவாகிறது. கறுத்துக் கொண்டிருக்கும் தேநீர் உறவின் குறீயிடாக மாறுகிறது. கடைசி வரிக்கேள்வி என்பது இயலாமையை. தவிப்பை சுட்டுவதாகவே உணர்ந்தேன்
ஒருவேளை,  கவிதைத் தொகுதியின் தலைப்பு  ‘வாரன் ஹேஸ்டிங்ஸின் லெமன் மாலை’ என இருந்திருக்கவேண்டுமோ? என் தவிப்பு அதிகமாகிக்கொண்டேயிருக்கிறதே! :-(

என்னைப் பொறுத்தவரை தேநீர் அல்ல, காப்பிதான் உறவின் குறியீடு. அதுதான் வழி. அதுதான் சத்தியம். அதுதான் ஜீவன். வேண்டுமானால், ஏசு கிறிஸ்து அவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்.

நன்றி.
கயிற்றில் நடக்கும் சிறுமிக்குப் பயமிருக்காது.  அந்தரத்தில் நடப்பதை அவள் வியப்பாகக் கருதமாட்டாள். வாழ்க்கை நெருக்கடியே அவளை அந்தரத்தில் நடக்க வைக்கிறது. ஆனால் அக்காட்சி பார்வையாளர்களுக்கு வியப்பாக இருக்கும், மாயாவின் கவிதைகளும் அது போன்றவையே.
திடுதிப்பென்று இப்படி! :-(

கயிறு மேலே எங்காவது கட்டப்பட்டுள்ளதா, அல்லது அவரைப்போலவே கீழே ஆனந்தமாகப் புரண்டுகொண்டிருக்கிறதா எனத் தெளிவுபடுத்தாமல், ஹனுமான் போல அந்தரத்துக்குத் தாவிவிடுகிறார் என்னருமை எஸ்ரா!

மேலதிகமாக, ‘சிறுமி உளவியல்’ தொடர்பான உளறியல்வேறு! யாராவது கழைக்கூத்தாடிச் சிறுமியுடன் பேசியிருந்தால், அவர்களை அவதானித்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார்.
ஆனால் – மேதகு எஸ்ரா அவர்கள், தன் இளமையில் ‘கயிற்றில் நடக்கும் சிறுமி’யாகத்தான் இருந்திருக்கவேண்டும். மிக தைரியசாலியாகவும் இருந்திருக்கவேண்டும். ஊக்கபோனஸாக வாழ்க்கை நெருக்கடி கொசுக்கடியும் அவருக்கு அமோகமாக இருந்திருக்கவேண்டும். அதனால்தான் இத்தனை தைரியத்துடன் அட்ச்சுவுடுகிறார். வாழ்க நீ எம்மான்!

-0-0-0-0-0-0-

இந்த அழகில், அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எனக்கு. :-(

அதிர்ச்சி #1:

‘அட எஸ்ரா’ எனும் தலைப்புடன் நண்பர் ஒருவர் கீழ்கண்ட சுட்டியை அனுப்பினார்; இது, எஸ்ரா தொடர்புள்ள ஒரு அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி பற்றியது :

http://www.sramakrishnan.com/wp-content/uploads/2016/04/IMG-20.jpg

நண்பருக்கு, நான் மிகவும் மகிழ்ந்து அனுப்பிய பதில் கீழே:

ஆ! இவர் ஏதாவது ஷூ லேஸ் விஷயத்துக்கு சொந்தக்காரரா?

அட, லோவ்லேஸாமே! :-(

எழவு கடிகாரம்வேறு நான்கு மணியைக் காட்டும்போது, எழுத்தில் 4.30 என்றுவேறு!

எஸ்ரா கூட சேர்ந்தால், ஒன்றுமே உருப்படாதுபோல!

ஏன்யா, கொஞ்சம் நிம்மதியாவே இருக்கவிடமாட்டீர்களோ!

அடீங்…​​ :-(

அதிர்ச்சி #2:

‘தேசாந்திரி இலக்கிய அமைப்பு’ குறித்த பகீர் அறிவிப்பு.

இது  அலக்கியம் தொடர்பான ஒரு அமைப்பு என்பதை விலாவாரியாகத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது.

இல்லையேல், காலம் கிடக்கிற கிடப்பில்,  திமுகவோ அல்லது மநகூவினர்களோ இதனையும் அவர்கள் கூட்டணியில் சேர்ந்துக்கொண்டு ஐந்து தொகுதிகளை அதற்கு ஒதுக்கிவிடும் அபாயம் இருக்கிறது என்பதை நினைத்தால் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது.

இன்னொரு விதமாக யோசித்தால் – என் அருமைக் கவிஞர் மனுஷ்யபுத்திரன், தனக்காக ஒரு தொகுதிக்காக, தன் கட்சியான திமுகவிடம் அழுத்தம் கொடுக்க உபயோகிக்கப்போகும் தந்திரமோ இது எனவும் தோன்றுகிறது.

அதிர்ச்சி #3:

எஸ்ரா அவர்கள், தன் பற்களை இழந்த சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களை நேற்று ஒரு கலந்துரையாடலில் பகிர்ந்திருக்கிறார்.

எஸ்ரா அவர்களிடம் சிலருக்கு ஏனிப்படியொரு கோபமோ, தெரியவில்லை. பாவம் அவர்.

ஆனால், அவருடைய அறிவிப்பை மீண்டும் உன்னிப்பாக, கவனத்துடன் படித்ததில்,  அவருடைய வாசகர்களின் பற்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன எனவும் தோன்றுகிறது. ஆனால் இந்தச் சோகச் சம்பவத்தை அவர் – தனக்கே உரித்தான பரந்த மனப்பான்மையுடன் – இலக்கியம் சினிமா ஓவியம் வரலாறு புத்தகவாசிப்பு – போன்றவைகளின் ஊடாக அணுகியிருப்பது போற்றத்தக்கது.

ஆனால், பிரச்சினையென்னவென்றால், உண்மை என்னவென்றால் – அனைத்துவிதமான இலக்கியப் பற்களும் உடைக்கப் பட்டிருக்கின்றன.

நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. நாடு போகிற போக்கே சரியில்லை.

ஆகவே, நான் அணிந்து கொண்டிருக்கும் என் கிழிந்த கோமணத்தை – வருத்தத்துடன், அதிர்ச்சியுடன் இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாகத் திருப்பிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். அல்லது ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நண்பர்கள், இப்படித் திருப்பப்படும் கோமணங்களைத் தொகுத்து அவர்களே அனுப்பினாலும் சரி.

சரி,  நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

One Response to “ராபர்ட்க்ளைவின் ஆப்பிள் பகல் + மூன்று படுமோசமான அதிர்ச்சிகள்”

  1. சந்திரமௌலி இரா Says:

    தலை, ஏன் இந்த கொலைவெறி?
    தவளை பாய்ச்சல் இல்லை, சும்மா “ஷாலினின்36வது அறை” translation(c) எஸ்ரா – ஷான் டே https://www.youtube.com/watch?v=-ZSJQ_Q_XaA | மாதிரி சும்மா போட்டு தள்ளுறிங்களே உங்களுக்கே அடுக்குமா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s