டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)

February 19, 2015

கல்பாக்கம்! கூடங்குளம்!! நியூட்ரான் ஆய்வு மையம்!!! நச்சுக் கிருமி ஆராய்ச்சிகள்!!!! மீத்தேன் எரிவாயு!!!!! பச்சைவயல்காடுகள் கபளீகரம்!!!!!! பன்னாட்டு நிறுவனங்கள்!!!!!!! ஊழல் முதலாளியம்!!!!!!!! பெருச்சாளி அரசியல்வாதிகள்!!!!!!!!! தட்டச்சு வீரதீர இணையப் போராளிகள்!!!!!!!!!! அய்யய்யோ!

… ஏற்கனவே மேற்கண்டவற்றால் கண்டமேனிக்கும் பீதியில் இருக்கும் – திராவிடம் போன்ற மொக்கைப் படுபயங்கரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும், பொட்டல் காடாகப்பட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில்…

… இப்போது இன்னொரு அசுரன்!  பெயர் – டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்! ஆ! அய்யோ!!

அபாயச் சிவப்பு நிறத்தில் இருக்கும் கெமிக்கல் – ஆக்ஸிஜன்; ஆனால் இந்த கொடூர மூலக்கூறில், இது பிராணவாயு அல்ல, அது பிராணனை எடுக்கும் வாயு. இதனைச் சுற்றி நான்கு கொக்கிகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்தக் கொக்கிகளால், இந்த ஆக்ஸிடேன் அரக்க மூலக்கூறானது, பக்கத்திலிருக்கும் எந்தப் பொருளையும், அணுசக்தி காரணமாக, உள்ளிழுத்து அதற்கு நடுவில் இருக்கும் சிறு கருந்துளைக்குள் (Black Hole!) இட்டுச்சென்று அழித்துவிடும்!  பின்,  கால்கள் போல இருக்கும் பாகத்தினால், தத்தித் தத்தி நடந்துபோய்  மற்ற அருகிலுள்ள பொருட்களைக் தொடர்ந்து கபளீகரம் செய்தபடி இருக்கும்!  இதன் அழிவுவலையிலிருந்து தப்பிக்க எவறாலும், எதனாலும் முடியாது. இதற்கு மாற்று மூலக்கூறு என்பதை இன்னமும் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!

எப்படி இருக்கு கதை!  இதற்குப் பின்னால் நிச்சயம் அமெரிக்க ஸிஐஏ, இஸ்ரேலி மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. இது  சர்வநிச்சயம். வேண்டுமானால் நம் இடதுசாரிகளிடம், மனிதவுரிமைக்காரர்களிடம் கேளுங்கள்! இந்த அவலத்தைப் பற்றிச் சுடச்சுட, கதைகதையாகச் சொல்வார்கள்!

ஆனால்…

-0-0-0-0-0-0-0-

இது நமக்குத் தேவையா?

ஹைட்ராக்ஸிலிக் அமிலம் எனவும், μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன் எனவும் அறியப்படும் இந்த யமன், வான்மேகங்களில் அறுதிப் பெரும்பான்மை அடைந்து கொண்டிருப்பதை அறிவீர்களா, அறிவிலிகளே!

இனிமேல் மழையெல்லாம் – அமில மழைதான். காடும் நாடும் பற்றியெரியப் போகின்றன.சகல ஜீவராசிகளும், அமிலத்தால் எரிக்கப்படாவிட்டால், புற்று நோயால் அழித்தொழிக்கப் படப் போகின்றன! ஐயகோ!!

! என் தமிழகமே! :-(

உண்ணும் உணவிலும் நஞ்சா? :-(

நம் செல்லத் தமிழகம் முழுவதும், வெற்று மண்டையோடுகளும், மண்டையோடுகளைச் சார்ந்தவைகளையும் உள்ளிட்ட ஏழரையாம்திணைக்கு மாறப் போகிறதா? எப்படியும், நம் செல்லத் தமிழர்களுக்கு, மூளை என்பது இருந்ததில்லையே, அப்படியே இருந்திருந்தாலும் அதனால் என்ன உபயோகம் என்று  ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்பதைச் சுழற்றிக் குப்பையில் எறிந்ததுபோலவே, மூளையையும் கழற்றி எறிந்திருப்பார்கள் அல்லவா – ஆகவே ஒரு பிரச்சினையுமில்லை என விதண்டாவாதம் பேசாதீர்களேன்!

நாம் பார்க்கப் பார்க்க – தமிழகமென்ன, இந்தியாவையும், ஏன், இந்த அகிலவுலகத்தையுமே சூழ்ந்துகொள்ளப்போகும் கொடூர ரசாயனம் அல்லவா இது? நம் சந்ததிகளுக்குச் சமாதி கட்டப்போவது அல்லவா இது?
-0-0-0-0-0-0-0-

இதில் மகா சோகம் என்னவென்றால் – இந்த ஆக்ஸிடேன் அரக்கன், திரவ நிலையில் இருக்கும் போது இதில் ஒருவன் தன் மூக்கையையும் வாயையும் மட்டும் 3 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால், அவன் இறந்தே விடுவான்! அவ்வளவு வீரியம் படைத்த விஷம் இது!

பன்னாட்டு நிறுவனங்களான கோகோகோலா, பெப்ஸி போன்றவை விற்கும் இனிப்புப் பானங்களில், இவை சுமார் 90% உள்ளடக்கம். விஷத்தைக் கொடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் இந்த நிறுவனங்களைப் பார்க்கும்  நம் பால்காரர்கள் கூட, தங்கள் பாலில் இந்த ஆக்ஸிடேனைக் கலப்பது என்பது அரசல்புரசலாக நடந்து வருகிறது!

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் – நம் அரசுகளே, அரசு நிறுவனங்களே – இந்த அரக்கனை, வேறு பெயர்களில் புட்டியில் அடைத்து விற்கின்றன! நம் நாட்டிற்கு, மக்கள்தொகைக் குறைப்பு என்பது சரியான விஷயம்தான். ஆனால் இப்படி மக்களைக் கொன்றொழித்தா அக்குறிக்கோளை எட்டவேண்டும்?

இந்த அரசுகளின் பின்னால் நின்று இயக்குவது கொலைகார விடுதலைப்புளிப் பிரபாகரன்களா என்ன? நெஞ்சு கொதிக்கிறதே!

 -0-0-0-0-0-0-0-

இம்மாதிரிக் கொடூரப் பிரச்சினைகளைப் பற்றி – அறிவியல் பற்றி மிகவும் கவலைப் படுவதாக பம்மாத்து செய்யும் அறிவியல்புரம், அ(றி)வியல் தளமுதலாளிகள் ஏன் ஒன்றுமே எழுதுவதில்லை?

பெருமாள்முருகன் கருடன்மயில் லக்குமிவள்ளி கருத்துரிமை கருத்தரிப்புரிமை  பிரச்சினைகளில் தான், இவர்கள் ஒன்றும் சொல்லவில்லை – ஆனால், உலகத்தையே குலுக்கியெடுக்கும் இந்த அறிவியல் விஷயத்தில்கூடவா ஒன்றுமே சொல்லாமல் கமுக்கமாக இருப்பார்கள்?

இத்தனைக்கும் அ(றி)வியல் காரரான அருண் நரசிம்மனார் அவர்களின் ஆராய்ச்சிக் குவியம் என்பது ‘ஓட்டை ஊடகங்கள்!’ (porous media). இம்மாதிரி, இவரே மிகக் கேவலமாகக் கருதும் ஊடக அயோக்கியர்களை எதிர்த்து, அவைகளின் கமுக்கமான நிசப்தத்தை எதிர்த்து – அவை இந்த அரக்கனைப் பற்றி ஒன்றுமே பேசாததை எதிர்த்து ஒரு பதிவாவது இட்டிருக்க வேண்டாமா?  ‘அமெரிக்க தேசி’ எழுதிய நேரத்தில் 2% செலவழித்திருந்தாலே, அவருடைய கறாரான மனிதனேயப் பார்வையை, இந்த அறிவியல் பிரச்சினையில் காட்டியிருக்கலாமே!  (பாருங்கள், இவர் தளத்தை – முகப்புப் பக்கத்திலேயே வெட்கமேயில்லாமல் தன் ஆர்எஸ்எஸ் சார்பை வேறு காட்டிக் கொண்டிருக்கிறார்! பேன்டுக்குள் காக்கி நிஜார் போட்டுக் கொள்வாரோ?)

இந்த அறிவியல்புரக்காரர், அய்யா ராமதுரையார் – இக்காலங்களில் வானிலேயே, மற்ற கிரகங்களினூடேயே பறந்து கொண்டிருக்கிறார். எப்பப் பார்த்தாலும் மார்ஸ் ஒரு பாகன் கதை. தேவையா? அய்யா, கீழே இறங்கி வந்து எங்கள் உலகத்தில் இருக்கும் பிரச்சினைகளைச் சரியாக அலசும்! அலறிக் கொண்டிருக்கிறது, நம் தமிழகம்! ஒடிவந்து காப்பாற்ற மாட்டீரா?

-0-0-0-0-0-0-0-

அவ்வப்போது நினைவுவந்து, அறிவியல் கணிதம் என்றெல்லாம் எழுதும் பத்ரி சேஷாத்ரி, ஏன் இதனைக் கண்டுகொள்ளவேயில்லை?

எதையாவது எழுதப் போய்  — ஓடிவந்து, தூக்கமில்லாமல், தார்மீகக் கோபத்துடன் ஒரு பொங்கல் பின்னூட்டத்தை, தொழில்முறை சுயவெறுப்பாளரான மேதகு கணிதஆய்வாளர் ரோஸா (லுக்ஸம்பர்க் கணேஷ்) வசந்த் அவர்கள் இட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயபீதியில் இருந்தால், எதுவுமே சாத்தியமாகாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா? நகைச்சுவையுணர்ச்சி வேண்டாமா? ராஜன் குறையொன்றுமில்லை என்று என்றைக்குத் தான் எழுதியிருக்கிறார், சொல்லுங்கள்? அவருக்கு எதைக் கண்டாலும் குறைதான். அது ராஜபார்வைக் குறை, என விட்டுவிடுதலையாகிவிட வேண்டும். மேலும், பொதுவாகவே — அவர் எழுதுவது என்பது, அவர் எழுதுவதைப் படிக்க முனைபவர் மீதான இரக்கமற்ற துன்புறுத்தல் என்பதைப் புரிந்துகொண்டால், அவர் எழுதுவதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமேயில்லை — என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும், மேற்கண்ட இருவரும் சமூகவியல், ஜாதியியல், கணிதம் போன்றவற்றைக் குறித்த கருத்தாக்கங்களுக்குத்தான் ஏகபோக குத்தகைதாரர்கள். ஆகவே, பொதுவாக அறிவியல் பக்கம் வரமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

… அல்லது, பத்ரி டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் பற்றி ஒன்றுமே எழுதாதற்குக் காரணம், இவரும் ஆக்ஸிடேனால் வணிகப் ‘பயன்’ பெறக்கூடும் முதலாளிகளில் ஒருவராக இருப்பதனால்தானோ? (ஒருவருடமுன்பு, ஒரு முறை இவர் அலுவலத்துக்குச் சென்றபோது, இவர் மேஜையில் இந்த ரசாயனத்தின் ஒரு ஸாம்பிள் இருப்பதைப் பார்த்த நினைவிருக்கிறது; அதனை நான் உற்றுப் பார்த்தவுடன், உடனே அதனை எடுத்து மேஜைக்கு அடியில் வைத்துவிட்டாரென்பதும் இப்போது எனக்கு மேலதிகமாக நினைவுக்கு வருகிறது. நீங்களுமா, பத்ரி!:-( )
-0-0-0-0-0-0-

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் ஏன், வாயில் கொழுக்கட்டையையா வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எதிர்ப்புக் குரலிட்டால் என்னவாம்?  ஆக்ஸிடேனா வீட்டுக்கு முன்னால் வந்து ஆர்பாட்டம் செய்யப்போகிறது? அதுவா வந்து புத்தகத்தை எரிக்கப் போகிறது?

வெண் முரசையும் புத்தம்புதியமூன்றாம்எக்ஸைலையும் எழுதுவதை ஒரு மணி நேரத்துக்காவது கொஞ்சம்போல நிறுத்திவைத்து, தயை செய்து இந்தத் தொழில் நுட்பப் பிரச்சினையின் மேல் தங்கள் கடைக்கண் (அது வாசன் ஐகேர் கடையில்  வாங்கியதாகவே இருக்கலாம்) பார்வையை வீசக் கூடாதா? நம் தமிழகம் கடைந்தேற இதைக்கூடவா தங்களால் செய்யமுடியாது?

எடுத்ததெற்கெல்லாம் உணர்ச்சிவசப் பட்டு, உடனடியாக கோணாமாணா கோல்கப்பா பொங்கல் கவிதை ஒன்றை வடித்தெடுத்து, கவிதைகளுக்குக்கூடத் தன் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் பெரும்புலவர் மனுஷ்யபுத்திரன்கூட இதனைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லையே!  ஐயகோ!!

-0-0-0-0-0-0-0-

டைஹைட்ரஜன்மோனாக்ஸைட் அரக்கன், பேசிக்கொண்டே மௌனமாக எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்து, காலத்தின் நீட்சியில் தன் கோரப்பற்களை மேலதிகமாக நீட்டி, தனக்குத்தானே புன்முறுவல் பூத்துக்கொண்டே பல்லை நறநறத்து, ஜென் கவிதையைப் படித்துக்கொண்டே ஜப்பானின் சாலையோர வேசைகளைச் சல்லாபித்த நெடுங்கனவுடன்.. …   அவரையும் அவர் திரைப்படடிவிடிக்களையும் ஒருசேரக் கடித்துக்குதறி முழுங்கும் வரை எஸ்ரா காத்திருக்கப்போகிறாரா, என்ன?

அல்லது, நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாமல், சமூகவுணர்வே துளிக்கூடயில்லாமல் படுபிஸியாக,  ‘சஞ்சாரம் அது மிஞ்சாரம்’ என விசுப் படத்திற்கு திரைக்கழுதை எழுதிக் கொன்றிருக்கிறாரா? அல்லது, ஏதாவது கந்தறகோள வெளிநாட்டுக்கு வாசகர் செலவில் சென்றுவந்தால்தான் – இதைப் பற்றி நெகிழ்ச்சியாகவும், பதற்றத்துடனும், போராளித்தனத்துடன் பேசமுடியுமா?

…அதே சமயம், சர்வ பராக்கிரமும் உடைய பின்நவீனத்துவ எழுத்தாளர்வாள், திடுதிப்பென்று ஏதாவது ஒரு தொழில் நுட்ப ரீதியான மார்டன்  போராளிப் புத்தகத்தை வெளியிட்டும்விடுவார் என்று தோன்றுவதால்…
tailless-kudirai

எஸ்ரா அவர்களுக்கு ஒரு கோரிக்கை: மேற்கண்ட உங்கள் அட்டைப்படத்தில் (ஆதாரம்) சில மாறுதல்கள் மட்டுமே செய்து, ஒரு எதிர்[டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்] குழந்தைகள் புத்தகத்தை உருவாக்கமுடியுமா?

தலைப்பு: கற்பனைக்கழுதை; மேலிருப்பதுபோல் ஒரு கறுப்பு அரக்கனை ஒரு தங்கமுடி வெள்ளைக்கார டிஸ்னி குழந்தை மாய்ப்பதற்கு பதிலாக — வெள்ளைக்கார ஆக்ஸிடேன் அரக்கனை, ஒரு கறுப்புமுடி நம்மூர்க் குழந்தை மாய்ப்பது போல இருந்தால், ஒரு போராளிக் கதையாக,  நன்றாக இருக்குமல்லவா?

முக்கியமாக, உங்கள் ஊர்ப்பக்கம், குதிரைகளுக்கு வால்கள் இல்லை என்பதை அட்டைப்படம் மூலம் தெளிவுபடுத்திவிட்டீர்கள் அல்லவா; ஆனால், எங்கள் பகுதிகளில், கழுதைகளுக்கு பெரும்பாலும் வால்கள் உண்டு என்பதை அறியவும். நன்றி. இருந்தாலும், பாவம் உங்களுக்கு – and thereby hangs a tail எனச் சொல்லத்தான் தோன்றுகிறது அல்லவா?

ஆகவே மௌனமான கருங்குதிரைக்கு, நெடும்வால் வேண்டும் என நெடுங்கனவு காண்கிறீர்கள் அல்லவா, அதுவும் தனிமையில், கொடுமையாக? பாவம், ஆகவே உங்களுக்கு ஒரு நற்செய்தி.

எங்கள் ஊர் பக்கத்தில் குதிரைவாலி (Echinochola frumentacea) என்றவொரு சிறுதானியம் இருக்கிறது. இதனை, குதிரை வைத்திருப்பவர்,  ஒரு மண்டலத்துக்கு அனுதினமும்  மூன்றுமுறை, இரண்டு கைகளிலும் கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு, அழுத்தி (தன்னுடைய) வழுக்கைத்மாற்றுத்திறனாளித் தலையிலும், குதிரையின் வால்பகுதியிலும் ஒரே சமயத்தில் தேய்த்து வந்தால் – குதிரைக்கு வால் எழும்பி நிற்கும்.

தேய்ப்பவருக்கும், தலை கொஞ்சம் ரத்தக்களறியானாலும், முடி அபரிமிதமாக முளைக்கும். தன் பெயரைக்கூட நெடுமுடிக்கிள்ளான் என மாற்றிக்கொள்ள நேரிடலாம், பார்த்துக்கொள்ளுங்கள். இதில் கொள் என்பது இன்னொரு உணவுவிதை வகையாகும். இதனைச் சாப்பிட்டால், தேவையேயில்லாமல் கொள்ளென்று சிரிக்கத் தோன்றும்.

ஆனால், ஒரு முக்கியமான விஷயம்: குதிரைக்கு எங்கு தேய்க்கிறோம் தடவுகிறோமென்பதை உன்னிப்பாக கவனித்துச் செய்யவேண்டியது அவசியம்… ஏடாகூடமாய் வேறேதாவது எழும்பி நிற்கப்போகிறது, எழவு.

-0-0-0-0-0-0-0-

12 Responses to “டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)”


 1. ராம்,

  மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள எழுத்தாளர் நீங்கள். உங்கள் கட்டுரைகள் ஒருபோதும் சோடை போனதில்லை.

 2. ramadurai Says:

  இது பற்றி விரிவாக எழுத மார்ச் 31 ஆம் தேதி வரை இன்னும் 41 நாட்கள் இருக்கின்றன


  • ஏனய்யா – அச்சமயம், நீங்கள் லெமூரியா பற்றி எழுதலாமே!

   நம் தமிழச் சூழலின் தலையாய பிரச்சினை என்னவென்றால் — கற்றறிந்த சான்றோர்கள், அறிவியலில் ஈடுபாடு உடையவர்கள், எதையும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது தான்.

   ஏன், இதனை இப்போதே செய்தால் குறைந்தா போய்விடுவீர்கள்? ‘நாளை என்பார், யாரதை அறிவார்’ என்ற வாக்கியத்தை இரண்டு முறை அடிக்கோடிட்டுப் படிக்கவும்.

   நானே, உங்களுக்குப் போட்டியாக, அறிவியல்அகம், எனும் தளம் ஆரம்பிக்கலாமா என இருக்கிறேன். ஆனால் எழவு இந்த லாமாக்களைத் தேடியோட திபெத் செல்லவேண்டுமாமே? :-(

 3. vanthia thevan Says:

  H2O?


  • அய்யா,

   அப்படி நீர்த்துப்போகும் படியானதில்லை இந்த அபாயம்!

   நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். அது, உண்மையில் நீங்கள் சுட்டும் மூலக்கூதாரத்தின் சூக்கும, மாற்றுப்புராண வடிவம்.

   மன்னிக்கவும்.

   பயபீதி கொள்ளாமல், பிரச்சினைகளைக் கூர்ந்து கவனிக்காமல், நீங்கள் ஏனோதானோ என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விடையளிப்பது, விசனத்துக்குரியது.

 4. Venkatesan Says:

  அந்த இரண்டு ஹைட்ரஜன் அணுக்களின் இடையே 104.5 டிகிரி இடைவெளி இருப்பதாக படம் சொல்லுகிறது. ஆனால், காம்பஸ், ப்ரொட்ராக்டர் சகிதம் படத்தில் அளந்து பார்த்தல் 103.7 டிகிரி தான் இருக்கிறது. ஏன் இந்த குளறுபடி?

  இப்படிக்கு,
  எதையும் நேரடியாய் அளந்து பார்ப்பவர் சங்கம்.


  • அய்யா வெங்கடேசன்,

   தங்கள் டிகிரி காப்பிக்கு நன்றி.

   ஆனால், நான் முன்பே சொன்னதுபோல, அந்த கருத்துப்படம், அந்தக் கொடூர மூலக்கூறு தத்தித் தத்தி நடக்கும்போது நடுவில் எடுக்கப்பட்ட கரியமிலவாயுப்படம். ஆகவே அதனுடைய முழு விஸ்தீரணத்திற்கு கால் வீச்சு இல்லை. அதனால் தான் அந்த டிகிரி பாடபேதிகள்.

   இதையெல்லாம் கூட விலாவாரியாக விளக்கும் நிலையில் உங்களை வத்திருப்பதுதான், திராவிடம். வேறென்ன சொல்ல.

   மேலும், இப்படியே தொடர்ந்து, தென்னாடுடைய மரியாதைக்குரியவர்களின் வேதவாக்குகளில் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருப்பீர்களேயானால், உங்கள் சுற்றளவு சுருங்கிவிடும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லையல்லவா?

   இப்படிக்கு,

   பொதுச் செயலாளர்
   எதையும் நேரடியாய் பார்க்காமலேயே அளப்பவர் சங்கம்.

 5. ramadurai Says:

  ஏப்ரல் முதல் தேதியன்று எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும்.


  • ஆக, தாங்கள் திராவிட நற்திருநாளாம், மாற்றுமூளையாளித் தினத்தன்று தான், எங்களுக்கு விமோசனம் தரப்போகிறீர்களா?

   நீங்களுமே இப்படிக் கைகழுவி விட்டால், நாங்கள் என்னதான் செய்வது? :-(((

 6. Venkatesan Says:

  // எதையும் நேரடியாய் பார்க்காமலேயே ‘அளப்பவர்’ சங்கம்.

  (emphasis mine)

  ஹா ஹா. good one.


  • யோவ் வெங்கடேசு…

   …அடீங்… நம்ப கெட்டயே வெள்ளாட்ரியா? என் ஒர்ஜினல் ஜோக்க, மவனே கட்த்திக்கினு போய்ட்டு, இங்க்லீஸ்ல ஹாஹா வேற! டேய், சின்பயலே! றொம்பத் துள்னாக்க, நெஞ்ச்சதுல இருக்க் மஞ்சாசோற எட்த்திர்வேன், பட்டா!

   இன்னா நாஞ் ஸொல்றது…

 7. Rajaram Says:

  Initially i thought this is some chemical. Once i searched in internet i came to know that it is a hoax to test the people’s awareness. Then only it striked that it is H2O(water).


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s