இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு!
January 2, 2015
இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:
- ஏன் நீங்கள், சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது எரித்தேயாகவேண்டும்
- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
- சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்
முதல் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் – என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை. என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும்.
ஆகவே இது — நற்செய்தி: சென்னை புத்தகச் சந்தை 2015ற்காக எனது… (2/2)
-0-0-0-0-0-0-0-0-
“ஸ்வேதடமாரம்”
இது மணிப்பிரவாள நடையில் நான் எழுதிய ஒரு முழுநீள வாக்கியம். ஒரு பரீட்சார்த்த ரீதியில், வித்யாவேசத்தில் ஒரே மாதத்தில் நான் எழுதிய ஒரு வரி, ஆனால் கதையற்ற நாவல் இது. மொத்தம் 1500 பக்கங்களுக்கு நீள்கிறது; ஒரேவரியில் ஒரு நாவல் எழுத நான் மிகவும் மெனக்கெட்டிருக்கிறேன்.
இப்புத்தகம் குறித்த என் உரத்த சிந்தனைகள்/குறிப்புகள்:
- ஸ்வேதடமாரத்தில் ஒரேயொரு வரி மட்டுமே இருந்தாலும், வாசகர்களுக்கு இது கொஞ்சம் taxing சமாச்சாரமோ? ஆகவே, இதனை வாங்கினால் 80ஜி மூலம் வருமான வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது ஒரு கொசுறுச் செய்தி.
- 1930களில் மணிக்கொடியில் நான் எப்போதோ எழுதிய ஒரு சிறுகதையாக வந்ததுதான் இதன் கரு. இதனைச் சிதைவு செய்து தற்காலத்திற்கேற்ப செம்மை செய்து, மெட்ராஸ் பாஷயைக் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன். என்ன, படிக்கும்போது கொஞ்சம் மூச்சிறைக்கும் – ஆனால் பக்கத்துக்கு இரண்டுமுறை மூச்சுவிடவேண்டும் என்பதை உணர்த்த சில சங்கேதக் குறிகள் இருக்கின்றன. வாசிப்பனுபவத்தை மீறி இது ஒரு மகாமகோ மூச்சுப் பயிற்சிப் பரிசோதனையாகவும் இருக்கும் என்பதென் எண்ணம்.
- இது ஒரு மிகப்பழைய ஆனால், மிகமிகப்பின்நவீனத்துவ பரிசோதனை முயற்சியாதலால், நிச்சயம் நொக்கர் விருதை பெற்றே தீரும் என, இதற்கு முன்னுரையை எழுதிய ஜெயமோகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது அவருடைய ஆசியா அல்லது அமெரிக்காவா அல்லது சாபமா என்பது எனக்குத் தெரியவில்லை. :-(
- எப்படியும், வஸிஷ்டர் வாயால் பிரம்மராக்ஷஸ் எனப் பாராட்டப் படுவதற்கு நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். எனக்குப் பெருமையாக இருக்கிறது. :-)))
- புதுமைப்பித்தனின் ஆன்மா சாந்தி அடைவதற்கு, இந்த நாவலின் பேசிக்கொண்டேயிருக்கும் ஹீரோவின் பெயர் மௌனி. இவனை இவன் காதலி, செல்லமாக ஹோண்டா என அழைப்பது, நிச்சயமாக ஒரு பின் நவீனத்துவம்தான் என நினைத்துக்கொள்கிறேன்.
- மணிப்பிரவாளம் – இது வாஹ்! மணிகண்டன்!! அவர்களால் தொடர்ந்து எழுதப் படும் நடை. ஒரு யோசனையும் மண்டையில் இல்லாதபோது, !!!!நிசப்தத்தில்!!! உருவாகி வரும் உருளுமிடி கலந்த, பட்சிகள் க்றீச்சிடும், அடிவயிற்றுக்கலக்கத்தை அடுத்த நொடியேகொடுக்கும் புகைக்காற்றிலே கலக்கும் பேரோசை. ஓசோனில் ஓட்டை விழுந்துவிட்டது. இனி அடைக்கவா முடியும்? அடப்பாவமே! ஓசோன் என்று தமிழ் எழுத்துருவில் எழுதினால், அதனை ஊன்றிக் கவனித்தால், மொத்தம் எட்டு ஓட்டைகள் உள்ளன; ஓ -2; சோ – 4; ன் – 2 – ஆக மொத்தம் எட்டு ஓட்டைகள்! ஆங்கிலத்தில் OZONE என எழுதினால் இரண்டு Oக்களுக்கும் சேர்த்து மொத்தம் இரண்டு மட்டுமேதான்! ஆனால் நண்பர் ஒரு ஓட்டை தான் என்கிறார். பிர்யவே மாட்டேங்க்துபா! :-( சரி, நமக்கெதுக்கு வம்பு. :-((
சரி, இப்போது என் நூற்றாண்டுகால நண்பரும், மரைகழன்ற மறத் திராவிடர்களால் மகிழ்ச்சியுடன் புத்தகம் எரிக்கப்பட்ட பேறும் பெற்றவருமாகிய ஜெயமோகன் அவர்களின் மதிப்புரையிலிருந்து, எனக்குத் துவர்ப்பான சில வரிகள்:
“என் வெண்முரசு-வை இந்த ராமசாமி பகடி செய்திருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் டமாரம் என்பது த மாறம் என்பதன் மரூவு என்பதை அகழ்வாராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார் என்பதை அவர் அறியவில்லை. ஐராவதம் விளக்கத்தில் – த என்றால் ஆங்கில the; மாறம் என்றால் ஒரு பாண்டிய அரசம். அதாவது Pandian State. ஆக, த மாறம் என்பது The Pandian State. இதற்கும் வெண்முரசுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
“இப்படி ஒவ்வொரு பக்கத்திலும் பல தவறுகள். ஆனாலும் தமிழில் வரலாற்று ரீதியான, சோதனை முயற்சிதான் இது. வரவேற்கப் படவேண்டியதே. நண்பர்களுக்காக நான் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்.
“வஸிஷ்டர் வாயால் பிரம்மராக்ஷஸ் என்பதுபோல நான் அவரைச் சிலாகித்ததாகச் சொல்லியிருக்கிறார். நான் உண்மையில் சொன்னது பிரம்மஹத்தி.
“ஸ்வேதடமாரத்தில் ஒரு வரிகூடக் கதையே இல்லை. அது வெறும் வரி மட்டுமே. அதுவும் பரிசோதனை வரி. ஆனால் ராமசாமிக்கு மிகவும் தைரியம்தான். ஒன்றுமே புரியாமல் எழுதினால், தமிழ் வாசகன் பயந்து பீதியில் ஓரமாக ஒதுங்கிப் போய் விடுவான் என்பதை நாகார்ஜுனன், ராஜன் குறை கிருஷ்ணன், கோணங்கி போன்றவர்களின் எழுத்திற்குக் கிடைக்கும் எதிர்வினைகளை வைத்து நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றார்.
“இந்த பரிசோதனையை நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன்: சோதனை முயற்சி என்பதை, வாசகர்கள் மீதான சோதனை எனவும் வேதனைப்படாமல் கருதலாம். ஆனால் இது பரிசோதனை முயற்சியா என்று கேட்டால், பரி என்றால் குதிரை. சோதன் என்றால் சோற்றைச் சாப்பிடுபவன் என ஐராவதம் பொருட்படுத்துவதைக் கணக்கில் எடுக்கவேண்டும். அதாவது ‘குதிரையில் உட்கார்ந்து வெண்சோற்றை உண்பவன்” – இவனும் முரசொலிக்காத மாறன் தான், பாண்டிய மன்னன் தான் என்பதை இது குறிக்கிறது. ஆக, ஸ்வேதடமாரம் – அது ஒழுங்காக எழுதப் பட்டிருந்தால், பாண்டிய அரச வரலாற்றின் மீது பல இருட்டுகளை வீசியிருக்கலாம்.
“எதையெல்லாமோ, தகுதியற்றவைகளையெல்லாம் தேவை மெனக்கெட்டு எரிக்கிறார்கள். ஆனால் ஸ்வேதடமாரம் இன்னும் அந்த வரிசையில்தான் பொறுமையாக வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் என்ன தவறு செய்தது என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியும் இதை எரிக்க முயல்பவர்களுக்கு, ஊக்க போனஸாகவும், இலவச இணைப்பாகவும் – இந்த ராமசாமியையும் கூட நெருப்பினுள் தள்ள அரும்வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். வாசகர்கள் இந்த அருமையான வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
“ராமசாமி மேற்படி ஜோதியில் ஐக்கியமாக, என் மனமார்ந்த வாழ்த்து.
… … மிக்க நன்றி ஜெமோ – இம்மாதிரி அட்டகாசமான முன்னுரையைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன். :-)))
-0-0-0-0-0-0-
“அந்தக் காலத்தில் திராவிடம் இல்லை”
யேசுசபைக்காரர்களும், ப்ரொட்டெஸ்டென்ட்களும் சேர்ந்து சில நூறு வருடங்கள்முன் உருவாக்கிய உள்ளீடற்ற மாயபிம்பமான திராவிடம் தொடர்பான கருத்தாக்கங்களை – நம் செல்லமான தமிழகம் உள்வாங்கி எப்படி வெளிவாந்திகிறது என்பதை விவரிக்கும் அரிய பெரிய ஆராய்ச்சிப் புத்தகம்.
இந்தப் புத்தகத்திற்கு மொத்தம் 20000 பக்கங்கள், 120 பக்க அடிக்குறிப்புகள் உட்பட. இதன் முன்னுரையாளர் உட்பட, யாரும் இதனைப் படிக்கமாட்டார்கள் எனத் தெரியுமாதலால் – நடுவில் ரகசியமாக 18800 பக்கங்களை வெற்றுத்தாளாகவே விட்டிருக்கிறேன். இதனை நீங்கள் ஒரு 2015 டயரியாகக் கூட தாராளமாக உபயோகிக்கலாம்.
இதற்கு 20 பக்க முன்னுரையை, என் பெருமதிப்பிற்குரிய பேராசான் பேராசிரியர் ஆஇரா வேங்கடாசலபதி (பிகாம், எம்ஏ, பிஹெச்டி) அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.
முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:
“முனைவர் வெ. இராமசாமியார் (பிஹெச்டி, ஹெச்எம்டி, பிஹெச்ஈஎல், ஹெச்ஏஎல், இஸ்ரோ, டாடா, டான்ஜெட்கோ), அவர்கள் சொல்லவருவது – அதற்கும் முந்தைய காலத்திலிலேயே திராவிடம் இருந்தது என்பதைத்தான்! ஆரிய சதியால் நடுவில் திராவிடம் ஒழிந்தது என்பதைத்தான்! பிறகு பெரியாரால் அது மீட்டெடுக்கப் பட்டது என்பதைத்தான்! நீங்கள், புத்தகத் தலைப்பினைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாதல்லவா?
“While it is true that, that column did not have dravidam, it certainly is possible that a row definitely had one. Moreover, rows and columns make a matrix, which is a post modern take on our hollywood existence.”
“இல்லை என்றால் அது இல் + லை. அதாவது இல் = no, லை = lie; இந்தக் கட்டுடைப்புப் பார்வையில் பேரா. இராமசாமி சொல்லவருவது என்னவென்றால் – அந்தக் காலத்தில் திராவிடம் இல்லை என்பது ஒரு பொய். தீர விசாரிப்பதே பொய். இல்லை என்பதே இல்லை. அதாவது புத்தகத்தின் தலைப்பு – ‘அந்தக் காலத்தில் திராவிடம்’ என்பது மட்டுமே!
“பக்கத்துக்குப் பக்கம், புதுப்புது விஷயங்களைச் சொல்லி, ஒரு புனைவு போலவே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார், என் நண்பர் இராமசாமியார். 20000 பக்கங்களைப் படித்த களைப்பே தெரியவில்லை – வெறும் என் முன்னுரையை மட்டும் படித்த அயர்வுதான்!
… …நன்றி, நண்பரே. நுட்பமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்னுரை கொடுத்ததற்கு நன்றி. இதற்கு ஸாஹித்ய அகடெமி பரிசு கொடுக்கப் பரிந்துரைக்க முடியுமா, தயவுசெய்து?? ஸாஹித்ய அகடெமி ஏன் எதற்கு எப்படி பரிசு வழங்கும் என்பதை வெகு துல்லியமாகப் புரிந்து கொண்டு உங்கள் மேலான பொத்தாம்பொதுவாக கருத்துகளை எப்படித் தான் உதிர்த்து இலவசமாக வழங்கினீர்களோ என்று எனக்கு ஒரே மயிர்க்கூச்சல்தான், எழவு நிற்கவே மாட்டேன் என்கிறது…
மறுபடியும் நன்றி. எப்படி என் மயிர்க்கூச்சலை மட்டுப் படுத்துவது? உதவமுடியுமா?? அந்தக் காலத்தில் மயிர்க்கூச்சலில்லையோ?
-0-0-0-0-0-0-0-
முதலாளியாடா நீ? பன்னாட்டு நிறுவனக்காரனா?? … ட்டூமீல்ல்ல்ல்ல்!” ….
c/o Bill Gates
(ஆ! சுட்டுட்டாங்க, சுட்டுட்டாங்க…)
இதன் உபதலைப்பு: பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகள் ஒழிக! லோக்கல் முதலாளிகளும் கூடவே ஒழிக!! ஆனால் அவர்கள் ஓசில கொடுக்கும் சம்பளம் வாழ்க!!!
இது ஒரு குண்டூசி நவீனத்துவ (பின் நவீனத்துவம் எல்லாம் பழசு) கட்டுரைத் தொகுப்பு. நான் என் முதலாளியின் ஆஃபீஸில் என் வழக்கம்போல வேலைவெட்டியற்று உட்கார்ந்திருக்கும் போது, என் முதலாளி கொடுத்த லேப்டாப்பில், முதலாளி கொடுத்த இணைய இணைப்பைப் பயன்படுத்தி எழுதிய என்னுடைய முதலாளிய எதிர்ப்புக் கட்டுரைகளில் சிலவற்றைத் தேர்வு செய்து, கூடவே யாரும் பார்க்காதபோது ‘வினவு’ தளத்திலுள்ள சில முதலாளிய எதிர்ப்புக் காட்டுரைகளையும் ரீமிக்ஸ் செய்து கதம்பமாகப் பறிமாறியிருக்கிறேன்.
இதற்கு என் இளம் நண்பர் வா மணிகண்டன் அவர்கள் ஒரு மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள்; அதிலிருந்து, எனக்குப் பிடித்த சில வரிகள்:
“மதிப்புரை கொடுக்கலாம்; ஆனால் அடிப்பார்கள். கொடுக்காமலும் இருக்கலாம். அப்படியும் ரவுன்ட் கட்டிக்கொண்டு உதைப்பார்கள். நமக்கேன் வம்பு.”
“இராமசாமியை ஒரு பைத்தியம் என்று சொல்லலாம். பிராண்டி விடுவார். அவர் பைத்தியம் இல்லையென்றால் என்னை நானே பிராண்டிக் கொண்டு விடுவேன். எனக்கேன் இந்த விவகாரம்.”
“இந்தப் புத்தகத்தின் விற்பனையில், 50% என் அரக் கட்டளைக்குச் சேரும் என இராமசாமி அறிவித்திருக்கிறார். இதனால் சில பள்ளிகளுக்கு அரம் வாங்கிக்கொடுக்கலாம் எனத் திட்டம். எனக்கு அடிப்படை அரம் சார்ந்து அறுப்பது நிறைவு தரும் விஷயம். இராமசாமி ஒரு மன நிலை பிறழ்ந்த விளிம்பு நிலைக்காரர் தான்! நான் ஏன் அதைச் சொல்லவேண்டும்? எனக்கெதுக்கு அந்த பொல்லாப்பு.”
“பன்னாட்டு நிறுவன முதலாளிகள்தான் ஓசோன் ஒட்டையை அடைக்கவேண்டும். நம் ஓட்டை நாமே பார்த்துக்கொள்ளலாம், அடுத்த தேர்தலிலாவது! அதுவரை ஓட்டையை மூடிக்கொள்ளலாம், இல்லையென்றால் எரியும் ஈட்டியைச் சொருகிவிடுவார்கள், அநியாய லாபம் பார்க்கும் முதலாளிகள்!”
“அவர் புத்தகத்தை வாங்குபவர்களுக்கு, கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்கு, ஒரு புத்தகத்துக்கு 5000 ரூபாய் கொடுக்கிறார் எனத் தகவல். ஆனால் முதலாளிப்பெருச்சாளிகள் வீம்புக்குக் கொடுக்கும் பணத்தை வாங்குமளவுக்கு எனக்கு சுரணை மரத்துப் போகவில்லை. நான் செய்யும் வேலைக்கு என் முதலாளி எனக்குக் கொடுக்கும் சம்பளமே அதிகம்!
… … ஒரு மணியான முன்னுரைக்கு என் பலகோடி நன்றி. :-)
-0-0-0-0-0-0-0-0-
“ஆறிய திராவிட இயக்க உளறாறு”
இது வரலாற்றுக் கட்டுரைக் களஞ்சியப் புதினம்; இதனை நான் சுஜாதாத்தனமான துள்ளு நடையில் எழுதியிருக்கிறேன். அபரிமிதமாகத் துள்ளிக்கொண்டே எழுதியதால் எவ்வளவு முறை என் வீட்டுக் கூரை முகட்டில், மின் விசிறியில் முட்டிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? ஒரே ரத்தக் களறி. :-(
இதற்கு மிகவும் பிரயத்தனப் பட்டிருக்கிறேன். நம்பினால் நம்புங்கள் – எல்லாம் விக்கிபீடியாவிலிருந்து ஒற்றி எடுத்துத் துள்ளிக்கொண்டே துல்லியமாக, மெலிதான புன்முறுவலிட்டுப் பயணித்துக்கொண்டே எழுதியிருக்கிறேன்.
இதற்கு, இம்மாதிரிக் கட்டுரைகளை அஸால்டாக எழுதிக் குவிக்கும், போற்றுதற்குரிய என் இளம் நண்பர் ‘யுவகிருஷ்ணா’ அவர்களை ஒரு மதிப்புரை எழுதச் சொல்லலாம் என இருந்தேன்.
ஆனால், ஏன் படுபிஸியாக இருக்கும் அவருக்குத் தொந்திரவு கொடுக்கவேண்டும்(ஒரு ஸெராக்ஸ் கடை நடத்துவதில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், பாவம்!), என – அவரை மனதில் நினைத்துக்கொண்டு, குருவாக வரித்துக்கொண்டு – நானே அதனை இணையத்திலிருந்து, அதாவது விக்கிபீடியாவிலிருந்து கமுக்கமாகக் காப்பி செய்துவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். மன்னிக்கவும். விக்கிபீடியா சென்று முன்னுரை என்றால் என்ன எனப் பார்த்தேன்.
“A foreword is a (usually short) piece of writing sometimes placed at the beginning of a book or other piece of literature. Typically written by someone other than the primary author of the work, it often tells of some interaction between the writer of the foreword and the book’s primary author or the story the book tells. Later editions of a book sometimes have a new foreword prepended (appearing before an older foreword if there was one), which might explain in what respects that edition differs from previous ones.”
ஆனால், இதனை தமிழ்ப் படுத்த அவர் கூக்ல் ட்ரேன்ஸ்லேட் போவாரா அல்லது அகராதியுடன் உட்காருவாரா என்று விசாரித்து – விஷயம் தெரியும் வரை, உங்களை வணங்கி விடை பெறுவது, உங்கள் நண்பன்… …. ….
-0-0-0-0-0-0-0-0-
“பொந்துத்துவா – ஒரு அறிமுகம்”
எந்தப் பொந்தில் எந்த பாம்பு இருக்குமோ எனும் நம் அதீத பயங்களைக் குறித்த ஒரு நெடிய வரலாற்றாய்வுக் கட்டுரை என்று இதனைச் சொன்னால் அது மிகையாகும்.
இதற்காக நான் கணிசமான நேரத்தைச் செலவு செய்து பல ஆய்வறிக்கைகளையெல்லாம் படிக்கவில்லை. நூலகங்களுக்குச் சென்று வண்ணவண்ணமாக நூல் ஒன்றும் கடன் வாங்கவில்லை. ஏனெனில் எனக்கு எப்போதுமே நூல் விடுதல் என்பது பிடிக்காது. பட்டப் படிப்பும் எனக்கு ஒரு எழவும் இல்லை. ஆக யாருடனும் ஒரு டீலும் போடமுடியாத நிலைமை. :-(
இம்மாதிரி அறிமுகப் புத்தகங்களை எழுதும் மருதன் அவர்களை விசாரிக்கலாமா என்று அவர் தளத்திற்குப் போனேன்.
அவர் வெட்கப் பட்டுக் கொண்டு பார்க்கும் ஒரு புகைப்படம் அங்கு இருக்கிறது. குழந்தைத்தன்மை வாய்ந்த விகசிப்பு அதில். இந்தப் பால் மணம் மாறாத குழந்தை முகத்தை வைத்துக்கொண்டு, அகலக் கண்களால் வெட்கப் பார்வை பார்த்துக்கொண்டு ஏன்தான் ஹிட்லர் பட்லர் எனப் புத்தகத்தை எழுதுகிறாரோ?
அடிப்படையில் சங்கோஜ சுபாவம் அதிகம் உள்ளவரோ? மிகவும் மென்மையானவரோ?
இவரைக் கிண்டல் செய்ய எனக்கு மனம் ஒப்பவில்லை. ஆகவே, இவருடைய இரு புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்றாலும் மன்னித்தேன். ஆகவே அவர் முன்னுரையில்லாமலேயே புத்தகத்தை வெளியிடுகிறேன். :-((
-0-0-0-0-0-0-
என் புத்தகங்கள் அனைத்தும் 2015 சென்னை புத்தகச் சந்தையில் உழக்கு ஸ்டாலில் கிடைக்கும். ஸ்டால் பற்றிய விவரங்களை பத்ரி சேஷாத்ரி அவர்கள் தளத்தில் பார்த்துக்கொள்ளவும்.
வழக்கம் போல உங்கள் கோபித்த ஆதரவை, அது முடியாவிட்டால் – ஆதமைதாவை நல்கவும்.
வூட்ல புரோட்டாவுக்காவது ஆவும், வோக்கேங்க்ளா?
நன்றி. வணக்கம்.
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
January 3, 2015 at 02:34
// வூட்ல புரோட்டாவுக்காவது ஆவும்
நீங்க வீட்டுலையே பரோட்டா செய்யற வழக்கம் உண்டா? நாங்க கடைல வாங்குறதுதான் வழக்கம். மாவு பந்தை அந்தரத்துல சுத்தி தட்டுறது கஷ்டமான வித்தையா தெரியுது.
புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதி விற்க வாழ்த்துக்கள். காலம் இருக்குற கெடப்புல, மொத்தமா சேர்த்து ஆயிரம் பிரதி வித்தாலும் சந்தோஷம்தான்
:-)
January 3, 2015 at 09:35
அட போங்க சார்,அலுவலக அவசரத்தில் பல புத்தக வெளியீடு என்பதை “பலான” புத்தக வெளியீடு என்று படித்துவிட்டு,கீழே வரை உருட்டி (SCROLL ) பார்த்து ஓன்றும் இல்லாமல் அசடு வழிந்ததுதான் மிச்சம்:-)
January 4, 2015 at 19:28
நீ எப்பவுமே இப்படித்தானா?இல்லாட்டி இப்படித்தான் எப்பவுமேவா?
January 17, 2020 at 11:20
[…] இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு! 02/01/2015 […]