நற்செய்தி: 2015 சென்னை புத்தகச் சந்தையில் நான் எழுதிய… (1/2)
December 31, 2014
… பல புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன – இன்னும் எவ்வளவு என உறுதியாக முடிவாகவில்லை. இப்போதைக்கு ஏழு புத்தகங்கள் மட்டுமே நிச்சயம்.
அனைத்தையும் இதுவரை என் நண்பர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகமே வெளியிடுகிறது – சென்ற வருடம் என் மொழிபெயர்ப்பு ஒன்றை இவர்கள் வெளியிட்டு அது சக்கைப்போடு போட்டு, தமிழ்ப் பதிப்பக உலகிலேயே முதல் முறையாக, முதல் ஆண்டிலேயே இரண்டு பிரதிகள் விற்றது நினைவில் இருக்கலாம்… அத்தனையும் சீமார் அவர்கலுடைய ஆவேஷப் படத்தைப் போட்டதற்காகவே விட்றது என்றாள் பார்த்துக்கொல்லுங்கல். எள்ளாப் புகலும் நாம் டமிளர் இயக்கத்துக்கே!
இந்தப் புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே! ஒத்திசைவின் மூன்றாண்டுகால மகாமகோ வரலாற்றில் ஏகோபித்த ஆதரவு பெற்ற பதிவுகளில் இதுவும் ஒன்று. ;-) அப்பதிவில், பின்னட்டைக் குறிப்புகளும் படிக்கும்படியாக விரிக்கப் பட்டிருக்கின்றன. பாவம், நீங்கள். ஆகவே…
…ஆகவே, உழக்குநர்களுக்கு சுத்தமாக லாப நோக்கமேயில்லை என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவித்து, என் அளவு கடந்த நன்றியை சூட்டோடுசூடாக அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். உழக்கு பதிப்பகம் ஒரு கெட்ட மாடு என்பதில் எனக்கு ஐயமேயில்லை. (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அன்றோ?)
… ஆனால் – ஏதோ என் ராயல்டீயை சூடாக ஆற்றிக் கொடுத்தால் சரி. அப்படியே கொடுத்தாலும் முனகிக்கொண்டே குமைவது, பிலாக்கணம் வைப்பது, என்னை ஏமாற்றிவிட்டான்கள் என ஊளையிடுவது ஒரு தமிழ் எழுத்தாளனின் முதற்கடமை என்பதையும் புத்தகப்பதிப்பக அதிமுதலாளிகள் உணர்ந்தால் மேலதிகமாகச் சரி.
இந்த முதலாளிகளையே ஒழிக்கவேண்டும். லாப நோக்காம் லாப நோக்கு! எல்லோரும் என்னைப் போலவே பணம் பணம் என ஏன் அற்பத்தனமாக அலைகிறார்கள்? இந்த விழுமியச் சீர்கேட்டைத் திருத்துவார் யாரும் இல்லையா? ஏன் இந்த !நிசப்தம்? அயோக்கியப் பதர்கள். :-(
-0-0-0-0-0-0-0-0-0-
இப்போது ஒரு கோரிக்கை: என் புத்தகங்களுக்கும் கொஞ்சம் விளம்பரம் தேவை. ஆகவே யாராவது தயவுசெய்து என் புத்தகங்களில் ஒன்றையாவது எரிப்பதற்கு உதவி செய்ய முடியுமானால், உங்களுக்குக் கோடி புண்ணியம்.
அனைவருக்கும், ஏன், எவருக்குமே அசாத்தியக் கோபம் வரும்படி என்னால் எழுதமுடியும். சொல்லப் போனால், சில சமயங்களில் எனக்கே என் எழுத்தைப் பார்த்துக் கோபம் வந்து, என் புத்தகங்களையே எரித்திருக்கிறேன். என் அறச் சீற்றம் அப்படிப்பட்டது.
ஆனால் ஒன்று – நம் மரமண்டைச் சராசரித் திராவிடத் தமிழன் ஒரு புத்தகத்தை எரிப்பதற்கு, அதனை அவன் படித்திருக்கவேண்டும் எனும் அவசியம் கூடச் சுத்தமாக இல்லை என்று புரிந்தாலும்…
… எனக்கு, மற்றவர்கள் புத்தகத்தை மட்டும் ஆவேஷக்காரர்கள் எரிப்பது, கொஞ்சம் பொறாமைத் தீயை எரிக்கவைக்கிறது.
திராவிடப்போராளி வாசகன் பங்குக்கு நீங்கள் என் புத்தகத்தை எரிக்க பெருந்தன்மையுடன் முன்வந்தால் – என் பங்குக்கு, என் புத்தக விற்பனையை நான் ஊக்குவிக்கத் தயார்! வேறு வழியே இல்லை.
- எப்படா அடுத்த பப்பரப்பா என அல்லாடி ஞமலிகள்போல அலையும் அற்ப டிவீகாரர்களை எரிக்கும் இடத்திற்கு அனுப்ப நான் க்யாரன்டீ. அவர்களுக்கு பொரையும் லோட்டா டீயும் கொடுத்தால்போதும் – வாலறிவன்கள் ஒடி வந்து விட்டு உச்சஸ்தாயியில் மைக் வைக்காமலேயே செம்மொளி டமிலிள் கத்த ஆரம்பித்து விடுவார்கள். கவலையே இல்லை.
- சென்னையிலுள்ள பெரியார் திடல் நல்ல ‘ஆகி வந்த’ இடம். பல – செருப்பால் அடிக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட திராவிட சுபகாரியங்கள், ராகுகாலம் எமகண்டம் பார்த்து இங்கே அரங்கேறியிருக்கின்றன – இதனை என் புத்தகங்களை எரிப்பதற்காக வாடகைக்கு எடுக்கிறேன்.
- தோட்டா தரணி அவர்களும் ஒரு நல்ல சினிமா ஸெட் போட்டுத் தருகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். கலைஞருக்காகவென, தமிழக வரிப்பணத்தில் அவர் போட்ட சட்டசபை ஸெட் நன்றாகவே பளப்பளா என இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. பார்க்கலாம்.
- பெரிய ஜ்வாலை விட்டு தகதகவென்று எரிவதற்காக, பெட்ரோல் கலந்த காகிதத்தில் ஸவுதி அரேபியாவில், பிரத்தியேகமாக இப்புத்தகத்தை அச்சிடுவதாக பத்ரி சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.
- சிவகாசி சரவெடி ராக்கெட்காரர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் – என் புத்தகங்களை வானுக்கு அனுப்பி பலவண்ண மயமாக அவற்றை 500 மீட்டர் உயரத்தில் எரிக்க ஆவன செய்ய முடியுமா என்று. இது சாத்தியமானால், என் புத்தகம் தான் முதலில் இப்படி எரிக்கப்பட்டுப் புகழ் பெரும். ஹையா!
- ஏதோ நல்ல படியாக விற்பனை பற்றியெரிந்தால் சரி. என்ன எரிந்தாலும் ஆயிரம் பிரதிகள்தான் அடுத்த நூற்றாண்டுவரை விற்கும் எனத் தெரியும் – இருந்தாலும் ஓசி விளம்பரத்தில் கிடைக்கும் திராவிட இன்பம்ஸ் என ஒன்று இருக்கிறதே!
-0-0-0-0-0-0-0-0-
சரி; கீழே என் புத்தகங்கள் குறித்த சுருக்கமான அறிமுகங்கள் இருக்கின்றன. அட்டைகள் இன்னும் வடிவமைப்பில் இருக்கின்றன. அவை தயாரானதும் அவற்றையும் பகீர்கிறேன்.
-0-0-0-0-0-0-
“உப பெருங்காயணம்”
‘உப்புமா பாண்டவம்’ எனும் என்னுடைய உலகப்புகழ்பெற்ற நவீனத்தை எழுதும்போது பலமுறை சமயலறை சென்று பரீட்சார்த்தமாக உப்புமா செய்ய முயற்சித்திருக்கிறேன்; முயற்சி இது வரை வினையாக மட்டுமே ஆகியிருப்பது என் பழவினைப்பயன். கடைசி முறை அப்படிச் செய்தபோது வாணலியே வெடித்துச் சுக்கு நூறாகியது. இத்தனைக்கும் நான் இஞ்சியை ஒரு சுக்குக்கும் உபயோகிக்கவில்லை. கௌரவர்களும் அதிலிருந்து வெளிப்படவில்லை. கௌரவ வேடத்தில் நடித்தால் பைசா தேறுமா சொல்லுங்கள்?
… என் சமையற்கொலை அனுபவங்களைத் தொகுத்து வெளியிடப்படப் போகும், படிப்பதற்கு அரிய புத்தகமான இதற்கு — முன்பேருரையை, ஒரு கடுகுதாளிப்பாக, என் பெருமதிப்பிற்குரிய தமிழ் எழுத்தாளரும் அணுசக்தி வல்லுநருமான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வழங்கியிருக்கிறார். அவருக்கு என் இதயம் இனித்த கண்கள் பனித்த நன்றி. அவருடைய முன்பேருரையில் எனக்குப் பிடித்த வாக்கியங்கள், கீழே:
“ராமசாமி என் ஆழ்ந்த வாசகர். அவருடைய சமையற்கலை புத்தகத்தைப் படிக்கும்போது ஏனோ ‘கடுகைச் துளைத்தேழ் கடலைச் சுருக்கி குறுகத் தரித்த குண்டு’ – எனக்கு நினைவுக்கு வந்தது; எப்படி கடலைச் சுருக்க முடியும். அதனை உடைத்துப் பொடியாக்கி கடலை உருண்டைதானே செய்யமுடியும் என நினைவில் அண்டியது. கூடவே வாணலியில் வறுக்கப்பட்ட ஹிரோஷிமாவும். ஆனால் கடலைமாவும் பஜ்ஜி செய்ய உதவும் அல்லவா? மார்டன் புத்தகம் இது – அனைவரும் படிக்கவேண்டும்.
”மறுபடியும் ஏனோ என் மனதில் தன்னைத் தானே எழுதிக்கொண்ட வரி – ‘கடுகைச் துளைத்தேழ் கடலைச் சுருக்கி குறுகத் தரித்த குண்டு’ . நல்லவேளை, ஆனால் திருவள்ளுவர் ஒல்லி என எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்.
“நொக்கிற் புகழொடு நொக்குக” என்ற வழமைக்கு ஏற்ப இது நொக்கர் விருது வாங்கும். இது நானே ஏற்கெனவே வாங்கியதுதானே (வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது!) என மௌனமாக உரக்கச் சிரித்துக் கொள்கிறேன்.
“வாழைக்காய் வாழ்வியலில் விருது வாசமும் படைப்பாளிக்குச் சுவாசம்தானே! புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளனின் உள்ளத்தில் பெருங்காயம் இருந்தாலும், வெளியே படைப்பியல் படையலில் பெருங்காயம் சேர்த்தால் அது சுவையைக் கூட்டும்தானே. ரசவாதம் என்றாலே இதுதானோ என மௌனமாகப் பேசிக்கொண்டேன்.
-0-0-0-0-0-0-0-
“பழைய இம்மைக்ரன்ட்”
என்னுடைய எதிர்கால அமெரிக்க அனுபவங்களை இக்காலத்திலேயே தொகுத்து, என்னுடைய உலகப் பெருமை பெறப்போகும் “ol’ immigrant” நாவலை நான் எழுதுவதற்கு முன்பாகவே, எப்படியோ அவர் மூக்கில் வேர்த்து இதனை மோப்பம் பிடித்து, அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு, பேராசிரியர் அருண் நரசிம்மர் அவர்கள், எனக்குத் தெரியாமல் ஒரு நாவலை எழுதி, ‘அமெரிக்க தேசி’ புத்தகத்தை வெளியிடப் போவதாகச் சொல்லி, கழுத்தை அறுத்துவிட்டார். :-(
எவ்வளவு நாட்களாகப் பழகியிருக்கிறோம், இதனைப் பற்றி ஒரு மூச்சுகூட விடவில்லை அவர்! சரி. எது எப்படியோ, அவருடைய சுயானுபவத்தை வைத்து நன்றாகவே எழுதியிருப்பாரென நினைக்கிறேன். எனக்குப் பொறாமையில்லை. அவர் புத்தகம் வெளிவரட்டும், விமர்சனம் செய்து கிழித்துவிடுகிறேன் கிழித்து. ஏற்கனவே எழுதி தயாராக வைத்திருக்கிறேன். புத்தகத்தைப் படிப்பது கிடக்கட்டும்.
..ஆகவே – யாரும், தயவுசெய்து அவர் புத்தகத்தை எரித்து, அவருக்கு அனாவசிய விளம்பரம் கொடுக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். சென்னைக்குப் போகமுடிந்தால் அவருடைய book launchக்குப் போகலாமென எண்ணம்; ஏன், கூடவே ஒரு book lunchம் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்? நான் எனக்காகக் கேட்கவில்லை – ஓசி சாப்பாட்டுக்கு நாயாக அலையும் சக தமிழர்கள் சார்பாகத்தான் கேட்கிறேன். முதற்கண் முதலாளிகளை ஒழிக்கவேண்டும்.
ஆனால் வாசகர்களே! கவலை வேண்டாம். நம்மிடம்தான் ஆழ்துளைக்கிணறுகளும் மோட்டர்பம்ப்களும் இருக்கின்றனவே! நம்மிடம் தான் ஏற்றம்.
நானும் விட்டேனா பார் என உங்கள் அனுபவங்களை இரண்டே நாட்களில் தொகுத்து, பேய் மாதிரி எழுதி, ‘புதிய எக்ஸைல்’ பெயர் ஏற்கனவே சாரு நிவேதிதா அவர்களால் எடுத்துக்கொல்லப்பட்டு விட்டதால், அதன் ஒருமாதிரி எதிர்மாதிரியான ‘பழைய இம்மைக்ரன்ட்’ எனப் பெயர் வைத்திருக்கிறேன். இதில், வாசகர்களுக்கு நிறைவான மனவெழுச்சியையும் கொடுக்கும் வினோதமான செக்ஸ் அனுபவங்கள் உள்ளன.
எல்லாம் பின் நவீனத்துவம்தான். இந்த நாவலில், முக்கிய பாத்திரத்தின் பெயர் பட்டர்ஃப்ளை காப்பர்பாட்டம் – ஒரே சமயத்தில் திருநங்கையாகவும், திருமதிநம்பியாகவும் இருக்கிறான்ள்; மேலும் நான், வெறும் பாலியல் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசாமல், மேலதிகமாகத் தயிரியல் விவகாரங்களையும் அலசியிருக்கிறேன். ஏதாவது திரண்டுவந்தால் சரி.
இந்த மகத்தான நவீனத்தைப் படித்தவுடன் – ஏதாவது சோட்டா விமர்சகன் சொல்வான் -”இதனைப் படிக்கும்போது, ஏதோ பலபழைய போர்னோ படங்களைப் பார்த்த நினைவு வருகிறது – இது குப்பை.” அயோக்கியன். அவன் சொல்லப்போகும் இந்த இரண்டு விஷயங்களும் உண்மை.
இதற்கு முன்னுரையை, என் பெருமதிப்பிற்குரிய லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் வழங்கியிருக்கிறார். அவர் படுபிஸியாக இருந்தாலும், ஃப்ரெஞ்ச் குடியுரிமை கிடைத்து அங்கேயே ஸெட்டில் ஆகி, ரெமிமார்ட்டின் குடித்துக்கொண்டிருந்தாலும் – எனக்கு அருள்பாலித்த அவருக்கு என் நன்றி.
இந்த முன்னுறையிலிருந்து (ஆ! இதனைக் கான்டம், (முன்னுறை) எனப் புரிந்து கொண்டுவிட்டார் என நினைக்கிறேன்) சில பகுதிகள்:
“ஆ! என்ன அற்புதமான இசை. பாருங்கள் இந்த யூட்யூப் வீடியோவை! கடந்த 5000 வருடங்களாக நான் சிலாகிக்கும் உன்னதமான அலாஸ்கா கலைஞன் இவன். ஆனாலும், இவன் இதுவரை அலாஸ்காவின் முன்னாள் முதலமைச்சர் ஆகவில்லை. தமிழகத்தை விட்டால், எவன் மதிக்கிறான் கலைஞனை?
“எனக்குப் பிடித்த முன்னுறை ட்யூரெக்ஸ். ஆனால் அதை ஒரு முன்னிணைப்பாக, பழைய இம்மைக்ரன்ட் நவீனத்துடன் கொடுக்க முடியுமா? இருந்தாலும் கொடுக்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன் – இதனை நான் உபயோகிக்கவில்லை.
“விளிம்பு நிலை பற்றிய புத்தகம் என்பதால், ஒரு அற்புதமான ஐடியாவாக, புத்தகத்தின் விளிம்புகளில் மட்டுமே இந்த நாவல் அச்சிடப் பட்டிருப்பது ஒரு புதுமைதான் – இதனை நான் சொல்லவில்லை, என் நண்பனான ஸால்வடோர் டாலி, ஸலாத் ஸாப்பிட்டுக்கொண்டே ஸொல்லியிருக்கிறான்.
“என் அருமைத் தோழன் தருண் தேஜ்பால் உயிருக்கே, எய்ட்ஸ் ரூபத்தில் ஆபத்து வந்தபோது அவனைக் காப்பாற்றியது ட்யூரெக்ஸ்தான். அதனால் தான் எனக்கு முன்னுறை எழுதுவது பிடிக்கும்.
“இது நிச்சயம் நொக்கர் விருது வாங்கும்! ஏனெனில், ராமசாமி என் சிஷ்யன். என் காலடியில் உட்கார்ந்து தமிழில் எழுதக் கற்றுக் கொண்டவன். அண்ணாந்து பார்த்து அரண்டு போனவன். நொக்கருக்கு வேறு வழியில்லை. இவனுக்கு மேன்புக்கர் பரிசு, எனக்குப் பிறகு கிடைத்தேயாகவேண்டும்!
நன்றி, ஹாய் சாரு.
ஹ்ம்ம்ம்… இந்தப் புத்தகத்துக்குச் சலுகையாக ஒரு பின்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை பத்ரி அவர்களிடம் பரிந்துரைத்திருந்தேன்.
ஆனால் அவர், இந்தத் திட்டத்தின் பெயர் ஒரு மாதிரியாக உடலிலிருந்து வாயுவை வெளியேற்றுவதாக, என் புத்தகத்தின் விமர்சனமாகவே கீழ்த்தரமாகக் கருதிக்கொள்ளப்படும் என்று சொல்லி, என் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
இது நியாயமா? :-(
-0-0-0-0-0-0-0-0-
மற்ற புத்தகங்களின் விவரம் – நாளை, அடுத்த அடுக்காத பதிவில்…
April 15, 2015 at 19:54
நீங்கள் ஏதாவது புத்தகம் எழுதியுள்ளீர்களா? இது என் உண்மையான ஐயப்பாடு .
April 16, 2015 at 06:26
அம்மணி, அம்பிகா!
நான் புத்தகம் கட்டியுள்ளேன். அவ்வளவுதான். புது+அகம்.
ஆனால் புத்தகங்காரம் நிறையவே உண்டு என்பதை அறிவீர்.
நன்றி.
January 17, 2020 at 11:20
[…] […]