நிழல்களைப் போற்றுதும்…

June 16, 2014

வெறுப்பும் சலிப்பும் தொடர்வதைகளாகத் தொடரும் காலங்களில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன, எனக்கும் என்னுள் பொதிந்திருக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்புகள் யாவை, இப்போது நான் என்னதான் செய்யவேண்டும் என, வேலைவெட்டியற்றுக் கேள்விகள் பொசுக்கும் நேரங்களில், ஆன்மாவை உருக்கும் மகாமகோ இசைகூட உதவிக்கு வரமுடியாத தருணங்களில், தோட்டவேலை சார்ந்த வியர்வை சொட்டும் உன்மத்த உடலுழைப்பினாலோ,  நெடுநீள ஓட்டத்தினூடேயோ, கடினமான கணித/அறிவியல் கேள்விகளுக்கு உட்கார்ந்த வாக்கில் ஒரு நோட்டுப்புத்தகம் + பென்ஸிலின் உதவியோடு மட்டுமே கூட பதில் பெற விழையவோ முடியாத அச்சந்தர்ப்பங்களில் — மறுபடியும், மறுபடியும்  நான் நிபந்தனையற்றுச் சரணடைவது என்பது, ஒரு முப்பத்திச் சொச்ச புத்தகங்களிடம் மட்டுமேதான். கடந்த 35 வருடங்களாக இப்படித்தான்.

“தாங்கள் எவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்கள் கர்வப் பட்டுக்கொள்ளட்டும்; ஆனால் நான், படித்த புத்தகங்களைப் பற்றிப் பிலுக்கிக் கொள்ளவே விரும்புவேன்.”

— ஹோற்ஹெ லூயிஸ் போற்ஹெஸ்

-0-0-0-0-0-0-0-0-

… இந்தப் புத்தகப் பொக்கிஷங்கள்  பலதரப் பட்டவை – ஒரு சிமிழில், ஒரே சிந்தாந்தத்தில் அடக்கப்பட முடியாதவை. விதம் விதமானவை. இவற்றில் சில மட்டுமே புதினங்கள்; பல அப்படியல்ல. ஆனால், இவற்றில் எதனையும் படிக்க ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக நான் அமைதியாவதை உணர்ந்திருக்கிறேன்.  இப்புத்தகங்களில் ஆழ்ந்த ஒன்றிரண்டு நிமிடங்களில் உலகமே நிர்மலமாகி விடும். வாழ்க்கையைப் பற்றிய, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட ஆரம்பிக்கும். நாளையும் மற்றொரு மகத்தான நாளே எனத் தோன்றும். அதே பிரத்யட்ச உண்மையும் ஆகிவிடும்.

சில சமயங்களில் அப்படியல்ல; ஒரு சில புத்தகங்களைப் படிக்கும்போது, ஒரு இனம்புரியாத போதாமையும் விகசிக்கும். அழுத்தமும் அதிகரிக்கும்.

… ஏன் இவைகள் இப்படியில்லை? ஏன் அவைகள் அப்படித்தான் இருக்கின்றன? – போன்ற கேள்விகள் அழுத்தும். சிக்கலில்லாத வாழ்க்கையைத் தேடவும் முடியுமா எனத் தோன்றும். அந்தந்தக் காலகட்டங்களில்,  பண்பாட்டை-இறந்தகாலங்களைப் போற்றும் பாரம்பரிய நோக்குகளுக்கும் — எதிர்காலத்தை, நம்பிக்கையை முன்னெடுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையேயுள்ள முரணியக்கங்களை அழகாக, இப்படியும் ஒருவன் வெளிக்கொணர முடியுமோ எனத் தோன்றும்… அதே முரணியக்கக் கூறுகளை தற்காலச் சமன்பாடுகளில் நிரவினால், மனிதனின் மேன்மைப்படுதல் குறித்த சரியான புரிதல்கள் தென்படலாமோ எனத் தோன்றும்… எழுத்தின் செய்நேர்த்தி ஆச்சரியப் படவைப்பதற்கு அப்பாற்பட்டு – அவை எழுதப்பட்ட காலங்களைக் கடந்து – எக்காலத்திலும் இருக்கக் கூடிய அடிப்படைக் கேள்விகளை முன்வைக்கும் ஒன்றாகவும் இருப்பவை அப்புத்தகங்கள் என்றால் அது நிச்சயம் மிகையாகாது…

இந்த சந்தோஷமளிக்கும்,  என்னுடைய  ஆன்மாவுக்கு அற்புத சுகமளிக்கும் புத்தக ஜாபிதாவில் ஒன்று – ஜுனிசிரொ தனிஸாகி அவர்களின் ‘ நிழல்களைப் போற்றுதும்’ (‘In Praise of Shadows’ – by Junichiro Tanizaki).

-0-0-0-0-0-0-0-

நான் நிழல்களின் உபாசகன். சாம்பல் நிறத்தைப் பூஜிப்பவன். ஒன்றுக்கொன்று எதிரான இருமை நிலைகளை மட்டுமே (எடுத்துக் காட்டாக நல்லவன் X  கெட்டவன்) ஒரு கருவியாக உபயோகித்து எந்தவொரு விஷயத்தைப் புரிந்து கொள்ளும் போக்கை – உதாசீனப் படுத்துபவன். கறுப்பு-வெள்ளை சார்ந்த பார்வைகளை மலட்டுப் பார்வைகள் என ஒதுக்குபவன். பளிச்சிடும் வெண்மை நிறத்தையும் பளபளப்புப் பப்பரப்பாக்களையும் நம்பாதவன். கருமை என்றாலே சோகம், வருத்தம், அசிங்கம் என நம்பி அல்லாடாதவன்.

ஆக, நாம் சாம்பலின் பல்வேறு வகை நிழல்களை ஆராதிக்க ஆரம்பித்தால் மட்டுமே, எந்த ஒரு நிகழ்வையும் தர்க்கரீதியில் பார்த்து வகைப்படுத்தி அதன் பல நிழல்களையும் அவதானித்துக் கருதுகோட்களை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, பல மகாமகோசிக்கலுள்ள பிரச்சினைகளை புரிந்துகொள்ள ஆரம்பிக்க  முடியும் என நினைப்பவன் – இவற்றைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன் என்பதும் ஞாபகம்…

ஜூனிசிரோ தனிஸாகி அவர்கள் ஜப்பானிய மரபுசார் அழகியல் கூறுகள் என அவர் கருதுவதைப் பற்றி – நிறம், வீடுகளின் கட்டமைப்பு,  கழிப்பறைகள், குளிர் காலங்களில் வீடுகளுக்குள் வைக்கப்படும் நெருப்புக் குண்டங்கள், உணவு போன்ற விஷயங்களினூடே சொல்லிக் கொண்டே செல்கிறார். பல சமயம் ‘அந்தக் காலத்திலே’ போன்ற பழமையை மட்டும் மேலெடுக்கும் போக்கு வெளிப்படுகின்றது என்றாலும், தற்கால நடைமுறை நியாயங்களையும் அழகியல் மாற்றங்களையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ள முயல்கிறார். ஆனால், நிழல்களின் அழகான ஆதிக்கம்தான் புத்தகம் முழுவதும்…

இந்த அழகியல் குறித்த சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டு — ஜப்பானிய பண்பாடானது, காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களினால் – முரணியக்கங்களினால் உந்தப்படும் நேரத்தில் – மேற்கத்திய சிந்தனைச் சரடுகளாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையைக் குறித்த அவர் சிந்தனைகள், கவலைகளுடன் வெளிப்படுகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும் போது பிலாக்கணம் வைப்பதைப் போலத் தோன்றினாலும் –  பண்பாட்டுத் தொடர்ச்சிகளின் நீட்சியில் தன்னை வைத்துக்கொண்டு தற்காலத்துடன் தன் சமரசப் போக்கை அவர் முன்வைப்பது – அதுவும் எளிமையான வாக்கியங்களில் இப்படிச் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது.

பாரம்பரியப் பெருமை மிக்க நம் நாட்டிலும் நாம் எதிர்கொள்ளவேண்டிய சில பிரச்சினைகள் இவ்வாறாகவே இருக்கின்றன. ஆக, ஓரளவு இந்தியப் பண்பாட்டுக் கீற்றுகளைத் தெரிந்துகொண்டிருக்கும் எந்த இந்தியனுக்கும், தொடர்ந்து அது மேற்கத்திய எதிர்மறைக் கீற்றுகளுடன் சமரசம் செய்து கொண்டிருப்பதை (சிறிது) இனம்புரியாத வருத்தத்துடனும் இயலாமையுடனும் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கும்  – இப்புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

இத்தனைக்கும் – இந்தப் புத்தகம் ஒரு நீளமான கட்டுரைதான். டெமி ஆக்டேவோ அளவில் 42 பக்கங்கள் மட்டுமேதான் – அதுவும் பெரிய எழுத்துகளில் (14 புள்ளி?). இதன் முன்னுரையும் பின்னுரையும் கூட அருமையானவை.

சென்னை நண்பர் ஒருவருடன் ஒரு மாதத்திற்குமுன் பலவிஷயங்களைக் குறித்து அளவளாவிக் கொண்டிருக்கும்போது, பேச்சுவாக்கில் இந்த ‘நிழல்களைப் போற்றுதும்’ அடிபட்டது.  அப்போதே நினைத்தேன் – இதனைப் பற்றி, ஒரு சுருக்கமான ‘போற்றுதும்’ எழுதவேண்டுமென்று. கடந்த வாரம், இன்னொரு நண்பருடன் இதே நிழல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆகவே.

இது மாய்ந்து மாய்ந்து எழுதப் பட்ட, அவசியம் படிக்கப் படவேண்டிய ஒரு புத்தகம்.  இது ஃப்லிப்கார்ட் தளத்திலும் கிடைக்கிறது. யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்.

-0-0-0-0-0-0-0-0-

நகுலனா மௌனியா என்று சரியாக ஞாபகம் இல்லை – இவர்களில் ஒருவரோ அல்லது இருவருமே சொன்னதோ அல்லது கேட்கக் கூடுவதோ போல –  ‘எவற்றின் நிழல்கள் நாம்?’ எனும் கேள்விக்கு எனது பதில்: நாம் மதிக்கும், படித்துப் புத்துணர்ச்சி பெறும் புத்தகங்களின்!

ஆமென்.

5 Responses to “நிழல்களைப் போற்றுதும்…”

  1. bseshadri Says:

    நான் மௌனி மட்டும்தான் படித்திருக்கிறேன். நகுலனைப் படித்ததில்லை. “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்று மௌனி சிறுகதை ஒன்றில் வருவது ஞாபகத்தில் உள்ளது.

    —->>>>>
    நன்றி, பத்ரி. :-) முப்பது-முப்பதைந்து வருடங்களுக்கு முன் படித்தது. பிரச்சினையென்னவென்றால், நான் படித்தவைகளின் என்னுடைய சொந்த வடிவங்களை உருவாக்கிக் கொண்டு விடுகிறேன். அசைபோட அசைபோட, அவை இன்னமும் மாற்றம் அடைகின்றன. :-( ஆனால் நான் சரியான மேற்கோட்களை உபயோகப் படுத்தாதபோது, எனக்கு அதுவும் தெரிந்து விடுகிறது என்பது தான் சிறு ஆசுவாசம் தருவது.

    நினைவுகளின் நிழல்களில் இம்மாதிரி பல விஷயங்கள், பிறழ்வுகள் இருக்கின்றன. கெர்ரிலா தாக்குதல் போல இவை சில சமயங்களில் தடம் புரட்டிவிடுவதும் உண்டு. ஹ்ம்ம்.

  2. lok Says:

    சார் , உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அந்த முப்பத்திச் சொச்ச புத்தகங்களின் பட்டியல் தர முடியுமா? அறிய ஆவலாக உள்ளது.நன்றி.

  3. R. RadhaKrishnan Says:

    திரு. ராமசாமி அவர்களுக்கு,
    ‘குறைவாக சிந்தியுங்கள், அதிகம் புரிந்து கொள்வீர்கள்’ என்று – Masanobu Fukuoka, Japanese Natural Farmer, சொன்னதாக சமீபத்தில் படித்தேன். இவ்வாசகம் பற்றி தங்களுடைய கருத்தை அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன். நன்றி.

  4. aekaanthan Says:

    ஜுனிசிரோ தனிஸாகியின் ‘In Praise of Shadows’ –ஐப்பற்றிய பதிவு படிப்பதற்கு நன்றாக இருந்தது. The title though, sounds like Betrand Russel’s work ‘In Praise of Idleness’!

    ஜப்பானில் ஒரு 3 1/2 வருடம் வாழ்ந்தபோது அவர்களின் வாழ்வு கலாச்சாரம், இலக்கியம் போன்றவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள, என் பணியினூடே, ஓரளவு முயன்றிருக்கிறேன். தங்கள் கலாச்சாரம், மொழி போன்றவைபற்றி ஆழ்ந்த அக்கறை உடையவர்கள் ஜப்பானியர்கள். என்னதான் இளைஞர்கள் ஃபேஷன், மியூசிக், விளையாட்டு போன்றவற்றில் அமெரிக்க மோகம் கொண்டிருப்பினும், மத்திம, முதியவயதினர் தம் நாடு, மொழி, பண்பாடுபற்றிப் பெருமை கொண்டு பேசுகின்றனர்; வாழ்கின்றர். அவர்களது பௌத்த, ஷிண்டோ கோவில்களின் திருவிழாவின் போதெல்லாம் இளைஞர்களும், வயதானோரும் ஆர்வத்துடன் ஜப்பானிய கலைநிகழ்ச்சிகளில், பாடல்களில் மனமயங்கி ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன்.

    கிடைத்தால் படிப்பேன் தனிஸாகியின் அந்தப்புத்தகத்தை. புத்தக அறிமுகத்திற்கு நன்றிகள் பல.

    ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்!’ என்பது மௌனியின் எழுத்து என்பதாக ஞாபகம்.
    -ஏகாந்தன்
    http://aekaanthan.wordpress.com.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s