ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…
May 2, 2014
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.
இதன் ‘ஒருமாதிரியான’ பொழிப்புரை: ஒரு மலர் அழகாக இருந்தாலும் அதற்கு நறுமணம் இல்லையென்றால் அது அளிக்கும் ஏமாற்றத்தைப் போல, நீச்சல் தெரியாதவன் படுதைரியமாக ஆழ்நீரில் இறங்கும் சோகத்தைப் போல – ஒரு எழவும் புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கேள்வி கேட்பதாலும், அரைகுறைச் சிறியார்களின் மேல் கோபம் கொள்ளுதலினாலும் ஒரு மசுத்துக்கும் பிரயோஜனம் இல்லை! :-(
… ஆயிரம் முறை எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன் இந்த இன்னா37ஐ; இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எனக்குப் படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் – இருந்தாலும், இந்த அணுக்கருவுலை பற்றிய துறையறியாமல் பொய்மையில் அமிழ்ந்து போகும் அறியார்களையும் (=பொதுவாக நாம்) சிறியார்களையும் (= எஸ்ராமகிருஷ்ண-சுந்தர்ராஜனாதிகள், உதயகுமாரர்கள் இன்னபிறர்) கண்டால் பொறுக்கவே மாட்டேனென்கிறது, என்ன செய்ய… :-(
அதனால்தான் இந்த மூன்றுபதிவுகள் இந்தப் பெருந்தகைகள் மீது விரயம் செய்யப் பட்டன: :-(
- போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்… 14/03/2014
- அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள் 16/03/2014
- எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்… 22/03/2014
… நம்முடைய அரைகுறைசூழ் உலகில், பொதுப்புத்தியின்மை என்பது, நம்பவே முடியாத அளவுக்கு மௌடீகமானது – ஆனாலும் இது பரவாயில்லைதான்; அவர்களுக்கும் ஆயிரம் லோகாயதப் பிரச்சினைகள் – உயிர்தரிக்கவே ஆயிரம் தடங்கல்கள். ஆனால், இந்தப் பொதுமக்களின் புரிந்துகொள்ளக்கூடிய முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு — மனிதவுரிமைக்காரர்களும், ‘ நானே ஒரு அணுக்கருசக்தி விற்பன்னன்தான்’களும், இன்றைக்கு ஒரு புதுச்செய்தியை வாசித்துவிட்டு உடனே அதில் மகாமகோ அறிவுடையவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களும் – அற்ப அயோக்கியர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
பொதுமக்களுக்கு தங்கள் ஐயங்களைச் சரிசெய்துகொள்ள நேரமில்லை. ஆனால் ஐயங்கள் ஜனரஞ்சகமாகத் தீர்த்துக்கொள்ளப் படவேண்டுமே! இங்குதான் அமர்க்களமாக வருகின்றது நம்முடைய சொறிப்படை வீரக் குறுமதியாளர்களின் கூட்டணி: நம்முடைய செல்ல அரைகுறை அறிவுஜீவிகள் + மனிதவுரிமைவாதிகள் + இன்ஸ்டன்ட் காஃப்ஃபி, நூட்ல்ஸ் போல, இன்ஸ்டன்ட் அறிவாளிகள் + பப்பரப்பாவுக்காக நாய்போல அலையும் ஊடகங்கள் — போன்றவர்களின் கயமைக் கூட்டமைப்பு இது. பொதுமக்களிடம் ஒரு விஷயத்தைத் (= பின்புலமற்ற வடிகட்டிய பொய்கள்) திருப்பித் திருப்பி உரக்கச் சொன்னால் அதை நம்பிவிடுவார்கள் என்பது இந்தக் கூட்டணிக்கு ஒரு ஊக்க போனஸ், வேறென்ன சொல்ல!
ஆக – குபீர் செய்திகள், பூச்சாண்டிகள், தூக்கிவாரிப் போடல்கள் இன்னபிற பப்பரப்பா அற்பத்தனங்கள் அழகாகவே உலா வந்துகொண்டிருக்கின்றன…
ஹ்ம்ம், பொய்ச் செய்திகளைப் பரப்ப, பரபரப்புப் பப்பரப்பா ஊடகங்கள் காட்டும் சிரத்தையும், அரைகுறை பார்வையாளர்கள் அதில் ஆழ்ந்தமிழ்ந்து இறும்பூதெய்தும் பாங்கும் ஒரு அதிசோகத் தொடர்கதைதான்.
இதனைத் தவிர – வேலைவெட்டியற்ற எழுத்தாளர்களும் அரைகுறைத் தீவிரவாதிகளும் அடுத்தவர் செலவில் ஜாலியாக ஒரு வெறுப்புச் சுற்றுலா சென்று, இந்தியாவையும் நாறடித்து, போகும் போக்கில் மற்ற நாடுகளையும் ஒரு பிடிபிடித்து அல்லோல கல்லோல கும்மியடிக்கின்றார்கள்.
-0-0-0-0-0-0-0-
…சரி. விஷயத்திற்கு வருவோம். ஃபுகுஷிமா நிகழ்ச்சிகள் பற்றிப் பரப்பப்படும் பொய்கள் பலப்பல. அம்மாதிரிப் பொய்கள் தாம் பொதுவாக ‘போவோமா ஊர்கோலம்’ போய்க்கொண்டு சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றன – ஆகவே உண்மை நிலைமைகளை மட்டும் கொடுத்திருக்கிறேன். படித்து ஆச்சரியப் படவும் – எப்படித்தான் இந்த நியூக்ளியர் (=அன்க்ளியர்) போராட்டக்காரர்களும், ஊடகங்களும் வடிகட்டிய அயோக்கியத் தனமாகத் தொடர்ந்து பொய் சொல்கிறார்கள் என்று… இந்தப் பொய்களைச் சுற்றிச்சுற்றித் தட்டாமாலையாடிகிறார்கள், இந்த அற்ப பின்னூட்டலைக்கடிச்சான் குளுவான் அணுசக்தியெதிர்ப்புக்காரர்களுமென்று…
0. ஸுனாமி என்பது கடற்கோள்; அது கடலில், கடலோரத்தில் ஏற்படக்கூடிய நில நடுக்கத்தால் ஏற்படுவது. புவியில், ஆழி என்று ஒன்று ஆரம்பித்தமுதல் நடந்துவரும் விஷயம். அணுக்கருவுலை என்பது மனிதகுலத்தால் கட்டமைக்கப்பட்டது – சுமார் 60 ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருந்து வருவது.
இவை இரண்டுக்குமுள்ள இப்படிப்பட்ட அடிப்படை வித்தியாசத்தை, தேவரீர் பின்னூட்ட அணுவிற்பன்னர்கள், ‘கூக்ல் தேடி’ பூஷணர்கள், திடீரெக்ஸ் அணுவுலை ஞாநிகள், எஸ்ராமகிருஷ்ண ’ஊரான் செலவில்’ சுற்றுலாமுதல்வாதிகள் போன்றவர்கள், கொஞ்சமாவது புரிந்து கொள்ளவேண்டும்; இது மிகவும் முக்கியம். இதனைப் புரிந்துகொண்டு மறுபடியும் ஃபுகுஷிமா விவரங்களைப் படித்தால், கீழ்கண்டவைகளைக் கொஞ்சமாவது செரிக்க முடியும்.
1. ஃபுகுஷிமா-வில் நடந்தது அணுக்கருவுலை சார்ந்த பெரும் விபத்து என்பதே பொய். அது ஒரு ஸுனாமி தொடர்பான விபத்து என்பதே மெய்.
2. இறந்த ஒருவர்கூட அணுவுலை விபத்தால், உலைவுருகல் (= ‘மெல்ட்டௌன்’) காரணத்தால், கதிரியிக்கத்தால் இறக்கவில்லை; இறந்தவர்கள் ஸுனாமி காரணமாக மட்டுமே இறந்தனர். அடிபட்டவர்கள் ஸுனாமி காரணமாக அடிபட்டுக்கொண்டனர். தொழிற்சாலைகளுக்கும், நகரத்துக்கும், வீடுகளுக்கும், சாலைகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் ஸுனாமி காரணமாகவே நடைபெற்றன. அணுசக்திக்கும் அணுகுண்டுக்கும் ஃபுகுஷிமா ‘பேரிட’ருக்கும் தொடர்பேயில்லை. எம் இனத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கும் நேர்மைக்கும் எவ்வளவு தொடர்போ அந்த அளவு தொடர்புதான் ‘அணுவுலை விபத்துக்கும்’ – ஊடகங்கள் டமாரமடித்த பேரிடருக்கும்!
3. ஆம், அணுக்கருவுலையும் இந்த மகாமகோ ஸுனாமி விபத்தில் சேதமடைந்தது. ஆனால், அதன் பாதுகாப்புக் கட்டமைப்புகள் காரணமாக, அவை மிகச் சரியாகவே வேலை செய்ததன் காரணமாக – ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆக இந்த ஸுனாமியானது – அந்த அணுக்கருவுலையின் பாதுகாப்பு அரண்களின்/முஸ்தீபுகளின் மீதான ஒரு தீவிர பரிசோதனை. இயற்கை செய்த இந்தப் பரிசோதனையானது பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்கவோ/அழிக்கவோ முடியவில்லை.
4. ஆம், உலைவுருகல் ஏற்பட்டது. ஆனால் அதனால் பேரிடர் பிரச்சினைகள் ஏற்படவில்லை.
5. ’கதிரியக்கம் இரண்டு மடங்கானது மூன்று மடங்கானது, ஆகவே மகாமகோ அபாயம்’ எல்லாம் முட்டாள்தனமான பரப்புப் பசப்புரைகள். கதிரியக்கம் என்றால் என்னவென்பதே தெரியாமல் அடிப்படைகளைத் தெரிந்து தெளியாமல், உளறப் படுபவைகள்…
ஒரு உதாரணம் கொடுக்கிறேன்: இப்போது, நம்முடைய வதந்திசூழ் உலகில், குடல் இருக்கும் எந்த உயிரும் குசுவானதை விட்டே ஆகவேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். மனித ஜன்மங்கள் குசு விடுவதென்பது ஒரு வரலாற்றை உலுக்கியெடுக்கும் பிரச்சினையோ, மனிதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் பிரச்சினையோ, திடுக்கிடவைக்கும் விபத்தோ (ஓசை கொஞ்சம் பெரிதானால் அது வேறு விஷயம்!) அல்ல – அது ஒரு இயற்கையான விஷயம்தான்.
ஆக, நாம் நம் எழுத்தாளர்/போராளி மஹானுபாவர் அவர்களை ஒரு குடலுள்ள ஜந்து என்று நம்பி – பொதுவாக, நாளைக்கு ஒரு மகாமகோ குசு (அல்லது ஒரு கட்டுரை / பேருரை / கோஷ்டம்) விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் திடீரென்று அளவுக்கதிகமான சில பருப்பு வகைகளைச் சாப்பிட நேர்ந்ததால், குதத்திலிருந்து இரண்டுமூன்று குசுக்களை மேலதிகமாக திடீரென்று வெளியேற்ற நேருகிறது என வைத்துக் கொள்ளலாம்.
இப்போது இந்தக் கதைக்கான பப்பரப்பா தலைப்பு:
“போராளி எழுத்தாளர் விடும் குசுக்கள் 300% அதிகமாகிவிட்டன!
… உலகம் அழியப் போகிறதா??”
கற்பனைவாத உள்ளீடற்ற எழுத்தாளப் போராளிகள் விடும் குசுக்களின் நாற்றம் மகாமகோன்னதமானதுதான்!
ஃபுகுஷிமா பகுதியில் நடந்த இயற்கை பாற்பட்ட விபத்துகளை — அணுவுலை விபத்து, உலை உருகல், கதிரியக்கம் என்றெல்லாம் உளறிக் கொட்டுவது, தப்பும் தவறுமாக எண்ணிக்கைகளைப் புரிந்து கொள்வது, பயபீதியினால் பித்தம் தலைக்கேறி நாக்கு தொங்குவது, மகத்தான அறியாமையால் அறிவியலுக்கும் அவியலுக்கும் ‘கன்ஃபூஸ்’ செய்துகொள்வது, அது மட்டுமல்ல – அந்த அறியாமையை ஒரு மகத்தான திறமையாகக் கருதி கண்டமேனிக்கும் உளறிக் கொட்டுவது என்பது தான் பொதுவாக நடக்கிறது.
என்ன, ஒரு சந்தோஷமான(!) விஷயம் என்னவென்றால் – இந்த அயோக்கிய பஜனை உலகமெல்லாம் நடக்கிறது என்பதுதான்!
ஆனால், இந்த விஷயத்திலும் நம்முடைய செல்லப் போராளிகள் ஈயடிச்சான் அட்டைக் காப்பியடிக்கும் அட்டைக்கத்தி வீரர்கள்தாம் என்பதை நினைத்துக் கொள்ளும்போது – உள்ளபடியே எனக்குப் புல்லரிப்பையும் புளகாங்கிதத்தையும் புஜங்கள் தினவெடுப்பதையும் தாங்கவே முடியவில்லை, போங்கள்! ;-)
மேலதிக விவரங்கள், அடுத்து வரும் பதிவுகளில்… :-(
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். :-(
May 2, 2014 at 20:21
ம்……….. தெளிவான விளக்கங்கள்.
பரமாணு பம் ஆக இருக்கட்டும் அபான பம் ஆக இருக்கட்டும் …………. எதைப்பற்றிப் பேசினாலும்……….. தமிழைக் குழிதோண்டிப் புதைப்பதில் 90 வயதிலும் தாளாத செயலூக்கம் உள்ளவரான….பொறுக்கி நடைத் தமிழின் அன்னையும் தந்தையுமாகிய ……………தெலுகு பிட்ட…………த்ராவிட மடாதீசர்………..கருணானிதித்தம்பிரான் ஸ்வாமிகளைப் பற்றி ப்ரஸ்தாபிக்காது உங்களால் எழுத முடியாது என்று தெரிகிறது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. அலகிலா விளையாட்டுடையவராயிற்றே த்ராவிட மடாதீசர்.
ஒரு முப்பது வருஷம் முன்னர் சிலோன் ரேடியோவில்
பேணி டாஃபி (வேணி டாஃபி) பற்றி ஒரு விளம்பரம் வரும்.
அளுகிற பிள்ள சிரிக்கும். சிரிக்கிற பிள்ள களிக்கும். பேணி டாஃபி என்று.
தமிழை நாசம் செய்வதைக் குறியாகக் கொண்ட டுமீலர்களின் ஈனத் தலைவர் பற்றிய ப்ரஸ்தாபங்கள் பேணி டாஃபி சாப்பிடுவது போல் களிப்பையும் சிரிப்பையும் தருமென்றால் மிகையாகாது.
இது வரை ஃபுகுஷிமா சுனாமி விபத்தைப் பற்றி சொல்லப்பட்ட தகவல்கள் எல்லாவற்றிலும் பூதாகாரமாக சொல்லப்பட்டது அது அணுவுலை விபத்து என்று. உங்களது வ்யாசம் முற்றிலும் வேறான விபரங்களைத் தருகிறது.
May 3, 2014 at 09:47
புரியக்கூடிய மொழியில் அறிவியல் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தேவையும் அவசியமும் உள்ளது. அறிவியல் நன்கு அறிந்தவர்கள் இந்த விளையாட்டுக்கு வருவதில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடுகின்ற மாதிரியான மக்கள், மொழித்திறமையை மட்டும் நம்பிக்கொண்டு, சுக்குக்கு கூட அறிவியல் புரிதல் இல்லாமல், இந்தப் பணியை(??) செய்ய வந்து விடுகிறார்கள்.
எப்படி குரங்கை நினைக்காமல் இருப்பதற்கு, வேறு எதயாவது நினைக்க வேண்டுமோ, அதைப்போல்,புரியக்கூடிய மொழியில் அறிவியல் செய்திகள் வந்து இந்த இடத்தை நிரப்பாத வரையில், இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அது வரை, இந்தக் குரங்காட்டம் தொடரவே செய்யும் என்று நினைக்கிறேன்.
தமிழின் Richard Feynman-கள் எங்கே?
May 3, 2014 at 13:33
அய்யா! Feynmanகள் இல்லாமல் இருக்கலாம் – ஆனால் Feignmanகள் நிறையவே இருக்கிறார்கள். விட்டால், நொபெல் பரிசே பெற்றாலும் பெற்றுவிடுவார்கள் இவர்கள் – எடுத்துக்காட்டுகளாக – பாம்பாட்டிச் சித்தனார், இளைஞக்கறுப்பனார் போன்றோர்…
தமிழில் அறிவியல், தொழில் நுட்பம் பற்றியெல்லாம் சுத்தமாக எழுத ஆட்கள் இருக்கிறார்கள் – ஆனால் அவர்களை ஒருங்கிணைக்க ஒரு தளமும் இல்லை என்பதென் எண்ணம்.
நீங்கள் ஏன் எழுத ஆரம்பிக்கக் கூடாது? ஹ்ம்ம்??
May 7, 2014 at 17:17
http://siragu.com/?p=1346
///ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.
நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.
டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.
இவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.///
Exactly.
May 8, 2014 at 06:29
அய்யா சரவணன், இந்த சாகுல் ஹமீது அவர்களின் கதையைப் படித்தேன்; சுவாரசியமாக இருந்தது. நகைச்சுவைக்கு நன்றி.
1. நண்பர் இந்த விவரங்களை ஒரு பாகிஸ்தானிய வெட்டிப் பரப்புரைத் தளத்திலிருந்து எடுத்திருக்கிறார். இந்தத் தளமானது – இந்திய-அமெரிக்க அணுக்கருசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக, பாகிஸ்தானிய அரசின் பார்வையை மேலெடுப்பதற்காக நடத்தபடும் ஒரு தின்க்டேங்க் சங்கதி. (http://str.com.pk/)
2. சாகுல் ஹமீது சொல்லியிருக்கும் பல விஷயங்கள் சரியானவையல்ல.
3. யுரேனியம்-235 அணுவின் க்ரிட்டிகல் மாஸ் என்பது சுமார் 15 கிலோ மட்டுமே! இந்த அளவிற்கு மேல் இந்தக் கதிரியக்கத் தனிமத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லவேமுடியாது. ஏனெனில் அப்போது அது ஒரு அணுகுண்டாகிவிடும்! இன்னொன்று – மற்ற ‘கடத்தல்’ சேதிகளும் தவறானவை.
4. எனக்கும் இந்த மாதிரி சாகுல் ஹமீதுகளின் பயபீதிப் பொய்ச்செய்திகளுக்கு எதிராகப் போராடுவதும் ஒரு தேவையற்ற சுமை என்றுதான் தோன்றுகிறது. எக்ஸாக்ட்லி.
5. ஆனால், இந்தக் கட்டுரைக்கு கிட்டத்தட்ட இருபது குஞ்சாமணிகள் ஆஹாஊஹூவெனப் பின்னூட்டமிட்டிருப்பது என்னைத் திகைக்கவைக்கவில்லை. ஒரு சராசரித் தமிழன், அதிசராசரியானவன் என்பதை நான் அறிந்துகொண்டு பல பத்தாண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய. :-(
நான் அணுக்கரு சக்தியென்பதை 100% பாதுகாப்பான ஒன்று என்றெல்லாம் சொல்லவில்லை. உலகத்தில் எந்த ஒரு எழவும் 100% பாதுகாப்பானதேயல்ல. ஆனால் அனல்மின் நிலையசக்தியைப் பார்க்கும்போது இதுதான் சரியானது, மேலானது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தேயில்லை.
சரவணன் – நீங்கள் ஒரு புத்திசாலி என்பதிலோ, மெய்யாலுமே சிந்திப்பவர் என்பதிலோ எனக்குச் சந்தேகமேயில்லை.
என்னுடைய கருத்தென்னவென்றால், உங்களைப் போன்ற ஆட்கள் – நுண்மான் நுழைபுலம் அறிந்து, ஆய்வுக் கட்டுரைகளை எழுதமுடியுமானால் இந்த சாகுல்ஹமீது, ராமசாமி வகையறாக்களுக்கு வேலையே இருக்காது அல்லவா? என்ன சொல்கிறீர்கள்??
அன்புடன்,
__ரா.
May 8, 2014 at 09:41
ஷாகுல் ஹமீது கொடுத்திருக்கும் விவரங்கள் எதையும் நான் நம்பவில்லை. ஆனால் நான் அவர் கடைசி வரியில் எழுப்பியிருக்கும் கேள்வியோடு முழுக்க உடன்படுகிறேன்.
**** உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? ******
அடுத்து, அணுவுலைக் கழிவுகள் (மேற்குறிப்பிட்ட கட்டுரை சொல்வதை விட்டுவிட்டு) ஒரு தீர்க்கப்படாத பிரச்சினைதானே? நீங்கள்கூட அணுக்கழிவுகளை அப்புறப்படுத்துவது, பாதுகாப்பது பற்றி எதுவும் எழுதவில்லை.
மேலும் இன்னும் ஒரு 20 வருடங்களுக்குள்ளாக இப்போதைய அணுவுலைத் தொழில்நுட்பம் காலாவதியாகிவிடும். செல்ஃபோன் முதல் ராக்கெட்வரை ஃப்யூவெல் செல்கள் இயக்கப்போகின்றன. ஃப்யூஷன் ரியாக்டர் சாத்தியமாகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த உலைகளை வால்க ஆள் இருக்காது. அரெவா மாதிரி வர்த்தக நிறுவனங்கள் அதற்குள் இந்தக் காலாவதியாகிக்கொண்டிருக்கும் ரியாக்டர்களை நம் தலையில் கட்டிவிடத் துடிக்கின்றன என்பதே உண்மை.
—->>>>>
அய்யா சரவணன் – இந்த மேதகு ஷாகுல்ஹமீதனார் கொடுத்துள்ள விவரங்களை நீங்களே நம்பவில்லையானால் – பின் ஏன் நீங்கள் அவற்றை மேற்கோள் காட்டினீர்கள்? :-)
அது கிடக்கட்டும்.
1. இன்னமும் நேர்மையான அதிகாரிகள், சூட்டிகையானவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நம்முடைய பாதுகாப்பு அமைப்புகள் முதலுக்கே மோசமானவையல்ல. திறமையும் தீரமும் வாய்ந்த பல அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்கள். கவலை வேண்டேல்.
2. அணுக்கழிவுப் பிரச்சினை பற்றியும் எழுதுகிறேன். இது நிலக்கரி அனல்மின் நிலையங்களின் கழிவுப் பிரச்சினையைவிட மோசமானதேயல்ல என்பதையும் தான்.
இந்தக் ‘காலாவதியான’ உலைகளைப் பற்றியும்தான். பார்க்கலாம்.
__ரா.
May 8, 2014 at 16:40
/// பின் ஏன் நீங்கள் அவற்றை மேற்கோள் காட்டினீர்கள்? :-)///
To give the context for the question he has raised in the last line.