திராவிட அரசியல் பிரச்சாரம் (பணம், பயம், பொய், வசீகர / நடிகக் குஞ்சாமணியபிமானம், பிரியாணி, பரோட்டா, ‘ஃபுல்,’ பலானது, பெட்ரோல், ‘டாப்அப்,’ வாக்காள விட்டேற்றித்தனம், (கொஞ்சம் குறைவாக)மதஜாதியபிமானம்) = ஓட்டு!

April 27, 2014

QED.

(அல்லது) ஹ்ம்ம்… சில சமயங்களில், என் பதிவுகளின் தலைப்புகளை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே நெஞ்சுவலி வந்துவிடும்தான், உங்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது… ஆனால், கணிதம் மூலமாக, எந்த  விஷயத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியாது, சொல்லுங்கள்!

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

திராவிடத் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மேற்கண்ட பொதுவிதிச் சமன்பாடு மூலம் மட்டுமே தேர்தலைப் புரிந்துகொள்ள முடியும். முன்னேற்றமாவது, வளர்ச்சியாவது, வளமாவது, நீதியாவது கொள்கையாவது மசுராவது… போங்கடா.

இந்தக் கேடுகெட்ட விதிக்கு விதிவிலக்குகளென்றால் – எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்கள், பாஜக-வினர் போன்றவர்கள் மட்டுமே! இவர்களுக்குத்தான் கொள்கை  என்று ஒன்று (மற்றவர்களுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ, அது வேறு விஷயம்) இருக்கிறது.  சுய-அர்ப்பணிப்புள்ள அடித்தளம் என்று ஒன்று இருக்கிறது.  இவைகளில், உண்மையான தலைவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பலர் இருக்கின்றார்கள். ஓரளவு, இந்த விடுதலைச் சிறுத்தைகளையும் இந்தக் கணக்கில் – அதாவது பைசா கொடுக்காத கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் — சீமார் வகையறா, வினவு வகையறா, தவ்ஹீத்ஜமாத், ஆம்ஆத்மி வகையறா போன்றவை மானாவாரி, மேகம்பார்த்தபூமிச் சாகுபடி பப்பரப்பா உச்சாடன இயக்கங்கள் மட்டுமே, அவை அரசியல் கட்சிகளல்ல.

சரி. ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, வீசப்பட்டது என்று சொல்கிறார்கள். அலறுகிறார்கள்! அதுவும் அஇஅதிமுக மட்டுமே கொடுத்தது என்கிறார்கள். அதுவும் இசுடாலினார்கள், பூசாரி வீரமணியார்கள் போன்ற இன்னபிற உதிரித் தலைவர்கள் கூட இப்படியெல்லாம் சொல்கிறார்கள்!  ஒரு ஓட்டுக்கு ஐந்நூறு ஆயிரம் மூவாயிரம் கொடுத்திருக்கிறது ஜெயலலிதா கட்சி என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள். தேர்தல் கமிஷன் என்று ஒன்று இருக்கிறதா என்று அரற்றுகிறார்கள். தமாஷாகவே இருக்கிறது. பாவம், இவர்களுக்கு மறதி மிகவும் அதிகமாகிவிட்டதுதான் – ஏனெனில் இவர்கள் தான் பெருமளவில், அறிவியல்பூர்வமாக இந்தக் கேட்டை ஆரம்பித்து வளர்த்தெழுப்பியது.

-0-0-0-0-0-0-0-

எங்கள் பகுதியில் முதலில் பணம் கொடுத்த கட்சிகள் – திமுக-வும், தேமுதிக-வும்தான்; இவை கொடுத்தது ரூ 200/- – ரூ 300/- வரை. இதற்குப் பின் அஇஅதிமுக-வும் கொடுத்திருக்கிறது (= ரூ 200/-).  முதல் கட்சிகள் கொடுத்திருக்காவிட்டால், அஇஅதிமுக-வும் கொடுத்திருக்காது.

அஇஅதிமுக பணம் கொடுத்ததற்குப் பின், மறுபடியும் திமுக மேலதிகமாக ரூ 200/- கொடுத்திருக்கிறது – இத்தனைக்கும் திமுக-வினருக்குச் சர்வ நிச்சயமாகத் தெரியும், என் கிராமத்திலிருந்து பத்து சதம் வாக்குகூட அதற்குப் பெற முடியாதென்று!

ஓட்டுமாமரத்தில் நானூறு ரூபாயை விட்டெறிந்தால், சிலசமயம் ஓட்டுமாங்கனி விழலாமோ என எண்ணியிருக்கிறார்களோ என்னவோ!  (இதனைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்)

என்னுடைய சொற்ப நண்பர்கள் சொல்வதைப் பார்த்தால், சில குறிப்பிட்ட தொகுதிகளில்  (கேடி சகோதர மாறன், பாஆஆஆலு, ராசா, முத்துராமலிங்கம்) திமுக கொடுத்திருக்கும் பணம் இந்தச் சராசரிகளைவிட மிகமிக அதிகம். (இந்தத் தொகுதிகளில் தான் எனக்கு நம்பகத்தன்மை மிக்க நண்பர்கள் இருக்கிறார்கள் – மற்ற தொகுதிகளிலும் இதே கதையிருக்கலாம்; என்னிடம் தகவல்கள் இல்லை)

இன்னொன்று: இந்த அஇஅதிமுக சார்பில் பட்டுவாடா செய்வதில், நடுவில் நிறையபேர் சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் புரளியைவேறு கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அஇஅதிமுக சார்பில் பணம் பட்டுவாடா செய்தவர்களின் மூலமே விசாரித்ததில் (இந்தப் பட்டுவாடனார்களில் ஒருவருடன் – இவர் தலித் – இன்று நேற்று காலையில் பேசினேன்; ஏனப்பா இப்படிச் செய்கிறாய் என்றால், அவர் சொன்னார் – நாங்க கொடுக்காம இருக்கோம், ஆனா அவனுங்க நிறுத்த மாட்டானுங்களே! ரெண்டு லட்சம் கோடி சுருட்டி வெச்சுருக்காங்க சார்! அவுங்கள ஒழிக்கணும் சார்!) – கூட சில சுவாரசியமான விஷயங்களும் தெரியவந்தன.

அஇஅதிமுக-வில் நடுவில் இடைத்தரகத்தனமாகப் பணம் பண்ணியவர்கள் மிகக் குறைவு. இந்தப் பணப் பட்டுவாடா நடந்த இடங்களில் மிகவும் கவனத்துடன் இது கையாளப் பட்டிருக்கிறது; ஏனெனில் அஇஅதிமுக-வில் நடப்பது — அதிகாரக் குவியம் ஒன்றால் காட்சிகள்(= ‘இங்க எல்லாமே அம்மாதான் சார்!’) நடத்தப் படுவது; அதன் நடைமுறையில் ஒருவர் தான் ராஜா (=ராணி) – மற்றவர்களெல்லாம் சேவகர்கள். ஒருவருக்கும் பிரமையில்லை. சாட்டையைச் சொடுக்கினால் நடுங்குபவர்கள்தான் இரண்டாம் அடுக்குத் தலைவர்களிலிருந்து மற்றவர்கள் வரை… ஆக, ‘பிரச்சாரப் பணத்தில் ஆட்டையப் போட்டார்’ என்ற பொதுப்புத்தியின்மை சார்ந்த கருத்து, அஇஅதிமுக-விற்குப் பெரும்பாலும் பொருந்தாது.

ஆனால், திமுக அப்படியில்லை; இசுடாலிர் அவர்கள், ஒரு வசீகரத் தலைவரல்லாத காரணத்தால் (என்னதான் இன்னமும் அவர் இந்தத் தள்ளாத 61 வயதிலும், தொடர்ந்து  இளைஞரணித் தலைவராக இருந்தாலும்) திமுக-வின் குறுநிலமன்னர்களுக்கு, அடிப்பொடிகளுக்கு என்று திமுக-வை / தமிழ்நாட்டைப் பிரிவு பிரிவாகப் பிரித்து நிர்வாக அதிகாரத்தை அளித்து விட்டார். அதாவது ஒரு கார்ப்பரேட் மேலாண்மைக் காரராகக் கட்சியை நடத்த முயல்கிறார். முறைப்படி கப்பம் கட்டினால், இந்தக் குறு நிலக் கிழார்களானவர்கள் மற்றபடி என்ன செய்தாலும், கண்டுகொள்ளப் படமாட்டார்கள். ஆக, அவரவர்கள் ஜமீந்தார்கள், ஜாகிர்தார்கள் போல வேண்டுமளவு கூத்தடிக்கலாம்! (பாவம், கருணாநிதிக்கு – அவர் வளர்த்த திமுகவுக்கு இது ஒரு பின்னடைவுதான்; ஏனெனில், அடிப்படையில் அவர் ஜெயலலிதா ஸ்டைல் ‘அதிகாரக் குவியல்’ கட்சி நிர்வாகி!)

ஆக – திமுக-வில் தான் இந்த இடைக்கழிவுப் பணம் அதிகம் என்பது என் அனுமானம். இன்று நேற்றிலிருந்தா, இந்தக் கயமைக்கட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்? நாற்பது வருடங்களாகவல்லவா இந்த நிர்மூல யந்திரத்தை,  இது தமிழகத்தை அழித்தொழிப்பதின், காயடிப்பதின்  காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் – வானூர் வட்டத்திலுள்ள ஒரு அப்பாவி திமுக ஆள்; ஒன்றிய திமுக உறுப்பினர்; வன்னியர்; என் பள்ளிக் குழந்தை குழந்தை ஒன்றின் அப்பன்;  இவர் சொன்னார் – நாய் மாதிரி உழைக்கும் எனக்கெல்லாம் ஒரு சுக்குப் ‘பிரயோசனமும்’ இல்லை;  புதுஆட்கள் பணபலத்திலேயே வட்டச் செயலாளாகிவிடுகிறார்கள். மேலும் பணம் பண்ணுவதில், மாவட்டச் செயலாளர்கள் பின் சுமோ போட்டுக்கொண்டு அலைவதில் காலத்தைச் செலவழிக்கிறார்கள். என் வட்டச் செயலாளருக்கு எவ்வளவு கிராமம் இந்த வட்டத்தில் இருக்கிறது என்பதே தெரியாது.  நன்கொடை சேர்த்தே மூணுமாடி கட்டிடம் கட்டிவிட்டார்.  போன வருடம் 22 ஏக்கரா முந்திரிக்காடு வாங்கியிருக்கிறார். பாருங்கள் – ஏன், முதலிலேயே உங்கள் ஊரில் எங்கள் ஆட்கள் முழு நானூற்றைம்பதைக் கொடுத்திருக்கலாமே! இந்த மாதிரித்தான் சொதப்பி விடுகிறார்கள்.  அந்தப் பொம்பளை கொடுக்கவில்லையென்றால், மிச்சப் பணத்தை அமுக்கியிருப்பார்கள் என் கட்சிக்காரர்கள்; ஓட்டுக்குப் பணம் கொடுப்பதிலும் நம்பகத் தன்மை வேண்டுமே. எங்களிடம் பணம் வாங்கினான் சரி, இப்போது எப்படி அந்த அதிமுக காரன் நமக்கு ஓட்டு போடுவான்? யார் வீட்டுப் பணம்? கட்சி முன்போல் இல்லை.  நானே கட்சி மாறிவிடலாமென்றாலும், கலைஞருக்கு வயதானகாலமாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அவர் காலத்துக்குப் பின், நான் திமுக-வில் இருக்கமாட்டேன். மதிமுக போய்விடுவேன்.

துக்கமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது. பாவமாகவும் இருக்கிறது – அந்த அஇஅதிமுககாரரை நினைத்தாலும் தான்!

-0-0-0-0-0-0-0-0-0-

ஆக  – பெரும்பாலான கட்சிகள், வாக்குப் போடும் ஜனநாய்கர்களுக்கு அற்ப எலும்புத் துண்டுகளை விட்டெறிந்து, அவர்களும் நாயமாக தங்கள் வாக்குகளை அளிப்பதுதான் ஒரு மகாமகோ பொதுவிதியான நடைமுறை உண்மை.

குறிப்பாக, நம் தமிழகத்தில் இப்படித்தான். மேலதிகமாக வசீகரம், புரளிகள் என்பவையும் இருக்கின்றன.  இதில் ஒரு முக்கியமான,  ஆசுவாசம் தரும் விஷயம் என்னவென்றால் –  பெரும்பாலும்,  எனக்குத் தெரிந்தவரை, ஜாதிமத பேதம் பார்த்துமட்டுமே வாக்குகள் அளிக்கப் படுவதில்லை என்பதுதான்! (இந்த ஒரு விஷயத்தைச் சுட்டுவதற்காகத்தான், முன்னர் தலித், வன்னியர் என்ற ஜாதிப்பெயர்களைக் குறிப்பிட்டேன்)

இருந்தாலும் இந்தக் ஓட்டுக் கையூட்டு ‘கவனிப்பது’ பற்றிய எனக்குக் கிடைத்த சில மேலதிக ‘அறிவியல் பூர்வமான’ விவரங்கள் (என் பள்ளி இருக்கும் கிராமத்தை, ஒரு சராசரித் தமிழகக் கிராமமாகப் பார்த்து, அதன் பூகோளச்சுற்றுச்சூழலை முன்னிறுத்தி விரிக்கப்பட்டவைதான் இவை):

  • அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகள் சார்பாகவும் – கடந்த ஆறு மாதங்களில் வார்டு வாரியாக கட்சியின் பாரம்பரிய அனுதாபிகள், உள்கட்சிப் பிரச்சினையாளர்கள்/விரோதிகள், அரசியல் எதிரிகள்,  சுவர்மேற்பூனைகள், படித்தவர்கள், புதிய இளைஞ வாக்காளர்கள், பொருட்படுத்தத் தக்க தலைவர்கள், எவருடைய பேச்சு எடுபடும், வட்டாரச் சிறு பிரச்சினைகள் போன்றவைகளின் விவரங்கள் திரட்டப் பட்டுள்ளன. (இந்தக் கிராமத்தில் ‘வகையறா’ தலைவர்கள் என்று ஐந்தாறு குலக் குழுக்களைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் வன்னியர்கள்தான். ஒருவருக்கொருவர் இவர்களிடம் குத்து-வெட்டு-கொலை எனப் பல இருந்தாலும், கோயில் விவகாரத்தில் ஒன்றாகச் சேர்வது, மற்ற அருகாமை கிராமங்களில் தகராறு செய்வதற்கு, தகராறுகளைத் தீர்ப்பதற்கு எனச் சேர்வதும்,  நடக்கும். இந்த வகையறா தலைவர்கள் சொல்வதுதான் அவர்கள் குழு மக்களுக்கு  வேதவாக்கு; மீறினால் பிரச்சினை!)
  • இந்த விவரங்களின் மீது – யாரை எப்படிச் சரிகட்டுவது எனும் மிக விரிவான திட்டமிடல்கள் இருந்திருக்கின்றன. சில இடங்களில் இந்தக் கையூட்டு – ஊர்களின் பொதுச் சொத்துகளான வட்டாரக் கோவில்களின் திருவிழாக்களுக்குக் கூட அளிக்கப் பட்டிருக்கிறது. (இம்மாதிரி ஒரு விஷயத்தைப் பற்றி, மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்: “அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!”  (மே 14, 2011); இந்தக் கிராமத்தில், கோயில் திருப்பணிகளுக்கு என்று ரொக்கம் மூன்று கட்சிகளால் அளிக்கப் பட்டிருக்கிறது; இதைத் தவிர வகையறா தலைவர்கள் கவனிக்கப் பட்டனர்)
  • முதலில் மதில்மேல் பூனைகளுக்குத் தான் பணம் அளிக்கப் படும்; பின்னர் புது ஓட்டுக்காரர்களுக்கு. பின்னர் அரசியல் எதிரிகளைச் சரிகட்டல்கள். (இந்தக் கிராமத்தில் புது வாக்காள இளைஞர்களுக்கு ஸெல்ஃபோன் டாப்-அப் செய்து கொடுத்திருக்கிறார்கள்; கிராம அளவில் எதிரிகளுக்குச் சுற்றுலா போக – கோவில்குளம் குடும்பத்துடன் சென்றுவர ஒரு நாள் கார் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்)
  • அதே சமயம்,  தொகுதி அளவில் உட்கட்சி அதிருப்தியாளப் பெருந்தலைகளைத் திருப்திப் படுத்தி  ‘வர்த்தக ரீதியாகவே’ எதிர் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையினர் ‘பணி’ ஒன்றும் செய்யாமலிருக்கவே கவனிப்புகள். (இதன் விவரங்களை என்னால் தரமுடியாமைக்கு மன்னிக்கவும்)
  • எப்படியும் – நிச்சயம் நமக்குத் தான் ஒட்டளிப்பார்கள் என்பவர்களை, பாரம்பரிய வாக்காளர்களை எந்தக் கட்சியும்  ‘போர்க்கால ரீதியில்’ கவனிப்பதில்லை. அவர்களை எப்படியாவது பணமே கொடுக்காமல் மேலாண்மை செய்யவே முயற்சிக்கின்றன. படித்தவர்களையும் அப்படியே. வேறு வழியே இல்லாமல் இருந்தால்தான் இவர்களுக்கெல்லாம் பணம். (இந்தக் கிராமத்தில், பாரம்பரிய அஇஅதிமுக  வாக்காளர்கள் வெகுவாகக் கூக்குரலிட்டதால், அஇஅதிமுகவும் வேறு வழியில்லாமல், மற்ற கட்சிகள் பணம் கொடுத்ததற்குப் பின் கொடுத்திருக்கிறது; படித்த சிலர் பணம் வாங்கமாட்டேன் என்றபோது அவர்கள் சார்பில் அவர்கள் பெற்றோர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்; வீட்டிலுள்ளே கடவுள் படம் வைக்கும் பிறையில் / அலமாரியில் பயபக்தியுடன் பணத்தை வைப்பதும் நடந்திருக்கிறது; “பிடிக்கலைன்னா மாரியாத்தாவுக்கு போட்ருங்க!” )
  • இந்த ஓட்டுக் கையூட்டை – பெரும்பாலான கொடுத்தல்களில் பணமாக அளிப்பதில்லை. (இந்தக் கிராமத்தில், சில குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளிற்கான சீட்டுகள் கொடுத்திருக்கிறார்கள் – அங்கு போய் ரூ 200 – 300க்கு வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்; இந்தச் சீட்டு ஒன்றைப் பார்த்தேன். அந்த மஞ்சள் நிறக் காகிதத் துண்டில் கையெழுத்தில் ஒரு பெட்ரோல் பங்க் பெயர் இருந்தது; அவ்வளவுதான். இன்னொன்று: வட்டார மளிகைக் கடைகளில் ரூ 200-300க்கான மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொள்ளக் கூடிய கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கும் ‘மஞ்சள்-ரோஜா’ காகிதச் சீட்டுகளும் கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு வழி: ஸெல்ஃபோன் டாப்-அப் – இந்தச் சேவையை உட்கார்ந்த இடத்திலிருந்து யாரிடமும் போகாமலேயே  ‘அளிக்க’லாம்; இன்னொரு பணச்செலவதிக வழி: சீமைச் சரக்கு;  ஒரு மிகமுக்கியமான வழி, முன்னமே பாட்டில் பாட்டிலாக வாங்கிவந்து வைத்திருந்த சாராயம் – ஆனால், இது வாக்களித்த பின்னர் மட்டுமே அன்பளிக்கப் படும்)
வாக்களிக்கச் சென்று கொண்டிருக்கும் கணவன் மனைவியிடம் சொல்கிறான்: நீதான் யாருக்கு வாக்களிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறாய்; எனக்குக் குழப்பமேயில்லை!  (பல வருடங்களுக்கு முன்னால் ‘காக்’ அவர்களால் வரையப்பட்டு நவ்பாரத்டைம்ஸ் தினசரியில் சுமார் 35 வருடங்கள் முன் வந்தது)

வாக்களிக்கச் சென்று கொண்டிருக்கும் கணவன் மனைவியிடம் சொல்கிறான்: நீதான் யாருக்கு வாக்களிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறாய்; எனக்குக் குழப்பமேயில்லை!
(பல வருடங்களுக்கு முன்னால் ‘காக்’ அவர்களால் வரையப்பட்டு நவ்பாரத்டைம்ஸ் தினசரியில் சுமார் 35 வருடங்கள் முன் வந்தது; பிஹார் பின்புலம்)

  • இரண்டாம் சுற்று, அவசரச் சுற்றுகளில் தாம் பணமாக, ரொக்கமாக இந்தக் கையூட்டு அளிக்கப் பட்டிருக்கிறது.
  • எனக்கு வந்துள்ள செய்திகள் படி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ரு 200/- என்றெல்லாம் எந்தக் கட்சியாலும் கொடுக்கப் படவில்லை. ரூபாய் ஆயிரத்துக்கு மேல் சிலருக்குப் பணம் கொடுக்கப் பட்டதெல்லாம் புதுச்சேரியில் தான் – அதுவும் சில வாக்காளர்களுக்குத்தான் (=influencers, அதுவும் பெரிய குடும்பங்களில்). புதுச்சேரி ஒரு சிறிய நாடாளுமன்றத் தொகுதி என்பதையும் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும், பணம் தந்த கட்சிகளிடமிருந்தெல்லாம், ஒரு வாக்காளர் பணம் வாங்கிக்கொண்டாலும் கூட – அது தற்போதைய தேர்தலில் ரூ 1500/- அளவைத் தாண்டாது என என்னுடைய கணக்கு சொல்கிறது. என்னுடைய தகவல்கள் படி பணம்/பொருள்/சேவை கொடுத்த கட்சிகள் திமுக, அஇஅதிமுக, தேமுதிக, பாமக, காங்க்ரெஸ். மற்ற கட்சிகளும் கொடுத்திருக்கலாம்.
  • திமுக இந்தமுறை –  ‘செய், அல்லது செத்துமடி’ என்கிற முறையில் இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருப்பதால்தான் –  ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று, அஇஅதிமுக வாக்காளர்களுக்கும்கூட துட்டு கொடுத்திருக்கிறது – என்பது என் கருத்து.  இந்த முறை எப்படியாகவேனும் மத்திய அரசில் பங்கு பெறும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவில்லையானால் திமுக-வின்  ‘கட்டுக்கோப்பு’ சிதைக்கப்படும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதால்தான் இந்த அவல நிலைமை. இது இப்படித்தானா என்று அந்த திமுக அப்பனைக் கேட்டபோது – அதெல்லாம் பெரிய எடத்து விஷயங்க, எனக்குத் தெரியாது, நான் ஒரு அடிமட்டத் தொண்டன்தான் சார் என்றார், தொண்டைகம்ம.

பின்குறிப்பு: பாவம், படித்தவர்களுக்கு இந்தக் கையூட்டு கிடைப்பதில்லை என்பது பெரிய குறைதான்;  நம் கீபோர்ட் போராளிகளும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! ஆக — அடுத்த தேர்தலில் நம் லஞ்சம் கொடுக்கும் தீரா விடக் கட்சிகளை விட்டு ரூ 300/-க்கு ஒவ்வொருவருக்கும் புத்தகம் வாங்கக் கூப்பன்கள் கொடுக்கலாம், என்று நான் பரிந்துரை செய்கிறேன். நூதனமாக டயல்ஃபார்புக்ஸ் சேவையை உபயோகித்தும் இதனைச் செய்யலாம்.

கேள்வி என்னவென்றால் – இப்படி ஒரு வர்த்தகத் திறப்பு கிடைத்தால் என் (இதுவரை) நண்பர் பத்ரி சேஷாத்ரி இதனைச் செய்வாரா?

ஏதோ என்னாலான உபகாரம் – மெல்ல, அல்லது மெல்லாமலேயே சாகப் போகும் டாய்மொளி செம்மொலிட் டமிளுக்கு.

பின்வருத்தம்: எனக்கு யாருமே பணம் கொடுக்கவில்லை. :-( பாவிகள்.

தமிழக டொக்கு ஒன்றில் வசிக்கும் நண்பர் ஒருவரின் தேர்தல் குறித்த அனுபவம்:  Two bits on this election.

2 Responses to “திராவிட அரசியல் பிரச்சாரம் (பணம், பயம், பொய், வசீகர / நடிகக் குஞ்சாமணியபிமானம், பிரியாணி, பரோட்டா, ‘ஃபுல்,’ பலானது, பெட்ரோல், ‘டாப்அப்,’ வாக்காள விட்டேற்றித்தனம், (கொஞ்சம் குறைவாக)மதஜாதியபிமானம்) = ஓட்டு!”

  1. வைகோ Says:

    வைகோவுடைய மதிமுக? இதை நீங்கள் ஒரு கேடர் பேஸ்டு கட்சியாக குறிப்பிட்டதாக நியாபகம்.


    • நீங்கள் சொல்வது சரிதான். அந்தக் கட்சியிலும் பெரும்பாலும் ஊழல் செய்யாதவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், வைகோ ஒரு உணர்ச்சிவசப்படும் தலைவர், என்ன செய்வது.

      மற்றபடி அவர் கோல்கேட் பற்பசையோ அல்லது கோபால்(சாமி) பல்பொடியோதான் உபயோகிக்கிறார் என நினைக்கிறேன். முடிந்தால் சரியாக விசாரித்துச் சொல்லவும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s