முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
February 10, 2014
சுமார் ஒரு வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதற்கு முந்தைய பதிவான சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014) படித்தீர்களா? ஏனெனில் இந்தப் பெரியவர் தொடர்புடைய கதைதான் இது. ஆம், என் மங்கலான நினைவுகளிலிருந்துதான் இதனை எழுதுகிறேன்.
சரி. !980களின் நடுவில் இந்தப் பெரியவர் தன் மகள் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார் – அது மடிப்பாக்கம் பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்தது.
ஆக, நங்கநல்லூர் – சிதம்பரம் ஸ்டோர்ஸ் (இப்போது இது இருக்கிறதா எனத் தெரியவில்லை) சமீபம் இருந்த அவருடைய சொந்தவீடு காலியாக – அது, இரண்டாம் சுற்றில் வாடகைக்கு விட இருந்தது. குருவி போலப் பணம் சேர்த்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கடன்வாங்கி, அவரால் கட்டப்பட்ட வீடு அது. அந்த வீட்டைச் சுற்றி இருந்த தெருக்களில் பெரும்பாலும் முதலியார்களும் (சுமார் 70%), சில அய்யங்கார்களும்; ஒரிரு நாயுடுவும் நாடாரும், ஐயரும் கூட இருந்தார்கள்.
அப்போது யார் மூலமாகவோ ஒரு பள்ளி ஆசிரியர், பாவம், தன் குடும்பத்திற்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார் என நான் கேள்விப்பட்டு (ஒரு திமுகழகத் தோழன் பரிந்துரைத்தது) அந்தப் பெரியவரிடம் சொன்னேன் என நினைக்கிறேன். அவரும் ’சரி, அவங்கள வந்து பார்க்க சொல்லு, பிடிச்சிருந்தா வரட்டும், நீயே பொறுப்பெடுத்துக்கோ’ என்றார். எனக்கு அப்போது சுமார் 21/22 வயது என நினைக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-
ஆக, அந்த 35 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் (கீழக்கரை பகுதியினர் என நினைவு) வந்தார் வீட்டைப் பார்ப்பதற்கு, தன் மனைவி குழந்தையுடன்; உடனே சரி என்றார். அவர் மனைவி கண்ணீர் விட்ட மணியம், குரலெழுப்பாமல் அழுதுகொண்டேயிருந்தார். என்ன கஷ்டமோ என்று நினைத்துக்கொண்டேன்.
“முன் இருந்த வீட்டில் தொழுகை செய்யக் கூட விடமாட்டேன் என்கிறார்கள். அநியாயமாக, திடீரென்று போனவாரம் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள், குழந்தைகுட்டியுடன் நடுத் தெருவில் நிற்கிறேன். டெபாஸிட் திரும்பக் கொடுக்கமுடியாதென்றார்கள்… நான் ஒரு இந்துவாக இருந்தால் இப்படிச் செய்வார்களா? தனியார் பள்ளியாசிரியர் சம்பளத்தில் நான் என்ன செய்ய முடியும்? முஸ்லீம் என்றாலே வீடு கிடைக்கமாட்டேங்கிறது.”
பாவமாக இருந்தது. அநியாயத்துக்கு இந்தியாவில் முஸ்லீம்கள் அந்நியப் படுத்தப் படுகிறார்களே இப்படி, என்று எனக்குக் கேவலமாக இருந்தது. நானும் அரைகுறைத் தொழில்முறை மனிதவுரிமைவாதிகளின், தொழில்முறை களப்பிணியாளர்களின் பரப்புரையில் மூழ்கடிக்கப்பட்டவன் தானே? ஒரு கற்றுக்குட்டி சமுதாயச் சீர்திருத்தவாதிதானே. ஆக — எப்படியாவது, என்னளவிலாவது இதனைச் சரிசெய்யவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
-0-0-0-0-0-0-
… இவ்வளவு குறைவான வாடகையா என்று ஆச்சரியப்பட்டார். ஆனா நீங்க ஆசிரியரில்லையா என்றேன், அது எவ்வளவு புனிதமான தொழில்? என்னுடைய தாத்தாக்களெல்லாம் ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான், எனப் பெருமை பேசினேன்.
டெபாஸிட்டெல்லாம் வேண்டாமென்றேன்; நான் பெரியவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றேன்.
வீட்டை ஒழுங்காக வெச்சுக்கோங்க, அவங்க ரெண்டு வருஷத்தில திரும்பி வருவாங்க – என்றேன். சரி சார் என்று சிரித்தார்.
நான்வெஜிடேரியன் சமைக்கலாமா?
தாராளமா. அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல, சுத்தி இருக்கறவங்களுக்குத் தொந்திரவு இல்லாம பாத்துக்குங்க. திருப்பி வரும்போது சமையலறையை நல்லா கவிச்சையில்லாம கழுவிட்டா, போச்சு!
அடுத்தவாரம் பழவந்தாங்கல் ரெய்ல் நிலையத்தில் பார்த்தபோது, வெளித்தாழ்வாரத்துல விறகடுப்பு வெச்சுக்கலாமா என்று கேட்டார். இதென்ன பெரிய்ய விஷயம் சரியென்றேன். வீட்டைப் பாழாக்காமல், கரியண்டாமல் இருந்தால் சரி. ஒரு வாரத்துக்கு முன்ன்னால்தானே சுண்ணாம்பு அடித்திருக்கிறோம்.
இதில் இரு விஷயம்: சுற்று வட்டாரத்தில் ஒருவரிடமிருந்தும் (=அனைவரும் ஹிந்துக்கள்) ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. யாரும் முஸ்லீமை கொண்டுவந்து வெச்சிருக்கியே என்று சொல்லவில்லை. என்னுடைய முரட்டுபிம்பமும் பெரியவரின் கம்பீரமும் கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படியில்லை என்றுதான் தோன்றுகிறது. அயோக்கியக் களப்பிணியாளர்கள், கயமையாகச் சொல்வது போலல்லாமல், முஸ்லீம்கள் மேல், மற்ற மதச் சார்பினர்களுக்கு அசூயை, இனம்புரியாத வெறுப்பு போன்றவை எல்லாம் இல்லைதான்.
-0-0-0-0-0-0-0-0-
… ஒரே மாதத்தில் – அந்த ஆசிரியர், பெரியவரின் வீட்டின் நடுவில், சிமெண்ட் தரையில் ஒரு பெரிய குழி நோண்டி, விறகு அடுப்பு மாதிரி வைத்து, அறையின் சுவர்களெல்லாம் செப்பேடுகளாக அடித்து, அந்த வீட்டு மரப் பரண்களையெல்லாம் உடைத்து விறகாக்கி எரித்து… … சாய்ங்காலம்னா ஒங்க வீட்லேர்ந்து ஒரே புகை என்று எதிர் வீட்டு முதலியார் மாமி புகார் சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது இந்த அலங்கோலம்.
ரௌத்திரம். மாலை அவர் வீட்டிற்குச் சென்றேன். ஒரே சாம்பிராணிப் புகை மூட்டம்.
நான்கு சுவர்களில் இரண்டு சுவர்களில் முழுவதும் தாமிரப் பட்டயங்கள் அடித்து வைத்திருந்தார்கள் – அதிலெல்லாம் அரபிக் எழுத்துக்கள்… வீட்டுக் கூடத்தின் நடுவில் தோண்டிய குழியில் விறகு போட்டு ஆங்காரமாகத் தீ வளர்த்திக் கொண்டிருந்தனர் – என்னவோ ஜின்னு மங்மங் டிங்டிங் என்பது போன்ற சாத்தானைத் துரத்தும் உரத்த உச்சாடனங்கள் வேறு. அவர் பெண்டாட்டி அழுது கொண்டிருந்தார்.

இந்த ‘ஜின்னு’களைப் புரிந்துகொள்ள, பல வருடங்களுக்குப் பின்னர் நான் படித்த இப்புத்தகம், மிக உதவியாக இருந்தது…
”என்ன சார் இது?”
”நெருப்பு. பார்த்தா தெரியல?”
கோபத்தில் வெட்டியிருப்பேன்.
நல்ல வேளை – ஒன்றும் செய்யாமல் பதட்டத்துடன் திரும்பிப் போய், விவரங்களை — பெரியவரிடம் கோபத்துடனும் வெட்கத்துடனும் கண்ணில் நீர்முட்டச் சொன்னேன். அவர் சொன்னார், “நமக்குக் கெடச்ச சாயபு இப்படி! ஆனா எல்லா சாயபுக்களும் இப்படி இருக்கமாட்டாங்க இல்லயா? சும்மா கோவப்பட்டு என்ன பிரயோஜனம்?”
“என்ன சொல்றீங்க?”
“விடு, நடந்தது நடத்துடுத்து, எல்லாம் ஆண்டவன் செயல். நமக்கு லபிச்சது அவ்ளவுதான். ஆனா அவரைக் காலி பண்ண சொல்லிடு; அடுத்த தரவ விஜாரிச்சு செய்யணும் இத, ஃப்ரீயா கொடுத்தாலும் கொடு, ஆனா நல்ல குடும்பத்துக்குக் கொடு. திரும்பி சாயபுவானாலும் பரவால்ல… வீடக் காலியா விடாம யாருக்காவது உபயோகமாக இருக்கணும், சரியா?”
இரவெல்லாம் தூக்கமில்லை.
மறுநாள் காலையில், திரும்ப அந்த டீச்சரிடம், மிகவும் பிரயத்தனப் பட்டுப் பொறுமையாகப் பேசி, ஒரு மாதத்தில் காலி செய்யும் படிச் சொன்னேன். அவர் எகிறினார். அரைகுறை தக்கணியில் (எனக்கு, தக்கணி மிக நன்றாகப் பேசவரும் வேறு) அசிங்கமாகத் திட்டினார்.
ஜமாத்திலிருந்து ஆட்களைக் கூட்டி வந்து ‘செட்டில்மென்ட்’ பேசலாமென்றார், பெரியவர் ஒரு லட்சம் நஷ்டஈடு கொடுக்கவில்லையென்றால் ஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது, காலியும் செய்யமுடியாதென்றார். அவருடன் இன்னொரு அரைகுறையும் (=மச்சான்) துள்ளிக் கொண்டிருந்தான் வேறு. அவர்கள் குழந்தை பாவம் க்றீச்சிட்டு, சளி ஒழுக, புகை கண்ணைக் கரிக்க அழுது கொண்டிருந்தது.
… எனக்கு வெறுத்துவிட்டது. நான் குரலை உயர்த்தி – டேய், மரியாதையா ஒரே வாரத்தில காலி பண்ணப் போறியா, இல்ல… இழுத்தேன், பாவம் அவர் மனைவியும் குழந்தையும் எங்கேதான் போவார்கள்.
அவர், எங்க ஜமாத்தோடதான் பேசுவேன் என்றார். நான் கத்தினேன் – யோவ் ஜம்மாத்தும் இல்ல பம்மாத்தும் இல்ல இப்ப கிளம்பறியா, இல்ல பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகட்டா இப்ப…
கூட இருந்த அவருடைய மச்சான் அரைகுறை என் காலரைப் பிடிக்கவந்தான். கீழே தள்ளிவிட்டேன். ஆனால், அவன் எழுந்திருக்காமல் ‘அடிக்கிறான் காஃபிர் மாஞ்ச் சோத்’ என்று உளறிக் கொட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்! (எனக்கு எவ்வளவோ முஸ்லீம் நண்பர்கள் இருந்தனர், இருக்கின்றனர் – ஆனால் நான் முதலில் காஃபிர் என்றழைக்கப்பட்டது அன்றுதான்!)
எனக்கு இளமை, அது கொடுத்த வெறித்தைரியம் — தொடர்ந்து ரோமன் ரிங்ஸும் இதர ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளும் வெறிபோல செய்துகொண்டிருந்த காலங்கள் – உள்ளகரம் ‘அலெக்ஸ் ஜிம்’ வேறு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன், முறுக்கெடுத்த தசைகள், தெறித்த நரம்புகள்…
டேய், நீ காலி பண்ணலேன்னாக்க நடக்கறதே வேற என்றேன்.
அவர் – முடியாது, நீ என்ன வேணா புடிங்கிக்கோ என்றார். எனக்குக் காதுமடல் சூடாகி கையை ஓங்கினேன்… அடிஉதையாகியிருக்கும் – ஆனால் அவர் மனைவி (பாவப்பட்ட ஜீவன்) சினிமா மாதிரி காலில் விழுந்து விட்ருங்க அண்ணே எங்கள என்றார். பாவம் மூக்குசளி ஒழுகி வீறிட்டழுதுக் கொண்டிருந்த அவர்களுடைய குழந்தை வேறு நடுவில்.
குழந்தையைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, முடிந்தவரை நிதானப்படுத்திக்கொண்டு — பெஹன்ஜீ, எனக்கு ஒங்க மேல கோவமில்ல, ஆனா ஒங்க புருஷன் செய்யறது நியாயமில்ல என்றேன். நாளைக்குக் காலையில் 8 மணிக்கு வருவேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு போய் விடுவேன் என்றேன். அதுக்குள்ள மரியாதையாக் காலி செஞ்சிடுங்க என்று மறுபடியும் சொன்னேன்.
-0-0-0-0-0-0-0-
நான் கொதித்துக் கொண்டிருந்தேன்.
அன்றிரவு பெரியவர் சொன்னார் — அடிஉதை பைத்தியக்காரத்தனமெல்லாம் வேண்டாம், வேணும்னா ஷெரிஃப்பை கூட்டிண்டு போ என்றார், அவனுக்கு ஜமாத்துல மரியாதை உண்டு.
ஆனால் எனக்கு இவரைக் கூட்டிக்கொண்டு போய் மத்தியஸ்தம் செய்துகொள்ள விருப்பமில்லை. ஒரு விதமான விசாரிப்பும் இல்லாமல் இப்படி ஒரு கந்தறகோள காரியம் செய்து விட்டேனே என்ற ஒரு ஆழமான அவமான உணர்ச்சியில் இருந்தேன். ஆகவே, நான் தேவைமெனெக்கெட்டு ஏற்படுத்திக்கொண்ட குப்பைச் சூழ்நிலையை நானேதான் சரிசெய்து கொள்ளவேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டேன்.
ஆக அடுத்த நாள் காலை எட்டுமணிக்கே செல்லாமல், சுமார் பத்து மணிக்குச் சென்றேன். அங்கு வீடு இருந்த நிலையைப் பார்த்து விக்கித்துப் போனேன்…
வீட்டைத் திறந்துபோட்டு விட்டு, வீடெல்லாம் சாம்பலாக, சமையலறையில் மீன் எலும்புகளாக, சுவரெல்லாம் கருப்பு மண்டி, வீட்டின் நடுவில் இரண்டடி விட்ட குழியுடன், பரண்மரக்கட்டைகள் அனைத்தும், இரண்டு ஜன்னல்களும் முழுவதுமாக எரிக்கப்பட்டு (இவைதான் விறகுகள்!) – ஒரு மோசமான சுடுகாட்டைப் போல விட்டுச் சென்றிருந்தார்கள். நான்கு மின் விசிறிகளில் மூன்றின் ப்லேட்கள் கட்டையால் அடிக்கப்பட்டு மடக்கப் பட்டிருந்தன. ஸ்விட்ச் போர்டுகளெல்லாம் உடைக்கப்பட்டு வயர்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. தண்ணீர் பம்ப் எரிந்திருந்தது. அதன் கன்டென்ஸரைக் கழற்றிக்கொண்டு போயிருந்தார்கள். தண்ணீர்க்குழாய்கள் உடைக்கப்பட்டு ஒரே சிதிலங்கள்.
இந்த ஆளை முதலில், மிகவும் பரிந்துரைத்த கழகத் தோழனிடம்(!) பேசினேன். அவன் விலாங்கு மீன் போல – நான் என்ன செய்றது, நீ தான் விசாரிச்சுருக்கணும் என்றான். யோசித்தால் அவன் சொன்னது உண்மைதான்.
ஆனால், நான் கேட்டேன், ஏண்டா நீ ஒன் வீட்லயே ஒரு போர்ஷன வாடகைக்குக் கொடுத்திருக்கலாமே, ஒங்கவீடு பெரியவீடுதான. எவ்வளவு ரூமு காலியா கெடக்கு! ஏண்டா எங்கிட்ட அந்த கேடுகெட்டவன அனுப்பின? என்னை கவுத்திட்டியேடா! அவன் சொன்னான் – எங்க அப்பாருல்லாம் இப்படிச் செஞ்சாஅடிப்பாரு, எனிவே ஒனக்குத்தான் இந்தமாதிரி விவகாரமெல்லாம் பிடிக்குமே.
… அந்த ஆசிரியர் வேலை செய்ததாகச் சொல்லிக் கொண்டிருந்த பள்ளிக்குச் சென்றேன் – அவர் ஒரு வாரமாக வரவேயில்லை என்றார்கள், ஆனால் அவருடைய முந்தைய வீட்டு முகவரி கிடைத்தது. ஆலந்தூரின் காயலான்கடைப் பகுதியில் ஒரு வீடு அது. தேடிப் பிடித்துவிட்டேன். அங்கு ஒரு அதிர்ச்சி. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்.
அவர் கண்ணில் கருணை, சொன்ன கதையெல்லாம் கேட்டார். அறிவுரை நிறையக் கொடுத்தார். நல்ல மசாலா தேநீரும், சமோசாவும் – ‘எங்க வீட்லயெல்லாம் நீங்க சாப்பிடுவீங்களா?’ அறிவுரையின் சாராம்சம்: நீ விசாரித்திருக்க வேண்டும். பார்த்தால் படித்தவன் போல் இருக்கிறாய். என்ன படித்து என்ன உபயோகம். உணர்ச்சி வசப்பட்டால் இப்படித்தான் ஆகும். எனக்கு வீட்டின் மூன்று பக்கங்களிலும் ஹிந்துக்கள். அனைவரும் நெடு நாள் நண்பர்கள்தாம். ஒருவர் வீட்டு விசேஷத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அந்த ஆசிரியர் சொன்னது பொய். தினமும் இந்த ஜின்னு ஓட்டும் மாந்த்ரீக வேலைகள் செய்துகொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை காஃபிர் என்றழைத்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டான். ஒருமாத வாடகையைப் பிடித்துக்கொண்டு டெபாஸிட் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இந்த ஆளின் மச்சான் சவூதி போய்விட்டு பின்னர் பீவண்டியில் இருந்தான் – மச்சான் வந்தபின் மாமனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது – அவர்களுடையது வேறுமாதிரி இஸ்லாம். வெறுக்கும் இஸ்லாம். அவர்கள் ஸுன்னத் ஜமாத்தில் இல்லை. [வேறேதொ பெயர் சொன்னார் – எனக்கு நினைவில்லை; ஒருகால் அது தற்போதைய பன்முகஇஸ்லாமின் பரமஎதிரியான ‘ஒரே உண்மை – ஒரே வழி’ பார்வை(இன்மை) உடைய அரைகுறை தவ்ஹீத் ஜமாத் போன்றதான இயக்கமாக இருந்திருக்க வேண்டும்] நாமெல்லாம் ஒருவரையொருவர் வெறுப்பதற்கா வாழ்கிறோம். இந்த மாதிரி நாலு தறுதலைகள் போதும். இப்படி இஸ்லாமுக்கும் முஸ்லீம்களுக்கும் நிரந்தரமாகக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இந்தக் கதையைக் கேள்விப்பட்டவர்கள் யாராவது முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பார்களா?? இப்போது பார் – உன்னைப் பற்றியும் ‘டெபாஸிட்’ கொடுக்கவில்லை என்றுதான் சொல்லிக்கொண்டு இன்னொரு இளிச்சவாயனிடம் போயிருப்பான். உன்னைத் தவறாகச் சொல்லவில்லை – ஆனால் எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் தீர்க்கமாக யோசிக்கணும், விசாரிக்கணும்… டட்டடா டட்டடா டட்டடா…
வெட்கமாக இருந்தது எனக்கு – இப்படி யோசிக்காமல், தலைகுப்புற வீழ்ந்துவிட்டேனேயென்று.
-0-0-0-0-0-0-
அந்த காலகட்டங்களில், வெகு சுலபமாக மாதம் 1000 ரூபாய் வாடகை கிடைத்திருக்கும் அந்த வீட்டிற்கு. ஆனால் அந்த ஆசிரியரிடம் கேட்கப் பட்டது வெறும் ரூபாய் 150 மட்டுமே. அதையும் அவர் கொடுக்கவில்லை.
வீட்டைச் சரி செய்ய ரூபாய் 18000/- போல தன் ப்ராவிடென்ட் ஃபன்ட் பணத்தில் இருந்து செலவழித்தார் அந்தப் பெரியவர்.
மின்சாரக் கட்டணத்திற்கான பில் அடுத்த பதினைந்தாம் தேதி — ரூ 4000த்திச் சொச்சத்திற்கு வந்தது, மின்சாரத்தைச் சாப்பிட்டிருந்தால் ஒழிய இவ்வளவு அதிகமாக பில் வர சாத்தியமே இல்லை! எழவெடுத்தவர்கள் என்னதான் செய்திருப்பார்கள்?
ஒரே அசிங்கமாகி விட்டது எனக்கு. அந்தப் பெரியவரைப் பார்க்கவே எனக்கு சக்தியில்லை, எல்லாம் என் முட்டாள்தனம், என்ன எழவு பரோபகாரம் மத நல்லிணக்கம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி… என ஒரே சுயவெறுப்பில் இருந்தேன்.
-0-0-0-0-0-0-0-
அடுத்த மாதம் – அந்தப் பெரியவர், ஒரு தெலுங்கு தலித் குடும்பத்திற்கு அந்த வீட்டை 180 ரூபாய் ((மின்சாரக் கட்டணத்தையும் சேர்த்தி)) மாதவாடகைக்குக் கொடுத்தார் — இவர்கள் சுமார் பதினைந்து வருடங்கள் அந்த வீட்டில் அதே வாடகையில் இருந்தனர் – அதனை மருந்துக்குக் கூட ஏற்றவேயில்லை. “பாவம் அவன், கஷ்டப் படறான். விடு. ஏதோ நம்பளால ஆன உதவி.” இதிலும் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தன. ஆனால், எதில்தான் அவை இல்லை. மனிதனின் பேராசையும், சுலபமாகக் கிடைக்கிறதை மதிக்காத தன்மையும் (உதாரணம்: இணையத்தில் இருக்கும் சுதந்திரம்) அவன் அடிப்படை குணங்கள் தாமே.
அந்தத் தெலுங்கரின், நானும் ஒருகாலத்தில் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்த குட்டிப் பெண்குழந்தை வளர்ந்து பெரியவளாகி இப்போது டாடா கன்ஸல்டிங் ஸர்வீஸஸ் (TCS)-ல் வேலை பார்க்கிறது, திருமணத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமர்த்துப் பெண். நல்ல பிரஜையாக இருப்பாள். அவள் வாழ்க்கை சந்தோஷமாக அமையவேண்டும்.
மிகப்பல வருடங்களுக்குப் பின், சென்ற 2012 நவம்பரில் இந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். அக்காலத்தில் என்னை ‘அண்ணா’ என்று அழைத்துக்கொண்டிருந்த இது என்னை இப்போது ‘அங்கிள்’ என்று கூப்பிட்டது. என்னுடைய தர்க்கரீதியான வியாக்கியானம் என்னவென்றால் – அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எனக்கும் அந்தக் குழந்தைக்கும் ஒரே வயது வித்தியாசம்தான் – சுமார் 25 வருடம் – ஆக, மனைவியிடம் வந்து புலம்பினேன் – என்னை அங்கிள் ஆக்கிவிட்டாளே அந்தக் குட்டிப்பெண் என்று. அவள் பதிலுக்குச் சொன்னாள், “ஏன், ஒன்னை அவோ கெழக்கோட்டான்னு கூப்பிட்ருக்கணமோ?”
இந்த வீடு இப்போது கைமாறிப் போய், பல வருடங்களாகி விட்டன.
–0-0-0-0-0-0–
எனக்குப் படிப்பினைகள்:
1. தொழில்முறை களப்பிணியாளர்கள், வெறுப்புமுதல்வாதிகள், (பெரும்பாலான) மனிதவுரிமைக்காரர்கள் — இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியவர்கள். அவர்களின் பரப்புரைகள் (propaganda, unsubstantiated rumours) வசீகரமானதாகவும், சுளுவில் புரிந்துகொள்ள முடியக் கூடியதாகவும் இருக்கலாம் – ஆனால் அவைகள் நேர்மையற்றவை. சமூகத்துக்கும் தனிமனிதர்களுக்கும், நீண்டகால அளவில் கேடு விளைவிப்பவை.
2. நான், என் வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் – அதனை, ஒருவர் முஸ்லீம் என்பதால் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு அவருக்குக் கொடுக்கமாட்டேன். மாறாக – அவர் ஒரு நல்ல ஆளாக, அடிப்படை நேர்மையுள்ள மனிதனாக இருந்தால் அதுமட்டுமே போதுமானது. நன்கு விசாரித்துதான் இவ்விஷயங்களைச் செய்வேன்.
3. திராவிடக் கழகக் குஞ்சாமணிகளை நம்பவே மாட்டேன். அவர்கள் எப்போதுமே சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பேயில்லாமல் நடப்பவர்கள். மகாமகோ (பணம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும்) ஊழல்வாதிகள். மேலும், அவர்கள் வெறுப்புமுதல் வாதிகள். தமிழகத்தின், தமிழ்மக்களின், இந்தியாவின், இந்திய மக்களின் #1 எதிரிகள்.
4. பெரியவரின் சமன நிலை எனக்கு வாய்க்க நான் செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டும்.
… ஹ்ம்ம்… இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அரைகுறை மதவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அந்த முஸ்லீம் சிறுமி+தாயின் கதி என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே, பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் நம்பிய கடவுள், அவள் ஒரு பெண்ணாகிய பட்சத்தில், அவர்களை நட்டாற்றில் விட்டிருக்கமாட்டாளோ? ஆனால் அவர்களின் கடவுள், சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு ஆண். என்ன செய்வது, சொல்லுங்கள்.
எங்கேதான் போயிருப்பார்கள் இவர்கள்? நான் இவர்கள் இருவருக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது உதவி செய்திருக்கவேண்டுமோ? கேள்விகள், கேள்விகள்…
February 11, 2014 at 00:12
இதை நீங்கள் ஒரு கதையாக எழுதியிருக்கலாம்! அதில் அந்த பாவப்பட்ட மனைவி, குழந்தைகளைப் பல ஆண்டுக்குப் பிறகு தற்செயலாக சந்திப்பதாகவும், அந்த ஆள் அப்போது அடங்கி ஒடுங்கி கிடக்கிறான் அல்லது ஜெயிலுக்குப் போய் வந்தான் அல்லது எங்கோ ஓடிப் போய்விட்டான் என்கிற மாதிரி வைத்து, அந்தப் பெண் இப்போது தன் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக்கொண்டு துணிச்சலாக வாழ்ந்து வருகிறாள், அல்லது (திருந்திவிட்ட) புருஷனையும் சேர்த்துப் பராமரிக்கிறாள் என்கிற மாதிரி உங்கள் இஷ்டத்துக்கு முடிவு தந்திருக்கலாம்! அந்தப் பெண்ணைக் கதையிலாவது காப்பாற்றி இருக்கலாம்!
February 11, 2014 at 08:35
இது போல நடப்பதெல்லாம் உங்களது ராசி என்று நினைக்கிறேன். அல்லது நீங்களே வலிய தேடிப் பிடிக்கிறீர்களா?. துரியோதனனிடமும், தருமனிடமும் ஊரில் எவ்வளவுபேர் நல்லவர்கள் என்று கேட்டதுபோல் இருக்கிறது.
February 11, 2014 at 16:20
சரவணன் மற்றும் பக்கிரிசாமி ………………..
நீங்கள் சொந்தமாக ஒரு வீடு கட்டி , அதில் இந்த வீடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று போர்டு எழுதி வைத்துவிடுங்களேன்….யார் வேண்டம் என்று சொல்ல முடியும் ?
February 14, 2014 at 08:29
ஐயா சான்றோனே… முதலில் என் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு அது பற்றிச் சொன்னால் நலம். முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க வேண்டும் அல்லது கூடாது என்று நான் எதுவுமே சொல்லவில்லையே?! ராமசாமி அந்த அபலைப் பெண்ணுக்கு என்ன ஆனதோ என்று பதைப்புடன் எழுதியிருக்கிறார், ஆகவே இதை சிறுகதையாக எழுதி அவள் பிற்காலத்தில் நல்ல நிலமைக்கு வந்துவிட்டாள் (அதாவது எம்பவர்ட்) என்று எழுதியிருந்தால் அவருக்கு மனசுக்கு ஆறுதலும் நமக்கு ஒரு சுவாரசியமான சிறுகதையும் கிடைத்திருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். எனிவே, இந்த ‘அனுபவப் பதிவை’ நான் கதை படிக்கும் மனநிலையில்தான் வாசித்தேன்.
February 12, 2014 at 02:57
//சிலபல காரணங்களினால் – கண்ட, தேவையற்ற, எதிர்மறையான விஷயங்களைப் பற்றி எழுதுவதிலேயே, நிறைய நேரம் செலவழிக்கிறேன் என்பதுதான் சரி.//
மேலே உள்ளது நான் சொன்னவைகள் அல்ல.
நான் முஸ்லிம் என்றோ ஐயர் என்றோ பார்க்க மாட்டேன். ஆனால் பிரச்சனை தராமல் இருப்பார்களா என்று முடிந்தவரை விசாரிப்பேன். வாடகை விடுவதற்கு முன் நான் கறார் பேர்வழி என்று சொல்லிவிடுவேன். பிரச்சனை தந்தால் ராமசாமி அவர்கள் செய்தது போல அமைதியாக விடமாட்டேன்.
February 12, 2014 at 19:15
இது ஹிந்துக்களுக்கு [ மட்டுமே ] மத நல்லிணக்க உபதேசம் செய்யும் தளம் என்று நான் நினைக்கவில்லை…. திரு. ராமசாமி அவர்கள் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்…. போலித்தனமில்லாமல் , சரியான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என அனுகினால் , இது போன்ற பல உண்மைகள் முகத்தில் அறையும்….. என்ன செய்வது? உண்மை எப்போதும் கசப்பானது…….
February 14, 2014 at 18:54
சரவணன் அவர்களே…..
//எனிவே, இந்த ‘அனுபவப் பதிவை’ நான் கதை படிக்கும் மனநிலையில்தான் வாசித்தேன்.//
அப்போ நான் எழுதியது சரிதானே…?
February 15, 2014 at 13:52
ரயில்வே கேட்டிற்கு அந்தபக்கம் உள்ள ஆலந்தூரில் பிறந்து வளர்ந்தவன் நான்.ஆலந்தூர்,ஆதம்பாக்கம் இரு ஊர்களிலும் பல வருடங்கள் பல வாடகை வீடுகளில் வசித்தவன்.
தங்கள் தந்தையை போன்ற சாதி,மதம் பார்க்காமல் வாழ்ந்த அரிதான (அன்றைய காலகட்டத்தை விட இன்று சாதி,மதம் பார்க்காமல் வீடு வாடகைக்கு விடுபவர்கள் சில மடங்காவது அதிகம் சான்றோன் சார்)மனிதர்களை பற்றி தெரியும் போது எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கிறது.
அதே பகுதியில் வாடகையும் தராமல், காலியும் செய்யாமல் பல வருடங்களாக வழக்காடி கொண்டிருக்கும் உறவினர்கள் பலரின் கதையும் எனக்கு தெரியும் சார்.அதனால் உறவினர்களுக்கு வீடு வாடகைக்கு விட கூடாது என்ற எண்ணம் வருமாறு எழுதுவோமா
February 27, 2014 at 10:58
ம்……. ஒரு விக்ஞானியின் ராமாயண கந்தறகோளத்தைத் துவைத்து வெளுக்கும் கார்யத்தில் இருந்ததால் தளம் பக்கம் வரவில்லை.
ஒரே மூச்சில் சாமினாதன் சார் வ்யாசம் முதல் வாசித்து வருகிறேன். எந்தரோ மஹானுபாவுலு. சார், அந்த நாயர் பற்றி எழுதிவிட்டீர்களா என்று பார்த்தேன். ஆப்படவில்லை. மிஸ் செய்யவில்லை என நினைக்கிறேன்.
எல்லாம் உங்கள் அந்த சமயத்து க்ரஹசாரம்.
இருபது வருஷம் முன்பு நைனிதாலில் இருந்தபோது என்னுடைய பக்கத்து வீட்டு முஸல்மான் மித்ரர் சைவச் சாப்படு சாப்பிடும் எனக்கு அசௌகர்யம் இருக்கக்கூடாது என்று நாங்கள் வீட்டிலில்லாத சமயம் எது ஷாப்பிங்க் போகும் சமயம் எது என்று விசாரித்து மாமிசம் சமைப்பார். ஒருமுறை கூட மாம்ச நெடி வந்து நாங்கள் அவஸ்தைப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஐந்து வருஷம் என நினைவு. வீடு காலிசெய்யும் போது சாமான் செட்டுகளைக் கட்ட அவர் செய்த உபகாரம் என்றென்றும் நினைவில் நிற்கும்.
உலகம் ஒரே மாதிரியானதல்லவே.
வைஷ்ணவ போஜனம் (சைவ உணவு) என்ற விஷயத்தில் கறாரான ஹரியாணா காரர்கள் (ஜாட், குஜ்ஜர் எல்லோரும் அடக்கம்) வீட்டை வாடகை விடு முன் மாஸ் மச்லி (மாமிசம், மீன்) சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டுவிட்டுத் தான் வாடகைக்கு விடுவர். மதறாஸி என்றால் வாடகை கூட குறைவே. எந்த மதமாக இருந்தால் என்ன அடுத்துவருக்கு இடைஞ்சல் தராது இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் சுகமாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இருக்கலாம் தான்.
April 17, 2019 at 17:45
[…] […]
April 7, 2020 at 14:50
[…] […]
March 28, 2022 at 11:39
[…] […]