சாமினாதன்: மறுசுழற்சி

February 13, 2014

(அல்லது) खेल खतम!

இந்தத் தொகுப்பில் முந்தைய பதிவுகள்:  சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள்  (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? (10/02/2014)

பெரியவர்புராணம் தொடர்கிறது…

… அந்தப் பெரியவருக்கு என்னைப் பற்றி – 1) முரடன், 2) பொறுப்பற்றவன், 3) புத்தகங்களுக்கும் வாழ்க்கைக்குமுள்ள வித்யாசங்களைத் துளிக்கூட உணராதவன் ( ‘சிறு வயதில் படிக்கக்கூடாத புத்தகங்களை, தேவைமெனக்கெட்டுப் படித்து வேதாந்தியானவன்’), 4) ரொம்பத் தலைக்கனம் பிடித்தவன் (’பெரியவங்க கிட்ட மட்டு மரியாதையில்லாதவன்’), 5) படித்த(!) படிப்புக்கான(!!) வேலை, சம்பாத்தியம் என்றில்லாமல் கிறுக்குத்தனமாக நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் 6) பணத்துக்கு உரிய மரியாதையைக் கொடுக்காதவன் (‘வரும் லக்ஷ்மியை உதாசீனம் செய்பவன்’) 7) வேலையற்றவேலைகளில் ஈடுபடுபவன் — — என்றெல்லாம் எண்ணமுண்டு என்று எனக்குத் தெரியும். அவரே பலமுறை நேரடியாக என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எனக்கும், மேற்கண்ட ஜாபிதாவில் என்னைப் பற்றி மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவதைத் தவிர  இதே சுய மதிப்பீடுதான். ஆகவே, அவர் இந்த ஜாபிதாவை ஆரம்பிக்கும்போதெல்லாம் தந்திரோபாயமாக — நீங்கள் சொல்வது சரிதான், இப்போது என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று பதிலளித்து விடுவேன். அவரும்  வாயடைத்துப்போய் அப்போதைக்கு என்னை விட்டுவிடுவார்.

பிரச்சினை என்னவென்றால், அவர் நோக்கில் – நான்,  மேற்படிப்பும் படிக்காமல், ‘ஸெட்டில்’ம்  ஆகாமல், அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு சினிமா இலக்கியம் என அலைந்து கொண்டிருந்தது அவருக்கு உவப்பானதாக இல்லை. இத்தனைக்கும், நான் என்னுடைய பதினேழுச் சொச்ச வயதிலிருந்து அவரிடம் பணரீதியாகவோ, மனரீதியாகவோ கடமைப் பட்டிருக்கவில்லை. 

பாவம், என்னைப் புரிந்துகொள்ள கடுமையாக முயற்சி செய்திருக்கிறார் – ஆனால் அவருக்குத் தெரியாது, நானே என்னைப் புரிந்துகொள்ள முயற்சிகியற்சி செய்யும் பாவத்திற்கே போவதில்லை என்பது…

… ஆக – பொறுக்கமுடியாத அளவில் எனக்கு அறிவுரைகள் பல கொடுத்திருக்கிறார் இந்தப் பெரியவர். தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு பைத்தியம் பிடித்து, வேட்டியைக் கிழித்துக்கொண்டு அலையப்போகிறேன் என்று, கோபத்தில் எனக்கு ஆசிர்வாதமெல்லாம் பலமுறை செய்திருக்கிறார். ஏறக்குறைய அவர் சொன்னது போலவே பலமுறை  ஆகியிருக்கிறேன் கூட;  அவர் சாபம் கொடுத்தது பலித்துவிடுமோ என்ற பயத்தால்தான் லுங்கி கட்ட ஆரம்பித்தேனோ என்ன இழவோ…

ஆனால், என் வாழ்க்கையில் நான் செய்த ஒரேஒரு  நல்ல, உருப்படியான காரியம் என் மனைவியைக் கைப்பிடித்ததுதான் என்று சொல்லியிருக்கிறார். “ஆனா, அவள நெனச்சாதான் பாவமா இருக்கு! பாவம் அது, புத்திசாலிப் பெண்ணா இருந்தாலும்,  ஒன்கிட்ட  போய் மாட்டிண்டிடுத்து!”

-0-0-0-0-0-0-0-0-0-

கடந்த காலங்களில் — இந்தப் பெரியவரைப் பார்க்கும் போது, பேசிக் கொண்டிருக்கும்போது – சில சமயங்களில் விஷயஞானத்துக்காக அவர் தொடர்ந்து  கேள்விகள் கேட்பதும் (’இப்ப என்ன பண்ணிண்ட்ருக்கே?’ ‘ஒன்னோட சேவை எப்படி இருக்கு?’ ‘பொண்டாட்டி கொழந்தைகளோட சௌக்கியமா இருக்கியா?’ ‘பணம், செலவுக்கு என்ன பண்ற?’ ‘எதிர்காலத்துக்கு சேமிப்புன்னு ஏதாவது இருக்கா?’ ‘’உன் குழந்தைகள் மேற்படிப்புக்கு என்ன செய்யப்போற?’ ‘ஒடம்புக்கு வந்துதுன்னா என்ன செய்வே?’ … …), அதே கேள்விகளை ஓரிருமாத இடைவெளிகளில் கேட்டு நோண்டுவதும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் (அவர் மனைவியைப் பொறுத்தவரையான) என்னால் புரிந்துகொள்ளவே முடியாத ஆணாதிக்க மனப்பான்மையும், அவர் குழந்தைகளின் சிறு வயதில் பரோபகார வெளிவேலைகளுக்காக அலைந்து திரிந்து அயர்வாகி – ஆனால் குழந்தைகள்/மனைவி மேல் எரிந்துவிழுந்து, அவர்களை அம்போ என்று விட்டமையும் எனக்குச் சுளிப்பூட்டுபவையும் அசாத்தியமாகக் கோபமூட்டுபவையும், இவை காரணமாகச் சூடான வாக்குவாதங்களும், சில சமயம் ரசக்குறைவாகக் கூட மாறிவிட்டிருக்கின்றனதாம்.

… ஆனால், கடந்த சில வருடங்களாக அப்படியில்லை. ஏனெனில், எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. ஆக,  அய்யய்யோ! எனக்கும் இந்த விவேக  இழவு வந்து தொலைந்துவிட்டதா என்ன?

எது எப்படியோ… என் கோபதாபங்கள் அற்பமாக இருக்கின்றன. என் கண்ணுக்குப் புலப்படாமல், சதா நான் என் தலைமேல் தூக்கிக் கொண்டிருக்கும் கனமான முள்குத்தும்மூட்டையிலிருந்து கசடுகளை அகற்றவேண்டும். அமைதியாக வேண்டும். குழந்தையின் ஹ்ருதயம் கைப்பட வேண்டும்.

ஆக, இந்தப் பெரியவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியவை – வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, பிடித்த விஷயங்களை மனத் திருப்தியுடன் செய்வதைப் பற்றி, பணக் கவலையே இல்லாமலிருப்பது பற்றி, மனோதைரியத்தைப் பற்றி, தமிழகத்தின் சாபக்கேடுகளாக நீக்கமற நிறைந்திருக்கும் சர்வவியாபிகளான திராவிடச் சராசரி உதிரிகளை எதிர்கொள்வதைப் பற்றி, என…  நிறைய  இருக்கின்றன.

-0-0-0-0-0-

மகன் தந்தைக்களிக்கும் நன்றி, ‘இவன், தந்தைக்கு
என் நோற்றான் கொல்’ எனும் சொல்.

(தெருக்குரல், அதிகாரம்: பெற்றோர்ப் பேறு, குரல்: 70)

குறிப்பு: தந்தை = தாய் எனவும் விரித்துப் படித்துக் கொள்ளலாம்.

-0-0-0-0-0-0-0-

பள்ளி வளாகத்தில் என்வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த  பெரியவருக்கு — சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, வழக்கமான பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் கொஞ்சம் குறைய ஆரம்பித்தன. அடிப்படையில் மிகவும் மதிகூர்மையும், சாதுர்யமும் நேர்த்தியும் உடைய அவருடைய செயல்பாடுகளும் சிந்தனைகளும் தள்ளாட ஆரம்பித்தன. அடிக்கடி அயர்வடைய ஆரம்பித்தார். ஒரு நாளுக்கு 15 மணிநேரம் தூக்கம். சில முக்கியமான பரிசோதனைகள் செய்து அவரை ஒரு இதய மருத்துவரிடம் காண்பித்தபோது, அவருடைய இதயத்தின் வேலைத்திறன் குறைந்துகொண்டு வருகிறது என்பதை அறிந்துகொண்டோம். அந்த மருத்துவர், பெரியவருடைய வயதையும் இன்னபிற உடல்ரீதியான ஸ்திதியையும் மனதில் கொண்டு – வீட்டிலேயே வைத்துக்கொண்டு, குறைந்த பட்ச மருந்துகள் கொடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

எனக்கும் சரி, பெரியவருக்கும் சரி – வாழ்வை, எப்படியாவது, எப்பாடு பட்டாவது நீட்டித்துக்கொண்டே இருக்க விருப்பமில்லை. வேண்டுமளவு வாழ்ந்தாகி விட்டது என்ற எண்ணம். இருக்கும், மீதமிருக்கும் அஸ்தமன வாழ்க்கையைச் சந்தோஷமாக, திருப்தியுடன் கழித்தால் போதும்… ஆக, என் அம்மாவுக்கும், தம்பிக்கும், அக்காவுக்கும் எங்கள் முடிவைச் சொல்லி, அன்றிலிருந்து முடிந்த வரை பெரியவரின் அருகிலேயே நானும் என் அம்மாவும் இருந்தோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் மனைவியும் குழந்தைகளும் கூட இருந்தார்கள். முடிந்தபோதெல்லாம் நிறையப் பழங்கதைகள் பேசினோம். மலரும் + அலறும் நினைவுகள். எதிர்காலத்தைப் பற்றியும் பேசினோம். (ஆக, அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஆனால் எனக்குத் தூக்கம் வராத சமயத்தில் சுமார் 40 புத்தகங்களைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது, ஒரு ஊக்கபோனஸ்)

… அவ்வப்போது அவர் நினைவுச் சரடுகளை மூடுபனி ஆட்கொள்ளும்: என்னை, என் தம்பி என நினைத்துக் கொள்வார். அப்போது என் தம்பிபோலவே பேசிக் கொண்டிருப்பேன். எப்ப ஒன்னோட விமானம் போய்ச் சேரும்? சில சமயங்களில் – காங்கிரெஸ் ஆட்சி (!) வந்தா தமிழ் நாடு சரியாகிவிடும். காமராஜ் ராஜாஜி சேர்ந்து பேசற மீட்டிங் போக நேரமாச்சுடா.

திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, ஒன்மேல இருந்த போலீஸ் கோர்ட் கேஸ்கள் என்னாச்சு என்பார். அப்பா, அதுக்கெல்லாம் நீ கவலையே படாதே, எனக்கு தில் இருக்கு, நான் பாத்துக்கறேன் என்பேன். நடு இரவில் எழுந்துகொண்டு, ஒரு தடவை ஒரு ராமகிருஷ்ணர் கதை… இருந்தாலும் மூடுபனி விலகும்போது நகைச்சுவையை ரசித்தார். சாதாரணமாகப் பேசினார். …ஒரு சமயம், இரவு விளக்கின் மங்கலான ஒளியில் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டி, புன்சிரிப்புடன் ஆங்கிலத்தில்  ‘நான் காத்துக் கொண்டிருக்கிறேன்…

கடைசி ஆறுவாரங்களில் நடமாடுவதற்கு, குளிப்பதற்கு என, அவருக்குக் கொஞ்சம் உதவி தேவைப்பட்டது.

வழக்கம்போலக் குளிப்பாட்டி, காலில் கொஞ்சம் தேங்காயெண்ணையைத் தடவும்போது, குறும்புச் சிரிப்புடன் சொன்னார் – பாத்தியா, ஒன்ன என் கால்ல விழ வெச்சுட்டேன்.  நான் சொன்னேன் – அதுக்கென்ன, நீயென்ன அந்த கந்தறகோளக் கருணாநிதியா, இல்லை புர்ச்சித்தலைவிஅம்மா65வா? நானும் என்ன, ஒரு கறைவேட்டிக் காரனா, உன் காலடியில் அசிங்கப்பட்டுக்கொண்டு, சுயகாரியத்துக்காக மானங்கெட்டு கூழைக்கும்பிடு போட்டு விழுந்து புரள்வதற்கு? தாராளமாக  உன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறேன்.  நான் உன் காலில் விழும் தகுதி உனக்கும் இருக்கிறது, எனக்கும் இருக்கிறது – திருப்தியா??

சிரித்துக்கொண்டார்.

-0-0-0-0-0-0-0-

… இப்படியாகத்தானே பல கல்யாண குணங்களை உடைய, இவற்றுக்கு மேலும் பல குணாதிசியங்களை உள்ளடக்கிய, நான் மிகவும் மதித்த அந்த 81 வயதுப் பெரியவர், ஜனவரி 30ஆம் தேதி, அதிகாலை 1 மணிவாக்கில், அமைதியாக, தன் தூக்கத்திலேயே போய்ச் சேர்ந்தார். அவர் முகத்தில், சங்கடப் பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை; நிர்மலமாகவே இருந்தது. ப்ர்ஹதாரண்யக உபநிஷதம் சொல்வது போல, ம்ருத்யோர்மா அம்ரிதம்கமய.

அல்லது, அவர் அடிக்கடி சொல்வது போல – கேல் கதம். (= ஹிந்தி மொழியில் ‘விளையாட்டு/ஆட்டம் முடிந்தது’ = खेल खतम,  khel khatham => the game is over)

-0-0-0-0-0-0-

அவர் இறந்த நாள் ஒரு அமாவாசை (தை 17) – அவர் காலம் முடிந்தது என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்தவுடன், சடல விறைப்பு (‘ரிகர் மார்டிஸ்’) ஆரம்பிப்பதற்குள், உடற்பாகங்களைச் சரிசெய்துவிட்டு, என் தம்பிக்கும் அக்காளுக்கும், மட்டும் உடனடியாகத் தகவல் தெரிவித்தேன். (அக்காள் அமெரிக்காவில் – அவளை வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். தம்பி மாலத்தீவுகளில் வசிப்பவன் – அவனையும் வரவேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால் அவன் கலங்கியமுகக் குடும்பத்துடன் மதியம் வந்தான்)

… என் மனைவியும் அம்மாவும் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவிற்கு மனோதிடமும், விவேகமும் அதிகம். புண்ணியத்தின் சம்பளமும் மரணம்தான் என்பதை உணர்ந்தவர். அலகிலா பிரபஞ்ச விளையாட்டின் ஒரு விசேஷமற்ற  சாதாரணக் கூறுதான் வாழ்க்கை என்பதை அறிந்தவர். ஆக…

அப்போது அதிகாலையாதலால் வேறொரு வேலையும் செய்வதற்கு இல்லை. ஆக, வெளியே கிராமத்தில் குட்டிப்பையன்கள் க்ரிக்கெட் விளையாடுமிடத்திற்குப் போய் வானத்தைப் பார்த்தேன்: இப்படித்தான் இருந்தது அது…

என் இருப்பிடத்திற்கான அட்ச, தீர்க்க ரேகைகளின்படியான ஹெவன்ஸ்-அபவ்.காம் தளத்தின் வழி 30 ஜனவரி, 2014 காலை 00:54 மணிக்கான வானத்தின் படம்...

என் இருப்பிடத்திற்கான அட்ச, தீர்க்க ரேகைகளின்படியான ஹெவன்ஸ்-அபவ்.காம் தளத்தின் வழி 30 ஜனவரி, 2014 காலை 00:54 மணிக்கான வானத்தின் படம்…

எங்கள் பகுதி வனாந்தரங்களால் சூழப்பட்டதால் கும்மிருட்டு; ஆனால் மேகங்களற்ற வானம் முழுவதும் விண்மீன்களும், வியாழனும், செவ்வாயும் – ஒரே ஜாஜ்வல்யம். சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. குளிரும், இனிமையும் அழகும், வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-0-

நான் சனாதன தர்மத்தின் தரிசனங்களில் (ஓரளவுக்கு ஆழ்ந்து) நெக்குருகியிருப்பவன்,  நாஸதீய ஸூக்தத்திற்கு நடனமாடுபவன், கடவுள் நம்பிக்கையற்றவன். ஆனாலும்,  இந்தப் பெரியவருக்கு அவர் நம்பிய ‘கோடையிடிக் குமரனை’ உலுக்கியெடுத்து,  தாம் விரும்பும் இடத்தை அடைவதற்கு அவருக்குச் சகல உரிமைகளும் – மேலும் முக்கியமாக, பாத்தியதையும் இருக்கின்றன என்பதை அறிவேன்.

மேலும், முன்னமே என் அம்மாவுடன், அப்பாவுடனும் பேசியிருந்தேன் – வாழும்போது முடிந்தவரை நல்லபடியாக, மரியாதையுடன் பார்த்துக்கொள்வேன் – ஆனால் இறப்பிற்குப் பின் ஒரு விதமான பித்ர் காரியங்களையும் செய்யப் போவதில்லை என்று. நிச்சயம் — குளிரூட்டப்பட்ட பெட்டி, ஃபார்மால்டிஹைட் திரவத்தில் பாடம் செய்வது, கண்டமேனிக்கும் மாலை போடுவது, உரக்க அழுவது, மார்பில் அடித்துக்கொள்வது, வீட்டில்குப்பை ரோட்டில்குப்பை போடுவது என்று அவமானப்  படுத்தமாட்டேனென்று. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிந்தவரை அழகுணர்ச்சியுடன், மறுசுழற்சி செய்து விடுவேனென்று.

… ஆக, காலையில் சுமார் 7 மணிவாக்கில் எங்களுடைய சில நண்பர்களைத் தொடர்பு கொண்டோம். ஸஞ்சீவ்,  பாலா, கேப்றியலா, மைக்கெல், பிரபா, ஐவனோவா, ராஜவேணி, ஸூஸீ, ராஜன் எனப் பலர் ஓடி வந்து உதவினார்கள். அவர்கள்தாம் தேவைப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டார்கள். கூட, பள்ளியில் என்னுடன் பணிசெய்பவர்களும்தான். இவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டிருக்கிறேன்.

என் அப்பாவுடைய — சென்னையிலிருக்கும் ஆப்த நாயர் நண்பருக்குத் தெரிவித்திருந்தேன். அவர் குடும்பத்துடன் மதியம் வந்தார். ‘அய்ரு என்ன வுட்டுட்டு போய்ட்டார்டா!’  (இவரும், பெரியவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் இதற்கு முந்தைய பதிவில் இருக்கிறது)

காலை 8.30 மணி: வழக்கம்போல பள்ளி வளாகத்தைக் குழந்தைகளுடன் பெருக்கிச் சுத்தம்செய்து பின்னர் ஒரு அறிவியல் கதையைச் சொல்லிவிட்டு, என்னுடைய பள்ளி அஸ்ஸெம்ப்ளியில், குழந்தைகளுக்குச்  செய்தியை அறிவித்தேன். ஆகவே, சில நாட்கள் நான் அவர்களுடன் கற்றுக்கொள்ள முடியாதென்றேன்.

காலை பத்துமணி முதல் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் இருக்கும் ஏறக்குறைய அனைத்துப் பூச்செடிகளின் பூக்களையும் பறித்துக் கொணர்ந்து வரிசையில் நின்ற மணியம்  – ஒவ்வொருவராகப் பெரியவரைச் சுற்றி அவற்றை வைத்தார்கள். பின்னர் சுற்றி வந்து தொட்டுத் தொட்டுப் பார்த்து, என்னிடம் வந்து – ‘அவ்ளோதானா, பயமில்லையா?’ ‘ஏன் இவ்ளோ சில்லுன்னு இருக்கு?’  ‘ஏன் ராம், நீங்க அழமாட்டீங்களா?’ ‘ஏன் மைக் வெக்கல?’ ‘பொதைப்பீங்களா எரிப்பீங்களா?’ ‘அவரு சிரிக்கறமாரியே இருக்குல்ல?’ ‘அப்போ, நாளைக்கு அஸ்ஸெம்ப்ளில யார் பேசுவாங்க?’ ‘ஒங்களுக்கு டீ கொண்டுவரவா?’ ‘ நாளைக்கும்  க்லாஸ் கெடயாதா?’ ‘ரிகர் மார்டிஸ்-னா என்ன?’ … … அவர்கள் கேள்விஞானிகள், வேறென்ன சொல்ல. ஆக,  பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.  பின்புலத்தில் வெகுசன்னமாக எம் எஸ் சுப்பலக்ஷ்மி அவர்களின் பஜகோவிந்தம் ஓடிக்கொண்டிருந்தது. ஆம், இலக்கணம் ஒருபோதும் காப்பாற்றாதுதான்.

ஓரிரண்டு உறவினர்கள் வந்திருந்தார்கள். என்னைப் பற்றி நன்றாகவே தெரியுமாதலால், பொதுவாக கப்சிப்பென்று இருந்தார்கள். அதில் ஒரு அம்மணி ‘… … கல் நெஞ்சு’ என்று சொல்வது காதில் விழுந்தது.

மாலை 4 மணி வாக்கில் உடலை, பக்கத்திலுள்ள அழகான மயானத்துக்குக் கொண்டு சென்றோம். மைக்கெல்-பாலா குழுவினர் எளிமையாகவும் அழகாகவும் சிதைமேடையை அலங்கரித்திருந்தனர். புதுச்சேரிக் கருவடிக்குப்ப மயானத்திலிருந்து வந்திருந்த ஆனந்தராஜ் + சந்தானம் குழுவினர், மிகக்குறைந்த அளவு வேலிகாத்தான் (Prosopis juliflora) மர விறகுகளையும் வறட்டிகளையும் வைத்துச் சுற்றி அலுமினா செங்கற்களை வைத்து, வெளிக்காற்று கீழடுக்குகளின் வழியாக உள்ளேவரவும், குறைந்த அளவு புகை வெளியேறவும் சீராக வழிகள் அமைத்து, மேலே வைக்கோல், அதன்மேல் ஒரு மெலிதான களிமண் அடுக்கு என ஒரு உருக்குலைபோல மிக நேர்த்தியுடன் தயார் செய்த சிதையை, அமைதி நிரம்பிய சூழலில் எரியூட்டினேன்.

அடிப்படையில் உருக்குத்தொழிலில் பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள எனக்கு, அழகாக, அரைமணி நேரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த உலையின் நிர்மாணம் மிகத் திருப்திதந்தது. செய்நேர்த்தி மிக்க கலைஞர்களை, நேரடியாக, அவர்கள் சுயஅர்ப்பணிப்புடன் வேலை செய்யும்போதே பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுவும் ஒரு நடனம்தான்.

खेल खतम.

-0-0-0-0-0-0-0-

இரவு சுமார் 9:30 மணிக்கு அந்த மயானம் வழியாகத் திரும்பச் செல்ல நேர்ந்தது. வெடவெடக்கும் குளிர்ச்சியான சூழலில் (இக்காலங்களில், இப்பகுதிகளில் பனி மிகவும் அதிகம்) ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அக்னி செய்யும் மறுசுழற்சி விந்தை என்பது ஒரு விவரிக்கமுடியாத அழகுதான்.

வீட்டிற்குப் போய், மானுடசரீரத்தைக் கட்டமைக்கும் அணுக்களின் மறுசுழற்சியைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துக் கணக்குபோட்டுப் பார்த்தேன். வெகு சுவாரசியமாக இருந்தது. ஒரு பின்புலத்துக்காக, கீழே சில ’குத்துமதிப்பான’ புள்ளிவிவரங்களைக் கொடுக்கிறேன்: (தவறுகளைச் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

ஸீரோ டிகிரி வெப்ப அளவில் இருக்கும் ஒரு கன சென்டிமீட்டர் காற்றில், ஏறக்குறைய 45 பில்லியன்பில்லியன் அணுக்கள் இருக்கும். அதாவது,  45,000,000,000,000,000,000 அணுக்கள். இதுவே ஒரு மகாமகோ எண். சாதாரண தட்பவெப்பத்தில், அழுத்தத்தில் ஒரு கன மீட்டர் காற்றின் எடை சுமார் 1.2 கிலோ அளவுக்கு இருக்கும். ஒரு கன மீட்டரில், 1000000 கன சென்டிமீட்டர்கள்.

என் அப்பாவின் உடலின் கொள்ளளவு, ஏறக்குறைய  = 0.072 கனமீட்டர், அதாவது 72 லிட்டர்கள். அதாவது 72000 கன சென்டிமீட்டர்கள்.

மனித உடம்பில் கிலோவுக்கு ஏறத்தாழ 10^^26 அணுக்கள் இருக்கும். அதாவது 100,000,000,000,000,000,000,000,000 அணுக்கள். என் அப்பாவின் உடல் சுமார் 72 கிலோ எடையுடையதாக இருந்தது. . ஆக, அவர் உடலில் ஏறத்தாழ 7,200,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் அதாவது 7.2பில்லியன்பில்லியன்பில்லியன்  இருந்திருக்கவேண்டும்.

ஆக, அவருடைய உடலில் ஒரு கன சென்டிமீட்டர் கொள்ளளவில் இருந்திருக்கக் கூடிய அணுக்கள் = 7,200,000,000,000,000,000,000,000,000/72000; அதாவது 100,000,000,000,000,000,000,000 அணுக்கள்.

மறுபடியும், ஒரு ஒப்பிடலுக்காக, இந்த முக்கியமான புள்ளிவிவரங்கள்: ஒரு கன சென்டிமீட்டர் காற்றில் ஏறக்குறைய 45 பில்லியன்பில்லியன் அணுக்கள். ஒரு கன சென்டிமீட்டர் உடலில் ஏறக்குறைய ஒருலட்சம் பில்லியன்பில்லியன் அணுக்கள்!

… எரியூட்டப்பட்டபின் சுதந்திரம் கொடுக்கப்பட்ட, என் அப்பாவின் உடலில் இருந்த இந்த அணுக்களானவை, காற்றினாலும் மழையினாலும் அலைக்கழிக்கப்பட்டு, மரங்களாலும் செடிகளாலும் நுண்ணுயிரிகளாலும் மற்ற ஜீவராசிகளாலும் உட்கொள்ளப்பட்டு, மறுபடியும் சிதறடிக்கப்பட்டு, மறுபடியும் தொகுக்கப்பட்டு – மறுபடியும் மறுபடியும் இவ்வாறு செய்யப்பட்டு சுமார் 600 வருடங்களிற்குப் பிறகு இப்பூவலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளிலும் போய்ச் சேரும்.  நான் மிகவும் மதிக்கும் ரிச்சர்ட் ஃபெய்ன்மன், மார்ட்டின் ரீஸ், பால் டேவிஸ் [1]  போன்றவர்களுடைய தருக்கத்தையும் கணக்கையும் நான் புரிந்துகொண்டபடி, சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு பில்லியன் அணுக்கள் என் அப்பாவின் உடலில் தியானம் செய்து கொண்டிருந்தவையாகத் தான் இருக்கும். ஆக, தம்மளவில் இந்த அணுக்கள் போற்றப்பட வேண்டியவைதாம்.

ஆகவே, இவ்வணுக்களின் மறுசுழற்சிதான் ப்ரஹ்ம்மம். இந்த ப்ர்ஹ்ம்மத்திலிருந்து தான் நாம் அனைவரும் (உயர்திணை, அஃறிணை உள்ளிட்ட பருப்பொருள் உடைய அனைவரும், அனைத்தும்) உதித்தோம்.  நம் காலம் முடிந்தபின், இந்த ப்ர்ஹ்மத்திற்கே மறுபடியும் மறுசுழற்சி செய்யப் படுவோம். இதுதான் ஆரம்பமும் முடிவுமற்று கடந்த சுமார் 14.7 பில்லியன் வருடங்களாக, ஒரு யோகம் போல,  நடந்து வரும் நியமம்…  இதுதான் என்னைப் பொறுத்தவரை, ப்ரபஞ்ச தாத்பர்யம்.

… என் தம்பிக்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோது, என்னடா இவன் கிறுக்கன், அச்சந்தர்ப்பமாக உளறிக்கொண்டிருக்கிறான் (அது உண்மையும் கூட) என்றுதான் நினைத்திருப்பான். ஆனால், பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தான், பாவம். ஹ்ம்ம்.

-0-0-0-0-0-0-0-0-

அடுத்த நாள் என் தம்பியுடன் சென்று கொஞ்சம் சாம்பலையும் எரிந்து சாம்பலாகாமல் இருந்த சிறு எலும்புத் துண்டுகளையும் சட்டிகளில் எடுத்துக் கொண்டோம். நான் சொன்னேன், எப்போது முடிகிறதோ அப்போது தனுஷ்கோடிக்கும் வாராணசிக்கும் சென்று அஸ்தியைக் கரைக்கலாம் என்று. எனக்கு, மானுடத்தின் புராதனச் சின்னங்களின்மீதும், தொன்மங்களிடமும், பாரம்பரியங்களின் அடிப்படைக் கூறுகளிடமும் கொஞ்சம் பித்துதான், ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால், திரும்பிப் போகும்போது, அவன் கொஞ்சம் தயங்கித் தயங்கி, டேய், நாம் காவிரியில் அஸ்தியைக் கரைக்கலாமா, அது ஒரு புண்ணிய நதிதானேடே என்றான். அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆக, எனக்கே  ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஒப்புக் கொண்டேன், எப்படியும் இதுவும் ஒரு அழகான இன்னொரு  மறுசுழற்சி முறைதானே! ஆக, சில நாட்கள் கழித்து ஸ்ரீரங்கத்து அம்மா மண்டபத்துக்குச் சென்றோம். கிழிந்த கோமணம் போல அலுப்புடனும் அழுக்குடனும் ஓடிக்கொண்டிருந்த சோம்பேறிக் காவிரியில் அஸ்தியைக் கரைத்தோம். முழுக்கு போட்டோம். அவனுக்குக் கொஞ்சமாவது திருப்தி. பாவம்.

எனக்கு நதிகளின் மீதும் காதல்தான். நான் என்ன நொள்ளை சொன்னாலும், ‘நடந்தாய் வாழி காவேரி’யின் அழகே அழகுதான்… என் சிறுபிராயத்தில் எவ்வளவு தடவை ஸ்ரீனிவாசநல்லூர் (அக்கரையில் திம்மாச்சுவரம் எனும் திம்மாச்சிபுரம் என நினைவு) அகண்ட காவேரியில் குளித்திருப்பேன் நான்…

ஆனால், திடுக்கிடும்  வகையில் ஸ்ரீரங்கம் மிகச் சுத்தமாக இருந்தது. என் நினைவுகளில் இது இப்படி இருந்ததில்லை. ஆக, அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஜெ! அம்மா நாமம் வாழ்க.

-0-0-0-0-0-0-0-

ஒரு விதமான பித்ர் காரியமும் அல்லது நீத்தார்கடனும் செய்வதாக இல்லை. ஆனால், எங்கள் குடும்பத்தினால் ஆனதை, நான் வேலை செய்யும் பள்ளிக்குக் கொடுக்கலாம் என இருக்கிறோம். பெரியவர் இதுபோன்ற செயல்களைத்தான் விரும்பியிருப்பார்.

… ஆக, கேல் கதம்? இல்லையில்லை. ப்ரபஞ்ச விளையாட்டு தொடரும்தான்…

-0-0-0-0-0-0-0-

[1] அணு, உடல், எண்ணிக்கை விஷயங்களுக்கு உதவிய புத்தகங்கள்:  Just Six Numbers: The Deep Forces that Shape the Universe / Martin Rees / Basic Books / 1999,  Almost Everyone’s Guide to Science / John Gribbin / Phoenix / 1999, The Fifth Miracle / Paul Davis / Simon & Schuster / 2000, Six Easy Pieces: Essentials of Physics Explained by Its Most Brilliant Teacher / Richard Feynman / Basic Books / 2011;  ஜான் க்ரிப்பின் புத்தகத்தைத் தவிர, மற்ற மூன்று புத்தகங்களும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த அனைவரும், ஒவ்வொருவரும்  படிக்கவேண்டியவை.

சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள்

11 Responses to “சாமினாதன்: மறுசுழற்சி”

  1. Yayathi Says:

    என்ன சொல்வதென்று தெரியவில்லை. முந்தைய பதிவின் நீண்ட விவாதத்தின் போது நீங்கள் மௌனமாயிருந்தது அசாதாரணமாக தெரிந்தாலும் அது வேலை சம்பந்தபட்டதாக இருக்குமோ என்று தோன்றியதே தவிர இப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. லா.ச.ரா தனது நண்பர் மாசுவின் மறைவைபற்றி சிந்தாநதியில் எழுதும்போது “உங்களுடைய விசுவ ரூபத்தில், நீங்கள் எல்லோருக்கும் எல்லா உறவும் ஆனவர். ….ஒரு மனிதன் பூமியின் எரு. ஒரு மனிதன் லோக பரம்பரையைச் சேர்ந்தவன். எல்லோருக்கும் சொந்தமானவன்.” என்று குறுப்பிடுவது பெரியவர் சாமிநாதன் அவர்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  2. T.S. Ravi Says:

    I endorse Mr. Yayathi. I am not able to say anything. One thing for sure, you are truly a chip off the old block and you can be proud. May his great soul rest in peace.

  3. A.seshagiri Says:

    உண்மையிலேயே இதை எதிர்பார்கவில்லை சார்.இதன் முதல் பதிவை படித்த போது ஒரு மிக நேர்மையாக வாழ்ந்து கொண்டுஇருக்கும் பெரியவரை -சில விசயங்களில் மறைந்த என்தந்தையை நினைவு படுத்தும்- பற்றிய விவரம் என்று தான் நினைத்தேன்.இப்பதிவு கண் கலங்க வைத்துவிட்டது.ஏனோ இரண்டு நாட்களுக்கு முன்
    ‘வெண் முரசில்’ திரு.ஜெயமோகன் எழுதிய கீழ்க்கண்டவற்றைத்தான் எண்ண தோன்றியது.
    தந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.”

    தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  4. சான்றோன் Says:

    யாரோ ஒரு மதிக்கத்தக்க பெரியவரைபற்றி எழுதுகிறீர்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்…… தங்கள் தந்தை என்று எதிர்பார்க்கவில்லை…..சமீபத்தில் தந்தையை இழந்தவன் நான்….அந்தக்கால [ பெரும்பாலான ] நேர்மையாள‌ர்களைப்போல என் தந்தையும் காங்கிரஸ் [ தற்காலத்திய சோனியா காங்கிரஸ் அல்ல ]சார்புடையவர்தான்…..அவர் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு ஆறுமாத காலம் பிடித்தது….. நீங்கள் இந்த இழப்பை திடமுடன் எதிர்கொண்டவிதம் வியக்க வைக்கிறது………….. பெரியவருக்கு என் அஞ்சலி…….


  5. மனதை கனமாக்கிய கட்டுரை. பெரியவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  6. Anonymous Says:

    தங்கள் தந்தையின் மறைவு சொல்லொணா துக்கத்தைத் தருகிறது.

  7. poovannan73 Says:

    மிகவும் வருத்தம் தரும் செய்தி

  8. க்ருஷ்ணகுமார் Says:

    குமரன் திருவடி நிழலை அடைந்த சாமிநாதன் சாருக்கு அஞ்சலி


  9. […] நின்று கொண்டேன். அனந்தபூர் என் தகப்பனார் பிறந்து வளர்ந்த இடம். என் தாத்தா […]


  10. […] ஓரளவு உபயோகித்திருக்கிறேன்.  (அவர் நினைவாக என்னிடம் இருக்கும் பொருட்களில் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s