சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள்
February 7, 2014
எனக்குக் கிடைத்திருக்கும் பலதரப்பட்ட ஜொலிக்கும் அனுபவங்கள், பல அற்புதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் — என்னைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்வதற்கு எனக்கு மிக உதவிகரமாக இருந்திருக்க, இருக்கவேண்டும் என்பது சரியே. இவற்றைப் பற்றி எழுதவே எனக்குக் காலம் போதாது என்பதும் உண்மைதான். ஆனால் — சிலபல காரணங்களினால் – கண்ட, தேவையற்ற, எதிர்மறையான விஷயங்களைப் பற்றி எழுதுவதிலேயே, நிறைய நேரம் செலவழிக்கிறேன் என்பதுதான் சரி. எனக்குச் சமன நிலையில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் ஆன பயனென்கொல்…
-0-0-0-0-0-0-0-0-0-0-0-
…சரி. இந்தப் பெரியவரை, கடந்த சுமார் நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும். இவர் மனைவியையும் ஏறக்குறைய அதேயளவு ஆண்டுகளாக நல்ல அறிமுகம்.
இக்கணவன் – மனைவி தம்பதியினரின் இருபுறப் பெற்றோர்களும் அவர்களின் மூதாதையர்களும் ஆசிரியர் தொழிலினைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்திருந்த காரணத்தால், அக்காலத்தில், ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி’யில் சுற்றிச் சுற்றி பணி புரிந்திருக்கிறார்கள்.
… சிறுவயதிலேயே தாயை இழந்து, தன் சித்தியிடம் குழந்தைப்பருவத்தில் வசித்து, பின்னர் ஆந்திராவின் அனந்தபூர் நகரத்தில் பெரும்பாலும் வளர்ந்தமையால் இப்பெரியவருக்கு தெலெகு மொழி தான் தாய்மொழி ஸ்தானத்தில் இருந்திருக்கிறது. இவர் மனைவியும் ஆந்திராவில் உள்ள கூடவல்லியில் இம்மாதிரியே வளர்ந்திருக்கிறார். ஆக, இவர்கள் இருவரும் தமிழ் வம்சாவழியினராக இருந்தாலும் இக்குடும்பத்தில் தெலெகு மொழிக்குத்தான் முக்கியமான இடம். இருந்தாலும் அவர்களுடைய 20 வயதுகளில், சென்னை வந்தவுடன் தமிழ் மொழியில் பாண்டித்தியத்தை தாங்களாகவே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவருடைய மனைவியின் — தமிழ்ப் பண்பாடு/இலக்கியம் பற்றிய புரிதல்கள் அபாரமானவை… இவர் ஒரு பாரதி உபாசகர் வேறு.
இவர்களுடைய இளம்பிராய வாழ்க்கையில், பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், இவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றவை – என பல இருக்கின்றன — ’தாது’ வருஷப் பஞ்சம், பின்னர் அதனைப் பின் தொடர்ந்த பல பஞ்சங்கள் பற்றிய செவிவழி, படுகோரக் கதைகள் — பல கிறிஸ்தவ மிஷனரிகளின் அயோக்கியத்தனம், சில மிஷனரிகளின் நேர்மை, சுய அர்ப்பணிப்பு — ப்ரிட்டிஷாரின் புண்ணியத்தால் ஒடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நாமும் சேர்ந்து ஒடுக்கிய நம் ஹரிஜன்களுக்குக் கல்வியறிவு கொடுத்தல் — எப்படி, படிப்படியாக முஸ்லீம்களை அவர்கள் தலைவர்களும் சேர்ந்து கொண்டு பிரித்தமை, பிரிவினை விஷம் ஊட்டியமை, மத்தியதரவர்க்கம் இல்லாமல் போனமை — தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களில் பங்கு பெற்றமை — காந்தி ‘ஹரிஜன் நிதி’க்குக் கேட்டாரென்று அணிந்திருந்த சொற்ப நகைகளையும், அவர் ரயில் பயணமாக ஆந்திரா வந்தபோது அளித்த தாயார்கள் — ராட்டையில் நூல் நூற்று, பின் நெசவு செய்து முரட்டுக் கதர் துணிமணிகளை அணிந்தமை — பெண்கள் நீச்சல் வீராங்கனைகளாகத் திகழ்ந்தமை — பாத்தியதைப்பட்ட மஞ்சள் காணி நிலத்துக்குக்காகக் கூட வெகு தைரியமாக, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட நேர்ந்தமை — தீபாவளிக்கான பட்டாசு மத்தாப்புக்களைத் தாங்களே வீட்டில் செய்துகொள்ளும் தொழில் நுட்ப சாதுரியமும், அறிவும், செயலூக்கமும் மிக்க தாயார்கள் — ‘புட்டபர்த்தி’ சாயிபாபாவின் இளமைக்கால நினைவுகள் — அனந்தபூர் நகரத்தில் தரமான கல்விக்கு அடிகோலியது (பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பணிசெய்த நீலம் சஞ்சீவ ரெட்டியும், இந்தப் பெரியவருடைய தகப்பனாரின் மாணவர்), பழம்பெரும் காங்க்ரெஸ் குடும்பங்களாக அமைந்தமை – இன்னபிற, இன்னபிற என ஒரு நீளமான ஜாபிதா…
… ஆனால் இப்பதிவில் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் எழுதப் போவதில்லை. கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் (என்னைப் பொறுத்தவரை) ஒரு இலக்கணமாகத் தெரிந்த அந்தப் பெரியவரைப் பற்றி மட்டும் தான் எழுதப் போகிறேன்.
-0-0-0-0-0-0-
இந்தப் பெரியவர் ஒரு ஸ்மார்த்த பிராம்மணர் – கர்நாடகத்தில் இருக்கும் ஸ்ருங்கேரி மடச்சார்பு. குலதெய்வம்: பழனி முருகன். காஞ்சிப் பெரியவரிடம் (=சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பக்தி. பல வருடங்கள், நங்கநல்லூரிலிருந்து சனிக்கிழமை மாலை கிளம்பி காஞ்சி மடத்தில் ஞாயிறு முழுவதும் தட்டெழுத்துச் சிரமதானம் செய்துவிட்டு, திங்கள் அதிகாலை திரும்பி வந்து அலுவலகத்திற்கு ஓடிப் போவார். இது அனேகமாக ஒவ்வொரு வாரமும், பல வருடங்கள் போல, நடந்தது. அவருக்கு ரெய்ல்வேயில் குமாஸ்தா வேலை. சில வருடங்கள், நங்கநல்லூரிலிருந்து பெரம்பூருக்கு தினமும் சைக்கிளிலேயே போய் வந்தார்.
… அவருக்கு – பெரிய ஆன்மீகச் சார்பு, தத்துவார்த்த ஈடுபாடு, விசாலமான படிப்பு என்றில்லை; அவர் வீட்டிலும், எனக்குத் தெரிந்து பூஜைச்சடங்கு சாங்கியம் என்று ஒன்றுமேயில்லை – தினமும் காலையில் எழுந்து கிணற்றடியில் தண்ணீர் சேந்தி “கோடையிடிக் குமரா” என்று சொல்லிக்கொண்டே ஒரு அவசரக் குளியல் குளித்து “அப்பனே ஆளிவாயா” என்று சொல்லி நெற்றியில் விபூதி தரித்துக்கொண்டு, தன் ஆப்த ‘நெட்டை’ நாயர் நண்பருடன் பிள்ளையார் ‘வரசித்தி வினாயகர்’ கோவில் போய்வருவார், முருகன் சன்னிதியில் “ஷண்முகா, ஞானபண்டிதா” அவ்வளவுதான். ஆனால் பளிச்சிடும் புடம்போட்ட நேர்மையும், பரோபகாரமும் மிகுதி. தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன், அயர்வில்லாமல் பணி புரிந்தவர் என்று இவர் செயல்பாடுகளை வர்ணிப்பது மிகவும் சரி.
-0-0-0-0-0-0-0-0-0-
தன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இவர் ஈடுபாடு காட்டியதேயில்லை – ஆனால் எனக்குத் தோன்றுகிறது — அவர் வாழ்ந்த விதம்தான் அவர் கற்றுத்தந்த கல்வி. மேலும், அவர் ஒரு ரெய்ல்வே பணியாளராக இருந்த காரணத்தால் — இந்தியா முழுவதும் குறுக்காகவும் நெடுக்காகவும் குடும்பத்தோடு அழைத்துசென்று அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.
… அஸ்ஸாமின் ந்யூ பொங்கைகான்வ் முதல் மேற்கத்திய பாம்பே வரை; வடக்கே ரிஷிகேசத்திலிருந்து கன்யாகுமரி வரை என்ற — பொதுவாக மூன்றாம்வகுப்புப் பயணம் + ரெய்ல்வே ப்ளாட்ஃபார்மில் தங்கல், தினசரித்தாள் விரித்துத் தூங்கல் + ரெய்ல்வே காத்திருக்கும் அறைகளில் குளியல் + ரெய்ல்வே க்ளோக் ரூமில் பெட்டிகள் + ரெய்ல் நிலையங்களிலிருந்து நடந்து நடந்தே ஊர்சுற்றல் + முடிந்தால் ப்ளாட்ஃபாரத்திலேயே சமையல் + இல்லாவிட்டால் கிடைத்த தெருவோர உணவகங்களில் சாப்பிடல் — என இக்குடும்பம் மிகக் குறைந்த பணச்செலவில் வருடத்திற்கு இருமுறையாவது இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கிமீக்கள் சுமார் 15 வருடங்களுக்காவது சுற்றியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய கற்பிப்புதான்…
இந்திய ரெய்ல்வேயில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையானது, பதினான்கு லட்சத்திற்கும் அதிகமானாலும் – எவ்வளவு இந்திய ரெய்ல்வே பணியாளர்கள் இப்படித் தங்களுக்குக் கிடைக்கும் சலுகையை (=ரெயில் கட்டணம் மட்டும் இலவசம்) என்பதை உபயோகித்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. கொஞ்சம் யோசித்தால், இந்தக் கட்டணமில்லாச் சலுகை கூட ஒரு பெரிய விஷயமேயில்லை… ஆக, எல்லாவற்றுக்கும் முனைப்பு மட்டுமேதான் காரணமோ, முக்கியமோ?
-0-0-0-0-0-0-
அலையோஅலை என்றலைந்து பொதுச் சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் போதும் (கோஆபரேடிவ் ஸ்டோர்ஸ், கோஆபரேடிவ் ஹவுஸிங் ஸொஸைட்டி,…), பொதுக் காரியங்களில் தன்னார்வ ‘வாலன்டரி’க்காரராக ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும், பல விதங்களில் பெருக்கெடுத்தோடிய ஊழல் திமுக குண்டர்களையும் பெருச்சாளிகளையும் (சில சமயம் அதிமுகவினரையும்), இவர், தைரியமாகவும் தன்னந்தனியாகவும் எதிர் கொண்டார்.
இங்கு, இரு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன – இவை சுமார் 35-40 வருடங்களுக்கு முன்பு நடந்தவை என நினைக்கிறேன்…
ஒன்று: ராஜ்யசபாவில் அப்போது ஒரு அதிமுக எம்பி-யாக இருந்த மோகனரங்கன், ஒரு முறை இரு வெள்ளை அம்பாஸடர் கார்களுடன் இந்தப் பெரியவரின் வீட்டு வாசலுக்கு வந்து, காரிலிருந்து இறங்காமல், உரக்க “என்ன சாமிநாதன், என் ஆளுங்களுக்கு கடன் வசதி கொடுக்க மாட்டேன்றீங்களாமே?” என்றார்.
பெரியவர், வீட்டிற்கு வெளியே திண்ணையில் நின்று ‘தி ஹிந்து’ படித்துக் கொண்டிருந்தார் – கொஞ்சம் கூட நகராமல் – அவர் சொன்னார்: “இல்ல மோகனரங்கன் – டாகுமென்ட்கள், ஆவணங்கள் சரியாக இருந்தால் ஸொஸைட்டி கடன் கொடுக்கும். உன் ஆட்கள் சுத்தமா சரியில்லை. கண்டவர்களுக்கு ரெகமன்ட் செய்து உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே!”
மோகனரங்கத்துக்கு முகம் தொங்கிவிட்டது. அவர் சொன்னார், “நீங்க ஒரு டைரக்டர் தான் இந்த கடன் அப்ளிகேஷன்களுக்கு முட்டுக்கட்டை போட்றீங்களாமே?”
பெரியவர்: “ஆமாம். நீ சொல்வது உண்மை.” . “சிவன் சொத்தும் பொதுச் சொத்தும் ஒண்ணுதான். திருடினா, அயோக்கியத்தனம் செஞ்சா, குலநாசம் மட்டுமில்ல, சர்வ நாசம்.”
இந்த பதிலைக் கேட்டதும் மோகனரங்கன் வெறுத்துப் போய் தன் கார் பரிவாரத்துடன் கிளம்பிப் போய் விட்டார்.
எதிர் வீட்டுக்காரர் சொன்னார்: “ஏங்க, இவனுங்க கூடல்லாம் மோதறீங்க. விட்டுக் கொடுத்து அனுசரிச்சிப் போலாமில்ல. நீங்க ப்ராமின்ஸ் வேற!”
பெரியவர் அனுசரித்துப் போகவும் இல்லை. மோகனரங்கம் வேறொன்றும் செய்யவுமில்லை. (ஆனால், பின்னொரு காலத்தில் இதே மோகனரங்கத்தின் பிள்ளை ஒருவனுக்குத் தொழில்ரீதியில், பணரீதியில் நான் சிறிது உதவியிருக்கிறேன். அவனும் எனக்கு என்னுடைய தொழிற்சாலை ஒன்றைஅமைக்க இடம் கொடுத்து உதவியிருக்கிறான் – இந்தப் பரஸ்பர உதவியெல்லாம் நடந்தது, மோகனரங்கம் அவர்கள் இறந்த பின்னர்; சரித்திர சக்கரத்தின் சுழற்சியே அலாதிதான்.)
இரண்டு: அப்போதைய ஆலந்தூர் (இது சென்னை கிண்டிக்கு அருகில் உள்ளது) நகராட்சியின் அதிகாரப் பொறுப்பில் இருந்த திமுக சார்பினரான ஆர் எஸ் பாரதி (இவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை) பரிந்துரைத்த கவைக்குதவாத கடன் விண்ணப்பங்கள், இந்தப் பெரியவரால் நிராகரிக்கப் பட்டன. ஆர்எஸ் பாரதிக்கு இதனால் மிகவும் கோபம் வந்து – அவருடைய திமுக அடிப்பொடி ஒருவர் வந்து ஸொஸெட்டி அலுவலகத்தில் ஒரு சமயம் பலத்த சச்சரவு ஏற்பட்டது. பெரியவர் அசைந்து கொடுக்கவில்லை. இந்தப் பெரியவரைத் தவிர மற்ற டைரக்டர்கள் எல்லாம் ‘அனுசரித்துப் போக’ முடிவெடுத்ததும், பெரியவர், தான் பதவி விலகுவதாகத் தெரிவித்தார். பின்னர் சமரசம் – டைரக்டர்கள் எல்லோரும் அனுசரித்துப் போகவேண்டாம் என முடிவெடுத்தார்கள். “நீங்கள் இல்லாவிட்டால், ஸொஸைட்டி நடப்பது கஷ்டம்.”
அலுவலக வேலை முடிந்து அடுத்த நாளிரவு, இருட்டில் இந்தப் பெரியவர் பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து அவருடைய நங்கநல்லூர் வீட்டிற்கு மிதிவண்டியில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சில (திமுக) குண்டர்கள் அவர் மேல் ஜல்லிக் கற்களை வீசிவிட்டு, ஜாதிப்பெயரைச் சொல்லித் திட்டி, தலைவர் சொன்னாலும் லோன் கொடுக்காமாட்டியாடா எனக் கேட்டுவிட்டு – இவர் சைக்கிளை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டுவிட்டு சட்டைக் கைகளை மடித்தபடி அவர்களை நோக்கி ஓடியதும் – ஓடிப் போனார்கள். ரத்த காயங்களோடு வீட்டிற்கு வந்தார், இந்தப் பெரியவர்.
அசையவில்லை அவர். அவர் தொடர்ந்து, மூன்று மேலதிக வருடங்களுக்கு, அந்த ஸொஸைட்டியில் அப்பழுக்கற்றவராகவும், தைரியமிக்கவராகவும், நேர்மையான கடன் விண்ணப்ப தாரர்களுக்கு உதவியாகவும் பணி புரிந்தார்.
பின்னர் அவர் பெயரைச் சொல்லி லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தெரிந்ததும், சாட்சிகளுடனும் தஸ்தாவேஜுகளுடனும் ரெஜிஸ்ட்ராருக்கும் காவல்துறைக்கும் புகார் அளித்தார். அதி நெருக்கடிகள், மிரட்டல்கள் வந்தன. அரைகுறை திராவிட முயக்க அரசுகளில், அதிகாரவர்க்கங்களில் புரையோடிக்கிடந்த ஊழல்களினால் – புகார்கள் மீதும் ஒரு சுக்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்ற டைரக்டர்கள்: “ நீங்கதான் துட்டு வேணான்றீங்க, சரி. ஆனா, எங்களையாவது சாப்பிட விடுங்க.” ஆக அவர், அந்த கூட்டுறவுச் சங்கத்தில் தனிமைப் படுத்தப்பட்டு, வெறுத்துப்போய் ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தார். ஆனால், தொடர்ந்து நிமிர்ந்து நடந்தார்.
இதற்குப் பின்னும் ஜாஃபர் ஷெரீஃப் (அந்தக்கால மாஜி ரெய்ல்வே மந்திரி) போன்ற அற்பர்களின் நேரடி மிரட்டல்களையும் (இதெல்லாம் தனிக்கதை) எதிர்கொண்டிருக்கிறார்.
-0-0-0-0-0-0-0-0-0-
இவர் — காமராஜரின், மொரார்ஜிபாயின் பரமபக்தர். ”காமராஜ நாடார் ஆட்சின்னாடா நடக்கிறது! வீட்ட திறந்து போட்டுட்டு ஊருக்குப் போலாண்டா!!”
பொதுவாகக் காங்கிரஸ் சார்புள்ளவர். இவர் வீட்டில் ஜாதி மதம் பேதம் பார்க்கப்படாமல் எவ்வளவோ பேர் “அய்ரு இருக்காரா? அய்ரு வூட்டம்மா, காப்பி கொடுங்க,” என உரிமையாகக் கேட்டோ கேட்காமலேயோ அவர்களுடைய நுரை பறக்கும் காலைக் காப்பியை டபரா டம்ளரில் ஆற்றிக் குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆச்சரியப் பட்டதில்லை – ஏனெனில் அதுதான், அப்படி விருந்தோம்புவதுதான் மனித இயல்பு என அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஏறத்தாழ, ஒவ்வொரு நாளும் காலை ஆறரை மணிக்கு, இவரிடம் பல கட்டிட மேஸ்திரிகளும் மரஆச்சாரிகளும், வண்ணம் பூசுபவர்களும், கம்பி கட்டுபவர்களும், சித்தாள்களும் கூட வருவார்கள் அன்று என்ன வேலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, மாலையில் சிலசமயம் கூலி பெற்றுக் கொள்ளவும் வருவார்கள். பொறுமையாக வரிசையில் வந்து காரியங்களை முடித்துக் கொண்டு செல்வார்கள்.
தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் எனக்கு சில சமயங்களில் மேஸ்திரிகளின் நடுவே ஏற்படும், சண்டை-பிணக்குகளை இரண்டுமூன்று ராமகிருஷ்ணர் கதைகளைக் கூறி அவர் சமாதானப் படுத்துவது ஒரு வாராந்திர நிகழ்ச்சி. ஆனால், திருப்பித் திருப்பி அதே கதைகளைத்தான் சொல்வார் – எனக்கு அலுப்பாக இருக்கும். போரடிக்கும்.
சில சமயம் அவர், ‘குடிச்சுச் செத்தழியாதப்பா ஜகன்னாதா, வொம்பொண்டாட்டி அழறா பாரு’ என்று சொல்வதும் அந்த ஜகன்னாதன், ‘ஆவட்டம் சார், இந்தவொருதபா மன்னிச்சுடுங்க சார்! இன்மே சாமி சத்யமா குடிக்ல சார், குட்ச்சா இனிமே என்ன ஒங்க வூட்டுக்குள்ளாறயே வுடாதீங்க சார்’ உரையாடல் வாரம் ஒரு முறையாவது நடக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜகன்னாதனுக்கு குரல் கம்மும். ‘அய்ருவூட்டம்மா, அய்ரு என்னே நம்ம வூட்டுக்கு வராதேன்னு சொல்றாரும்மா’ என்று , அழ ஆரம்பித்துவிடுவார்.
ஜகன்னாதனுக்கு அப்பெரியவரிடத்தில் ராஜவிசுவாசம். அய்ரு சொன்னா அது வேதவாக்கு. இருந்தாலும் குடியை விடமுடியவில்லை – இரண்டு பெண்டாட்டிகள் அவருக்கு, ஒரே பிணக்குகள், வூட்ல நிம்மதியேயில்ல என்று ராத்திரி வந்து அழுவார். அந்தப் பெரியவருடைய இந்த வளர்ப்புமகனுக்கு, திரும்பி அதே அலுப்படையவைக்கும் ராமகிருஷ்ணர் கதை சொல்லப்படும்!
அக்காலத்தில் ஜெயலக்ஷ்மி என்று ஒரு திரையரங்கு இருந்தது ஆதம்பாக்கத்தில் (இப்போது இருக்கிறதா?) – இந்தக் குடிகார மேஸ்திரி அதற்கெதிரில் இருந்த ஏரியின் கரை மேட்டில் இரண்டு பக்கத்து-பக்கத்து வீடுகளில் இருந்தார் – நான் கூட, பல தடவை அவருடைய வீட்டிற்குப் போயிருக்கிறேன். அவர் வீட்டிற்கு எப்போது போனாலும் ‘பட்டர் பிஸ்கெட்’ கொடுப்பார்கள். எண்ணி ஒண்ணேஒண்ணு – ஆனால் அமிர்தம்.
… இந்த ஜகன்னாதன், அல்பாயுசில் (39?) ஓக்காள ரத்தவாந்தியெடுத்துச் செத்தபோது பாடையைத் தூக்கிய நால்வரில் இந்தப் பெரியவரும் ஒருவர். நானும் இந்தப் பாடையின் பின்னால், தப்பட்டை-சங்கு சமேதனாக, ஆதம்பாக்கம் இடுகாட்டுக்குச் சென்றேன். அங்கு ஜகன்னாதனைப் புதைப்பதற்கு குழி வெட்டிய இருவரில் இவரும் ஒருவர். இந்தப் பாடைதான் – புதைப்பு/எரிப்புதான் முதலாவது கடைசியாவது என்றெல்லாமும் இல்லை.
-0-0-0-0-0-0-0-0-0-
இந்தச் சமயத்தில் இவ்விஷயம் நினைவுக்கு வருகிறது: பழவந்தாங்கலில் இருந்த (அப்போது அது ரெயில் நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் இருந்தது) சர்வஜாதி சுடுகாடு+இடுகாட்டில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய பிரச்சினை. பிணங்களை மழைக்காலங்களில் எரிக்கவே முடியாது. எரியூட்டியதற்கு அடுத்த நாள் ‘பால் விடப்’ போகும்போது, பாதி வெந்த பிணங்களைப் பார்த்து விதிர்விதிர்த்து மறுபடியும் எரிப்பது என்பது ஒரு வேதனை தரும் விஷயம் – ஈரமற்ற விறகும் கிடைக்காது, கெரசின் (=‘க்ருஷ்ணாயில்’) கிடைக்கவே கிடைக்காது. ‘சாவு விழுந்த’ வீட்டுக்காரர்களுக்கு இது ஒரு மகாமகோ பிரச்சினை – ஆனால், அவர்களுடைய காரியம் முடிந்தவுடன், இந்த விஷயத்தை மறந்தே விடுவார்கள். அதாவது, வட்டாரத்தில் அடுத்த மரணம் நிகழும் வரை… இந்த நிலையை சரி செய்வதற்கு, தனி மனிதனாக முயன்று, தானும் முடிந்த வரை பணம் கொடுத்து – அந்த சுடுகாட்டில், ஒரு மேடையும், உயரக் கூரையும் போட்டார் இவர்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் பல நூறு குடும்பங்களுக்குக் கடன் கொடுக்க உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் இச்சங்கத்தின் கௌரவ ’ஆனரரி’ டைரக்டர்களில் ஒருவராக – துடிப்புடன் வேலை செய்பவராக – இருந்தார்.
-0-0-0-0-0-0-0-
… இலவசமாக (ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல், ஒரு விதமான நேரிடை/மறைமுக ஆதாயமும் பெறாமல்) பல நண்பர்களுக்கு (ஜாதி மதம் பார்க்காமல் – ஷெரிஃப் என நினைக்கிறேன், குறைந்தபட்சம் இந்த ஒரு முஸ்ஸல்மான் நண்பரும் இதில் அடக்கம்), அவருடைய காலை சந்திப்புகளில் பங்கேற்கும் ஜகன்னாதன், கருப்பையா, வரதராஜ், மாணிக்கம் என வரும் அற்புதப் பணியாளர்களை வைத்து, அசுர உழைப்பு உழைத்து வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார், இவர். ஆட்களுக்குக் கூலியை கறாராக வாங்கிக் கொடுப்பதாகட்டும், கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் விலையையும் சரியாக நிர்வகித்து, ஓடி அலைந்து காரியங்களைச் செய்து கொடுப்பதாகட்டும் – அனைத்தையும் சிரித்த முகத்துடன் செய்து கொடுப்பார். உதவி என்று கேட்டுவந்த எவரையும் அவர் கைவிட்டதில்லை. ஏதாவது செய்து, யாரையாவது பார்த்துப் பேசி, அவருடைய நேரிடையான, நேர்மையான பேச்சாலேயே காரியங்களை முடித்துக் கொடுப்பார்.
சுமார் 20 ஆண்டுகளில் (1959-1982) இப்படி எனக்குத் தெரிந்து, நங்கநல்லூரில் குறைந்தபட்சம் பதினேழு வீடுகளும், மடிப்பாக்கம்-உள்ளகரத்தில் ஐந்து வீடுகளும், பம்மலில் இரண்டு வீடுகளும், திருநின்றவூரில் இரண்டு வீடுகளும் கட்டிக் கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரியாதவை இன்னமுமிருக்கலாம்…
அவருடைய அசுர உழைப்பு உழைக்கும் முனைப்பும், எடுத்த காரியத்தை எப்பாடுபட்டேனும் முடிக்கும் இயல்பும், குண்டு தைரியமும் — உள்ளிட்ட அவருடைய கல்யாணகுணங்கள், அவர் குழந்தைகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே. (எனக்கு, முக்கி முனகி, ஒரு சொந்த வீட்டை வடகிழக்கு கிராமாந்தர பெங்களூரில், சாவகாசமான மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டு கட்டிக் கொள்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது, என் உள்ளத்தனையது இந்த உயரம்தாம்.)
-0-0-0-0-0-0-0-0-0-
ஆக, பொதுவாக அவர் தன்னுடைய வீட்டிற்குச் சாப்பிட்டுத் தூங்கதான் வருவார். ஆக, பல சமயம் கடுகடுவென்றுதான் இருப்பார். யோசித்துப் பார்த்தால், இன்னமும் சில எதிர்மறை விஷயங்களும் உண்டு – எனக்கு இவரிடம் மகாமகோ கோபம் வந்து மாதக்கணக்கில் பேசாமலிருந்ததெல்லாம் உண்டு.
ஆனால்…
… அலுவலகவேலை, கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணிகள், வீடுகள் கட்டுவது, யாராவது உதவி என்று வந்தால், உடனே வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, மேல்துண்டு போட்டுக் கொண்டு போவது, பிணம் விழுந்தால் பாடையைத் தூக்குவது என்று செலவழியும் அவர் நேரமும், சக்தியும். “மத்தவங்களுக்குச் செய்யற உதவிதாண்டா கடைசி வர நிக்கும். நாம அதுக்குதான் பொறந்திருக்கோம்.” “நம்மால என்ன செய்ய முடியறதோ, எதுக்கு சக்தி இருக்கோ, அதை ஆத்மார்த்தமா செய்யணும்.”
அவர் குழந்தைகளுக்கு அப்போது ‘ஊருக்கெல்லாம் பைசா வாங்காம ஒழச்சு ஓடா தேஞ்சு வீட்டுல இப்படி இருக்காரே’ என்று கோபம்கோபமாக வரும். வீட்டில் குழந்தைகளுக்கு சத்தாக ஒன்றுமில்லாமல், வரும் போகும் வெளியாள்களுக்கு உபசாரம் செய்வது அதிசயம் தான். அவர் மனைவியும் அதேபோல தூக்கித்தூக்கிப் பொருட்களைக் கொடுக்கும் சுபாவம். “கழுத்துக்குக் கீழ போனா அவ்வளவுதாண்டா,” “பசிக்கிற வாய்க்கு போஜனம் கொடுக்காம இருக்கறது அநீதிடா” ”நாம்போ வேணுங்கறவாளுக்குக் கொடுத்தா, நமக்கு வேணுங்கும்போது பகவான் கொடுப்பான்” என அவர் குழந்தைகளிடம் பேசுவார். அவர்களும் புரிகிறதோ இல்லையோ, தலையாட்டிக் கொண்டிருந்துவிடுவார்கள்.
அவர்களுடைய வீட்டில் பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும், அந்தக் குழந்தைகளுக்கு கஷ்ட ஜீவனம் என்றில்லை. மிகச் சந்தோஷமாகவே இருந்தனர். அவர்கள் வீட்டில் எப்பொழுதாவது சரியானபடி உணவில்லையானால் நாயர் வீட்டிற்குச் சென்று விடுவர்.
இந்தப் பாலக்காட்டுப் பெருவெம்பாவின் கிழக்கே நடுவத்து சிவதாசன் நாயரும் அற்புதமானவர். அவர் மனைவி சரோஜினியும் அப்படியே. நாயர் வள்வள் என்று விழும் வள்ளுவர். சரோஜினி ஒரு வாசுகி. அற்புதமான மனிதர்கள்.
இவர்களுடைய கதையையும் இன்னொரு சமயம் எழுதவேண்டும்…
-0-0-0-0-0-
தற்போது, பெரியவருக்கு வயது 81 நடந்து கொண்டிருக்கிறது. இவர் நம்பும் ‘கோடையிடிக் குமரன்’ இவருக்குத் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்தையும், சந்தோஷத்தையும், விசாலமான உலகப் பார்வையையும் கொடுத்து, நேரம் வரும்போது அமைதியாக, கஷ்டமில்லாமல் அனாயாச மரணம் நேர்வதற்கும் அருள் புரிவார் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.
(இதுவரை இப்பதிவில் எழுதப்பட்டவைகளை நான் சுமார் 8 மாதங்களுக்கு முன் எழுதினேன்)
-0-0-0-0-0-0-
மேலும்…
April 17, 2019 at 17:45
[…] […]