தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி

November 25, 2013

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு!

அதாவது — நாம் காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு விழா,
பிறந்த நாள், இறந்த நாள், மணந்த நாள், வாழ்த்த வயதில்லை, வருக வருக, <அரைகுறை தமிழ்த் திரைப்படம்> வெற்றி பெற வாழ்த்துகள் – வகையறா தட்டிகளை மேன்மேலும் வைத்து, தேச வளத்தை மேன்மேலும் பெருக்கிக் கொண்டேயிருக்கிறோம்! GNP!! அதே சமயம், பேராண்மைத்தாழ்வு இழப்பீடும் பெற்று புளகாங்கிதம் அடைகிறோம்!!

நம்முடைய போலிப் பேராண்மை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை – நாம் உபயோகிக்கும் அபத்தப் படிமங்களும் (metaphors), குப்பைக் குறியீடுகளும் (symbols) உபயோகிக்க உபயோகிக்கக் குறைவதே இல்லை; அண்மையில் எங்கள் பகுதியில் (விழுப்புரம் மாவட்டம்) சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு ஒரு மகாமகோ ஃப்லெக்ஸ் தட்டி வைத்திருந்தார்கள். அதில் அன்புமணி அவர்கள், தன்னந்தனியாக அர்ஜுனன் (இவர், மறைதிரு மகாமகோ வீரப்பர் அவர்களின் கூட்டாளி அல்லர்!) மாதிரி உடையணிந்து கையில் வில், அம்பு, கவசம், குண்டலம் எல்லாம் அணிந்து தேரில் பாய்ந்தோடிப் பகைவர்களை மாய்ப்பதுபோல ஒரு காட்சி.

அந்தத் தேரை இழுத்துக்கொண்டிருப்பது ஐந்து சிங்கங்கள். பிடரிமயிர் சிலிர்த்தெழும் ‘கன்டிஷனர் ஷாம்பூ’ போட்ட ஆண் சிங்கங்கள். அன்புமணியின் முகம் நம்மை நோக்கி ஒரு அடிவயிற்றுக் கலவரச் சிரிப்புடன் அடோபி ஃபோட்டோஷாப் உபயத்தில் கிரீடத்துக்குக் கீழே தொங்கிக்கொண்டிருக்கிறது – அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் வேறு! அந்தச் சிங்கங்கள் ஆர்ப்பரித்து சுமார் 120 பாகை அளவில் ஒவ்வொரு திசையில் தேரை இழுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு மூக்கணாங்கயிறு வேறு (எப்படித்தான் போட்டார்களோ! லாடமும்  அடித்திருப்பார்களோ?) – ஆனால் அவருக்கு ஒரு சிங்கத் தேரோட்டியும்கூட உதவிக்கு இல்லை, பாவம்… ஹ்ம்ம்…

இதற்குச் சுமார் 50 மீட்டர் தூரத்தில், ஆனால் எதிர்ப்பக்கத்தில் (இன்னும் ‘கௌரவ’  டாக்டர் பட்டம் பெறும் பாக்கியம் கிட்டாத) திருமாவளவன் அவர்களுக்கு அதைவிடப் பெரிய ஃப்லெக்ஸ் தட்டி. இதில் பின்னணியில் ஆபத்தை/பேராண்மையைக் குறிக்கும் எல்டிடிஇ பிரபாகரன், அண்ணாதுரை அவர்கள் போன்று ஒரு விரலைத் தூக்கிக்கொண்டிருக்கும் ‘க்ரிக்கெட் அவுட்’ படம். திருமாவளவனும் போர்க் கோலத்தில், போருடையில் (battle fatigues)  இருக்கிறார். ஆனால் பாவம், கையில் டுப்பாக்கி இல்லை, இருப்பினும் அவர் மீசையை முறுக்கிக்கொண்டு, ஏதோ உரக்கக் கத்துவது போன்ற படம். பின்னணியில் நிஜமான பாயும் புலிகளின் படங்கள் – வருந்தத்தக்க விதத்தில் அவை சிறுத்தைகளே இல்லை. அவர் தலையைச் சுற்றியும் ஒரு ஒளி வட்டம்.

இரண்டு தட்டிகளிலும் அடியில், அவரவர் கட்சியினரின் துண்டாடப்பட்ட தலைகள் — செங்கனல், புரட்சிக்கனல், தீ, செந்தீ, அக்கினி, வேனல், மின்னல், இடி, எரிதழல், செந்தழல், செந்தணல், சூறை, புயல், சுனாமி, எரிமலை, புலிக்குட்டி, சிறுத்தைக்குட்டி, வேங்கையோன், சிம்மக்குரலோன், கருஞ்சிறுத்தை, தமிழ்ச் சிறுத்தை, பாயும் வேங்கை, கருவேங்கை, புரட்சிக்குமார், ஈழப்பிரியன், சின்ன பிரபாகரன், சம்மட்டி எனப் பலவிதமான பேதியளிக்கும் அடைமொழிகளுடன், பட்டப்பெயரோதி பட்டப்பெயர்களின், விசிலடிச்சான் குஞ்சப்பர்களின், தொண்டரடிப்பொடிகளின் அணிவகுப்பு. ஹ்ம்ம்…

என்னால் இதைவிட உன்னதமான ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுத் தத்துவ’ சமகால எடுத்துக்காட்டுகளைக் கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன். (இருந்தாலும் அன்புமணி சிங்கத் தட்டி ஆர்ப்பரித்து திருமா புலித்தட்டியை நோக்கி நகரவில்லை, திருமாவின் புலி வார்த்தைகளும் தட்டியிலிருந்து வெளிப்பட்டு அன்புமணியைச் சுடவில்லை. சிங்கங்களும் புலிகளும் ஒன்றுக்கொன்றுடன்  சண்டையே போடவில்லை, ஏன், அவைகளுக்கிடையேயும்கூடச் சண்டை போட்டுக்கொள்ளவில்லை, சகோதர  யுத்தம் புரியவில்லை… இத்தனைக்கும் அவையனைத்தும் ஆண்கள்தாம்!! பல வாரங்களாக இதே நிலைமைதான். நேற்றுகூடச் சரி பார்த்தேன். தட்டிகள் இன்னமும் அங்கேயேதான் இருக்கின்றன; காற்றில் படபடப்பதால் ஒரிரு கிழிசல்கள். வெயில் சுட்டெரிப்பதால் கொஞ்சம் சிங்கம்புலிகளின் தோல் நிறங்கள் மாறியிருக்கின்றன. அவ்வளவுதான். சுபம். நல்லவேளை!)

ஆக, நம் அரசியல் தலைவர்களை அவர்கள் தொண்டர்கள் எவ்வளவு சிறுமைப் படுத்துகிறார்கள் என்று மட்டுமே இதனைப் பார்க்காமல் – எப்படி, இந்தத் தட்டிகளின் மூலம் ‘வூடு கட்டுதல்களின்’ மூலம் நம் (=தலைவர்கள் + குதொண்டர்கள்) பொதுப் பேராண்மை மீட்டெடுக்கப் படுகிறது – என்று பார்ப்பதுதான் முக்கியம்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப, அன்புமணி – திருமாளவன் என்று இதனைப் பார்க்காமல் ஜெயலலிதா-கருணாநிதி எனப் பார்த்தாலும்கூட இதில் ஒரு பெரிய வித்தியாசமும் இருக்காது.

-0-0-0-0-0-0-0-0-0-

நம்மில் பலருக்குப் படிப்பறிவு (பரந்த, ஆழ்ந்த, விரிந்த என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்) குறைவு. அதிலும் தமிழில் தரமாக எழுதுபவர்கள், தொடர்ந்து எழுதுபவர்கள், திருடாமல்-காப்பியடிக்காமல் எழுதுபவர்கள், பலவிதமான துறைகள் சார்ந்து சிந்தித்து, தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், பெரும்பாலான நம் தமிழர்களுக்கு (அதாவது ஆண்களுக்கு), தாங்களும் இப்படியாகவேண்டும் என்று ஓர் அளவிடமுடியாத அவா. ஆனால், அநியாயமாக நம்மால் இப்படியெல்லாம் செயல்பட முடியாது – நமக்கு இதற்கெல்லாம் சிரத்தையில்லை, மூளை வளர்ச்சியும் சரியில்லை.

ஆக நாம் என்னதான் செய்யமுடியும்? செய்யவேண்டும்?? ஏதோ, நம்மால் ஆனது இவர்கள் எழுத்துகளை அலட்சியம் செய்வது, மட்டம் தட்டுவது, முகத்தை வலித்து வாயைச் சுழித்துக்கொண்டு நாக்கைச் சுழற்றி ஏளனம் செய்வது, ஒரு சுக்கையும் புரிந்துகொள்ளாமல் உளறிக் கொட்டுவது — அய்யோ கண்ணக் கட்டுதே,  அய்யய்யோ ரொம்ப நீளம்,  படிக்க மிடியல — எனத் தொடர்பே இல்லாமல் சோம்பேறித் தனமாக முனகுவது, ஜாதிபேதம் பார்ப்பது — எப்படியாவது  நமக்குப் பேராண்மைத்தாழ்வு இழப்பீடு கிடைத்தால் சரியே!

நம்மில் பெரும்பாலோர் அறிவுஜீவிகளோ, இலக்கியவாதிகளோ, கற்றறிந்த அறிஞர்களோ, சான்றோரோ அல்ல. நானும்  இந்த ‘பெரும்பாலோர்’ கும்பல் ஜோதியில் கலந்தவன், ஒரு பாமரன், என்கிற முறையில்தான் இப்படிச் சொல்கிறேன். எல்லோராலும் இப்படி அதிமனிதர்கள் ஆகமுடியாதுதான், தேவையும் இல்லைதான்.

ஆனால் நாம், நம் அறிவுஜீவிகளை, இலக்கியவாதிகளை, கற்றறிந்த அறிஞர்களை, சான்றோர்களைப் பாராட்டமாட்டோம், கொண்டாட மாட்டவே  மாட்டோம் அவர்களைப் போற்ற மாட்டோம். ஏனெனில் அப்படிப்பட்ட தவறினைச் செய்தால், நமக்கு மேலதிகமாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிடுமல்லவா? நமது பொறாமை உணர்ச்சியும் பொச்சரிப்பும் அதிகமாகிவிடும் அல்லவா? தேவையா  இது?

அதனால், நமக்குக் கைவந்த கலையான ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுத் தத்துவ’த்தை உபயோகித்து – அறிஞர்-1 அணியில் சேர்ந்து அறிஞர்-2-ஐயும் அவர் அணியினரையும் தூற்றுவோம். பின்னர் அடுத்த அணிக்குச் சென்று இந்த அணியைத் தாக்குவோம். இந்த அறிஞர்களை உசுப்பிவிட்டு, அவர்களையும் தேவையில்லாத வம்பில் மாட்டி வைப்போம். எழுத்தாளர் , எழுத்தாளர் பற்றி சில விமர்சனங்களை வைக்கிறார் என்றால் (அவை கொச்சையாகவே இருந்தாலும் கூட), உடனே இவர்கள் இருவர் பின்னாலும் (அந்த எழுத்தாளர்களுக்கே அது உவப்பானதோ இல்லையோ) அணி திரண்டு வீரப்போர் புரிவோம்.

இப்படி அணி திரண்டதால், நமக்கு, நாமும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகிவிட்டதுபோல ஒரே புல்லரிப்பு; டைம்பாஸுக்கு டைம்பாஸும் ஆயிற்று. அந்த அறிஞர்களைத் தடம்புரள வைத்து நம்முடைய அளவுக்கு (minimum common denominator) குடுமியைப் பிடித்து, தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தும் ஆகி விட்டது. தமிழுடைய, நம் சமூகத்தினுடைய வளர்ச்சி வேகத்தைக் குறைக்கவும் முடிகிறது.

அரைகுறை விசிலடிச்சான்குஞ்சப்பர்களாக இருப்பதில், நகைப்புக்கிடமாக ஆண்மையற்று இருப்பதில் … என்ன ராஜ(!?) சுகம்.

இந்தத் தொழில்முறை மனிதவுரிமைக்காரர்களும், ப்ரொடெஸ்ட்வாலாக்களும் பெரும்பாலும் இப்படித்தான். சுந்தர ராமசாமியின் ஓர் அழகான சிறுகதையைப் போல. ‘பள்ளம்தான் ரொம்பிச்சு’ கதைதான். (இதனைப்பற்றித் தனியாக எழுதவேண்டும்)

-0-0-0-0-0-0-0-0-0-0-

‘பேராண்மைத்தாழ்வு இழப்பீடு’ கிடைக்க ஒரு நிச்சயமான அஹிம்சா வழியையும் நாம் தமிழர்கள் வெகு அழகாகக் கண்டெடுத்து, வளர்த்து வருகிறோம். அதாகப்பட்டது அறிவுரை’ சொல்வது — நமக்கு எந்த இழவிலாவது கொஞ்சமாகவாவது தகுதி இருக்கிறதோ இல்லையோ, அது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாமல், நம்முடைய அறிவை நாமே மெச்சிக்கொண்டு எல்லோருக்கும் சகல துறைகளிலும் அறிவுரை வழங்கிக்கொண்டே இருப்பது.

உள்ளூர நம்மில் பெரும்பாலோருக்கு நாம் சுத்தமாக உள்ளீடற்றவர்கள், அறிவார்த்தமாகவோ, செயலூக்கத்துடனோ ஒன்றுமே  செய்யத் தகுதியற்றவர்கள் எனத் தெரியும் – ஆனால், இதனைச் சரி செய்யவேண்டும் என்றால் உழைக்கவேண்டுமே! அதற்குப் பதிலாக – மற்றவர்களுக்கு அறிவுரை கொடுப்பது, நிபுணர்களைக் கிண்டல் செய்வது, விதண்டாவாதங்களில் ஈடுபடுவது, காரணங்களைச் சொல்லாமல் பொதுவாக மட்டம் தட்டுவது, தொடர்பில்லாமல் உச்சாடனம் செய்வது போன்ற விஷயங்கள் மிகவும் சுளுவாயிற்றே! ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீடு’ வெகு சல்லிசாகக் கிடைக்க, இந்த வழிதான் நம் தமிழர்களுக்கு பொதுவாக மிகவும் பிடித்தமானது.

இன்னொரு முறையிலும் இந்தப் ‘பேராண்மைத்தாழ்வு மேலதிக இழப்பீடு’ கிடைக்க வழி இருக்கிறது – அது, மீஅறிதல்(meta-cognition) இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவிகரமாக இருப்பது.

இந்த ஆட்கள் – அடிப்படையில் சோப்ளாங்கிகள். ஆனால் சோப்ளாங்கிகள் எனத் தங்களை அறிந்துகொண்டவர்கள் இல்லை. டன்னிங்-க்ரூகர் விளைவின் பரிதாபகரமான எடுத்துக்காட்டு ஜந்துகள் இவர்கள். எடுத்துக்காட்டு என்றால் எடுத்தே காட்டிவிடுவார்கள் இந்த ஆட்கள், பாவம். ஆனால், இவர்களுக்கும் எதைப்பற்றியும் ஏதாவது கருத்து இருக்கும். தங்கள் அறியாமையை மிக உரக்கச் சத்தம்போட்டுச் சொல்பவர்கள் இவர்கள். இந்த நுணல்கள் தம் வாயால் மற்றவர்களைக் கெடுத்துக்கொண்டே இருக்கும் ஜந்துக்கள். (ஏனெனில் இவர்கள் பின்னாலும் லைக்கர்களும், ஃபால்லொயர்களும் இன்னபிற குஞ்சப்ப நாயனார்களும் அணிதிரள்வார்கள்)

என்னுடைய அனுமானத்தில், இணையத்தில் உலாவரும் சுமார் 90% தமிழர்கள் மேற்கண்ட இரு வகையினரே.

-0-0-0-0-0-0-0-0-0-0-

சரி. ஸ்ரீலங்கா பிரச்னையில் நம்மால் ஒரு முடியும் பிடுங்கக்கூடிய அளவில் (அவை கரங்களாலானாலும் சரி, கருத்துகளானாலும் சரி) நாம் மருந்துக்குக்கூட இல்லை என்பதை நாம், நம் உள்மனத்தில் மிக நன்றாக அறிவோம் – ஏனெனில், நாம் நம்பும் நம் தமிழ்ப் பாரம்பரியம் அப்படி ஆக்கிவைத்திருக்கிறது நம்மை…

ஆனால் பாழாய்ப்போன மனது, நம்முடைய அகங்காரமானது – நம்மை வீரமாக, பேராண்மையோடு இருக்கக் கூப்பாடு போடுகிறது. ஆனால நமக்கோ என்ன செய்வது என்பது புரிவதில்லை. எப்படியாவது கோழை இல்லை, உதவாக்கரை இல்லை என்று நம்மை உலகுக்குத் தெரிவிக்க நாம் படாதபாடு பட்டு அல்லாடுகிறோம்.

ஆக, இப்போது நாம் ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுத் தத்துவ’த்தை உபயோகிக்கிறோம்.

 • தமிழகப் பொதுச் சொத்துக்களை சர்வ நாசம் செய்து ஸ்ரீலங்கா அரசுக்குப் பாடம் புகட்டுகிறோம்.
 • தமிழகத்தில் ஷாமியானா போட்டு அடையாள உண்ணாவிரதம் இருந்து ஸ்ரீலங்காவில் வாடும் தமிழ் மக்களுக்கு தலப்பாகட்டு பிரியாணி பாக்கட்டு அனுப்புகிறோம்.
 • தமிழகமெங்கும் சுவரொட்டிகளும், பிட் நோட்டீஸ்களும் அச்சடித்து ஒட்டிக் கிழித்து குப்பைமயமாக்கி, கையலாகாத ஸ்ரீலங்கா நகராட்சிகளுக்குப் பாடம் கற்பிக்கிறோம்.
 • பாடசாலைகளுக்குப் போகாமல், வெளியிலிருந்து கல்லெறிந்து தொலைக்காட்சியில் வீரவசனப் பேட்டியளித்து, ஸ்ரீலங்கா படையினருக்கு மகாமகோ உயிர்ப்பயம் ஊட்டுகிறோம்.
 • இங்கு வரும் சொற்ப ஸ்ரீலங்கா யாத்ரீகர்களுடன் ஜல்லிக்கட்டு விளையாடி நம் பண்டமிழ் வீரத்தை நிலை நாட்டுகிறோம்.
 • ட்விட்டரிலும், வலைப்பூக்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஒரே வீரம்தான், புல்லரிப்புதான்…

… இவற்றைத் தவிர, ராஜபக்ஷவின் படங்களை எரித்து, பொம்மைகளைத் தூக்கில் போட்டு – அந்தக் கொடியவர் ராஜபக்ஷவைப் பல்லாயிரம் முறைகள் கொன்று உயிர்ப்பித்து, கொன்று உயிர்ப்பித்து – அவருக்கே  தான் இருக்கிறோமா இல்லையா என்கிற மனக் கிலேசம் உண்டுபண்ணுகிறோம். ஆக, நம் பேராண்மையை மீண்டும் மீண்டும்  நிலை நாட்டி, எல்லோரும் வெகுகாலம் சந்தோஷமாக வாழ்ந்திருப்போம்.

-0-0-0-0-0-0-0-0-

யோசித்துப் பார்த்தால் இந்தப் பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுக்காக அலையும் அற்பத் தமிழர்களையும் மீறி, தமிழில்-தமிழகத்தில் பல  சிந்தனையாளர்களும், இலக்கியவாதிகளும், நம்முடைய கலாசார மேன்மைக்குப் பணிபுரிபவர்களும் தொடர்ந்து ஈடுபாட்டுடனும் செயலூக்கத்துடனும் பணியாற்றுகிறார்கள் என்பது எனக்குக் கடும் பீதியை அளிக்கிறது!

நான் கடவுளை நம்புபவன் ஆகிவிடுவேனோ என்று எனக்கு மிகப் பயமாகவே இருக்கிறது!!

-0-0-0-0-0-0-0-

மேலும்… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (8/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

3 Responses to “தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி”


 1. ஒரு சுக்கையும் புரிந்துகொள்ளாமல் உளறிக் கொட்டுவது — அய்யோ கண்ணக் கட்டுதே, அய்யய்யோ ரொம்ப நீளம், படிக்க மிடியல — எனத் தொடர்பே இல்லாமல் சோம்பேறித் தனமாக முனகுவது, ஜாதிபேதம்

  ஒவ்வொரு முறையும் ஜெயமோகன் தனது கட்டுரைகளில் இதைத்தான் நம் தமிழர்களின் பலவீனமாக குறிப்பிடுவார்.

  படாவதி படத்தை பத்து நிமிடம் மட்டும் பார்த்து விட்டு வெளியே வந்தேன் என்று சொல்பவர் குறைவு. பத்து முறை பார்த்த அதே திரைப்பட பாடல்காட்சியை கண்கொட்டாமல் நகராமல் தொலைக்காட்சியில் பார்க்கும் நம்மவர்களுக்கு ஈடு இணை வேறெங்கும் இருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.


 2. வயிற்றெரிச்சலோடு சிரிக்க வேண்டி இருக்கு! :(

 3. Anonymous Says:

  படிக்கும் போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நெஞ்சம் பொறுக்காத விஷயமாக இருக்கும் போதும். நீங்கள் எழுதும் போது சீரியஸாக இருப்பீர்களோ ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s