சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள்

November 24, 2013

சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு,  தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]

இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.

ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில்  ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.

ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!

… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற  மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை —  எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு  உந்துகிறது.

இந்த வகையில் பார்த்தால், பாவப்பட்ட திருவள்ளுவரின் மீது கடற்பறவைகள் எச்சமிட ஏதுவாக, தமிழர்களாகிய நாம், கன்யாகுமரிக் கடலோரத்தில் அவருக்கு ஒரு மகாமகோ சிலை வைத்திருப்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

… ஆக, நாம் செய்யும் பல அதீதமான காரியங்கள், இந்தப் புலன்களுக்கு உட்படாத ஆண்மை வீரியக் குறைவுக்கான, அவற்றைச் சமனம் செய்வதான இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இச்சாளரத்தூடே, நாம் நம்முடைய பல குணாதிசியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

இதன், ஒரு வெகு, சுலபமாகக் காணக்கிடைக்கும் எடுத்துக்காட்டு: அடிப்படையில் பூஞ்சையாகவும் நோஞ்சானாகவும் ‘கொத்தவரங்காய் போலவுடம்பு அலேக்’காக இருக்கும் ஒரு சவண்டிப்பயல் — தோல்மேற்சட்டை போட்டுக்கொண்டு என்ஃபீல்ட் தன்டர்பேர்ட் / க்ரூஸேடர் / பஜாஜ் அவெஞ்ஜர் / ஹார்லீ-டேவிட்ஸன் போன்ற பேராண்மைத்தாழ்வு இழப்பீடு  செய்யும் வண்டிகளை தட்  தட்  தட்  தட்  என்று மெள்ளமாக ஓட்டிக்கொண்டு, ஒரக்கண்ணால் யாராவது தம்மைப் பார்க்கமாட்டார்களா, எப்படிப்பட்ட ஆகிருதி படைத்தவன் தான் என்று மெச்சமாட்டார்களா — என்று ஏங்கிக்கொண்டே பவனி வருவது.

மேச்சோ மேன் - Macho man!

மேச்சோ மேன் – Macho man!  எனக்குப் பிடித்த நியால் டொஹர்டி பக்கங்களிலிருந்து…

இந்த MACHOப் பேராண்மையைப் பற்றிய – ஒரு விலாவாரியான அமெரிக்க ஆராய்ச்சி பற்றிய பக்கங்களை, உங்கள் மண்டையில் அடித்துக் கொண்டு படிக்கவும். ;-)

பிற எடுத்துக்காட்டுகள்:

… இளம் வயதில் ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல, தெரிந்தோ தெரியாமலோ செய்து விட்ட தவறுகளால்,  — ஆண்மைக் குறைவு, இந்திரியம் விரயமாகிப் போனதால் உறுப்பு சிறுத்து – பாவம், அது பாட்டுக்குத் துவண்டு போதல், துவண்டு போகாமல் இருந்தாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனாக இருந்தாலும்கூட, தகாத உறவுகளால் ஏகத்துக்குப் புண், கொப்பளம், அரிப்பு, தடிப்பு, எரிச்சல், எழுச்சிக் குறைவு ஏற்பட்டு நீர்த்துப் போதல் என்று ஆரம்பித்து — வாலிப வயதிலேயே வயோதிகக் கிழட்டுத் தன்மையான தோற்றம் ஏற்பட்டு, பின்னர் தொடரும் அமோகமான துரித ஸ்கலிதம். சொப்பன ஸ்கலிதம் போன்ற பலவிதமான பலான  பிரச்சினைகளை குடும்பத்தினருக்கும் சொல்லமுடியாமல், வெளியேயும் சொல்ல முடியாமல் அல்லாடித் தள்ளாடி  — — —  பின், வேறு வழியொன்றும் தென்படாமல் —  கவிராஜ் டாக்டர் சிவராஜ், ஈரோடு குருகோகுல், பாண்டிச்சேரி N தர்மராஜன், பழனி காளிமுத்து (லயன்) — போன்றவர்களிடம் நின்னையே கதியென்று நினைக்கிறேனடாவென்று சரணடைய முடிவு செய்து — — ஏதோவொரு நகரத்தின் மைய பஸ்ஸ்டான்ட் அருகிலுள்ள மகாமகோ மூத்திரச் சந்தில் உள்ள லாட்ஜுக்கு, யாராவது தெரிந்தவர்கள் நம்மைப் பார்த்துவிடுவார்களோ என்று மூஞ்சியைத் துண்டால் மறைத்துக் கொண்டு தட்டுத்தடுமாறி தயங்கித்தயங்கி ரகசியமாகப் போய் நெளிந்து கவிந்து தலையைச் சொறிந்து — மேற்படி எழுச்சித் தமிழடாக்டர்களிடம் பிரச்சினையை விளக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே – அவர்கள் – நேரடியாகவே, “என்ன நேரா எந்திரிச்சு நிக்க மாட்டேங்குதா – ஒரு ஸ்பெஷல் செட் சாப்டுங்க, தடவக் கூடாது, சாப்டணும் – சரியா? ஒரு மாசத்துக்கு, ராத்திரி சம்போகத்துக்கு மின்னாடி சாப்டுங்க – சும்மா எழுந்து டேன்ஸ் ஆடும், ஆனாக்க ஒரு பக்க விளைவும் இருக்காது” எனச் சொன்னவுடன் விதிர்விதிர்த்துப் பின் வெட்கித்துப் பின்னர் மகாமகோ புளகாங்கிதச் சந்தோஷம் அடைந்து துள்ளிக் குதித்துக் கொண்டு — தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், பீமபுஷ்டி லேகியம், கருங்குரங்கு லேகியம், பச்சைப்புறா லேகியம், உடும்பு லேகியம்,  நல்லபாம்பின் தோலடிக் கொழுப்பு இத்யாதிகளை வசதிக்கேற்றவாறு — ஸ்பெஷல் செட் (ரூ பத்தாயிரம் மட்டும்), சூப்பர் செட் (ரூ எட்டாயிரம் மட்டுமே), ஸ்பெஷல்  சாதா செட் (ரூ ஐந்தாயிரம் தான்),  சாதா செட் (ரூ மூன்றாயிரம் – ஆனால் எழுச்சி ஒருவாரத்துக்கு மட்டுமேதான்) என வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து … … … ஒரு கரண்டிக்கு இரு கரண்டி நாளுக்கு மூன்று வேளை சாப்பிட்டும், பல வாரவாரமாக முழுங்கியும் நடனம் ஆட ஒத்துழைக்க மறுக்கும் பாவி உறுப்பின் மீது வெறுப்புற்று…

… நான் என்னைய்யா கேட்டேன்,  பாலே ஃப்லேமென்கோ வகையறா நடனங்களையா கேட்டேன் – வெறும் குத்தாட்டம் மட்டுமே போதுமேய்யா, பாவி  தமிழெழுச்சி டாக்டர்களா!  8-{(

… … … இந்தத் தொடர்ந்து  தொடரும் ‘வாலிப வயோதிக அன்பர்களே’ தொடர்கதை எழவையெல்லாம் சொல்லவில்லை.

-0-0-0-0-0-0-0-0-

நம்மில் பெரும்பாலோர், நிஜ வாழ்வில் Mr. Manகளாக,   கோழைகளாக இருக்கிறோம். ஆனால் விசனம் தரக்கூடியவிதத்தில், நமக்கு மகாமகோ தைரியசாலியாகக் கருதப்படவேண்டும் என்கிற அலாதி அவா. என்ன செய்வது?

ஆனால், ஒரு சந்தோஷமான விஷயம்! கண்டுபிடித்து விட்டனர் – சமூகவியல் விஞ்ஞானிகள்!!  நமக்கு இருக்கவே இருக்கிறது ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுத் தத்துவம்!’

இச்சமயம் உங்களுக்கு ஒரு அழகான புத்தகத்தைப் பரிந்துரை செய்வதில் பெருமையடைகிறேன். அதுதான் நமக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆகியிருக்கக் கூடிய ( நன்றி: கோவையில்  நடந்த ‘தமிழ்மொழி செம்மொழி மாநாடு’) ஜப்பானியத் தமிழறிஞர், சான்றோர் –  பேராசிரியர் நிக்மா நிக்காதா அவர்கள் எழுதிய: ‘தமிழர்களின் பேராண்மை இழப்பீட்டுக் கோட்பாடு’  (‘Theory of Compensatory Machismo of Tamils née Dravidians‘ / Professor Nikma Nikatha, Department Tamil Studies, Tokyo University, Japan / Sluts & Zen Press / 2013); இந்தப் பேராசிரியர் நிக்காதா அவர்கள், நொபெல் பரிசு பெற்ற யஸுனரி கவபாதா அவர்களின் மாமா பையன் என்பதை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மேலும், ஒரு சந்தோஷமான விஷயம்: கிழக்கு பதிப்பக வெளியீடாக, இப்புத்தகத்தினுடைய  என் மொழிபெயர்ப்பு – வரும் சென்னை புத்தகச் சந்தை சமயம் சுடச்சுட (சுட்டு அல்ல, கவனிக்கவும்) வெளிக் கொணரப் படுகிறது. எல்லோரும் அவசியம் வாங்கிப் படிக்கவும். நம்மை அறிந்துகொள்ள இம்மாதிரி வாசிப்புகள் அவசியம் என நினைக்கிறேன்.

வெகுவாக முனைந்து, இப்புத்தகத்தை மிகவும் குறைந்த காலத்தில், சலுகை விலையில் வெளியிட விழையும் பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு பேருக்கு, நம் தமிழர்களை மனோதத்துவ ரீதியாகப் புரிந்து கொள்வதில், அதற்காக அயராமல் பணியாற்றுவதில் அக்கறையிருக்கிறது, சொல்லுங்கள்?

குறிப்பு: இந்தப் புத்தகத்தைப் பிரத்தியேகமாக, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆண்மை கொண்டுதான் அச்சிடப் போகிறாராம். வழக்கமாக நாமெல்லாம் அச்சிட உபயோகிக்கும் பெண்மை இல்லையாம். இது எவ்வளவு பூரிப்பு கொடுக்கும் விஷயம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செவ்வனே செய்யும் அவருடைய செயல்முனைவே அலாதிதான். இவர் என்னுடைய நண்பர் என்பதில் எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது. அவருடைய நோக்கங்கள் வெற்றிபெற என் வாழ்த்துகள். (ஆனால் பெண்மையுரிமைப் போராளிகள் என்ன செய்வார்களோ, ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் இவரைக் கிழித்து விடுவார்களோ என நினைத்தால், எனக்குக் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது என்பதையும் இங்கு நேர்மையாகப் பதிவு செய்யவேண்டும்; என்னதான் பேசினாலும் எழுதினாலும், நானும் ஆண்மைக் குறைவால் வாடுபவன் என்பதையும்! நானும்  தமிழன் தானே!)

-0-0-0-0-0-0-0-0-

சரி. கோட்பாடு குறித்த கோனார் துணைவப் பகுதிக்கு வருவோம்.

ஆக – அட்டைக் கத்தி சுழற்றல், வீராவேசம், இணையத்தில் பொதுவாக உரக்கச் சத்தம் போடுவது, நக்கல் பின்னூட்டங்கள் இடுவது. தன் கடன் வாங்கிய  பாண்டித்தியத்தைப் பறைசாற்றுவது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக இருப்பது. இணையத்தின் அனாமதேயத்தனத்தை உபயோகித்து விதண்டாவாதங்களிலும் வீர அவதூறுகளிலும் ஈடுபடுவது (ஆனால், மாட்டிக்கொண்டால் ஓடி ஒளிவது, குய்யோ முறையோ என்று அழுது ஆகாத்தியம் செய்து ‘என் நிலையைப் பாரீர்’ எனக் கழிவிரக்கப் பாட்டைப் பாடுவது).

இந்த அட்டைக்கத்தி வீரர்களுக்கு, அலைமோதும் அட்டைக்கத்திவீரக் குட்டிக் குஞ்சாமணி இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு வேறு!

நாம் செய்ய முடியாததை — வெள்ளை வடக்கத்திய அழகுக் கனவுக்கன்னிகளை அரவணைத்து பூண்டு நாற்ற அதரபானம் பருகுவது, தொப்புளில் பம்பரம் விடுவது, அயோக்கிய படுபயங்கர வில்லன்களைத் தனி ஆளாக அடித்து நொறுக்குவது, ஏமாந்தால் அந்தக் கேடுகெட்ட ஸ்விட்ஸர்லாந்திற்குப் போய் லல்லல்லா ‘லவ்வு’ பண்ணுவது. படாடோபமான மாடமாளிகைகளில் ஆடம்பர ஜமீந்தார் வாழ்க்கை நடத்துவது, அசந்தால் ஒரு கும்பலைக் கூட்டிக்கொண்டுபோய், மாய இசையாளர்களை அழைத்துக்கொண்டுபோய் கடற்கரையில் கரகாட்டமும், பாலங்களில் மேல் பாலே ஆட்டமும் ஆடுவது, கோரமான – தொடர்பேயில்லாத உடைகளை உடுத்துவது — போன்றவற்றை ஒரு பிலிம் ரஜினியோ, பிலிம் விஜய்யோ அல்லது பிலிம் எம்ஜியாரோ செய்தால், அது இன்னமும் புளகாங்கிதம் கொடுக்கும், லாகிரியை எழுப்பும். ஆக நமக்கு வேண்டிய அளவு பேராண்மை-இழப்பீடு,  நம்முடைய மகாமகோ திரைப்படங்களைப் பார்த்தாலே கிடைக்கும்.

மட்டங்கள், மட்டுப்படா. ஆனால் – பைபிளுக்கு வருத்தத்துடன் — பாருங்கள், பார்க்கப்படும். எழுங்கள், எழுச்சிபெறப்படும். அவ்வளவேதான்!

… சரி. புரிகிறது.  நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

(அடுத்த பதிவில் தொடரும்…)

-0-0-0-0-0-0-0-

மேலும்… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்! 07/08/2011

திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்?? (ஒரு γ ரே ரிப்போர்ட்) 14/05/2012

2 Responses to “சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள்”

  1. ravikumar Says:

    sir, thankz for recomending book. plz tell when the book released.

  2. ramasami Says:

    ஆச்சரியப்படவைக்கும் ‘ரவிக்குமார்!’

    அய்யா, என்னுடைய அடுத்த பதிவின் தலைப்பு: “வாழ்க்கையை வெறுத்து தூக்கில் தொங்குவது எப்படி?”

    நிற்க, பத்ரி அவர்களும் கூடவே தொங்கவில்லையானால், அவர் ஒருவேளை பதிப்பிக்கலாம்.

    தாளமுடியாமல் துவளும்,

    __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s