வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (2/3)

October 19, 2013

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?

நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.

பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான்.

நாம் 1970களில் மாய்ந்து மாய்ந்து (ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வீதம் ஐந்தாறு நாட்கள்) பார்த்த க்ரிக்கெட் மூலமாக நாம் என்ன பெரிய நீண்டகால தாக்கத்து பெற்றிருக்கிறோம்? ஒவ்வொரு ஓவரையும் நினைவு வைத்திருக்கிறோமா? நினைவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவற்றால் தற்காலத்தின் நாம் அடையும் பயன் என்ன?

தொலைக்காட்சி பாருங்கள் – ஆனால் அதன்  ’நன்மை’களை வேலை மெனக்கெட்டு கண்டு பிடித்து எழுப்பி, கந்தறகோளமாக நிறுவ முயல வேண்டாமே?

நீங்கள் ஒரு வாரம் முன்பு பார்த்த அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, உங்களை இப்போது ஈர்க்கிறதா? அதற்காக நீங்கள் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளலாம். அவற்றிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் பாதிக்கப் பட்டு, ஒரு தனிமனிதன் அல்லது சமூகம் உய்யும்படியான, மேலெடுக்கப் படுவதற்கான நீண்டகாலத் தாக்கத்துள்ள சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லை.

ஆனால் ஒரு விஷயம்: நான் சொல்வதையெல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டாம். யோசித்து, தரவுகளை உபயோகித்து உங்கள் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு, அவற்றைப் பொருத்தி —  நீங்கள் வரக் கூடிய கோட்பாடுகள் மூலம், உங்கள் உலகத்தை அணுகுங்கள். அவ்வளவுதான்.

11. சரி, பார்க்கலாம். எப்போதும் படித்துக் கொண்டேயிருக்க முடியாதல்லவா? பின் என்னதான் செய்வது?

அ: உங்கள் குழந்தைகளுடன், மனைவி / துணைவிகளுடன் பேசி நேரத்தைக் கழிக்கலாம்; ஆப்த நண்பர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக் கொள்ளலாம்.

ஆ: நல்ல, அமைதி கொடுக்கும் – உங்களுக்குப் பிடித்த இசை கேட்கலாம். வானொலி (அற்பத்தின் சின்னங்களாக இருக்கும் எஃப்எம் அலைவரிசைகளை அல்ல; ஏஎம் மட்டும்) கேட்கலாம்.

இ: நல்ல புத்தகங்கள் படிக்கலாம். எழுதலாம்.

ஈ: எதையாவது புதியதாகக் கற்றுக் கொள்ளலாம்.

உ: கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கலாம்.

ஊ: நடை / ஓட்டம் / மிதிவண்டிப் பயணம் செல்லலாம். தோட்டவேலை / உடற்பயிற்சி செய்யலாம். தெருவோரத்தில் மரம் நட்டுப் பராமரிக்கலாம்.

எ: முக்கியமாக — உங்கள் குழந்தைகளுடன் படிக்கலாம், விளையாடலாம்,  பரிசோதனைகள் செய்யலாம், படம் வரையலாம், பட்டம் விடலாம், கில்லியாடலாம், சதுரங்கத்தில் ஆழலாம், கதை சொல்லலாம், ஆடலாம், பாடலாம், கோமாளித்தனம் செய்யலாம் – அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடனும் நேரம் செலவிடலாம்… ஆக, மனதளவில், ஆகவே உடலளவிலும் சாகும் வரை உற்சாகத்தோடு வாழ்க்கையில் ஈடுபடலாம்

கவனிக்கவும்: இந்த ஜாபிதாவில், கணினி விளையாட்டுகள் விளையாடுவது, இணையத்தில் மேய்வது, கீச்சுவது, ஃபேஸ்புக்கில் முக்குவது, போர்னோ படம் பார்த்து முனகுவது, கண்டமேனிக்கும் எலியின் கொட்டையைக் கசக்கி உருட்டுவதெல்லாம் இல்லை.

12. சரி – ஆனால், நீ சொல்வது போல நான் ஏதாவது மேற்கண்ட வேலையைச் செய்ய வேண்டுமென்றால். வீட்டில் இருக்கும் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? வீட்டுவேலையைக் கூட நாங்கள் பெற்றோர்கள் செய்யமுடியாது அல்லவா? நாடு இருக்கிற இருப்பில், குழந்தைகளை வெளியே அனுப்பமுடியாது. இந்த நிலையில், ஒரு ஆயா கூட உட்காரவைப்பது போல, குழந்தைகளை ஒரு தொலைக்காட்சிமுன் உட்காரவைத்து விட்டால் – பாதுகாப்பிற்குப் பாதுகாப்பு, நம் காரியங்களையும் நாம் செய்து கொண்டிருக்கலாம். குழந்தைகளும் ஆனந்தமாக கேலிச்சித்திரக் கேளிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பர். எவ்வளவோ நல்ல விஷயங்கள் வருகின்றன தொலைக்காட்சியில், உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்?

அய்யா – உங்கள் குழந்தை குறித்த உங்கள் சிரத்தையின்மையை விளக்கியதற்கு நன்றி. யோசியுங்கள் – உங்கள் பெற்றோர்கள் உங்களை இப்படித்தான் வளர்த்தார்களா? அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு என்று கதை சொல்கிறீர்களா? நன்றி.

குழந்தைகளைப் பெறுவதை ஒரு உயிரியல் ரீதியான தற்செயல் நிகழ்வு – ஆகக் கருதுகிறீர்கள்; குழந்தைகள் வளர்ப்பதை, தாங்களும் வளர்வதை – நடக்கவேண்டியது தற்செயலாகவே நடக்கும் என்று —  ஆக, ஏன் அதற்கு, தேவைக்கதிகமாக மேலும் மேலும்  மெனக்கிட வேண்டும் என நினைக்கிறீர்கள் எனத் தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரை – குழந்தை வளர்ர்பு என்பது ஒரு யோகம். நம்மால் நம் குழந்தைகளுக்கு  என்ன செய்யப்பட வேண்டும் என்பதை யோசித்துச் சரியாகச் செய்யவேண்டும்; இதற்குக் குறுக்கு வழிகள் இல்லை. இதையெல்லாம் மீறி விஷயங்கள் சிக்கலாக ஆகலாம் – ஆனால் இவற்றிற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

மேலும், வீட்டுவேலைகளில் குழந்தைகளை நிச்சயம் ஈடுபடுத்தலாம். எனக்கு இது ஒரு பிரச்சினையில்லை. நான் பொத்தாம் பொதுவாக சைல்ட் லேபர் – குழந்தை வேலையாட்களை உபயோகிப்பதை எதிர்ப்பவனில்லை. உழைப்பின் மேன்மையை – குழந்தைகள் சிறுவயதிலிருந்தே கற்றுக் கொள்வது முக்கியம். பணத்தின் தேவையை (அருமையை அல்ல) அவர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

காய்கறி நறுக்குதலிருந்து, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, பெருக்கிச் சுத்தம் செய்வது, கழிவறைகள் மேலாண்மை என்று அனைத்தையும் செய்யச் சொல்லலாம். ஆனால், இதற்கெல்லாம், பெற்றோர்களும் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்பவர்களாக இருக்கவேண்டும்.

புத்தகப் படிப்பிற்கு உங்கள் குழந்தைகளை பழக்கியிருந்தால் (இதற்கு, நீங்கள் படிப்பவராக இருக்கவேண்டும்) – நீங்கள் வேலை செய்யும்போது, குழந்தைகள் ஆனந்தமாகப் படித்துக் கொண்டிருப்பர்.

13. நீ 20 வருடங்களாக தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் இருக்கிறாய் (உண்மையா இது என்று தெரியவில்லை) – ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியென்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் நாங்கள் அப்படியல்ல. திடீரென்று எப்படி நிறுத்த முடியும்? அவர்களிடமிருந்து எப்படி, இந்த சாக்லேட் பிடுங்குதலைச் செய்யமுடியும்? இது நியாயமா?

கஷ்டம்தான். ஆனால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேதானா பிறந்தோம்? (தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேதான் இறக்கிறோம் என்பது ஒரு உண்மையென்றாலும்)

ஆனாலும், நீங்கள் ஏன் என்ற கேள்வியிலிருந்து எப்படி என்ற கேள்விக்கு வந்திருப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

எதற்குமே ஆரம்பம் என்று ஒன்று இருந்தே தீரும். குழந்தைகளுடன் உட்கார்ந்து அவர்களை மதித்து ஒரு உரையாடல் நடத்தினால் – இந்த உரையாடல்களைத் தொடர்ந்து நடத்தினால், அவர்கள் நிச்சயம் கேட்பார்கள்; அடிப்படையில் குழந்தைகள் நேர்மையானவர்கள். நீங்கள் தான் உங்கள் குழந்தைகளைப் பற்றி, ஒரு கீழ்மையான அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள், இதுதான் பிரச்சினை.

என்னுடைய பெங்களூர் மாணவர்கள் (10-12 வயதினர்) மூன்று பேரிடம் இந்தத் தொல்லைகாட்சி இருக்காமலிருக்கவேண்டிய அவசியத்தை – நான் தொடர்ந்து வாரக்கணக்கில் (விட்டு விட்டுத்தான்) பேசி, அவர்களை ஆமோதிக்கச் செய்திருக்கிறேன். பின்னர், இந்த மணிகள், தங்களுடைய பெற்றோர்களிடம் – உரையாடல் ஒத்துவராத காரணத்தால் சண்டை போட்டு  சத்யாக்ரஹம் செய்து அவர்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியைத் துரத்தினார்கள்.  இவர்களெல்லாம் தங்கள் படிப்பிலும். விளையாட்டிலும், மிக முக்கியமான  பொது அறிவிலும்  இன்னமும் சிறந்து விளங்குகிறார்கள்.அவர்களுடைய மீஅறிதல் நிலையும், சக உயிரைப் பற்றிய, இப்பூவலகத்தைப் பற்றிய புரிதலும், கரிசனமும் அபாரமானவை.

ஆனால், அவர்களுடைய பெற்றோர்களுக்கு நான் இரண்டு வருடங்கள் போல வேப்பங்காயாக இருந்தேன். என்னை ஒரு முட்டாள், பைத்தியக்கார மதபோதகன் (crazy evangelist) என்றெல்லாம் அழைத்து மின்னஞ்சலனுப்பினார்கள். இப்போது சமனம் ஆகிவிட்டது. சுபம். 8-)

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் — நாம் நேரடியாக,  ஊரான் வீட்டையும் அகிலத்தையும் நேசித்துப் போராளியாகவெல்லாம் ஆக வேண்டாம் – முதலில் நம்  குழந்தைகளையாவது, மதித்து அவர்களுடன் உரையாடக் கற்றுக் கொள்ளவேண்டும் – இது செய்தாலே போதுமானது.

லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்கும் மனப்பான்மையோடு நம் எதிர்காலத்தை உருவாக்கப் போகிறவர்களை அணுகக் கூடாது.

இதனைச் செய்தால்  மிட்டாய் கொடுப்பேன். அதனைச் செய்தால் ஹோட்டலில் சாப்பிடலாம். முதல் மதிப்பெண் வாங்கினால் புது சைக்கிள்.  கணக்கில் 100 வாங்கு, உனக்கு ஐபேட் கொடுக்கிறேன்.   கணக்கு+அறிவியல் பரீட்சைகளில் 200/200 எடு, உன்னை சிங்கப்பூர் அழைத்துச் செல்வேன். இவை எதுவும் வேண்டாம். லஞ்சம் வேண்டாம்.

இந்த அற்பத் தொலைக்காட்சிப் பெட்டி வேண்டாம் என்று புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு லஞ்சம் தேவையேயில்லை. யோசித்தால் எதற்கும் லஞ்சம் தேவையில்லை. உங்கள் குழந்தைகள் நேர்மையானவர்கள். என்னை நம்ப வேண்டாம். அவர்களை நம்புங்கள்.

14. சரி, உன் வீட்டில் 20 வருடத் தொலைக்காட்சியில்லாமை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!

சரி.  நீங்கள் நம்பவேண்டாம்.

15. சரி, அதை விடு – என் குழந்தைகள் மிகவும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். இதைத்தான் கேட்கவந்தேன். நீ ஒரு தவறான பிரச்சினையைச் சிடுக்கவிழ்க்க முயன்று கொண்டிருக்கிறாய். என் குழந்தைகளை எப்படி நான் தொலைக்காட்சியிடமிருந்து மீட்பது? முதலில் இதற்குப் பதில்.

நம் நாட்டின் பொதுச் சொத்தான – பாபுஜி சொல்லியிருப்பது போல – மாற்றங்களை முதலில் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

நீங்கள், நேர்மையாக – தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தினால்தான் உங்களுக்கு – உங்கள் குழந்தைகள் பார்ப்பதைக் கட்டுப் படுத்த மனவலியிருக்கும்.

ஓன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்: நம் குழந்தைகள் மஹாபுத்திசாலிகள் – அவர்களை ஏமாற்றவே முடியாது. நமது இரட்டை வேடங்களை அவர்கள் புரிந்துகொள்வதைப் போல, வேறு எந்த வயதான மனிதனும் புரிந்துகொள்ளவே முடியாது.

16. ஹ்ம்ம்… என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு ஏதாவது திசையிலிருந்து இதை அணுக முடியுமா?

ஓ, நிச்சயமாக.

ஐயா, பாருங்கள் – உங்கள் குழந்தைகள் பிறந்ததிலிருந்து சுமார் 17-18 வயது வரை உங்களுடன் இருக்கப் போகிறார்கள். பின்னர் வேறு ஏதாவது வேலைக்கோ, மேற்படிப்புக்கோ, உங்கள் குடும்பக் கூட்டை விட்டுச் சென்றுவிடுவார்கள். நீங்களே அழைத்தாலும் வரமாட்டார்கள். பின்னர் திருமணம் இன்னபிற. அவரவர் வாழ்க்கையில் அவரவர் கெடுபிடிகள், அழுத்தங்கள்…

ஆக – உங்கள் குழந்தைகள், நினைவு தெரிந்து உங்களோடு இருக்கும் இந்தச் சொற்ப பனிரெண்டு வருடங்களில் இரண்டு வருடங்களை தொலைக்காட்சி முன் தானா செலவழிக்கவேண்டும்?

பின்னர் அவர்கள் – தாங்கள் தம் குழந்தை வயதில் பெற்றோர்களுடன் சேர்ந்து செய்த ஒரே விஷயம் – தினசரி இந்த வெற்றுத் தொலைக்காட்சி பார்த்ததுதான் என்கிற எண்ணத்தையா உருவாக்க வேண்டும்?

சரி – இந்தக் குழந்தைகள் உங்கள் குடும்பக்கூட்டை விட்டுச் சென்றவுடன் திடீரென்று வாழ்க்கை வெறுமையாகி விட்டது (=empty nest) போலத் தோன்றும். அவர்கள் உங்களை உதாசீனம் செய்வது போலத் தெரியும். ‘மட்டு மரியாதையில்லாமல்’ இருக்கிறார்களோ என வருத்தப் பட்டு சுயபச்சாதாபக் கழிவிரக்கத்தில் முடியும்… ஆனால், தொலைக் காட்சி பார்க்காமல், அந்த நேரத்தில் ஏதாவது சுவாரசியமாகச் செய்ய நீங்கள் கற்றுக் கொண்டிருந்தால் – உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பிடிப்பு இருக்குமல்லவா? உங்களுக்கென்ற இன்னொரு இன்னிங்ஸை தைரியமாக, சந்தோஷமாக ஆடலாமல்லவா?

17. நேஷனல் ஜியாக்ரஃபிக், டிஸ்கவரி, ஹிஸ்டரி, போகோ சேனல்களைக் கூட குழந்தைகள் பார்க்க வேண்டாமா?

வேண்டாம், என் குழந்தைகள் இவற்றைப் பார்த்ததில்லை. எனக்கு ஒரு 14 வயது மகள் + ஒரு 9 வயது மகன். இவர்களுக்கு, இந்தச் சேனல்களின் கடாகடாகுடுகுடு டமால்டிமீல் இரைச்சல் டாக்குமென்டரிகளைப் பார்க்காமலேயே ஒரளவுக்கு அறிவியல் / கணிதம் / இலக்கியம் / மொழிகள் / உடலுழைப்பு / எழுதுதல் / விளையாட்டு / ஓவியம் / இசை / நிறையப் படித்தல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கிறது. நன்றி.

எங்கள் குழந்தைகளும் எல்லா இடங்களிலும், குடும்பங்களிலும் இருப்பது போல, சராசரிக் குழந்தைகள்தான். ‘ஸ்மார்ட்’  என்றெல்லாம் இல்லை. இந்த ‘ஸ்மார்ட்’ என்கிற வார்த்தையையே நான் அடியோடு வெறுக்கிறேன்.   இது சுட்டும் ஆட்கள் — அடிப்படையில் system beaters; அடிப்படை நேர்மையில்லாமல் குறுக்கு வழிகளில் எந்தப் பேய்க்கு என்ன பலியை எப்படி, எப்போது, யாரால் கொடுத்தால் காரியம் ஆகும் என நன்றாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள். கயமையுடன் செயலாற்றுபவர்கள். ஆம், கருணாநிதி அவர்கள் ஒரு ஸ்மார்ட் மனிதர் தாம்.

18. சரி. ஒரு சேனலுமா சரியில்லை? இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது சரியா?

என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கை  எனக்கு  முக்கியம். சில அடிப்படை விதிகளும் நியதிகளும் முக்கியம்.

அதனால்தான், ஆகவேதான் என் நிலைப்பாடு.

என் அம்மா – இக்காலங்களில், தினம் சில மணி நேரங்கள் தூர்தர்ஷன் நிறுவனத்தின் ‘பொதிகை’ என்றவொரு சேனலைப்  பார்க்கிறார்கள்; மிகவும் சிலாகித்துத் தான் சொல்கிறார் – நிறைய இசை நிகழ்ச்சிகளும், படிப்பாளிகள் பங்கு பெரும் நிகழ்ச்சிகள் வருகின்றன என்கிறார். இம்மாதிரி விஷயங்களில், என் அம்மாவின் மதிப்பிடும் தன்மையில் நான் நம்பிக்கை வைத்திருப்பதால், ஒருகால் இந்தப் ‘பொதிகை’ ஒரு விதிவிலக்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு, தொலைக்காட்சிக்கெல்லாம் நேரமில்லை. இந்த எழவு இல்லாமலேயே, எனக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது போகமுடிகிறது, போகாவிட்டாலும் இசையைக் கேட்க முடிகிறது. இதனைத் தட்டச்சு செய்யும் போது கூட, ஹென்ரிக் கொரெக்கி அவர்களின் ஸிம்ஃபனி ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  மகத்தான படிப்பாளிகளின் எழுத்தைப் படிக்கிறேன். இவை போதும்.

அடுத்த (கடைசி) பாகம்:

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (3/3)

2 Responses to “வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (2/3)”


  1. //காய்கறி நறுக்குதலிருந்து, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, பெருக்கிச் சுத்தம் செய்வது, கழிவறைகள் மேலாண்மை என்று அனைத்தையும் செய்யச் சொல்லலாம். //

    எங்க வீட்டில் அனைத்தும் நான் தான் செய்கிறேன், இன்றளவும். :))))


  2. புத்தகங்கள் படிக்கவும் நேரம் ஒதுக்கி வைத்துக் கொள்வேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s