[+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70]
September 12, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
51. மோதி, இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி. பாருங்கள், குஜராத் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து விட்டாரா என்ன? பின்னர், அதைக்கூட முடிக்காமல் இந்திய அளவில் என்ன செய்ய வர வேண்டும்? அப்படி வெளியே வந்து இந்தியாவைக் கொஞ்சம் ஆண்டு விட்டு, இந்தியப் பிரச்சினகள் அனைத்தையும் தீர்க்காமல், ஐநா சபை கை நாசபையென்று என்று போகாவிட்டாலும் – சொல்ல முடியாது, விசா கொடுத்தால், அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பாமல் அங்கேயே தங்கி, ஆகாத்தியம் செய்து ஒரு சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கூட ஆகி விடுவார் இந்த மனிதர்… ஆக, நம் இந்தியாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத இவர் – இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி – புரிந்ததா ??
சும்மா குஜராத்தில் குறு நில மன்னராக இருக்காமல், என்ன திடீரென்று தினவு – இந்தியாவைக் கட்டியாள வேண்டுமென்று? குண்டு குஜராத் சட்டியில் ஒட்டகம் ஓட்டிக் கொண்டிருக்காமல், ஏதோ பித்துப் பிடித்து — அவர் சும்மனாச்சிக்கும் உத்தராகண்ட்வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது போல பாவ்லா காட்டி, நிவாரணம் கொடுக்கிறேன் பேர்வழியென்று அற்பக் கோடிகள் கொடுத்து – அந்த மாநிலத்தை அவமானம் எல்லாம் வேறு செய்திருக்கிறார். இவர், உத்தராகண்ட் மாநிலத்துக்கு எதிரி நம்பர் 1.
52, மோதி, மலைவாழ் ஜனங்களுக்கு எதிரி – பாருங்கள் – அவர் மாநிலத்தில் பொதுவாக மலைகளே இல்லை – இப்போது குஜராத் வரைபடத்தைப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். இப்படி மலைகளையே ஒழித்து, அதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த இந்த மனிதரை நான் எப்படி உயர்த்திப் பிடிக்கமுடியும்?
ஆ! என்ன சொல்கிறீர்கள்? குஜராத்தில் மலைகளும் மலைவாசஸ்தலங்களும் இருக்கின்றனவா?? என்ன அநியாயம் – இவற்றை, நிச்சயம் மோதி, அண்டை மாநிலங்களில் இருந்து திருடிக் கொண்டிருப்பார்தாம்! ச்சீ, என்ன கேடுகெட்ட மனிதர் இவர்! நான் இதுவரை, நம்முடைய செல்லமான திராவிடப் பாரம்பரியத்தில், மணல் கொள்ளை, மயான கொள்ளை, புறம்போக்கு நிலங்களை ‘வளைத்துப் போடுவது,’ போன்றவைகளைத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் – ஆனால், இந்த ஆள் இவைகளையெல்லாம் தாண்டி இப்படி மலை விழுங்கி மகாதேவனாகவல்லவோ இருக்கிறார்! ஆனால் யோசிக்கிறேன்… நல்ல வேளை, இமயமலைக்கும் குஜராத்துக்கும் இடையில் நம்முடைய தோழி மாயாவதி தன்னுடைய மகாமகோ கல்யானைப் படைகளுடனும் பஹுஜன் கட்சிச் சொறிகளுடனும், அவருக்குப் பின் முலாயம்ஸிங் யாதவுடைய கட்சிச் சிரங்குகளுடனும் அணிவகுத்துக் கொண்டு இருக்கிறார்க்ள் – இவர்களை மீறி இவர்களுக்குப் பாத்தியதைப் பட்ட இமயமலையை இந்த மோதி சூறையாட முடியாதுதான்… ஆகவே கவலை வேண்டாம் எனத்தான் நினைக்கிறேன். ஆசுவாசமாக இருக்கிறது…
ஆனால், ஆனால்… இப்போதுதான் நான், ஒரு சென்டிமீட்டர் அளவுகோல் வைத்து,என்னுடய இந்திய வரைபடத்தில் அளந்து பார்த்தேன் – குஜராத்தில் இருந்து ஏறக்குறைய ஐந்தே சென்டிமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது இமயமலை! மோதி ஒரு சின்னக் குதியல் குதித்தால் அவர் இமாலயத்தைத் தாண்டி மங்கோலியாவே சென்று விடுவாரே என்பதை நினைத்தால், எனக்கு மிக மிகக் கவலையாகவே இருக்கிறது – வழியெல்லாம் சிதறிக் கிடக்கும் மலைவாழ்ஜாதியினரை நினைத்தால், அவர்கள் கதி என்னாகும் என்பதை நினைத்தால் பெருமூச்சு பெருமூச்சாக வருகிறது, அடிவயிற்றைப் பிசைகிறது. ஆகவேதான், மலைக்குடிகளின் மீது, அவர்களது எதிர்காலம் குறித்தெல்லாம் மிகுந்த கரிசனம் உடையவனாக இருப்பதால் தான், நான் மோதியை வெறுக்கிறேன். புரிந்ததா?? (ஏன் இந்தக் கேடுகெட்ட செய்தியை, என்டிடீவி, ஸன் டீவி, பிபிஸி காரர்கள், தொழில்முறை மலைவாழ்மனிதவுரிமைக் காரர்களெல்லாம் வெளியிடமாட்டேன் என்கிறார்கள் என நினைத்தால், இவர்களும் ‘பொட்டி’ வாங்கியிருப்பார்களோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது.)
53. மோதி, குஜராத்தியர்களின் எதிரி – பாருங்கள், இவர் குஜராத்தை விட்டு வெளியே வரத் துடிக்கிறார். அப்படி, ஏன் தன்னுடைய சொந்த மாநிலத்தை அம்போவென்று விட்டுவிட்டு மத்திய அரசு பக்கம் செல்லவேண்டும்? அப்படி அவருக்குப் பிடிக்காத, ஒவ்வாத என்ன விஷயம் அங்கே நடந்து கொண்டிருக்கிறது? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஆகவே.
54. அவர் குஜராத்தின் சுற்றுப்புறச்சூழலுக்கே எதிரி – பாருங்கள், இந்த அலங் கடற்கரையோர கப்பலுடைக்கும் தொழிலால், கடற்கரை மாசு படுகிறது. இதை ஏறக்கட்டி மூடக் கூட இவருக்குத் துப்பில்லை. இந்த அழகில், ஜப்பானுடன் சேர்ந்து இங்குள்ள கப்பலுடைக்குக் தொழிலை புத்துருவாக்கம் செய்ய வேறு முயன்று கொண்டிருக்கிறாராம். தேவையா? ஆகவேதான்.
55. அவர் மத்தியப் பிரதேசத்தின் எதிரி – பாருங்கள், இவர் ஆதரித்த, ஆரம்பித்த, தொடர்ந்த நர்மதா தொடர்பான கட்டுமானங்களால் குஜராத்துக்குத் தான் மேலதிகமான நன்மையே தவிர, மத்தியப் பிரதேசத்துக்கு அல்ல.
56. படித்துப் படித்துச் சொல்கிறேன் – அவருடைய குஜராத்திற்கே அவர் பல விதங்களில் எதிரி – பாருங்கள், இவர் ஆரம்பித்த நர்மதா தொடர்பான கட்டுமானங்களால் மத்தியப் பிரதேசத்துக்குத்தான் அதிக அளவு நன்மையே தவிர, குஜராத்துக்கு அல்ல.
57, மோதி மெத்தப் படித்தவர் அல்லர். அமர்த்யா ஷென் போல, ப சிதம்பரம் போலவெல்லாம், வெளி நாடு போயெல்லாம் மேற்படிப்பு படித்தவரில்லை, கிழித்தவரில்லை. இவரால் எப்படி, உயர்பதவியிலிருந்து நிர்வாகம் செய்ய முடியும்? (ஆனால், ராஹுல் காந்தியைப் பாருங்கள் – இவர் தற்போது ஒரு நாற்பத்திச்சொச்ச வயது இளைஞர் தான் – என்ன இதுவரை படித்திருக்கிறார் என்பது இது வரை எனக்குத் தெரியாத மகாமகோ ரகசியமாக இருந்தாலும், எனக்குத் தோன்றுகிறது — மேற்படிப்பெல்லாம் இன்னமும் படிக்கலாம் இவர் – ஏனென்றால், இவர் மோதியை விட வெள்ளை நிறம் கொண்டவர்)
58. குஜராத் ஒரு சிறிய மாநிலம் – அங்கு அவர் நன்றாக ஆட்சி செய்திருந்தாலும் கூட (எனக்குச் சந்தேகம்தான்), எப்படி அவர் ஒரு பிரதமராக இந்தியாவை நிர்வகிக்க முடியும்? எவ்வளவு பெரிய நாடு இது? விதம் விதமான ஆறிய (= cold blooded) விலங்குகளும் திராவிட விலாங்குகளும் உடைய தேசமிது? எப்படி அவருக்கு இது சாத்தியமாகும்? (ஆனால் ராஹுல் காந்தி விஷயம் வேறு – அவர் இளையவர் – அவர் சீக்கிரம் கற்றுக் கொள்வார் – இப்போதுதான் தொழிலதிபர்களுடன் பேச்செல்லாம் பேசி, நகைச்சுவை யுணர்ச்சியை இந்தியர்களுக்கு ஊட்டோதிஊட்டென்று ஊட்டிக் கொண்டிருக்கிறார் வேறு! குடிசை குடிசையாகப் போய் அந்தப் பாவப்பட்ட ஏழைகளின் கஞ்சியையும் லவட்டிக் கொள்கிறார்கூட! தேறிக் கொண்டுவருகிறார்தான்!)
59. மோதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தலித் அல்லர். ஆகவே அவர் தலித்களுக்கு எதிரி. நம்மூர் ராமதாஸ் போலத்தான் அவர். திராவிட இயக்கத்தினர் போன்றவர்தான் அவர் – ஒரே குட்டையில் ஊறாத, ஆனால் அதேபோல மட்டைதான் அவர்… ஆகவே, தலித்களைக் காங்க்ரெஸ் தான் காப்பாற்ற முடியும். அதனால்தான்.
60. மோதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் உயர்ஜாதியினர் அல்ல. ஆகவே அவர் உயர்ஜாதியினருக்கு எதிரி. உயர்ஜாதியினரைக் காங்க்ரெஸ் தான் காப்பாற்ற முடியும். ஆகவே.
61. மோதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான். ஆனாலும் அவர் உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனர்களின், பார்ப்பனீயத்தின் சர்வாதிகாரத்தை, அந்தக் கேடுகெட்ட ஆர்எஸ்எஸ் காக்கிடவுசர் காரர்களை; அவர் விலைபோய் விட்டார். ஆகவே, அவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் எதிரி. ஆகவே, பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் காங்க்ரெஸ் தான் காப்பாற்ற முடியும். புரிந்ததா?
62. மோதி நக்ஸல்பாரிகளின் எதிரி – பாருங்கள், அவருடைய காட்டாட்சியில் கேவலமான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சூழ்நிலையில் — ஒரு குஜராத் மாநில அமைப்புக் கமிட்டியோ அல்லது ’வினவு’ தர மகத்தான புரட்சிவாதிகளோ இல்லை… என்ன கேவலம் இது! குறைந்த பட்சம் இந்தப் புரட்சிக்காரர்களின் நகைச்சுவைப் பங்களிப்புக்காகவாவது இவர்கள் குஜராத்தில் இருக்கலாமே, இருக்க விடலாமே! மேலும், இவர்களைப் போன்றவர்களெல்லாம், மோடியின், சங் பரிவாரத்தின் அதிகாரத்தை, அதன் வீச்சைக் குறைக்க, இல்லாமல் இருந்தால், முதலாளித்துவம் துளிர் விட்டு, குஜராத் ஒரு முதலாளித்துவ வர்க்கச் சர்வாதிகாரமாகி, அமெரிக்கா, ஸ்கேன்டிநேவிய நாடுகள் போல அல்லது ‘காந்தி கண்ட சுயராஜ்ஜியம்’ போல வளர்ச்சி கிளர்ச்சி யெல்லாம் பெற்றுவிடுமோ, சுபிட்சம் பரவிவிடுமோ எனப் பயமாகவே இருக்கிறது. சமூக ஏற்றத் தாழ்வுகள் பரவலாகவும், கந்தறகோளமாகவும் இல்லையென்றால் எப்படித்தான் புரட்சிப் பூபாளத்திற்கு, புதிய விடியலுக்குப் பாடுபடுவதாம்? அதனாலே தான்.
63. பாருங்கள் – அமெரிக்கா போகக் கூட முடியாது அவருக்கு, அவரால் தனக்கு அமெரிக்கா போக, ஒரு அற்ப விசாவைக் கூடப் பெறமுடியவில்லை. கண்டமேனிக்கும் கணினித் தொழில்நுட்பத் துறை அற்பக் குளுவான்கள் கூட வெகு சல்லீசாக அமெரிக்கா போகமுடிகிறது என் தாத்தாப்பாட்டிகள் கூட தொளதொள பேன்டும் புடவையும் அதேசமயம் நைகி ஷூவையும் போட்டுக் கொண்டு, தஷ்புஷ் ஆங்கிலம் பேசிக்கொண்டு, சுலபமாக விசா பெற்று ‘ஸ்டேட்ஸ்’ போக முடிகிறது… ஆனால் இந்த மோடியால் இந்த விசா எழவைக் கூடப் பெற முடியவில்லையாம்! என்ன கதை!! இதைக் கூடப் பெற முடியாத இவரால் எப்படி நம் நாட்டை நிர்வகிக்க முடியும்?
64. அமெரிக்கா இவருடைய எதிரி – ஏனெனில் இவருக்கு விசா கொடுக்க மறுத்தவர்கள், அந்த அமெரிக்க அதிகாரிகள்தாம். ஆனால், வியக்கத்தக்க விதமாக ரஷ்யாவும் இவருடைய எதிரி – ஏனெனில், அமெரிக்காவே எதிர்த்தும், வழக்கம் போல அதன் செயல்பாட்டின் எதிர்ப்பதமாக ரஷ்யா, முட்டி மோதிக்கொண்டு வந்து மோதியை ஆதரிக்கவில்லை. அவரை லாவணி பாடி அழைத்து விசா கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை, உலகத்தின் இரு முக்கிய நாடுகளின் ஆதரவைப் பெறாத இவரை, எப்படி நாம் – நம்முடைய தேசத் தலைவராக ஆதரிக்க முடியும்?
65. பாருங்கள், மோதியின் குஜராத்தில் இருந்து சிப்பாய்களாக இந்திய ராணுவத்தில் சேர்கிறவர்கள் மிகக் குறைவானவர்களே! இதிலிருந்தே தெரியவில்லையா, மோதி நாட்டின், நாட்டுப் பற்று பவிஷு?
66. மோதி பெண்களின் எதிரி. இல்லையென்றால் அனைத்து குஜராத்திப் பெண்களும் இவரை ஆதரிக்க மாட்டார்களா? தீஸ்தா, மல்லிகாக்கள் இவரை ஆதரிக்கவில்லை, பாருங்கள். ஒரு பானைச் சோற்றுக்கு இரு சோற்றுப் பருக்கைகள் பதம்தானே?
67. மோதி தன் மனைவியின் எதிரி – பாருங்கள், தன் மனைவியை எவ்வளவு ஒரு பரிதாபமான நிலையில் வைத்திருக்கிறார்? (ஆனால் பாருங்கள், நம் கருணாநிதி அவர்களை — தம் மனைவிகளை எவ்வளவு ஆதரித்து அவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்?)
68. மோதி குடும்பங்களின் எதிரி – பாருங்கள், நம் இந்தியக் கலாச்சாரத்தின் ஆணிவேர் – குடும்பம். ஆனால், இவர் தனக்கு ஒரு குடும்பம் என்பதையே கூட கட்டமைக்கவில்லை. இப்படி, இந்திய சமூகவியல் அடிப்படைக் காரணி ஒன்றை அவமதிக்கும் அவரை, எப்படித்தான் பலவித சக்திவாய்ந்த குடும்பங்களால் நிர்வகிக்கப் படும், உண்ணப் படும் இந்தியாவைக் கொடுப்பது? ஆகவே. (அதே சமயம், நம்முடைய கருணாநிதியைப் பாருங்கள் – ஒரு குடும்பமல்ல, பல குடும்பங்களைப் பராமரிக்கிறார்; அவைகளின் பொறாமைப் படத்தக்க மகாமகோ பொருளாதார வளர்ச்சிக்கும் பல விதங்களில் உதவுகிறார். ஆகவேயும்!)
69. மோதி குழந்தைகளின் எதிரி – இவர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவர் ஆண்டால், இந்திய ஆண்களைக் காயடித்துவிடுவார். பெண்களை மலடுகளாக்கி விடுவார். (ஆனால் பாருங்கள்…)
70. மோதி ஆண்களின் எதிரி. ஏனெனில் வெட்கமேயில்லாமல் பகிரங்கமாகக் குங்குமம் சிந்தூரம் என இட்டுக்கொண்டு, ஒரு துப்பட்டா ஷெர்வானியையும் போட்டுக் கொண்டு ஒரு பெண் போல பவனி வருகிறார்.
[உஷார்!] அடுத்த பதிவில்… 71-90 காரணங்கள்…
தொடர்புள்ள பதிவுகள்:
-
[+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50] 10/09/2013
-
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? 09/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
March 21, 2019 at 18:59
[…] […]