[+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50]
September 10, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
22. என்னால் என் குடும்பத்தை – என் சுற்றுச்சூழலை – இவற்றையே விடுங்கள் – என்னையே கூட, ஒரு அடிப்படை அளவிற்காவது மேலாண்மை செய்து கொள்ள முடியாமல் இருக்கலாம் – ஆனால் அதற்காக, குஜராத் பற்றி, மோதியின் அரசு பற்றி, நாட்டை நிர்வகிப்பது பற்றியெல்லாம் திட்டவட்டமான அறிவுரைகளும், கருத்துரைகளெல்லாம் வழங்கமுடியாமல், இருக்கமுடியாது. ஆகவே மோதி சரியாக ஆட்சி செய்யவில்லை.
23. நான் ஒரு சராசரி ஆள். வெகு சராசரித்தனமான சராசரி ஆள். எனக்கு உன்னதம் கின்னதம் போன்றவை பின்னாலெல்லாம் போக முடியாது. அதே சமயம், யாராவது அதனருகே போகிறார்கள் என்றால், அவர்கள் மேல் கல்லெறிதல் பிடிக்கும். கண்டடைந்தவர்கள் மீது பொறாமைகொண்டு என் ஆற்றாமையை அவர்கள் மேல் கவிழ்த்துவது பிடிக்கும். ஆகவே.
24. என் உலகப் பார்வையில் — அதிமனிதர்கள், செயலூக்கம் கொண்டவர்கள், நெடுனோக்கில் திட்டமிட்டுப் பணிகள் ஆற்றுபவர்கள், எடுத்த பணியைச் செவ்வனே செய்பவர்கள் என்று யாராவது சொன்னால், சொல்லப் படப் பட்டால் – அது பொய்தான், பொய் மட்டுமேதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என் நோக்கில் அனைவரும் என்னைப் போலவே அரைகுறைகள். என்னைச் சுற்றித்தானே உலகம் சுழல்கிறது?
25. நான் ஒரு நடுநிலைமைக்காரன் – அதாவது, நன்மைக்கும் தீமைக்கும் நட்டநடுவே மட்டும் நின்று கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருப்பது தான் ஒரு நடு நிலைமைவாதி செய்யவேண்டியது என்பதில் தீவிரமாக இருப்பவன். நல்லதிற்கு அருகிலே போனால், பாவம், தீமைக்கு நாம் உதவியாக இருக்கமுடியாது அல்லவா? ஒரு ஜனநாயகத்தில் வசிக்கும் நாம், அனைத்துத் தரப்புகளுக்கும் ஆதரவு அளிக்கவேண்டுமல்லவா? நான் ஒரு ஜனநாயகவாதி என்பதில் உண்மையில் பெருமையடைபவன். ஆகவே.
26. நான் ஒரு இந்தியன்; முக்கியமாக, ஒரு தமிழன். ஆகவே எனக்கு ஏதாவது ஒன்றை, திருப்பித் திருப்பி யாராவது மிகமிக சத்தம் போட்டு களேபரம் செய்து சொன்னால், அதை வெள்ளந்தியாக நம்பி விடுவேன். என்னால் யோசிக்க முடியும் என நானே நம்பக் கூடிய அளவுக்கு எனக்குப் பயிற்சியில்லை. என்னுடைய தருக்க நிலை என்னவென்றால்: உண்மையாக இருக்காவிட்டால், எந்த விஷயத்தைப் பற்றியும், அப்படிச் சத்தம் போட்டு மகாமகோ உரக்க யாராவது எதையாவது சொல்லத்தான் முடியுமா? என்னைப் பொறுத்தவரை உரக்கப் பேசுபவர்கள், அடுக்குமொழியில் பேசுபவர்கள்தான் உண்மையாளர்கள். இப்போது சொல்லுங்கள்: 1) மோதியால் உரக்கப் பேசமுடியுமா? 2) மோதி சார்பில் யாராவது உரக்கோதிஉரக்க, ஒருவராவது பேசுகிறார்களா?
27. மோதிக்கு கவிதை எழுதத் தெரியாது. முதலமைச்சராக இருந்துகொண்டே, ஆட்சிப் பணிகள் பலப்பல செய்து கொண்டே, கட்சியை நிர்வகித்துக் கொண்டேயெல்லாம் — திரைக்கதை வசனம் எழுதும் துப்புமில்லை. இவர் எப்படி, ஒரு புதிய இந்தியாவின் ஜனனத்திற்கு, வளர்ச்சிக்கு, திரைக்கதை வசனம் எழுத முடியும்? ஆகவே.
28. ஒரு திரைப்பட நடிகர் குழாமாவது இவருக்கு ஒரு பாராட்டு விழாவாவது நடத்தியிருக்கிறதா? ஆகவே… மேலும், எவ்வளவு திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மோதியை ஆதரிக்கிறார்கள், சொல்லுங்கள்? என் பார்வையில், சினிமாவில் வீரம் பெருக, காதல் கசிய, துயரம் கவிழ வாழ்க்கையை அணுகும் வசீகரம் மிக்க இவர்களுக்குத் தான் தெரியும் அரசியல் பற்றி, நம் நாட்டை சரியாக வழி நடத்திச் செல்லும் தடங்கள் பற்றி… இப்போதே ஷாருக் கானை விட்டு மோதிக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடச் சொல்லுங்கள் – நான் உடனடியாக அவர் பக்கம் வருகிறேன். அதுவரையில்… ஹ்ம்ம், வேறு யாராவதாகக் கூட இருக்கலாம் – ஆனால் அந்த நடிகர் ஒரு ஆண் முஸ்லீமாக இருக்கவேண்டும்… கவனம், கவனம். (யோசியுங்கள் – நமது நடிகைசிகாமணி மேதகு பிலிம் குஷ்பூ அவர்கள் ஆதரிப்பதால் தானே, பிலிம் நெப்போலியன் ஹிட்லர் போன்றவர்கள் ஜால்ரா அடிப்பதால்தானே, பிலிம் ரஜினிகாந்த் அவர்கள் ஆதரித்ததால்தானே நாம், நம் கலைஞரை ஒரு நோட்டமாவது விடுகிறோம்?)
29. எவ்வளவு க்ரிக்கெட் ஆட்டக் காரர்கள் மோதியை ஆதரிக்கிறார்கள், சொல்லுங்கள்? என் பார்வையில், ஒரு டி20 ஆட்டக காரனால்தான், நிறைய ஸிக்ஸர் அடிப்பவனால்தான் வாழ்க்கையை, நம் தேசத்தின் எதிர்காலத்தை அவதானிக்க முடியும்? சச்சின் டென்டுல்கர்? வேண்டாம், வேண்டாம் – ஒருஇளம் முஸ்லீம் இளைஞ வசீகர க்ரிக்கெட்டானை விட்டு மோதிக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடச் சொல்லுங்கள் – நான் உடனடியாக அவர் பக்கம், பௌன்ஸர் போல தூஸ்ரா தரம் வருகிறேன். அதுவரையில்…
30. என்னால் இடதுசாரி, வலதுசாரி, நடுசாரி, பட்டுசாரி போன்ற முகப் படாங்களை, கண் பட்டைகளை வைத்துக் கொண்டு மட்டுமே உலகைப் பார்க்க முடியும். எனக்குப் பிடிக்காத சாரிசார்பினராக யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அவர்களுடைய திறமை, அனுபவம், நேர்மை, கண்டிப்பு எவ்வளவுதான் மெச்சத்தகுந்ததாக இருந்தாலும் சரியே – அவர்களை என் அடிமனதாழத்திலிருந்து வெறுக்க ஆரம்பித்து விடுவேன். என்னுடைய முன்முடிவுகள், என் கண்பட்டைகள் தங்கள் இடைவெளிகளில் காண்பிப்பவை மட்டுமே…
31. அமர்த்யா ஷென், மணிஷங்கர் ஐயர் போன்ற மெத்தப் படித்தவர்களெல்லாம் மோதிக்கு எதிராகவே இருக்கிறார்கள். ஒரு நொபெல் பரிசு பெற்றவர், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியானவர் சொல்வதெல்லாம் புறக்கணிக்கத் தக்கவையா என்ன?
32. மார்த்தா நுஸ்பாம், வென்டி டொனிகர் அம்மணிகளெல்லாம் – இந்த மாதிரி வெள்ளைக்கார அறிவுஜீவிகள் சொல்வதெல்லாம் பொய்யாகவா இருக்கும்? இவர்கள் மோதியை வெறுப்பதால், நானும் வெறுத்து விட்டுப் போகிறேன்.
33. தீஸ்தா செதல்வாட், மல்லிகா சாராபாய் போன்ற உயர்குடும்ப / மனிதவுரிமைக்கார அம்மணிகள் சொல்வதெல்லாம் நிஜம், நிஜம், நிஜம்.
34. மது பூர்ணிமா கிஷ்வர், தவ்லீன் ஸிங் போன்ற – களப்பணிகள் பல ஆற்றியிருக்கும் மனிதவுரிமைக்கார பத்திரிக்கையாள அம்மணிகள் சொல்வதெல்லாம் பொய், பொய், பொய். (இவர்கள் பாஜக / மோதியிடம் ‘பெட்டி’ வாங்கிக் கொண்டு விட்டார்கள், எனக்குத் தெரியும்.)
35. எனக்கு சேதன் பகத் அவர்களுடைய நாவல்களைப் பிடிக்காது; எனக்குச் சகிக்காது அவற்றை. இதற்கு ஊக்க போனஸாக, இந்த ஆள் எழுதி ஆமிர்கான் நடித்து வெளிவந்த ‘3-முட்டாள்கள்’ எனும் அற்பத்தை நான் வெறுக்கிறேன். ஆகவே இந்தக் குட்டிச் சேதன் ஆதரிக்கும் மோதியை எப்படி நான் ஆதரிப்பேன்?
36. நான் பாஜக-வை இது வரை ஆதரிக்கவில்லை யென்றாலும், திடீரென்று அத்வானி அவர்களின் ஆதரவாளராகி விட்டேன். ஆகவே…
37. மோதி, தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களுக்கு இட ஒதுக்கிடு கொடுக்க மாட்டேன் என்கிறார். (உதாரணம்: அத்வானி அவர்களுக்கு இவர் வழி கொடுத்திருக்க வேண்டாமா?)
38. மோதி, தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் இளையவர்களுக்கு வழிவிடாமல் தான் மேலெழும்ப முயல்கிறார். (உதாரணம்: ராஹுல் காந்தி – இவர் மாற்றுக் கட்சியில் இருக்கலாம், மாற்றான் கட்சியிலும் இருக்கலாம்… ஆனால் இவர் ஒருவர்தானே காங்க்ரெஸில் மாற்று?)
39. மோதியை, அவர் கூட்டணி சார்ந்தவர்களே விரும்பவில்லை – பாருங்கள், பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தன்னைக் கழற்றிக் கொண்டுவிட்டார்? இப்படி கூட்டணித் தலைவர்களை அனுசரித்துப் போகாதவர்களை நான் எப்படி ஆதரிக்கமுடியும்?
40. மேற்கண்டதையே விடுங்கள் – மோதியை, அவர் கட்சி சார்ந்தவர்களே விரும்புவதில்லை. பாருங்கள் ஸுஷ்மா ஸ்வராஜ் அவர்களை! தன் வீட்டிலுள்ள எதிரிகளையே சமாளிக்கத் தெரியாத, இவர், இந்தியாவில் எதிரிகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? (ஆனால் பாருங்கள் நம்முடைய கலைஞரை – எப்படிஇவர் கடந்த சுமார் 75 ஆண்டுகளாக, அரசியல் எதிரிகளை ஓரம் கட்டிக்கொண்டே இருக்கிறார்! வாழ்க நீ எம்மான்!)
41. மோதியால் – தன்னந்தனியாக, கறுப்புப்பூனைகள் சூழாமல், ஒண்டியாக நடமாட முடியுமா? தெகிர்யம் கீதா? தன்னுயிருக்குப் பயப்படும் இவர், எப்படி இந்தியாவை நிர்வகிக்க முடியும்?
42. மோதி ஒரு பழமைவாத, கற்பனைசார்ந்த, பௌராணிக உலகத்தைத் தூக்கிப் பிடிப்பவர் – ஏமாந்தால், இவர் இந்தியாவை, வரலாற்றுக்கு முந்திய காலத்துக்கு அழைத்துச் சென்று விடுவார். நம்மால் நவயுகத்தை எங்கிருந்து சமைக்க முடியும்? ஆகவே.
43. மோதி முதலாளிகளின் கைக்கூலி. பாட்டாளி மக்களின் வயிற்றிலடிக்கும் உலகமயமாக்கலை ஆதரிப்பவர். வெகுவேகமாக முன்னோக்கிப் பயணம் செய்து இந்தியாவைக் குப்புறத் தள்ளி விடுவார்!
44. மோதி முஸ்லீம்களின் எதிரி. அவரை ஆதரிக்கும் முஸ்லீம்கள், உண்மையில் முஸ்லீம்களே அல்ல – அவர்கள் முஸ்லீம் பெயர்களில் உலவும் ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர் ஐந்தாம் படையினர். என்ன? அப்படியில்லையா?? அப்படியில்லாவிட்டாலும் பாதகமில்லை – அந்த முஸ்லீம்கள் எனச் சொல்லப்படும் அவர்கள் விலை போனவர்கள் தாம். தாடி வுட்டுக் கொண்டு, கொர்-ஆனை ஓதிக்கொண்டு, அல்லாவைத் தொழுகிறவனெல்லாம் முஸ்லீமா??
45. குஜராத்தின் முஸ்லீம்கள், க்றிஸ்தவர்கள் இல்லவேயில்லை; அனைவரும் இன-ஒழிப்பு செய்யப் பட்டு விட்டனர். தொலைக்காட்சிகளில் குஜராத்தி முஸ்லீம்கள் என அவ்வப்போது காட்டும் ஆட்கள் – மாறுவேடமணிந்த மும்பய் சார்ந்த ஹிந்து நடிகர்கள் – டூப் பேர்வழிகள்! இதைச் சரிபார்க்க வேண்டுமென்றால், அவர்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்திற்குப் போய், ஏதாவது ‘பால்லிவுட் ட்ங்கடக்கர டாப்டக்கர் ஹிட்’ பாட்டைப் போடுங்கள் பார்க்கலாம் – அவர்கள் உடனே சினிமா போல, இடுப்பை வலித்து, பாற்சுரப்பிகளை ஆட்டி, குண்டிகளை விடைத்துக் கொண்டு நடனமாட ஆரம்பித்து விடுவார்கள்… இம்மாதிரி எதற்கெடுத்தாலும் டூப் போடும் ஆளையா, ஆட்சியையா நாம் ஆதரிக்கக் கூடும்? (ஏதோ, ஒரு அற்ப தமிழகச் சட்டசபைக் கட்டிடம் போல சுளுவாக, தோட்டா தரணியை விட்டு டூப் செட் போடும் விஷயமா இது??)
46. மோதி க்றிஸ்தவர்களின் எதிரி – பாருங்கள், அவர் மந்திரி சபையில் ஒரு க்றிஸ்தவர் கூட இல்லை. மேலும் அவரை ஆதரிக்கும் க்றிஸ்தவர்கள், க்றிஸ்தவர்களே அல்ல. அவர்களும் ‘பொட்டி’ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொட்டி வாங்கியவர்கள் பாக்கியவான்கள். மோதி ராஜ்ஜியம் அவர்களுடையது. என்னத்தச் சொல்ல…
47. மோதி, பௌத்தர்களின் எதிரி – ஏனெனில், புத்தகயா வெடிகுண்டு வெடிப்புக்குப் பின், அவர் அங்கு சென்று அதற்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை.
48. மோதி, திகம்பர ஜைனர்களின் எதிரி – பாருங்கள், இவர் எப்போதும் துணிமணியணிந்தவராகத்தான் காணப்படுகிறார். மேலும், இந்த மனிதர், ஸ்வேதாம்பர ஜைனர்களின் எதிரியும் கூட – பாருங்கள், இவர் பொதுவாக வெள்ளையுடையையே அணியமாட்டேனென்கிறார்!
49. இந்த மோதி, பெரும்பான்மை ஹிந்துக்களின் மகாமகோ எதிரியும்தான் – இந்த மனிதர் ஆளும் குஜராத்தில், ஏன் முஸ்லீம்களும், க்றிஸ்தவர்களும், பார்ஸிக்களும், ஜைனர்களும் இன்னமும் வதவதவென்று இருக்க வேண்டும்? ஏன் இவர்களின் மக்கள்தொகை பெருக வேண்டும்? ஏன் இந்த மதத்தினருக்கெல்லாம் சமவுரிமை தரவேண்டும்? இதற்காகவும் தான்…
50. மோதி காந்தியர்களின் எதிரி – பாருங்கள், அவர் அஹிம்ஸை முறையில் ராஜாங்கம் செய்யவே மாட்டேனென்கிறார். கேட்டீருக்கிறீர்களா, அவருடைய ஆட்சியில் நடந்திருக்கும் ‘என்கௌன்டர்’ இறப்புக்களை? என்ன அநியாயம் இது?? (ஆனால், நம்மூரில், அரசையே விடுங்கள் — கட்சிகள், கட்சித் தலைவர்கள் வெற்றிகரமாக நடத்தியிருக்கும் வெகு நூதன ‘என்கௌன்டர்’களை — அண்ணாமலைப் பல்கலைக்கழக அக்கால மாணவன் உதயகுமார், தா கிருட்டிணன், தோழர் லீலாவதிகளை, ஏன்,’அண்ணாநகர்’ ரமேஷ், சாதிக் பாட்ஷாக்களையும் கூட — நாம் இங்கு அனாவசியமாக நினைவு கூறக் கூடாது… நான் இதைக் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்)
அடுத்த பதிவில் 51லிருந்து 80 வரை காரணங்கள்…
தொடர்புள்ள பதிவுகள்:
- 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? 09/09/2013 (முதல் பகுதி)
- மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
March 21, 2019 at 18:59
[…] […]