[+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90]
September 13, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர் அல்லர் வேறு.
ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:
- செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
- கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க, பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
- அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம், கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…
— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும் இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி.
இவருடைய ஆரியத் திமிர் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், இவர் கனவில் – பெரியார், அண்ணா, எம்ஜியார் போன்றவர்களெல்லாம் வந்து, நிகழ் காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல விருப்பப் படுவதேயில்லை. அதாவது கனவிலும் கூட, நம் புனிதப்பசுத் தலைவர்கள், மோதி பக்கம் போவதில்லை. இப்படி ஒரு அநியாய அதிராவிடனாக இருக்கும் அவர், நம் திராவிடத் தமிழகத்துக்கு ஒரு உதவியையும் செய்ய மாட்டார் தானே? ஆகையாலும் தான், இவரை நான் வெறுக்கிறேன், புரிந்ததா?
72. மோதிக்கு ஹிந்தியிலும் குஜராத்தியிலும் மட்டுமே சரியாகப் பேச முடியும். அவருக்குச் சரியான அமெரிக்க அல்லது ப்ரிட்டிஷ் உச்சரிப்புடன் ஸ்பஷ்டமான ஆங்கிலம் பேச வராது. ஆர் எழுத்தை ஆஆற்ற்ற் என்று தான் சொல்ல முடியுமே தவிர ஆழ்ழ்ழ்ழ் என்றெல்லாம் நாக்கை உருட்டி அவரால் உச்சரிக்கவே முடியாது. மேலும், அவருக்குத் தமிழ் பேச வரவேவராது. சும்மா தட்டுத் தடுமாறி, துக்ளக் சோ கூட்டங்களில் வனக்கம் என்று சொல்ல முடிவதோடு சரி – அவருக்கு என்னவோ, தாம் திராவிடக் கொளுந்துகல் நட்தும் தொளைக்காள்சி அளைவர்சை இனைப்பாலர் எண்ரு நெனப்போ?? டமிளே சர்யா ஒச்றிக்க முட்யாதூ இந்த ஆள்க்கு…
ஆகவே, அவர் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்கு எதிரானவர். ஆகவே. மேலும் நம் கனிமொழி அவர்களின் கவிதை கட்டும் திறன் அவருக்கு இல்லை. மேலும், மிக முக்கியமாக, நம் கனிமொழி அவர்களின் நுனி நாக்கு ஆங்கில அளவிற்குக் கிட்டவே மோதியால் வரமுடியாது. உதாரணத்துக்கு, இந்த அம்மணி, நிரா ராடியா அவர்களிடம் ஆங்கிலத்தில் பேரம் பேசுவதைக் கேட்டுக் களிக்கவும். வாழ்க நீ எம்மாள்.
73. அவர் முழுச் சொட்டைத் தலையர்களின், அழகான தாடி வளர்க்க முடியாதவர்களின் எதிரி – ஏனெனில் அவர் தலையில் இன்னமும் அடர்த்தியாக முடி இருக்கிறது. அது நரைத்திருந்தாலும் பளபளவென்று இருக்கிறது. அவர் என்னைவிட உயரமானவர், திடகாத்திரம் மிக்கவர். ஆனால் என் நெற்றி இழவு மேல்பக்கம் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. முடி தாறுமாறாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே மானாவாரியாக நரைத்து, ஒரு நரைந்தர முடி யாளனாக நானிருக்கும் போது, பொழுதன்னிக்கும் டை அடித்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கும் போது, எனக்கு உள்ளபடியே, பொறாமையாக இருக்கிறது இந்த மோடியை நினைத்தால். ஹ்ம்ம். ஆனபடியினாலும், இவரை நான் உளமாற வெறுக்கிறேன். (இதை மற்றவர்களுக்குச் சொல்லி விடாதீர்கள், வெட்கக் கேடு!)
74. குஜராத்தில் என்னென்னவோ மதுவிலக்கெல்லாம் இருக்கிறது என்கிறீர்களே? அங்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? இந்த ’சும்மனாச்சிக்கும்’ மதுவிலக்கை அமல் படுத்துவதற்காக அவ்வளவு பொலீஸ்காரர்கள் வேறு. தேவையா? இதா நிர்வாகம்?
75. நம் தமிழகத்தைப் பாருங்கள், பாலும், தேனும் நம் சாலைகளில் ஓடுகின்றன. சில சமயம் கள்ளும் ஓடுகிறது. திரியாவரங்கள் மப்பில் இருப்பதால், அந்த ஜந்துக்களின் ஆகாத்தியமும் குறைவு. ஆகவே குடியில்லாத குடிமக்களுக்குச் சந்தோஷம்தான். அதேசமயம், நம் மாநிலத்துக்கு வருமானத்துக்கு வருமானம். இந்த ராஜதந்திரம், நிர்வகிக்கும் திறமெல்லாம், மோதிக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. ஆகவே.
76. மோதியின் ஆட்சி, குஜராத் வளர்ச்சி பற்றிய பல சாதகமான புள்ளியல் விவரங்கள் காட்டும் வளர்ச்சிக் காட்சிகள் – மிகச் சராசரித் தனமுடையதாகத் தான் இருக்கின்றன. எனக்கு புள்ளி, விவரம், கோலம், மார்கழி மாதம், சாணியுருண்டை, பரங்கிப் பூ என்று ஒரு எழவையும் அறிந்து கொள்ள, பாகுபடுத்தித் தெரிந்துகொள்ள மூளையில்லாவிட்டாலும் – நான் அறுதியிட்டுச் சொல்வேன் – எதிர்மறைப் புள்ளிவிவரங்களைத் தான் நாம் கணக்கில் எடுக்க முடியும்.
77. ஆஹா, இதோ பாருங்கள்… இன்னொரு இடத்தில் இருந்து நான் எடுத்த, இன்னும் கொஞ்சம், மேலதிக எதிர்மறைப் புள்ளியியல் விவரங்கள்! என்ன? என்ன?? யார், எப்படி, இந்தப் புள்ளிவிவரங்களைப் பெற்றார்களா?? அது நமக்குத் தேவையில்லை. உன் வாயை மூடிக்கொள்.
78. மோதியின் ஆட்சி, குஜராத் வளர்ச்சி பற்றிய பல புள்ளியல் விவரங்கள் காட்டும் உண்மையான வளர்ச்சியைச் சுட்டும் (=மோதிசார்பான) காட்சிகள் – மிகப் பொய்யானவை. ‘பொட்டி’ வாங்கிக் கொண்டு சமைக்கப் பட்டவை. அநியாயமாக ஜோடிக்கப் பட்டவை. ஆகவே,
79. இவர் ஆட்சியில் குஜராத் வளர்ந்திருந்தால், அண்டை மாநிலங்களுக்குத் தெரியாமலா போயிருக்கும்? அது வளர்ந்திருந்தால், அதனுடனான மஹாராஷ்ட்ர, ராஜஸ்தான, மத்தியப் பிரதேச எல்லைகள் நசுங்கியிருக்குமே! பாகிஸ்தானுடன், ஒரு மகாமகோ போரே வெடித்திருக்குமே!
80. மோதி ஆட்சியில், குஜராத்தில், உபரி மின்சார உற்பத்தி என்கிறீர்களே! ஆனால் இன்னமும் குஜராத்தில் யுபிஎஸ் கட்டமைப்புக்கள் வாங்கப்பட்டுக் கொண்டே தானே இருக்கின்றன? இதிலிருந்தே மோதியின் பொய், அண்டப் புளுகு — விளங்கவில்லையா? மின்சாரப் பிரச்சினையே இல்லாத மாநிலத்தில் ஏன் பேட்டரிகளும், யுபிஎஸ்களும் வாங்கப் படவேண்டும் சொல்லுங்கள்? என்ன புருடா விடுகிறீர்கள், மோதி ஆதரவாளர்களே!
81. பொதுவாக மின்சாரத்தைப் பகுத்துக் கொடுக்கும் முறையிலுள்ள நடைமுறை இடைவெளிகளை-குளறுபடிகளை, மோதியின் அரசு கிட்டத்தட்ட இடைவிடாத கண்காணிப்பினால், தரமான மின்சாரப் பகுப்பினானால் சமன் செய்து விட்டது என்கிறீர்கள் – ஆக கொக்கி போட்டு ஜனநாயக முறையில், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்க முடியாமல், விளிம்புப் பாட்டாளிகளும் தொழில் முனைவோர்களும் எவ்வளவு இன்னல் படுவார்கள் என்பதை, நாம் பிற மாநிலங்களில் உள்ள நிலவரத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்… இப்படி ஒரு ஆரோக்கியமற்ற, சமூக நீதியற்ற குட்டி பூர்ஷ்வாக்களுடைய கட்சியையா, அவர்களுடைய தலைவரையா நான் ஆதரிப்பேன்.
82. கேட்பாரில்லையா!! சூரிய ஒளியிலிருந்து, காற்றிலிருந்து என்றெல்லாம் மின்சாரம் எடுத்துக் கொண்டே இருக்கிறதாம் மோதியின் அரசு. ஒரு பேச்சுக்கு இதனை ஒப்புக் கொண்டாலும் — இதனால்தான், இந்த மோதியின் குஜராத் காற்றிலிருந்து திருடும் குல்லுகபட்டத் தனத்தினால்தான், தமிழகத்துக்கு வரும் காற்றில் மின்சாரம் துளிக்கூட இல்லை என்பது யாருக்கும் பரவலாகத் தெரியவராத அறிவியல் ரகசியம்… இதனால்தான் தமிழக காற்றாடி மின்னாலைகளினால், காற்றிலிருந்து வேண்டிய அளவு மின்சாரம் எடுக்கமுடியாமல், பரவலாக மின்வெட்டு ஏற்படுகிறது… இந்தக் கேவலத்தைக் கேட்க ஆளில்லையா? அதனால்தான்.(ஹ்ம்ம், நம் ‘அறிவியல் பூர்வவூழல்’ புகழ் பெற்ற கருணாநிதி அவர்கள் மட்டும் இப்போது ஆட்சியில் இருந்தால், இதனைத் தட்டிக் கேட்டிருக்கமாட்டாரா?)
83. குஜராத்தில் மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்? அட, அந்தச் சோட்டாக் கடுகு தாளிப்புச் சிங்கப்பூரை விடவா இந்த மோதியுடைய மாநில மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது? தினமும் அங்கு பல குஜராத்திகள் இறக்கிறார்கள். சில குழந்தைகள் இறக்கின்றன. உலகத்திலேயே பேதியில் போகும் ஆட்கள் அங்கு தான் அதிகம் என்று நான் கேள்விப் பட்டேன். இவைகளெல்லாம் சரியா இல்லையா? ஆகவே.
84. மோதியின் ஆட்சியில் மருத்துவ வசதிகள் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆரோக்கியம் சார் கட்டுமானங்கள் நன்றாகச் செயல்படுவதாகச் சொல்கிறீர்கள். மேலதிகமாக மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மருத்துவ மனைகள் செல்வதாகக் கூறுகிறீர்கள். நான் நம்பமாட்டேன் – ஆனால், அது அப்படியே இருந்தாலும் – இது எதைத் தெரியுமா குறிப்பிடுகிறது? மோதியின் ஆட்சியில், அதிக மக்கள், நோயாளிகளாக மாறிவருவதைத் தான்! ஹஹ்ஹா! இதனால் தான்…
85. குஜராத்தில் கல்வி வளர்ச்சி என்று சொல்கிறீர்களா? இந்தப் புள்ளியியல் விவரம் சரியல்ல. எனக்குத் தெரிந்த வரை கல்யாண்ஸிங் கல்வி என்பவர் ராஜஸ்தானத்தில் இருந்தார். கொஞ்ச நாள் அவர் பாஜகவில் இருந்தார் ஆனால், இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இவர் உயிருடன் இருந்தால், இவர் உருவத்தில் வளர்ந்திருக்கலாம் – அதுவும் பக்கவாட்டில் – நிச்சயம், உயரத்தில் அல்ல. ஆகவே மடையர்களே, கல்வி வளர்ச்சி என்பது ராஜஸ்தானத்தில் தான் உச்சம். குஜராத்தில் அல்ல. சும்மா மொட்டத்தலக்கும் மொளங்காலுக்கும் முட்ச்சு போட்ற வோல வோணாம், செரியா? ஆகவே.
86. நான் அறிந்தவரை, குஜராத்தில் பெண் கல்வி வளர்ச்சியே பெறவில்லை – எப்படிச் சொல்கிறீர்கள் நீங்கள், அங்கு பெண்களின் படிப்பறிவு அதிகமாகியிருக்கிறதென்று? எனக்குத் தெரிந்து, பல பெண் ஒட்டகங்கள் இன்னமும் கூட எழுத, படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. சும்மா வெறும் வாயை மென்றுகொண்டிருக்கின்றன. தண்டக் கருமாந்திரங்கள்…
87. குஜராத்தில் வணிக வளர்ச்சி என்று சொல்கிறீர்களா? இந்தப் புள்ளியியல் விவரம் சரியல்ல. எல்லா குஜராத்திகளும் குஜராத்துக்கு வெளியேதான் வணிகம் செய்கிறார்கள் – பாருங்கள், அம்பானி சகோதரர்கள் எங்கு வசிக்கிறார்கள்? குஜராத்திலா? அங்கு நல்ல சூழலிருந்தால் இந்த ஆட்கள் எல்லாம் ஏன் மும்பய் போகிறார்கள்?
88. குஜராத்தில் தொழில் வளர்ச்சி என்று சொல்கிறீர்களா? இந்தப் புள்ளியியல் விவரம் சரியல்ல. அங்கு நடக்கும் பிரதானமான தொழில் மோடி மஸ்தான் வேலைதான். மிச்ச நேரத்தில் முஸ்லீம்களை, க்றிஸ்தவர்களை ‘இனப் படுகொலை’ செய்கிறார்கள், அவ்வளவுதான். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் – மோதி அரசாளும் குஜராத்தில் தினமும் ஒரு சிறுபான்மை முஸ்லீமாவது, ஒரு சிறுபான்மை க்றிஸ்தவராவது இறப்பதில்லை என்று?? ஹிந்துக்கள் பெரும்பான்மை, வதவதவென்று எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள் – இவர்கள் ஒழிந்தால் பரவாயில்லை. பாதகமில்லை.
89. குஜராத்தில் விவசாய வளர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்த அண்டப் புளுகைக் கேட்பாரில்லையா? அது அப்படியே இருந்தாலும், அப்பொழுது ஊரக வளர்ச்சிப் பணிகள், அடிப்படைக் கட்டுமானங்கள், தொழில்களுக்கான நில ஆர்ஜிதங்கள் அதிகமாகவில்லை எனத்தானே நடைமுறையில் இருக்கும்? ஆனால், பின்னவையும் அதிகம் என்கிறார்கள்! எப்படியப்பா இது சாத்தியம்? சும்மா காது குத்தாதீர்கள். ’வளமான விவசாய நில ஒழிப்பு’ நடந்தால் தானே ’தொழில் / கட்டுமான வளர்ச்சி’ ஏற்பட முடியும்? இப்படி மட்டும்தானே ஈபிடபிள்யு தனமாக, நாம் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கமுடியும்??
90. குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை நன்றாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இந்தப் புள்ளியியல் விவரம் சரியல்ல. குஜராத்தில் திருடர்களே இல்லையா என்ன? காங்க்ரெஸ் கட்சி, இன்னமும் அங்கே இருக்கிறது – குறிப்பிடத்தக்க அளவு தொண்டர்களைப் பெற்றிருக்கிறதென்பதை, மரியாதையாக நினைவில் கொள்ளவும். எது எப்படியோ, முதலில் அவர் தன் மாநிலத்தைச் சரி செய்யட்டும். பின்னர் பிரதமராக ஆவதற்குக் கனவு கினவு எல்லாம் காணலாம், சரியா?
…அடுத்த பதிவில், 91 -108 காரணங்களும், பின்னுரையும்…
தொடர்புள்ள பதிவுகள்:
-
[+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70] 12/09/2013
-
[+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50] 10/09/2013
-
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? 09/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
September 14, 2013 at 16:11
அட போங்க சார். மோதி எல்லாம் என்ன மனுஷர் ? பிற்ப்படுத்தப்பட்டவர்களின் காவலன்னு ஒரு Banner கூட இல்லை. பார்ப்பன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒரு கோஷம் கூட போட மாட்றார் யுவர் ஆனர்..
http://AMMANJI.WORDPRESS.COM
March 21, 2019 at 18:59
[…] […]