108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ?
September 9, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
1. எனக்குத் தெரியும் – மோதியை எதிர்ப்பது என்பது ஒரு ஸெக்ஸியான விஷயம்; எதிர்ப்பதால் மட்டுமே நான் ஒரு சமதர்ம சமுதாயத்தை நோக்கிச் செல்ல விழையும் அறிவுஜீவியாகி விடமுடியும் – அப்படியில்லா விட்டாலும்கூட, மிகமிக முக்கியமாக, குறைந்த பட்சம், அப்படிப்பட்ட ஒரு அறிவுஜீவியாகக் கருதப் படவாவது, வெகு வெகு சுலபமாக முடியும்.
2. மோதியை ஆதரித்தால் – எனக்கு உடனடித் தீட்டு – நான் வெறியனாகக் கருதப் படுவேன். அய்யய்யோ!

நரேந்த்ர தாமோதர்தாஸ் மோதி (’ஸமாஜிக் சம்ரஸ்தா’ எனும் ஹிந்தி புத்தகத்திலிருந்து / ப்ரபாத் புக்ஸ் / டெல்லி / 2012)
3. மோதியை ஆதரிக்க வேண்டுமானால் எனக்குத் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப — என் நிலைப்பாட்டின் காரணங்களை, உண்மைகளை, ஒரு கீறல் விழுந்த ரெகார்ட் போல, விளக்கிக் கொண்டேயிருக்கவேண்டும்; ஒரு பெரிய்ய்ய்ய சுற்றுச் சுற்றி வந்தவுடன், திரும்பவும் முதல் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கு இது அலுப்பு தரும் விஷயம்.
4. மோதியை எதிர்க்கும் நிலையை எடுப்பது மிகவும் சுலபம். காற்று வாக்கில் நான் கேட்ட, ’ஹம் பாஞ்ச் – ஹமாரே பச்சீஸ்’ இருக்கவே இருக்கிறது. அல்லது ’முஸ்லீம்கள் – காரோட்டம் – நாய்க்குட்டி’ விவகாரம் இருக்கவே இருக்கிறது. அல்லது கோத்ரா கீத்ரா என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த உச்சாடனங்கள் வெகு சுளுவானவை.
5. எனக்கு, என்னுடைய நேரடி அனுபவங்களைவிட – மற்றவர்களிடம் கடன் வாங்கிய அனுபவங்களை, கோட்பாடுகளை, கருத்துக்களை வைத்துத் தான் காலம் தள்ள முடியும். யோசிக்கும் திறமையெல்லாம் இல்லை என்பதை எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு, என்னை மேலெழுப்பிக் கொண்டுசெல்ல என்றெல்லாம், என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.
6. பொதுவாக, எனக்குக் கடன் வாங்குவதை விட, கமுக்கமாகக் காப்பியடிப்பது, அச்சுஅசலாக நகலெடுப்பது – அவை கோட்பாடுகளாகவிருந்தாலும் சரி, கருத்துகளானாலும் சரி – மிக மிகப் பிடிக்கும். ஆக, திக்விஜய்ஸிங் என்ன சொன்னாலும், அதைப் பொதுவாகப் பின்மொழிந்தால் போதுமானது, இவர் போன்றவர்கள் அவ்வளவாக யோசித்து, மூளையை உபயோகித்துத்தான் பேசுகிறார்கள் என்றில்லை. ஆக, இப்படி வெளிவரும் கருத்துக்களை, என் மூளையையும் தேவையில்லாமல் உபயோகிக்க விரும்பாத நான், செரிப்பது சுலபம் தானே?
7. எனக்கு மதச்சார்பின்மை முக்கியம். ஆனால் இது என்ன எழவென்றெல்லாம் ஆய்ந்து புரிந்து கொள்ளவெல்லாம் எனக்கு நேரமோ அறிவோ கிடையாது. என்னுடைய மதச்சார்பின்மை ஹீரோ: கலைஞர் கருணாநிதி; ஹீரோயின்: சொக்கத்தங்கம் சோனியா; இவர்கள் எது சொல்கிறார்களோ அதுவே சரி. அது மட்டும்தான் சரி. அவர்கள் நடைமுறையில் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அது முக்கியமேயில்லை. இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காணும் பரிதாபகரமான நிலையில் நான் இல்லை. ஆக, இவர்கள் சொல்வதுபோல மோதி ஒரு மதச்சார்புக்காரர்தான். ஆகவே.
8. மோதியே சொல்லியிருக்கிறார் அவர் ஒரு ஹிந்து என்று. அப்படியென்றால் அவர் முஸ்லீம் க்றிஸ்தவர்களுக்கு எதிரானவர் என்றுதானே பொருள்?
9. அவர், தான் ஒரு இந்தியன் என்றுகூட தேவையில்லாமல் சொல்லியிருக்கிறார். இப்படி வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளும் ஒருவரால் எப்படி சீனர்களிடமும், பாகிஸ்தானியர்களிடமும், பங்க்ளாதேஷிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்கள் இவரைச் சந்தேகமாகப் பார்க்க மாட்டார்களா? தேசவெறி மிக்க இவரால் எப்படி நம் எல்லைகளில் அமைதியைப் பராமரிக்க முடியும்? ஆகவே.
10. நான் பெண்ணியவாதி, மனிதவுரிமைவாதிகளான, தொலைக்காட்சிப் பப்பரப்பாக்காரர்களான – தீஸ்தா அம்மணி சொன்னால், பர்கா அம்மணி சொன்னால், ஸோனியா ராணி உச்சாடனம் செய்தால் – மேலதிகமாக தொழில்முறை மனிதவுரிமை வாதிகள் (பியூஸிஎல் போன்றவர்கள்) சதா — மோதிக்கு அக்னியால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தால் – கூட நானும் ரெண்டு கல் வுடுவது, நாக்கைத் துருத்திக் கொண்டு போடாங் சொல்வது போன்றவை – எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
11. எனக்கு, கறுப்பு அல்லது வெள்ளை என்று மட்டுமே, அதிபாமரத்தனமாக உலகத்தைப் பார்க்க முடியும். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எனக்குச் சிக்கலில்லாத எளிமைப் படுத்தல்கள் தேவை. ராமன் நல்லவன். ராவணன் கெட்டவன். ராமன் ஆரியன், ஆகவே கெட்டவன். ராவணன் திராவிடன், ஆகவே நல்லவன். என்ன? அய்யய்யோ, ராவணன் பார்ப்பானா? அப்போது அவனும் வெறியன் தான்… இவைகளுக்கு, இந்த அளவுக்கு மேலே யோசித்தால் என் மூளை உருகி விடும். ஆகவே.
12. நான் மோதி, பிரதமராகக்கூடிய சாத்தியக் கூறுகளை நமது நாட்டின் நல்லூழ் என நினைத்தாலும் கூட, மோதியை ஆதரித்தால் – அவர் செய்யும் / சொல்லும் அனைத்தையும் ஆதரிக்கவேண்டிவரும். அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை, பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டி வரும். மேலும் காங்க்ரெஸ் கட்சியை எதிர்க்கவேண்டி வரும். என்னால் ஆதரிப்பென்றால் ஒரேயடியாக ஆதரிப்பு எதிர்த்தால் ஒரேயடியாக எதிர்ப்பு என்று மட்டுமே தான் செய்யமுடியும். எனக்கு எளிமை, சிக்கலில்லாத தன்மை போன்றவை மட்டுமே முக்கியம். ஆதரிக்கவேண்டியவைகளை ஆதரித்து, எதிர்க்கவேண்டியவைகளை எதிர்த்து என்றெல்லாம் என்னாலா யோசிக்க முடியும்??
13. எனக்குச் சமன நிலைமை பிடிபடுவதில்லை. முட்டியடி எதிர்வினைகளின் மூலமாக மட்டுமே என்னைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை அணுக முடியும்.
14. எனக்கு படிப்பறிவும் இல்லை, அதைப் பெறும் முனைப்பும் இல்லை, உளறிக் கொட்டல்களில், அதற்கு கைத்தட்டல் வாங்குவதில் இருக்கும் சுகமே அலாதிதான். நான் என்னதான் பிதற்றினாலும், உளறிக் கொட்டினாலும், அநியாயத்துக்கு அட்டைக் காப்பியடித்தாலும், அதற்கும் வேண்டிய அளவு ‘லைக்’கர்களும், ‘ரீட்வீட்டர்’களும், ‘ஃபால்லோயர்’களும், பின்னூட்டக்கார விசிலடிச்சான் குஞ்சப்பனார்களும் இருக்கிறார்களே! அடேய்! இதோ பிடிச்சிக்கோ ஒர் ஸாம்பிள்: மோதி ஒரு டம்மிபீஸ். ஆகவே.
15. என்னுடைய மூளையானது, தொலைக்காட்சிச் சேனல்களால் வடிவமைக்கப் பட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளால் நிறம் கொடுக்கப் பட்டது. அரைகுறை மதச்சார்பின்மை திலகங்களால் செப்பனிடப்பட்டது. கீபோர்ட் வீரர்களால் குடையப் பட்டது. தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளால் கூர் செய்யப் பட்டது. நாற்காலி அறிவுஜீவிகளால் புடம் போடப்பட்டது. இந்த விசித்திர ஜந்துக்கள், எந்தப் பருவத்தில், எந்த ஸீஸனில் எவற்றுக்கெல்லாம் எதிரியோ நானும் அவற்றுக்கெல்லாம் எதிரி. இவைகள், கடந்த பல ஸீஸன்களாக, மோதியை எதிர்த்துத்தான் செய்திகள் வெளியிடுகின்றன. இவைகள் சொல்வதெல்லாம் தவறாகவா இருக்கும்? இவைகள் மோதியை ஆதரித்தால், நானும் ஆதரித்துவிட்டுப் போகிறேன்! ஆனால் இப்போதைக்கு எதிர்ப்புத்தான்.
16. இந்தியாவில் இருக்கும் மெக்காலேமுறை அரைகுறைப் படிப்பு, கல்வி முறை — என்னைக் குமாஸ்தாவாக்கி விட்டிருக்கிறது. எனக்கு ஆங்கில அறிவுமில்லை – ஆகவே தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தாய்மொழி அறிவும் இல்லை – ஆனால் இதனாலான பெருமிதம் இருக்கிறது! ஆக, உள் நாட்டுப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் மோதியை நான் எப்படி…
17. எனக்கு மார்க்ஸ் வழியாகத்தான், நோம் சோம்ஸ்கி வழியாகத்தான், ’ஸப்ஆல்டெர்ன் ஸ்டடீஸ்’ என்று பேசும் ’மார்க்ஸீய மெய்ஞான’ சமூகவியலாளர்கள் அளிக்கும் பார்வையை வைத்துக் கொண்டு மட்டும் தான் எதனையும் பார்க்க முடியும். இல்லாவிட்டால் சாயம்போன அறிவுஜீவிகள் எனக்கு முழு மார்க்ஸ் கொடுக்கமாட்டார்கள். எனக்கு இது தேவையா? ஆகவே.
18. நம் கலாச்சாரத்தைப் பற்றிய, பாரம்பரியத்தைப் பற்றிய அவமான உணர்ச்சி எனக்கு அதிகம். ஆனால், வரலாற்றிலிருந்து, சூழல்களிலிருந்து நுண்மான் நுழைபுலம் என்றெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு முடியாது. எதை எடுத்துக் கொள்ளவேண்டுமோ எடுத்து, தள்ளவேண்டியதைத் தள்ளி என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள நேரமேயில்லை எனக்கு. நீங்களே பாருங்கள், நீயா- நானா போன்ற மகாமகோ முக்கியமான பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிச் சேனல்களில் வருகின்றன அல்லவா?? அவற்றையும் பார்க்கவேண்டும். சினிமா கிசுகிசுவும் பேசவேண்டும். … ஆக, எனக்கு இருக்கும் சொற்ப நேரத்தில், ஒரு அவமான, தாழ்வுணர்ச்சி தரும் விஷயத்தைப் பற்றிப் பெத்த பேச்சு பேசும் மோதியை நான் எப்படி ஆதரிப்பது… ஆனால், அவரும் நீயா- நானா நானாவித நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், ஒருவேளை அவரை ஆதரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்…
19. நம்மைப் பற்றிய, நம் கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது எதுவுமில்லை – அவை அனைத்தும் வடிகட்டிய குப்பை என்பதை எவ்வளவோ மெத்தப்படித்த வெள்ளக்காரர்களே சொல்லியிருக்கிறார்கள். அவர்களை வழிமொழிந்து நம் உள்ளூர் அறிவிஜீவிகள் பிபின் சந்திரா, ரொமிளா தாபர், ஸோயா ஹஸன், ராஜீவ் பார்கவா, சந்திரசேகர கம்பாரா, அனந்தமூர்த்தி, ஜயதி கோஷ், கிரீஷ் கர்னாட், ஸாகரிகா கோஷ், அசின் வனைக், என் ராம், அருந்ததி ராய் போன்றவர்களும் (+ எஸ் வி ராஜதுரை போன்ற லோக்கல் அறிவுஜீவிகளும், ‘விடு-தலை’ போன்ற தலையை அதனிலிருக்கும் மூளையை அம்போவென்று விட்டுவிட்ட இயக்கத்தினர்களும் ) சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில், மோதி போன்றவர்கள், கவைக்குதவாத இந்தியக் கலாச்சாரம், கிந்திய குலாச்சாரமென்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், எப்படித்தான் நான்…
20. இந்து – இந்தி – இந்தியா போன்ற, நகைக்கத் தக்க முட்டாள் தருக்கங்களும், இதனை நீட்டி – வடவன், ஆக்கிரமிப்பு போன்ற மொண்ணையான கருத்தாக்கங்களும்தான் இங்கே சாஸ்வதம். எனக்கு இதற்குமேலே சிந்திக்க வேண்டுமென்றால், இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் உருகியேவிடும். மோதி ஒரு ‘இந்து – இந்தி – இந்தியா’காரர். குறிப்பாக, மோதி ஒரு ‘இந்துத்துவா – இந்தித்துவா – இந்தியாத்துவா’ ஏஜென்ட். இவர் இந்தியர்களின் உலகப் பார்வையைச் சுருக்கி விடுவார். ஆகவே.
21. மோதி ஒரு உலகமயமாக்கலின் ஏஜென்ட். இவர் மேலை நாட்டு வர்த்தகர்களையும் தொழில்முறைகளையும் இங்கு கொண்டுவந்து, அவர்களுடைய மூலதனங்களைக் கொண்டு வருகிறேன் பேர்வழியென்று – நம் நாட்டை சூறையாடுபவர்களின், பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகளின் பக்கமிருக்கிறார். நம் பாரதியத்தை அழிக்கிறார். நம் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஒழிக்கிறார். ஆகவே.
அடுத்த பதிவில்… 22லிருந்து 50 காரணங்கள்
தொடர்புள்ள பதிவுகள்:
- மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
- நரேந்த்ர மோதி!
March 21, 2019 at 18:59
[…] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் …09/09/2013 […]