ஒத்திசை/தொடரிசை மின்சுற்று வடிவமைப்பு: கலை, அறிவியல், ஆளுமைகள்
September 7, 2013
ஆஹா! நான் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவன். எனக்குத் தொடர்ந்து கிடைக்கும் அற்புதச் சந்தர்ப்பங்களும், கதவு திறப்புகளும் – என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ‘ நல்லூழ்’ என்றெல்லாம் பேசவைத்து, ‘கர்மா’ கோட்பாடுகள் கிட்டே அழைத்துக் கொண்டு போய், பின்னர் என்னை ஒரு ஆத்திகனாகவே ஆக்கி விடுமோ என்று நினைத்தால்… அய்யய்யோ. :-(
ஆனால், பாதகமில்லை. :-)
ஓவ்வொரு இரண்டொரு ஆண்டு இடைவெளிகளிலும், என்னுடைய பொதுவான தாமச குணத்தையும் மீறி, சில மிக அழகான புத்தகங்கள் கண்ணில் பட்டுவிடுகின்றன. அவற்றின் வடிவமைப்பிலும், செய்நேர்த்தியிலும் (அவற்றின் உள்ளடக்கத்தையே விடுங்கள்) அவை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றன.
என்னைக் கேட்டால், இவை எவர் மனதையுமே கவர வல்லவை… நாம் நம் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் போதுமானது, அவ்வளவே! கூட, எல்லா விஷயங்களையும் அரிச்சுவடி அடிப்படைகளில் இருந்து தெரிந்து கொள்ள, கொஞ்சம் தில் இருந்தால், அது இன்னமும் நன்றே!
… சரி, அப்படிப்பட்ட மகாமகோ அழகுப் புத்தகங்களில் ஒன்று:
Analog Circuit Design: Art, Science, and Personalities (Edited by Jim Williams / Butterworth-Heinemann / 1991)
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று இதனைத் தூசி தட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை.
மின்னணுவியல் எனும் இந்த மகாமகோ அண்டப் பெருவெளியில் – இந்த ஒத்திசை முறை (analog) உலகமும் அதன் வசீகரமும், என்னைப் பொறுத்தவரை இந்த எண்ணியல், இலக்கமுறை (digital) உலகத்தில் இல்லை. இந்த இரண்டு உலகங்களையும் ஓரளவு அறிந்து கொண்டவன், கொஞ்சம் போல சிறு வடிவமைப்புகள் செய்துள்ளவன் என்கிற முறையில் எனக்குத் தோன்றுகிறது – இந்த இலக்கமுறை உலகத்தில், சில சமயம் தேவைக்கதிகமாக அரூபநிலை அடுக்குகளையும், படுகைகளையும் (abstraction layers) உபயோகித்து விடுகிறோமோ என்று… உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியாத, வேண்டாத மனப்பான்மை வந்துவிடுகிறதோ என்று…
இவற்றைப் பற்றி விலாவாரியாக எழுதலாம் – ஆனால்… இரண்டு விஷயங்கள்:
அ: எனக்கு, என்னுடய தமிழைச் சரியாக எழுதமுடியாத கரடுமுரடு நடைசார் அடிப்படைப் பிரச்சினைக்கு மேலதிகமாக, அறிவியல் கலைச்சொற்களை உபயோகிப்பதில் எனக்குச் சில தயக்கங்கள், போதாமைகள் வேறு இருக்கின்றன.
ஆ: மேலும் நான், அடுத்த இரண்டு நாட்களுக்குள், இந்தப் புத்தகத்தை மறுபடியும் படிக்கலாமென்றிருக்கிறேன். ஆகவே.
ஒரு விஷயம்: இந்தப் புத்தகத்தின் முன்னுரையைப் படியுங்கள்:
இப்படி ஒரு அழகான முன்னுரை இருந்தால், இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.