இதுதாண்டா போராளி!
February 16, 2013
தமிழர்களின் பிரச்சினைகளில் எது தலையாய பிரச்சினை – என்பதை நான் பல வருடங்களாக ஆய்ந்து ஆய்ந்து, மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருக்கிறேன் – இந்தச் சீரிய ஆராய்ச்சியின் முடிவில் எனக்குத் தெள்ளெனத் தெரியவந்தது என்னவென்றால்… … …
பொறுத்திரு, தவித்திரு, நமைத்திரு – அவசரமே வேண்டாம். பொறுமையாக மேலேகீழே படிக்கவும்.
-0-0-0-0-0-
நம் தமிழகத்தின், தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகள் யாவை என்றால் அவை பல இருக்கின்றன.
1. ????
2. தொலைக்காட்சி மெகாசீரியல்கள்
3. இலக்கியவாதிகள்
4. பட்டி மன்றங்கள்
5. பேருரைகள்
6. சட்டை போடாமல், ஏன், ப்ராவும் கூடப் போடாமல் தங்கள் மார்பகங்களை முறுக்கிக் கொண்டு, மயக்கம் வரும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு வளைய வரும் சூர்யா, விக்ரம், விஜய் போன்ற இத்யாதி பிலிம் ஆணழகர்கள் (மூச்ச விட்டுத் தொலைங்கடா பாவிங்களா, செத்துக் கித்துப் போய்டப் போறீங்க! புள்ளகுட்டிகாரங்கதானடா நீங்க?)
7. எப்படா ஏதாவது மகாமகோ முக்கியமான, உலகத்தைக் குலுக்கும் பொதுப் பிரச்சினை வரும் – அதாவது – நடிகைக்குச் செருப்படி, நடிகை ட்விட்டரில் பதிலடி, சினிமாப்பாடகி ட்விட்டரில் உளறல், பதிலுக்குக் குமுறல், நடிகருக்கு அவமதிப்பு, திரைப்படத்துக்குத் தடை, திரைப்பட ரிலீஸ், திரைப்படம் புண்படுத்துதல், புண்படம் திரைப்படுத்தியெடுத்தல் – இன்ன பிற.
இவற்றைப் பற்றி வக்கணையாக, உலகத்துக்கே அலுக்கும் நம் அபிப்ராயங்களை எழுதலாம் – அதாவது – திரைப்படத்தில் பெண்ணுரிமை, திரைப்படத்தில் ஆணுரிமை, திரைப்படத்தில் திருநங்கையுரிமை, திரைப்படத்தில் திருமதிநாயகவுரிமை, திரைப்படத்தில் தீவிரவாதவுரிமை, தீவிரவாதத்தின் திரைப்படவுரிமை, திரைப்படத்துக்கே ‘ ’நீங்கள்ளாம் போங்கடா, பண்டாரங்களா’ எனத் தன்னைத்தானே வெளியிட்டுக் கொள்ளவுரிமை, திரைப்பட விமர்சனம், அந்தத் திரைப்படம் ஒரு காப்பி, இந்தத் திரைப்படம் ஒரு போர், அந்தத் திரைப்படம் உன்னதம், இது கலகக்காரனின் திரைப் பிரதி, டைரக்ஷன் புதுமுகம் அதனால நல்லா இல்ல, டைரக்டர் பழைய ஆள் – அதே கதைதான், சண்டைக்காட்சிகள் நிஜம் போலவே அதிரவைத்தன, பன்ச் டயலாக் இல்லவேயில்லையே, திரை நல்லா இருக்கு ஆனா கதை இல்லை, கதை நல்லா இருக்கு – ஆனா வசனம் சரியில்லை, நல்ல கதை – ஆனாக்க எடிட்டிங்ல சொதப்பிட்டாங்க, படம் நல்லா இல்ல – ஆனா இசை பரவால்ல, பாட்டு நல்லா இருக்கு – ஆனா இசை ஸோஸோதான், A is ரஹ்மான் இசை சமன் குலைக்கிறது – ஆனால் சமன் ஒரு நாயல்ல, என்னதான் இருந்தாலும் இப்பவும் இளையராஜான்னா இளையராஜாதான் (ஐயன்மீர், பின்னே அவரை இப்போது முதியசக்ரவர்த்தி என்றா அழைக்க முடியும்?) – இளம் பஞ்சாபிக் கிளி ஒரே தாராளம், ஹீரோயின் கிளியை எப்படி பின்நவீனத்துவமாக மஅடி-தொடை பதம் பிரித்துப் புரிந்து கொள்வது, நல்ல நடிகரை இப்படி வேஸ்ட் பண்ணிட்டாங்க, தமிழ்ல இன்னும் நாம்ப சினிமாவே எடுக்கல, ப்யம்பாஸுரன் தவான்னு ஒரு மங்கோலியன் டைரக்டர கேள்விப்பட்ருக்கீங்களா – எனும் ரீதியில் எப்படி எழுதலாம், என்று அலையோஅலை என அலையும், அல்லாடும் சினிமாமுதல்வாதிகளான இணையதளக் குஞ்சாமணி வீரர்கள் (ஜோதியில் கலந்தவன் சொல்கிறேன்!)
7 1/2. நாட்டின் கிரக மகத்துவங்களான ராமதாஸ், வீரமணி போன்றவர்களின் கொசுக்கடிகள்
8. பின்நவீனத்துவம்
9. முரசொலியில் கலைஞர் கடிதம்
…
…
இந்த ஜாபிதா மிக நீளமானது – ஆனால் ஐயோ எனக்கு முட்டிக் கொண்டு சிறுநீர் வந்துகொண்டிருக்கிறது. ஆக, இதோடு விடுகிறேன்…
… ஆனால், தமிழகத்தின், முதன்மையான, தலையாயதான பிரச்சினை என்ன தெரியுமா?
எது/யார் முதலாவதாக இருக்க வேண்டும் தெரியுமா?
இதனை நாம் பன்மையில் தான் சொல்ல வேண்டும்.
அதுதான், அவர்கள்தான்… டட்ட டய்ன்ங்ங்ங்ங்ங்ங்ங்….
1. ’போராளிகள்!’ (அய்யோ!)
-0-0-0-0-0-
ஏன்? ஏன் இந்தப் போராளிகள் தான் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையாய பிரச்சினை?? ஏனிப்படியானது?
தமிழர்களுக்கு புறநானூற்று வீரத்தை, அவர்களின் வெகுசிறு வயதிலிருந்து, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனப் புத்தகஆபாசங்களின் மனப்பாடப் பகுதியில் வைத்திருந்து திகட்டத் திகட்ட, மூச்சு முட்ட, மூச்சு முட்ட ஊட்டுவதால், ’போர்’ என்கிற சொல்லின் அரைகுறைப் புரிதல் மூலம் தான் எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டு புல்லரித்துக் கொள்ள முடிகிறது.
ஆக, தமிழர்களுக்கு போர்களின் பரிணாம வளர்ச்சியும் அதன் சகல பரிமாணங்களும் புரிபடாத காரணத்தால் – போர்களில் எப்படி தாம் வெற்றி(!) பெற்றால் செம ஜாலியாக இருக்கும் என்பதைப் பற்றிய புல்லரிப்பு மனக்கிளர்ச்சி மட்டுமே இருக்கிறது. பொதுவாகத் தமிழ்ச் சூழலில் எப்படிப் போர்கள் ஆரம்பிக்கின்றன, பின் பாதாளம் நோக்கியும், நீசமாகவும் படிப்படியாக வளர்கின்றன என்பதை நாம் அறிவதில்லை: எடுத்துக்காட்டாக – பரஸ்பரப் புரிதலில்லாமை என்று ஆரம்பித்து, பிணக்கு, சிறு வாக்குவாதம், உரத்த வாக்குவாதம், நாக்கைக் கசித்து லுங்கியை மடித்து, முக்கியமான அசம்யுத ஹஸ்தங்களான (அதாவது ஒற்றைக்கை முத்திரைகள்) – சந்திரகலா, அர்த்தசூசி, மிருகசீர்ஷ முத்திரைகளை எதிராளியின் முகத்தருகில் தேவைக்கேற்றாற்போல் காண்பித்து ‘ங்கோத்தா, இப்ப இன்னாண்ற’ எனக் கத்துவது, அடிக்கப் போவது போல எதிராளியிடம் போகும்போது தம் நண்பர் நம்மை பின்னிழுப்பது, வூடு கட்டுவது, சுற்றிக் கும்மியடிப்பது, கடைசியில் வேறு வழியேயில்லை, காப்பாற்றுபவர் எவருமில்லை என்றால் அடித்தே (அல்லது அடிபட்டே) விடுவது, பின்னர் பம்மிப்பம்மி எதிராளியின் கும்பல் அரிவாளால் வெட்டவருவதற்குக் காத்திருப்பது, தம் சொந்தக் கும்பலைத் தயார் செய்வது. அதாவது, சுறுசுறுப்பாக, முனைப்புடன் அட்டாக் பாண்டி ஆட்டம் ஆடுவது – என வாழையடிவாழையாக வளர்ந்து – இதற்கெல்லாம் பின்னர், மிகப்பின்னர் தான் போர் என்பது உருவாகும் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் நம் தமிழர்கள்.
இப்படிப்பட்ட கையறு நிலையில் இருக்கும் நம் தமிழர்கள் எதெற்கெடுத்தாலும், ஏன், எவடக்கெடுத்தாலும் கூட – எங்காவது சன்டே சண்டைக்குக் கிளம்பி மன்டே மண்டையை உடைத்துக் கொள்வதில் நிபுணர்கள். ஆவென்றால், ஊவென்றால் உடனே அடலேறுகள் போருக்குக் கிளம்பி வெற்றிவாகை சூடிக் கொள்வதே குறி…
… நம் இனமானச் சிங்கங்களுக்கு முதலில் இருந்தே முழுப் போர்தான்! வெற்றி வாகைதான்!! வெற்றிவேல் வீரவேல்தான்!!! இல்லையேல் வீரப் புறமுதுகுதான்! (கருணாநிதி: மதவாத சக்திகளுக்கு எதிராகத்தான், காங்கிரஸுக்கு ஓட்டளிக்க வேண்டி வந்தது; பார்க்க: கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு)
நமக்கோ, எப்போது புரட்சி வெடித்து, எந்தத் தெருமுனையில் எந்தச் சந்தில் போர் ஏற்பட்டு, யாருக்கு ரத்தக் களறியாகியிருக்கிறதோ எனப் பதட்டம்… எந்தப் புற்றில் எந்தப் போராளியிருக்கிறாரோ எனப் பயம், இவர் வெளிவந்து எந்தப் போராளியுடன் போர் புரியப் போகிறாரோ – இந்தப் போர்களில் நம் பங்கு என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற மனக் கிலேசம்…
போரடிக்கும், மேல்மாடி காலியான போராளிகள், முட்டாள்கள் தான் ஒழிகிறார்கள் விடு என்றும் விட்டேற்றியாக இருக்கவும் முடியவில்லை.
பாவித் தமிள் மணது அடித்துக் கொல்கிறதே! நான் என்ன செய்வேன்!!
-0-0-0-0-0-
போராளி என்கிற சொல் எப்படி வந்திருக்கலாம் என உரக்க யோசிக்கிறேன் – பலப்பல பற்பல பலான சந்தேகங்கள், எனக்கு…
போராளி என்றால் போராட்டத்தில் ஈடுபடுபவரா அல்லது போரிலேயே குதித்திருக்கும் ஒருவரா?
- போ + ராளி எனப் பிரித்தால் சரியாக வரவில்லை.
- போரா + ளி என்பதும் சரிப்படவில்லை. (ஆனால் ப்ரூஸ் ளீ ஒரு போரா ளி யோ? சந்தேகம்,சந்தேகம்)
- போர் + ஆளி = கடலுக்காகப் போரா? (ஆளி சூள் உளகு என்கிறது போலக் கம்பப் பெருந்தகையே எளுதினாரன்றோ? அல்லது இப்படி எழுதியது ஜோ டி க்ரூஸா?)
- போராளீ – ஈ + இ? (அதாவது சர்க்கரைப் பாகில் அமர்ந்து பின் மீள முடியாமல் இருக்கும் ஈதனை யாவர்க்கும் இடும்பை தராதவாறு விடுவித்து, அதன் இருத்தலையும், தன் இருத்தலையும் ஒரு சேர – இருத்தலைக் கொள்ளி ஈயாக – நியாயப் படுத்துபவர், ஜீவகாருண்யம் மிக்கவர் என்கிற பொருளா?)
- போரா ளி? (ல் என்கிற இடத்தில் ள் என்று சொல்லியும், லி என்கிற இடத்தில் ளி சொல்லியும் – அதாவது, உலறிக்கொட்டி, உச்சறிக்கும் மக்கல், குறிப்பாக, தொளைக்காட்சி செய்தி வாசிப்பாலர்கல் – நம் தமிளக்த்தில் ஸ்டாக் இருக்கும் ள்/ள/ளி க்களை எள்ளாம் உபயோகித்து அவ்வெளுத்துக்கலுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிற காரணத்தால், அவற்றின் போதாமையால் -அவர்கலை போரா ளி-கள் என்கிறோமோ?)
- Bore + ஆள் (அதாவது திசைச்சொல் ஒன்றைக் குழப்பி, தலைவேதனை தரும்படி பேசும், நடக்கும் ஒருவரை விளிக்க / குறிப்பிட்டுக்காட்ட இதனை உபயோகிக்கிறோமா?)
- போர் + ஆளி? (Bore + சிங்கம்; சிங்கம் போல தைரியமாக, விவஸ்தையே இல்லாமல் போர் அடிக்கும் அசிங்கத்தைக் குறிப்பிடுவதோ?)
- போர் + ஆளி? (Bore + ஆள்பவன்; மக்களுக்கு, கட்சிக்கு, வாரிசுகளுக்கு மகாமகோ அலுப்புத் தட்டினாலும் நான்தான் ஆண்டுகொண்டிருப்பேன் என எண்ணித் துணிந்து கருமம் செய்து கொண்டிருப்பவனா?)
- போ Rally? (இன்னொரு திசைச்சொல் குழப்பிப் பெயராக – பொழுதன்னிக்கும் ஊர்கோலங்க்ளுக்குப் போய்க்கினு, போஷ்டர் அட்டைகள ஏந்திக்கினு, நாவரள போராட்ட கோஷ்டம் போட்டுக்கினு, கொல்கை முலக்கமிட்டு – நாயாக, தெருத்தெருவாக அலைபவர்களைக் குறிக்கும்சொல்லா?)
- ஆண்கள் போராளிகள் என்றால், பெண்கள் போராளர்களா?
எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.
ஆகவே, போராளி என்கிற சொல்லுக்கும், பங்காளி, சேக்காளி, தாயோளி என்கிற சொற்களுக்கும் இடையே இருக்கக் கூடிய மொழியியல் ரீதியான, நுட்பமான, தகும்/தகா உறவுகளுக்குள் நான் போக விரும்பவில்லை. (ஆனால் இது பற்றி வேறு யாராவது ஆராய்ச்சி செய்தால் நலம்.)
-0-0-0-0-0-
ஹ்ம்ம்… என்னைச் சுற்றி உள்ள அனைவரும், தடுக்கி விழுந்தாலும் விழாவிட்டாலும் போராளிகளாக இருக்கிறார்கள். விதம் விதமான மகாமகோ போராளிகள் – இவர்கள் எல்லாரும் எந்தப் போர்முனைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. இப்படி அவனவன் கிளம்பினால், நம் நாடு என்னவாகும்? நினைத்தாலே கதி கலங்குகிறது.
என்னைத் தவிர யாருமே சாதாரண மனிதர்கள் இல்லை என்பது தான் விசனம் தரக் கூடியது. அய்யோ, நான் என்ன செய்வேன்! இந்தப் போராளிக் காட்டில் தன்னந்தனியே இருக்கிறேனே!
ஹ்ம்ம்ம். எது எப்படியோ, சரி, விஷயத்திற்கு வருவோம் – போராளி என்பவன் யார்?
தெருவள்ளுவர் அவருடைய தெருக்குரலில் சொல்கிறார்: (அல்லது என் வலது கை ஆட்காட்டி விரலைத் தலைக்கு மேல் தூக்கி மஹாவிஷ்ணு போல, அதனைச் சுற்றிச்சுற்றி, நான் உரக்கச் சொல்கிறேன்: ’வல்லுவன் ஸொள்கிறாஆஆன்’)
போராளி எனப்படுபவன் யாரெனின், தன்
வாலறிவன், குழைத்து ஆட்டுவன்.
(ஆவின்பால், அதிகசப்பு 5)
நச்சாதவார்க்கசப்பர் உரை: தன் வாலின் சுருள்சக்தியறிந்து அதனைப் போர்வரும்போது சுருட்டி, மற்ற சமயம் நீட்டிக் குழைத்து ஆட்டுபவன் போராளி எனப் படுவான்.
கலைஞர் XXX உரை: மனம் கவர் மங்கையின் கொங்கைக்காக மற்றிளம் காளைகளுடன்அல்குல்லும் தினமும் போரிட்டுக் கடைசியில் ஆரியச் சதியால் தன் வாலைத் தானே வெட்டிக் கொண்ட தமிழிளஞ்சிங்கப் போராளி கடைசியில் குருதிமுன்னே பீறிட்டெழத் தெரிந்து கொண்டது, ஐயகோ, தம்பீ, பார்த்திட்டாயா இந்த அவலத்தை, அவன் வால் பின்னால் இன்னும் இருக்கிறதே!.
வசந்த் உரை: பாஸ், வாயால் வீரமும் காலால் ஓட்டமும் காண்பிப்பவன் தான் போராளி. அதனாலதான் அந்த பட்சி செருப்ப காட்ன ஒடன ஜூட் விட்டுட்டேன்…
கணேஷின் பதவுரை: அந்த திருவள்ளுவரே வந்தாலும் ஒன்ன திருத்தவே முடியாதுடா.
செந்தில் உரை: அத்தாண்ணேய் இது.
நரிகீழழகர் உரை: எனக்குத் தேவைதான்!
-0-0-0-0-0-
(இப்போது ‘பறவைகள் பலவிதம்’ மெட்டுக்குப் பாடிக் கொள்ளவும்.
போ ராளிகள், பல விதம்
ஒவ்வொன்றும், ஒரு விதம் போ ராட்டங்கள், பல விதம் ஆனால் ஓட்டங்கள், ஒரே விதம்
… ஆக, நமக்குக் கீழ்கண்ட பல்வேறு போர்களை, பல்வேறு முனைகளிலும், மொண்ணைகளிலும் சந்தித்துக் கொண்டிருக்கும் போராளி வகையறாக்களைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்… (நான் இம்மாதிரி போராளி உபயோகிப்புகளை பார்த்திருக்கும் ஒரு போராளி, கவனிக்கவும்!)
- மனிதஉரிமைப் போராளி
- சமூக நீதிப் போராளி
- கொள்கைப் போராளி
- தமிழ்ப் போராளி
- சந்தனப் போராளி
- இணையப் போராளி
- இலங்கைப் போராளி
- புலம் பெயர்ந்த போராளி
- தனித்தமிழ்ப் போராளி
- பெண் போராளி
- வீரப் போராளி
- இனப் போராளி
- இனமானப் போராளி
- குழந்தைப் போராளி
- இலக்கியப் போராளி
- கவிதைப் போராளி
- கலகப் போராளி
- பசுமைப் போராளி
- திராவிடப் போராளி
- சிவப்புப் போராளி
- நாத்திகப் போராளி
- ஆத்திகப் போராளி
- புதுமைப் போராளி
- புரட்சிப் போராளி
- கருத்துப் போராளி
- அணுஉலைப் போராளி
- ஆதிவாசிப் போராளி
- தீவிரவாதிப் போராளி
- எழுச்சிப் போராளி
- சுவிசேஷப் போராளி
(இன்னமும் நிறைய விதமான போராளிகள் இருக்கின்றனர், இருக்கலாம் – ஆக, உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத போராளி ஜந்துக்களை கீழே நிரப்பிக் கொள்ளவும்)
- …
- …
- …
… இந்தப் போராளித்துவத்தில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், ஆட்டைப் போராளியாக்கி, மாட்டைப் போராளியாக்கி, கடைசியில், நம் காந்தியையே ஒரு போராளியாக்கி விட்டார்கள் இந்தப் போராளிப் பாவிகள்! இவர்கள் பார்வையில், காந்தி ஒரு ’அகிம்சை வழிப் போராளி!’ஐயகோ! இதனைக் கேட்பாரில்லையா!!
-0-0-0-0-0-
எனக்கு, மேற்கண்ட ஜாபிதாவைப் படிக்கும்போதே புல்லரித்து, மயிர்க் கூச்செறிந்து வியர்த்து விடுகிறது. தினவெடுத்துத் தினவெடுத்து, என் எழவெடுத்த தோள்கள் கழுத்துக்கு மேலை,தலைக்கு மேலே போய் கீழேயே வரமறுக்கின்றன… எவ்வளவு நாள் தான் நான் இப்படி வாழ முடியும்?
… ஆனால், கீழ்கண்ட போராளி வகையறாக்களையும் நாம் இனம் கண்டுகொண்டு இறும்பூதடைய வேண்டும்.
- ஊர்வலப் போராளி – வேலைவெட்டியில்லாமல் சும்மனாச்சிக்கும், போலீஸ் பாதுகாப்புடன் நகர் நடைவலம் வந்து சிக்கன் பிரியானியைச் சாப்பிட்டு 200 ரூபாய் பெற்றுக்கொண்டு மகிழ்பவர்.
- அட்டைப் போராளி – அட்டையில் வாசகத்தை எழுதிக் கொண்டு உயர்த்தி, டிவி கேமராக்களுக்கு முன் இடம் கிடைத்தால் வலம் வருபவர்.
- ஆட்டைப் போராளி – போராளியாக இருப்பதற்கு,போராட்டம் நடத்துவதற்குப் நன்கொடைப் பணம் பெற்று, அதனை ஆட்டைய போடுபவர்,
- விமர்சனப் போராளி – எதற்கெடுத்தாலும் விமர்சனம் வைத்து வைத்துக் கழுத்தறுக்கும் போர் ஆசாமி.
- குசுப் போராளி – இதில் இரண்டு வகை:
- நேரிடைக் குசுப் போராளி: சபை நாகரீகம் என்றெல்லாம் பார்க்காமல், ஓங்காரமாக டர்ரென்று விட்டு, தங்கள் போர்க்குணத்தை, விமர்சனத்தை, எதிர்ப்பைக் காட்டும் வீரர். (இலவச இணைப்பு: துர்நாற்றம்)
- இணையக் குசுப் போராளி: இவரும் மேற்படியேதான். ஆனால் இவர்களுடையது FoIP (Fart over IP) எனும் தொழில் நுட்பத்தினால் சாத்தியமாகி இணைய Troll பின்னூட்டங்களாகவும், விமர்சனங்களாகவும் அமையும். (மேலதிக விவரத்துக்கு இதுதாண்டா தமிழ் இளைஞன்! பதிவைப் படிக்கவும்)
- குடிப் போராளி – குடிப்பதற்காகத் துட்டுக் கேட்டு வூட்லயும், ரோட்டிலும் போர் முளக்கம் செய்பவர்.
- சாக்கடைப் போராளி – மொடாக்குடி குடித்துவிட்டு சாலையோரச் சாக்கடையுடன் புணர்ந்தே அதனை ஒழிக்க முயலும் பெருங்குடியார்.
- ஃப்ளெக்ஸ் போர்ட் போராளி – சுற்றி நானாவித முண்டங்களால் நிரப்பப்பட்டு, நடுவில், மந்தஹாசப் புன்னகையுடன் செல்ஃபோன் தரித்துப் பாண்டியாடிக் கொண்டிருக்கும் லோக்கல் தலைவர் – இந்தத் தட்டிகளை வைத்தே போர்க்கள வெற்றி காணும் எண்ணமுள்ளவர்.
- போபோராளி – வேலைவெட்டியற்று அணிவகுத்துப் போருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போராளிகளை போ என்று விரட்டும் காவல்துறைப் போராளிகள். (உண்மையிலேயே பாவப்பட்ட ஜீவன்கள் இவர்கள்)
(இந்த ஜாபிதாவிலும், இன்னமும் நிறைய புது விதமான போராளிகள் இருக்கின்றனர், இருக்கலாம் – ஆக, உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத புதுப் போராளி ஜந்துக்களை கீழே நிரப்பிக் கொள்ளவும்)
- …
- …
- …
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா! சரி கடைசியாக….
- எதிர்ப்போராளி – அடியேன் (சும்மா பேச்சுக்குத் தான் சொன்னேன், அடித்துவிடாதீர்கள் ஐயன்மீர்! மன்னித்து, மறந்து விடுங்கள் – நான் புறமுதுகிட்டு ஓடி விடுகிறேனே! நானும் ஒரு தமிழ்ப் போராளி தானே??)
-0-0-0-0-0-
ஆராய்ச்சி முடிவு: இந்தப் போராளி வகையறாக்கள் அனைவரும் ஒழிக்கப் பட்டால் சர்வ சுபிட்சம் நிலவலாம், இல்லையானால் இவர்கள் உண்மையாகவே ஏதாவது சமூகத்திற்குப் பணியாற்றினால் கூட, நம் நாடு உருப்படலாம். இல்லையேல்…
போர்முரசு கொட்டட்டும்! துந்துபிகள் முழங்கட்டும்!
எக்காளம் (ச்சீ, இது என்ன செய்யும்? எழவு மறந்துபோய் விட்டது!)!
அடலேறே அணி வகுத்து வா! தெருப் பொறுக்கியே தெம்மாங்குப் பாடி வா!!
இந்தப் போராளிக் கூத்தர்களை, இந்த அவனியிலிருந்தே விரட்டி விட்டிடலாம்!!
வாழ்க எதிர்ப்போராளியம்! வளர்க அதன் பிணி!!
(டேய், சோதாப் பயலே, சோடா கொண்டு வாடா…)
-0-0-0-0-0-
தொடர்புள்ள / தொடர்பற்ற பதிவுகள்:
February 17, 2013 at 01:14
21 ஆம் நூற்றாண்டில் மாறிவரும் வசன நடை. சொற்களுக்கு புதிய அர்த்தங்கள். என்ன் செய்வது, ” Fight for the Rights”
February 28, 2013 at 18:30
Nihilism ஏ அதிகமாக இந்த கட்டுரையில் தெரிகிறது…
ஒரு புத்தக சிபாரிசு:ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் நீட்ஷே எழுதியது பயன் பெருக
September 14, 2014 at 17:04
அருமையான காமடி பதிவு super super.