அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!
May 7, 2026
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…



May 7, 2026 at 10:53
ஐய்யய்யோ! ஸ்கூப் ப்ரேக்கிங் அவசரகதிப் பதிவில் விட்டுப்போன கேள்விபதில்கள்… :-(
கேள்வி: தளபதியிடம் ஏதாவது பிரத்யேகக் கோரிக்கைகள் வைத்தீர்களா?
பதில்: எங்கள் மகேசன்பொய்யாமொழியின் பணியே மக்கள்பணி என்கிற அகில அண்ட உதயநிதி ரசிகர் மன்ற திராவிடக் கோட்பாட்டின்படி, எங்கள் 2026 மற்றும் 2021 வாக்குறுதிகளை, மக்கள் நலம் கருதி அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனப் பொன்மனச் செம்மல், தளபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அவரும் அவை அனைத்தையும், தான் பதவியேற்ற பின் முதற்கையைழுத்து போடும் ஆணைவழி நிறைவேற்றுவதாகச் சொன்னார். நாங்கள், எங்கள் திராவிட வழக்கப் படியே தொடர்ந்து மக்களோடு மக்களாக மக்களுக்காக உழைத்து ஓடாகத் தேய்வோம்.
கேள்வி: தவெக அமைக்கப் போகும் மந்திரி சபையில் இடங்களைக் கேட்டுப் பெறுவீர்களா/
பதில்: நாங்கள் கேட்டுப் பெறவில்லை. திராவிடத்தின் விடிவெள்ளி தளபதி அவர்களே அவர்களுக்கே உரித்தான மதச்சார்பின்மைக் கரிசனத்துடன், திராவிடக் கொள்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பது போல், செந்தில்பாலாஜிக்கு மட்டும் மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக், சுகாதாரம், கனிமவளம், உள்ளாட்சியமைப்பு, பொதுப்பணித்துறைகளுக்கு பொறுப்பு அமைச்சராக, அன்புடன் நியமிக்கவிருக்கிறார். ஏனெனில் அவர் ஒருவர் இருந்தாலே எங்களுக்குப் போதுமானது, அவருக்கு இருக்கும் ஆட்சியனுபவம் எங்களுக்கும் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.