சீனாவின் அன்பளிப்பான கோவிட் வைரஸ், தடுப்பூசி மருந்துகள் – குறிப்புகள்
April 27, 2021
ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருக்கிறார்:
ஐயா, உங்கள் கோரிக்கைக்கு பீடிகை தேவையாக இருந்திருக்கவில்லை. பொதுவாகவே, நான், ஓரளவு வசைகளையுமேகூட இங்கு அனுமதித்திருக்கிறேன், ஒரு பிரச்சினையுமில்லை; மேலும், உங்களை உங்கள் முந்தைய பின்னூட்டங்களின் மூலமாகத் தெரியும். எப்படியாக இருந்தாலும் கவலை வேண்டேல் – மதிய உணவு உண்டாகிவிட்டது, இனி இரவு வரை உங்களை உண்பதாக இல்லை. சரியா?
நான் ஒரு பொறியியலாளன் இன்னபிற மட்டுமே; சர்வ நிச்சயமாக ஜெயமோகனோ பா.ராகவனோ அல்லன் – ஆக, இன்ஸ்டன்ட் நூட்ல்ஸ் அரைவேக்காடோ அல்லது கருத்துலக கொத்து புரோட்டாவோ செய்ய விருப்பமில்லை.
மேலும் நான் மைக்ரொபயாலஜி, எபிடெமியாலஜி காரன் அல்லன்; ஆனால் – பல துறைகளில் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் குறுகுறுப்பு இருக்கிறது, என் எல்லைகளையும் நன்றாகவே அறிந்திருக்கிறேன்; ஓரிரு உயிரியல்/நுண்கிருமி விஞ்ஞானிகளை அறிவேன் + ஓரளவு அடிப்படை அறிவியல் அறிவும்(!), கேள்விஞானமும் உண்டு. சுமார் 12 வருடங்களுக்கு முந்தைய H1N1 வைரஸ் பெருந்தொற்றுப் பதற்றத்தின்போது விலாவாரியாக அது குறித்து எழுதியிருக்கிறேன் (இங்கல்ல), பேசியுமிருக்கிறேன் (தமிழகத்தில் அல்ல) என நினைவு.
இந்த கோவிட் தொற்று வந்தபின், சென்ற 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து, தனித்தனியாகச் சிலபல, பயபீதியில் இருந்த (வயதான தாயார், பிள்ளைத்தாச்சி மகள், இரானில் தனியாக இருக்கும் கணவர்++ போன்ற காரணங்கள்) ஒத்திசைவு சக ஏழரைகளிடமும் (அவர்கள் தொடர்பு கொண்டதால்) பேசி முடிந்தவரை, என் அறிவுக்கேற்ற வரை ஆசுவாசம் கொடுத்திருக்கிறேன்…
மேலும் தடுப்பூசிகள் குறித்த பொய்ப் பப்பரப்பாக்கள் எனக்கு ஆயாசம் அளிக்கின்றன – இவற்றை எதிர்த்து, முடிந்தவரை உண்மைகளை வெளிக்கொணரவேண்டும் எனவொரு அவா.
அவ்ளோதான் என் தகுதி(!)கள். ஆகவே.
இருந்தாலும். முடிந்தவரை மலினப் படுத்தாமல், அதே சமயம் ற்றொம்பச் சிடுக்கலில்லாமல் மேலோட்டமாக ஒருமாதிரி எழுதியிருக்கிறேன்.
தவறுகளைச் சுட்டினால், தாராளமாகத் திருத்திக் கொள்கிறேன்.
-0-0-0-0-0-
1. வைரஸ் குறித்த என் ஒருமாதிரி புரிதல்களுக்கு, பெரும்பாலும் கீழ்கண்ட நான்கு புத்தகங்களே மூலங்கள்; + சிலபல தொழில்முறை சஞ்சிகைகளும் அவற்றில் வந்த சில முக்கியமான கட்டுரைகளும் இருக்கின்றன.
2. என் பார்வைகள் 100% சரி எப்போதும் சரியென்று சொல்லவில்லை; ஆனால் அவை, எனக்குக் கிடைத்திருக்கும் தரவுகளை வைத்துத்தான் எழுதப்படுகின்றன.
3. உங்களுடைய பார்வை சரிதான். ஆனால், முந்தைய வைரஸ் பெருந்தொற்றுகள் போலல்லாமல் இந்த சீனாக்கார ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் விஷயத்தில் சிலபல விஷயங்கள் கூடி வந்திருக்கின்றன. சில விஷயங்கள் சிக்கலுமாகியிருக்கின்றன.
4. “பொதுவாக வாக்ஸின் தயாரிப்பதற்கு (+ சோதனை செய்ய எடுத்து கொள்ளும் காலம்) குறைந்தது ஒரு ஐந்து ஆண்டுகளாவது ஆகும் அல்லவா?”
4.1 சொல்லப் போனால், இதுவரை குறைந்த பட்சம் சுமார் 10-15 ஆண்டுகளையாவது நாம் எடுத்துக்கொண்டுள்ளோம். ஏனெனில் தடுப்புமருந்து (வேக்ஸின்) குறித்து ஆராய்ந்து, பலப்பல முறை சரிபார்த்து, பலவிதமான பரிசீலனைகள் செய்தபின், க்ளினிக்கல் ட்ரையல்களுக்கும் பின்னர் தான், (குறைந்த பட்சம், ஏழெட்டு படிகள்) அவற்றைத் தொழில்முறையில் உருவாக்க லைஸென்ஸ்/அனுமதி பெறமுடியும்; பின்னர் தாம், மார்க்கெட்டில் ட்ரையல் வெள்ளோட்டம் விடமுடியும். பாரதமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி – இவையெல்லாம் மிகக் கறாராகக் கடைபிடிக்கவேண்டிய படி நிலைகள்தாம். மேலும் தடுப்புமருந்து கொடுக்கப்பட்ட பின் அதன் மீதான கணிப்புகளும், விளைவுகளும் தொடர்ந்து மானிட்டர் செய்யப்பட்டுத் தொகுக்கப் படுகின்றன. அறிவியலுக்கும், தொழில் நுட்பங்களுக்கும், நமது விஞ்ஞானிகளுக்கு நன்றியுடனும் இவ்விஷயங்கள் நடந்த மணியம்.
4,1 மானுடர்கள் கடந்த பலப்பல மாமாங்கங்களாக தடுப்புமருந்துகளை, மிகவும் வெற்றிகரமாகத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள், இதன் மூலமாக நடந்திருக்கும் விளைவுகளைக் குறித்து அமோகமாக நம்மிடம் தகவல்கள் (டேட்டா) இருக்கின்றன; + நம் நிபுணர்களுக்கு எக்கச் சக்க முன்னனுபவம் இருக்கிறது.
4.2 முன்னெப்போதும் இல்லாத அளவில், நமக்குக் கணிநித் தொழில் நுட்பம் இருக்கிறது; கறார் தரவுகளின் பாற்பட்டு பல விதமான ஸிமுலேஷன்களைச் செய்ய முடிகிறது – இதனால் ‘உருவாக்கம் <-> பரிசோதனை <-> தவறுகளைக் களைதல் <-> மீளுருவாக்கம்…’ குறித்த சுழற்சிகள், ஒப்பு நோக்க மிகக் குறைவாகவே நேரம் எடுத்துக்கொள்கின்றன.
4.3 ஸிமுலேஷன்களின் படிப்பினைகளை வைத்து, நிஜமாகவே மருந்து தயாரிக்கும் சுழற்சிகளும் குறைவாக ஆகியிருக்கிறன; ஸிமுலேஷன் வைத்து அடிப்படையில் செய்யவேண்டிய சில கீழடுக்கு லெவல் பரிசோதனைகளும் விரைவு படுத்தப் பட்டுள்ளன.
4.4 தடுப்புமருந்துகளை உருவாக்கும் முறைமைகளும் சட்டகங்களும் பலவாறு பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.
4.4.1 முற்காலங்களில், எடுத்துக்காட்டாக – வீரியம் குறைந்த கொடும்-வைரஸ் வகையைப் பெற, கொடும் வைரஸ்களை ஒருமாதிரி ஆட்டு (திராவிடரல்லாத) மூளையில் அல்லது குரங்குக்குச் செலுத்திப் பின்னர் அதற்கான எதிர்ப்புணர்ச்சி அதற்குப் பாவம், கொஞ்சம் வந்தவுடன் அதனை எடுத்துப் பல்கிப் பெருகவைப்பது எனவொரு வகை. பின்னர் அந்த எதிர்ப்புணர்ச்சி தந்திருக்கும் எதிர்வைரஸ் மூலக்கூறுகளை/தொகுப்புகளை நீர்க்கடிக்க வைத்து மானுடருக்கு அளித்துப் பின்னர் அதற்கான எதிர்ப்பு சக்தியை மானுடருக்கு (வைரஸ்மேலிருக்கும் அன்டிஜென்களை வைத்து(ம்) வைரஸ்ஸை இனம்கண்டுக் கொண்டு மெமரி ஸெல்கள், ஹார்மோன்கள் வழி நம் உடல் தயாரிக்கும் அன்டிபாடிஸ் வகையறாக்களை வைத்து வைரஸ்களை ஒழிப்பது) அளிப்பது ஒருமாதிரி அடிப்படை.
4.4.2 ஆனால் இப்போது பலப்பல வழிகளில் வைரஸ்களை எதிர்கொள்ளும் முறைமைகள், சட்டகங்கள் வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வைரஸ் ‘பேக்கெட்’ உள்ளே இருக்கும் ஆர் என் ஏ பற்றிக் கவலைப்படாமல், அதன் பேக்கெட்டை மட்டும் திறந்துவிடுவது, ஆகவே, வைரஸ்களைச் செயலிழக்கச் செய்வது போன்றவை. இம்மாதிரிப் பலப்பல் நூதன விஷயங்கள் இக்காலங்களில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மெஸ்ஸெஞ்சர்-ஆர்என்ஏ வழி, இன்னொரு அணுகுமுறை.
4.4.3 உற்பத்தித் தொழில் நுட்பங்கள் வெகுவாக மாறிவிட்டன. கச்சாப் பொருட்களின் வீச்சும் வீரியமும் ஆச்சரியப் படத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. ஒரு விஷயம்: உலக அளவில், வேக்ஸின் உற்பத்தித் திறன் என்பது, நம் பாரதத்தில் தான் இன்றைய தேதிக்கு அதிகம். இந்த விஷயத்தில் நாம் தான், உலக லீடர்.
4.5 முற்காலங்களில், இந்தத் தடுப்பூசி/மருந்து ஆராய்ச்சிகளில், தொழில் முனைவுகளில் உலக நாடுகளுக்கிடையே பெரிதாகக் கூட்டுறவு இருந்திருக்க வில்லை. (இதற்கு சில பிரம்பிப்பூட்டும் விதிவிலக்குகள் இருக்கின்றன – கோல்ட்-வார் கால அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பு நினைவுக்கு வருகிறது!)
ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது – பல லெவல்களில் ஞானப் பரிமாற்றங்கள் – அதிகாரபூர்வமாகவே நடக்கின்றன. இதனால் மானுட மந்தைகளில் தவிர்க்கவியலாமல் இருக்கும் புத்திசாலிகளிடையே நடைபெறும் அறிவுபூர்வமான உரையாடல்களால், பல முன்னெடுப்புகள் வேகமடைந்துள்ளன.
4.6 வைரஸ்களின் தன்மைகள் குறித்த கண்டுபிடிப்பு/பகுப்புகளுக்காக புதுமையான மெஷின்களும் அணுகுமுறைகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றின் மூலம், நம் விஞ்ஞானிகள் விரைவிலேயே, வைரஸ்கள் குறித்த ரிஷிமூலம் நதிமூலம் பற்றிய விவரணைகளை விரிவாகப் பெற முடியும். (சுமார் இருபது வருடங்கள் முன்கூட இவ்வசதிகள் நமக்குக் கிடைத்திருக்கவில்லை)
4.7 பொருட்படுத்தத் தக்க வேக்ஸின் வகை ஆராய்ச்சிகளில் ஒரு முக்கியமான படி: வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மேலான கட்டுரைகள் – ஆதாரபூர்வமான திடகாத்திரமான சஞ்சிகைகளில் பதிப்பிக்கப் படவேண்டும்; அதற்கு அவை சக/மதிக்கப்படும் விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்பட்டு (பியர் ரிவ்யு) பின்னர் அவர்களுடைய ஒப்புதல்கள்/கருத்துகள் பெறப்பட்டுப் பதிப்பிக்கப் படவேண்டும்; எனக்குத் தெரிந்தே, கடந்த 2018-19 வரை இதற்கு (வேக்ஸின் விஷயங்கள்) குறைந்த பட்சம் ஒரு வருட நேரம் எடுத்திருக்கிறது. எய்ட்ஸ் வைரஸ் விஷய ஆராய்ச்சிகளில், இந்த பியர்-ரிவ்யு முறை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரமெடுத்த விஷயங்களை அறிவேன்)(
ஆனால், இந்தக் கோவிட் பெருந்தொற்று விஷயத்தில் ஒரே வாரத்தில் தேர்ந்த, துறை சார்ந்த சான்றோர்களால், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சரிபார்க்கப் பட்டுள்ளன.
4.8 ஆராய்ச்சி முடிவுப் படி நிலைகளின் இன்னொரு விஷயம்: ரிப்ளிகேஷன் – அதாவது, திரும்பி அதே பரிசோதனைகளைச் செய்து அதே முடிவுகள் வருகின்றனவா எனப் பார்ப்பது; எல்லா துறைகளுக்கும் இது முக்கியம். (தண்டக் கருமாந்திரத் துறைகளான மனோதத்துப் பித்துவம், நாட்டாரியல், சமூகவியல், பின் நவீனத்துவ உளறல்கள், ஜெண்டர் ஸ்டடீஸ் போன்ற கழிசடைகள் இங்கே கணக்கில் கொள்ளப் படவில்லை; ஏனெனில் அவையெல்லாம் ஆனந்தமாகக் கருத்துலகப் பட்டம் பறக்கவிடும் வல்லமை மிக்கவர்களுக்கானவை…)
ஆனால் – இந்த ரிப்ளிகேஷன் (‘போலச் செய்வது’) செய்யப்படுவதற்கு, பரிசோதனைகளின் விவரங்கள் முக்கியம் – அவை முதலில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியவரால் திறந்த நிலையில் வைக்கப் படவேண்டும். இதெல்லாம், இந்தக் காப்புரிமை காலகட்டங்களில் பிரச்சினைகள். இதுவரை, இந்த காத்திரமான ரிப்ளிகேஷன் சிலபல வருடங்களை எடுத்துக்கொள்வது சகஜம்.
ஆனால், சீனாக்கார கோவிட்டின் தீவிரம் கருதி, பலப்பலர், தேர்ந்த விஞ்ஞானிகள் – முழுவதுமாக விவரங்களை, ஒபனாக வெளியிட்டிருக்கிறார்கள்; ஆகவே ரிப்ளிகேஷன் விஷயமும் சுளுவாகி விட்டது. சரிபார்த்தல்கள் இரண்டுமூன்று வாரங்களிலேயே நடந்தன – பொதுவாக இவற்றுக்குச் சில வருடங்களாகும்.
4.9 இந்த சீனாக்கார கோவிட் வைரஸ்ம் ‘ஸார்ஸ்’ எனப்படும் பிரச்சினை ஏற்படுத்தும் வைரஸ் தொகையில் இருக்கும் விஷயம். Severe acute respiratory syndrome – மூச்சு தொடர்பான, நுரையீரலைத் தாக்கும் விஷயம், மூச்சுத் திணறலை உருவாக்கி மேலுலகத்துக்குப் பார்ஸேல் செய்யும் பராக்கிரமம்; இதன் ஒரு உபத்திரமே பெரிதாக இல்லாத மூத்தாள் பையன், நம்முடைய செல்ல ஜலதோஷம் எனும் மூக்குச் சளி – இதுவும் வைரஸ் காரணமாகத் தான் வருகிறது.
மேலும், இந்த ஸார்ஸ் வகை – க்ளாஸ் – வைரஸ்களை நம் விஞ்ஞானிகள் குறைந்த பட்சம் மூன்று மாமாங்கங்களாகப் படுதீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறார்கள்; ஆகவே துறை வல்லுநத்தனம் என்பது நம்மிடம் நிறையவே இருக்கிறது.
இதன் காரணமாகவும் நமக்கு வேக்ஸின் தயாரிப்பது, சுளுவாயிருக்கிறது.
4.10 இணையத் தொடர்பு, தகவல் தொடர்பு வசதிகளால் முக்கியமான தகவல்கள் சேகரிப்படுவது, பரிமாறப்படுவது, சரிபார்க்கப்படுவது போன்ற விஷயங்களெல்லாம் சுளுவாக ஆகியிருக்கின்றன.
5. நம் பாரதத்தைப் பொறுத்தவரையில் – எந்தவொரு ‘அப்ரூவல்’ வழிமுறைகளிலும் சுணக்கமோ, ஊழலோ இல்லை. எல்லாம் படுதுரிதப் படுத்தப் பட்டு முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.
மேலும், கோவிட் எழவின் தீவிரத்தையும் வீச்சையும் மனதில் கொண்டு, சிலபல தேவையற்ற படி நிலைகள் தளர்த்தப் பட்டன; ஆனால் அவற்றைச் சரியாக நிர்வாகம் செய்யவும் முஸ்தீபுகளும் ஏற்படுத்தப்பட்டன. எதையும் சும்மா லூஸ்ல வுடவில்லை. முற்காலங்களை ஒப்புநோக்க இச்சமயம் வேக்ஸின்கள் துரிதமாகப் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உண்மைதான். ஆனால் பொய்மை இல்லை.
மேலும் பயன்பாட்டுக்கும், அதன் பின்விளைவுகளுக்கும் உடனடியாக விவரங்கள் தொகுக்கப்பட்டும் கவனிக்கப் பட்டும்தான் வருகின்றன. (எங்காவது நம் மக்கள் கொத்துக்கொத்தாக இந்த தடுப்புமருந்துகள் காரணமாகச் செத்திருந்தால், எனக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்)
ஆக – இந்த கோவிட் வேக்ஸின் விஷயங்களில் – தொழில் நுட்பத்திலும், நேர்மையிலும், நல் விளைவுகளிலும் பாரத அரசு கறார்; இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
6. இப்படிப் பலவிஷயங்கள் ஒருங்கிணைந்து திரண்டு வருவதைக் கணக்கில் கொண்டால், சர்வ நிச்சயமாக இந்தக் ‘குறைந்த காலத்திலேயே தடுப்பூசிகள் சந்தைக்கு வருவது’ என்பது பெரிய விஷயமில்லை – மேலும் வரவேற்கத் தக்கதுதான், என்பது என் கருத்து.
7. “Covid வாக்ஸின்கள் மிக குறுகிய காலத்தில் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால், அவற்றை சோதனை செய்ய எடுத்து கொண்ட காலம் மிகவும் குறுகியே இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால் எதாவது பின்விளைவுகள் இருக்குமா?”
7.1 பின் விளைவுகளற்ற எந்தவொரு விஷயமுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. நாம் உண்பதன் விளைவுகளில் முக்கியமான ஒன்று பின்விளைவுதானே?
நாம், காரியங்களைச் செய்பவர்கள்; ஆகவே பின்விளைவுகளைத் தொடர்ந்து மேலாண்மை செய்பவர்கள்/ இதுதான் நம் கர்மா. வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாழைக்காயாக இருந்தாலும் சரி. (இப்போது உங்களுக்கு பஜ்ஜி நினைவுக்கு வரவேண்டும்)
ஆக, வேக்ஸின்களுக்கு எப்படிப் பின்விளைவு இல்லாமலிருக்கும், சொல்லுங்கள்? வேண்டுமானால், நல்ல பின்விளைவுகள் (கோவிட் எதிர்ப்பு சக்தி), பிற பின்விளைவுகள் என பகுத்தறிந்து கொள்ளலாம், அவ்வளவுதான்!
7.2 ஐயா, இந்தத் தடுப்புமருந்துகளுக்கான உடல்ரீதியான எதிர்வினைகளை, நம் அரசு தொடர்ந்து கண்காணித்து, பரிசீலித்து வருகிறது. சாதாரணமான வேக்ஸினுக்கான உடலியல் எதிர்வினைகள்தான், இதற்குமே அதிக பட்சம் ஒன்றிரண்டு நாள் ஜுரம். (மாறாக – எங்கள் குடும்பத்தில் ஒரு எதிர்வினையும் இல்லை; என் மனைவியின் கருத்துப் படி, தடுப்பூசிக்குப் பின், என் ‘அறுவை ஜோக்குகள் அதிகமாகிவிட்டன.’ ஆனால் இது ரிப்ளிகேட் செய்யப்படமுடியாத நாட்டாரியல் விஷயம்)
கேளிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, எனக்குத் தெரிந்து உலகளாவிய அளவிலேயே கூட – நல் விளைவுகளே ஏற்பட்டிருக்கின்றன.
மறுபடியும் தொற்று என வந்தாலும் அதன் வீரியம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. போய்ச் சேர்வோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
7.3 ஜாக்கிரதையுணர்ச்சியை முன்னிட்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்களுக்கு++ என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன; இவையும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
7.4 ஆனால் அயோக்கிய முட்டாள்தனத்துக்கும், அதன் மாமாபையனான திராவிடத்துக்கும் மருந்தேயில்லை. அவை செத்தொழிந்தால் தான் அல்லது துப்புரவாகச் சுளுக்கெடுக்கப் பட்டால்தான் சரியாகும்போல.
8. ஐயா வேல், எனக்குத் தெரிந்தவரை, ஆத்மார்த்தமாக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறேன்.
10%ஆவது உங்களைத் திருப்திப் படுத்த முடிந்திருந்தால் மகிழ்வேன்.
நன்றி.
—
—
April 27, 2021 at 17:01
தகவல்கள்+புத்தக அறிமுகங்களுக்கு நன்றி ஐயா. இன்றுதான் தடுப்பூசி-Pfizer போட்டுக்கொண்டேன் (இங்கும் இலவசம் தான்).2021 Pfizer profit guidance நம்பரைப் பார்த்தால் தலைசுற்றுகிறது.’கந்தன் புத்தி கவட்டையில’ என்ன செய்ய :-)
April 27, 2021 at 17:44
Glad to be of service. 🙏🏿
April 28, 2021 at 13:12
நேரம் எடுத்து கொண்டு விரிவாக எழுதியமைக்கு மிகவும் நன்றி. பயம் ஒரு அளவிற்கு தெளிந்தது. மே ஒன்றிற்கு பிறகு வாக்ஸின் எடுத்து கொள்ள முடிவு செய்துவிட்டேன். உங்களுடைய இந்த பதிவை என்னை போன்ற சில பயந்த சுபாவ நண்பர்களுக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன்.
April 28, 2021 at 13:38
யோவ்! உமக்கு பயந்த சுபாவமா? யார் காதில் புஷ்பத்தைச் சுற்றுகிறீர்??
இங்கே பின்னூட்டம் இடுவதற்குரிய தைரியத்தில் 10% இருந்தால் வேக்ஸின் போட்டுக்கொள்வதற்கு என்ன, ஃபினாய்லையே அப்டியே குடிக்கலாமே??
(பிரச்சினை என்னவென்றால் – இப்பதிவில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் இன்னபிற, அசிங்கமாக இருக்கிறது; வழக்கமாக இவ்வளவு மோசமாக எழுதமாட்டேன்… ஆனால்… மன்னிக்கவும்!)
April 28, 2021 at 14:08
Thanks
// இந்த கோவிட் தொற்று வந்தபின், சென்ற 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து, தனித்தனியாகச் சிலபல, பயபீதியில் இருந்த (வயதான தாயார், பிள்ளைத்தாச்சி மகள், இரானில் தனியாக இருக்கும் கணவர்++ போன்ற காரணங்கள்) ஒத்திசைவு சக ஏழரைகளிடமும் (அவர்கள் தொடர்பு கொண்டதால்) பேசி முடிந்தவரை, என் அறிவுக்கேற்ற வரை ஆசுவாசம் கொடுத்திருக்கிறேன்…
April 28, 2021 at 15:27
Just, relax. Chill.