கருத்தியல்ரீதியில் தோசைமாவையும் ஸைகோஅனலைஸ் செய்வது எப்படி?

July 23, 2019

இன்னாங்கடா?

புளித்தமாவின் தத்துப்பித்துவம், ஜெயமோகன் மாவோயிஸ்ட்களாலும் பாண்டாக்களாலும் கருணையற்றுத் தாக்கப்பட்டது, என எல்லாவற்றையும் ஊற்றிக்கழுவியபின்னும் – இந்த மாவலை அடங்கமறுக்கிறதே! அத்துமீறுகிறதே! திருப்பியடிக்கிறதே!! ஐயகோ!!! இந்தப் படுபீதிகளிலிருந்து திருதோசைமாவளவன் காப்பாற்றுவாரா?

அல்லது இந்த மாவோன் மருகன் என்னைக் காப்பாற்றுவானா?

இந்த தீராநதி அடங்காச்சிறுநீர் வகையறாக்களையெல்லாம் நான் படிப்பதற்கு அவகாசமோ பொறுமையோ இல்லை. ஆனால் என் நண்பர் ஒருவருக்குப் புல்லரிப்பு.

அதில் வந்துள்ள அபிலாஷ் சந்திரன் என்பவரின் சுவைமிக்க கட்டுரையை நீ படித்தேயாகவேண்டும் என்றார். நான் முடியவேமுடியாத் என்றேன். ஏனெனில் இந்த அபிலாஷின் எழுத்துகளை, களை, முன்னமேயே கொஞ்சம் படித்துத் துன்புற்றிருக்கிறேன். அந்தக் காலத்தில் நாகார்ஜுனன் போன்றவர்களுடைய அதிநவீன எழுத்துகள் போலக் கண்டதையும் பின்நவீனத் தத்துப்பித்துவமாக எழுதுபவர், சுத்தமாக உள்ளீடற்று அட்ச்சிவுடுபவர், கண்டதுக்கும் கமெண்டரி போடுபவர், கலைச்சொல் சிடுக்கல் சுளுக்கெழுத்துத் தம்பிரான் (ஆர்வக்கோளாறு இளைஞர்??) எனவும்தான் என் புரிதல்.

“சரி. அப்போ அதன் ஸ்கேன்களையாவது அனுப்புகிறேன்” என்றார். நான், “ஃபோன் கனெக் ஷனை துண்டித்துவிடவா? என் ஒத்திசைவை நான் ஒருவனே மண்டையில் அடித்துக்கொண்டு படித்தால்கூட அது எனக்குப் போதும், துரோகியே!”

ஆனாலும் அவர் முயற்சியில் தளராமல், அந்த ஆசைநிலவ இன்பக் காட்டுரை முழுவதையும், வதையும், சுமார் 20 நிமிடம் உணர்ச்சிகரமாகப் படித்துக்காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவி. (இப்படிப்பட்ட நண்பர்கள் வாய்த்திருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்!)

பின்னர் 10 நிமிடங்கள் போல, அக்காட்டுரையைப் பற்றியும், ஷெர்லக்ஹோம்ஸ் போல அந்தத் ‘தோசைமாவை வீசிய’ படலத்தை சட்டினிவேறு சாம்பார்வேறு என அக்கக்காகப் பிரித்து ஆசைநிலவன் மனோதத்துப்பித்துவரீதியில் மேய்ந்தமை பற்றியும், சமூகஉளவியல் உளறியல் அதீதம் பற்றியும், பாவப்பட்ட ஒன்றுமறியா உப்புசப்பற்ற தோசைமாவு பற்றியும், நம் ஜெயமோகனாதிகளின் அலக்கியத்தைப் பற்றியும் பேசி உருண்டுவுருண்டு, எங்கள் குண்டிகளை நீக்கிக்கொண்டு, கண்ணில் நீர்வரச் சிரித்தோம்!

ஐயய்யோ!

இந்த தோசைமாவு பாக்கெட்டிலும் இத் இருக்கிறதே! அதில் உள்ளடங்கியிருக்கும் அந்தத் தோசைமாவு தன்னைத்தானே ஃப்ராய்ட் போல இத், ஈகோ, ஸூப்பர் ஈகோ என மனோதத்துவ அலசல் செய்துகொள்ளும் பராக்கிரமம் மிக்கதோ? எந்தப் புற்றில் எந்த மனோதத்துவமோ, யார் கண்டார்கள்!

என்னுடைய ஒரே கவலை என்னவென்றால், இன்னமும் 1000 ஆண்டுகளில் தமிழகம் அகழ்வாராய்ச்சி செய்யப்படும்போது அதன் குவியம், “அந்தக் காலத் தமிழர்களின் வாழ்வில் தோசைமாவு முக்கியமான இடம் வகித்தது! பின்னர் தோசைமருவியகாலம்!” என்றாகிவிடக்கூடாது என்பதுதான்! ஏனெனில் நாம் புரோட்டாவையும் விரும்பி உண்பவர்கள் தாமே! :-(

பாவம் நாகர்கோவில்காரர்கள். பாவம் தோசைமாவு. இப்படியா, கண்டவர்கள் வாயில் விழுந்து புறப்படவேண்டும்?

இளம் தமிழ் எழுத்தாளர்கள், இனிமேல், ஊர்களையும் ஊர்வாழ்மக்களையும், தோசைமாவையும் படுதீவிரத்துடன் மனோதத்துவ ரீதியில் ஸிக்மண்டு ஃராய்ட் கார்ல்யூங் என ஸைகோஅனலைஸ் செய்யும் ஸைக்கோக்களாக இருப்பதற்கு அப்பாற்பட்டு கீழ்கண்டவிஷயங்களின் மீதும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதலாம்:

1. மண்ணாங்கட்டிகளின் மனோதத்துவம்
2. பாறைகள், பார்வைகள், பார்வதிபுரங்கள் – ஒரு பின்நவீனத்துவ முன்னாய்வு
3. உணவுக்குப் பின் இருத்தலியல் – தமிழர்களின் கழிவுக் கலாச்சாரம்
4. புளித்த தமிழ் எழுத்தாளர்களும் புளிக்காத தோசைமாவும் – ஒரு ஸப்ஆல்டெர்ன் பார்வை
5. இட்லிமாவின் வெண்மை நிறம் – ஆரியத்தின் ஆழ்ந்த சூழ்ச்சி
6. கருமை இட்லிகளைக் காமுறுவோம், பார்ப்பனீயத்தைக் கருவறுப்போம்
7. தோசை பாக்கெட்டும் பெண்ணின் ஜாக்கெட்டும் – வக்கிரப் பாலியல் பார்வைகள்
8. சின்னஞ்சிறு குன்னங்குறு தானிய மாவுகள் – தமிழனின் தோசைப் பாரம்பரியத் தடங்கள்
9. லெமூரியாவில் ஊத்தப்பம் – தொ. பரமசிவன் காலடியில் வரலாற்றுத் தேடல்கள்
10. ஜலதோசையம் – கன்னட ‘நீராதோசே’யும் சாண்டில்யனும்: ஒரு வரலாற்றுப் பார்வை
11. இராவணனின் இட்லியும் ராமனின் ராகிதோசையும் – ஒரு எத்னோக்ரஃபிக் அலசல்
12. ‘வடெ போச்சே’ – தற்காலத் தமிழ் வழக்காடல்களின் முதற்சங்ககால மூலங்கள்
13. தோசையால் வீழ்ந்தோம்! – சுபவீ கட்டுரைகளில் அங்கதச் சுவை
14. தனித்துவ தோசை சுடுதல் – எஸ்ராமகிருஷ்ணனின் கட்டுரைகளில் ஜென், வொலகத் திரைப்படங்களின் தாக்கங்கள்
15. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் இட்லியின் பங்கு – சாருவின் ஆங்கிலக் கட்டுரை நிபுணத்துவம்
16. இனிய தோசையம் – கடலூர் சீனுவின் தொகுக்கப்பட்ட செவ்வியல் கடித இலக்கியம்

<பதினாறும் பெற்றாகி விட்டதல்லவா? பெருவாழ்வு சௌத்அமெரிக்க வாழ்வு வாழ, இப்போதைக்கு இவை போதும்; உங்கள் விருப்பங்களையும் வேண்டுமென்றால் சுடச்சுடச் சேர்த்துக்கொள்ளவும்>

சரி. இதுதான் என் அபிலாஷை. ஆளைவிடும்.

5 Responses to “கருத்தியல்ரீதியில் தோசைமாவையும் ஸைகோஅனலைஸ் செய்வது எப்படி?”

  1. Swami's avatar Swami Says:

    தமிழ் இலக்கியத்தின் எல்லையே தோசை மற்றும் இட்லி வரை தான் போல

    மஜா பாரதத்தின் மூலம் பெற முடியாத புகழை தோசை மாவு பெற்று தந்துள்ளது

    லத்தின் அமெரிக்கா சென்றது இலக்கிய தேடலை நோக்கியா அல்லது இட்லியை நோக்கியா என்கிற பெரிய வினா இன்று எழுந்துள்ளது

    (ஆனாலும் இரண்டு வாரம் தென் அமெரிக்கா செல்ல 12 லட்சம் செலவு என்பது – சொல்வது சாரு என்றாலுமே ரொம்ப ரொம்ப ஓவர் .

    I feel sorry for the guys who believe him and are sending him money)


    • Sir, Swami!

      There is something called ‘caveat emptor’ – but many folks are mediocre consumers. So the charades will continue, no worries.

      To be honest, am also getting increasingly sick of these tamil litter-auteurs. Even humour is not helping me, oh what to do!

  2. gopalasamy's avatar gopalasamy Says:

    if you are having others money in your hand, you can spend 12 millions also for two weeks in South America.


Leave a Reply to ‘ராக்கெட் ப்ரொப்பல்ஷன் குரு’ அப்ரஹாம் முத்துநாயகம், பாரதத்தின் போற்றுதற்குரிய இஸ்ரோ பொறி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *