நரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும், 2019லும்!

March 21, 2019

ஒத்திசைவைத் தொடர்ந்து படிக்கும் துரதிர்ஷ்டம் பிடித்த சகஏழரைகளுக்கு, தரவுகள் மீதான என்னுடைய மனச்சாய்வு(கள்) பற்றித் தெரியும். ஆகவே இந்தத் தலைப்பு ஆச்சரியம் தராது. ஆனால் தப்பித்தவறி ஏழரைக்கு மேல் படிப்பவர் எண்ணிக்கை ‘வரலாறு காணாத வகையில் உலகிலேயே முதல்முறையாக’ முன்னேறினால்… அவர்களுக்காக.

-0-0-0-0-

முந்தைய பதிவொன்றில் நான் எழுதியதுபோல:

நரேந்த்ர மோதி போன்ற செயலூக்கமும், ஆன்மபலமும், குவியமும் உள்ள ஊழலற்ற ஒரு மக்கள் தலைவரைப் பெறுவதற்கு, அவரைப் போன்ற பாரதீயத்தில் நம்பிக்கையுள்ள மானுடர்கள் நிரம்பியுள்ள கட்சியைத் தெரிவு செய்து தேர்ந்தெடுப்பதற்கு, நமக்கெல்லாம் இந்த 2019ல் மறுபடியும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை, ஒரு புண்ணியமாகவே கருதுகிறேன்.

மேலும் – ஏகோபித்த இடைஞ்சல்களுக்கிடையே, கடுமையான நெருக்கடிகளுக்கிடையே, மோதி அவர்கள் நம் தேசத்துக்குச் செய்துள்ள விஷயங்கள் அசாத்தியமானவை என்பதையும் நேரடியாக உணர்ந்துள்ளேன். 

ஆகவே!

…வரவர தராதரமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது; எனக்குத் தெரிந்த  சமகால வரலாற்றில், எனக்கு நினைவிலிருக்கும் வரை – முதல்முறையாக, அப்பட்டமான அரைகுறைகள் எதிரணியிலிருந்து ஆட்சியைப் பிடிக்க, நாட்டை ஒழிக்க, சமூகத்தைச் சிதைக்க முழுமூச்சுடன், ஊடகப்பேடிகளின் ஏகோபித்த ஆதரவுடன் முயன்றுகொண்டிருக்கிறார்கள்; எனக்கு 50+ வயதாகிறது – இதுவரை நடந்த லோக்சபா தேர்தல்களில் இம்மாதிரி இப்போது நடப்பதைப்போல – நாகூசாமல் திருப்பித் திருப்பி அதே பொய்களைச் சொல்லும், செய்த அயோக்கியத்தனங்களுக்கு சிறையில் இருக்காமல் கேவலம், நிபந்தனைஜாமீனில் வெளியிலிருக்கும் ஊழல்பெருச்சாளிச் சதிகார அற்ப அரைவேக்காடுகள் இப்படி ஆகாத்தியம் செய்ததாகவும், அதற்கு நம் இடதுசாரி-அறிவுஜீவிக் கருத்துதிர்ப்புப் பேடிகள் இப்படி ஏகோபித்த அசிங்க ஆதரவு அளித்ததாகவும், பரப்புரை செய்ததாகவும் – சுத்தமாக நினைவே இல்லை.

ஓரளவு படிப்பாளிகள் என என்னால் நம்பப்பட்ட பலரும் இப்படியாகியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விலைபோய்விட்டார்கள் எனச் சொல்லமாட்டேன்; ஆனால் அவர்களுடைய அதீதமான சுயவெறுப்பும், பாரதப் பாரம்பரியங்களின்மீதான தேவையற்ற குற்றவுணர்ச்சியும், தங்களை-தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து செழுமைபடுத்திக்கொள்ளாத மேட்டிமைத் தன்மையும், தரவுகளற்ற மனச்சாய்வுகளும், உதிரி தத்துவங்கள்/நண்பர்களால் உபயம் செய்யப்பட்ட அற்ப கூடாநட்புகளும், தர்க்கரீதியற்ற எதிர்மறை எண்ணங்களும், ஸோஷியல்மீடியாக்களில் அனுதினமும் ‘லைக்‘ வாங்கவேண்டிய மகாமகோ அவசியமும், கடன்வாங்கிய கருத்தாக்கங்களும், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து அட்ச்சிவுடும் தன்மையும்  – அவர்களை அப்படி ஆக்கியிருக்கின்றன எனபதும் புரிகிறது…

ஆனால் நல்லவேளை! இப்படியாப்பட்ட மகத்தான மூளைச்சலவைகளும் காயடித்தல்களும் தொடர்ந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாலும் நாட்டுமக்களில் கணிசமான பலருக்கும் இன்னமும், சொந்த மூளை இருக்கிறது, அது வேலையும் செய்துகொண்டிருக்கிறது என்பது நம் நல்லூழ்.

…இருந்தாலும், எனக்கு வயதும் ஆகிக்கொண்டிருக்கிறது – பெரிய்ய மசுர் எதையும் பிடுங்கவில்லையானாலும், விவேகம் வந்ததா இல்லையா எனத் தெரியவில்லையானாலும், பலதரப்பட்ட நேரடி அனுபவங்கள், விகசிப்புகள் எனப் பெற்றிருக்கிறேன். பெரியவர்கள் என என்னால் நம்பப்படுபவர்கள் சோடை போவதையும், ஒன்றும் தெரியாத சோப்ளாங்கிச் சோம்பேறிகள் என நினைத்தவர்கள், குவியம் கொண்டு எழும்புவதையும் சிலசமயங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். ஆகவே.

-0-0-0-0-

பொதுவாகவே எனக்கு ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் – நம்மில் உள்ள பலருக்கு (பலப்பல அறிவுஜீவிக் கருத்துதிர்ப்பாளர்கள் உட்பட) பல அடிப்படைத் திறமைகளும் விஷயங்களும் பிடிபடவில்லை:

  1. நமக்கு எந்த துறைகளில் ஓரளவாவது ஆழம் இருக்கிறது,
  2. அந்த ஆழங்களை அறிய நாம் கொடுத்த விலை என்ன,
  3. நாம் அறியாத துறைகள் யாவை,
  4. அவற்றின் அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது எப்படி,
  5. பகுத்தாய்ந்து புரிந்துகொள்வது எப்படி,
  6. அதற்கான உழைப்பென்ன,
  7. அந்த உழைப்பைச் சரியான அளவில், திசையில் கொடுக்கவேண்டியதற்கேற்ற அறிவுத்திறம் தம்மிடம் இருக்கிறதா,
  8. நம்மிடம் நேர்மையாகக் கருத்துகளைக் கொடுக்கக்கூடியவர்களை, நம்மை விமர்சனம் செய்பவர்களை போஷகம் செய்வது எப்படி,
  9. பிறதுறைச் சான்றோர்களை இனம்கண்டு கொள்வது எப்படி, அவர்களின் கருத்துகளைப் பெறுவது எப்படி, அவற்றை எப்படி நம் கருத்தாக்கங்களில் ஊடுபாவுகளாக்குவது,
  10. உன்னதங்களை தரிசிப்பது எப்படி,
  11. கழிசடைகளை இனம் கண்டுகொள்வது எப்படி,
  12. கீழோரை (முடிந்தவரை மரியாதையுடன்) மிதிப்பது எப்படி,
  13. தரவுகள் என்றால் என்ன, அவற்றைச் சரிபார்ப்பது எப்படி,
  14. நம் மனச்சாய்வுகளுக்கு எதிராக அத்தரவுகள் இருந்தால் அவற்றை அணுகுவதும் அவற்றுக்கு மரியாதை கொடுப்பதும் எப்படி,
  15. எழும்பிவரும் அசைக்கமுடியாத தரவுகள் இருந்தால், அவற்றுக்கேற்ப, கருத்தாக்கங்களை மாற்றிக்கொள்வது, செழுமைப்படுத்திக்கொள்வது எப்படி,
  16. குற்றங்களை ‘நமக்கெதுக்கு வம்பு’ எனக் கண்டுகொள்ளாமை எனும் பேடித்தனத்தை வளர்த்துக்கொள்ளாமை,
  17. பூசிமெழுகாமல் பட்டவர்த்தனமாகக் கருத்துகளை வெளிப்படுத்துதல்,
  18. நமக்கும் நம் சகாக்களுக்கும் ஒரு ரூல் பிறருக்கு இன்னொரு அளவுகோல் எனப் பேடி நடனமாடாமை,
  19. சினத்தை முறைகேடாக (நமக்குப் பாதுகாப்பாக இருந்தால், யாரும் தெகிர்யமாக பதிலுக்கு நம்முடன் பொருதமாட்டார்கள் என்றால் மட்டும்) வெளிப்படுத்துதல் எனும் குழியில் விழாமை,
  20. அறிவிலிகளின் கைதட்டல்களுக்காகவும் முதுகுசொறிதல்களுக்காகவும் சோம்பேறிகளின் ‘லைக்’குகளுக்காகவும் நம்மை நீர்க்கடிக்கச் செய்துகொள்ளாமலும் இகழ்ச்சிகளுள்ளாக்கிக் கொள்ளாமலும் இருப்பது எப்படி,
  21. தெரியாத விஷயங்களைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமலிருப்பது எப்படி,
  22. அதிகபட்சம் ஒன்றிரண்டு செய்திப்புள்ளிகளை வைத்துக்கொண்டு (பின்புலமோ முன்னோபின்னோ இல்லாமல்) ஒரு பெரிய சித்திரத்தையே அச்செய்திகள் சொல்வதை வைத்துக்கொண்டு ஊதிப் பெருக்கி கருத்து பலூன்களைப் பறக்கவிடாமல் இருப்பது எப்படி (The famous ART of generalization based on one datapoint or even less – avoiding this fart altogether!)
  23. குளிரூட்டப்பட்ட கஃபே காஃபி டே கடையில் ஒரு கபூச்சினோவை ஸிப் செய்துகொண்டு அங்குள்ள சிப்பந்திகளுடன் ரெண்டுவார்த்தை (‘ஐ வாண்ட் ஸம் ஷுகர் ப்ளீஸ்!’) பேசிவிட்டு ஏதோ பெரிய பலப்பல நேர்காணல்கள், கள ஆய்வுகள் செய்தது போல பாவலா பண்ணி நாட்டில் 1) வேலை வாய்ப்பு குறைவாகிவிட்டது 2) சகிப்பின்மை அதிகமாகிவிட்டது – என்றெல்லாம் தன்னூக்கத்துடன் எழுதாமல் இருப்பது எப்படி,
  24. கண்டமேனிக்கும் அட்ச்சிவுடாமல் இருக்கும் நேர்மையின் மேன்மை,
  25. சாம்பல் நிறங்களை உபாசிப்பது

+++ என்பவற்றைப் பற்றியெல்லாம் அடிப்படைக் கேள்விகளேயில்லை! வெறும் மப்பும் அதன்வழியான மேட்டிமைத்தனமும் தான் இருக்கிறது.

என் சமீபத்திய அனுபவங்கள் குறித்து மட்டும் மேற்கண்டதை எழுதவில்லை – பொதுவாகவே, பலதரப்பட்ட ஜந்துக்களுடன் புழங்கியதால் வந்த தெளிவு(!) இது. ஆகவே சர்வ நிச்சயமாக நான் மேற்கண்டவர்கள்போல உருமாறக்கூடாது, என்னைப் பொய்யனாக்கிக்கொள்ளக்கூடாது எனவொரு சுயநலப்பேயாகவே தொடர விருப்பம். சரி.

…கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பாராளுமன்ற பதில்கள், சிலபல கருத்தாழமிக்க சஞ்சிகைகள், புள்ளிவிவரங்கள் (அரசு+தனியார்), என்எஸ்எஸ்ஓ, கொஞ்சம் இணையதள விவரணைகள் எனப் படித்து பலவிதமாகப் பகுக்கப்பட்ட குறிப்புகளை, நம்பகத் தன்மை வாய்ந்த புள்ளியியல் துணுக்குகளை (சரிபார்த்து) எடுத்துக்கொண்டிருக்கிறேன். (ஆனால் டீவி/செய்தித்தாள் செய்திகள், வெட்டிப் பரப்புரைகள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஞானப்புதையல்கள் + இந்தியாடுடே தஹிந்து டைம்ஸ்ஆஃப்இந்தியா என்டிடிவி ஈபிடபிள்யு வகைப் பேடிகள், தமிழ்ப் பிதாமகர்கள் உருவிவழிபாடு செய்யும் விக்கிபீடியா, அரைகுறை புள்ளியியல் விவரங்களை எடுக்கும்/பரப்பும் ஸிஎம்ஐஇ வகையறாக்கள், இந்த அரைகுறைப் புள்ளி(!)விவரங்களை(!!) வாங்கிக் காட்டுரைகளை எழுதும் ஸ்க்ரோல், ப்ரிண்ட், க்விண்ட் வகையறாக்கள் – பக்கமே போகவில்லை – பயப்படாதீர்கள்!)

இவற்றை நான் என் சொந்தப் புரிதல்களுக்காகத்தான் எடுத்தேன், கோர்த்தேன். கொஞ்சம் அலசினேன். ஓரளவு தெளிவிலும் இருக்கிறேன். இப்போது ஒத்திசைவில் அவற்றில் சிலபலவற்றைப் பதிப்பிக்கலாம் என்று ஒரு முனைவு. (நான் பொதுவாகவே விரைவில் யோசித்துக் கோர்த்து எழுதக்கூடியவன் – ஆனாலும்  இம்மாதிரி பலப்பல இடங்களில் இருந்து எடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, அலசி, அவற்றையும் தமிழில் எழுதுவதற்கு எனக்குமே மிகவும் நிறைய நேரம் தேவையாக இருக்கிறது, இதில் வேண்டிய பயிற்சி இல்லை என்பதும் இன்னொரு காரணம் – ஒன்றிரண்டு பைலட்களைச் செய்ததில் இப்படித் தோன்றுகிறது (ஒவ்வொன்றுக்கும் சுமார் எட்டு மணி நேரம் எடுத்தது!),  ஒரு க்ரஹஸ்தியின் வாழ்க்கையின் பலவிதமான அற்புதக் குறுக்கிடல்கள்வேறு,  பின்னர் இழுத்துப் போட்டுக்கொண்ட அயர்வடையவைக்கும் பணிகள்… ஆக, பார்க்கலாம்!)

…ஆக, இந்தக் குறிப்புகளை வைத்து – சிறுசிறு விளக்கங்களாக, காத்திரமான புள்ளிவிவரங்கள் இருந்தால் அவற்றை அட்டவணைகளாகக் கொடுக்கப்போகிறேன். +தேவைப்பட்டால் கொஞ்சம் பதவுரையும்.

ஆனால் ஒரு விஷயம்: சிலவிவரங்கள் பாஜக அரசுக்குச் சாதகமாக இல்லையென்றால் அவற்றை மூடிமழுங்கடிக்க மாட்டேன்.

ஏனெனில் நானும் ராம்தான் – ஆனால் பேடிதினசரி தஹிந்துவின் திரிக்கும் என்.ராம் அல்லன் – மாலினிபார்த்தசாரதி பர்க்காதத் ராஜ்தீப்ஸர்தேஸாய் ஸ்ரீனிவாசன்ஜெய்ன் ஸித்தார்த்வரதராஜன் அமர்த்யாஸென் ராமச்சந்திரகுஹா வகையறாக்கள் போன்ற பேடியும் அல்லன்.  எனக்கு இதனால் பைசா ‘ப்ரயோஜனம்’ இல்லை – சொல்லப்போனால் தேவையற்ற அழுத்தம்தான்.. மேலும், நான் தேவையற்ற புகழுக்கும் ரெண்டு நிமிட ப்ராபல்யத்துக்கும், ‘எதற்கடா என்னுடைய அடுத்த கருத்தை உதிர்க்கலாம்’ லைக் வாங்கலாம், என்றும் அலைபவனல்லன். முக்கியமாக – எல்லாம் தெரிந்த ஏகாம்பர தமிழ் அலக்கிய எழுத்தாளனும் அல்லன். ஆகவே அயோக்கியத்தனமாகப் பொய்சொல்லி விஷயங்களைத் திரிக்க மாட்டேன். மேலும் நான் சாதாரணன், ஒரு மண்புழு. இதை நன்றாக அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.

சரி. என்னைப் பொறுத்தவரை பலப்பல விஷயங்களில்  பாரதத்தின் பாஜக அரசு இதுவரை, பிரமிக்கத்தக்க அழிச்சாட்டிய எதிர்ப்புகளுக்கிடையே, நன்றாகவே பணி செய்திருக்கிறது.

ஆனாலும், சில விஷயங்களில் கொஞ்சம் மந்த நிலை  என எனக்குப் படுகிறது – ஆனாலும் புரிந்துகொள்கிறேன். (நான் – பல்கலைக்கழகங்களில் சோம்பேறிப் பொறுக்கிகளின் களையெடுப்பு, ராஹூல்காந்தி ராபர்ட்வாத்ரா ஸோனியாகாந்தி கனிமொழி ராசா பசிதம்பரம் மாறன்கள் டிஆர்பாலு போன்ற அற்பக் கழிசடைகளின் ஏகோபித்த ஊழல்களுக்கு அவர்களை  போர்க்காலரீதியில் தண்டித்து அவமானப்படுத்தி உள்ளே தள்ளாமை, திரித்தல் செய்யும் என்டிடிவி வகை ஊடக ஊழலாளர்களை அவர்கள் பணவூழல்களை வெளிப்படுத்தி இழுத்துமூடல், அன்னியச்செலாவணி ஊழலாளர்களை ஒழித்துக்கட்டல், ஸ்விஸ்வங்கிகள் போன்றவற்றிலிருந்து பணம் திரும்பப்பெறல், மாவோயிஸ்ட்/இஸ்லாமிஸ்ட் வகை தீவிரவாத குண்டர்களைத் துப்புரவாக ஸ்வச்சபாரத் செய்தல், திருட்டுத்தன மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல், தாவூத்இப்ராஹீம் வகையறாக்களை வட்டியோடு கணக்குத்தீர்த்தல் ++ அயோத்யாவில் ராமர் கோவில்++ போன்ற இன்னபிற விஷயங்களைச் சொல்லவரவில்லை – ஏனெனில் இவையெல்லாம் நடக்கக் கொஞ்சம் காலம் ஆகும் என்பது எனக்குப் புரியாமலில்லை)

இத்தனைக்கும் காங்கிரஸ்கூட்டணிக் கொள்ளையர்களால்  அவர்களின் தோற்கடிப்புக்குப் பிறகு – பாஜகவுக்கு வேண்டாவெறுப்பாகக் கொடுக்கப்பட்ட அரசு யந்திரமும் நிதி நிலவரமும் தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களும்,  மக்களின் அவநம்பிக்கையும் இன்னபிற ஆயிரம் நிலவரங்களும் மிகவும் சோகமான நிலையில் இருந்தன.

இவ்வனைத்தையும் மீறி இந்த அரசு பிரமாதமாகவே வேலை செய்திருக்கிறது என்பது என் கருத்து.

இந்த வரிசையில் – நான் எப்படி விஷயங்களைப் பகுத்துப் புரிந்துகொண்டேன் எனவும் பின்னர் சிலபல விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் எனவும் இருக்கிறேன். தாராளமாக, நீங்களும் உங்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சி செய்து உங்கள் முடிபுகளுக்கு வந்துகொள்ளலாம் – ஒரு பிரச்சினையும் இல்லை. (ஆனால் இதுகுறித்த உரையாடல்களுக்கு என்னால் முடியுமா என்பது சந்தேகமே, ஏனெனில் எனக்கு நரையாடிக் கொண்டிருக்கிறது!)

(பாரதீய ஜனதா கட்சியின் இந்தப் ப்ரொமோஷனல் வீடியோ நன்றாகவே வந்திருக்கிறது; இதுவரை பார்க்கவில்லையானால், அவசியம் பார்க்கவும். நன்றி!)

-0-0-0-0-

நானும் இடதுசாரி மாயையில் ஒருகாலத்தில் சிக்கியிருந்தவன் என்கிற முறையில் யோசிக்கிறேன். ஒரு சுற்று சுற்றி வந்தவன், ஆக பல பக்கங்களைப் பார்த்திருக்கிறேன், அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன் என்கிற தகுதிகளின் வழியாகவும்.

சர்வ நிச்சயமாக பாஜக எனும் கட்சியும், அதன் தற்போதைய விடிவெள்ளியான நரேந்த்ரமோதியும் – நமது பாரதத்தின் அத்தியாவசியத் தேவைகளே.

ஆயிரம் நொள்ளை சொல்லலாம் – அத்தைச் செய்திருக்கலாம் இத்தைச் செய்திருக்கலாம் என்று. ஐயோ டீமானடைஸேஷன் ஐயய்யோ சகிப்பின்மை ஐயகோ போர்மேகங்கள் சூழ்கின்றன என்றெல்லாம் பொய்பொய்யாக வதந்திபல பரப்பி அலறலாம். எனக்குமே கூட மோதி அவர்கள் மீது சிலபல விமர்சனங்கள் இருக்கின்றன – அவை பெரிய விஷயமில்லை என்றாலுமே கூட!

ஆக, சுயசிந்தனையோ பாரதத்துக்கேயான வ்ளர்ச்சிப் பாதையை பாரதத்தின் மேதமையுடன் திட்டமிட்டு அமல் படுத்தும் மனப்பான்மையோ இல்லாமல் – காலாவதியான, கவைக்குதவாத மதச்சார்பின்மை ஸோஷலிஸக் கோட்பாடுகளைக் கடன் வாங்கியே, நம்மைக் கீழ்மைப்படுத்திக்கொண்டு நம் உரிமைகளை விற்றே, நாட்டைக் குட்டிச் சுவராக்கி பிரச்சினைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டிருந்தனர் நம் அக்காலத் தலைவர்கள். 1980களின் நடுவில் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் பிடிவாதமாக இந்தியாவில் தான் இருப்பேன் தொழில்முனைவுகளைச் செய்வேன் எனப் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருந்த என்போன்றோருக்கு – எப்போது நமக்கு – நமது சராசரித்தனத்திலிருந்தும், சுயமரியாதை இழப்பிலிருந்தும், ஏகோபித்த ஊழல்களிலிருந்தும், தொழில்அறம் இல்லாமையிலிருந்தும், கலாச்சாரச் சுரண்டல்களிலிருந்தும், மேட்டிமைத் தனங்களிலிருந்தும், வெள்ளைக்காரத்தனமான இளக்காரங்களிருந்தும், பொருளாதாரத் தேக்கத்திலிருந்தும், குமாஸ்தாத்தனத்திலிருந்தும், அப்ரஹாமிய மதவெறிவாதங்களிலிருந்தும், தேசத்தை-அதன் செல்வங்களைக் கூறுபோட்டு விற்பனை செய்தலிலிருந்தும் விடிவு வரும் என ஏக்கம் இருந்ததை, அதுவும் அது 20-30 வருடங்களுக்கு இன்னமும் நீண்டதை நினைத்தால்…

…வீழ்ந்துகொண்டிருந்த பாரதத்தில், அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து களத்தில் பணி செய்து பலவருடங்களுக்குப் பின் மேலெழும்பிய, நற்செயல்களைச் செய்து காட்டிய ஊழலற்ற நரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி – நம்மிடம் இன்று இருப்பது சர்வ நிச்சயமாக நம் நல்லூழ்! பாஜக என்றொரு கட்சி அவருக்குப் பின்னால் இருப்பதும், அதில் இன்னமும் அதிகப்படியாக தேசப்பற்றும் செயலூக்கமும் நேர்மையும் மிக்க நல்ல, இளம் தலைவர்கள் உருவாகி வருவதும் இன்னமும் நல்ல விஷயமே!

இவருடைய கட்சிதான் India’s tryst with destiny என்பதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது – பரம்பரைப் பேடிகளின் ஊழலாட்சியல்ல. Amen.

-0-0-0-0-

…எனக்கும் பிரத்யட்சமாகத் தெரியாமலில்லை – இப்படி ஒரு ஆசாமி (அல்லது பலஆசாமிகள்!) விலாவாரியாக எழுதுவதனால் எந்த மயிராண்டியும் மயிர்ஆண்ட்டியும் ‘வெளிச்சத்தை நோக்கிப் போகலாம்’ என்று மோதியை அமோகமாக ஆதரிக்கப் போவதில்லை.

ஏனெனில், மூன்று விஷயங்கள்:

. தேர்தலில் ஓட்டு போடுவதென்பது, பெரும்பாலும் உணர்ச்சிகள் பாற்பட்ட, தர்க்கரீதியற்ற முன்முடிபுகள் சார்ந்த விஷயம். விலாவாரியாக யோசித்து, பகுத்தாய்ந்து, தன்னுடைய ஒருவாக்கின் பராக்கிரமத்தை உணர்ந்தவர்கள் குறைவு. ஒரு ஜனநாயகக் கடமையாக வாக்களிப்பவர்கள் குறைவு. (ஆனால் வாக்களிக்கிறார்கள் என்பதே பெரியவிஷயம்!)

. ‘நான் ஒருவன் வாக்களிப்பதனால் அல்லது வாக்களிக்காமல் இருப்பதனால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது’ எனும் மனப்பான்மையுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். (ஆனால் ஐயன்மீர்! ஒவ்வொரு வாக்கும் – நாம் எந்தக் கட்சிக்குப் போடுகிறோமோ அதைவிட – மிகவும் முக்கியம். (ஏனெனில் பாரதத் தேர்தல் – உலகத்திலேயே மாபெரும் மகாமகோ ஜனநாயகதேசத்தின் கோலாகல விழா! ஒரு பெரிய நிகழ்வு! ஆக, நான் அனைவரும் இதைக் கொண்டாடவேண்டும் அல்லவா?)

. விஷய ஆர்வம் எனப் பலருக்கும் உண்டு. உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ, தமக்கு மேலதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள தகுதியை வளர்த்திக்கொண்டிருக்கிறோமோ இல்லையோ – வெட்டிவம்பளப்பில் பலரும் ஈடுபடுகிறோம். என்ன தெரிந்துகொள்ளலாம், செய்தி உதிர்க்கலாம் என அலைகிறோம். இதனால் பிறருக்கு ஏற்படும் நேர/பிற நெருக்கடிகளை உணர்ந்தோமில்லை.

ஒத்திசைவைப் படித்தவர்களில் ஒருவர் (இப்போது படிப்பதில்லை என நினைக்கிறேன், இவர் ஏழரைகளில் ஒருவரல்லர்), ஒரு எகனாமிக்ஸ் ஸ்டாடிஸ்டிக்ஸ் இளைஞன் – தனக்கு டிமானடைஸேஷன் பற்றி மேலதிகமாகத் தெரிந்துகொள்ள உதவமுடியுமா எனக்கேட்டான்.அவனுடைய அரைவேக்காட்டு இடதுசாரிப்பார்வை கொஞ்சம் சங்கடம் கொடுத்தாலும், இளைஞர்களுக்கு முடிந்தால் உதவவேண்டுமென்று – நானும் ஆஹா என்று சொல்லிவிட்டு என் நெடுங்கால நண்பனிடம் தொடர்பேற்படுத்திக் கொடுத்தேன். (இவன் ஒரு பெரிய அரசுடைமை பாரத வங்கியில் மேலே எங்கோ இருக்கிறான் – அடுத்த நான்கைந்து வருடங்களில் அந்த வங்கியின் தலைவருக்கு அடுத்த படியிலாவது போய் பணிமூப்படைவான் என என் அனுமானம். நெருப்பு. சொல்லப்போனால், என்னுடைய ஆப்த நண்பர்கள் அனைவரும் தொழிற்சுத்தமும் அறமும் வாய்ந்தவர்கள், சுயமுனைப்பும் கடும் உழைப்பும் கூடியவர்கள். இதில் எனக்குப் பெருமைதான்! இந்த ஜாபிதாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்மஹாதேவனும் அடக்கம்).

ஆனால், அடுத்தவர் பற்றிய எண்ணமே இல்லாமல், இங்கிதமில்லாமல் – “‘முதலில் நீங்கள் மோதி பக்த்’ஆ எனச் சொல்லுங்கள்” என்றிருக்கிறான் அந்த இளைஞன். நண்பன் எச்சிலை முழுங்கித் தன்னைச் சரிசெய்துகொண்டு – உங்களுக்கு டீமானடைஸேஷன் குறித்து களத்தில், வங்கியில் என்ன எதிர்வினைகள் சிடுக்கல்கள் போன்றவை பற்றித் தானே தெரியவேண்டும், தாராளமாகக் கேளுங்கள் – உங்களுக்கு முப்பது நிமிடங்கள் என்றிருக்கிறான். ஆனால் அந்தப் பையன் ‘மோதி ஏன் ப்ரிண்ட்-ஆன்-டிமேண்ட் கரன்ஸியை அமல் படுத்தக்கூடாது? தமிழிலேயே பல பதிப்பகங்கள் அதைச் செய்கின்றன என்பது எனக்குத் தெரியும்!’ என அசத்தியிருக்கிறான். நொந்துபோன நண்பன் என்னிடம் ‘தமிழ் வாசகர் தரம்’ பற்றி வருத்தப்பட்டான். நான் கப்சிப். சொதப்பி விட்டேன். *ப்ச*

அடுத்து சுமார் ஒருமாதம் கழித்து ஒரு மாஜி-ஏழரை – இவர் இன்னமும் ஒத்திசைவு எழவைப் படிக்கிறாரா என்று தெரியவில்லை, இன்னாட்களில் சத்தத்தையே காணோம். இவரும் அதேபோன்ற ஒரு விண்ணப்பம். ஆர்வமாக இருந்தார். சரியென்று இவருக்கும் அதே நண்பனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்க முனைந்தேன். அவன் நேரம் கிடைப்பதற்குச் சிலமாதங்களாகிவிட்டன. ஆனால் நண்பன் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறான். அந்த ஏழரையிலொருவர் ஃபேஸ்புக்கில், ஏதேதோ டீமானடைஸேஷன் அல்லது ஏடிஎம் குறித்து உளறிய தஹிந்து ஸ்க்ரோல் தப்ரிண்ட் வகை தளச் சுட்டிகளைப் பகிர்ந்து கொஞ்சம் கிண்டலடித்திருக்கிறார் + மோதியைத் தேவையற்று முகாந்திரமே இல்லாமல் கிண்டல் செய்யும் சுட்டிகளையும் பகிர்ந்திருக்கிறார்போல, பாவம். கொஞ்சம் அப்பாவி என நினைக்கிறேன்; அடிப்படையில் அவர் ஒத்துவருபவர்தாம், ஏதோ ஆர்வக்கோளாறு+இளமை எனவும். நண்பனும் என்னைப்போலவே ஹோம்வர்க் செய்பவனாதலால் – அங்குபோய் பார்த்திருக்கிறான். ஏற்கனவே வேறு அவன் ஒரு இளைஞ அரைகுறையோடு மல்லுக்கட்டி, எனக்காக நேரத்தை வீணடித்திருக்கிறான்.  அவன் சொன்னான் – இவருக்கு சமனமில்லை போலும், குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கில் அப்படிப் படுகிறது. இவரை வேறு யாருடனாவது கோர்த்துவிடேன். என்னுடைய குழுவில் ஒரிருவர் அவருக்கு ஒத்துவரலாம் என்றான். ஆனால் எனக்குத் தரம் முக்கியம். ஏற்கனவே ‘கேட்கிறான் பாவம், நம்மால் முடிந்தால் உதவவேண்டும்’ வகை ஆர்வக்கோளாறால் சூடுபோடப்பட்டிருக்கிறேன் வேறு!

ஆக, கொஞ்சம் இழுபறிக்குப் பின், நண்பன் ‘என்னைத் தயைசெய்து விட்டுவிடு, சகுனம் சரியில்லை – எனக்கும் நேரத்துக்கு ஏகக் கெடுபிடி’ எனக் கெஞ்சினான். நானும் கொஞ்சம் வெட்கத்துடன் அவனிடமும் மாஜி-ஏழரை அவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு என்னை விட்டுவிடுங்கள் எனச் சொன்னேன்.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – நம்முலகில் ஹோம்வர்க் செய்பவர்களோ, தம் தகுதியை மேன்மைப்படுத்திக்கொள்பவர்களோ – அல்லது மோதி போன்ற சாதனையாளருக்கு வாக்களிக்க தங்கள் சுயசார்பை விலக்குபவர்களோ அதிகமில்லை. எல்லாமே ஒரு கேளிக்கை.

இருந்தாலும்…

இவையெல்லாம் எனக்கும் புரியாமலில்லை – ஆனால், அவர் பிரதமராக மறுபடிவரவேண்டும் என விழையும் நான், பாரதத்தை மேன்மேலும் முன்னேற்றவேண்டும் என ஒரே குவியத்தோடு செயல்படும், வாழும், நரேந்த்ரமோதி அவர்களுக்கு, இதைக் கூடச் செய்யமுடியாதா என்ன?

என்னால் – ஒரேயொரு மேலதிக வாக்கு அவருக்கும் அவருடைய கட்சியின் கூட்டணிக்கும் கிடைத்தால்கூட அதுவே எனக்கு ஒரு பெரிய வெகுமதிபோலத்தான். சர்வ நிச்சயமாக.

பார்க்கலாம். (முடிந்தால் இவை ஆங்கிலத்திலும் வரும்)

பின்குறிப்பு: நான் ஒருவழியாக இவற்றை எழுதுவதற்கும் பேராசானும் சிற்றாசானும் எஸ்ராவும் சாருவும் எனக்குக் கிச்சுக்கிச்சு மூட்டாமல் இருக்க அவர்கள் ஆவன செய்யும்படி, ஸதாவத்ஸலையும் மாத்ருபூமியின் தேவியுமானவள்தான், அவர்களுக்கு அருள்புரிந்து என்னையும் உங்களையும் காப்பாற்றவேண்டும்…

இன்னொன்று: சிலபல வருடங்கள்முன் நான், மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் என 108 விஷயங்களை எழுதினேன் – சுட்டிகள் கீழே. அவற்றில் இருந்து எனக்கு ஒரு மாற்றமும் இல்லை.  சொல்லப்போனால் – இப்போது 1008 வகைகளில் மோதியை வெறுக்கிறேன் என எழுதுவதற்கு வேண்டிய அளவு கச்சாப் பொருட்கள் இருக்கின்றன….