மேலவர் நாகசாமியும் கீழவர் இசுடாலிரும்: தமிழகத்தின் தன்னிகரற்ற வெட்கக்கேட்டின் இன்னுமொரு உளறல் – சில குறிப்புகள்
March 9, 2019
இந்த தண்டகருமாந்திரத்தைப் பற்றி நான் சொல்லித்தான் என் சக ஏழரைகளுக்குத் தெரியவேண்டியது என்றில்லை; இருந்தாலும், திராவிடக் கோமாளித்தனங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் இன்பம்ஸ் என்பதே சுவாரசியம்தான்!
இந்த மனிதர் பேசிய ‘விலாவாரியான’ விடலைப் பேச்சை நேரில் (இது நடந்தது, ஐந்தாறுபேர் மட்டுமே இருந்த ஒரு சிறுகுழுவுடன் அமர்ந்து, 1996 ஜனவரி அல்லது 1995 டிஸெம்பர் வாக்கில் என நினைவு) ஆச்சரியத்துடன், அடிப்படையில் திறமைசாலியான (திறமைகளில் பலப்பல எதிர்மறையாக இருந்தாலும், அவற்றில் ஒன்றாக அவருடைய வார்த்தைகளிலேயே ‘தேனை எடுக்கும்போது புறங்கையை நக்குவதும்‘ எனவானாலும்) கருணாநிதிக்கு இப்படியும் ஒரு மகனா என வியந்துகொண்டே கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் இரண்டுமூன்று வருடங்கள் முன்னர், இன்னொருமுறை அவருடைய கபோதிக் கம்பெனியான ‘ரெய்ன்போ ப்ரின்டர்ஸ்’ (இதில் அவர் மனைவியும் ஒரு பங்குதாரர் என நினைவு) ஏகத்துக்கும் வங்கியில் வாங்கிய கடனைத் துளிக்கூடத் திருப்பித் தராததால் நேரில் பார்த்துப்பேசிய ஒரு குழுவின் அங்கமாக, ஆவணங்கள் சகிதமாகப் போயிருக்கிறேன். சோகம். (ஆனால் என் மேலதிகாரியின் கோரிக்கையை ஒழுகி என் வாயை அதிகம் திறக்கவில்லை – வெறுமனே அந்த டப்பா நிறுவனத்தின் கந்தறகோள பேலன்ஸ் ஷீட்டின் அலங்கோலத்தை மட்டும் சுட்டிக்காட்டினேன் என நினைவு!)
ஊழல் கடனையும் வாங்கிவிட்டு பின் ஏய்ப்பு செய்யும் ஒரு சாதாரண ஜேப்படிக்காரக் கொள்ளையனுக்கு அப்பாற்பட்டு அவரிடம் வேறெந்த கல்யாண குணமும் இருந்திருக்கவில்லை. அந்தோ பரிதாபம். (இந்த அழகில் விஜய்மல்லையா வாராக்கடன் அம்பானி ஊழல் எனப் புளுகிக்கொண்டு திரிகிறார் இந்த ஆசாமி!)
அப்போதும் சரி, இப்போதும் சரி – திமுகவின் வட்டாரக் குறுநில மன்னர்களுக்கு திமுகவையும் தமிழகத்தையும் பிரித்துக்கொடுத்துவிட்டுக் கப்பம் வசூலிக்கும் ‘கட்டுக் கோப்பு’ வகை திறமையைத் தவிர வேறொரு விஷயமும் சொல்லிக்கொள்கிற படியாக இல்லை. ஒரு விதத்திலும் முன்னேற்றமில்லை. ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படும் தன்மையில்லை. ஒரு படிப்பில்லை வாசிப்பில்லை. வெறும் விடியற்காலை விடிப்புடனே திருப்தியடையும் பண்பு, பாவம்.
ஒரு சுக்குக்கும் அடிப்படை விஷயங்களே தெரியவில்லை; பொருளாதார அறிவில்லை (ஆனால் ‘சுய’பொருளாதார வளத்தைப் பெருக்கிக்கொள்வதில் ஏகத்துக்கும் குவியம்) – ஏனெனில், அவருடைய மேதாவித்தனமான ட்ரெஷரி (=தமிழக அரசின் கருவூலம்) குறித்த மேலான கருத்துகளை நேரடியாகவே கேட்டு வாயடைப்பு பெறும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.
வயது 65க்கு மேல் ஆகியும்கூட, இந்திய சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் க்றிஸ்த்மஸுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் தெரியவில்லை. எங்கோ யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்த தமிழ்க் குறிப்புகளை வைத்துக்கொண்டுகூட நாலு வார்த்தைகளைக் கோர்வையாகப் பேசமுடியவில்லை. இந்த அழகில் அறிவியல்சார் ஆங்கிலத்தில் வெற்றிடம் கோப்பில் கோர்க்கப்படுவது + அது அழப்படுவது(!) பற்றியும் (“vacuum is FILED as it is CRIED!”) – மேலும் வங்காள மொழியிலும் தெகிர்யமாக அட்ச்சுவுடல். இவருக்கென்ன ‘மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்’ தமிழ் இலக்கியவாதி என்கிற நினைப்பா?
தமிழகத்தின்மீதோ தமிழர்களின்மீதோ (பாரதத்தையே விடுங்கள்!) ஒருவிதமான கரிசனமுமில்லை. வளர்ச்சிக்கு எதிரி. அறிவியல்தொழில் நுட்பங்களைப் பற்றிய மகத்தான அறியாமை. ஜாதி வெறி. எதற்கெடுத்தாலும், ஒரு முன்னேபின்னேயுமில்லாமல் மோதியையும் காவியையும் திட்டுவதில் நிபுணத்துவம். ஆனால் திட்டமிடுவதில் குட்டிச்சுவர். பின்னர், அப்பட்டமான ஹிந்து துவேஷம். சன்மார்க்க மதச்சார்பின்மை வேஷம். ஷேம்.
ஊருக்கு உபதேசம். தன் குடும்பத்துக்கு மட்டும் தனி ரூல். தடித்தனம். கமிஷன் மண்டிகளின் ஏகபோக குத்தகை.
நல்ல தலைவர். கூட்டுக்கொள்ளைக் கொள்கையால் ‘கட்டுக் கோப்பாகப்’ பிணைக்கப்பட்டுள்ள அயோக்கியத்தில் மட்டுமே ஊறிய ஒரு நல்ல கட்சி. தமிழகத்துக்கு இம்மாதிரி துர்பாக்கியமான நிலைமை தேவையா?
போதாக்குறைக்கு இந்த இசுடாலிருக்கு, சொல்லிக்கொள்ளும்படியாக அறிவுரை தரவும் ஆட்கள் இருப்பதாகத் தெரியவில்லை, பாவம். அதிகபட்சம் துரைமுருகன்கள்தாம் இவருக்கு வாய்த்திருக்கின்றனர். அப்படியொரு திறமைவறட்சி திமுகவில். ஏனெனில் அது ஒரு கொள்ளைக்காரப் பாலைவனம். எப்படியோ ஒழியட்டும், தமிழகத்தைப் பீடித்துள்ள இந்தச் சனியன் முயக்கம்.
ஒருவழியாகப் போய்ச்சேர்ந்த கருணாநிதிமேல், பாவம், எனக்கு மதிப்பென்றில்லை; ஆனால் கருணாநிதியின் வாசிப்பும், மூளையின் துரிதகதி ஓட்டமும், புத்தி சாதுர்யமும் – இந்த இசுடாலிருக்குச் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. இனிமேல் வரவும் வாய்ப்பில்லை. ஆனால் தகப்பனாரின் குயுக்தி மட்டும் இருக்கிறது. பாவம், திமுக. :-)
இவரைப் போன்ற ஒரு ஆசாமி தமிழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதே ஆயாசமும், அருவருப்பும் தரும் விஷயம்.
சரி. வயோதிகத்தில் தள்ளாடினாலும், ஏறத்தாழ கடைசிவரை இறப்புவரை, மனமுவந்து திமுகவின் அறுதித் தலைமைப் பொறுப்பை இந்த இசுடாலிரிடம், பாவப்பட்ட கருணாநிதி ஏன் கொடுத்திருக்கவில்லை என்பது எனக்கு இன்றுதான் புரிகிறது! மகனையும் விட்டுக்கொடுக்கமுடியாது, அதேசமயம் குடும்பச் சொத்தான கட்சியையும் ஒழித்துக்கட்டிவிடக்கூடாது – இருதலைக்கொள்ளைஎறும்பு போலத்தான் உணர்ந்து தவித்திருப்பார், பாவம்!
என்னைப் பொறுத்தவரை – என்னதான் சட்டத்தின் நீண்ட, சாவகாசமான கரங்களில், தன்னுடைய அளவுகடந்த பேராசையால் வசமாக மாட்டிக்கொண்டாலும், கனிமொழிதான் கருணாநிதியின் புத்திசாலித்தனங்களும் குயுக்தியும் கொண்ட நேரடி வாரிசு.
ஆகவே + எது எப்படியோ – சந்தேகமேயில்லாமல் – இசுடாலிர் அவர்கள், தமிழகத்தின், திமுகவின் தலையாய வெட்கக்கேடுதான். அடுத்ததாக அவருடைய (அன்னியச் செலாவணி மோசடி செய்து மாட்டிக்கொண்ட) பிள்ளையும் பேரனும் தயாராகிக்கொண்டு வருகிறார்கள் என்பதை நினைத்தாலே, எனக்கு மசுர்க்கூச்செறிகிறது, என்ன செய்ய!
ஊர்ஜிதமாகாத செய்தியை வைத்துக்கொண்டு (அந்தச் செய்தியும் தமிழின் மேன்மைக்கு உதவும்விதம் என்றாலும்),தமிழுக்காக மிகமுக்கியமான விஷயங்களைச் செய்துள்ள பெரியவரும் (திராவிடத்தால் பீடிக்கப்பட்ட தமிழகத்தில் இன்னமும் மிஞ்சியிருக்கும் ஒரிரு) சான்றோர்களில் ஒருவருமான நாகசாமி அவர்களை எதிர்த்து, மார்ச்2ஆம் தேதி, அபத்தமாக ஒரு காமாலைக்கண் அறிக்கையை விட்டிருக்கிறார், கீழவர் – நம் இசுடாலிர்.
இதற்குப் பொறுமையான பதிலாக மேலவர் நாகசாமி அவர்கள் – ஒரு பதிலை, முறையான விளக்கங்களுடனும் தரவுகளுடனும் சமனத்துடனும் மார்ச்7ஆம் தேதி கொடுத்திருக்கிறார். இது ஆங்கிலத்தில் இருக்கிறது. நேற்றிரவு, அதன் ‘ஒரு மாதிரியான’ தமிழ் வடிவத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்- ஏனெனில் நேற்றுவரை அதன் தமிழ் வடிவம் வந்திருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இன்றுகாலை ‘எதற்கும் இன்னொரு முறை தேடிவிடலாம்’ என்று பார்த்தால் – கதிர்ந்யூஸ் தளத்தில் (இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்?) ஒரு வடிவம் வந்திருக்கிறது. ஆஹா!
“சாதியிரண்டொழிய வேறில்லை யென்றேதமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்நீதி நெறியினில் நின்று பிறர்க்குதவும்நேர்மையவர் மேலவர், கீழவர் மற்றோர்”–சுப்ரமண்ய பாரதி.
சரி. மேலே படிக்கவும். இசுடாலிர்களைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்கவும். பின்னர் திமுக கொள்ளைக்கும்பலைத் தோற்கடிக்க அவர்களுக்கு எதிராக வோட்டும் வேட்டும் போடவும். நன்றி.
டாக்டர் நாகசாமி அவர்களின் விளக்கம் – ஆங்கிலத்தில்: https://twitter.com/muruga_TNIE/status/1103654484473917440.
—
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற சனிக்கிழமை ( 02. 03.2019) அன்று வெளியிட்ட அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என்று திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி, முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமி திரிபு வாதத்தை முன்வைத்ததாகவும், அவருக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ‘குடியரசுத் தலைவர் விருதுகளை’ தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், நாகசாமியை அந்த பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் நாகசாமி, ஸ்டாலினின் கண்டனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்க உரையில் அவர் கூறியதாவது:
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ‘குடியரசுத் தலைவர் விருதுகளை’ தேர்வு செய்யும் கமிட்டியில் என்னை உறுப்பினராக நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் தரும் வகையில் விளக்கத்தை அளிக்கிறேன்.:
தேர்வு கமிட்டி உறுப்பினராக என்னை நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் எந்த ஒரு தகவலையும் இதுவரை நான் பெறவில்லை. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி நிதி அளிக்கவில்லை என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு என்னால் எதுவும் பதில் சொல்லமுடியாது. இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
என்றாலும் தமிழ் ஆராய்ச்சியில் எனது பங்களிப்பு குறித்தும், திருக்குறள் வேதங்களில் இருந்து வந்தது என்று கூறி குறளை நான் சிறுமை படுத்திவிட்டதாகவும் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு நான் விளக்கம் கூற விரும்புகிறேன்.
1967 ஆம் ஆண்டு டாக்டர் .கலைஞர் தேர்தலில் போட்டியிட்ட நாள் முதல் அவர் மறைந்த நாள் வரை அவருடைய பாராட்டுக்கு உரியவனாகவும், பெருமைக்கு உரியவனாகவும் நான் இருந்தேன். அந்த காலகட்டத்தை அதிஷ்டமாக கருதுகிறேன். அவர் பூம்புகார் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவிடத்தை அமைத்தபோது கல்லில் செதுக்குவதற்கான தமிழ் பாடல்களை எழுத என்னைதான் கேட்டுக் கொண்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு அவருடைய செய்தி தாளில் எனது பணிகளை பாராட்டி எழுதியிருந்தார்.
2010|11 ஆம் ஆண்டுகளில் கோவையில் அவர் நடத்திய செம்மொழி மாநாட்டுக்கான கண்காட்சி குழுவின் துணை தலைவராக என்னை நியமித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு தஞ்சை கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழர்கால கலைகள் குறித்து நான் எழுதிய நூல் பற்றி பாராட்டிப் பேசினார். கலைஞர் அப்போது என்னை தனது அன்பிற்கு உரியவர் என்றும் எப்போதும் என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் கூறினார். 2011 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சங்கீத மகாலில் நடைபெற்ற உலோக சிலைகள் கண்காட்சியின்போது அங்கு வந்திருந்த ஸ்டாலின் என்னை பாராட்டியது இன்னும் என் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற 2 நிகழ்சிகளை நான் நினைவு கூர்கிறேன். 15 நாட்களுக்கு முன்னால், முஸ்லிம் நாடான பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற வங்கக் கலை குறித்த பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்க சென்றேன். அதன் அமைப்பாளரான பேராசிரியர் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் எனாமல்ஹேக் மாநாட்டில் பேசுகையில் தமிழுக்கும் , அண்டை நாடுகளுக்காகவும் நான் ஆற்றிய பங்களிப்பு குறித்து பாராட்டி பேசினார். சென்ற வாரம் UNESCO வில் பணியாற்றும் ஆங்கில பேராசிரியர் என்னை இலண்டனில் சந்தித்தபோது அவர் கடந்த 30 ஆண்டுகளாக எனது ஆராய்ச்சி நூல்களை படிக்கும் மாணவர் என்றும், லண்டன் பல்கலை கழகத்தில் வைக்கப்பட்டுள்ள எனது நூல்களை அவர் படித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் திருக்குறள் வேத கலாச்சாத்தின் வழிவந்தது என்ற என் கருத்து குறளை சிறுமை படுத்தியிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது என்னுடைய பார்வை மட்டுமல்ல. எனக்கும் முன்னால் ஆயிரம் ஆண்டுகளாக இருந்த தமிழ் அறிஞர்களின் பார்வையும் இதுதான். குறளுக்கு முதல் உரை எழுதியவர் என போற்றப்படும் பரிமேலழகர், மற்றும் பல குறள் நூலுரையாளர்கள், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மேல்நாட்டு தமிழ் அறிஞர் தந்தை பெஸ்கி, 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எல்லிஸ், மற்றும் ஜி.யு போப், 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த உ.வெ.சுவாமிநாத ஐயர் ஆகிய அனைத்து புகழ்மிக்க தமிழ் அறிஞர்களின் ஒரே மாதிரியான ஆராய்வும் திருக்குறள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். திருக்குறள் உபநிஷதங்கள், மனுதர்ம சாஸ்திரம் மற்றும் பகவத் கீதை சாராம்சங்களை பின்பற்றுகிறது என்கிற ஜி.யு போப்பின் விளக்கத்தை ஸ்டாலின் தமிழ் அறிஞர்களின் மூலமாக படித்து கேட்க வேண்டும்.
நான் இங்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்: 1886 ஆம் ஆண்டு ஜி.யு போப் தான் வெளியிட்ட “திருவள்ளுவர் நாயனார்” என்கிற நூலில் திருக்குறள் பகவத் கீதையை பின்பற்றுவதாக குறிப்பிடுகிறது. மேலும் அவர் தனது திருக்குறள் குறித்த நூல் குறிப்புகளில் வள்ளுவர் சந்தோக்யா உபநிஷதமான ”தத் த்வம் அஸி” யை பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதுபோல மனுதர்ம சாஸ்திரங்களில் இருந்தும், மற்றும் பகவத் கீதையிலிருந்தும் நூற்றுக்கணக்கான குறிப்புகளையும் ஜி.யு போப் எடுத்துக் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு குறைந்த பட்சம் 300 ஆண்டுகள் வரையிலான தமிழ் மொழி வரலாற்று ஆய்வுகள் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சியாளர்கள் குறித்து தெரிந்திருக்க கூடும் என நான் நினைக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு என்னை நீக்க வேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோள் மூலம் அவர் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொள்ளவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
என் கேள்வி: வரவிருக்கும் லோக்ஸபா தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது எது?
(இந்த இசுடாலிரிய உளறல் பற்றிய தகவலை, தேவை மெனக்கெட்டு எனக்கு அனுப்பி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அன்பரின் தயவால் என்னுடைய வாழ்க்கையில் சிலமணி நேரங்கள் அருகின. ஆக, அவருக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்கிற குழப்பத்தில்…)
March 11, 2019 at 08:53
[…] […]
April 5, 2019 at 18:41
[…] ஜமாய்ப்பவர். தானுண்டு தன் உளறலுண்டு என இருப்பவர். இந்த உளறல்களில் மூன்று […]