மங்கோலியா – ‘ஒரேமாதிரி மணக்கும் பாலை அனைவரும் குடிக்கவேண்டும் சட்டம்’ என்பது குறித்து
November 26, 2017
கசப்பு ராமம்,
மங்கோலியாவில் இந்த ‘ஓரே பால் மண சர்ச்சை’ நிகழும் பின்னணியை தெரிந்து கொள்வது இது குறித்த நம் பார்வைகளை மேலும் விரிவாக்க ஏதுவாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மேற்சொன்ன பின்னணியில் இந்த விஷயம் குறித்து நான் ஒட்டு மொத்தமாக இவ்வாறு பார்த்து என் கீழ்கண்ட கருத்துகளையும் கேள்விகளையும் சமைக்கிறேன். சாப்பிட்டுவிட்டு கருத்தரிக்கவும்.
மங்கோலியாவில் ஜெங்கிஸ்கான் காலத்திலிருந்து சுமார் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரைகூட, பாலை உறைக்கூற்றி தயிராக மாற்ற ஒரு கூடாரம் போன்ற ஒரு விஷயத்தை உபயோகித்திருக்கிறார்கள். இதிலிருந்து தான் யோகர்ட் (yoghurt) வழியாக யுர்ட் (yurt) உருவாகியிருக்கவேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்துப்படம்: யுர்ட் (இதற்குள்ளே ஒரு ஒட்டகத்தோற்பைக்குள் உறைக்கூற்றபட்ட பால் உருமாறிக் கூடு வுட்டு வூடு பாய்ந்து தயிராக மாற, உள்ளே, அதாவது – அந்தர் தியானத்தில் இருக்கிறது)
பால்மணம் மாறாத குழந்தைகள் திருமணம் செய்தால் அது திருப்பால் ஆகுமா? அல்லது பால்திருவா? திருதிருவென முழித்துக்கொண்டிருக்கிறேன், காப்பாற்றவும்.
அமெரிக்க நடிகர் பால் நியூமன் (Paul Newman) – என்பவர் உண்மையில் பாலை மட்டும் குடித்து வளர்ந்து ஒரு புதிய மனிதவகையாகவே (இந்தப் பேலியோ எழவு சாப்பிட்டு பொட்லங்காயானவர்களைப் போலவே) உருமாறிய ஆசாமியாமே? உண்மையா?
ஆக, ‘திருப்பால்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா’ என்பதை நாரதர் மங்கோலியாவில் எழுதினாரா? உங்கள் திரைப்பட நண்பர்களைக் கேட்டுச் சொல்லவும்.
சகோதரர் பால் தினகரன், மங்கோலியாவிலிருந்து வந்த ஆண்பால் சுவிசேஷகரா?
ஆண்களுக்குப் பால் ஏன் சுரப்பதில்லை? இதற்காக இயற்கை அவர்களுடன் ஒத்துழைக்காததற்குக் காரணங்கள் என்னவாக இருக்கமுடியும் – இவற்றைத் தாங்கள் படைப்பூக்கத்துடன் ஊகிக்கமுடியுமா?
மேற்கண்ட படத்தில் உள்ள ஆமிர் கான் அவர்களுக்கு பால் சுரக்காமல் இருப்பது இயற்கையின் சீற்றம் தானே? என்ன கொடுமை! குறைந்த பட்சம் அவர் ஒரு பிரா போடலாம் எனவாவது தாங்கள் பரிந்துரைக்க முடியுமா, தயவுசெய்து?
குடும்பம் என்ற வடிவமே வரலாறு தோறும் மாறிக்கொண்டு வந்திருக்கிறது. கூட்டுக்குடும்பம் என்ற முறை நெகிழ்ந்து சாம்பார் குடும்பமாகவும் பொரியல் குடும்பமாகவும் மாறினாலும், பாலியல் என்பது ஒன்றுதானே? பாலியல் தானே மானுட இயல்பியல்? மேலும் பால்பாயாச வாழ்க்கை மிகவும் இனிமையானதல்லவா?
மணப்பால் குடிப்பது என்பது மனப்பால் குடிப்பவர்களின் தீவிர நிலையா?
தமிழகத்தில் பொங்கலோபொங்கல் எனத் தமிழ் மறவச்சிகள் அறைகூவுவதுபோல, மங்கோலியாவில் பாலே பாலே எனப் பால்பொங்கும்போது அடுப்பைச் சுற்றிப் பாலே நடனமாடுவார்கள் என நீங்கள் திரைப்பட இயக்குநர் தார்கொவ்ஸ்கியிடம் ஒருசமயம் சொன்னதாகவும், ஆகவே, மங்கோலியாவிலிருந்துதான் பாலே நடனத்தை ரஷ்யர்கள் திருடினார்கள் என்றும் நீங்கள் எப்போதோ எழுதியது நினைவுக்கு வருகிறது. அதற்கான சுட்டி தரமுடியுமா?
உங்களுடைய மேற்கண்ட கருதுகோளின் ஒரு நீட்சியாக – மங்கோலிய பாலே நடனத்துக்கும் தமிழகத்தின் ஐந்திணைகளில் ஒன்றான பாலைத் திணைக்கும் உள்ள காத்திரமான தொடர்புகள் குறித்து ஆராயவேண்டும்; மேலும் – நீங்கள் அனுமானித்ததேபோல — எப்படி, தமிழகத்திலிருந்து சென்ற ‘எழவாவது அறிவு‘ புகழ் பேதிவர்மன், சீனாவுக்குப் போகும்போது வழிதவறி மங்கோலியா அடைந்தபோது பசியினால் பஞ்சடைத்துப்போய் கடைசியில் அங்கிருந்த பாலக் கீரை வகைகளை மேய்ந்து பசியாறி – ‘கண்டேன் பாலக்கை’ என நடனமாடியதும், அந்த நிகழ்ச்சி மங்கோலிய-பண்டமிழ் கலாச்சார உறவுகளில் பெரும் பங்கு வகித்தது என்பதையும் யாராவது தமிழ் முனைவர் ஆராய வேண்டுமல்லவா?
ஆனால், வருத்தம் தரும் செய்தியென்னவென்றால் — தற்கால மங்கோலியாவில் ஏகத்துக்கும் பால் கலப்பு – பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஆட்டாதபால், ஆட்டோமேடிக் பால், ஆர்ட்டிஃபிஷியல் பால் என எல்லா பால்களையும் கண்டமேனிக்கும் கலந்துவிடுகிறார்கள். இதில் ஒட்டகப் பால் ஒரு கப் கலந்து கப்சிப் என்று என்று குடித்தால், சனியன் வாயெல்லாம் ஒட்டிக்கொள்கிறது. ஒட்ட கம்.
ஆக, மங்கோலியாவில் ஆகச்சிறந்த பிரச்சினை இந்த பால் இயல் பிரச்சினைதான்.
இதனால்தான் – பழைய பெருமையை மீட்டெடுக்க, அண்மையில் மங்கோலிய அரசு, ‘ஒரே பால், ஒரே தரம், ஒரே மணம்’ எனும் ஒருதார மணத்தைப் பாலியல் ரீதியாக அமுல் செய்தது. (இதற்கு நம் குஜராத் அமுல் பால் நிறுவனம் தான், மங்கோலிய அரசுக்கு ஆலோசனை வழங்கியது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)
…மேலே குறிப்பிட்டது போல் ஆசியாவில் வேறு எந்த நாடுமே இதுவரை ஒருபால் மணத்தை சட்ட பூர்வமாக்கவில்லை, இந்தியாவில் இது குறித்த விரிவான விவாதங்கள் எழ இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஆகலாம், அதுவும் நம் நீதி மன்றங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் ஒன்றாகவே இருக்கும் என்று யூகிக்கிறேன் .
மோதியை நம்பி நாமெல்லாரும் ஏமாந்துவிட்டோம். :-(
என் கேள்விகள்+யூகங்கள் குறித்து அண்ணன் ‘நிசப்தம்’ மணிகண்டன் அவர்களுக்கு எழுதியிருக்கலாம்தான், உடனடியாக என் சந்தேகங்களை நிவர்த்தி செய்திருப்பார். ஆனால் எனக்கெதுக்கு வம்பு.
அன்புடன்,
சைக்கிள்தின் (பயப்படாதீர்கள்! ‘ஆஸ்திரேலியா’ கார்த்திக் அவர்களின் ஒன்றுவிட்ட மாமா பையன்தான் நான். நினைவிருக்கிறதா?)
ஒத்திசைவு வாசகர் ஐகொஸாஹெட்ரன் இலை, உல்லன் பாடர் கிளை, மங்கோலியா மரம்.
—
18/05/2014
November 28, 2017 at 10:19
அன்பின் ரா,
ஆசான் எழுதிய புல்வெளிதேசம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. உங்கள் மங்கோலியப் பயணம் பற்றிப் பால்வெளிதேசம் எழுத முடியுமா? கிழக்கு வெளியிடுமா? புத்தகவிழாவில் இடம்பெறுமா? அங்கு வந்து உங்கள் 4.5 ரசிகர்களுக்கும் ஆட்டோகிராஃப் இல்லாவிட்டாலும்
தள்ளுவண்டி கிராஃபாவது போட்டுத்தருவீர்களா?
அன்புடன் ஆ
(பி.கு) எனக்கு மட்டும் தனியாக இலவச PDF அனுப்பிவிடவும். நான் ஒரு சுத்தத்தமிழன் என்பதால் புத்தகங்களைக் காசுகொடுத்து வாங்குவதில்லையென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.
November 28, 2017 at 10:41
இலவசை வேண்டுமானாலும் அனுப்புகிறேன். உங்கள் அனாதரவுக்கு நன்றி.
February 14, 2018 at 17:23
[…] மங்கோலியா – ‘ஒரேமாதிரி மணக்கும் பாலை… […]