ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள்

June 26, 2017

ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பற்றி – அவர், நம் ஜனாதிபதியாகப் போவதைக் குறித்து, நம்மில் பலருக்கும் பலப்பலப் பலான பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள்?

ஹ்ம்ம்… ஆனால், அம்மணிகளே அம்மணர்களே – அவற்றைப் பற்றிப் பெரும்பாலும் வெளியே பேசவே மாட்டோம் – ஏனெனில் அரசியல்சரித்தனமான பேடிகளாக இருப்பது முக்கியமல்லவா?

என்னுடைய சொந்தப் பிரச்சினையென்னவென்றால், நான் ஒரு அறிவுஜீவிப் புண்ணாக்கல்லன்; ஆகவே, மேற்கண்ட பலான பிரச்சினைகளில் சிலவற்றைக் கோடி காட்டுகிறேன்:

 1. ராம்நாத் கோவிந்த் அவர்களுடைய மேற்தோலின் நிறம் கறுப்பு
 2. அவருடைய ஆங்கில உச்சரிப்பு அசிங்கமாக இருக்கிறது (என்டிடிவி அயோக்கியரான ப்ரணய் ராய் போல இல்லை, என்ன சோகம்!)
 3. அவருடைய ஆங்கிலத்தில் மொழிப் பிரச்சினைகள் – மன்மோஹன்ஸிங் (எப்போதாவது) பேசினால்  அவருடைய ஆங்கிலம் எவ்வளவு சரியாக இருக்கும்?
 4. அவருடைய ஹிந்தி எனக்குப் புரியவில்லை (என் தாய்மொழியையேகூட நான் அறிவேனா என ஏடாகூடமாகக் கேட்காதீர்கள்! நான் வெரி வெறி வெர்ரி ஈங்க்லீஸ்! யூ கேட்ச் மை பாயிண்ட்? நுனிநாக்கு இங்கிலிபிஸ், யு நோ? ஹஹ்ஹா!)
 5. அவரைப் பற்றி இதுவரை நான் கேள்வியே பட்டதில்லை! (இந்த அழகில் அவர் எப்படி இம்மாதிரி உயர்பதவியில் உட்கார முடியும்? இத்தனைக்கும் நான் கூக்ள் எழவை விட்டு நகர்வதேயில்லை!)
 6. அவர் அட்டவணைப் பட்டியல் மக்கள் திரளைச் சார்ந்தவர்
 7. அவர் பாஜக, அதுவும் ஆர்எஸ்எஸ் சார்பினர், ஆகவே ஆடோமேடிக்காக அவர் அயோக்கியர்

…ஆனால் மேற்கண்ட உண்மையான காரணங்களைக் குறிப்பிடாமல் – அவர் குறித்து எதிர்மறையாக ஒரு பொத்தாம்பொதுவான நிலையெடுக்கும்போது கீழ்க்கண்டபடியெல்லாம் சப்பைக்கட்டு வாதம் செய்வோம். எல்லாம் ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் தான்.

அதாவது ராம்நாத் கோவிந்த் அவர்களை ‘கடைசி மூச்சு’ (அல்லது கடைசி மூச்சா) உள்ளவரை எதிர்ப்போம், காள் காளென்று கழுதைகள்போலச் சூளுரைப்போம்!

 1. ! அவரைக் கருவியாக உபயோகித்து பாஜக ‘தலித்’ ஓட்டுகளை அறுவடை செய்ய நினைக்கிறது
 2. அவரைத் தலைவராக வைத்துவிட்டு ‘தலித்’களுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடப் போகிறது
 3. இதுவரை என்ன பெரிதாக இவர் செய்து கிழித்து விட்டார்?
 4. ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?
 5. ஆஹா! இவர் இன்னொரு பிரதிபா பாட்டில்!
 6. ஜனாதிபதி பதவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
 7. கேஆர் நாராயணனும் ‘தலித்’தான்! எவ்ளோ சாதனைகளைச் செய்திருக்கிறார் அவர்! ஆனால் அவருடன் பொருத்திப் பார்த்தால் ராம்நாத் சாதித்திருப்பது என்ன?
 8. ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மதச்சார்பற்றவர்​-சான்றிதழ் இல்லை. ஆகவே.
 9. ராம்நாத் கோவிந்த் ‘தலித்’தான், ஆனால் ‘தலித்‘ அல்லர் (ஏனெனில் நாங்கள் ‘தலித்’ கட்சி, எங்களுக்கும் பேத்துரிமை இருக்கிறது)

இம்மாதிரிக் கருத்துதிர்ப்பாள அற்ப அஞ்ஞானிக் குஞ்சாமணிகளில், நம் செல்ல அறிவுஜீவிகளும், நம்மூர் உதிரி அரசியல்வாதிகளும் அடக்கம்…

-0-0-0-0-

ஏற்கனவே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன; அவற்றை ஓரளவு மேலாண்மை செய்யவே நேரம் போதமாட்டேனென்கிறது. எங்கள் அமைப்பில் இருந்து ஒரு மென்பொருள்மேடையை (ஹாஹ்ஹா! ஸாஃப்ட்வேர் ப்லேட்ஃபார்ம்தாம்பா இத்து!) ஒருவழியாக இப்போதுதான் வெளிக்கொணர்ந்திருக்கிறோம் – அந்தக் கெடுபிடிகள் வேறு.

ஆக… இந்த மாதிரி கேஆர் நாராயணப் பழங்குப்பைகளைக் கிளர வேண்டாமே, இந்த போக்கத்த இடதுசாரி அறிவுஜீவிகளுடன் தேவையற்ற வம்பு வளர்க்கவேண்டாமே + ‘தலித்’களின் தலைவர்களாக வரித்துக்கொண்டு அரசியல்வியாபாரம் செய்யும் உதிரிகளைக் கண்டுகொள்ளாமல் அகன்று விடலாமே எனப் பார்த்தால் – என் பெங்காலிபாபு அறிவுஜீவி போனில் அழைத்துக் கொக்கரித்தான் – உங்கள் மோதியின் காவிச்சாயம் இன்னமும் வெளுத்துக்கொண்டிருக்கிறதே இன்னபிற.

வழக்கம்போல ஹிந்துத்துவா பொந்துத்துவா என ஊக்கபோனஸாக ஒர்ரே கரித்துக்கொட்டல். பாஜக ‘தலித்’ ஓட்டு அறுவடை செய்ய முனைகிறது என உளறல். மேற்கொண்டு கற்றுக் கொள்ளவே மாட்டேன் – மார்க்ஸ் எங்கேல்ஸ் மிஞ்சிப்போனால் அல்தஸ்ஸர் (louis althusser) அல்லது ஸவாழ் ஸைஸீக் (slavoj zizek) போன்றவர்களின் குஞ்சாமணிகளைப் பிடித்துக்கொண்டு மட்டுமே தொங்குவேன், வளரவே மாட்டேன் என அப்படியொரு பிடிவாதம்.

ஸைஸீக் என்றாலே புளகாங்கிதம் என நின்றுவிட்டால், அவர் தடாலடியாகப் பேசும்படியிருக்கும் ஓஸி யூட்யூப் பேச்சுகள் மட்டுமே ஒரு கூறுகெட்டவனுக்குப் போதும்  என்றால் அது (எனக்குப்) பிரச்சினை, வேறென்ன சொல்ல.

முடை நாற்றமடிக்கும் தேக்கம் என்பது அறிவுஜீவியம் என்று மினுக்கிக் கொண்டலைவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. :-(

ஊக்கபோனஸாக – என் திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தையார் (அய்யா, உங்களை ‘ஆர்’ விகுதிபோட்டு திராவிடச்சிறுமை செய்வதற்கு என்னைமன்னிக்கவும்! ;-) ) வேறு புலம்பல். இது அவருடைய தானைத் தலைவரான கேப்டன் பிரபாகர, ராஜபக்ஷவைத் தூக்கில் போட்ட, ராமதாஸுக்கு ‘தமிழ் குடிதாங்கி’ விருது கொடுத்து பின்னர் அமோகமாக வசைபாடிய, முள்ளுப்பெரியாறு வென்ற, பொதுக்கூட்டங்களில் படுகேவலமாகப் பேசிய இன்னபிற இன்னபிற புகழ் திருமாளவன் அவர்களுடைய காமாலைக்கண் கருத்துகள் (ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பற்றியவை) குறித்த காட்டமான விமர்சனம்! (பின் ஏனய்யா, தேவையேயில்லாமல் அக்கட்சியில் இருக்கிறீர்? உங்களைப் போன்ற ஒரு தொண்டர் இருப்பதற்கு உங்கள் தலைவனுக்கு அருகதை இருக்கவேண்டும். அது அப்படி இல்லையென்றுதான் தெரிகிறதே? விட்டுவெளியே வாரும். வாழ்க்கை பிரகாசமாகவே இருக்கும். வெட்டிப் புலம்பலினால் ஆன பயனென்கொல்?)

…சரி. முதலில் இக்கட்டுரையை ஆங்கிலத்தில்தான் (அதிக பட்சம் 10 பேர் படிக்கும்படிக்கு) எழுதவேண்டும், முக்கியமாக அந்த பெங்காலி பாபுவின் குருவிமூளையை அடித்து நொறுக்கவேண்டும் என ஆரம்பித்தேன் (ஏனெனில் எனக்கு – தமிழை விட ஆங்கிலத்தில் ‘கெட்ட வார்த்தைகள்’ மிகச் சரளமாக வரும்) — ஆனால் எனக்குத் தமிழ்ப் பயிற்சி வேண்டும், ஆகவே என்னுடைய செல்லமான சுளுக்குத் தமிழ்நடையிலேயே எழுதி அதனை (வழக்கம் போலவே!) அதிக பட்சம் ஐந்துபேர் மண்டையில் அடித்துக்கொண்டு படித்தால் போதுமானது என முடிவுசெய்து இந்தக் கோப எழவை எழுதி இறும்பூதடைகிறேன். நன்றி.

-0-0-0-0-0-

இனி ஒவ்வொரு நபும்சகக் கேள்வியாக/கருத்தாக இந்த எதிர்ப்பு ஸவுண்ட் வுடுதல்களைப் பார்க்கலாம்…

 

‘அவர் பாஜக, அதுவும் ஆர்எஸ்எஸ் சார்பினர், ஆகவே ஆடோமேடிக்காக அவர் அயோக்கியர்’

இதைப் போன்ற ஒரு மொக்கைவாதம் ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளவேண்டியதே அல்ல.

எனக்கு இருக்கும்  சிலபல நண்பர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர். இந்த அமைப்பினரில் பலப்பலர் படு நேர்மையானவர்கள், தேசபக்தர்கள். தன்னலம் கருதாது பாடுபடுபவர்கள். கொசுறு: பெங்களூர் ஜேஸி சாலையில் (இது ஒரு பிரதான சாலை, இவ்வட்டாரத்தை ‘கமர்ஷ்யல் டிஸ்ட்ரிக்ட்’ எனச் சொல்லலாம்) இருக்கும் ஒரு ஆர்எஸ்எஸ் சார்புக் கடை முதலாளி – முஸ்லீம் இளைஞர்களை (மட்டுமே) வேலைக்கு வைத்து அவர்களுக்கு நல்ல சம்பளத்தையும் கொடுத்துச் சந்தோஷமாக வைத்திருப்பதை அறிவேன். அவருக்குக் குழந்தைகள் இல்லை, ஆக, அவர் காலத்திற்குப் பின்னர் இந்தப் பிள்ளைகளிடமே வியாபாரம் போய்ச்சேர ஆவன செய்திருக்கிறார்.

ஏன், உங்கள் தம்பி மகனிடம் வியாபாரத்தை ஒப்படைக்கலாமே என்றால் – அவனும் என்னைப் போலவே உழைத்து முன்னுக்கு வரட்டுமே, ஆனால் என் பிள்ளைகளுக்கு நான் இதனைக்கூடச் செய்யவில்லை என்றால் அது நியாயமில்லை என்றார். நாமிருப்பது  பாரதம் என்றால் இவர்களெல்லாரும் பாரதவாசிகள் தாமே என்றார். ‘ஒரு பாரதவாசிக்கு இன்னொரு பாரதவாசி, இதனைக் கூடச் செய்யவில்லையென்றால் என்ன பயன்?’ பழம் பஞ்சாங்கம். +புணே நகரில் இருக்கும்  இரு  முஸ்லீம் ஸ்வயம்ஸேவக்குகளை நான் (தனிப்பட்ட முறையில்) அறிவேன்.

(பிரச்சினை என்னவென்றால் ஆர்எஸ்எஸ் என்றாலே காக்கி நிஜாரும் பிரம்புக் கையும் மட்டுமே என ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்  – அவர்கள் அணிவகுப்பது இன்னபிற குறித்த புகைப்படங்கள் மட்டுமே இணையத்திலும் பிற ஊடகப்பேடித்தனங்களிலும் வளைய வந்துகொண்டிருக்கும்! ஆகவே அவர்கள் ஆட்டோமேடிக்காக – ஃபாஸ்ஷிஸ்ட்கள், வன்முறையாளர்கள் எனவெல்லாம்… ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த நடையுடை பாவனைகள் அவர்களுடைய காத்திரமான பங்களிப்புகளை நீர்க்கடிக்கச் செய்வதில்லை.)

ஒவ்வொரு முறை பஞ்சம் வெள்ளம் கடற்கோள் பூகம்பம் என வரும்போதெல்லாம், மூன்றாம் மனிதர்களுக்குத் தெரியாமல் இந்த அமைப்புகள் சேவை செய்வதை நேரடியாக அறிந்திருக்கிறேன். எடுத்துக் காட்டாக 2011 தாணே புயலின் போது கர்நாடகத்திலிருந்தும், கோவை-திருப்பூர் பகுதிகளிலிருந்தும் வந்து தன்னலம் பார்க்காமல் சேவை செய்த மனிதர்களை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன்; இவர்களில் ஒருவர் கூட ‘நான் சேவை செய்கிறேன் பார்’ என மினுக்கவில்லை. (எனக்குத் தெரிந்து) ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடவில்லை.

(இன்னொரு பிரச்சினை என்னவென்றால் – இந்த இயக்கத்தினர் பொதுவாகவே தங்களைப் பற்றி வெளியுலகில் அவ்வளவு பேசுவதில்லை; தங்களுடைய காத்திரமான  பங்களிப்புகளைக் குறித்து, குறைந்த பட்ச செய்திப் பரப்பலைக்கூடச் செய்வதில்லை – பரப்புரையையே விடுங்கள்! ஆக – அவர்களைப் பற்றிய எதிர்மறைப் பரப்புரைகளையும் பொய்மைகளையும் மட்டும் ஊடகப்பேடிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் பரப்புவதினால் – இவை மட்டும்தான் பரவலாகத் தெரிய வருவதினால், பொதுவாகவே நமக்கெல்லாம் இவ்வமைப்புகளைக் குறித்து ஒரு எதிர்மறைக் கருத்து இருக்கிறது…)

…ஆம், இவையெல்லாம் உங்களைப் பொறுத்தவரை செவி வழிச் செய்திகள்தாம்; ஆனால் இம்மாதிரிச் செய்திகளை நமக்கு நம் அயோக்கிய ஊடகப் பேடிகளா தருவார்கள், சொல்லுங்கள்? கலாச்சார / தேச அபிமானம் என்பது ஒன்று – இது ஆர்எஸ்எஸ், முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் வகை; மதவெறி என்பது இன்னொரு வகை – இது இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலிடமும், தமுமுக, மமக போன்ற அமைப்புகளில் நேரடியாகவும்/கமுக்கமாகவும் இருப்பது. இவை இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஆனாலும் – இந்த அமைப்பில்கூட ஒருசிலர் அப்படியில்லாமல் மோசமானவர்களாக இருக்கலாம். வெறுப்புமிழ்வர்களாக இருக்கலாம்  என்பதையும் அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன்; ஆனால் விகிதாச்சார அளவில் அது மிகமிகக் குறைவு என்பதுதான் என் அனுமானம். (அப்படிப்பட்ட ஒரு  முட்டாக்கூவானாரைப் பற்றி, இந்த அமைப்புடன் தொடர்பில்லாத ஒருவனாகிய நான் புகார் அளித்தபோது (89-90 சமயம் என நினைவு) அவர்கள் உடனே அவர்மேல் நடவடிக்கை எடுத்தார்கள். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது)

எந்தவொரு அமைப்பையும் போலவே, இதிலும் சிலபல பிரச்சினைகள் இருக்கின்றன;  ஆனால் அராஜகவெட்டிவாத கம்யூனிஸ்ட்களையும் கேடுகெட்ட அயோக்கியத் திராவிடர்களையுமேகூடப் பொறுமையாகத்  தாங்கிக்கொண்டிருக்கும் பூமித் தாய்க்கு – இந்தப் பிரச்சினைகளானவை சிறு அரிப்புகள் மட்டுமே, அவ்வளவேதான்!

இன்னொரு விஷயம்: 1980-85 வாக்கில் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ஒரு படுமோசமான தனியார் சர்ச் (=அமெரிக்கப் பிச்சை) இருந்தது; அதிலிருந்த பேஸ்டர் ஒரு அயோக்கியர், மூளை சரியில்லாத இரு சிறுபெண்களை வைத்துக் கொண்டு பொழுதன்னிக்கும் பலாத்காரம்வேறு; பக்கத்திலிருந்த க்றிஸ்தவர்கள்கூட இந்த அசிங்கங்களினால் கலவரப்பட்டாலும் பேஸ்டரின் அடாவடி ரௌடித்தனம்  காரணமாக, அந்த மனிதரிடம் பேசவே பயந்தார்கள் – ஆகவே அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, காவல்துறையினரிடமும் போக விரும்பவில்லை. இது புரிந்துகொள்ளக் கூடியதுதான். பிற தெருவாசிகளும் ஜாதிமத வித்தியாசமில்லாமல் பயந்தாங்குளிகள். குமாஸ்தாக்கள்.

நானும் அந்த சர்ச் தெருவிலிருந்த என் நண்பனும் பொறுமையாக அந்தப் பேஸ்டரிடம் பேசியபோது – அவர் ‘நீ செய்யறத செஞ்சிக்கோ’ ‘பக்கத்து வூட்டுக்காரங்களே ஒண்ணும் சொல்லலே, ரெண்டுவூடு தள்ளிக்கீற இவன் பெருஸ்ஸா ஸொல்ல வந்த்ட்டான்!’

ரெண்டு சாத்து சாத்தியிருக்கவேண்டும். ஆனால் நண்பனுக்கு ஒப்புதலில்லை. அவன் வள்ளலார்வழி. அருட்பெரும் கபோதி. தனிப்பெரும் சுருணை. அந்தத் தெரு ஒரு பாரதவிலாஸ் வகைப் பகுதி. பல மதக்காரர்களும் ஜாதிக்காரர்களும் சுமுகமாகவே வசித்துக் கொண்டிருந்த இடம்.

ஆனால் —  பக்கத்திலிருந்த ஜமாத் – அந்த மத விஷயங்களில் நாங்கள் தலையிடமாட்டோம்; மார்க்ஸிஸ்ட்கள் (டைஃபி) – இது உள்ளூர் பிரச்சினை, சிறுபான்மை உரிமை – தலையிடமாட்டோம்!

வெறுத்துப் போனாலும் – என் நண்பனும் நானும் மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்றபோது எங்களால் ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியவில்லை. கிடைத்தது அறிவுரை: ‘கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க!’ ‘நீ மேஜரா மைனரா?’  ஆலந்தூர் பகுதி திமுக நண்பன் (இவனைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன்) – ‘அப்பாரு கோச்சுக்குவாரு!’

… என் நண்பனுக்கோ இரவில் நடக்கும் அப்பெண்பிள்ளைகளின் க்றீச்சிடல்கள் தாளமுடியவில்லை; ஆக, மிகுந்த யோசனைக்குப் பிறகு (அப்போதெல்லாம் நான் ஒரு தீவிர இடதுசாரி!) – பழவந்தாங்கல் பகுதியில் இருந்த ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரிடம் சென்றோம். கண்ணியவான், அமைதியானவர். கேட்டுக்கொண்டார்.

ஒரே தெருவில் இருக்கிறீர்கள், சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாதா, தெருவில் இருக்கும் பிற மக்களுடன் சேர்ந்து அவருடன் பேச முயன்றீர்களா? சர்ச்சுக்குப் பதிலாக ஒரு கோவிலாகவோ மசூதியாகவோ அது இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றெல்லாம் கேட்டார். I was quite impressed! அவருக்கு ஒரளவு திருப்தியானவுடன், முடிந்ததைச் செய்கிறோம் என்றார். (போலீஸ் தலைமை அதிகாரிகளிடம் பேசி – மடிப்பாக்கப் போலீஸ் வந்து அந்தப்பேஸ்டரை மிரட்டி – இவ்விஷயம் சரிசெய்யப் பட்டது)

…இதற்குப் பிறகு அந்தத்தெரு க்றிஸ்தவர்களுக்கும் மகிழ்ச்சிதான்; ஆனால் பேச்சுவாக்கில் சொன்னார்கள் ‘என்ன இருந்தாலும் நாமளே தீர்த்திட்டுருக்கணம்! இப்ப ஆர்எஸ்எஸ் வந்திடுச்சே!’ சரிதான்.  கூசவைக்கும் பேடித்தனம் என்பது, மதச்சார்பின்மை முகமூடி போட்டுக்கொள்வதைப் பார்த்தது அதுதான் முதல்தடவை இல்லையென்றாலும் — எனக்கு ஒரே ஆச்சரியம்.

உண்மை என்னவென்றால் ஆர்எஸ்எஸ் அந்தப் பகுதியில் வரவேயில்லை.  காக்கி நிஜார் போட்டுக்கொண்டு தடியைச் சுமந்துகொண்டு மிலிட்டரி போல ஊர்கோலமும் போகவில்லை. மன்னிக்கவும்.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றிய ஊடகப்பேடிகளின்  எதிர்மறைச்  சித்திரங்கள், பொய்மையால் மட்டுமே கட்டமைக்கப்பட்டவை. ஊதிப் பெருக்கப்பட்டவை.

ஆக – வரலாற்றைப் பற்றி பப்பரப்பாக்களின் மூலமாகவே அறிந்துகொண்டவர்கள்தான், பொதுவாகவே கருத்துலகச் சோம்பேறிகள்தாம், இடதுசாரி/தொழில்முறை அறிவுஜீவிகளிடம் கடன்வாங்கியே தம் அரைகுறைக் கருத்துகளை எழுப்பிக் கொண்டவர்கள்தாம் இப்படிப்பட்ட பொதுப்படையான ஆர்எஸ்எஸ் எதிர்க் கருத்துகளை உருவாக்கிக்கொள்வார்கள்.

வாழ்க்கையில் திகட்டுமளவு அனுபவங்கள் கிடைத்துவிட்டதாக, ஏகோபித்த பிரமையில் பீடிக்கப்பட்டு இருக்கும் எனக்கு மட்டுமல்ல…  கூர்மையுடனும் நேர்மையுடனும் நிகழ்வுகளை அவதானித்துத் தொடர்ந்து கருத்துகளைமறுபரிசீலனை செய்யும் முனைப்புள்ள அனைவருக்கும் இப்படியே தோன்றும்.

இன்னுமொன்று: ஆர்எஸ்எஸ் எனும் கலாச்சார இயக்கத்துக்கும் – பாஜக எனும் அரசியல் கட்சிக்கும் இடையே ஏகப்பட்ட முரணியக்கங்கள். இரண்டுக்கும் ஊற்றுக்கண்கள் ஒன்றேயென்றாலும் இதுதான் நடைமுறை உண்மை. ஒன்று மற்றதை ஆட்டுவிக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை. ஆனால் தொடர்ந்த உரையாடல்கள் இருக்கின்றன. இது என்னைப் பொறுத்தவரை முக்கியம்.

…ஆக -ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டவர் என்பது ஒரு மோசமான விஷயமே அல்ல, மாறாக, அது ஒரு பெருமைப் படத்தக்க விஷயமே எனத்தான் நினைக்கிறேன்.

பிற சப்பைக்கட்டல்வாதங்களைப் (1-9) பற்றி – அடுத்த பதிவு…

(விட்ட்ட்டாஆஆஆது கருப்ப்ப்ப்ப்ப்ப்பூ!)

 

10 Responses to “ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள்”

 1. S bmniac Says:

  He has far more character then Meira Kumar and K R Narayanan. I had worked under the latter!


  • :-(

   இந்த கேஆர் நாராயண மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ள (ஆதாரங்களுடந்தான்!) சிலபல விஷயங்கள் அசிங்கமாகவே இருந்திருக்கின்றன. அவர் இறந்தபின் அவருடைய புத்திரி சிகாமணி செய்திருக்கும் அற்பத்தனங்களும் கூடச் சேர்த்தால்…

   ஒன்றுமே, ஒரு பின்புல விஷயத்தையும் அறிந்துகொள்ளாமல் தூக்கிப் பிடிப்போம் – கேஆர் நாராயணீயம் என்றால்.

   அதேபோல தூக்குப்போட்டு மிதிப்போம், ராம் நாத் கோவிந்த் என்றால்! நம் நடிப்பாளர்களில் நாக்குகள் எப்படித்தான் இப்படிச் சுழன்றுசுழன்று ஸிக்ஸர் அடிக்கின்றனவோ!

   அய்யா, நன்றி – உங்களுடைய பொருள்பொதிந்த ஒருவரிப் பின்னூட்டத்துக்கு; முடிந்தால் உங்கள் நாராயண அனுபவங்களை விரிவாக எழுதலாமே.

   அன்புடன்,

   __ரா.

 2. 'திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தையார்' Says:

  ram, i got out. tks. :-(


  • ஒழிந்தது சனி என நிம்மதியாக இரும். விடுதலை பெற்றதற்காக வருத்தப் படவேண்டா!

   • 'திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தையார்' Says:

    next part? hope it happens before the presidential election


   • யோவ் மாஜீ! கொஞ்சம் கெடுபிடியில் இருக்கிறேன். கட்டாயமாக இன்று. அண்ணாமலையார் தான் உதவவேண்டும்! ;-)

 3. பிரேம்குமார் Says:

  RSS பற்றி நல்லவிதமாக இப்பொழுது கேட்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

 4. ganeshmurthi sivaraman Says:

  நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமே…..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s