தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(

February 22, 2017

இதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.

#1:சென்ற பதிவில் எழுதியது போல, நான் என் அக்கால விடுதலைச் சிறுத்தைக்கார நண்பருடன்  (திருவண்ணாமலை) நேற்றுமாலை நீளமாக உரையாடினேன்; என்னுடைய இளம் மாணவருடனும். :-(

1. அவர் இன்னமும் கட்சியில்தான் இருக்கிறார் – ஆனால் வெறுப்பில். திருமாவளவன் ஓடோடிப்போய் சசிகலாவைப் பார்த்ததில் முக்காடு போட்டுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன் என்றார், பாவம். நான் சொன்னேன் – ஒரு கட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும் உங்களுக்கு, நிதியின் அவசியம் அவருக்கும் தெரிந்திருக்கும் அல்லவா? இந்தப் பக்கம் சசிகலா என்றால் அந்தப் பக்கம் இசுடாலிர்;  திருமாவளவன் பணக்கொள்ளைக்கார திராவிடக் குடும்பத்திலிருந்து வந்தவரும் இல்லை, அதிகாரம் வழியாக பணம்கிடைக்க வழியுமில்லை; ஏதோ அடாவடியில் கிடைப்பதை வைத்துத்தான் கட்சி நடத்தவேண்டும்; அவரும் என்னதான் செய்வார், சொல்லுங்கள்.

2. அந்தத் தனிமனிதர் குபிச்சாண்டி அவர்களின் புதல்வர் தாமென்றார். அவருடைய தகப்பனார் காலத்திலிருந்து தெரியும் என்றார்.

3. அக்கல்லூரியின் பணமூலம், நடைமுறைகள் போன்றவை அனைத்தும் நான் சந்தேகப்பட்டதுபோல்தான். கேள்விப்பட்ட எதுவுமே நேர்மையாகவோ சரியாகவோ படவில்லை. (அவர் சொன்னதைப் பார்த்தால், அந்த அஇஅதிமுக மாஜி ஜிவிஸ்வனாதனின் வேலூர் பொறியியல் கல்லூரிக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாம் போல!)

5. இன்று (22ஆம் தேதி) திமுகவினர் திருவண்ணாமலையில் ஏதோ அறப்போராட்டம்(!) நடத்தப் போகிறார்களாம். தொட்டுக்கொள்ள உண்ணாவிரதமும்! அராஜகத்தையும் செய்துவிட்டு அதற்கெதிராக இந்த ரம்பப் போராட்டம். நடிகர் திலகங்கள், வேறென்னசொல்ல; பெருந்தொப்பைக்காரத் திராவிடர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து வாடி இறப்பின் எல்லைக்கே சத்தியாக்கிரகிகளாக போகப்போகும் காட்சியைப் படம்பிடித்து அனுப்புகிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் அந்த புகைப்பட எழவுகளை அனுப்பினால் அதனை வெளியிடுகிறேன், ஒரு நகைச்சுவைக்காக மட்டும்!

6. அக்கல்லூரியில் ரசீது கொடுக்காமல் பணம் வாங்கப்பட்டது என என் மாணவர்கள் சொன்னது நிஜம். ஆக கருப்புப்பணம். :-( தன் அம்மாவின் மேல் சத்தியம் எனச் சொன்னான், பாண்டிச்சேரி மளிகைக் கடையில் வேலை செய்யும் அந்தக் கஞ்சினீயர்; தகப்பனார் சென்றவருடம் போய்ச்சேர்ந்துவிட்டார், அவருக்குத் தன்பையன் குறித்து ஏகப்பட்ட வருத்தம், பாவம். பல வருடங்களுக்கு முன் நான் முட்டிக்கொண்டேன், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று, நல்ல ஐடிஐ ஒன்றில் சேர்க்கலாமே, ஏன் எஞ்சினீயரிங் மேற்படிப்பு அதுஇதுவென்று போயும்போயும் இம்மாதிரிக் கல்லூரிகளில் சேர்க்கிறீர்கள் என்று, அதுவும் இவ்வளவு செலவுசெய்து என்று… கேட்டார்களா? :-(( நேற்று அந்தப் பையன் கேட்டான் – பெங்களூரில் உங்கள் கம்பெனியில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று, என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறேனென்று  – நான் வெறுத்துவிட்டேன். இப்போது நான் பணி(!) செய்துகொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் இம்மாதிரியெல்லாம் முடியாது. என்னால் இந்தப் பையனை வேறு எவருக்கும் பரிந்துரை செய்யவும் முடியாது – அவன் தகுதி அப்படியிருக்கிறது, நிலைமை மோசம். எப்படித் துடுக்காகவும் அழகாகவும் வளர்ந்துகொண்டிருந்த பையனை முதுகெலும்பில்லாமல் ஆக்கி அவனைப் பிச்சை எடுக்கவைத்துவிட்டார்கள் பாவிகள், என்ன மசுத்துக்குப் பயிற்சி தந்திருக்கிறார்கள், எனக்கு ஆறவேயில்லை. :-(

7. இன்னொரு நண்பர் “ஜெயமோகன் அவரையும் அவரது ஒரு நூலையும் (”கவர்னரின் ஹெலிகாப்டர்”) நல்லவிதமாகத்தான் எழுதியிருக்கிறார். ஒருவேளை மிக லேசான விதிவிலக்கோ என்னவோ“என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்; ஆனால் எனக்கு ஜெயமோகன் சொல்கிறாரே என்றுமேகூட, இதையெல்லாம் படிக்கத் திராணியில்லை. என் நஷ்டம்தானோ என்னவோ. எப்படியும் என் வாழ்க்கையை அமோகமாக வீணடிப்பதற்குப் பல பிற (எகா: ஒத்திசைவு) வழிகள் இருக்கின்றன. நன்றி.

8. இவர் நேர்மையானவர் கீர்மையானவர் என்றெல்லாம் எழுதிய அந்த நண்பரை இனி பொருட்படுத்தப் போவதில்லை. அந்த, எஸ்கேபி கருணா அவர்கள் நேர்மையானவராகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஊழல் பணத்திலோ அல்லது பெற்றோர் பணத்திலோ வாழாமல், உழைத்துச் சம்பாதிப்பவராகவே இருக்கட்டும். ஆனால் இந்த நண்பருக்கு(!) மூளையென்று ஒன்று இருக்கிறதா? பெரிதாகச் சான்றிதழ் கொடுக்க வந்துவிட்டார்கள்! சும்மனாச்சிக்கும் எவனாவது சமூகவளைத்தள பெருச்சாளிக் கூவான் அல்லது அடிப்பொடி உடன்இறப்பு போற்றிப்போற்றி எழுதியிருப்பான், இந்த மனிதரும் இதற்கு ஏகோபித்த ஆதரவு. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள். இவர்களெல்லாம் படிப்பறிவு பெற்றவர்கள் என்பது தமிழகப் படிப்பறிவின் சராசரித்தனத்தின் குறியீடோ? ‘நுண்மான் நுழைபுலம் அறியும் தன்மை’ என்பதையே திராவிடக் கல்வி காயடித்துவிட்டதோ?

9 . ஆக, இந்தக் கல்லூரியும் – மற்ற கல்வித்தந்தைத் தனியார் கல்லூரிகளைப் போலத்தான். ஒரு வித்தியாசமும் இல்லை, திராவிடக் குட்டையில் ஊறிய ஊழல் மட்டை எனத்தான் படுகிறது. ஆனாலும், எப்படி இருந்தாலும் ‘மீட்பு’ அல்லது மீட்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இத்துடன் இந்த விவகாரத்தை விட்டேன்.

10. ஏண்டா இந்தக் கருமாந்திர விஷயத்துக்கு இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறேன் எனப் படுகிறது, இப்போது. :-( அவருடைய பின்னூட்டத்தை அவ்வளவு ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டிருக்கவேண்டாமோ? :-((

11. தனிச்சுற்றுக்கு மட்டும் என மாற்றி – வெறும் மின்னஞ்சல்குழுவாக இந்த எழவெடுத்த ஒத்திசைவை மாற்றினால்தான் எனக்கு விமோசனமோ? காத்திரமான உரையாடல்கள் சாத்தியமோ?

-0-0-0-0-0-

நண்பர் ஒருவரின் கடிதம்:

சில மாதங்களுக்கு முன் ஒரு மல்டி லெவல்  மார்க்கெட்டிங் கூட்டத்தில் போய் மாட்டிக்கொள்ளும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. (அது ஆன்லைன் கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான பயிற்சிக்கான ஒரு அறிமுகக் கூட்டம் என்று விளம்பரத்தில் கூசாமல் புளுகியிருந்ததால் மாட்டிக்கொள்ள நேர்ந்தது. பாதியில்  வெளியேறத் தடை இருந்ததால் வெளியேற முடியவில்லை.) 

கூட்டத்தில் உரை ஆற்றி ஆற்றி மார்க்கெட்டிங் செய்பவர் கூட்டத்தை நோக்கி அவ்வப்போது கேள்விகள் (எல்லாமே சப்பையான ஆழமற்ற கேள்விகள்.) கேட்க கூட்டம் எதுவும் தெரியாமல் பே என்று விழித்தது. 

உரைக்கு   நடுவே திடீரென்று சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை சொல்லும்படிக்  கேட்டார் உரையாளர்.  மறுபடி பே! தொடர் பேயால்  மனம் நொந்த உரையாளர் இம்முறை பதில் சொல்லாவிட்டால் தொடர மாட்டேன் என்றார்.  

எனக்குப்  பொறுமை போய் (அது MLM என்று தெரிந்த கணமே போய்விட்டது) வெகு நேரமாகி இருந்தது.  ஆனால்  நான் ஒரு காமர்ஸ் பட்டதாரி. கூட்டத்தில் அநேகம்பேர் பொறியாளர்கள், அதுவும் அந்த ஆண்டுதான் படிப்பு முடித்தவர்கள் என்பதால் அவர்கள் பதில் சொல்வார்கள்  என்று நான் சும்மா இருந்தேன். (நான் உண்மையில் அறிவியல் என்பதை அறிவியல் என்று புரிந்துகொண்டேன். அது தவறு என்று அப்புறம்தான் புரிந்தது.)

வேறு வழியில்லாமல் ‘பே’ விரதம் கலைந்தது.  சொல்லி வைத்த மாதிரி ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ஐஃபோன், கேமிரா என்று பதில்கள் கூட்டம் முழுதிலிருந்தும் வந்தது.  உரையாளர்  குறுக்கிட்டுத் தொழில்நுட்பத்துக்கும்   (ஃபேஸ்புக்கும் வாட்ஸ் ஆப்பும் தொழில்நுட்பங்கள் அல்ல, அதைப் பயன் படுத்துபவை மட்டுமே என்பது வேறு விஷயம்) அறிவியலுக்கும்    உள்ள வேறுபாடு பற்றிப் போகிற போக்கிலாவது ஏதாவது சொல்ல மாட்டாரா என்று நான் நினைத்தது வீண்! சொல்லாதது மட்டுமல்ல, பதில் சொன்னவர்களின் தைரியத்தைப் பாராட்டவும் செய்தார். (இம்மாதிரி பதில் சொல்வதற்கு உண்மையாகவே மிகுந்த தைரியம் வேண்டும்தான்!!! )  

அந்தக் கேள்வி கேட்கும் முன் கூட்டத்தில் எத்தனை பேர் பொறியாளர்கள் என்று கேட்டார். கிட்டத்தட்ட 90% பேர் கைதூக்கினார்கள்.  உரையாளரும் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதை அறிமுகத்திலேயே சொல்லியிருந்தார். 

வெளியே வரும்போது ஏமாந்து மாட்டிக்கொண்ட வேதனையுடன்  (இந்த  MLM வஸ்துவைத் தீட்டாக எண்ணி ஒதுக்கி வைத்திருந்த வாழ்நாள் விரதத்துக்குப் பங்கம் நேர்ந்த வேதனை) ஒரு அற்புதமான ஞாயிறு வீணான வருத்தத்துக்கு மேல்  தமிழகத்தில் கல்வியின் நிலை பற்றிய கலக்கமும்.  

அன்று  எல்லாக் கேள்விகளுக்கும் கூட்டம் விழித்ததையும் உரையாளரின் தொடர் உளறல்களையும் எண்ணும்போதெல்லாம்  உங்கள் பதிவுகளும் நீங்கள் எப்போதும் சொல்லும் குளுவான்கள் என்ற பிரயோகமும்தான் நினைவுக்கு வரும். அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழ்நாட்டில் இத்தனை குளுவான்கள் உருவாகியிருப்பதை நினைத்தால் வயிறு கலங்குகிறது.     இவர்களுக்காக இவர்களின் பெற்றோர் எந்தெந்த சொத்துகளை விற்றார்களோ என்றெண்ண இன்னும் கலக்கம்! இவர்கள் குளுவான்கள் என்றால் இவர்களை இப்படி உருவாக்கிய கல்வி வியாபாரிகளின் அயோக்கியத்தனத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

ஒரு நாள் அனுபவத்துக்கே எனக்கு இவ்வளவு கலக்கம். தொடர்ந்து தொழில்முறைக் குளுவான்களை சந்தித்துக்கொண்டே இருந்தும் உங்களுக்கு இன்னும் தமிழகம் மேலெழும் என்று நம்பிக்கை இருக்கிறது வியப்பு!  வாடகை உங்கள் பழங்குடி உள்கோடு ( உபயம்: எஸ்ரா)

இதை உங்களிடம் பகிர வேண்டும் என்று நெடு நாட்களாக நினைத்திருந்தேன். உங்கள் சமீபத்திய பதிவைப் பார்த்ததும் பகிர்ந்துவிட்டேன். 

நன்றி,

:-(

-0-0-0-0-0-0-

அண்மையில்  நடந்துமுடிந்த பெங்களூர் ஏரோஇந்தியா சாகசக் காட்சிக்கு, என் மகனுடன் (வயது 12) சென்றிருந்தேன். எங்கள் இருவருக்கும் இயந்திரங்களிலும் பறக்கும் அற்புதங்களிலும் (பறவைகள் உட்பட) கொஞ்சம் ஆர்வம். ஆக…. புழுதியும் காதைக் கிழிக்கும் ஸானிக்பூம் சப்தமும், உடலும் மனமும் அதிர்வதும்,  பறக்கும் அற்புதங்களும் – இன்ப லாகிரிதான். :-)

ஆனால் பக்கத்தில் (தம் இரு குழந்தைகள் + மனைவியுடனும்) நின்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தலைவ இளைஞன் சரமாரியாக ஏதோ கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தான். ஒரே உளறல். பொறுக்கவே முடியவில்லை.

என் சகபார்வையாளர்கள் – எல்லாம் படித்த ஜாதியினர், ஊருக்குக் குடிமைப் பண்பு பற்றிப் பேசிக்கொண்டே  சாப்பிட்டுவிட்டு உணவுப் பொட்டலங்களைக் கீழே போட்டுக்கொண்டிருந்தனர்; குப்பைமயம். அற்பர்கள். என்னாலானது ஐம்பதுமீட்டர் ஆர வட்டத்தில் இருக்கும் குப்பைகளைப் பொறுக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். ஏனெனில் இந்த உணவுமிச்சங்கள் பறவைகளை வரவழைக்கும் – முக்கியமாக, வரும் சிறு பறவைகளை உண்ணவரும் பருந்துகளை. இவைவந்தால், அது விமானங்களுக்குப் பிரச்சினை – ஏனெனில், அவை எஞ்சினில் மாட்டிக்கொள்ளும், பலத்த சேதம் ஏற்படும். நம் மக்களின் குடிமைப் பண்பு பற்றி அழுவதை இன்னொரு சமயம் பார்க்கலாம்…

…ஆனால் இப்படிப் பறந்துகொண்டிருந்த பருந்துகளைப் பார்த்து – அவன் அமெரிக்கன் பால்ட் ஈகிள் என்றானே பார்க்கலாம்! மேலும் பறந்துகொண்டிருந்த சண்டைவிமானங்களையெல்லாம் எஃப்-16 என வர்ணித்தான். பறக்கும் ராக்ஷசக் கவிதையான ஸுகோய் விமானம்,  குட்டிஅழகான க்ரைபென் – என அனைத்தும் அவனுக்கு எஃப்-16 விமானங்கள்தாம்! அவனுடைய குழந்தைகள் அவன் சொல்வதை ஆ வென்று கேட்டுக்கொண்டிருந்தன.

என் மகனுக்கோ, ஒரே வெறி – இந்த ஆள் இப்படிப் பொய் சொல்கிறாரே – இந்த இடத்தைவிட்டு வேறு இடம் போய்விடலாமே, இல்லையானால் ‘அய்யா, நீங்கள் சொன்னது அனைத்தும் தவறு’ என அவரிடம் சொல்லிவிடுவேன் என நச்சரித்தபடி இருந்தான். ஆனால் இன்னொரு இடம் போனால் அங்கும் பதினைந்து நிமிடம் எடுத்துக்கொண்டு சுற்றுவட்டாரத்தைச் சுத்தம் செய்யத் திராணியில்லை எனக்கு. என் பிரச்சினை எனக்கு. :-(

ஆனால் அவனுடைய பிள்ளைகளுக்குச் சரியான விஷயங்கள் போய்ச்சேரவேண்டும் எனவும் விரும்பினேன்.

ஆக, அவனிடம் பேச்சுக்கொடுத்தேன் – நீங்கள் தமிழரா, ஐடி இண்டஸ்ட்ரியில் வேலை செய்கிறீர்களா எனக் கேட்டேன். ஆம், எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றான்; அவனுக்குச் சந்தோஷம்.

எங்கே இஞ்சினீயரிங் படித்தீர்கள் – கோவை காருண்யா. (நல்லவேளை, ஜிஸிடி அல்லது பூசாகோ அல்லது அம்ரிதா என்று சொல்லிவிடுவானோ எனக் கொஞ்சம் பயந்துகொண்டிருந்தேன்)

அமெரிக்கா போய் அங்கே பால்ட் ஈகிள் பார்த்திருக்கிறீர்களோ என்று கேட்டேன். ஆம் என்றான்.
screenshot-from-2017-02-22-134723

அது பெங்களூரிலும் இருக்கிறதோ எனக் கேட்டேன். அதற்கு அவன் – ‘அதெல்லாம் மைக்ரேஷன் செய்யும் பறவை, ஸீஸன் வந்தால் இந்தியாவிலும் இருக்கும், ரங்கண்னதிட்டு சென்றால் நிறையப் பார்க்கலாம்!’ என்றான்! ஆ! அய்யய்யோ!! ஆனால் எனக்கு அசிரத்தையாகி விட்டது. மேலே தொடராமல், நன்றி சொல்லிவிட்டு ஆயாசத்துடன் என் மகனுடன் கிளம்பி இன்னொரு இடத்துக்குச் சென்றேன்.

என் மகன் சிரித்துக்கொண்டே கேட்டான் – நீயும் அதே ஐடி இண்டஸ்ட்ரியில்தானே வேலை செய்தாய்? ஆமாண்டா என அவன் முதுகில் ஒரு மொத்து மொத்தினேன். கிண்டல்காரன். இவனைவேறு ஹோம்ஸ்கூல் செய்கிறேன் பேர்வழியென என வீட்டில் கட்டி மேய்த்துக்கொண்டிருக்கிறோம்!  எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கமுடியும் எனத் தெரியவில்லை. :-(

டன்னிங்-க்ரூகர் விளைவு. unskilled and unaware of it. :-( முன்னமே பலமுறை இது குறித்துப் பிலாக்கணமிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி ஆசாமிகளைத்தான் பெரும்பாலான திராவிடக் கல்வித்தந்தைகள் தொடர்ந்து பெற்றெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு எங்கே போச்சு, புத்தி? :-(

நமக்கு இவர்களிடமிருந்து விமோசனம் உண்டா?

பொதுவாகவே, எனக்கு விமோசனம் உண்டா? :-(

7 Responses to “தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(”

  1. A.SESHAGIRI Says:

    உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது சார்!.இப்படி ஒரு தளராத தொடர் முயற்சி!,போன கட்டுரையில் எஸ்கேபி கருணா பற்றி விசாரித்து எழுதுகிறேன் என்று கூறிவிட்டு உடனே அவரை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எறிந்துவிடீர்கள்!.அதேபோல் இந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் – இவரைப்போல்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருக்கிறோம் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் – உங்கள் பாஷையில் ‘சும்மா அடித்து விடுவது’).உங்களை போன்ற மிகச் சிலரின் பதிவுகளை படித்தாவது எங்களுக்கு புத்தி வரட்டும்.அப்புறம் உங்கள் செல்லங்களில் ஒருவரான அரவிந்த் கண்ணனாரின் இந்தப் பதிவை பற்றிய உங்கள் கருத்து என்ன?(தாழ்த்தப்பட்டோரின் கல்விக்கு திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது?-http://contrarianworld.blogspot.in/2017/02/blog-post_20.html

  2. Kannan Says:

    பொதுவாகவே, எனக்கு விமோசனம் உண்டா? :-(

    I don’t think so (: and you know it.


  3. […] பற்றி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? உங்கள் பெயரும் இதில் அடிபடுவதனால் […]


  4. /இன்று (22ஆம் தேதி) திமுகவினர் திருவண்ணாமலையில் ஏதோ அறப்போராட்டம்(!) நடத்தப் போகிறார்களாம். தொட்டுக்கொள்ள உண்ணாவிரதமும்!/
    சிரிக்காமல் இருக்கமுடியவில்லை….

  5. selvarajan Says:

    அய்யா … ! அடிப்படை கோளாறு எங்கே ஆரம்பிக்கிறது …? கைநாட்டு — மொள்ளமாரி — முடிச்சு அவிழ்க்கி — கேப்மாரி — போர் டொண்ட்டி — பல குற்றங்கள் புரிந்த எடுபிடி என்கிற தகுதிகளில் ஏதாவதொன்றில் சிறந்தவனை — அள்ளி அனைத்து — தன் கட்சியில் இணைத்து பதவிகளான வட்டம் — மாவட்டம் — கிளை – நகர என்று என்று ஏதாவது ஒன்னை தூக்கிப்போட்டு — வளரவைத்து — ” சட்டமன்ற — பாராளு மன்ற உறுப்பினராக அவதாரம் எடுக்க வைக்க துணை நிற்கிற நமது ” அரசியலமைப்பு சட்டம் ” கொடுத்த உரிமையினால் வந்த வினை … தானே கண்டவனெல்லாம் ” கல்வித்தந்தை — தாளாளர் ” என்று கோலோச்ச முடிகிறது …

    இப்பேற்பட்ட ஆட்களால் நடத்தப்படுகிற கல்விக்கூடங்கள் { பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி — நிகர்நிலை பல்கலைக்கழகம் வரை } காசில் தானே குறியாக இருக்க முயலுகிறார்கள் தவிர — கல்வியின் தரம் பற்றிய கவலை அவர்களுக்கு ஏது … ?

    அதுவுமில்லாமல் வெறும் 35 மார்க்குகள் பெற்றவனையும் பொறியியல் கல்விகளில் சேர்க்க வேண்டி போராட்டம் நடத்தும் கட்சிகளும் — ஜாதியின் அடிப்படையில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவனையும் சேர்க்க அடாவடி செய்யும் ஜாதி கட்சிகளும் — ஓட்டு பொறுக்கிகளும் இருக்கும் போது எப்படி ஒரு ” திறமையான பொறியாளர் ” உருவாக முடியும் … ?

    ஐந்தாண்டு படிப்பை நாக்கு ஆண்டுகளாக சுருக்கி — ஒவ்வொரு பாடத்தையும் சும்மா தொட்டுவிட்டு செல்வதும் தவறான கல்வி கொள்கை தானே … ? சகட்டு மேனிக்கு அதிகப்படியான பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதியளித்ததால் — புற்றீசல் போல பெருகியதால் — கல்வியை காசுக்கு விற்று கல்லாக்கட்ட நினைத்ததும் மேலும் ஒரு தவறு ….

    பெற்றோர்கள் தன் பிள்ளைகள் ஏதாவது ஒரு துறை பொறியாளர் என்கிற அட்டையை பெற்றால் போதும் — என்று நினைக்கிற தன்மையும் இந்த கேடான நிலைக்கு ஒரு காரணம் … இன்னும் எவ்வளவோ இருப்பது நீங்கள் அறியாததா … ?

    அய்யா … ! நான் படித்தது ஒரு சாதாரண கிராமத்து பள்ளியில் தான் — அப்போதிருந்த ஆசிரியர்கள் ஒரு ” அர்ப்பணிப்போடு ” தங்கள் பணியை செய்து தரமானவர்களை உருவாக்கினார்கள் என்பதை அழுத்தமாக என்னால் கூறமுடியும் — பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ” திரு .வே .சபாநாயகம் ” அவர்களை என்றும் என்னால் { அன்று பயின்ற அனைத்து மாணவர்களும் } மறக்க முடியாத ஒருவர் … அவரின் தலைமையில் பணி புரிந்த அனைத்து ஆசிரிய பெருமக்களையும் இன்றும் நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது … இப்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது — அடிப்படை கல்வி சரியாக அமைந்தால் – எல்லாமே சரியாக இருக்கும் என்பது தான் பொதுவான செயல் …

    கடைசியாக இந்த கல்வித்தந்தைகள் — பட்டமளிப்பு உடைகளை மாட்டிக்கொண்டு நிற்பதை பார்க்கும் போது – ஏற்படுகின்ற உங்களின் எண்ணங்களை உங்கள் பாணியில் பதியுங்கள் … அய்யா — புண் பட்ட மனதுக்கு கொஞ்சமாவது ஒரு ஆறுதல் கிடைக்கும் ….!!!


  6. ** ஒரு குறிப்பு/திருத்தம்: அந்த மாஜி விடுதலைச்சிறுத்தை அன்பர் சொன்னதை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவர் அந்த நபர் அந்த ஊழல் பிச்சாண்டியின் சகோதரர் என்றுதான் அன்றுசொன்னேன் என்கிறார்.

    சகோதரரா மகரா என்பது முக்கியமில்லை, இங்கு. நான் இதனையும் இன்னொரு விஷயத்தையும் குழப்பிக்கொண்டுவிட்டேன் என்பதாக இருக்கலாம்; எது எப்படியோ, இந்தக் கல்லூரியின் நதிமூலம் நம் தமிழக மக்களைத் திராவிடக் கொள்ளையர்கள் சுரண்டியதன் ஒரு சிறு பிரத்யட்சத் தரவு என்பதில் எனக்கு ஐயமில்லை.

    நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s