மசூதிக்கும் போகும் மன்னாரு
September 7, 2015
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)
எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம், குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.
-0-0-0-0-0-0-0-
ஏனிப்படிச் செய்கிறேன் என்பது ஒரு சரியான கேள்விதான். முதலில், எனக்கு வெட்கமேயில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். போதாக்குறைக்கு, எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடக்கூடிய குண்டுதைரியமும். அதிக பட்சம் என்ன செய்துவிடப்போகிறார்கள் – வெறுமனே துரத்தியடிக்கத்தானே போகிறார்கள், அதற்குப் பயந்துகொண்டோ, வெட்கப்பட்டுக்கொண்டோ அல்லது சங்கடப் பட்டுக்கொண்டோ – அழகாக விரியக்கூடும் அனுபவங்களை அடையும் சாத்தியக்கூறுகளை விட்டுவிட முடியுமா சொல்லுங்கள், எனும் விதண்டாவாதச் சிந்தனைப்போக்கு வேறு!
ஆனால் எங்கு சென்றாலும் சரி, எனக்கென்று சில அடிப்படை விதிகளை வைத்திருக்கிறேன்: 1) எந்த வழிபாட்டிடத்துக்குச் சென்றாலும் அதற்கேற்ற உடைநடையில் தான் செல்வேன். 2) மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வேன், எவரிடமும் வம்புச் சண்டைக்கோ, அல்லது என்னுடைய அரைகுறைத்தனமான மேட்டிமைத்தனத்தை நிறுவவோ முயலமாட்டேன்; வாக்குவாதங்களில் ஈடுபடவே மாட்டேன். 3) தேவையான சடங்குகளை அனைத்தையும் குறையில்லாமல் செய்வேன்; பாரம்பரியங்களை மதிப்பேன்; எதனையும் அவமரியாதை செய்யமாட்டேன். மற்ற வழிபாட்டாளர்களைத் தொந்திரவு செய்யமாட்டேன். 4) வழிபாட்டிடங்களுக்குப் போவதற்கு முன் அதனைப் பற்றி முடிந்தவரை பின்புல விஷயங்களைத் தெரிந்துகொள்வேன்; முடிந்தால் அம்மார்க்கத்தைச் சார்ந்த நண்பர் எவருடனாவது அவ்விடத்திற்குச் செல்வேன். 5) நான் இவற்றைச் செய்யும் போதெல்லாம் ஒரு நடிகனைப் போல உணர்வதில்லை; ஒரு மானுடத் திரள் பல நூற்றாண்டுகளாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதற்கென அற/தத்துவரீதியான ஊற்றுக் கண்கள் இருக்கவேண்டுமல்லவா? சடங்குகளாக அவை சுணங்கிப் போனாலும், அவற்றுள் பொதிந்திருக்கும் மானுடமேன்மைக்கான விழைவுகளில் ஒரு துளியாவது எனக்குக் கிடைக்கக் கூடுமா என்ற எதிர்பார்ப்புடன் செல்வேன். (சில சமயங்களில் நான் சில வழிபாட்டிடங்களுக்குள் அனுமதிக்கப் பட்டதில்லை; ஆனால் நான் அவற்றை ஒரு பிரச்சினையாகவும் நினைக்கவில்லை!)
…ஆனால், இவற்றையெல்லாம் படிக்கும்போது ஒரு நாடகத்தனம் தெரிகிறதா? இருக்கலாம். ஆனால், சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக இம்மாதிரிச் செய்துவரும் நான், இவற்றினால் கொஞ்சமாவது மேன்மையடைந்திருப்பதாக, என்னுடைய சகிப்புத்தன்மை துக்குணியூண்டாவது அதிகரித்திருப்பதாக, ஆத்மார்த்தமாக உணர்கிறேன், அவ்வளவுதான்! மேலும் என்னுடைய இம்மாதிரி கிறுக்குத்தனங்களைப் பார்த்து, சில இளைஞர்களும் (=என் மாணவர்கள்தான், வேறு எவரும் இல்லை!) இப்படிச் செய்ய ஆரம்பித்திருப்பது என் அகங்காரத்தை மேலும் வீங்கவைக்கிறது என்பதும் சரியே! :-(
சரி. நான் வேடம் போடத் தயங்குபவனல்லன். சில இடங்களில் மட்டுமே கிடைக்ககூடிய அனுபவங்களுக்காக நான் ஃபெஸ் தொப்பி போடுவதற்கோ, ஷார்ட்ஸ் போடுவதற்கோ, வேட்டி கட்டிக்கொண்டு செல்வதற்கோ, சிலசமயங்களில் டீக்டாக்காக சட்டை+கால்சராய் போட்டுக்கொள்வதற்கோ, லுங்கியை தொடைமசுர் தெரிய மடித்து டப்பாகட்டு கட்டிக்கொள்வதற்கோ, மேற்சட்டைபோடாமல் + மேற்துண்டு கூட அணியாமல் மார்மசுத்தைக் காட்டிக்கொண்டு அலைவதற்கோ தயங்கியதேயில்லை. ஏனெனில் எனக்குத் தொப்பை கொஞ்சம் கூட இல்லை என்று அற்பமாகப் பெருமைப் படுபவன் நான். மேலும், பலவிஷயங்களில், எனக்கு என்னுடைய மார்வரை புரளும் முரட்டுத்தாடி வேஷமும் உபயோகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக மசூதிகளில். :-)
பாண்டிச்சேரியின் ஸ்ரீ அரோபிந்தோ ஆஸ்ரமத்திற்கு – வருடம் ஒரு முறை வந்து இரண்டுமாதம் (டிஸெம்பர்-ஜனவரி) தங்கிவிட்டுப்போகும் ஒரு பரேல்வி பெரியவர் எனக்கு அறிமுகமானார். இவருக்கு இப்போது 80+ வயது இருக்கலாம். உத்தரப்பிரதேச கோரக்பூர் காரர். ‘இங்க்லீஷ்’ மருத்துவர் – உங்களுடையது அல்லோபதியல்ல, அது அல்லாபதி என்றெல்லாம் கிண்டல் செய்திருக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்ச்சி. துல்லியமான, துரிதகதி மூளை; ஒரளவு தமிழ் தெரியும் – கடுக்முடுக்கென்று பேசுவார். விசாலமான படிப்பு. ஸாவித்ரியின் குறியீடுகளை-படிமங்களைப் பற்றி அவரால் மணிக்கணக்கில் ஆழமாகப் பேசமுடியும். சந்தேகமேயில்லாமல் இவர் ஒரு ஞானி. இவருடன் பழக வாய்ப்புக் கிடைத்ததற்கு, நான் கொடுத்து வைத்தவன்.
சரி. மூன்றுமாதம் முன்புவரை எனக்கு, வாரத்திற்கு இருமுறையாவது பாண்டிச்சேரியின் கூபேர் வணிக வளாகத்துக்குச் (=பெரிய மார்க்கெட்) சென்று பழங்கள், புதியகள் எனச் சிலபல பொருட்களை வாங்கிவரவேண்டியிருந்தது. வேண்டியவைகளை வாங்கிக்கொண்டபின் சிலசமயம் உபரியாக நேரமிருந்தால் – கொசக்கடைத் தெருவுக்கும் மார்க்கெட்டும் நடுவில் இருக்கும் சந்தொன்றில் உள்ள சிறிய மசூதி வாயிலில் உட்கார்ந்துகொள்வேன். எனக்கு, அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கும் சமயத்தில் சுற்றுவட்டார இரைச்சல் படுமோசமாக இருந்தாலும், மாலைத் தொழுகை நேரத்தின் முன் ஒலிக்கும் அந்த மசூதியின் ம்யுஸ்ஸெனின் குரலை மிகவும் பிடிக்கும். அங்குபோய், அதன் எதிரில் உள்ள வாழைப்பழக் கடைவாசலில் உட்கார்ந்துகொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன். அதிக நேரம் கிடைத்தால், சில சமயம் தொழுகையிலும் பங்குபெறுவேன். முடிந்தால், இமாமத்தினையும் கொஞ்சம் கேட்பேன். (இந்த மசூதியில், ஒன்றிரண்டு வருடங்களுக்குமுன் ஒரு விண்கல் பூமியில் விழலாம் என்கிற வதந்திகளும் புரளிகளும் கிளம்பிக்கொண்டிருந்தபோது, ஒரு இமாம் தன்னுடைய உரையில் மிகுந்த நகைச்சுவை உணர்ச்சியுடன் அவற்றைக் கிண்டல் செய்தார் என நினைவு!)
இப்படித்தான் புதுச்சேரி கொசக்கடை பக்க மசூதியில், இந்த பரேல்விக்காரரைப் பார்த்தேன். கொஞ்சம் பேச ஆரம்பித்தோம். எங்கள் பொதுப்புள்ளிகள்: இருவருடைய ஸ்ரீ அரோபிந்தோ அபிமானம்; அவர் ஒரு முஸ்லீமாக இருந்து அப்படி. நான் ஒரு ஹிந்துவாக இருந்து, என் விழைவுகள். அவ்வளவுதான். ஆக, வாரமிரண்டு தடவை பார்த்துக்கொள்வோம், கொஞ்சம் அரட்டை. பின்னர் மஹாத்மாகாந்தி சாலையில் உள்ள தெருவோர விஜயா காப்பிக் கடையில் ஸ்ட்ராங்க் காப்பி இரண்டு, சர்க்கரையில்லாமல்! ஆஹா! எங்களுக்கு வேறு சொர்க்கமே வேண்டாம்! வைகுண்டகைலாசமானாலும் சரி, ஜன்னாஹ் ஆனாலும் சரி! :-)
அவர் இங்கிருக்கும் இரண்டு மாதங்களில், தினம் இரண்டு முறையாவது இந்த மசூதிக்கு வருவார். இதனால், அவருக்குப் பல அனுபவங்கள். எனக்கும் குறிப்பாக இரண்டு.
…. ஒரு மாலை நானும் அவரும் மசூதிக்குக் சென்றோம். நான் உள்ளேபோனால், வழக்கமாக அறையின் நடுவில், எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியும்படியாக, கேட்கும்படியாக உட்கார்ந்துகொள்வேன். ஏனெனில், நான் போவது இறையுணர்ச்சியுடன் கூடிய தொழுகைக்காக அல்லவே! ஆழமாகப் பரிமாணம் பெறக்கூடிய ஒரு அனுபவத்துக்காகத்தானே!
…ஆனால், அவர் என்னுடன் வந்தும் என்னருகில் அமராமல் தள்ளி ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டார். நான் ஏனென்று கேட்டால் மண்டையில் அடித்துக்கொண்டு நீ வேண்டுமானால் இங்கே வா என்று சைகை காண்பித்தார். எனக்குக் கோபமாக வந்தது – ஆகவே இடத்தை விட்டு நகரவில்லை.
சரி. எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் ஒரு பெருந்தொப்பைக்காரர். அவர் எப்படிக் குனிந்து நிமிர்ந்து தொழுகை செய்யப்போகிறாரோ என்ற படபடப்பில் (+குறுகுறுப்பில்) இருந்தேன்; ஆனால் அவரைச் சுற்றி வட்டமாக இடம்விட்டு மற்றவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் மட்டும்தான் அவர் நேர்பின்னால்; பரேல்விக்காரரை ஓரக்கண்ணால் பார்த்தால், அவர் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் என் தவற்றை உணர்ந்தேன்.
பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் அந்தப் பெருந்தொப்பைக்காரர், வாயுவை வெளியேற்றிவிட்டுக்கொண்டே இருந்தார். அவர் பின்னால் உட்கார்ந்துகொண்டிருந்த எனக்கோ கதிகலங்கிவிட்டது. நகரவும் முடியவில்லை – ஏனெனில், அது தொழுகைச் சடங்குகளுக்கு இடையூறாக இருக்கும். துர்நாற்றத்தால் எனக்கு மூச்சடைத்துவிட்டது. என்னைச் சுற்றி அமர்ந்திருந்த பாவிகள் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தனர் – இவர்களில் ஒருவராவது எனக்கு இந்தப் பிரச்சினைபற்றி கொஞ்சம் கோடிகாட்டியிருக்கலாம் அல்லவா? :-( என் முட்டாள்தனத்தை நினைத்து என்மேலும், சரியாகத் தகவல் தெரிவிக்காத பரேல்விகாரர்மேலும் கோபம்கோபமாக வந்தது. ஆனால்…
கொஞ்சம் கூட கருணையோ, கூச்சமோ, அல்லது மசூதியில் வந்து இப்படிச் செய்யலாமா என்ற உணர்ச்சியோ அறவே இல்லாமல், அந்தப் பெருந்தொப்பைக்காரர் தொடர்ந்து தன் காலியேயாகாத கேஸ் டேங்க்கைத் திறந்துவிட்டுக் கொண்டே இருந்தார். அவ்வப்போது நாயனம்வேறு. வெறுத்துவிட்டேன். இமாமத்தில் ஒருவார்த்தையைக்கூட என்னால் கேட்டுக்கொள்ள முடியவில்லை.
சுமார் 20 நிமிட நரகவேதனைக்குப் பிறகுதான் என்னால் நகர முடிந்தது. அந்த பரேல்விக்காரர் வெளியே வரும்போது சொன்னார் – “குண்டுவீச்சு முடிந்துவிட்டது. இனிமேல் நீ சாதாரணமாக மூச்சு விட ஆரம்பிக்கலாம். பாவம், உன்முகம் பேயறைந்தது போல் இருக்கிறது! வா, போய் இரண்டு ஸ்ட்ராங்க் காப்பி சாப்பிடலாம்… ஆன்மீகத்தில் ஈடுபடுவது அவ்வளவு சுலபமல்ல!”
அந்தக் கொடுமையான அனுபவத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பல்லை நறநறத்துக்கொண்டிருந்தாலும், சிரித்துவிட்டேன். :-)
காப்பி குடித்துக்கொண்டிருக்கும்போது, அவர் நமட்டுச் சிரிப்புடன் சொன்னார்: “இதன் காரணமாக நீ இஸ்லாமை வெறுக்க, உனக்குச் சகல உரிமையும் இருக்கிறது!”
எனக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை; ஆக கொஞ்சம் சூடாகவே – “நான், இம்மாதிரி அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் அப்படி எதிர்வினையாற்றும் ஜாதியில்லை!” என்றேன்,
அவர் என் முதுகில் தட்டிக்கொண்டே – “கோபித்துக் கொள்ளாதே! அந்த ஆள் காரணமாக, ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், ஒரு மதக்கலவரமே ஏற்பட்டாலும் அது எனக்கு ஆச்சரியம் தராது என்றுதான் நான் நினைக்கிறேன்!” – என ஒரு நாடகத் தன்மையுடன் சொன்னார்.
இரண்டுபேரும் சிரித்தோம். சுபம்.
இந்த நிகழ்ச்சி, மேற்கண்டதற்கு (=மேற்கேட்டதற்கு, மேற்முகர்ந்ததற்கு, மேற்சலித்ததற்கு) இரண்டுமூன்று நாட்கள் பின் நடந்த ஒன்று.
…நான் மசூதிக்கு வெளியில், பரேல்விக்காரருகாகக் காத்துக் கொண்டிருந்தேன்.
மசூதியிலிருந்து அயர்வுடன் வெளிவந்த அவருடன் தீவிரமான முகபாவத்துடன் கூடிய ஒரு இளைஞன். பரேல்விக்காரர் மேல் நோக்கிக் கைகளை விரித்து, ‘கடவுள் உன்னைக் காப்பாற்றுவானாக’ என்று என்னிடம் சொன்னார். பொதுவாகச் சொன்னார் என்று நினைத்துவிட்டேன்; அது தவறு.
அவன் ஒரு பாண்டிச்சேரி இளைஞன்; இளம் தாடி; விலை அதிகமான உடை, ஷூ; வேலூர் பக்கத்தில் நயம்விலையில் எஞ்சினீயரீங் பட்டங்களை விற்கும் கடையில் ஒரு சுரைக்காயப் படிப்பைப் படித்துவிட்டு, பின்னர் பெங்களூரில் சராசரித்தன ஐடி (=தகவல்(!)தொழில்(!!)நுட்பம்(!!!)) குமாஸ்தாவாக வேலை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில். ஆகவே, ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான். ஒரே மட்டையடியான கருத்துகள்; ஒரு சுக்கும் தெரியவில்லையானாலும், தர்க்கரீதியான சிந்தனை ஒன்றுகூட இல்லையென்றாலும் அப்படியொரு சுய நம்பிக்கை…
…அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்கக் கைக்கூலிகள், அமெரிக்க ஏஜென்டுகள், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களை ஒழிக்கவேண்டும்; இன்னொரு கிலாஃபத் இயக்கம்தேவை; இந்தியாவில் முஸ்லீம்களுக்கு உயிர்வாழ்வதிலேயே ஏகப் பிரச்சினைகள், பயங்கள்; இந்திய -அமெரிக்க – யூத சதியால்தான் உலகத்து முஸ்லீம்களுக்கு அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவாகாரர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள்; இந்தக் கொலைகாரர்களை எதிர்கொள்ள, வேறு வழியேயில்லாமல் முஸ்லீம்கள் வன்முறைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்! … … டட்டடா… டட்டடா…
ஏற்கனவே அயர்வில் இருந்த நான், பேச்சை மாற்றுவதற்காக – தம்பி, நீங்கள் போட்டுக்கொண்டிருக்கும் ஜீன்ஸ் அழகாகவே இருக்கிறது, உங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்றேன். அவன் பதிலுக்கு, ‘அது லீ-வைஸ்! ஒரிஜினல்! அமெரிக்காவில் போனமாதம் வாங்கினேன்!‘ என்றான், மிகப் பெருமையாக! பரேல்விகாரர் தன்னுடைய சிரிப்பை, இருமலாக மாற்றிக்கொண்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார். நானும் புரிந்துகொண்டு, இந்தக் கோமாளி இளைஞன் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.
அந்தப் பையன் – காப்பிக்கடை வரை எங்களை துரத்திக்கொண்டு வந்து பலப்பல திடுக்கிடும் செய்திகளைச் சொன்னான்; அவற்றில் சில: அரேபிய, மத்தியதரைக்கடல் நாடுகளின் பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் அமெரிக்க-யூத சதியே; அமெரிக்க ஸிஐஏ, எப்படி ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு நேரடியாகவே பண உதவி செய்கிறது; ஆர்எஸ்எஸ் களப்பணியாளர்களுக்கு இந்திய ரா நிறுவனம் கொடுக்கும் ஆயுதப் பயிற்சி(!); (நரேந்த்ர) மோதி தன் சொந்தக் கையால் டஜன் கணக்கில் கொன்ற முஸ்லீம் குழந்தைகள்; இஸ்லாமை எதிர்ப்பதற்காக ஸிஐஏ எப்படி சோ-வுக்கும் குருமூர்த்திக்கும் மாதாமாதம் பணம் அளிக்கிறது; மும்பய் வெடிகுண்டுகளை எப்படி முஸ்லீம்வேடமணிந்த ஹிந்துக்கள் வெடித்தார்கள்; கஸப் ஒரு ரா ஏஜென்ட்; தாவூத் இப்ராஹீமின் இந்திய தேசபக்தி; 9/11 ஒரு யூத-அமெரிக்க நாடகம்… … ஒர்ரே சதிவலை, சூட்சுமங்கள், துரோகங்கள், கமுக்கங்கள் என விரிந்த அபத்தமான கட்டுக்கதைகள்…. நம்பவே முடியாத அசட்டுத்தனம், வேறென்ன சொல்ல. :-(
… பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பின், நான் தப்பித்தால் போதுமென்று, பரேல்விக்காரரை என் மோட்டர்ஸைக்கிள் பின்னிருக்கையில் அமரச் செய்து ஓடியேவிட்டேன்.
அவர் விடுதிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்:
1. இந்த இளைஞனின் மன/எண்ணப் பிறழ்வுகள் ஏதோ ஒருவனிடம் மட்டுமே இருக்கும் பிரச்சினைகள் அல்ல; முஸ்லீம் இளைஞர்கள் பெரும்பாலும் இப்படி எண்ணுவதற்குத்தான், நேரடியாகவும்-மறைமுகமாகவும் பயிற்சி கொடுக்கப் படுகிறார்கள்; அவர்கள் பார்வையில் அவர்களிடம் ஒரு பிரச்சினை கூட இல்லை – எல்லாம் வெளியாட்களால் ஏற்படுத்தப் படுவதுதான்! அதாவது – இவர்கள் ஒன்றுமறியாத பாவப்பட்ட மக்களாக, அமைதியாக வாயில் விரலைப் போட்டுச் சூப்பிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கும்போது வெளியாட்கள் சதிசெய்து வன்முறைகளைத் தூண்டுகிறார்கள் – எனும் அதீதக் கற்பனையைக் கேள்வியே கேட்காமல் நம்புகிறார்கள்!
2. அந்த பெருந்தொப்பைக்காரர் விட்ட/விடும் குசுக்களுக்குமேகூட – இவர்கள் அமெரிக்க-ஹிந்துத்துவ-யூத சதியைத்தான் காரணமாகக் காண்பிப்பார்கள். சுயசிந்தனையற்ற இவர்களைத் திருத்தவேமுடியாது, அவர்களுடைய பயிற்சி அப்படி; ஏனெனில் – அவர்கள் தலைமை, கயமைவாதிகளால், சுயநலப் பழமைவாதிகளால் நிரப்பப்பட்டது.
… பரேல்விக்காரர் சொன்னவற்றைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வரவில்லை. அவரும், நான் சிரிப்பதற்காக இரண்டாவதைச் சொல்லவில்லை. ஒரே இறுக்கம்…
நடைமுறை இந்திய இஸ்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அதன் இளைஞர்களுக்கு எம்மாதிரி பயிற்சி கொடுக்கப் படுகிறது?
September 7, 2015 at 17:16
முதலில் வழக்கம் போல சிரிப்பாய் சிரித்தாலும் முடிவில் அந்த நிகழ்வு அமைதியாக யோசிக்க வைத்தது. நாம் யோசித்து என்ன பயன்…???
September 7, 2015 at 22:44
ராமசாமி அவர்களே ,
உண்மையிலேயே இந்த அர்த்தராத்திரியில் வீட்டில் பேய்சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கிறேன். அந்த பெரியவருக்கு என் சிரம் தாழ்ந்த நமாஸ்காரங்களைத் தெரிவியுங்கள். இப்படியான மனிதர்களை அரிய உயிரினங்கள் பட்டியலில் வைக்கவேண்டும். 80 களில் கொஞ்சம் அதிகம் தென்பட்ட இந்த மனித இனப் பிரிவு இப்போது மிக அருகி வரும் உயிரினப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அவரது இரண்டாம் கமெண்டுக்கு சிரித்து, சிரித்து கண்ணில் நீர் கொட்டுகிறது. ஆனால் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் துணிச்சலாக காபியைக் குடித்த உமது மனத்திண்மையை பாராட்ட நினைத்தேன். உம்மினும் உயர்ந்த அவரது மனைவியை நினைத்து உமக்கான பாராட்டை குறைத்துக் கொள்கிறேன்.
அன்புடனும், சிரிப்புடனும்,
ராஜகோபாலன் ஜா, சென்னை
September 8, 2015 at 09:42
//…நமாஸ்காரங்களைத்…
:-)
September 8, 2015 at 04:58
தொழுகைக்கு பின் இந்த போதனைகள் செய்யப் படுகின்றதோ ?
September 8, 2015 at 09:55
என் அனுபவத்தில்
பொதுவாக, தொழுகைக்கு (இதில் 2-4 சுழற்சிச் சடங்குகள் இருக்கலாம்) முன்பாக இரண்டு ‘உரைகளை’ (பேருரைகள் அல்ல; சிற்றுரைகள்தாம்!) இமாம் நிகழ்த்துவார். அதில் ஒன்று கொர்-ஆன், ஹடீத்கள் தொடர்பானதாகவும் இன்னொன்று லௌகீக வாழ்க்கை பற்றிய, அன்றைய உரையாடல்களமான செய்தியாக இருக்கும்; சிலசமயம் கிருபானந்தவாரியார் வகை இமாமியத் உரைகளைக் கூட நான் கேட்டிருக்கிறேன். இவற்றினால், பிறருடன் தொழுகையறையிலேயே வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன்கூட! (பலர் நினைப்பதுபோல் இமாமியத்கள், எப்போதுமே கடுமையோ இறுக்கத்தையோ கொண்டவையல்ல!)
அதேசமயம் – இந்த உரைகளில் சிலசமயங்களில் இனம்புரியாத வெறுப்பு உமிழப்படுவதையும், அதன் உச்சாடனத்தால் தொழுகைக்கூட்டம் அசமன நிலையை அடைவதையும் கண்டிருக்கிறேன்.
இமாம்களின் படிப்பறிவையும், பரந்த மனப்பான்மையையும், உலக அனுபவங்களையும் – அங்கு கூடியுள்ள சமுதாயத்தையும் பொறுத்த விஷயம் இது.
September 8, 2015 at 18:24
Regarding “gas” there is a fatwa.
September 8, 2015 at 18:29
Sir?