என் செல்ல எஸ்.ராமகிருஷ்ணன், டெம்ப்லேட் கோவணம் – மற்றபடி சீமான், பம்ப்கின், மணிரத்னம், ரஹ்மான், கேபி சார்கள் கூட்டணி: சில சோகங்கள்
April 13, 2015
சரி.
இப்படி ஒரு கேள்வி: கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
இப்படி ஒரு எஸ்ராவிய பதில்: கோவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு கழுதையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த கழுதை , யாருடைய கழுதை, ஏன் இக்கழுதை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு கழுதையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையிலான தொடர்பு. கோவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.
ஆதாரம்: எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் ஒன்றின் ஒரு கடைசி பத்தி தான் மேற்கண்டதற்கு டெம்ப்லேட்!
கீழே இருக்கும் இதுதான் பத்திதான் அது.
ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
ஆவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு குதிரையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த குதிரை, யாருடைய குதிரை, ஏன் இக்குதிரை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு குதிரையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையிலான தொடர்பு. ஆவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.
கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன், எப்படித்தான் இந்த கோணல்காணல்-நேர்காணலைச் செய்தாரோ, பாவம். நானாக இருந்தால், நடுவில் சுருண்டு உருண்டு சிரிப்பாகச் சிரித்திருப்பேன். கவிஞர் ஒரு பொறுமைபூஷணமாகத்தான் இருக்கவேண்டும், பாவம்!
-0-0-0-0-0-0-0-0-
எதைப் பார்த்தாலும் – சுற்றிச் சுற்றிக் கும்மியடித்து, இந்த ஏன் எதற்கு எப்படி யாரால் என, ஆனானப்பட்ட கேள்விகளுக்கே வந்துவிட்டு, டெம்ப்லேட் நெகிழ்வு கேள்வி ஞான -ஆன்ம பரிசோதனை செய்ய வைத்துவிடுகிறாரே இந்த எஸ்.ரா!
இவருக்குச் சகமனிதர்கள் மேல், என்னைப் போன்ற அவருடைய தளரா வாசகர்கள்பேரில் கொஞ்சம் கூட இரக்கமோ கருணையோ கிடையாதா?
சரி. :-(
கோவணம் என்றால் என்ன? அது எங்கிருந்து வந்த பருத்தியால் நெய்யப்பட்டது? எங்கெல்லாம் அது சஞ்சாரம் செய்தது? அது மௌனமாக ஏன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது? நான் போட்டுக்கொண்டிருப்பது யாருடைய கோவணம்?
எனக்கும் கோவணத்திற்கும் என்ன தொடர்பு?
எவற்றின் நடனமாடும் கோவணங்கள் நாம்?
ஆ! (ஆனால், ஆவணக்கோவணத்தினுள் பொதிந்திருக்கும் புடைப்பு பற்றிப் பேச, எனக்கே வெட்கமாக இருக்கிறது, மன்னிக்கவும்!)

ஒரு கோவணக் கவர்ச்சிப் படம். விக்கிபீடியாவிலிருந்து. நான் இவனில்லை. எனக்குத் தொப்பையில்லை – புஜபல பராக்கிரமும் அதிகம். தொளதொளவென்று பரிதாபமாகத் தொங்கும் சதை எனக்குக் கிடையாது. மேலும் எனக்குப் பிடித்த கோவண ப்ரேண்ட் பூமர்! நான் மைனர் செய்ன் அணிவதில்லை. நான் மேஜர். ஐ யாம் மேஜர் சுந்தர்ராஜன். மன்னிக்கவும்.
… என்னுடைய என்னைப் பற்றிய கேள்விகளை என் கோவணம் ஆவணப்படுத்த நினைக்கிறது. படைப்பின் எழுச்சியை நெகிழ்ச்சியாய் உருவாக்கித் தனிமையில் இனிமை காண்கிறது. இனிமேல், காலத்தின் மவுனத்தில் தேசாந்திரியாய்த் துணையெழுத்துடன் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கப் போகிறேன். வேறு வழியில்லை.
…நான் யார்? எந்தக் காலத்தில் இருப்பவன்? எதற்காக எஸ்.ராவலைப் படிக்கிறேன்? ஏன் அதனை மறுபடியும் மறுபடியும் படித்து இறக்கிறேன்? ஒரே சோகமாக இருக்கிறது.
எங்கள் குடும்ப மருத்துவர், என் சொந்தக்காரர்களுக்குச் சொல்லியனுப்பச் சொல்லிவிட்டார்.
குத்துவிளக்கின் தீபம் அலைக்கழிக்கப்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறது. தொலைதூரத்தில் நாயொன்று ஊளையிடுகின்றது. ஆந்தை பக்கவாத்தியம். சித்தார் டொய்ங் டொய்ங்… கேபாலச்சந்தர் சார், கட் சொல்கிறார். பேக்அப்.
——(((((0))))——
ஒரு விளம்பர இடைவேளை
நுரை பொங்கி வழியும், புத்தம்புதிய இனமானப் ப்ரின்டில், தொப்புள்கொடியுறவுச் சோப்பு விளம்பரம் – இயக்கம்: நான் ‘சீமான்’ தமிழன்.
ஸ்ரீலங்கா தமிழர்கள் இவரை, வெகுதூரத்தில் பார்த்துவிட்டு, மனம் பேதலித்து, அடிவயிற்றுக் கலக்கத்துடன் பின்னங்கால் பிடறியில் படத் தப்பித்து ஓடினாலும், தொடர்ந்து இன்னமும் விரைவாக ஓடி அவர்களைப் பிடித்துக் கட்டிப்போட்டு, அவர்கள் முகத்தின் மேல் எச்சில் நுரை தெறிக்கப்பேசி, நீங்கள் விடுதலை பெற வேண்டும், சிங்களவனைச் சிங்கிளாக உதைக்கவேண்டும் – தமிழகத்தில் உசுப்பேற்றும் ஏகபோக குத்தகையை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் — எனப் பேசுவதுதான் இந்த விளம்பரத்தின் க்ளைமேக்ஸ்! (இந்தத் தொப்புள்கொடிச் சனியின் நீளம் அதிகபட்சம் ரெண்டு அடிதானாமே! ஆனால் ராமேஸ்வரத்திலிருந்து ஈழத்துத் தலைமன்னார் கூட ஐம்பது கிலோமீட்டர் தூரமா! அட முருகனே! எம் பாட்டனே! அய்யோ! நானும் ஒரு ஆணாமே! ஆகவே எப்படியும் நான் தொப்புள்கொடியைத் தயாரிக்க முடியாதாமே! அய்யகோ! எப்படித்தான் நான் இந்தக் கொடியுறவைச் சமைத்து, சாவகாசமாக ஈழத்தின் குருதியில் பிரபாகரனின் ஆட்சியை மலரச் செய்வேன்! :-(( அட என் பூட்டனே! )
——(((((0))))——
ஓயாத ஓங்கி ஒலிக்கும் பின்னணி சப்தமாக ஏஈஸ் ரஹ்மானின் இறக்குமதி; இடையிடையே – ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆவணியில் அது அடங்காதுடா என்று விஜயராஜேந்தர் சார் கரடியாகக் கத்துகிறார்.
நாளை அடுத்த ஸீன். டைரக்டர் பம்ப்கின் சார் கைவண்ணத்தில். இந்த தடவை, அது ஒரு மங்கோலியப் படத்திலிருந்து சுடச்சுட; சென்னையில் கிடைக்கும் அதன் திருட்டு டிவிடிக்களை எல்லாம் அவரே மொத்தமாக வாங்கிவிட்டார் – இந்த தடவை எந்தக் கொம்பன், எப்படி அவர் புடைப்புத் திறனைக் கேள்வி கேட்கிறான் என்று பார்த்து விடலாம். சோட்டா விமர்சகர்களை ஒழிக்கவேண்டும்.
——(((((0))))——
படத்தின் ப்ரொமோ/டீஸர் – இயக்கம்: மணி ரத்னம்.
பின்புலத்தில் ரஹ்மானின் வேய்ங்குழல் இசை, அண்மைய ஜப்பானியஇறக்குமதி – உச்ச்ச்ச ஸ்தாயியில், க்க்க்குக்க்கூஊஊஊஊ எனச் சோகமாக. பனிமூட்டத்திற்கு நடுவில் டொமுக்கு டொமுக்கு ஆப்பிரிக்கப் பறைகள். திபெத்திய காங்குகளின் இழுக்கும் ஓசை, ஹேன்ஸ் ட்ஸிம்மர் உபயம்.
ராஜஸ்தானிய பாலைவனத்தில் அடர்ந்த பனிப்பொழிவில் சிலிர்க்கும் ஒட்டகங்கள். அங்குள்ள அருவிகளின் எழில் கொஞ்சும் காட்சிகள். நடுவில் வண்ணவண்ணமாக நம்மூர் மாட்டு வண்டிகள். இலவச இணைப்பாக, மழையில் நனையும் கதைமாந்தர்கள்.
நாயகன்: வேண்டாம். எனக்கு வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம்.
நாயகி: பிடிக்கல. எனக்குப் பிடிக்கல. எனக்கு எதுவுமே பிடிக்கல.
நீங்கள்: போதும். எனக்குப் போதும். எனக்கு எல்லாமே போதும்.
நான்: ஓடுங்கடா. நீங்க ஓடுங்கடா. நீங்க எல்லாருமே ஓடுங்கடா.
(மன்னிக்கவும். இது ப்ரொமோ மட்டுமே! மிச்சத்தை வெள்ளித் திரையிலோ அல்லது எழவெத்த சனித் திரையிலோ, எக்கேடோ கெட்டுப்போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!)
——(((((0))))——
… ஆனால், அதற்கு முன்… அய்யய்யோ, தூங்கிவிட்டேனா? :-(
எழுத்தாளனான(!) எனக்கு, என் துணைப்பொருட்களைத் துவைத்துப்போடவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
எவ்வளவு நாட்களுக்குத்தான் ஒருவன், ஒரே டெம்ப்லேட் கோவணத்தைக் கட்டிக்கொண்டு அலையமுடியும் சொல்லுங்கள்? அழுக்குப் பூமருடன் சேர்ந்த நானும் மணப்பேனா என்ன? நாறுவேன் தானே?? :-(
ஆகவே… நன்றி, மீண்டும் வருக.
அன்புடன்:
கோவணாந்திரி.
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )