கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள்
April 9, 2015
(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)
முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)
-0-0-0-0-0-
… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.
“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
“அதே சமயம், இந்த ஆண்களைப் பாருங்கள் – வெட்கமேயில்லாமல், சுகமாக எளிமையான வெள்ளையுடைகளில், சட்டை பட்டன்களைத் திறந்து விட்டுக்கொண்டு நடமாடுகிறார்கள்! அவர்கள் குழந்தைகளுக்குக் காலில் செருப்புகூட இல்லை, அழுக்கிலும் குப்பையிலும் இழுத்துக்கொண்டு செல்கிறார்கள் – ஆனால் தந்தைகள், தம் குடும்பத்தினரின், தம் குழந்தையின் அவல நிலையைப் பற்றிய பிரக்ஞையேயில்லாமல், ஷூ போட்டுக்கொண்டு நடக்கிறார்கள்!”
“எங்கள் ஊரில், இது செல்லாது. ஏனெனில் எங்களுடைய பிகெகெ, பெண்களை சகமனிதர்களாக உண்மையாகவே மதிக்கும் கட்சி, வெறும் கொர்ரானை, கார்ல் மார்க்ஸை வைத்துக்கொண்டு பம்மாத்து செய்யாதது! குழந்தைகளுக்கும் உரிய மரியாதை கொடுத்து அவர்களை அன்புடன் அரவணைக்கும், எங்கள் கர்டிஸ்தான்!”
… இச்சமயம் – நாங்கள் புதுச்சேரியின் வடக்குப்பகுதியில் தமிழகத்தின் எல்லையில் இருக்கும் கோட்டக்குப்பத்தை, என் மோட்டர்ஸைக்கிளில் (அவர் ஓட்ட, நான் பின்இருக்கையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு) தாண்டிக் கொண்டிருந்தோம், இப்பகுதியில் முஸ்லீம்கள் நிறைய வசிக்கிறார்கள்; யோசிக்கிறேன் – இப்பகுதியில், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில், நான் பார்க்கப் பார்க்கவே – பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஹிஜாப் – மணமானவர்களுக்கு (அவர்கள் சிறுமிகளே ஆயினும்), வயதானவர்களுக்குக் கண்டிப்பாகக் கறுப்புப் பர்தா என ஏகோபித்த மாற்றங்கள்… ஏனிப்படியாகிறது? எந்தவொரு சமூகமும் தொடர்ந்து தங்களை மேலெழுப்பிக்கொண்டு, செறிவு படுத்திக்கொண்டு முன்னேறவேண்டாமா?
பழமையை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை இழிவாகச் சொல்லவில்லை – ஆனால், தற்காலத்திற்கேற்ப அவற்றின் கசண்டுகளை நீக்கி, எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செல்லவேண்டாமா? ஏன் பழமையின் இருட்குகைகளில் – அதிலும் ஆத்மார்த்தமாக அல்ல, வெறும் குறியீடுகளை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு சுணங்கிப் போகவேண்டும்?
சுட்டிக் காட்டப்படும் விஷயத்தையே கருத்தில் கொள்ளாமல், சுட்டும் சுட்டி விரலைமட்டுமே பார்த்து ஜெபித்து, அந்த உயர்த்தப்பட்ட சுண்டுவிரலுக்காகவேனும் ஒண்ணுக்கு அடித்தல் என்பதில் – இதுதான் என் மதம் என்பதில், ஏதாவது, ஒரு சுக்குக்காவது பரிணாம வளர்ச்சியிருக்கிறதா, சொல்லுங்கள்?
ஹ்ம்ம்… கேள்விகள் கேட்கப்படுவது சுலபம்தான் – ஆனால், அது நிச்சயம் மகாமகோ அவசியம், சமனமான பதில்கள் பெறுவது கடினமென்றாலும்…
-0-0-0-0-0-0-0-0-
கில்யஸ் அவர்களின், இந்திய முஸ்லீம்களின் கற்பனைப் பயங்களைக் குறித்த பெருமளவு நியாயமான நெற்றியடிக் கருத்துகள், சில எள்ளல்கள், இந்திய இஸ்லாம் பற்றிய அடிப்படைப் புரிதல்களில் சில – கீழ்கண்டவை எங்கள் உரையாடலின் சாராம்சம் (பல படிப்பறிவு பெற்ற முஸ்லீம்களை நண்பர்களாகப் பெற்றுள்ள, இவைகளைப் பற்றி அவர்களுடன் உரையாடியுமுள்ள நான் – இவற்றுடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்):
- “இவர்களை, அடிப்படை மனிதஉரிமைகளேயற்ற ஸவூதிஅரேபியாவுக்கோ, இரானுக்கோ அனுப்பினால் – சுவற்றில் அடித்த பந்துபோலத் திரும்பி துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்துவிடுவார்கள்!”
- “இவர்களுக்கெல்லாம், இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் ஒற்றைப்படை அதிகார அமைப்பு, அடிப்படை வன்முறை பற்றி, அன்றாட வாழ்க்கையின், உயிர் தரித்தலே கேள்விக்குள்ளாக்கப்படும் அவல நிலை பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதால், பரப்புரைகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.”
- “இஸ்லாமை இமாம்-முல்லா-உலீமாக்களிடமிருந்து பிடுங்கி, முஸ்லீம்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும்!”
- “அடிப்படைவாத இஸ்லாம், தாங்கள் சிறுபான்மையாக இருக்கும்போது மற்றவர்களிடமிருந்து-அரசுகளிடமிருந்து சலுகைகளையும், அதீதக் கருணையையும், கொடைகளையும் எதிர்பார்க்கும்; அழுத்தம் கொடுத்து, முறையிட்டு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும். ஆனால் அதே அடிப்படைவாத இஸ்லாம் பெரும்பான்மையாகும்போது மற்றவர்களுக்குச் சலுகைகளைக் கொடுப்பதையே விடுங்கள், அவர்களை இரக்கமில்லாமல் அழித்தொழிக்கும் – தங்கள் பிரிவைச் சாராத முஸ்லீம்களையும் கூட! இதுதான் பயங்கரவாதத்தின் இஸ்லாமிய ஸ்டைல்!”
- “இந்த மதவெறிவாதத்தின் இஸ்லாமிய எடிஷனுக்கு – இந்தப் பொதுவிதிக்கு, விலக்குகளேயில்லை – எங்கள் கர்டிஸ்தான் தவிர. ஆனால் எங்கள் தேசம், ஒரு ஜனநாயக தேசம், வெறும் இஸ்லாமிய நாடல்ல!”

இரானிய கர்ட்களின் புத்தாண்டு போன்ற (நவ்ரோஸ், நியூரோஸ்), யூதர்களின் பாஸ்ஸோவர் போன்ற கொண்டாட்டம் – ஆனால், பொதுவாக 21 மார்ச் அன்று கொண்டாடப் படுவது – 21/03/2015 புகைப்படம் – இந்த, கர்ட் இளைஞரின் ட்விட்டர் பக்கத்திலிருந்து.
- “இஸ்லாமிக்ஸ்டேட் உதிரிகள் பிறழ்வுகள் அல்லர். அவர்களுடைய அடிப்படை இஸ்லாம் அப்படித்தான். உங்கள் இந்திய முஸ்லீம்களிலும் இப்படிப்பட்ட போக்கு ஏற்பட்டுவருகிறதுதானே?”
- “பெண்களை மதிக்காத இஸ்லாம், உருப்படாது. வாய் கிழிய பெரிய பேச்சு பேசி, இஸ்லாமை என்னதான் உயர்த்திப் பிடித்தாலும் – தன் சகமனுஷிகளை வெறுக்கும், அற்பமாக மதிக்கும் ஆண்களாலான இஸ்லாம், நவீனமாகும் என்கிறீர்கள்? ஆகாது. அது இருட்டுக் காலங்களுக்குத் தான் இட்டுச்செல்லும்!”
- “முஸ்லீம்களுக்கு, இஸ்லாம்வாதம் அல்லாத படிப்பறிவு கிடைக்கப்பெறுவது மிக முக்கியம்.”
- “முஸ்லீம்களின் பெரும்பாலான தலைவர்கள், முஸ்லீம்களின் நல்வாழ்வின் எதிரிகள்.”
- “பெரும்பாலும் – முஸ்லீம்களுக்கான அரசியல் தலைமையும் மதத் தலைமையும் ஒன்றிணைந்து இருக்கின்றன. இது மோசம். எங்கள் நாட்டில் அப்படியில்லை. உங்கள் தில்லி இமாம் போல, ஒரு மதபோதகரும் எங்களை இவர்களுக்கு ஒட்டுப் போடு அல்லது போடாதே எனச் சொல்லமுடியாது. எங்கள் நாட்டில், மதத்துக்கென்று வரையறைகள் இருக்கின்றன. உங்கள் நாட்டு முஸ்லீம் தலைவர்கள் தங்கள் பேச்சுரிமையை, அடிப்படை உரிமைகளைத் தவறாகப் பிரயோகிக்கிறார்கள். உங்கள் நாட்டில் நான் பேசிய பலருக்கும் இமாம் பற்றித் தெரிந்திருக்கிறது – அனால் வஹீதுத்தீன் கான் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. இது சோகம். இப்படிப் பிரிவினை செய்தால், ஜனநாயகத்தைத் திரித்தால், நீண்டகால நோக்கில் இது முஸ்லீம்களுக்கு எதிராகத்தானே முடியும்?”
- “முஸ்லீம்கள் வெறுமனே ஒன்றையும் புரிந்துகொள்ளாமல், அரபி மொழியில் உச்சாடனம் செய்வதையும், அந்தக் காலத்துச் சமூகச் சூழலில் போட்டிருந்த உடைகளை அணிவதையும், பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதையும் — இதையெல்லாம் எப்படி சமூகமேன்மை/வளர்ச்சியென்று சொல்கிறார்கள்? சாதாரண முஸ்லீம்களை அறியாமையிலும் ஏழ்மையிலும் வைத்து, சில்லறைக் காசுகளை விட்டெறிந்து மதவெறியில் சிக்கவைத்து, அவர்களை தீவிரத் திரள் படுத்துவதுதானே, அவர்களைத் தங்களுடைய சாத்தானிய திட்டங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதுதானே – இஸ்லாமிய அடிப்படைவாத போக்கிரித் தலைவர்களின் நோக்கம்?”
- “முஸ்லீம்களில் நடுத்தரவர்க்கத்தினர் வளர்ச்சியடைந்தால், அவர்கள் தலைமைக்கு வந்தால், எல்லாம் சரியாகிவிடும், முன்னேறிவிடுவர்; ஆனால் இப்போது இருப்பது – பணக்கார சுயகாரியப்புலிகளின் அடிப்படை வாதிகளின் தலைமை, கீழே கிடந்து உழலும் சாதாரணர்களின் பின்பற்றுதல்; இந்த நிலை மாற, கல்வி ஒன்றே வழி, மதமார்க்கமல்ல! கல்வியால்தான் ஒரு புதிய மத்தியதரவர்க்கம் மேலெழும்பும்!”
- “மேக்ஸ் வெபர் க்றிஸ்தவப் பின்னணியில் சொன்னதுபோல் – செயலூக்கமும் தொழில்முனைப்பும் கொண்ட ஒரு ப்ரொடெஸ்டென்ட் பிரிவு முன்னேறி, மத்தியவர்க்கத்தை உருவாக்க வேண்டும் – அப்படிப்பட்ட எழுச்சியை தாவூதி போஹ்ராக்களிடமும், அஹ்மெதியாக்களிடமும் நான் பார்க்கிறேன்.”
- இங்குள்ள பிற முஸ்லீம்களில், முக்கியமாக ஸுன்னிகளில், படிப்பறிவு பெற்ற மத்தியதரவர்க்கத்தினர் எங்கே? அவர்களுடைய ஈடுபாடில்லாமல், வளர்த்தெடுத்தல் இல்லாமல், தலைமையில்லாமல் இஸ்லாம் சுணங்கிப்போகும். எந்தவொரு மக்கள் திரளிலும் இவர்கள்தாம் சமூக மாற்றங்களுக்கான உந்துதல்கள் அல்லவா?
- ஆனால், உங்கள் ஊரில், படிப்பறிவு பெற்ற முஸ்லீம்கள், மத்தியவர்க்கத்தினர் – அவர்களுடைய சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறார்களோ? ஏனிப்படியாகிறது? இவர்கள் விலகிக் கொண்டால், அந்த இடத்தில் மதவெறிவாதிகள்தானே திடமாக உட்கார்ந்துவிடுவார்கள்? எங்கள் கர்டிஸ்தானில் நடப்பது, இங்கு நடக்கமுடியாதா என்ன? இவர்களுக்குச் செயலூக்கமில்லையா?
- “கொர்-ரானிய இஸ்லாமின் அடிப்படை முரண்பாடுகளை, அதிலுள்ள முரணியக்கங்களை – தெளிய வரலாற்றுப் பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டும், பின்னர் இக்காலங்களுக்கான புதிய, பன்முக இஸ்லாமை வளர்த்தெடுக்க வேண்டும்.”
- “மதராஸாக்களில் வெறுப்பியத்தைப் புகட்டப்படும் இளைஞர்களை விடுவித்து, அவர்களுக்குச் சரியான கல்வி புகட்டப் படவேண்டும்” (இவர் இந்தியாவில், 50க்கும்மேற்பட்ட மதராஸாக்களுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவற்றில் ஒரேயொரு (குஜராத்தில் அல்லது மஹாராஷ்ட்ராவில் இருக்கும்?) மதராஸா மட்டும்தான் சரியான, மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வியைப் புகட்டுகிறது என்றார்; மற்றவையெல்லாம் பழமைவாத அமைப்புகள், முஸ்லீம்களை மற்றவர்களுடன் ஒத்திசையாமல் போகச் செய்பவை என்றார்; ஆனால், அவர் சொன்ன அந்த விதிவிலக்கின் பெயரை நான் மறந்துவிட்டேன். :-()
- “எங்கள் நாட்டில் மதறாஸாக்கள், அவை இருக்கும் பகுதிகளினால்/சுற்றுவட்டாரத்தினரால் பராமரிக்கப் படுபவை. கருணை மிக்கவை. மதபோதனை இவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் என்றாலும், மற்ற பல விஷயங்கள் – ஆங்கிலம்+ஃப்ரெஞ்ச்+டர்கிக் மொழிகள் உட்பட கற்றுத் தரப் படுகின்றன. இசையும் நாட்டியமும் அறிவியலும் கணிநியியலும் கூட! எங்களுடையது பன்முக இஸ்லாம். மானுட மேன்மைகளுக்கான, நுண்ணறிவு ஊட்டுதலுக்கான எதுவுமே ஹராம் இல்லை!”
- “ஆனால், உங்கள் நாட்டில், பெரும்பாலான மதறாஸாக்களும், மஸ்ஜித்களும் வெளி நாட்டாரிடம் பிச்சையெடுத்துதான் கட்டப் பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து ஆச்சரியப் பட்டேன். இப்படி வளர்க்கப் படும் இஸ்லாம், இந்தியாவுக்கேற்ற இஸ்லாமாக எப்படி இருக்க முடியும்? அது வஹ்ஹாபிய இஸ்லாமாகத்தானே இருக்கும்? ஏன், ஒரு வட்டாரத்தில் இருக்கும் முஸ்லீம் சமூகம், தாங்கள் தங்களிடமிருந்து திரட்டிய நிதியில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொள்ள முடியாதா என்ன?” (அவர் அருகிலிருந்த பறங்கிப்பேட்டை சென்றிருந்தபோது – பழைய இந்தியக் கட்டுமானங்களைக் கொண்டிருந்த மசூதிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, அவற்றின் இடத்தில் பச்சை நிற பளப்பளா ஸெராமிக் வில்லைகளாலான ஒரேமாதிரி மசூதிகளைப் பார்த்திருக்கிறார். இவற்றுக்கு நிதி உள்ளுரில் திரட்டப்படாமல், மலேசிய/இந்தோனேஷிய/ஸவுதிஅரேபிய வெளிநாட்டுப் பிச்சைப்பணம் பெற்றுக் கட்டப்பட்டதாகச் சொன்னார். மேலும் அங்கிருந்த பழைய ஸூஃபி வகையறா சமாதிகளை – அங்கிருந்த இளைஞர்கள் குழாம், மரியாதையில்லாமல் அழைத்தது என்றார் – piNA ch-chAmi என்று அவைகளை அழைத்தது என்று என எனக்குக் காட்டி, அப்படியானால் என்ன என்றார். நான் அது ‘பிணச் சாமி’ என அவருக்குச் சொன்னேன். இதெல்லாம் பன்முக இஸ்லாமை ஒழித்து, அதன் இடத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பாணி ஒற்றைப்படை மலட்டு இஸ்லாமை, கருணையேயில்லாத இஸ்லாமை உட்புகுத்துவதுதானே!)
- “இவர்களுக்கு அரபிக் கல்வி, இஸ்லாமிய தத்துவம் முக்கியமென்றால் – அதன் உச்சங்களான இப்ன் ரஷீத் போன்றவர் உட்பட, கற்றுத் தரவேண்டும்; இப்படிப் போதித்தால், வன்முறை, ஒற்றைப்படை தரிசனம் மீதான குவியம் அகலும்!”
- “தில்லியில் இருக்கும் ஜாமியா மிலியா இஸ்லாமியாவுக்கும், அலிகட் முஸ்லீம் பல்கலைக் கழகத்துக்கும் போனேன்; இம்மாதிரிப் பல்கலைக் கழகங்களை நாங்கள் நடத்தமாட்டோம். எங்களுக்கு, எங்கள் பாரம்பரியங்களைப் பற்றியேகூட, கொர்ரான்+ஹடித்களைப் பற்றியுமேகூட – மறுவாசிப்பும், மறுபரிசீலனையும் தேவை. எங்களுக்குப் பழமைவாதத்தில், முட்டுச் சந்தில் தேங்கிப்போக விருப்பமில்லை.”
- “இவர்கள் ஆவேசப் படாமல், உணர்ச்சிவசப் படாமல் யோசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! இவர்கள் மிகவும் ‘லக்கியாக’ இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.”
- “அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்தால்தான் தெரியும் இவர்களுக்கு, உலகம் என்றால் என்னவென்று!”
- “மற்ற சமூகத்தினர் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும், இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் மற்ற மதங்களின் மேன்மை பற்றியும் சொல்லித்தர வேண்டும். ஆனால், மற்ற மதங்களின் கீழ்மையான அங்கங்களைச் சுட்டும்போது, இஸ்லாமின் கீழ்மையான அங்கங்களையும் சுட்டும் சமனம் வேண்டும்.”
- “அவர்களுக்கு வேண்டுமென்றால், எங்களுடைய பிகெகெ-விடம் இவை அனைத்தும் தொடர்பாக பயிற்சியெடுக்கலாம்! எங்கள் அமைப்பு போல சமதர்ம சமுதாயத்தை வளர்க்க/காக்க முடியுமா?”
- “நாங்கள் வெறும் கம்யூனிஸ்ட்களோ, தீவிரவாதிகளோ, இஸ்லாம் சார்பினர் மட்டுமோ இல்லை – அல்லது ஒரு வெறும் ஒரு கர்ட் தேசத்தை ஆளவோ எத்தனிக்கவில்லை; நாங்கள் புதியதோர் சமதர்ம உலகத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறோம். எப்போதோ மொஹெம்மதையும் மார்க்ஸையும் மாவோ-வையும் தாண்டி விட்டோம்! சந்தேகமிருந்தால், முடிந்தால் வந்து பாருங்கள். எங்களுடையது வெறும் பேச்சல்ல.”
மேற்கண்டதை, பரீட்சையில் மையக்கருத்துகளை எழுதுவது போல எழுதியிருக்கிறேன். ஆனால், இவையெல்லாம் என்னுடைய குறிப்பேடுகளிலிருந்து எடுத்த நினைவுக் குறிப்புகள். இரண்டு வருடங்களாக, இவற்றை எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தேன் – ஆனால் கில்யஸ் இறந்தபின் தான் இதற்கு மோட்சம் கிடைத்திருக்கிறது என்பது சோகம்தான். :-(
“Millennia after the establishment of patriarchy (what I call the “first major sexual rupture”) women were once again dealt a blow from which they are still struggling to recover. I am referring to the intensification of patriarchy through the monotheistic religions.”
மேற்கண்டதன் சாரம்: ஆண்வழிச் சமூகம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது என்பது, பாலியல் ரீதியான முதல் மானுடச் சமூக உடைப்பு; பின்னர் ஒற்றைப்படை/ஒற்றைக்கடவுள் மதங்கள் ஆரம்பித்தபோது இரண்டாம் பாலியல் ரீதியான உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆண்வழிச் சிந்தனைகள் மேலும் இறுக்கம் பெற்றுள்ளன – இவற்றில் இருந்து மீள, இன்னமும் பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்!
— | அப்துல்லாஹ் அஸலன் (பிகெகெ தலைவர்களில் மிகவும் மதிக்கப் படுபவர், இப்போது அமைதிக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்; எனக்குப் பல விதங்களில் நெல்ஸன் மன்டெலாவை நினைவு படுத்துபவர்.) | The Second Major Sexual Rupture |

இந்த க்வாஸி மிஹெம்மத் (1893–1947) ஒரு கர்ட் தலைவர்; அப்போதிருந்த ஒரு கர்ட் அரசின் ஜனாதிபதி. 1946 வாக்கில் இந்த அரசு/நாடு இரானால் ஒழிக்கப் பட்டது; இவர் இரான் அரசினால் 1947ல் ஒரு நாற்சந்தியில் தூக்கிலிடப்பட்டார். , இரண்டு நாட்களுக்கு மேலாக அவர் பிணத்தை நாறடித்துத், தொங்கவிட்டார்கள் – கர்ட் மக்களுக்கு ஒரு பாடமாக…
-0-0-0-0-0-0-0-0-
கில்யஸ் கொல்லப்பட்டது, ஒரு மனத்தை நெகிழ/பிழிய வைக்கும், நிகழ்வு. அவர்மேல் என் மரியாதையைப் பலமடங்கு அதிகப்படுத்திய சோகம். இதைப் பற்றி அடுத்த – மூன்றாம் பகுதிக்கும் நீளவிருக்கும் இந்த வரிசையில்… :-(
கில்யஸ் கிண்டிய நினைவுகளை எழுதிஎழுதி மாளவில்லை எனக்கு. :-((
April 9, 2015 at 11:52
ஒரு அலுப்புக் குறிப்பு: விமர்சனங்கள், தர்க்கரீதியான விவாதங்களை வரவேற்கிறேன்; ஆனால் அரைவேக்காட்டு வசைபாடல்கள், என் மூதாதையரைப் பழித்தல்கள் போன்ற அரைகுறைத்தனங்களைத் தவிர்க்கவும். ஏனெனில், நான் அவற்றைக் கடாசிவிடுவேன் என்பதையும், உங்கள் நேரம் முக்கியமானது என்பதையும், உணரவும்.
என்னை வசைபாடும் நேரத்தில் – மற்றவர்களுக்காகக் கூட இல்லை – உங்கள் சமூகத்துக்கு உதவிகரமாக, அதன் மேன்மைக்காக – ஒரு விஷயத்தையாவது செய்யுங்களேன்! ஒரு கடுகையாவது நகர்த்துங்களேன்!
நன்றி.
அன்புடன்,
காஃபிர் (என நீங்கள் என்னை அழைப்பதில், நானும் என்னை அழைத்துக் கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை! வெள்ளத்தனையது மலர் நீட்டம், அவ்வளவுதான்)
April 9, 2015 at 12:30
Dear Ram,
As usual an Excellent Post..
Some of the problems faced by these kurds seems to resemble tamilians from SriLanka…
whether a sperate tamil eelam is the solution? what’s your take..
(or)
how do you differentiate the calls for independent kurdistan / Free Kashmir / Tamil Eelam?
it will be useful, if you can provide your views..
April 9, 2015 at 13:24
அய்யா முருகன்,
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதக் கூடாதா? இது என்ன ஏதாவது மருத்துவப் படங்களைச் சுருக்கும் வகையறா அல்கரிதமா என்ன, சொல்லுங்கள்?
1) கர்டிஸ்தான், 2) ‘சுதந்திர’ கஷ்மீர், 3) ‘தமிழ்’ ஈழம்
இவைகள் முற்றிலும் வேறுவிதமானவை. அவற்றை இப்படிச் சுருக்கமாகத் தொகுத்துக் கொள்கிறேன்.
அ. 2, 3 முந்தா நாள் மழையினால், நேற்று முளைத்த காளான்கள்; ஆனால் 1 – அதற்குப் பல நூற்றாண்டுப் பாரம்பரியம் இருக்கிறது.
ஆ. 2,3 களில் மற்ற சமூகத்தினருக்கான அரவணைப்பு இல்லை. அழித்தொழித்தலே இருக்கிறது. விரட்டலே இருக்கிறது. 1ல் அப்படி இல்லவேயில்லை.
இ. 2.3 களில், தங்கள் சமூகத்திலேயே ஏகப்பட்ட பிரிவினைகள் – கொலைகள். 1ல், தொடர்ந்து சமரசம் ஏற்பட்டுகொண்டேயிருக்கிறது. சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை தீர்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஈ. 1ல் தொலை நோக்கு இருக்கிறது. திட்டமிடல் இருக்கிறது. தொடர்ந்து மலையுச்சிக் குறிக்கோள்களை நோக்கித் தளராமல் நடைபோடும் நெஞ்சுரம் இருக்கிறது. 2-3களில் முதலில் இடத்தைத் ‘தேத்துவோம்’ பின்னர் பார்ப்போம் என்ற நிலைதான். 2 இதில் படுமோசம்.
உ. 1ல் இருக்கும் ஞானமுள்ள தலைமை, தலைவர்கள் (enligtened leadership) – 2-3களில் இல்லவேயில்லை. 3ல் அவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் – ஆனால் நம் செல்லக் கழிசடையான பிரபாகரன் தயவில், அவர்கள் ஒழிக்கப்பட்டார்கள்.
ஊ. கல்வி, தொழில்முனைவுகள், உள்ளாட்சி அமைப்புகள், வளர்ச்சி, சுபிட்சம், ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம், கொண்டாட்டம் எல்லாம் கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் 1ல் தொடர்ந்து அழகாக இருக்கின்றன. 2க்கு இவற்றைப் பற்றி ஒரு எழவும் தெரியாது. 3ல் இவை சிறிதளவு இருந்தாலும் பொறுக்கிமயமாக்கப் பட்டன.
எ. 2-3 தனி மனிதர்கள், அவர்களுடைய வெறுப்புகள் சார்ந்தவை. 2-3
ஏ. 2-3 எல்லாம் மக்கள் கல்வியறிவு பெற்றால் தகர்ந்துவிடும். ஆகவே அவற்றுக்கு கல்வி மேல் குவியம் கிடையாது; கல்வியகங்களை அழித்தொழிக்கவே முனையும். ஆனால் 1 – கல்வியைப் போற்றிக் கொண்டாடுவது.
ஐ. பெண்கள், மதிப்பு மரியாதை விஷயத்தில் 2-3 பற்றி, சிந்திக்கும் ஒருவருக்கு, வாந்தி தான் வரும். ஆனால் 1 ஜொலிக்கிறது.
ஒ. 2-3 வெளி நாட்டுப் பணத்தையும், தளவாடத்தையும், போதைமருந்துகளையும், கடத்தலையும் நம்பி நடத்தப் படுபவை. ஆனால் 1ல் – பொருளாதாரம் நன்றாகவே இருக்கிறது; தற்போது, இஸ்லாமிக் ஸ்டேட் அரைகுறைகளுடன் நடக்கும் போரில் அவர்கள் வெளியார் உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்றாலும்கூட.
ஔ. 2-3ம் வெளி நாட்டு உதவியில்லாவிட்டால் முழுகிவிடும். அவைகளுக்குச் கொடையாளிச் சூத்திரதாரிகள் இருக்கிறார்கள். அவைகளுக்குப் பரந்துபட்ட மக்களின் அடித்தளமில்லை. வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளும், அவர்களாலான வன்முறையும்தான் இருக்கின்றன. ஆனால் 1ல் – வெளியுதவி இல்லாமலேயே பல நூற்றாண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.
ஃ. 2-3 களுக்குப் பாரம்பரியமும் இல்லை, பண்பாடும் இல்லை, எப்படியும் அவற்றைப் போற்றும் மனப்பான்மையுமில்லை – வெறும் பக்குவப் படுத்தப்பட்ட பொய் அவரலாறுகளும் மயக்கங்களும் உணர்ச்சிக் குவியல்களும்தான். ஆனால் 1ல் – நிலைமையே வேறு. அவர்கள் பண்பாட்டின், அவர்கள் நிலப்பரப்பின் போஷகர்கள்.
இன்னமும் ஐந்தாறு இருக்கின்றன – ஆனால் தமிழில் உயிரெழுத்துகள் 12 தான். என்ன செய்வது சொல்லுங்கள்!
அன்புடன்…
ரா.
April 9, 2015 at 16:49
பல நூற்றாண்டுகளாகப் போராடிவரும் இவர்கள் விஷயத்தில் ஏன் உலகம் தலையிட்டு அவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட நாட்டை உருவாக்கித் தரவில்லை? சுதந்திர நாடு அமைக்கப்படும் வாய்ப்பு நிஜத்தில் எந்த அளவில் உள்ளது?
(ஃ. 2-3 களுக்குப் பாரம்பரியமும் இல்லை, பண்பாடும் இல்லை – என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘கஷ்மீரியத்’ என்பதெல்லாம் வெறும் கற்பனையா என்ன? ஈழத் தமிழர்களுக்குக் கட்டாயம் பாரம்பரியம், பண்பாடு இருப்பதாகவே நினைக்கிறேன்.)
April 9, 2015 at 18:50
அய்யா சரவணன்,
1. இந்த கர்ட் அரசாங்கம் சிலமுறை ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு – துருக்கியாலும் இரானாலும் இராக்காலும் ஒழிக்கப் பட்டிருக்கிறது. இப்போதே கூட, பல பகுதிகளில் கர்ட்கள் தங்களைத் தாங்களேதான் நிர்வகித்துக்கொள்கிறார்கள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அமெரிக்காவில் ரிபப்ளிகன்கள் கெலித்தால் – அதுவும் ரேன்ட் பால் (https://www.randpaul.com/) போன்றவர்கள் வந்தால், இது நிச்சயம், பல நாடுகளின் ஆதரவோடு நடக்கும். என்னுடைய அவா என்னவென்றால், நம் அரசும் இந்த கர்ட்களுக்கு உதவி செய்யவேண்டும். ஏனெனில், இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிகளை எதிர்கொள்ள, எதிர்கொல்ல – கர்ட்கள் தாம் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சகலவுலகம் சார்பாகவும் அந்தப் பதர்களை எதிர்கொள்கிறார்கள்.
2. நான் கஷ்மீரிகளுக்கோ, ஸ்ரீலங்கா வாழ் தமிழர்களுக்கோ இதெல்லாம் இல்லை எனச் சொல்லவில்லை. சிலபல வரையறைகளுக்குள் – அவைகள் தனிப்பட்டு இருக்கின்றனவா என்பதற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்குப் பாரம்பரியம் இருக்கிறதுதான். ஆனால் ‘கஷ்மீரியத்,’ ‘தமிழ்’ ஈழம் என்ற உள்ளீடற்ற பண்பாட்டுச் சொல்லாடல்களெல்லாம் அண்மைக்காலத்தில் – சுமார் 50-70 வருடம் முன்னர் உருவாக்கப் பட்டவையே. நான் இதைத்தான் குறிப்பிட்டேன். இந்தச் சொல்லாடல்-கருத்தாக்கங்களுக்குப் பாரம்பரியம் என ஒன்று இல்லை; அவை அரசியல் உச்சாடனங்கள், அவ்வளவுதான். (இப்போது, நம்முடைய வன்னியர்கள் – அவர்கள் நூற்றாண்டுகாலமாகப் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை வன்னியதேசம் என்று திடீரென்று பிரிக்கக் கோருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்; சுமார் 50 ஆண்டுகளில் ‘வன்னியம்’ என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப் படுகிறது என வைத்துக்கொள்வோம். இதற்கான தமிழ்க் கொச்சை, இலக்கியம், வரலாறு, புவியியல், மரபணுவியல், சடங்குகள், பரிணாமம், தொன்மங்கள் ரீதியான புராணங்கள் உருவாக்கப் படுகின்றன எனவும் வைத்துக்கொள்வோம். அப்போது அவர்களுக்கென்று ஒரு தனி பாரம்பரியம், பண்பாடு எவ்வளவு இருக்கிறதென்றால், ஒரு தனி நாடு கேட்கக் கூடிய அளவுக்கு இருக்கிறது என்பீர்களா? தேசம் தேசியம் இனம் என்றெல்லாம் இலக்கில்லாமல் ஒரு சுற்று சுற்றி வரலாம்.)
நன்றி.
April 10, 2015 at 14:45
// அடிப்படைவாத இஸ்லாம், தாங்கள் சிறுபான்மையாக இருக்கும்போது மற்றவர்களிடமிருந்து-அரசுகளிடமிருந்து சலுகைகளையும், அதீதக் கருணையையும், கொடைகளையும் எதிர்பார்க்கும்; அழுத்தம் கொடுத்து, முறையிட்டு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும். ஆனால் அதே அடிப்படைவாத இஸ்லாம் பெரும்பான்மையாகும்போது மற்றவர்களுக்குச் சலுகைகளைக் கொடுப்பதையே விடுங்கள், அவர்களை இரக்கமில்லாமல் அழித்தொழிக்கும் – தங்கள் பிரிவைச் சாராத முஸ்லீம்களையும் கூட! இதுதான் பயங்கரவா தத்தின் இஸ்லாமிய ஸ்டைல்!”//
குரானில் மூன்று வெவேறு சமய்ங்களில் உதித்த “வஹி” கட்டளைகளின் அடிப்படை எண்ணம் /அணுகுமுறை முற்றிலும் மாறு பட்டவை::: பிற நம்பிக்கை கூட்டத்துடன் சேர்ந்து இருப்போம் -> மனிதர்களில் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை; அனைவரும் சமம் -> பிற நம்பிக்கையினர் நம்முடன் சேர வேண்டும் அதாவது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது ஓடிப்போக வேண்டும் ( அல்லது ஜெஸியா வரி செலுத்தவேண்டும் ) அல்லது செத்தோழிய வேண்டும்.
அதன் நீட்சி தான் முஸ்லிம்ககளிலேயே வேறு பிரிவினரான ஷியாக்கள், ஆஹ்மெதியாக்கள், ஏஜ்டிகள், சூஃபி முஸ்லிம்களை ஷுன்னி முஸ்லிம்கள் ஒடுக்க/அழிக்க/துரத்த நினைப்பது.
April 10, 2015 at 15:04
நடுத்தட்டு முஸ்லிம்களைப் பற்றி அந்த அம்மையார் கருத்து மிகச் சரி. பார்க்கப் போனால், மேல் தட்டு முஸ்லிம்கள் கூட இதில் அடங்குவர் .(இன்னொரு வலைதள பின்னோட்டத்தில் சொல்லப் பட்ட பெயர்கள்: ரஹ்மான், ஜாவேத் அக்தர், பாலிவூட்டின் கான்களிலிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள் இவர்கள் தம் மற்றும் தம் குடும்பப் பாதுகாப்பு என்று சிறிய வட்டத்தில் இருந்து வெளி வராமல் இந்த சோஷலிச ஜனநாயக அமைப்பின் பலன்களை அனைவரும் பெறவேண்டும் என்று கருதி, பொருளாதார மற்றும் சமூக நிலையில் பின்தங்கி உள்ளோரை கல்வியின் பால், முன்னேற்றத்தின் பால் வழி நடத்தாமல் உள்ளனர். குறைந்தது குடும்பக் கட்டுப்பாடு இல்லாவிடில் பொருளாதார மாற்றம் வரவே முடியாது என்ற கருத்துக்களை (காஜிக்களுக்கும், இமாம்களுக்கும் பயந்துகொண்டு ) சொல்லாமை கூட இதில் அடங்கும்.
April 13, 2015 at 13:07
\\ அதன் நீட்சி தான் முஸ்லிம்ககளிலேயே வேறு பிரிவினரான ஷியாக்கள், ஆஹ்மெதியாக்கள், ஏஜ்டிகள், சூஃபி முஸ்லிம்களை ஷுன்னி முஸ்லிம்கள் ஒடுக்க/அழிக்க/துரத்த நினைப்பது.\\
அது ஷுன்னி முஸல்மான்கள் இல்லை. **சுன்னி** முஸல்மான்கள். सुन्नि
**ஏஜ்டிகள்** தப்பு. யஸீதிகள் அல்லது யெஸீதிகள் ……இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் அல்லர். यज़ीदी या येज़ीदी தேவநாகரியில் *ஜ* வுக்குக் கீழ் நுக்தம். அது z ஒலியைக்குறிக்க
**ஆஹ்மெதியாக்கள்** தப்பு. அஹ்மதியா……….अहमदिया
April 15, 2015 at 13:16
Thank you, Mr.Krishnakumar. These errors had been noticed by me, but the transliteration software did not cooperate. I am glad that the readers of this blog look for error-free comments as much as the blog-author. His approach has always been “செய்வன திருந்தச் செய்!” நன்றி