மோதி, சர்வாதிகாரம், ஹிட்லர்: சில குறிப்புகள்
April 7, 2014
தொழில்முறை மோதி வெறுப்பாளர்கள், பொதுவாக — கோத்ரா, 2002, பிணக்குவியல் வகையறா ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மானாவாரியாக வீசியடித்துக் கைவலிக்க ஆரம்பித்தவுடன் — கிளிப்பிள்ளை போல மறுபடியும், மறுபடியும் சொல்வதெல்லாம், அவர் ஒரு சர்வாதிகாரி; மோடி, ஹிட்லரின் ஒரு இந்திய நகல், கோயபல்ஸ்-ஸனைத்த பரப்புரைவாதி, மோதி உட்கட்சி ஜனநாயகத்தை நசுக்குபவர் எனப் பல நைந்துபோன க்லீஷேக்களைத்தான்.
இப்படிப் பேசுபவர்களில் பெரும்பாலோருக்கு கீழ்கண்டவை போன்ற சில அடிப்படை விஷயங்கள் தெரிவதேயில்லை; இத்தனைக்கும், ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் தான், நான் கொடுத்திருக்கிறேன்.
- அதிகாரம் என்றால் என்ன, அவற்றின் பண்புகள், பின்புலச் சூழல்கள் யாவை;
- சர்வாதிகாரம் என்றால் என்ன – அதன் பண்புகள், நடைமுறைகள், ஜனநாயகத்துடன் அதன் உறவுகள் யாவை; இது தொடர்பான வரலாற்றுச் சாட்சியங்கள் யாவை.
- ஹிட்லர் பிரதிநிதித்துவப் படுத்துவது எதனை, எந்த சமூகக் கூறுகள் ஹிட்லரை ஒரு மகாமகோ தலைவராக்கின, பொதுப்புத்திக்கும் ஹிட்லரின் திட்டவட்டமான நடவடிக்கைகளுக்கும் இருந்த உறவுகள் என்ன; கத்தோலிக்கத் திருச்சபைக்கும், ஸ்டாலின் (இவர் நம்முடைய செல்ல இசுடாலிர் அல்லர்) போன்ற கம்யூனிஸத் தலைவர்களுக்கும் ஹிட்லரை அதிகாரமயமாக்கியமையில் பங்கு என்ன.
- ஏன் கீபல்ஸ், கோயபல்ஸ் அல்லர் – கீபல்ஸ் ஒரு வரலாற்று விபத்தா, அல்லது கீபல்ஸ்கள் முன்னமே இருந்திருக்கின்றனரா? இப்போதும் இந்தியாவில் கீபல்ஸ்கள் இருக்கிறார்கள் என்றால் யார் அப்படி? எந்த ஊடகங்கள் இப்படிக் கேவலமாக பரப்புரை (propaganda) செய்கின்றன?
- ஏன் மோதி, ஒரு மோடி அல்லர், மோதி பிரதி நிதித்துவப் படுத்துவது எதனை; இந்திய கீபல்ஸ்கள் ஏன் மோதியைத் தாக்குகிறார்கள்… … …
அடிப்படையில் ஒரு சாதாரண உச்சரிப்பைக் கூடக் கற்றுக் கொள்ளமுடியாத சோம்பேறிக் குளுவான்கள், ஒரு எழவு மூளை உபயோகிப்போ, செறிவுபெற்ற வாழ்க்கை அனுபவங்களுமோ இல்லாதவர்கள், படிப்பறிவு என்றால் லிட்டர் எத்தனை தூரம் என்று கேட்பவர்களெல்லாம், சமூக முன்னேற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் பேசிப்பேசியே, எழுதிஎழுதியே உளறிக் கொட்டுபவர்களெல்லாம் — கனம் வாய்ந்த கந்தறகோளக் கேள்விகளைக் கேட்பதும், மோதி ஒரு வெறியன் என்று சொல்வதும், இந்திய நிதர்சனத்துடன் தொடர்பேயற்ற ஸெக்யுலர்வாதிகளாக மினுக்கிக்கொண்டு உலாவருவதும்… அய்யோ, கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், இப்போக்குகள், படுபயங்கர பீதியளிக்கும் கொடூர கடகடா குடுகுடு வீரப்பா சிரிப்பை மட்டுமே வரவழைக்கின்றன. வேறென்ன சொல்ல.
வீரப்பச் சிரிப்புச் சிரிக்காமல், மேற்கண்டவாறு உளறிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் (இவர் தமிழ் இளைஞரல்ல, நல்லவேளை!), அவர் பேசிக்கொண்டிருக்கும் ‘சர்வாதிகாரம்’ எனும் விஷயத்திற்கு மோதியைத் தவிர ஒரு எடுத்துக்காட்டு கொடுங்கள் என்றேன். அவர் ‘ஜெயலலிதா’ என்றார்!
சரி, ஜெயலலிதா அவர்கள் சொன்னால் தமிழக ஊடகங்கள் அனைவரும் கேட்கிறார்களா?
இல்லை. கலைஞர், ஸன் டீவிகாரர்கள் கேட்கவே மாட்டார்கள்; பல பத்திரிகைகளும் கேட்கமாட்டார்கள்.
தன் பேச்சைக் கேட்காத எவரையாவது, தனக்குப் பிடிக்காத எவரையாவது – ஜெயலலிதா, மரண தண்டனைக்குத் தள்ள முடியுமா? சுட்டுத் தள்ள முடியுமா?
ஏன் கேட்கிறாய்? முடியவே முடியாது!
ஜெயலலிதாவுக்கு தமிழகப் பொலீஸ்துறையின் மேல், தமிழகத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களின்/பணியாளர்களின் மேல் ஏதாவது முழு அதிகாரம் இருக்கிறதா.
இல்லை, இல்லை – பொலீஸ்காரர்கள் கூட, அரசுச் சட்டத்துக்கு, அதிகாரச் சட்டகங்களுக்கு மாறாக அவர்களை ஜெயலலிதா வேலை செய்யச் சொன்னால், அவரை எதிர்த்து அவர்கள் போராடலாம்; ஜெயலலிதா அவர்களை அதிகபட்சம் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு’ வேலை மாற்றம் செய்யலாம், அல்லது ஒரு ‘டம்மி பீஸ்’ ஆக்கலாம், அவ்வளவுதான்!
தமிழகத்தில் நீதிமன்றங்கள் இல்லையா? அவை ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட முடியுமா?
நிச்சயமாக முடியும். ஜெயலலிதாவை – நீதிமன்றங்கள் கட்டுப்படுத்த முடியும். நீதி வழங்க முடியும்.
ஜெயலலிதாவால் பணம் அச்சடிக்க முடியுமா?
முடியாது.
ஜெயலலிதாவால் தனக்குத் தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் உதவி செய்து, அரசுவேலை கொடுத்து, பதவியுயர்வு கொடுத்து தன்னிச்சையாகச் செயல்படமுடியுமா?
முடியாது. விளையாட்டா? நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது அய்யா!
ஜெயலலிதா தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டாரா? அப்படியானால் அடுத்த தேர்தலில் அவர் தோற்று வேறு யாராவது குளுவான் (=இசுடாலிர்) வரச் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?
ஆமாம், ஆமாம்.
ஜெயலலிதாவால், வேண்டுமென்றால் மகாமகோ வரிகளை விதித்து மக்களை நசுக்க முடியுமா?
ஹ்ம்ம் – முடியும் ஆனால், இதைச் செய்ய மாட்டார்! அடுத்த தேர்தல் இருக்கிறதே!
ஜெயலலிதாவால், தமிழகத்துக்குள் எவரையாவது வரமுடியாமல் தடுக்க முடியுமா? தமிழகத்திலிருந்து எவரையாவது வெளியே போகமுடியாமல் இருக்கவைக்க முடியுமா?
எப்படி அய்யா முடியும்?
… பின் எப்படி அவரை ஒரு சர்வாதிகாரி என்கிறீர்கள்? பல சட்டங்களுக்கு திட்டங்களுக்குக் கட்டுப் பட்டுத்தானே அவர் ஒரு முதலமைச்சராக இருக்கிறார். இந்திய அரசின் மாட்சிமையை மதித்தும், நீதி மன்றங்களின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டும், தேர்தல்முறை ஜன நாயகத்தை மதித்தும்தானே அவரால் முதலமைச்சராக இருக்க முடிகிறது?
இல்லை, நான் அதைச் சொல்லவில்லை. அவர் கட்சியை அவர் ஒரு சர்வாதிகாரிபோல நடத்துகிறார்.
சரிதான், சர்வாதிகாரி என்பது சர்வாதிகாரிபோல எனவாகி விட்டது. சரி, இப்போது அவர் கட்சியை ராணுவ அமைப்பாக மாற்றி, அவரால், இந்தியாவின் மாட்சிமையை கேள்விக்குரியதாக ஆக்க முடியுமா?
இதுவும் முடியாதுதான். அவர் நிச்சயம் அப்படிச் செய்யமாட்டார். ஜெயலலிதாவினுடைய ஏதேச்சாதிகாரப் போக்கைத் தான் நான் வெறுக்கிறேன்.
சரி. சர்வாதிகாரிபோல என்பது ஏதேச்சாதிகாரம் ஆகிவிட்டது! உள்ளீடற்ற வார்த்தைச் சிலம்பங்களில் விற்பன்னராகிக்கொண்டு வருகிறீர்கள்! சரி… தமிழகத்தில்தானே இருக்கிறீர்கள், உங்களுக்கு அறவே பிடிக்காத ஒன்றை அவர் உங்களை வேலைமெனக்கெட்டுச் செய்யவைக்க முடியுமா?
முடியாது. ஆனால், அவர் தன் கட்சிக் காரர்களை அப்படித்தான் ஆணவத்துடன் நடத்துகிறார். அடிமைகளாகப் பாவிக்கிறார்.
சரி, இப்போது அவருடைய கட்சியை அவர் நடத்திச் செல்லும் முறையை விமர்சிக்கிறீர்களா? சரிதான்! அப்படியே எடுத்துக் கொள்வோம். அவருடைய கட்சிக்காரர்கள், கட்சியை விட்டு வெளியே போய்விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் அல்லவா? கட்சியில், அவர்களுடைய சொந்தக் குறிக்கோள்களுக்காக இருப்பவர்களை, அவர் அப்படி நடத்தினாலும் – அந்த அடிமைகளுக்குச் சுதந்திரம் (அதாவது, நடைமுறைக்கு ஒப்புக் கொள்ளாமல் வெளியேறும் சுதந்திரம்) இருக்கத்தானே செய்கிறது? அவர்களை வெளியேறவே கூடாது, வெளியேறினால் கொன்று விடுவேன் என்கிறாரா?
இல்லை. அதிமுக-விலிருந்து வெளியே வந்தவர்கள் பலர், ஜெயலலிதாவைக் கண்டமேனிக்கும் திட்டிக் கொண்டு, இப்போதும் இருக்கிறார்களே!
ஆக ஜெயலலிதாவின் அதிமுக – திமுக, காங்கிரெஸ் போன்ற கட்சிகள் போன்ற அமைப்புதானே! இவை அனைத்தும் நீங்கள் சொல்கிற மாதிரி ‘சர்வாதிகார’த்தனங்கள் தானே? தன் கட்சிக் காரர்களை இப்படித்தான் நடத்துபவைதானே?
சரிதான் – கட்சிக் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கிறது அல்லவா? கட்டுப்பாடு என்பதை மீறினால் வரும் நடவடிக்கைகளுக்குப் பயந்துதானே கட்சியில் இருக்கிறார்கள்? கட்டுக் கோப்பு கட்சிக்கு முக்கியம்.
ஆக நான் குறிப்பிட்ட கட்சிகளையெல்லாம் – உங்கள் நோக்கில் சர்வாதிகாரக் கட்சிகள் தானா? இப்போது இசுடாலின் அவர்களும் ஜெயலலிதா போலத்தானே கட்சி நடத்துகிறார்? சோனியாவும் அப்படித்தானே? இவர்களை எதிர்த்துப் பேசிக்கொண்டு எவராவது கட்சியில் இருக்கமுடியுமா?
!!!!
சரி, உங்களை இது தொடர்பாக மேலும் தொந்திரவு செய்யவில்லை. பாரதீய ஜனதா கட்சிக்கு வருவோம். அங்குள்ள கட்டுக் கோப்பு எப்படி?
ஹா! கட்டாவது கோப்பாவது அந்த ஃபாஸ்ஷிஸ்ட் கட்சியில். அவனவன் தன்னைத்தானே தலைவன் என்கிறான். ஒரே குடுமிப் பிடிச்சண்டை அங்கே!
சரிதான், அங்கே பல தலைவர்கள் நேரடியான முறையில் தாங்களும் குறிப்பிடத்தக்க தலைவராக, பாஜக வெற்றி பெற்றால் தாங்களும் பிரதமராக முடியும் எனத் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என்கிறீர்கள்! இது ஒரு ஆரோக்கியமான, ஜனநாயகப் போக்குதானே? திமுக, காங்கிரெஸ் பொஜக பாமக விஸிகே இன்னபிற கட்சிகளில் இதெல்லாம் சாத்தியமா? இசுடாலிரை எதிர்த்து, உட்கட்சியில் யாராவது போட்டியிடத்தான் எண்ண முடியுமா?
சரிதான். ஆனால் இந்தப் போக்கில் பாஜகவில் குழப்பம்தான் மிஞ்சும்!
சரி, பாஜக ‘குழப்பம்’ சார்பான உங்களுடைய கரிசனத்தை மெச்சுகிறேன். அங்கு குழப்பம் ஏற்பட்டால் உங்களுக்கு சந்தோஷம்தானே வரவேண்டும்…
!!!!
சரி, உங்களுடைய ஃபாஸிஷ்ம் பற்றிய அறிவை, கேள்விகேட்காமல் மோதி பக்கம் போகிறேன், சரியா?
நீ என்னதான் சொன்னாலும், மோதி நிச்சயம் ஒரு ரத்தவெறி பிடித்த சர்வாதிகாரிதான்.
ஏனப்பா, மோதி ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், சமரசத்துக்கு எல்லாம் முயற்சிக்கவே வேண்டாமே? உட்கட்சி ஜன நாயகத்தை மதிக்கவே வேண்டாமே? முறையாக உட்கட்சித் தேர்தலை மேற்கொண்டுதானே அவர் மேலெழும்பினார்? ஏன் ரத்தத்தை இங்கு கொண்டுவருகிறீர்கள்?
!!!!
ஆக, ஜெயலலிதா போல, மோதியும் சர்வாதிகாரப் போக்கற்றவர்; ஆனால் முன்னவரைப் போலல்லாமல் உட்கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பவர் என நிறுவ வேண்டுமா?
வேண்டாம். ஆனால் மோதி வேறு. ஜெயலலிதா வேறு.
எப்படி – ஒருவர் ஆண் இன்னொருவர் பெண் என்கிற முறையிலா?? சரி, மோதியும் — இந்திய அரசின் மாட்சிமையை மதித்தும், நீதி மன்றங்களின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டும், தேர்தல்முறை ஜன நாயகத்தை மதித்தும்தானே அவராலும் முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடிகிறது? ஜெயலலிதா பற்றி நான் சொன்ன பல விஷயங்கள் இவர் விஷயத்திலும் எடுபடும்தானே?
ஆமாம். இருந்தாலும், அவர் முஸ்லீம்களை வெறுக்கிறார். ஆகவே அவர் சர்வாதிகாரிதான்.
எப்படி இப்படிச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் முஸ்லீம்களை நாடுகடத்துகிறாரா? தொடர்ந்து கொன்று குவிக்கிறாரா? ஒரு சுபிட்சமாக வாழும் முஸ்லீம்கூட குஜராத்தில் இல்லையா? தொழில்முறை மனிதவுரிமைக்காரர்கள் அனைவருக்கும் குஜராத்தில் இருந்து கல்தா கொடுக்கப் பட்டு விட்டதா? புதிதாக ஒரு மசூதியும் அங்கு கட்டப் படுவதேயில்லையா? மோதிக்கு ஒரு முஸ்லீம் ஆதரவாளர் கூட இல்லையா?? ஒரு காங்க்ரெஸ் அனுதாபியைக் கூட குஜராத்தில் விட்டு வைக்கவில்லையா? குஜராத்தில் இருப்பதெல்லாம் ஒரே கட்சி – அதுவும் பாஜக மட்டும் தானா??
!!!!
சர்வாதிகாரம் என்றால் என்ன என மறுபடியும் ஆராய ஆரம்பிக்கலாமா?
!!!!
என்னவோ போங்க… மூளையை முதலில் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், பின்னால்தான் உங்களால் கொஞ்சமாவது குறைவாக உளற முடியும். சரி, ஹிட்லர் பற்றிப் பேசலாமா? மோதியை ஹிட்லர் என்கிறீர்களே?
!!!!
கீபல்ஸ் பற்றி?
!!!!
சுபமோதி சுபம்.
(இந்த பேச்சுவார்த்தை, சுமார் ஒரு மணி நேரம்போல ஆங்கிலத்தில் நடந்தது; இருவருடைய சில கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் இருந்தன. ஆனால் அதன் சுருக்கத்தை, வசைகள் தவிர்த்துக் கொடுத்திருக்கிறேன்)
பின்குறிப்பு: சர்வாதிகாரம் என்றால் என்ன எனச் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, குறைந்த பட்சம் பத்து முக்கியமான புத்தகங்களைப் படித்தால் ஓரளவாவது தேறலாம்; அதன் ஜாபிதாவை பின்னொரு சமயம் கொடுக்கிறேன். இவற்றைப் படித்தால் மட்டும் போதாது – படித்த பின் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய எழவு வேறு இருக்கிறது, பின்னர், இவற்றை தனிப்பட்ட சூழல்களுடன் பொருத்திப் பார்க்கவேண்டியதும் இருக்கிறது…
இதெல்லாம் நம்மைப் போன்ற சோம்பேறிக் கருத்துதிர்க்கும் அற்பர்களுக்கு எப்படி முடியும், சொல்லுங்கள்… :-(
April 8, 2014 at 19:51
Hope your conversation would be a eye opener to that person – when he could think about this conversation calmly, keeping his heart open. Also thanks for providing a nice guideline on how to tackle baseless allegations- without getting emotional(most of the time i get angry-although i have some valid points to present in arguments)
April 10, 2014 at 23:47
பிரதமரா வர யார் வேணாலும் ஆசைப்படலாம். ஏன், ஜெ-கூட ஆசைப்படவில்லையா? ஆனால் இந்தியாவுக்கு பிரதமர் ஆகனும்னா அதற்கு ஒரு கலாசாரம் வேணும், தாராதரம் வேணும்!
அடுத்து படிப்பு என்று ஒரு சமாசாரம் இருக்கிறது! அதுவும் கொஞ்சம் (நிறையவே) வேணும்! டீக்கடை வைத்து முன்னுக்கு வந்தவரா–உழைப்பைப் பாராட்டலாம். ஆனா அவ்வளவுதான செய்யலாம்! பிரதமர் பதவிக்கு அதெல்லாம் போதாது!!
April 11, 2014 at 04:56
சரவணன் ஐயன்மீர்,
தாங்கள் இப்படி எழுதியது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய கோபம் புரிகிறது.
நம்முடைய காமராஜ் அவர்களைப் பற்றியும் இப்படியா நினைக்கிறீர்கள்?
ஹ்ம்ம்??
April 11, 2014 at 08:16
காமராஜர் பற்றி எதற்கு அப்படி நினைக்கப்போகிறேன்? அவருக்குப் படிப்பு இல்லை என்றாலும் பண்பாடு இருந்தது. மேலும் அவர் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதை வேண்டாதவர், பதவி மோகம் கொண்டவர் அல்ல.
நரேந்திர மோடியிடம் ஏன் கலாசாரம் இல்லை என்கிறேன்?
1) அவர் தனக்குப் பிடிக்காத எல்லோரையும் ‘மியான்’ பட்டம் சூட்டி அழைப்பவர்.
2) ஜே.எம்.லிங்டோவை அவர் கிறிஸ்தவர் என்பதை வலியுறுத்துவதற்காக முழுப்பெயர் சொல்லிக் குறிப்பிட்டவர். (கருத்து வேற்றுமையின்போது)
3) ராகுல் காந்தியை shahzada என்பவர்.
4) தனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா என்பதைக்கூட மறைப்பவர்; தன்னை நம்பி மணந்துகொண்ட பெண்ணை ஒதுக்கி வைத்திருப்பவர்.
5) நடப்பது குஜராத் பஞ்சாயத்து பை-எலக்ஷனாக இருந்தாலும் அதில் அநாவசியத்துக்கு பாகிஸ்தானுக்குச் சவால் விடுபவர்.
6) ஒரு இஸ்லாமியர் அன்புடன் கொடுத்த தொப்பியை ஒரு மரியாதைக்காக ஓரிரு நொடிகள் தலையில் அணிந்துகொள்ளும் மனம் இல்லாதவர். இதற்குக் கொடுக்கும் நீட்டி முழக்கல் வியாக்யாணங்களை ஏற்க முடியாது. மாலை, சால்வை போல பெயருக்கு அணிந்து கொள்வதில் என்ன கஷ்டம்?
April 11, 2014 at 05:23
Please add http://www.tamilhindu.com/2014/04/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ & http://www.tamilhindu.com/2014/04/பா-ஜ-க-தேர்தல்-அறிக்கை-முக/ into Modi page.
Regards
Venkatramanan
May 11, 2014 at 03:15
அவர் ஒரு இந்து. இந்துமதத்தை ஒட்டிய பிறமதங்களின் சின்னங்களை அணிவதற்கு அவருக்குத் தடை இல்லை. ஆனால் இந்துமதத் தொடர்பு இல்லாத மதங்களின் சின்னத்தை அவர் அணிய மறுப்பதில் என்ன தவறு? ஒரு முஸ்லீம் திலகம் வைத்துக்கொள்வாரா? ஒரு நல்ல இந்து என்பவன் தான் ஒரு இந்துவாக இருப்பதுடன் ஒரு முஸ்லீம் தன்னுடைய மதத்தை கடைப்பிடிப்பதற்கு தன்னால் ஆனதனைத்தையும் செய்வான். மோதி அப்படிப்பட்டவர். இந்த விசயத்தில் பல சிறுபிள்ளைத் தனமாக இருக்கின்றனர்.