மோதி, நிர்வாகத் திறமை: சில குறிப்புகள்

April 5, 2014

சில நாட்கள் முன்பு, குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருடன் (தனித்தனியாக), குஜராத்தின் குணோத்ஸவ் திட்ட விவரங்கள் விஷயமாக அளவளாவிக் கொண்டிருந்தேன். இவர்களைப் பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இவர்கள் நேரடியாக மோதி அவர்களின் கீழ் (முதல் அடுக்கு அல்ல – ஒரு தட்டு கீழே) பணிபுரிந்துகொண்டிருக்கும் மூத்த, நேர்மையாள அதிகாரிகள்; கூழைக் கும்பிடு போடுபவர்களோ, சமயம் வாய்த்தபோதெல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று அசடும் கயமையும் வழிய ‘பூச்செண்டு’ கொடுப்பவர்களும் அல்லர். நல்ல பரவலான படிப்பும், செறிவான அனுபவங்களும், செயலூக்கமும் உடையவர்கள். நான் மதிப்பவர்கள்.

பேச்சு மெதுவாக நிர்வாகம் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது; நாங்கள், பொதுவாக, அதிகார வர்க்கம் எப்படி நிர்வாகத்தை அணுகும், அதன் பயிற்சி முறை அதனை எப்படிச் செயல்பட ஊக்குவிக்கும், அதற்கும் அரசியல்/அரசு தலைமைக்கும் இருக்கும் உறவுகள், நடைமுறை எதார்த்தங்கள் எப்படிப்பட்டவை, வளர்ச்சிப் பாதைகளின் ஊக்குவிப்பான்கள் & அடைப்பான்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதின் அங்கங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தோம் – இந்தப் பின்புலத்தில் மோதி அவர்களின் நிர்வாகம் குறித்த பார்வைகளையும் கொஞ்சம் விவாதித்தோம்.

இந்த அளவளாவல்களிலிருந்தும், என் அனுபவங்களிலிருந்தும் சில குறிப்புகள்:

 • பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பதற்கும் (=solving issues) பிரச்சினைகளை நிர்வாகம் செய்வதென்பதற்கும் (=managing issues) பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
 • பொதுவாக, எந்த ஒரு அரசதிகார அமைப்பிலும் (நம் இந்திய அமைப்பின் ஐஏஎஸ் உள்பட) அதிகாரிகளுக்குப் பொதுவாகச் செய்யக் கூடியது, அவர்களுக்குப் பொதுவாக பயிற்சி கொடுத்திருப்பது எதற்கென்றால் – பிரச்சினைகளை நிர்வாகம்  செய்வது பற்றித்தான்.
 • ஆனால் – அடிப்படையிலேயே சூட்டிகைத்தனம் மிகுந்த இந்த அதிகாரிகளுக்கு, பிரச்சினைகளைத் தீர்க்க வழிகள் தெரியாதென்பதில்லை – இருந்தாலும் அவர்கள், தாங்கள் பொதுமக்களின் எஜமானர்கள் இல்லை என்பதை உணர்ந்து, பொதுமக்களும் தங்கள் எஜமானர்கள் அல்லர் என்பதையும் அறிந்துதெளிந்து – ஒரு திட்டத்தைக் கொடுத்தால் அதன் சாதகபாதகங்கள் தெரிந்தாலும், அது நடைமுறையில் இருக்கும் ஆட்சிமுறைக் கட்டுமானங்களை அசைக்காதவரை – அதனை நிறைவேற்றும் பணியினை மட்டுமே செவ்வனே செய்வார்கள், அவ்வளவுதான்.
 • ஆட்சியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைத் திறம்பட முடிக்கும் செயலூக்கம் கொண்டவர்கள் தான் இவர்கள். இருந்தாலும், அரசின் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தால் அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஒரு விதமான தரிசனமும்/முன்னோக்குப் பார்வையும் இல்லாமல் இருந்தால் – இந்த அதிகாரிகள் பிரச்சினைகளை நிர்வாகம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள் – அதாவது பிரச்சினைகளை மோசமாக விடாமலும், அதேசமயம் பிரச்சினைகளை தீர்க்கவும் தீர்க்காமலும் ஒரு விதமான ரெண்டுங்கெட்டான் நிலைமையில் மேலாண்மை செய்து கொண்டுஇருப்பது தான் இவர்களுக்குச் சாஸ்வதம்.
 • ஏனெனில் – பிரச்சினைகள் மோசமானால், அதனால் – ஊடகங்களிலிருந்து, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் வரை பல எதிர்வினைகள் ஏற்படும்; இது அரசுக்கு, அரசதிகாரம் பெற்றிருக்கும் கட்சிக்கு உகந்ததல்ல.  ஏனெனில், விஷயங்கள் மோசமானால், அடுத்த தேர்தலில் பொதுமக்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு உலை வைத்துவிடுவார்கள்.
 • அதே சமயம் – பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போக்கில் அரசோ/அதிகாரிகளோ போனால் – நம் நடைமுறை ஜனநாயகத்தில் இதுவே பெரியதொரு பிரச்சினையாகி விடும். ஒரு பிரச்சினையில் தீர்க்கமான ஒரு முடிவெடுத்தால், உடனே அந்த முடிவால் பாதிக்கப்பட்ட அரசியல் சக்திகள் – ஆட்சியாளர்களின் பரம எதிரிகளாகி விடுவார்கள். அதே சமயம், அந்த முடிவால் உதவிபெற்ற சக்திகள் – அந்த உதவியைப், பொதுவாகவே – ‘எனக்குக் கிடைக்கவேண்டியதுதானே கிடைக்கிறது’ எனும் ஒரு அகங்கார (=arrogant sense of entitlement) நோக்கில்தான் பார்ப்பார்கள் – இது மானுட உலக நியதிதான். இப்படிப்பட்ட நிலைமையால் – ஒரு அரசுக்கு தைரியமாக முடிவுகளை எடுக்கும் தன்மை குறைகிறது.
 • நமக்குத் தேவை – நிர்வாகத் திறமை, பிரச்சினைகளைத் தீர்க்கும் முனைப்பு கொண்ட திறமை. அரைவேக்காடுகளாகச் சிந்தித்து பிரச்சினைகளைப் பற்றி கவலையே படாத தன்மையல்ல.  “நாம் இப்படிச் செய்தால் அவர்களின் ஆதரவு போய்விடும், மாறாக, அப்படிச் செய்தால் இவர்களின் ஆதரவு போய் விடும்” எனப் பயந்து ஒன்றுமே  செய்யாமல் ஒப்பேற்றுவது அல்ல!

மோதியின் நிர்வாக ரீதியான அணுகுமுறை –  சில குறிப்புகள்:

 •  சில வருடங்கள் முன்புவரை,அவர் சக அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை/ஆலோசனைகளை விட, அனுபவமிக்க உயர் அதிகாரிகளின் பார்வைகளுக்கு அதிக மதிப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக, அவருடைய கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களைக் கலந்தோசித்தும்தான் பல விஷயங்களில் முடிவெடுக்கிறார்.
 • ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் உரிய மதிப்பைக் கொடுத்து – அதே சமயம் அதனிடமிருந்து பாஜக, ஒரு அரசியல்கட்சியாக வேறுபடும் புள்ளிகளையும் அறிந்திருக்கிறார். அவருக்கு இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையே உள்ள அடிப்படை வித்தியாசங்களைத் தெரியும்.
 • கடந்த மூன்று ஆண்டுகளாக, அவருக்கு இரண்டாம் கட்டத் தலைமையை வளர்த்தெடுப்பதில் முனைப்பு இருக்கிறது. தன் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை அவரால் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள முடிகிறது.
 • எதையுமே இலவசமாகக் கொடுப்பதில், அரசுக் கஜானாவைக் காலியாக்குவதில் அவருக்கு இஷ்டமேயில்லை. தரமான சேவையளித்தால், பொருளை உற்பத்தி செய்தால், அவற்றுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து  உபயோகிக்க / வாங்கிக்கொள்ள பொதுமக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையின்பாற்பட்டு செயல் படுகிறார். (அவருடைய மக்களும் அவரை ஏமாற்றவில்லை)
 • நீண்டகால / தொலை நோக்குத் திட்டங்களுக்கு – அதாவது உடனடியாகப் பலன் தராமல், தொடர்ந்து பல வருடங்களுக்குச் செயல்பட்டால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் படியான திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறார்; இந்தப் போக்கு அவருடைய இரண்டாம் ‘இன்னிங்ஸ்’-லிருந்து பெருமளவில் ஆரம்பித்தது. (விவசாயம், கல்வி, ஆரோக்கியம், மின்சாரம் போன்ற துறைகள் இவற்றில் அடக்கம்)
 • மோதிக்கு, குஜராத்தில் பல பிரச்சினைகள் இன்னமும் இருப்பது தெரியும் – எப்படி அவற்றை நீண்டகால நோக்கில் தீர்க்கமுனைவது என்பதையும் தெரியும்.
 • பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தான் அவருக்கு குவியம் அதிகம் – வெறுமனே நிர்வகிப்பதில் அல்ல.
 • அவருக்கு அரசியல்/அரசு / நிர்வாகம் குறித்த பல அனுபவம் சார்ந்த பார்வைகளும்,  உன்னதத்தை நோக்கிய விழைவும் இருக்கின்றன. அவர் ஒரு ஸீரியஸ் உம்மணாமூஞ்சிக் கோபக்காரத் தலைவரல்லர். ஒரு விஸிவிக்  (WYSIWIG = what you see is what you get) ஆசாமியும் கிடையாது. அவர் ஒர் பல அடுக்குகளை / பார்வைகளை / நோக்கங்களைக் (‘layered’) கொண்டவர். மோதி ஒரு திறமைமிக்க அரசியல்வாதி (’talented politician’).
 • அதேசமயம், அவருடைய வசீகரத் தலைமையினால் (charismatic leadership) – இந்தத் தீர்வுகளினால் ஏற்படும் அரசியல் பாதகங்களை அவரால் நேரடியாகவே எதிர்கொள்ள முடிகிறது. அவருடைய ஆட்சியின் திட்டங்களினால் – அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களின் சொத்துகள், தொழில்கள், சேவைகள் போன்றவையும் பாதிக்கத்தான் செய்கின்றன; ஆனால், இம்மாதிரி அதிருப்தியாளர்களை, அவர் பொதுவாக, சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்து அவர்களுக்குத் தேவையான பலி கொடுத்து மலையேற்றம் செய்வது கிடையாது. தனியாக ‘கவனித்துக் கொள்வது’ கிடையாது. ‘உனக்கு இதில் இழப்பா? கவலைப் படாதே, உனக்கு வேறு காசு கொழிக்கும் பதவி/வேலை தருகிறேன்’ என்கிற சமாதானப்படுத்தல் கிடையாது.
 • இப்படிப்பட்ட ‘வெட்டினா ஒண்ணு, துண்டு ரெண்டு’  போன்ற அணுகுமுறையால் – அவருக்குப் பல அரசியல் (சொந்தக் கட்சியிலேயே கூட) எதிரிகள்; ஆனால், அவருக்கு ஒரு வசீகரம் இருப்பதும், அதனை உபயோகித்து தைரியமான முடிவுகளை எடுப்பதும் அவருக்கு முடிகிறது. அதனால் அவரால் பிரச்சினைகளிலிருந்து தொடர்ந்து மேலெழும்பி வர முடிகிறது.
 • அவருடைய அணுகுமுறைக்கு, பார்வைக்கு ஏற்ப, அவரால் அதிகார வர்க்கத்தையும் வளைத்து – அவர்களையும், பிரச்சினைகளை தீர்க்க, ஊக்குவிக்க முடிகிறது. (reimagining and repurposing the bureaucracy and goading it towards goals)
 • தங்கள் பணிகளைப் பற்றிய, அவற்றின் தரத்தைப் பற்றிய, தங்கள் மாநிலத்தைப் பற்றிய — பெருமையான எண்ணங்கள் வளர்வதற்கு, அவர் கடைக்கால் போட்டுக் கொண்டிருக்கிறார். ஏனெனில் – தன் வேலையில், தொழில்சுத்தத்தில் பெருமையுடைய எவனும் அரைகுறையாகவே இருக்க மாட்டான், என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறார்.
 • ‘தரம்’ என்பதை நிர்வாகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கு, ‘ஒப்பேற்றுவதை’ ஒரு நிர்வாக நடைமுறையாக கடைபிடிப்பதை  ஒழிப்பதற்கு – மோதியால் முடிகிறது; அவரொரு வசீகரத் தலைவராக இருப்பதனால் அவரால் பல விஷயங்களில் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடிகிறது.
 • அறிவியல் தொழில் நுட்பம் போன்றவைகள் பற்றிய சரியான புரிதல்களை உடைய முதலமைச்சர் இவர். (அடிபட்ட மற்ற பெயர்கள் – மனோஹர் பர்ரிகர், ஜெயலலிதா, ராமன் ஸிங், சந்திரபாபு நாயுடு, எஸ் எம் க்ருஷ்ணா)
 • அவருடைய நிர்வாகத் திறமையின் (planning, implementation, constant follow-up and closure) காரணமாக அவரால் எந்த ஒரு விஷயத்தையும் வெறுமனே ஒப்பேற்றாமல், சரியாக முடிக்க முடிகிறது.
 • அவருக்கு உதவுவதற்கு, அநியாய விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு என, ஒரு அரசியல் மயமாக்கப் பட்ட குஜராத்தி முஸ்ஸல்மான்களின் இயக்கத்தைக் கட்டமைக்க (அரசு சாரா) பரந்துபட்ட நிர்வாக முயற்சிகள் எடுக்கப்பட்டன – ஆனால், மேலெழுப்பப் படவில்லை; ஏனெனில் – இதனைப் பற்றி மோதி-சார்பினரின் கருத்து என்னவென்றால்: தற்போதைய விஷமூட்டப்பட்ட ஊடக அரசியல் சூழலில் – இம்மாதிரி அமைப்புகள் சந்தேகத்துடனே பார்க்கப் படும்; அவர்களுடைய இயல்பான சமூகச் சூழல்களிலிருந்து  அவை அன்னியப் படுத்தப் படும் – ஆக இது தேவையில்லை.  எப்படியும் பொருளாதார வளர்ச்சியின், சமுக சுபிட்சத்தின் மொழியை இன்றில்லாவிட்டால் நாளை, அனைவரும் உணர்ந்து கொள்வார்கள் தானே!
 • அவர் சில தொழில்முனைவோர்களிடம், பெருங்குழுமங்களுடன் மட்டும் பரிவுள்ளவராக இருக்கிறார் (அடானி, ரிலையன்ஸ், டாடா) என்பது சரியல்ல. அவருக்கு  பெரும் தொழிலதிபர்களுடன் பரிச்சயம் உண்டு என்றாலும் அரசியல் தரகு வேலைகளுக்கு அவர்களை அவர் உபயோகிப்பதில்லை; அவருக்கு, தரகர்களுடன் ( நீரா ராடியா போன்றவர்கள்) தொடர்பு இல்லை.
 • அவரால் ஊடகங்களைச் ‘சரிக் கட்டும்’ வித்தைகளைச் செய்ய முடியாது. ( ‘he is not temperamentally amenable to the idea of appeasing the media’) இந்தப் பிரச்சினை பலகாலங்களாகவே இருக்கிறது. தன்மேல் அவருக்குள்ள கர்வமும் இதற்குக் காரணம்.
 • இன்னமும் ஓரிரண்டு தடவை அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தால், அவர் ஊழல் பற்றிய ஒரு ‘முழு சகிப்பின்மையை’ ( ‘zero tolerance towards graft/corruption’) கொணர்ந்து விட்டு, குஜராத்தி ஒவ்வொருவருக்கும் இது பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்கி விடுவார்.

-0-0-0-0-0-0-0-0-

… இன்னமும் சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு இவ்வளவு போதும். (முடிந்தவரை கோர்வையாக எழுத முயற்சித்திருக்கிறேன் – ஆனால் இரண்டுமூன்று மணி நேரப் பேச்சுகளை எழுத்தில் வடித்தெடுப்பது என்பது அயர்வான வேலைதான்! நேரமின்மை வேறு பாடாகப் படுத்துகிறது!)

நான் மோதியின் மூளையில், திட்டமிடும் பண்பில், ஆட்சித் திறமையில், அதிகார வர்க்கத்திடமிருந்து சரியான எதிர்வினைகளை வளர்த்தெடுக்கும் திறமையில், வசீகரத்தை அதன் எல்லைகளைக் கண்டுகொண்டு உபயோகிப்பதில், பொறுமையில், நகைச்சுவை உணர்ச்சியில், மக்களை அரவணைத்துச் செல்லும் பண்பில், பெரும்பாலும் ஊழலில்லாத நிர்வாகத்தை அளிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளில் – மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

பார்க்கலாம், எதிர்காலம் அழகாக விரியுமா அல்லது சராசரித்தனத்தில் தொடர்ந்து அமிழுமா என்று…

எனக்கென்னவோ நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள் நல்ல காரியங்கள் நடக்கும் எனத்தான் படுகிறது…

… and, I feel and know that as a forward-biased nation, in the cusp of development and raring to ride on the crests of sustainable waves of growth, we DESERVE to be led by a person of the stature & vision of Sri. Narendra Modi.

Amen.

நரேந்த்ர மோதி!

8 Responses to “மோதி, நிர்வாகத் திறமை: சில குறிப்புகள்”

 1. A.seshagiri Says:

  இதைத்தான் உங்களிடம் குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

 2. sivam50 Says:

  நான் ஒரு Gujarat GOvt Undertaking company யில் தலைமை மேலாளராக பதினைந்துவருடங்களுக்கு மேலாக பணி புரிந்துள்ளேன். மோதி அவர்களைப்பற்றி ஒரு மேலான அபிப்ராயம் இருந்தாலும் என்னுடைய முதல் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் ஆட்சிக்கு வந்து வருடம் திரும்புவதற்கு முன்னால், Govt PSU வில் Chairman மற்றும் Directors position ஒரு அரசியல்வாதிக்கு தான் என்றிருந்த நிலையை மாற்றி, ஒரு மூத்த IAS அல்லது ஒரு Technocrat (As per the requirement of the company) தான் Chairman position என்று மாற்றினார்.
  அப்போது அவர் இந்த அளவுக்கு Popular ஆகவில்லை என்பதால் BJP யில் சக அரசியல்வாதிகளுக்கிடையே மிகுந்த எதிர்ப்பு உண்டாகியது. இருந்த போதிலும் இந்த நிலையை அவர் மாற்ற விரும்பவில்லை. இந்த மாற்றம் அரசு நிறுவனங்களுக்கிடையே எவ்வளவு பெரிய முன்னேற்றங்களை கொணர்ந்தது என்று என்னைப்போன்று பணியாற்றிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். ஒரு அரசியல்வாதி Chairman position ல் எவ்வளவு அநியாயம் பண்ணமுடியும் என்று நேரடியாக பார்த்தவன் நான். அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் பழி வாங்கப்பட்டவன் கூட.
  எனவே மோதி என்னும் தனி மனிதனை ஒரு அரசியல்வாதிக்கும் மேலாக ஒரு Best administrator என்ற உருவமாகவே உணர்கிறேன். எனக்கு எந்த ஒரு கட்சியின் சார்பும் கிடையாது. இன்னும் கேட்டால் இதுபோன்ற அரசியல் ஆட்சி முறைகளால் இவ்வளவு பெரிய ஜனநாயகம் செத்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற ஒரு அபிப்பிராயம் கூட உண்டு. But எல்லாவற்றிற்கும் மேலாக இப்போதைக்கு இவரை விட்டால் வேறு ஒரு (இருப்பதில்) மேலான அரசியல்வாதியை என்ன முடியவில்ல.

 3. TAMIL Says:

  STOP MODI BAJANAI. MODI TOTAL WASTE


  • Dear ‘TAMIL,’

   Am glad to be of service to you.

   And, I find it rather amusing and cute that these Modi posts are so compelling (at least to you) that you waste your time reading wasteful things written about a ‘total waste.’

   Perhaps you should stop reading this blog, or at least stop posting your random comments.

   May be I should not be approving your pithy comments. What do you think?

   • A.seshagiri Says:

    சூரியனை பார்த்து அர்த்தமில்லாமல் குரைக்கும் நாய்களை பொருட்படுத்தாதீர்கள் சார்.

   • SureshKumar Says:

    . Senseless comments in the name of Tamil, Tamilnithi, Tamilpuli, Tamileli, etc in net – is creating aversion on “Tamil” itself now-a-days.

 4. க்ருஷ்ணகுமார் Says:

  ஐயா, மதிப்பிற்குரிய மது கிஷ்வர் அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் மற்ற பகுதிகளில் தெளிவுடன் செய்யும் பணியை நீங்கள் தமிழகத்தில் செய்து வருகிறீர்கள் என நினைக்கிறேன். த்ராவிட பாஷாணத்தில் ஊறிய புழுக்கள் (க்ஷமிக்கவும். இது என் ப்ரயோகம் இல்லை. இசுடாலினாரின் தமையனார் அன்பர் அழகிரி அவர்களின் ப்ரயோகம்) நெளியும் தமிழகத்தில் த்ராவிட நஞ்சுக்கு எதிரான anti dote உங்கள் எழுத்துக்கள் என்றால் மிகையாகாது.

  நடுநிலைமை, செக்யூலரிசம் போன்ற பதங்கள் அதீத பக்ஷபாதம் கொண்ட வெறியர்களால் துவைத்து மிதிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு இந்த பதங்களின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டதோ என சில சமயம் தோன்றுகிறது.

  தேசத்தின் மீது பற்று, ஒரு நாஸ்திகர் என்ற போதிலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்கள் மீதும் வெறுப்பின்மை, மனிதர்கள் பலரையும் ஈவெரா, காந்தியடிகள் முதல் நரேந்த்ரபாய் வரை அனைவரையும் நிறைகள் குறைகள் கொண்ட முழுமையான மனிதர்களாய் சித்தரிக்க முனைவது — இது நடுநிலைமை இல்லையென்றால் வேறு எது நடு நிலைமையாம்?

  ஆங்க்ல சாராயத்தில் தமிழை டமில் என முக்கி எடுக்கும் டமில் பற்றாளரின் காமெடி தொடர்கிறதே……..

  அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் அவர்களது ரெண்டரை ஜாண் வ்யாசங்களுக்கு முழம் முழமாய் கெஜம் கெஜமாய் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களைக் கொட்டி பின்னூட்டங்கள் மூலமாய் வ்யாசத்தின் பேசுபொருளையே மாற்றி சண்ட ப்ரசண்ட விதண்டா வாதம் செய்த அன்பர் அசங்க்யேய நாமாபிஷிக்தரான அன்பர் டமில் (பலபலப் பெயர்களில்). ஆஸ்சர்யமாக இருக்கிறது இப்படியெல்லாம் இம்சை செய்தவர் எப்படி காலே அரைக்கால் வரியில் இந்த தளத்தில் காமெடி செய்கிறார் என்று. ம்……..உங்கள் க்ரஹசாரம் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் எத்துணை எத்துணை மஹனீயர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருக்கிறார் இவர்.

  அவருடைய காமெடி கமெண்டுகளை ban செய்ய நினைத்தால் எல்லாம் அசரவே மாட்டார்.

  புது அவதாரத்தில் வந்து காமெடி பண்ணுவார்.

 5. R.MANIKKAVEL Says:

  நல்ல சிந்தனை தேவையான நேரத்தில் வெளியிட்டது பாராட்டுக்குறியது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s