தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே!

February 17, 2014

சாளரம் #11:  Tamil culture is not sound, it is merely loud. That’s all.  ஆம். தற்காலத் தமிழக் கலாச்சாரத்தின் ஆதாரசுருதி sound-ஆன ஒன்றல்ல, மீளாத் தலைவலி கொடுக்கும் loud-ஆன ஒன்று தான்!

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (19/n)

தமிழையும் ஆங்கிலத்தையும் அடுத்தடுத்து அடுக்காமல்  தொடர்ந்து முழிபெயர்த்து, உங்களுக்கு மேதகு  நடிகர் ‘மேஜர்’ சுந்தர்ராஜன் அவர்களை   நினைவுறுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை, ஐ குட் நாட் அவாய்ட் இட்.  என்னை மன்னிக்கவும், ஐ ஆம் ஸாரி. ;-)

ஆ! இப்போது, பாரம்பரியமிக்க  நம் டமில்ட்டாய் அவர்களிடம் போவோம்!! அதாவது La Decibelle  Tamil Dame Sans merci அம்மணியிடம்…  (மன்னிக்கவும்)

டமில்ட் டாய் + ஓசைபெருக்கி

டமில்ட் டாய் படம் + அவளுடைய புத்தம்புதிய, டமிள் வரளாற்றிலேயே மொதள்மொறையாக அவள் கையிள் எடுத்துக்கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் ஆயுதமான ஓசைபெருக்கி

மேலேயிருப்பது, 1941 வாக்கில் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாயின் படம். அவள் ஆர்வத்துடனும் ஏக்கத்துடமும்  வாயைக் குவித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ‘கொம்பு’ ஓசை பெருக்கி, என் உபயம்.  அவளுக்கு ஒருகால், ஒரு கை மேலதிகமாக இருந்திருந்தால், அந்த ஓசைபெருக்கியையும் தூக்கிக் கொண்டிருக்கலாமே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவள், பாவம்  — அவளுக்கு நிச்சயம் தெரியும் எண்ணித் துணிக கருமாந்திரம்  என்று…

ஆக, இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருப்பதை (=சுருங்கியிருப்பதை) பார்த்தால் இறும்பூதடைவார் நம் தமிழணங்கார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

-0-0-0-0-0-0-0-0-

மேடைப் பேச்சுகளானாலும் சரி, பட்டிமன்றங்களானாலும் சரி, குப்பைத் திரைப்பட வீரவசனங்களானாலும் சரி, ஜோக்குத்-தோரண நாடகங்களானாலும் சரி – எந்த வித கேளிக்கைக்கோமாளித்தனத்திலும் மிக உரத்துத் தொண்டை கரகரத்துப் பேசுவது என்பது மிகவும்  முக்கியமாக இருக்கிறது.

பிறப்பானாலும் சரி, இறப்பானாலும் சரி – இடையில் வரும் காதுகுத்தல், மொட்டையடித்தல், மஞ்சள் நீராட்டுவிழா, திருமணம் என,  எந்தவொரு விசேஷமானாலும் சரி – எந்த மதம் பிடித்து தலைக்கேறினவனானாலும் சரி, எந்த ஜாதிக்காரனானாலும் சரி — சவண்டித்  தமிழனுக்கு உரத்துப்  பேசுதல், ஒசைபெருக்கிகளை (ஒலி பெருக்கிகள் அல்ல) உபயோகித்தல் என்பது வெல்லக் கட்டி போல.

நமக்கு ஆன்மிகம் என்பதையும் – ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், அதனை உரத்துச் செய்து அசிங்கப் படுத்தத்தான் தெரியும். எழவெடுத்த கோவில் திருவிழா, ஐயப்ப மாரியம்மன் சீசன், ஒரு நாள் விடாமல் தினசரி ஐந்துமுறை எழவெடுத்த மசூதித் தொழுகை, பிரதி ஞாயிறும் முடிந்தால் பிற நாட்களிலும் யேசுவுடைய பரிசுத்த எழவெடுத்த ஆவிக்குரிய வாராந்தர எழுப்புதல் கூட்டங்கள் என – வருடம் பூராவும் ஓவ்வொரு  பரிதாபத்துக்குரிய நாளிலும், ஏதாவது சுற்று முறையில் அல்லது சேர்ந்தோசை வழியில் கந்தறகோள ஒசைகளை எழுப்பி, அந்த எழவுகளுக்கு மகாமகோ ஒசை பெருக்கிகளை வைத்து – பாவப்பட்ட பொதுமக்கள் கழுத்தை, துளிக்கூடக் கருணையே இல்லாமல் அறுப்பது என்பதும் தமிழர்களுக்குக் கைவந்த கலை.

வீட்டிற்கு உள்ளேயும்கூட, அந்த கோர அரக்கியான தொலைக்காட்சிப் பெட்டியை அலற விடுவதும், இசை என்கிற பெயரில் உரக்க ஏஆர்ரஹ்மானிய கந்தறகோளக் காப்பிக்கடை டொங்கு டொம்க்கு டொம்க்குகளை அடிக்கவைத்து, செவிகளைக் கிழிப்பதும் – தமிழனின் பிரத்தியேக உரிமை.

வீடுகளில் பேசுவதானாலும் சரி, குழந்தைகளுடன் பேசுவதானாலும் சரி, கணவன் – மனைவி ‘உரையாடல்களானாலும்’ சரி – நம்மால் குரலை உயர்த்திப் பேசாமல் இருக்கவே முடியாது.

பேருந்துகளிலும் சரி,  செல்ஃபோன் உரையாடல்களானாலும் சரி – மற்றவர்களின் காதைக் கிழிக்க ஓசைபெருக்குவதிலுள்ள  நம் ஆர்வமே அலாதிதான்.

இணையத்திலும் தன் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் மிகவும் உரக்கக் காண்பித்துக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனே… எந்தவொரு தொழில் நுட்பத்தையும் கலாச்சாரக் கூற்றையும் உரத்த ஒன்றாக மாற்றுவதில்,  புளகாங்கிதமடைவதில்   திராவிடத் தமிழனுக்கு நிகர் யார்?

தமிழச் சிந்தனை கூட, உள்நோக்கி இருக்காது. அதுவும் ‘உரத்த’ சிந்தனைதான்.

ஆக, பொதுவாகவே சுரணையற்ற கவைக்குதவாத மனவலியில்லாத மரத் தமிழனுக்கு எஞ்சி இருப்பது உடல்வலி  அல்ல. வெறும் தலைவலி  மட்டுமே!

இதற்கான முதன்மைக் காரணத்தை – உங்களுக்கு நான் தெரிவிக்கவும் வேண்டுமோ? அதுதான் அய்யாமார்களே, அம்மணிகளே – நம்முடைய அழகான செல்லத் தறுதலையான திராவிடக் கலாச்சாரம்! அதன் ஓசைபெருக்கிகளுடன் கூடிய அடுக்குமொழி-பொறுக்கி நடை.

இந்தியாவில் பிற மாநிலங்களிலும் ஓரளவு இந்த சத்தக் கலாச்சாரம் இருக்கிறதுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நம் தமிழகத்தில், இது அதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

-0-0-0-0-0-0-0-0-0-0-

இந்த கண்டமேனிக்கும் உரத்த ’கத்தி’  செய்யக்கூடிய செயல்பாடுகள் என்பவற்றை உரக்கப் பேசுவது என்று மட்டுமே விரித்துப் புரிந்து கொள்வது சரியாக இருக்காது என்பதையும்  இங்கு தெரிவித்து விடுகிறேன்.

உடை உடுத்துவதிலும் உரத்த செயல்கள் – கறைபடிந்த கரங்களும் வேட்டிகளும் பவனி வருவது. எம்ஜிஆரிய, ரஜினிகாந்தனைய, அரைகுறை விஜயனைய உடுப்புகள் அணிவது…

உரத்த போஸ்டர்கள், ஃப்லெக்ஸ்தட்டிகள், கட்அவுட்கள், அட்டைக் கோட்டைகள், கொத்தளங்கள்…

அரசியல்வாதிகள்,  நடிகர்கள் முதல் அவர்களின் வழித்தோன்றி அடிவருடி ஒழுகும் நாமெல்லாம் கொண்டாடும் ஆபாசமான உரத்த கொண்டாட்டங்கள்…

ஆபாச நடிகர்களின் (மாதவன், விஜய் இன்னபிறர்) சொல்படி ஆபாசமான நகைகள் அணிவது.

வீட்டிற்கு வண்ணம் பூசுவதில் கூட ஆபாச, உரத்த நிறங்கள்…

வீட்டிற்குள் இருக்கும் வரவேற்பரைகளில் (=ஹால்) ஆபாச உரத்த நாற்காலிகளும்,  டீமேசைகளும், காகிதக்கூழ்ச் சிற்பங்களும்…

… எங்கே போயிற்று, இயல்பாகவே நம்மிடம் இருக்கவேண்டிய, நிச்சயம்  ஒருகாலத்தில் இருந்த நம் அழகுணர்ச்சி?  சகல துறைகளிலும் நாம் அதிஉரக்கச்  சறுக்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?

-0-0-0-0-0-0-0-0-0-0-

பெர்னார்ட் பேட் அவர்கள் எழுதியுள்ள, நாம் தமிழர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகத்தில் இந்தக் கேள்வியை நோக்கிய சில சிந்தனைகள், என்னைப் பொறுத்தவரை, இருக்கின்றன…

தமிழ் மேடைப்பேச்சும், திராவிட அழகியலும்: தென்னிந்தியாவில்  நடைமுறை ஜனநாயகம் / பெர்னார்ட் பேட் / 2009 / கொலம்பியா பல்கலைக்கழகப் பதிப்பகம் / சுட்டி

தமிழ் மேடைப்பேச்சும், திராவிட அழகியலும்: தென்னிந்தியாவில் நடைமுறை ஜனநாயகம் / பெர்னார்ட் பேட் / 2009 / கொலம்பியா பல்கலைக்கழகப் பதிப்பகம் / சுட்டி

இப்புத்தகத்தின் ஒரு எளிமைப் படுத்தப்பட்ட சாராம்சம்: தமிழ் அரசியல்மேடைப்பேச்சின் செந்தமிழ் ஊடான (என் வார்த்தைகளில்: அடுக்குமொழி பொறுக்கிநடை) வளர்ச்சி. கொச்சைத் தமிழுக்கும் திராவிட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட செந்தமிழுக்கும் உள்ள உறவு; அக்காலக் கற்பனை தமிழுலகானது, அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளிலும் மகாமகோ உச்சங்களை எட்டியமையைக் குறித்த வார்த்தைச் சிலம்பாட்டங்கள்; நவீனத் தமிழ் அரசியலுக்கும் உள்ளீடற்ற செந்தமிழுக்குமுள்ள — ஆர்பாட்டங்கள், ஆரவாரங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள், முழக்கங்கள், கொள்கைகள், போற்றிப் பாடும் வணங்கி மகிழும் கவிதைகள்/பேச்சுகள் உள்ளிட்ட அரசியல் சடங்குகள் – முதலியவைகளூடேயான  உறவு; கற்பனையான பாரம்பரியங்களைக் தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டு எப்பொழுதும் ‘அந்தக் கால மேன்மை’ பற்றிய பொய்க் கனவுகளில் ஊடாடிக் கொண்டிருந்து இன்றைய நிதர்சனங்களை மூழ்கடிப்பது…

…இப்புத்தகத்தை, மேலோட்டமாகப் படித்தால், இது ஒரு சாதாரண மயிர்பிளக்கும் ஆய்வுப் புத்தகம் எனத்தான் தோன்றும். என்னுடைய சாராம்சம் தவறாகக் கூடத் தோன்றும். ஆனால், மறுமுறை இதனைப் படித்துப் பார்த்தால்தான் இதன் கூரிய விமர்சன நோக்கு புரியும்.

அதே சமயம்  நாம் — மடகாஸ்கர், அமெரிக்க நீக்ரோ தொடர்பான மேடைப்பேச்சுப் பாரம்பரியங்கள் சம்பந்தப் பட்ட கீழ்கண்ட புத்தகங்களை, ஒரு ஒப்பீட்டிற்காகப் படித்தோமானால்தான் – நம்முடைய செல்ல திராவிட இயக்கமானது உள்ளீடேயற்ற ஒரு அடுக்குமொழியை வைத்துக் கொண்டு தமிழகத்தை ஒழித்துக் கொண்டிருப்ப்பது தெரியவரும்.

Political Oratory and Cartooning: An Ethnography of Democratic Processes in Madagascar/ Jennifer Jackson / Wiley-Blackwell /2013  Lift every voice: African American oratory, 1787-1900  / Philip Sheldon Foner, Robert J. Branham / University of Alabama Press / 1998

Political Oratory and Cartooning: An Ethnography of Democratic Processes in Madagascar / Jennifer Jackson / Wiley-Blackwell /2013 AND
Lift every voice: African American oratory, 1787-1900 / Philip Sheldon Foner, Robert J. Branham / University of Alabama Press / 1998

திரும்பச் சொல்கிறேன் – அடுக்கு மொழியால், அற்ப நடையால் கண்டெடுக்கப் பட்ட வளர்க்கப்பட்ட  திராவிட இயக்கத்தின் உள்ளீடற்ற செந்தமிழானது தமிழை, தமிழகத்தை அதலபாதாளத்துக்குத்தான் தொடர்ந்து இட்டுச் சென்று கொண்டிருக்கிறது…

ஏனிப்படியானது? முன்னர் நாம் இப்படி இருந்ததாகத் தெரியவில்லையே. வேதனையாக இருக்கிறதே!

கொஞ்சம் யோசித்ததால் — இப்போது, இணையத்தை யாசித்து,  இன்னும் கொஞ்சம் அசைக்க முடியாத அடிப்படைப் புகைப்படத் தரவுகளைக் ;-) கொண்டு மேலதிகமாக எழுதுகிறேன்.

மேலிருந்து கீழாக, பின்னர் இடமிருந்து வலமாக...  திருமாவளவனாரின் நுரை பொங்கும் மைக்கு மிரட்டல்,  ராஜேந்தரில் கரடிக் கத்தல், கருணாநிதியின் அடிக்கறாங்க அடிக்கறாங்க,  ரஜினிகாந்தின் உரத்த உடுப்பு, சீமாரின் உரத்த முட்டி,  விஜயகாந்தின் உரத்த வெடிப்பு,  வடிவேலுவின் உரத்த நடிப்புக் கடிப்பு,  பட்டி மன்றக் கத்தல்கள், கட்டபொம்ம சிம்மக்குரலோன், வைகோவின் ரோமாஞ்சன மாஜினிப் பேச்சு, செந்தில்-கவுண்டமணி உரத்த நடிப்புக் கடுப்பு, புலிச்சீறல்...

மேலிருந்து கீழாக, பின்னர் இடமிருந்து வலமாக… திருமாவளவனாரின் நுரை பொங்கும் மைக்கு மிரட்டல், ராஜேந்தரில் கரடிக் கத்தல், கருணாநிதியின் ‘அடிக்கறாங்க அடிக்கறாங்க’, ரஜினிகாந்தின் உரத்த உடுப்பு, சீமாரின் உரத்த முட்டி, விஜயகாந்தின் உரத்தகுடி மப்புவெடிப்பு, வடிவேலுவின் உரத்த நடிப்புக் கடிப்பு, பட்டி மன்றக் கத்தல்கள், கட்டபொம்ம சிம்மக்குரலோன், வைகோவின் ரோமாஞ்சன மாஜினிப் பேச்சு, செந்தில்-கவுண்டமணி உரத்த நடிப்புக் கடுப்பு, புலிச்சீறல் (அல்லது புலிக் கொட்டாவியா இது?)…

… நம் கந்தறகோளக் கலாச்சாரத்தின் உரத்த பிரதிநிதிகள் இப்படி இருக்கும்போது, அய்யாமார்களே, நமக்கெங்கே அமைதியும் சுபிட்சமும் வளர்ச்சியும் வாய்க்கும்? சொல்லுங்கள்.

-0-0-0-0-0-0-0-0-

இந்தச் சாளரத்தின் இன்னொரு உபசாளரம்/விளைவு: தமிழர்களால் உரக்கச் சொல்லப் படுவது அல்லது செய்யப்படுவதானது – அது எப்படிப்பட்ட குப்பையாகவும், நேர்மையற்றதாகவும் இருந்தாலும் — உன்னதமாகிவிடும், உயர்வு பெரும்; இப்படிச் சொல்வது திருப்பித் திருப்பிச் செய்யப்பட்டால், அதுவே முடிவில், முழுமுதல் உண்மையாகிவிடும்.

எடுத்துக் காட்டுகள்:

  1.  ‘புனித’ தாமஸ் இந்தியா வந்தார். வந்து மயிலாப்பூரில் வசித்தார். வசித்து மதபோதகம் செய்கையில், பார்ப்பனர்களின் வெறுப்பைச்சம்பாதித்தார். சம்பாதித்ததால் பரங்கி மலையில் கொல்லப்பட்டார்.
  2. நாமறியும் அறிவியலும், கணிதமும், தத்துவமும், ஜனநாயகமும் – கிரேக்க/ஐரோப்பியர்களின் கொடைகள்.
  3. திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் சுயம்புவாக லெமூரியாவில் உதித்தனர். ஏனைய மற்றவர்கள், வந்தேறிகள்.
  4. திராவிட இயக்கம் தமிழகத்தின், தமிழர்களின் மேன்மைக்கு ஆற்றும் பங்கு பெரிது.
  5. வெள்ளைக்காரன் வராவிட்டால் இந்தியதேசம் என்று ஒன்றே இல்லை. வளர்ச்சியே இருந்திருக்காது.
  6. கனிமொழி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் கவிஞர்கள். (அவர்களே  சொல்லிக்கொள்கிறார்கள் வேறு)
  7. எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இலக்கியக் காரர்கள். (— மேற்கண்டபடியே —)
  8. கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு ஆற்றும் உதவி அரிது, பெரிது. மேலும் ‘லஞ்சம் ஊழலுக்கு அவர் நெருப்பு.

-0-0-0-0-0-0-0-0-

தமிழகத்தின் கத்தி கலாச்சாரம்: தொன்மவியல் வரலாறு அகழ்வாராய்ச்சி சாட்சியங்கள்

பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி: கல்தோன்றி மண் தோன்றாக் காலங்களிலிருந்து தமிழர்கள் கத்திக் கத்தியே தான் போர்களில் சண்டை போட்டிருக்கிறார்கள். நாடோடி மன்னன், மனோகரா, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பண்டமிழ் செவ்வியல் சார் திரைப்படங்களில், கதாநாயகன் ஒரு பஞ்சுமிட்டாய்க்கலர் பாவாடையைக் கட்டிக்கொண்டு, உதட்டில்மேல் மீசையை வரைந்துகொண்டு,  கயவர்களை ஒழிப்பதற்குக் கத்திச்  சண்டைதான் போடுகிறான் என்பது, இங்கு குறிப்பிடத் தக்கது.

கத்தீட்ரல்: ஆனானப்பட்ட வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் கூட, தமிழ் நாட்டு நகரங்களில் அமைத்துள்ள பெரிய வழிபாட்டிடங்களுக்கு, சர்ச்சுகளுக்கு கத்தீட்ரல் என்று பெயரளித்து பின்னர் அவர்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் உள்ளே கத்திக் கொண்டே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதைக் கத்தி + ஈட்டி + இரல் என்று பகுத்து விரித்தால்,  கத்தி சுவிசேஷங்களை ஜெபித்து, ஆன்மாக்கள் அறுவடை செய்யப்பட்ட விசுவாசிகளிடமிருந்து பொருள் ஈட்டி  சுகமாக இருத்தல்  என்பது தெளிவாகத் தெரியும்.

கத்திப்பார்ரா ஜங்க்‌ஷன் மேம்பாலம்: இது சென்னை கிண்டியில் உள்ளது; போக்குவரத்து மேலாண்மைக்காக, நெரிசலைத் தவிர்ப்பதற்காக என இது கட்டமைக்கப் பட்டுள்ளது என்பது ஐதீகம். பார்க்க: http://commons.wikimedia.org/wiki/File:Kathipara.jpg

மேற்கண்ட படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? உறையிலிருந்து உருவிக் காண்பிக்கப்படும் கைப்பிடியுடன் கூடிய நான்கு கத்திகளை அலங்காரமாக ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்திருப்பது போலத் தெரிகிறதல்லவா? இதற்கு வியாக்கியானமாக  — உருவிய கத்தியுடன் பண்டமிழன் ‘பாரா உஷார்’ என்று கத்திக் கொண்டே (சொல்லியபடியே என்றெல்லாம் இல்லை) ரோந்து வர, பயிற்சி கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்த இடம் இது என்றெல்லாம் கதை அடிக்கிறார்கள்.

ஆனால், உண்மையே வேறு! அகழ்வாராய்ச்சிகளின் மூலமாக குவலயபீடம் மகாநாராயணன் அவர்கள் (இவர்,  அகழ்வாராய்ச்சி அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் உடன்பிறவா சகோதரன் என்பது குறிப்பிடத் தக்கது) தெளிவு படுத்துவது என்னவென்றால், பொதுவாக, அக்காலங்களில் — ஒருசேர, சோழி, பாண்டியாடிய பண்டமிழ் மன்னர்கள் ஒருவரோடொருவர் பொருதி தங்களை மாய்த்துக் கொள்வதற்குப் பதிலாக, புறநானூற்றுக் கந்தறகோள வீரத்தைக் காண்பிப்பதற்குப் பதிலாக, இந்த மேம்பாலம் இருக்கும் இடத்திற்கு வந்து, யார் மிகமிக உரக்கக் கத்துகிறார்களோ அவர்களே கெலித்தார்கள் எனக் கொண்டாடினர்.

இவ்வீரக் கத்தி விளையாட்டின்போது – ஒரு அரசனானவன், எதிர் நாட்டரசனை நோக்கி ‘ நீ கத்திப் பார்றா’ எனச் சொல்லுவதே முறை. எதிர் நாட்டரசன் கத்தியதும், இந்த நாட்டரசன் கத்துவான் – யார் உரக்கக் கத்துகிறார்களோ, அவர்களே கெலித்தவர்கள் எனக் கருதப் படுவார்கள்.

இப்படித்தான் ஆரம்பித்த பழம்பெருமையுடைத்த இந்த வீரத் திருவிளையாட்டு, தற்போது கத்திப்பாரா மேம்பாலமாகச் சுருங்கி அதன் வரலாற்று வேர்கள் மழுங்கடிக்கப் பட்டுள்ளன; நம் தமிழர்களுக்கு வரலாற்றறிவு என்றால் லிட்டர் எவ்வளவு விலை என்று கேட்பது பழக்கம் என்பது, உங்களுக்குத் தெரியாததல்ல. :-(

கொசுறுச் செய்தி: கத்திப்பார்ரா ஜனார்த்தனம் என்று ஒரு வீரர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்துவந்தார். இவர், திராவிட ஆரியத் திரைப்படங்களில் பாடல்பலபெற்ற மாதரசியான  மேதகு மறைதிரு வைஜயந்திமாலா பாலி அவர்களின் தளபதியாக, தன் பெயருக்கேற்ப அவரை ஆதரித்து உரத்துக் கத்திக் கொண்டே இருந்தார்.  (திருமதி பாலி அவர்கள் அப்போது இருந்த 1,000,000,008  தமிழக காங்கிரெஸ் குழுக்களில் ஒரு குறுங்குழுவின் முதுவரசியாக  இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.)

ஈழ அனுதாப உரத்த அழுகைகள்: தமிழகத்தில் இருக்கும் தமிழர்களாகிய நாம், அவ்வப்போது உரத்த சோகத்துடன் விடும் போலிக் கண்ணீரினால்தான், ஈழத் தமிழ் உறவுகளை எண்ணி பல மில்லியன் லிட்டரளவு நீலிக் கண்ணீரினால்தான்  தமிழகத்தின் நீர்ப்பஞ்சம் சமாளிக்கப்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.

ஆ! ஒரு விஷயத்தை மறந்து விட்டேன் – இந்தக் கவைக்குதவாதஈழ அனுதாப  திராவிட விக்கிவிக்கி விம்மிவிம்மி அழுதல்களிலேயே, மிக முக்கியமானது உரக்க அழும் சாதாரண அழுகையல்ல! அதுதான் நம் தானைத்தலைவரின் மிக உரத்த ‘மௌன அழுகை’. இதனை  எப்படி நாம் மறக்க முடியும், சொல்லுங்கள்.

-0-0-0-0-0-0-

ஆக, தமிழக் கலாச்சாரம் என்பது ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து’  நாம் தமிழர்களால் உரத்து உச்சாடனம் செய்யப்படுவதுதானே?

QED.

… அடுத்த சாளரம்தான் (இப்போதைக்கு) கடைசிச் சாளரம். (ஸ்ஸ்ஸ்… அப்பாடா!)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

10 Responses to “தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே!”

  1. சான்றோன் Says:

    அய்யய்யோ……

    கடைசியில் என் வேண்டுகோளை முற்றாக புறக்கணித்துவிட்டீர்களே…..?.

    ”.தமிழர்களாகிய நாம் எப்படி இவ்வளவு உயர்வாக இருக்கிறோம் ” என்ற கட்டுரையை எழுதாமலே கடையை கட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே……?

    இனி பூவண்ணன் அவர்களின் கருத்துக்களையும் லிங்க் மழைகளையும் நான் எப்படி சமாளிப்பேன்?

    தயை செய்யுங்கள் சார்…….

  2. சான்றோன் Says:

    போச்சு …..போச்சு…..

    அததனை கோடி பணத்தை செலவு பன்னி மாநாடு நடத்தி பலனில்லாம போச்சே….. இத்தனை கத்தி என்ன பயன் ? திருச்சி மாநாட்டில் கத்திய கத்தல்களை குறிப்பிடாமல் மறைத்துவிட்டீர்களே?

    ஈ.வே.ரா திருச்சியில் பிறந்தார் என்ற குஸ்பு போன்றோரின் முத்தான கருத்துக்களை இப்படி புறக்கணிப்பது நியாயமா?

    ஹ்ம்ம்ம்ம்ம்…..எல்லாம் ஆரிய , பார்ப்பன , வந்தேறிகளின் சதி…….

  3. ஆனந்தம் Says:

    ஒத்திசைவார் டமிளர்கலின் கள்ளாசாரத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றை மறந்துவிட்டார்- நம் டமிள் மாணவ மணிகள் பொது இடங்களில் உண்டாக்கும் மீஒலித் தொல்லைகள். (தனியொரு சாளரம் (n/n?) போட வேண்டிய விஷயம் அது.) இதிலிருந்து இந்தக் கட்டுரை ஆசிரியர் முக்கியமான கள்ளூரி (கள்ளூறிக் கொண்டே இருப்பதால் அதற்கு அப்படிப் பெயர் – வோட்காப்புகல் தொல்காப்பியர்) ரூட்டுகள் எதிலும் பஸ் பயணம் செய்ததில்லை என்பது எனது ஆராய்ச்சி முடிவு.

  4. பொன்.முத்துக்குமார் Says:

    இன்னொண்ணு உட்டுட்டீங்களே, “ஒலகத்தின் மொத கொரங்கே தமிழ்க்கொரங்குதான்”

    ஆனாலும் ஒங்களுக்கு ரொம்ப இது. தமிழனோட தனி சொத்தை பத்தி – தனி உடைமையை பத்தி இப்படி உரக்கவே நக்கல் அடிக்கிறீங்களே.

    இப்படி உரக்க கத்துறத உட்டுட்டா ??? அப்புறம் என்ன இருக்கு மிச்சம் இங்க ? என்னது ? படிப்பு, கலா ரசனை, அழகியல் உணர்வு இதையெல்லாம் வளத்துக்கணுமா ? வளத்துகிட்டா அப்புறம் உரக்க கத்த முடியாதா ? அட போங்க சார் இதெல்லாம் யாருக்கு வேணும் பிச்சாத்து.

  5. N.பக்கிரிசாமி Says:

    இந்தக் கட்டுரையில் தாங்கள் கூறுவது ஒத்துக்கொள்ளக் கூடியவைகள்தான். ஆனால் பின்னூட்டத்தில் வரும் சத்தம்தான் சகிக்கமுடியவில்லை. உங்கள் கட்டுரையின் மதிப்பையும், உள்நோக்கத்தையும் திசை திருப்புகிறது.


    • அய்யா பக்கிரிசாமி அவர்களே!

      என்னையே பொறுத்துக்கொள்ளக் கூடிய மனோதிடம் வாய்க்கப் பெற்றுள்ள உங்களுக்கு பின்னூட்டங்களின் சப்தங்களையா பொறுத்துக் கொள்ள முடியாது? :-)

      அன்புடன்,

      _ரா.

      • N.பக்கிரிசாமி Says:

        தங்களைப் பற்றி தாழ்வாக எண்ணுகிறீர்களா? பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பொய் எதுவும் தாங்கள் சொல்லவில்லை என்று நம்புகிறேன். அப்படித் தங்களாலும் பொறுத்துக் கொள்ள முடிந்தால் அனைத்து பின்னூட்டங்களையும் மறுப்பின்றி அனுமதிப்பிர்களே.

      • T.S. Ravi Says:

        Mr. Pakkirisamy,

        If you do not like the comments, you need not read it. Do you expect the author to moderate the comments as per your convenience?

      • Packirisamy N Says:

        The same goes to you as well Mr.T.V.Ravi


  6. Dear TS Ravi, Packirisamy, please relax, okay? :-)

    Each unto his own, and we all die our many private deaths before we actually become dust.

    I do not have any problem with comments, as long as they are not malicious. And, things said in jest, should be considered just so. I normally do assume goodwill, unless repeatedly forced otherwise. I refuse to get wounded or hurt easily at the slightest pretext. So, may be I should publish some of the hatemail that I normally receive and laugh off. May be not. If I do, they would make an interesting read and a sad commentary on the state of the discourse in our friendly TN.

    I normally have some young friend of mine moderating / approving comments and there are some slips-up, I must agree. There are weird and rabid comments as part of the discussion/comment thread of one of the previous posts that I duly acknowledged but did not remove – see: https://othisaivu.wordpress.com/2014/01/26/post-326/#comment-1710

    So there. I prefer some comment activity as opposed to turning them off in toto. May be one of these days, I will make this a private blog, dunno.

    Thanks, and let us please keep up reasonable conversations, sarcastic comments and snide remarks going – and believe me, we can all laugh it off…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s