சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும்
December 3, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (12/n)
இந்தச் சாளரம் எனக்கு ஒவ்வொரு தடவை யோசிக்கும்போதும் மிகமிக மிக ஆச்சரியம் தரும் விஷயம்; உலகில் வேறெந்தப் பண்பாட்டுக்கும் இந்த மாதிரிக் கேவலமான நிலையில்லை என்றுதான் என் எண்ணம்…
சாளரம் #6: தமிழர்களாகிய நாம், நேரடியாக, நேரடியான அல்லது அவதானித்த அனுபவங்கள் / சிந்தனைகள் / கோட்பாடுகள் பெறுவதை விட, அவற்றின் தர்க்கரீதியான வளர்த்தெடுத்தல்களை விட — கடன் வாங்கிய, இன்னொருவரால் ‘கோனார் உரை’க்கப்பட்ட, தரகு வேலை செய்யப்பட்ட விஷயங்களையே விரும்புகிறோம். நமக்கு இம்மாதிரி சாணிக்காகிதப் பதவுரைகளும் விரிப்புரைகளும் இல்லையென்றால், நம்மால் வாழ்க்கையையே நடத்த முடியாது.
இந்தக் கடன்கோட்பாடுகளுக்கு எதிராக ஆயிரம் நிதர்சன, பிரத்யட்ச உண்மைகள், மறுக்கமுடியாத தரவுகள் இருந்தாலும், பின்னவை நம் தமிழுலகில் ஒரு பொருட்டே இல்லை. மேலும், இந்தக் கோனார் உரைகள், வசீகரம் உடையவர்களால் (எகா: திரைப்படக்கார வசீகரக் குளுவான்கள் இன்னபிறர்; பெரியார், அண்ணா போன்ற, இயக்கத் தலைவர்களல்லாத, அரசியல் தலைவர்கள்) விளம்பப்பட்டால் அவை இன்னமும் சக்தி வாய்ந்தவையாக மாறி மக்களின் செயல்பாட்டை, சிந்தனைப் போக்கை மாற்றி, மழுங்க அடிக்கக் கூடியவை.
மேலதிகமாக, இம்மாதிரி வசீகரத் தலைவர்களால் செய்யப்பட்ட உரைகளுக்கு, ஊடகங்களின் அசமனமான குயுக்திக் குவிமையமும் கிடைத்தால் (எகா: “அடிக்கறாங்க, அடிக்கறாங்க...”), நாம் பொதுவாக மூளையைச் சுத்தமாக உபயோகிக்காமல் சுத்தமாகக் துடைத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு – கடன் வாங்கிய கருத்துகளில், அவற்றின் திணிப்புகளில் கேள்வியே கேட்காமல், திளைத்துக்கொண்டிருப்போம். (We, the people, specifically us Tamils – prefer inter-mediated experiences to direct experiences – and our interpretations understanding of our life and reactions thereof are, all about how some significant, charismatic OTHERS tell us of THEIR inter-mediated experiences. So, often times we go rather GROSSLY wrong)
எடுத்துக்காட்டுகள்:
நாட்டில் என்ன நடந்தாலும், அது பற்றி சினிமா நடிகர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்பது. அந்தக் கருத்துகளின் மூலமாக மட்டுமே தொடர்புள்ள விஷயங்களைப் பார்ப்பது…
சுமார் ஒரு வருடமுன்பு என நினைக்கிறேன் — பாண்டிச்சேரியில் ஒரு உணவகத்துக்கு (ஹோட்டல் சற்குரு) ஒரு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். அங்கு எனக்குப் பக்கத்து மேஜையில் ஒரு இளம் திரைப்பட நடிகை (சுமார் 20 வயதிருக்கலாம்; மலையாளம் அல்லது வடக்கத்திக்காரர்; அவருடைய பெயர் மறந்து விட்டது, என்ன கொடுமை!), ஒரு குழுவினருடன் உட்கார்ந்துகொண்டிருந்தார்; ஏதோ சில பத்திரிக்கைக்காரர்கள் கேமராக்களுடன் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவரிடம் கூடங்குளம், அணுவுலை, ஸ்ரீலங்கா பிரச்னை எனப் பொதுப்பிரமை சார்ந்த கேள்விகளைப் படுஸீரியசாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்?” “ஒங்களுக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இருக்கா மேடம்?” “அந்த நடிகையைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” “இலங்கைப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது மேடம்?”
அனைத்துக்கும் அவர் அழகாகச் சிரித்துக்கொண்டே ஏனோதானோ என அபத்தமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். நிருபர்களும் அவற்றை வேதவாக்காக எடுத்துக்கொண்டு பரக்பரக்கென்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நிருபர்கூட ஒரு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கவில்லை. அந்த நடிகைக்குத் தெரிந்திருக்கக்கூடிய விஷயங்கள் பற்றியும் கேட்கவில்லை. அந்த நடிகையும் அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அடுத்த நாள் அவருடைய பேட்டி ஒரு தினசரியில் வந்தது என என் நண்பர் – இவருடன் பேசுவதற்காகத்தான் நான் அந்த உணவகத்துக்குச் சென்றிருந்தேன் – சொன்னார். அதற்கடுத்த வாரங்களில் சில வாரப்பத்திரிகைகளிலும் வந்தது. சில பகுதிகளைப் படித்துக் காண்பித்தார். பாவமாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் – அந்த எழவெடுத்த ஹிக்ஸ் போஸான் (=‘கடவுள் துகள்!’) என்ன பாவம் செய்ததோ – அதைப் பற்றி அந்த நடிகையிடம் யாரும் கேள்வி கேட்கவுமில்லை, அவராகவாவது ஏதாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? அவரும் ஒன்றும் கருத்துதிர்க்கவில்லை. பாவம் இந்தத் துகள். அநாதரவாக விட்டுவிட்டார்கள். :-(
ஒரு நடிகை இவற்றைப் பற்றிப் பேசக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவருக்கு என்ன வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறதுதான்! அறிவியல் தொழில்நுட்பம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் எவ்வளவோ பேர் கூடங்குளம் பற்றிக் கருத்துகள் சொல்வதில்லையா என்ன? காந்தி பேர் சொல்லிக்கொண்டு நரைத்த தாடியும் இருந்தால், அணுக்கருவுலை, யுரெனியம், ப்லூட்டொனியம், காம்மா கதிர்கள், என எவரும் கலந்தடித்துவிட்டுப் பேசலாமல்லவா? எனக்கும் காந்தியைப் பிடிக்கும். இயற்கையும் கூட ஒத்துழைத்து தாடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே, நானும் ஒரு அணுக்கருவுலை இயற்பியல் விஞ்ஞானிதான்! எங்கேடா நான் போட்டுக்குடுத்த ரியாக்டர் டிஸைன்? அந்த ரஷ்ய அணுவுலை எல்லாம் சும்மா பம்மாத்து!! அதயெல்லாம் இட்ச்சுத் தள்றா!!!
… இதேபோல, இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத குளுவான்களெல்லாம் தமிழில் இலக்கியம் இனிமேல்தான் எழுதப்படவேண்டும் எனச் சொல்வதில்லையா என்ன? இரண்டு வெள்ளைக்காரப் பட அற்பங்கள் பார்த்துவிட்டு, தமிழில் இனிமேல் தான் திரைப்படங்களை எடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று மேட்டிமைத்தனத்துடன், அழகியல்களில் பலவகைகள் உள்ளதை அறியாமல், பினாத்துவது இல்லையா என்ன?? ஆனால் இவர்களைப் பார்த்து நம்மில் சிலபேர் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கக் கூடும். ஆக, சிலசமயம் இவர்கள் சொல்வதைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிப்போம்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம்: திரைப்பட நடிகர்கள், வசீகரமிக்கவர்களாக கருதப்படுபவர்கள், இவர்களின் ‘லெவெலே’ வேறுதான் – ஆகவே, அவர்கள் என்ன சொன்னாலும், பதில் பேச்சு பேசாமல் நாம் அப்படியே ஏற்றுக்கொள்வோம்; . நமக்கு ‘அவன் வெள்ளை கலர்ல ’செவப்பா’ டீஸன்டா இருக்கான், அவன் பொய் சொல்லமாட்டான்’ போன்ற அபத்தக் கருத்துகள் இருக்கின்றன வேறு!
விழாக்கால / பண்டிகை நேர ஒலி/ஒளி பப்பரப்பாக்களில் சினிமா நடிகத் தொடர்பில்லாமல் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடத்த முடியாது. கேளிக்கை என்றாலே நடிகர்களின் கோனார் உரை நிகழ்ச்சிகள்தான் என்றாகிவிட்டது! சமயத்தில், க்ரிக்கெட் விளையாட்டுக்குக்கூட, கேளிக்கையினூடே சினிமா நடிகர்கள் உரை எழுதுவது நடக்கிறது.
ஸ்ரீலங்கா பிரச்னையா, காவிரி நீர், முள்ளுப் பெரியாறு இன்னபிற தகராறுகளா – நம் திரைவுலக நடிக நடிகரில்லாத சிகாமணிகளின் ‘ஒரு நாள் உரை’ யில்லாமல் இவற்றை, நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
தொலைக்காட்சிச் சேன்னல்களா – இவற்றில் பெரும்பங்கு சினிமா தொடர்பான குப்பைகள்தான் – நம் திரைப்படங்களில் ஒரளவுக்கு பேசப்படக்கூடியவை இருந்தாலும் அவை பேசப்படாமல், கேளிக்கைச் செய்திகள் மட்டுமே அணிவகுக்கும்.
வானொலி சேன்னல்களா – இவை முழுக்க முழுக்க திரைப்பட அழகுகள், பாடல்கள்தாம் – இல்லையென்றால்;, சதாசர்வகாலமும் வளவளப் பேச்சாளர்களின் மூன்றாந்தரமான அரட்டை…
… ஹலோ – ஹலோ, நான் பேஸ்றது கேக்றதா – வண்க்கம் – எப்படி இருக்கீங்க – ஏதோ இருக்கேனா – ஏங்க, சுரத்தேயில்லாமல் இருக்கீங்க – ஓ, ஒங்க மனைவி இன்னிக்குக் காலேல இறந்துட்டாங்களா – சாரீங்க ரொம்ப வர்த்தமா இருக்கும்ல – அய்யோ எனக்கு இன்னமும் கல்யாணமே ஆகலீங்க – ஆமாங்க, கேக்ரத்க்கு றொம்ப கஸ்டமாதான் இருக்குங்க – ஒங்ளுக்கு கஸ்டம்தாங்க – தனியா சமெச்சு சாப்ட்றது எவ்ளோ ப்ரச்னே, எனக்குத் தெரியுங்க, ஒரு நாள் எங் வீட்ல யாருமில்ல, நானே சமையல் பண் வேண்ட் வந்த்ருச்சி – கைய சுட்டுக்கிட்டு தோசை சுட்டு சாப்டேன் – ஹல்லோ – ஹல்லோ – இல்லீங்க அவ்ளோ சூடில்ல – ஆமாங்க, வீட்ல தனியா இருக்க பயமாகூட இருந்திச்சி – இல்லீங்க, இப்ப மனசு சரியாய்டுச்சு, எங்க இலைஞர்கலுக்கெள்ளாம் இப்ப தெகிர்யம் தாஸ்தீ… கவ்லே படாதீங்க சார்…
… இப்போ நீங்க, ஒங்க்ளுக்குப் பிட்ச்ச திரைப்பாடள் ஸொள்லுங்க, அத ஒங்களோட அன்புக்குரிய எங்க 7.5 நாட்டுசனி 00.00 எஃபெம்ல வொங்க்லுக்காக போட்றோம் – ஓ, ஒங்ளுக்கு சிவாஜிசார் பாட்னா பிடிக்மா – ‘சட்டி சுட்டதடா’வா – அவ்ரு எவ்ளோ பெரீவரு சார், ஆனா செத்ப் பேய்ட்டார் சார்!
… அந்த்க்கால தத்வப் பாட்னா பாட்தான் சார்! என் டாட்டிக்குக் கூட அவ்ற றொம்ப புட்கும் சார். நடிகற் திளகம்னா அவர் தான் சார் ஒர்ஜினல். என்ன சொல்றீங்க? நான் சொல்றத கரெட்றீங்க, தேங்ஸ்! றொம்ப நண்றி சார்!!
… சரி, ஒரு சின்ன கமர்ஷியல் ப்ரேக்குக்கு அப்றம் வொங்க பாடல், ஓக்கேங்க்ளா – ஒரு கோயம்பேடு நேயர் சொன்னாரு பூவெல்லாம் அங்க வெல கம்மியாம்! அங்கே ஒட்னே போய் ஒங்க்ளுக்குத் தேவையானத அள்ளிக்குங்க – ஜாலியா வொங்க மணைவி மேல தூவ்ங்க! ஒங்க மனைவி பெயர் என்ன சொன்னீங்க அவ்ங்க வாள்க்கைப் பயணம் முடிந்து ஒங்க பயணம் இணிதாகத் தொடர்வதற்கு வாள்த்துக்கல் – ஹலோ, என்ன சொண்ணீங்க – ஓ, தேங்ஸ் சார், ஒங்க்லுக்கும் எங்க 7.5 நாட்டுசனி 00.00 எஃபெம் சார்பாக நன்றிகல் – டட்டடா டட்டடா —
“சட்டி சுட்டதடா… கை விட்டதடா”
… நமக்கு, யாராவது செத்தால்கூட, அதற்கான பதவுரை சமாதி சமாதியாகப் பகுத்தறிவின் முன்பொழிப்புரை கொண்டு எழுப்பப்பட்டால் தான் அதனுடன் கொஞ்சமாவது அறிமுகம் இருக்கும்.
-0-0-0-0-0-0-0-0-
சரி, குமுதம், கல்கி, ஆனந்தவிகடன்களா – இவை சுமார் 35% நேரடியாகவே திரைப்பட விமர்சனம், திரைப்பட நடிகசிகாமணிகளின் சொந்த வாழ்க்கை ரகசியங்கள், பேட்டிகள் தவிர – சுமார் 10-20% திரைப்படத் தொடர்பான மறைமுகச் செய்திகள், விளம்பரங்கள், அட்டைப்படங்கள்தான் (நான் என் உறவினர்கள் வீட்டிலிருந்து பொறுக்கிய சில அண்மைய இதழ்களைப் பார்த்து பக்கங்களை எண்ணிவிட்டுத்தான் சொல்கிறேன்; குங்குமம் போன்ற முழுக் குப்பைகளை நான் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.)
மேலும், இந்தத் திரைப்படக் குளுவான்கள் அளிக்கும் ‘கிராமத்தில் இருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு, கண்களில் கனவுகளைச் சுமந்து சென்னைக்கு வந்து எத்தனையோ இடர்களுக்கிடையில் வெற்றி பெற்றேன்’ ரக சுயமுன்னேற்றக் கட்டுரைகள் வேறு. ஆக, ஒரு சராசரி இளைஞன் சுயமுன்னேற்றம் அடையவேண்டும் என்றாலும், அதைச் சினிமாத்தனமாகத்தான் அடையவேண்டும். அல்லது, ஏதாவது தொலைக்காட்சிப் புகழ் அரைடிராயர்கள் மூலமாகத்தான் கண்டுகொள்ளவேண்டும். என்ன எழவு இது!
நம் வாழ்க்கையை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் இந்தக் கோனார்கள்தாம் சொல்லிக்கொடுக்கிறார்கள். காதல்/வாழ்க்கையில் தோல்வி என்றால் தாடி விட்டுக்கொண்டு மொந்தைமொந்தையாகக் குடித்துத் தள்ளாடிக்கொண்டே இலக்கண சுத்தமாகக் கொள்கைப் பாடல்களை, தத்துவப் பாடல்களை இரவல் குரல்களில் பாடிச் செழிக்கவேண்டும். திடீரென்று காதல் முளைத்துவிட்டது என்றால் திடீரென்று உச்சஸ்தாயியில், ரெயில் / பஸ் / மலை மீது ஏறி மூச்சிரைக்காமல் பாடுவது எனப் பல கேளிக்கைகள்…
நமது அரசியலா, அதனையும் தமிழர்களாகிய நமக்கு புரிந்துகொள்ளவேண்டும் என்றால், சினிமாக்காரர்கள் உரை கொடுப்பதுமில்லாமல் அவர்களே செய்தும் காட்டவேண்டும். இப்படிச் செய்யாத அரசியல் தலைவர்கள், கட்சிகள் அழிந்துபோய் மண்ணோடுமண்ணாகி விடும். ஊக்கபோனஸாக, நமக்கு – அரசியலை சினிமாக் காரர்களாக இல்லாத ஆட்கள் எப்படி நடத்திச் செல்லமுடியும் என்பதை, எப்படி மற்ற இடங்களில் அரசியல் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. இதனால்தான் என்று நினைக்கிறேன் – நம் தமிழர்களால், மோதி எப்படி ஆட்சி செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.
… இந்தத் திரைப்படக்காரர்களின் பின்னால் அணிவகுக்கும் நம் இளைஞர்கள், தங்கள் வாழ்வின் மகத்தான, சக்திவாய்ந்த, கனவுகள் நிரம்பிய தருணங்களை, அவற்றின் செயல்வடிவங்களைக் காணமுடியும் சாத்தியக்கூறுகளை தொலைத்துவிட்டு சராசரித்தனத்தில் மிதப்பது என்பது மிக மிக மிக சோகம் தருவது.
இப்படி நம்முடைய எதிர்கொள்ளல்கள், எதிர்வினைகள், சிந்தனைகள், செயல்கள், அழகுணர்ச்சிகள், தேடல்கள் அனைத்தையும் ஆக்கிரமித்து நம் தமிழகத்தையே தடுத்தாட்கொண்டு பாலைத்திணையாக மாற்றும் வேலை, தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
இவற்றைத் தவிர நம் திருவள்ளுவரைப் பற்றிக்கூட, நமக்கு கேவலம் உரையாசிரியர்கள், அதுவும் அரசியல்பக்கவாத அரைகுறை உரையாசிரியர்கள் மூலம்தாம், மூலம் மட்டுமே அணுகவேண்டியிருக்கும் நாராசம்.
அணைகள், கடற்கால்வாய் வழிகள், கூடங்குளம், ந்யூக்ளியர் சக்தி, மின்சாரப் பற்றாக்குறை என்பதெற்கெல்லாம் தொழில்நுட்பவாதிகளின், தொழில்முறை மேலாண்மையாளர்களின் உரைகள் இல்லாமல், இருந்தாலும் அவை சீந்தப்படாமல், ப்ரொடெஸ்ட்வாலாக்களின் அரைகுறை அவியல் சினிமாக்காரப் பயவுரைகளுக்கும் மேலாண்மைத் தத்துவங்களுக்கு ஊடக ஊட்டுசக்தி கிடைப்பது – இன்னமும் சோகம்.
கம்பராமாயணம் படிக்கமாட்டோம். ஆனால் யாராவது சினிமாக்காரர் கம்பராமாயணம் பற்றிப் பேசினால் நாம் ஒருவேளை ‘வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷியோ’ எனச் சந்தேகப்படலாம். அரசியலில் பங்கு பெறமாட்டோம் – ஆனால் அரசியல்பற்றி வேறு ஒரு வசீகரத் தலைவர் பேசினால் அதனை உடனே கடன் வாங்கிக்கொண்டுவிடுவோம். திராவிடம் ஆரியம் என்று யாராவது பேசினால் நாம் ஆய்ந்து அறிய எல்லாம் முனைய மாட்டோம் – உடனே கடன் வாங்கிவிடுவோம்.
நம் கடன், கடன் பெற்றுக் கிடப்பதே! கோனார் உரையாளர்கள் வாழ்க!
தாம் திமிதிமி நந்தக் கோனாரே! தீம் திமிதிமி திந்தக் கோனாரே!
(அடுத்த பதிவில் தொடரும்…)
-0-0-0-0-0-0-
அடுத்தது… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
December 3, 2013 at 12:34
//… இந்தத் திரைப்படக்காரர்களின் பின்னால் அணிவகுக்கும் நம் இளைஞர்கள், தங்கள் வாழ்வின் மகத்தான, சக்திவாய்ந்த, கனவுகள் நிரம்பிய தருணங்களை, அவற்றின் செயல்வடிவங்களைக் காணமுடியும் சாத்தியக்கூறுகளை தொலைத்துவிட்டு சராசரித்தனத்தில் மிதப்பது என்பது மிக மிக மிக சோகம் தருவது.//
சத்தியமான வார்த்தைகள். இளைஞர்களின் சக்தி விரயமாகிக் கொண்டு இருக்கிறது ஒரு மாபெரும் சோகம் தான். தொடர்ந்து படித்து வருகிறேன். அடிக்கடி பின்னூட்டம் கொடுப்பதில்லை. :))))
December 3, 2013 at 13:58
தாங்கள் கூறுவதற்கு மறுப்பேதுமில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில், மாணவர்களுக்கு யாரை, எந்தத் தலைவரை நாம் முன் மாதிரியாகக் காட்டுவது? விளையாட்டுத்திடல்கூட இல்லாமல், சிறைவாசம் போல பள்ளிக்கூடங்கள். பள்ளியில் பகுதிநேரத் தொழில் பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். டியூஷனுக்கு வா, சொல்லித்தருகிறேன் என்று கூறும் ஆசிரியர்கள். நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இல்லை என்று கூறவில்லை. வரும் தலைமுறையினர்களை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? நல்ல குடிநீர், நல்ல காற்று – இயற்கையில் இலவசமாக கிடைக்கக்கூடியவைகள், நல்லவைகள்கூட அரிதாகிவிட்டது.
December 4, 2013 at 08:25
உண்மையில் நமது சமூகம் திரைப்படத்திற்கும், நடிக நடிகையருக்கும் தரும் குமட்டல் தரும் அதீத முக்கியத்துவம் கிட்டத்தட்ட ஒரு obsession அளவுக்கு முற்றிப்போயுள்ளது.
இதற்கு இரண்டு சமகால உதாரணங்கள் சொல்லலாம் :
1. நாஞ்சில் தனது கட்டுரைத்தொகுப்பு ஒன்றில் (’நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ – இப்பிரச்சினைக்கும் இவ்வரியையே பதில் விளக்கமாகக்கூட கூறலாம்) ஒரே ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்த பதினாறு வயது பெண்ணொருவரை கோவை பொறியியல் கல்லூரிகளுள் ஒன்று சிறப்பு விருந்தினராக மேடையேற்றி அவரது பொன்மொழிகளை கேட்டுக்கொண்டிருந்தது.
2. பதிவர் ஒருவர் சொல்லியிருந்தார். கோவையில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் வணிக மேலாண்மை பட்டப்படிப்பு மாணவர்களிடையே உரையாற்றச்சென்றிருந்தாராம் (கவனம் – புகழ்பெற்ற கல்லூரி, வணிக மேலாண்மை பட்டப்படிப்பு மாணவர்கள் மத்தியில்) இரண்டு கேள்விகள் கேட்டாராம். ஒன்று – சி.கே.பிரகலாத் யாரென்று தெரியுமா ? பதில் ? மயான அமைதி.
இரண்டு – இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் எது ? – பதில் – கேள்வி முடிக்கும் முன்பே அரங்கின் எல்லா திசைகளிலிருந்தும்.
நாஞ்சில் மேற்கண்ட தனது க.தொ-வில் ஒரு குறிப்பு கொடுத்திருந்தார் :
ஓரிரு வெற்றிப்படங்களில் நடித்துவிட்ட புதுமுக நடிகன் ஒருவன் வாங்கும் சம்பளத்தை சம்பாதிக்க மாதம் பத்தாயிரம் வாங்கும் ஒரு ஆசிரியனுக்கு 300 ஆண்டுகள் தேவைப்படும். (சற்றேறக்குறைய இதே விகிதத்தில்)
இந்த குறிப்பிற்கடுத்து கீழ்க்கண்டவாறு ஒரு கேள்வியும் கேட்டிருந்தார்.
எனக்கு நெஞ்சில் ரத்தம் வருகிறது. உங்களுக்கு ?