தோழர் – தொழில் – தோள்வலி – தொபுக்கடீர்!
July 26, 2013
இது வெளியூர் நக்ஸல்பாரிகளைப் பற்றியது அல்ல. நம்மூர் அக்மார்க் நயம்விலை ’நானும்தான்’ நக்ஸலைட்டுகளைப் பற்றியது. ஆனாலும் இக்கால வினவு தினவு பற்றியுமல்ல – அக்கால கேடயம், மனஓசை போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த சமயம்.
நிற்க, இக்கால வினவாளர்கள் அழகான வெள்ளந்தித் திரிபுவாதிகள் . பெருமுதலாளிகளின், ஏகாதிபத்தியத்தின், அமெரிக்க ராணுவவலிமையின் தயவில் உருவாக்கப்பட்டு இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் இன்டெர்நெட்டை உபயோகித்து உபயோககரமாக காலட்சேபம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். Revolution over IP என்கிற (=RoIP என்கிற) இணையத்தின் மீது கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் புரட்சிப் ப்ரொடொகாலை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும். .rev (=revolution) என்கிற உயர் நிலை வலைதளப் பகுப்பிற்காகவும் (top level domain) ஆதரவு சேகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சியை நோக்கிய தந்திரோபாயங்கள் இவை என்பது எனக்குத் தெரியவருவதால், உள்ளபடிக்கு எனக்கும் சந்தோஷம்தான்.
யோசித்துப் பாருங்கள் — நல்ல வேளை, இவர்கள் இப்படியிருக்கா விட்டால், வர்க்க எதிரிகளைக் கொன்றுகொண்டு ரத்தத்தில் (அதாவது, மற்றவர்களுடையது) நீந்திக் கொண்டிருப்பார்கள். கொலைவெறி வன்முறையைத் தவிர்த்து, எப்படியோ, நமது தேச மைய நீரோட்டத்தில் கலந்தது சரியான விஷயம்தான். அதுவரை இவர்களை மெச்சத்தான் வேண்டும். சபாஷ பசங்களா! உங்கள் பணியைத் தொடருங்கள்.
ஆறாண்டுகளைத் தாண்டி ஒடிக்கொண்டிருக்கும் வினவு.வர்த்தகம் (அதாவது vinavu.com) தளத்திற்கு சில விண்ணப்பங்கள்:
நீங்கள் ஒரு அரசியல் தரப்பை முன்னெடுப்பவர்கள் – ஆனாலும் வெறும் பாலிமிக் (polemic) – வசைபாடல்களாக மட்டுமே பல பதிவுகள் (அதாவது, நான் எழுதுவதைப் போல) வருகின்றன, ஜாதிவெறி, முதலாளித்துவம், இரண்டாளித்துவம், சினிமா கினிமா பற்றிய சாடல்கள் சரிதான் – ஆனால் நீங்கள் தூக்கிப் பிடிக்கும் போல்பாட்டீய, ஹோசிமின்னிய, குபா-காஸ்ட்ரோய, மாவோய, ஸ்டாலினீய, எங்கேல்ஸிய, மார்க்ஸீய விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாவது எழுதலாமே. நீங்கள் நம்பும் தரிசனங்களைப் பற்றி எழுதலாமே. உங்கள் பார்வையில் தமிழ் இளைஞர்கள் என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் எழுதலாமே?
சரி, இந்த விஷயங்களையே விடுங்கள். இதையெல்லாம் புரட்சிக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணமிருக்கலாம் உங்களுக்கு.
… ஆனால், உங்களுடைய — அதற்கு எதிர், இதற்கு எதிர், இதற்கு எதிர்ப்பு அதனை ஒழிப்பு, புரட்சி பூபாளம், மலர்ச்சி மத்யமாவதி, புண்ணாக்குப் புன்னாகவராளி எல்லாம் சரிதான் — ஹ்ம்ம். ஆனால், உண்மையாகவே மக்களுக்கு என்ன உழைப்பு உழைக்கிறீர்கள் என்று வினயத்துடன் வினவினால்கூட, உங்களைப் போன்றவர்களுக்கு முணுக்கென்று கோபம் வந்து விடுகிறது, என்ன செய்ய. எனக்குப் புரிகிறது: வடக்கில் நியமத் அன்ஸாரியைக் கொன்றது போன்ற அற்புதக் காரியங்கள் பலவற்றை, உங்கள் அத்தை-மாமா பையன்கள் செய்திருக்கிறார்கள், சரி. அயோக்கிய ஊழல் பல செய்வதில், அதனைத் தட்டிக் கேட்டவர்களைக் கொல்வதில் நீங்கள் எப்போதும் போல முன்னேற்றப் பாதையில்தான் இருக்கிறீர்கள்.
ஆனாலும், புரட்சிகரவாசகங்களை, புரட்சித்தீயை ரஷ்யா, சீனா கோடவுன்களிலிருந்து (அவர்களுக்குக் கூட ஒன்றும் மீதி வைக்காமல்) இறக்குமதி செய்து – அவர்களை வேறு வழியேயில்லாமல் முதலாளித்துவவாதிகளாக ஆக்கி – அதே சமயத்தில் இங்குள்ள அம்பானிகளைச் சாடுவது முறையா?
சரி, இந்த நிகழ்காலக் கந்தறகோளங்களை விட்டு, ‘அந்த நாள்,,, ஞாபகம்… நெஞ்சிலே… வந்ததே… அது ஏன் ஏன் ஏன் தோழரே’ பக்கம் போகலாமா?
-0-0-0-0-0-0-0-
ஒருகாலத்தில் இந்தப் புரட்சிக்குளுவான்களில் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தது, இவர்களுடைய சில [’ரகசியக்’ B-)] கூட்டங்களுக்கு நான் போயிருக்கிறேன், கொஞ்சம் நன்கொடையெல்லாம் வேறு கொடுத்திருக்கிறேன். உண்டியைக் குலுக்கிக் கொண்டு அல்லது நன்கொடை ரசீது புத்தகத்துடன், அல்லது அதுவுமில்லாமல் புரட்சிகர பஞ்சடைத்த கண்ணுடன் – சோகமாகப் புரட்சிகர தாடியும் ஒடுங்கிய தாடையுமாக வந்தால் என்னதான் செய்வது சொல்லுங்கள்?
‘உண்டிக்குக் கொடுத்தோர் உயிரே கொடுத்தோர்’ அல்லவா?
ஆனால், நல்லவேளையாக இப்போது எனக்கு ஒருவரையும் தெரியாது. உண்டியோ குண்டியோ — எதைக் குலுக்கிக் கொண்டு வந்தாலும் என்னிடமிருந்து ஒன்றும் பெயராது.
என்னுடைய நண்பரும் கலைஞரும் டாக்டருமான கருணாநிதி அவர்கள் சொல்லக் கூடுவது போல,
“என் உதவியில்லாமலேயே புரட்சி ஏற்பட்டால் மிகவும் மகிழ்ச்சியடைபவனே நான்தான்.
நான் மட்டும் ஒரு தொழில்முறை திராவிடவலைப்பூ பதிவாளனாகியிருக்காவிட்டால், நிச்சயம் ஒரு ‘வசந்தத்து இடிமுழக்கப்’ புரட்சியாளனாகத்தான் ஆகியிருப்பேன்!”
-0-0-0-0-0-0-0-
1991-2-ல் என நினைவு, வருடங்கள் முன்னேபின்னே இருக்கலாம் – ’தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி (TNOC)’ என ‘மாநில அமைப்புக் கமிட்டி – தமிழ்நாடு (SOC)’ அணியிலிருந்து பிரிந்து இன்னொரு குண்டுச் சட்டியில் புரட்சி செய்யப் புறப்பட்டுக் கொண்டிருந்த அணியில் இருந்த ஒரு தோழர் என்னுடன் பணிசெய்து கொண்டிருந்தார். பின் இவர் மூலமாக, சில அறிமுகங்கள் கிடைத்தன. சில சுவையான அனுபவங்களும் கிடைத்தன – அவற்றில் சிலவற்றை நினைவு கூர்ந்து, வாழ்த்த வயதிருந்தும் வணங்கியும் மகிள்கிறேன்.
ஆனால், அந்தச் சமயம், இந்தப் புரட்சிப்பாதையை விட்டு நான் விலகி சுமார் 5 ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்த விலகலுக்கு என் நல்லூழ்தான் காரணம்: முக்கியமாக, பல மதிக்கத்தக்க பெரியவர்களுடன் கொஞ்சமாவது பழகக்கிடைத்த தருணங்களும், நல்ல புத்தகங்கள் படித்துப் படிப்பினைகள் பெற்றதும், சிறிதளவு களப்பணி செய்ததும் அதன் மூலம் பெற்ற அனுபவங்களும் தான்.
… என் தோழர் பொதுவாக வாய் திறக்க மாட்டார். ஆனால் வாய் திறந்தால் புரட்சிக் கனல் வெளிப்பட்டபடி இருக்கும். ஆனால் உணர்ச்சியற்ற குரலில் உச்சாடனம் செய்வது போல ஒரு தூங்கவைக்கும் நடை.
நாமெல்லாம் வரி வரியாகத்தானே பேசுவோம்? ஆனால் தோழர், பத்தி பத்தியாகப் பேசுவார்.
பேசும்போது சிலசமயம் நம் வாயிலிருந்து எச்சில் தானே தெறிக்கும்? ஆனால் தோழர் வாயிலிருந்து வெளிப்படும் புரட்சியெரிதழல், தீக்கங்குகளைத் தெறிக்க வைக்கும், ஆண்டவா…
அதிலும் — முதலாளித்துவம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், தரகு முதலாளியம், ஏகாதிபத்தியம், குறுந்தேசீயம், போலீஸ் நாய், திரிபுவாதம், ஸிஐஏ ஏஜெண்ட், கைக்கூலி, சர்வதேசீயம், தேசீயயினம் என்பது போல சுமார் இருபது உச்சாடனங்கள் (=வார்த்தைக் குவியல்கள்) வைத்திருப்பார். எந்தவொரு பத்தியை ஆரம்பித்தாலும் இந்த புரட்சிகரக் கலைச்சொற்கள் அனைத்தும் இல்லாமல் அந்தப் பத்தியை அவரால் முடிக்கவே முடியாது.
இரண்டு பத்திகளுக்கு ஒரு முறை ‘மாநில அமைப்புக் கமிட்டி’ ஆட்களை ஒரு பிடி பிடிப்பார். எதிர்ப்புரட்சியாளர்கள், ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள், ஃபாஸ்ஷிஸ்ட்கள் என அவர்களைக் கரித்துக் கொட்டுவார். மிகவும் வெறுத்துப் போய், ஒரு தடவை இவரிடம் ஃபாஸ்ஷிஸ்ட் – உடைய ஸ்பெல்லிங் கேட்டு, அவர் அதைச் சரியாகச் சொல்ல முடியாமல் விதம்விதமாக முயற்சி செய்து, பின், கடைசியில் “என்ன தோழர் இப்படி என்ன சிறுமைப் படுத்திடீங்க” என்று பரிதாபமாகச் கேட்டவுடன், எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
… அந்நாட்களில் சில சமயம், எனக்கு முன்னறிமுகமான இன்னொரு தோழர் (இவர் ‘மாநில அமைப்புக் கமிட்டி’ காரர்), என் அலுவலகத்திற்கு வருவார். ஒரு தடவை அகஸ்மாத்தாக இந்த இரு புரட்சிக் காரர்களையும் நான் ஒருவருக்கொருவர் அறிமுகம் (= நரிமுகம்) செய்து விட்டேன். அது ஒரு ஹிமாலயத் தவறு. அவர்களுடைய முதல் சந்திப்பு ஒரு புரட்சிகரக் குடுமிப்பிடிச் சண்டையில் முடிந்து, அலுவலகத்தில், பிரசித்தமாகி விட்டது. இத்தனைக்கும் அப்போது TNOC , SOC போன்ற இரு குழுவினரையும் சேர்த்து, அதிலுள்ள அரைகுறைகளையெல்லாம் கூடக் கணக்கெடுத்திருந்தாலும், இவர்கள் மொத்தம் 95½ ஆட்கள் இருந்திருந்தால் அதிகம். இவர்களும் அந்த அணிகளில் முன்னணித் தலைவர்கள் இல்லை. இதற்குள்ளே அவ்வளவு சண்டைகள், சதிகள்!
… இந்த யுத்தத்திற்குப் பிறகு இரண்டாமவர் என்னைப் பார்க்க மதியவுணவுச் சமயத்தில் வருவதாகத் தெரிந்தால் அவரைச் சாலையிலேயே வழிமறித்து, என்னுடைய முதல் தோழருடன் சரோவரா எனும் உணவகத்திற்கு (இது அப்போது ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு எதிரில் இருந்தது) அழைத்துச் சென்றுவிடுவேன். இச்சந்திப்புகளின்போது, கண்டிப்பாகக் கீழ்க்கண்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படும்.
1. மொத்தம் அரை மணி நேரத்துக்குள் TNOC Vs SOC சச்சரவுகளை முடித்துக் கொண்டுவிடவேண்டும். உரக்கப் பேசக் கூடாது. நான் பேசவே மாட்டேன். மத்தியஸ்தம் செய்யவரவே மாட்டேன். அவர்கள் பேசுவதை மட்டுமே (சுவாரசியமாகக்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
2. அவர்களுக்கு இரண்டு ப்லேட் புரட்சிகர பூரி+கொர்மா, காப்பியுடன்; எனக்கு ஒரு ப்லேட் ரவா இட்லி, டீயுடன். (சரோவரா காப்பி சகிக்காது எனக்கு)
3. பின், முதல் தோழர் எனக்கு கேடயம், மன ஓசை வரும்போதெல்லாம் — அக்கம் பக்கம் பார்த்து, யாராவது ஒற்றுவேலை பார்க்கிறார்களா என உறுதி செய்து கொண்டபின்னர், பளபளக்கும் வெற்றிப் பெருமிதக் கண்களுடன், ஒரு பிரதி கொடுப்பார்; இத்தனைக்கும் அச்சமயம் கேடயம்+மனஓசை புற நகர் ரயில் வழித்தட நிலையங்களில் எல்லாம் வெகு சுலபமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. இரண்டாம் தோழர், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பிரதிகளைத் தொடர்ந்து கொண்டுவந்து கொடுப்பார். இவ்விதழ்களுக்கு நான் கண்டிப்பாகப் பணம் கொடுத்துவிடுவேன். அவர்களும் கண்டிப்பாக அப்பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.
4. புரட்சிகரச் சுற்றுமுறையில் உணவகச் செலவைக் கொடுக்க வேண்டும். (அச்சமயம் இந்த இரண்டு தோழர்களும் பொதுத்துறை / தமிழக அரசு அதிகாரிகளாகத்தான் பணிபுரிந்து கொண்டிருந்தனர்)
5. என்னுடைய அலுவலக நேரத்தில், என்னிடம் புரட்சி பற்றிப் பேசவே கூடாது.
-0-0-0-0-0-0-0-0-
முதல் தோழருக்கு எப்போதுமே தன் பின்னால் க்யூ பிரிவு ரகசிய போலீசார் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள், வேவு பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த உறுதி. அடிக்கடி பின்னால் யாராவது அவரைத் தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டேயிருப்பார்.
ஆனால், மிக மிக வருந்தத்தக்க விதத்தில் எப்போது பார்த்தாலும் அவர் பின் யாராவது வந்துகொண்டே இருப்பார்கள் – ஏனெனில், பொதுவாக நாங்கள் புரட்சிகர நடை பழகிக் கொண்டிருந்தது அண்ணா சாலை, பட்டுலாஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை போன்ற இடங்களில்தான். ஆக, அவருக்கு எங்கெங்கு காணினும் க்யூ பிரிவு போலீஸ்காரர்கள் தாம்.
இப்படிப் பின்னால் வரும் முத்துசாமி ராமசாமி சுப்பன் குப்பன்கள், — சம்மர்கட் வைத்துக்கொண்டு, ஷவரம் செய்த முகத்தில் பளிச் கருப்பு மீசை வைத்திருந்தால், தொலைந்தது. தோழர் நடையில் ஒரு துள்ளலும் அவசர கதியும் இருக்கும். ஏதாவது பக்கத்துக் கடையில் திடுதிப்பென்று நுழைந்து, பின்னால் வருபவரை, முன்னேற விட்டு, ”உளவாளிகள்! டிமிக்கி கொடுத்துவிட்டேன் இந்த நாய்களுக்கு!!” என அடித்தொண்டையில் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறி, விட்ட இடத்தில் இருந்து தன்னுடைய முதலாளித்துவம் பற்றிய வசையைத் தொடர்வார்…
இந்த மனிதர் படும் அவஸ்தைக் கண்றாவியைப் பார்ப்பதற்கே மனதைப் பிசையும், பாவம். “தோழர், வுட்ருங்க – அவங்க வேலைய அவங்க பண்ணிட்ருக்காங்க. புரட்சிக்கப்புறம் கூட நமக்கு ரகசிய போலீஸ்காரர்கள் தேவைப்படுவார்கள்தானே” என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
… திடீரென்று ‘ ரசியப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம்’ என மாசேதுங் எழுதிய புத்தகம், ஹூனான் விடுதலை இயக்கம், மாபெரும் விவாதம், ‘கட்சித் திட்டம்,’ போன்ற புத்தககங்களைக் கொண்டுவந்து தருவார். நான் சொல்வேன், “தோழர், இதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்திலேயே வாசித்திருக்கிறேன்; எனக்கு இவற்றின் மேலே பல விமர்சனங்கள் இருக்கின்றன. என்னிடம் இவற்றைக் கொடுப்பதற்கு பதிலாக, இதைப் படிக்கவேண்டிய உங்க ஆட்களுக்குக் கொடுக்கலாமே!”
அவர் பதிலுக்குச் சொல்வார் – “மாபெரும் விவாதம்” விலை இவ்வளவு ரூபாய்கள்!” நான் பதில் பேசாமல், என் புரட்சிகர பர்ஸைத் திறந்து புரட்சிகரப் பணத்தைக் கொடுத்துவிடுவேன். இல்லாவிட்டால் அவர் என்னை ஒருவிதமான புரட்சிகர குற்றவுணர்ச்சியில் வாடவைத்துவிடுவார்….
-0-0-0-0-0-0-0-
…. இப்படியாகத்தானே நான் ஒரு முறை இவருடன் அலுவலக மொட்டைமாடி மேல் ஏறி அதிசாகசங்கள் கண்டேன்… இப்படியாகத்தானே இவருடன் ஒரு ‘ரகசிய’ புரட்சி ஆயத்தக் கூட்டம் ஒன்றுக்கும் சென்றேன்… இப்படியாகத்தானே இந்தத் தோழர் ஒரு இரவு சிறையில் இருந்து வாடவேண்டியிருந்தது… (இந்த திடுக்கிடும் நிகழ்வுகள் பற்றிய பதிவு (அதாவது, தோள்வலி+தொபுக்கடீர்), பின்னொரு நாளில்…)
தொடர்புடைய பதிவுகள்:
July 27, 2013 at 23:50
//ஆனால், நல்லவேளையாக இப்போது எனக்கு ஒருவரையும் தெரியாது. உண்டியோ குண்டியோ — எதைக் குலுக்கிக் கொண்டு வந்தாலும் என்னிடமிருந்து ஒன்றும் பெயராது.//
//நாமெல்லாம் வரி வரியாகத்தானே பேசுவோம்? ஆனால் தோழர், பத்தி பத்தியாகப் பேசுவார்.
பேசும்போது சிலசமயம் நம் வாயிலிருந்து எச்சில் தானே தெறிக்கும்? ஆனால் தோழர் வாயிலிருந்து வெளிப்படும் புரட்சியெரிதழல், தீக்கங்குகளைத் தெறிக்க வைக்கும், ஆண்டவா…//
:D :D :D :D :D :D ROFL………
அட நான் கூட மாட்டிக்கிற சிக்கலில் இருந்தவன் தான் சார்… “தேர்தல் பாதை திருடர் பாதை.” என்று கூக்குரலிட்டுக் கொண்டு பத்தாம் வகுப்பில் ஒரு கூட்டத்தில் பிதற்றிக் கொண்டிருந்தவனை எங்க அப்பா புறமண்டையில் அடித்து இழுத்துச் சென்றார்.. அதிலிருந்து இந்தப் பொதுவுடமை புர்ச்சி என்றாலே நமக்கு அலர்ஜி….
பாரதத்தின் கூறுகளை வர்க்கப்போராட்டத்தின் மூலம் மட்டும் ஒழுங்குபடுத்திவிடவோ, தூய்மைப்படுத்திவிடவோ முடியாது என்பதை இன்னும் இந்த மங்குணிப் பாண்டிகள் உணரவில்லை என்பதே வேதனை…
இவனுங்களோட ஆட்சி வங்காளத்திலும், கேரளாவிலும் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டன என்பதைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் நாம்..
July 28, 2013 at 03:50
கிண்டலுக்குதான் என்று புரிகிறது இருந்தாலும் RoIP=Radio Over IP என்று நிஜமாகவே ஒரு ப்ரோட்டோகல் இருக்கிறது.
July 29, 2013 at 23:03
Well said. There are lot of fellows out there who find it fascinating to wear che guevara without even knowing anything. Communism is a very good thing when read in a book but the ground level politics is very dangerous . When given rule for close to 30 years,they destroyed Bengal brick-by-brick.