பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி
July 18, 2013
(அல்லது) லெமூரியாக் காலத்திலிருந்தே மறத் தமிழர்களின் செல்ல ஆயுதம் வாள் அல்ல, அல்ல, அல்ல – அது கத்தி, கத்தி, கத்திதான்!
எச்சரிக்கை: இது என்னோட சொந்த மீன்பாடி வண்டி ஃபிக்ஷன் (பயப்படாதீங்க – இது நம்ப ஆட்டோ ஃபிக்ஷனுடைய அத்தை பையன் தான்!)
பொதுவாக அறிவிலிகள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ் ஓங்கி வளர்ந்திருந்தது என்பார்கள். அவர்களைப் பாவம், மறட் டமிளர்களாகிய நாம், மறப்போம், மன்னித்தும் விடுவோம்.
உண்மையில் தமிழ் மொழி தோன்றியதற்கு முன்பாகவே தமிழ்க் கத்தி தோன்றி விட்டது என்பதை அவர்கள் அறியாதவர்கள்.
=-=-=-=-=–=
ஹ்ம்ம்… இப்போது நாம் இணையம் முழுவதும் நிரம்பி வழியும் — ஸ்ரீரங்கம் சுஜாதா காப்பிக்கடைக்காரர்கள் எழுதுவதைப் போல எழுதவேண்டும் எனத் தினவு எடுப்பதால், சில மணி நேரங்கள் பின்னோக்கிப் பயணித்து, சரக் சரக் என்று நம் புதிய தலைவலிக் கோவேறு கற்பனைப் கழுதைகளை நிறுத்தி,… ஹலோ என்று புன்முறுவலிட்டு திரு வே மாலனுக்கு வணக்கம் சொல்கிறோம்.
மந்தஹாசப் புன்னகையுடன் வே.மாலன் கேட்கிறார் – என் செல்ல ஜூனியர் கழுகுகளே, இன்னிக்கு சூடா என்ன சுட்டுக் கொண்டு வந்தீர்கள்? போன தடவை அல் ஜஸீராவிலிருந்து சுட்டீங்க, இந்ததரம் ராய்டர்ஸ் பக்கம் க்ளான்ஸ் விடுங்க. நம் செய்தி சேகரிப்புகளைப் பரவலாக்கணும், மோதி பத்தி செய்தி திரிக்கணும், பத்த வைக்கணும்… நாளெல்லாம் என்னதான் பண்றீங்கன்னே தெரியல. ஆஃபீஸ் செலவுல காலேல சினிமாப்படம் பாத்துட்டு வந்தீங்கன்னா, மாலேல ட்விட்டரை விட்டு வெளிலயே வரமாட்டீங்க போல! பக்கவடிவமைப்பு செய்யவேற இன்றைக்குத்தான் கடைசி நாள்.
கொஞ்சம் இஞ்சியை முறைப்பாக நீட்டிக் கேள்வினார், நமக்குள் ஜிவ்வென்று ஏறியதற்குக் காரணம், அளவுக்கதிகமாக கம்பெனி செலவில் சாப்பிட்ட அன்லிமிடெட் மீல்ஸ் காரணமென்று ஃபீலினோம். வாயுத் தொல்லை – பின் பக்கமாகவும் போகாமல், வாய் வழியாகவும் வரமுடியாமல் அது அடி வயிற்றில் மையம் கொண்டிருந்தபோது, சரி அதனைக் தட்டச்சு செய்து ஒரு பதிவாக இன்டர்னெட்டி விடலாம் என ஆரம்பிக்கும்போது…
டேய் வசந்த்! எங்கேடா நீ இங்க?
ஒரு அண்டரெண்டப் பட்சி இங்க இருக்குன்னு, இட்சிணி சொல்லித்து பாஸ். திடீர்னு எனக்கு ஆர்னித்தாலஜில கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்….
ஒன்னத் திருத்தவே முடியாதுடா என்றபடி வே.மாலன் பக்கம் திரும்பினால்,
ஹாய்!
ஒரு இளம்பெண் மிட்டாய்க் கலர் டாப்ஸ், டெனிம் ஜீன்ஸ். பட்டுக் கையை நீட்டி — அனுஷ்கா ஃப்ரம் பர்க்லீ, புரஃபசர் ஜார்ஜ் ஹார்ட் கிட்ட பிஹெச்டி. நான் ’பண்டைய ;தமிழர் காலத்தில் கத்தி’ என்கிற தலைப்பில் ஆராய்ச்சி பண்ணுகிறேன் என்றாள். கை குலுக்கினேன் – ப்ளீஸ்ட் டு மீட் யூ.
ஆ… வாடீ என் கெப்பக் கெழங்கே என்ற வசந்த், அவள் என்ன என்று வெடுக்கென்று திரும்பும்போது, ஒரு ஜப்பானிய முறை வணக்கம் போட்டு – வணக்கத்துக்குரிய தோழியே, வந்தனம்.
ஹ்ஹா என்றது மிட்டாய்.
தோழி, உனக்காக, உன் நட்புக்காக ரோடி கத்தி கபடா மக்கான் என்று என்ன வேண்டுமானாலும் எட்டுத் திசையும் சென்று கொணர்ந்திங்குச் சேர்ப்பேன். என் தாய் மேல் ஆணை – என்றபடி, வசந்த் என்னைப் பார்த்த பார்வையில் கெஞ்சல்…
மாலன் வெறுத்துப் போனவர், நான் மால் ஏதாவது போய் நடை பழகிவிட்டு வருகிறேன் என்றார் — நீங்க எக்கேடோ கெட்டுப் போங்க.
சூப்பர்பாஸ், பாத்துப் போங்க, மால்-ல மால் ஏதாவது கிட்ட மாட்டி லோல் படாதீங்க…
ஒன்னத் திருத்தவே முடியாதுடா, என்றார் அவரும் – பயணித்துக் கொண்டே.
டார்லிங் – நீ வா, ஒனக்கு கத்தி பத்தி. ஆதிலேர்ந்து பகவன் வரை, பின் அவர்கள் மாறாதப் பேரின்ப நீராடி, வழித்தோன்றல்கள் எப்படி வந்தன என்பதை ப்ராக்டிகலா விவரிக்கறேன். டாஜ் கொரொமாண்டல் போகலாமா?
கோபத்தில் வ்வ்வாட்? என்றது அந்த டெனிம்.
கோபித்துக் கொண்டாலும் எவ்வளவு அழகாக இருக்கிறாய் பஞ்சு மிட்டாயே, பாரிஸ் ஹில்டன் ஒன்னோட அக்காவா?
முகத்தைச் சுழித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே, யோ வஸ் டார்லிங் – ஒன்னோட ஹார்லீ டேவிட்சன் வண்டிலே போக ஆசையாகுதே என்றாள்…
=-=-=-=-=-
… ஹ்ம்ம். எனக்கு, எப்படியாவது ஒரு பதிவு தேற்ற வேண்டும். வாசகர்களுக்கு வாராவாரம் ஒரு தடவையாவது புதிய தலைவலியைக் கொடுப்பதுதானே என் வேலை?
கண்டிப்பாக பத்ரி சேஷாத்ரியிடம் பேசி, என்ன எழுதலாம் எனக் கேட்க வேண்டும் எனக் குறித்துக்கொண்டு அடிக்கோடிட்டுக் கொண்டிருக்கும்போது…
சிணுங், சிணுங் – என செல் ட்ரிங்கியது…
ஹலோ என்றால் சாட்சாத் பத்ரி சேஷாத்ரி! புல்லரிப்பு!! கார்ல் யூங்கின் ஸிங்க்ரோனிஸிட்டி பற்றி ரீனி வெபர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அவருடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே இது! ஆராய வேண்டிய நிகழ்வுதான் இது.
இதைத் தவிர பத்ரி என்னுடைய ராகுல் காந்தி பற்றிய புத்தகத்தைப் (’முட்டி மோதி னாலும், பிரதமர் ராகுல் காந்திதான்!’ – அணிந்துரை: கருணாநிதி; அணியாதுரை: கட்ரீனா கெய்ஃப்) படித்துப் பின்னர் பதிப்பிப்பதாகச் சொல்லிப் பல மாதங்களாகின்றன. இதைப் பற்றியும் கேட்க வேண்டும்.
ஒருவேளை இளையதலைமுறை இளஞ்சிங்க ராகுல்காந்தி அவர்களின் ஸிஐஐ பேச்சைக் கேட்டு மனம் பேதலித்திருப்பாரோ? ரொம்பவுமே சொதப்பி விட்டார் இதில், ராகுல். அவருடைய பேச்சினை எழுதியவர்களை மாறுகண் மாறுகொட்டை வாங்கிவிட்டிருக்க வேண்டும்.
இங்கே ’ராகுலே வருக ரொம்ப நல்ல ஆட்சி தருக’ என்று நாங்கள் திராவிட இயக்கக் கொள்கை முழக்கங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அங்கே அவர்கள்… ஹ்ம்ம்ம்ம்…
… ஹலோ, ஹலோ… பத்ரி… *ப்ச* வைத்துவிட்டார்…
யோசனைகளைத் தொடர்ந்தேன். ஹ்ம்ம்ம். திருமந்திரம் எழுதிய திருமூலர், ஏதாவது பைல்ஸ், மலச்சிக்கல், பௌத்திரம், மூலம் போன்ற வியாதிகளினால் துன்பப் பட்டதால்தான் தன் பெயரை திருமூலர் என்று மாற்றிக் கொண்டாரோ என்பதும் சந்தேகம். ஆக, யூங்குக்கும் திருமூலருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஏதாவது திருஷ்டாந்தங்கள்?
என்சைக்ளோபீடியாவைப் புரட்டிக் கொண்டே இருக்கும்போது… மாலை ஆறு மணியாகியிருந்தது. ஆஃபீஸை விட்டு வெளியே வந்து கீழ்த்தளம் நோக்கி லிஃப்டினேன்… கூர்க்காவின் மெலிதான இடுங்கிய புன்னகையுடன் சலாம். குட் ஈவனிங் சார். மெலிதாகத் தலையைச் சற்றே சாய்த்து புன்முறுவலிட்டேன்.
கீழே பார்க்கிங் லாட்டில் இருந்து, வசந்த் “அனூ, ஒனூக்கு ‘சூடான் தேசத்து சூனியக்காரி’ ஜோக் சொல்லட்டுமா” என்பது காதில் விழுந்தது. கூட அனுஷ்காவின் “சீ ச்சீ, வெக்கமா இருக்கு” என்பதும்…
அந்திப் பொழுதில், ஒரு பலூன்காரன் ஊதா நிறத்தில் ஊதப்பட்ட பலூன்களை விற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தான். சிக்கென்று சிறு தூறல் தெருவில். அட சென்னையில் கோடைமழையா? அண்ணாந்து பார்த்தால், வாயைத் துடைத்துக் கொண்டு பால்கனியை விட்டு சட்டென உள்ளே நகர்ந்தார் ஒருவர்… அசால்டா என்ன மறந்திடுன்னு சொல்லிட்டீங்களே என்றபடி உதடு துடிக்க, செல்ஃபோனித்துக் கொண்டு சிவந்த மூக்கை நாசூக்காகத் துடைத்துக் கொண்டிருந்த பளீர் வெள்ளை இளம்பெண். சார், குடிக்கக் காசில்ல சார், கொஞ்சம் பணம் வேணும் சார், என நச்சரிக்கும் குடிமகன். வய் திஸ் கொலவெறிடி எனப் பாடிக்கொண்டே அண்ணா சாலையைக் கடந்து கொண்டிருக்கும் குட்டிப் பெண். ஆடி காரின் பின் சீட்டில் ஆடாமல் இடுப்பு பிதுங்கி வழியும் சிந்திக் காரி. அம்மா–65, கலைஞர்-90 என்பதெல்லாம் தமிழன் கண்டுபிடித்த புதிய கதிரியக்க வேதியியல் தனிமங்களோ?
சரவணபவனில் 500 ரூபாய்க்கு ஒரு ஆவி பறக்கும் காப்பி குடித்து விட்டு (டம்ளரையும் டபராவையும் திருப்பித் தரவேண்டுமாமே!) அலுவலகம் போய் — எ தியரி ஆஃப் ஜஸ்டிஸ் – என்னுடன் கோலிகுண்டு கிரிக்கெட் விளையாடி, கூடப் படித்த ஜான் ரால்ஸ் எழுதியதுதான் – அதனுடன் உட்கார்ந்தேன்…
ஆஹா, எப்படி எழுதுகிறான் நம் ஜான் என்று நான் நினைத்துக் கொண்டு புன்முறுவலிட்டுக் கொண்டிருக்கும்போது…
செல்ஃபோன் சிணுங்கியது. ஓஓ – மறுபடியும் ஸின்க்ரோனிஸிட்டி!!
யார் இது? ஜான்?? – எனக் கேட்டேன்.
இல்லை. முழம் — என்று — ஒரு கருணாநிதி போன்ற உப்புக்காகிதத் தேய்ப்புக் குரல்.
பின் புலத்தில், ‘என்னை வுட்ருங்க!’ என வசந்தின் கெஞ்சும் குரல்… இதனுடைய பின்புலத்தில் ஒரு பெண் அழும் சப்தம்.
ஓ! அனுஷ்கா??
(தொடரும்…)
((ஐயய்யோ!))
July 18, 2013 at 23:10
“ஸ்ரீரங்கம் சுஜாதா காப்பிக்கடைக்காரர்கள்”…bang on..:)
July 19, 2013 at 16:11
அசத்துறிங்க பாஸ் ஹாஸ்யாமாகவே வாசிப்பதில் அகமகிழ்ச்சியே .