மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா

April 6, 2013

அப்பால, வொலகத்துக் குப்பைங்கள போராடி அகத்தறத யோசிக்கலாம்… புர்ஞ்சுதா ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்டடிச்சான் குஞ்சுகளா?

 நெல்ஸன் மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் - குத்துச் சண்டைப் பயிற்சி -

ரோலிஹ்லஹ்லா ‘நெல்ஸன்’ மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் – தென் ஆஃப்ரிக செய்தித்தாள் குழும அலுவலக மாடியில், இளம்வயதுக் குத்துச் சண்டைப் பயிற்சி – ’ட்ரம்’ பத்திரிக்கைகாக எடுத்தது – ஆனால் பதிப்பிக்கப் படாதது. ( நான் எல்லெக் பீமர் எழுதிய நெல்ஸன் மன் டேலா புத்தகத்தில் இருந்து இந்தப் படத்தை ஸ்கேன் செய்தேன்)

பாவப்பட்டு, மறுபடியும் என் பதிவைப் படிக்க வந்திருப்பவர்களே! திரும்பவும் திட்டலா என்று வருத்தப் படாதீர்கள்.  என்னுடைய முந்தைய ஒரு பதிவிற்கு வந்த எதிர்வினை ஒன்றால்தான் இது. மன்னிக்கவும். செய்வினை என்பது இதுதானோ? (உங்களுக்கு வேறு உபயோககரமான வேலைவெட்டியிருந்தால், மேலே படிக்காதீர் – வொங்க நெல்த்துக்குத்தாம்பா ஸொல்றேன். பிர்ஞ்சிதா?)

… ஒரு நீள்நெடுநாள் ‘போராளி’(!) மிகவும் வருத்தப்பட்டு கொஞ்சம் கோபத்துடனேயே ஏகவசனத்தில் எழுதியிருக்கிறார்: (கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்) –

”உன்னைப் போன்ற அறிவுஜீவிகள், ஏதாவது பொது, மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றாலே நக்கல் செய்கிறீர்கள். இளைஞர்களின் போர்க்குணத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உனக்கு எவ்வளவு இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை தெரியும், இந்த மாதிரி பொத்தாம்பொதுவாக மட்டையடி அடிப்பதற்கு? நீ இந்த இளைஞர்கள் செய்வதை விட என்ன உபயோககரமாகச் செய்து கிழித்து விட்டாய்? … … அவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நீ தாங்க மாட்டாய் …  … உன்னைப் போன்ற தமிழினத் துரோகிகளின், பார்ப்பான்களின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.”

அய்யா, நான் அறிவுஜீவி, அறிவுப்பொதி, அறிவுமீதி, புரட்சிப்பூபாளோன், எரிதழலோன், அக்கினிபுத்ரோன், செங்கனலோன்,  எரிமலையோன், சுனாமியோன், யுகப்புர்ச்சியோன், விடுதலைவீரோன், அக்கினிக்குஞ்சோன், ஆக  ஜட்டியைஎரித்தோன், அங்கொருகாட்டினோன், பொந்திலேவைத்தோன், அதுவோன் இதுவோன் என்றெல்லாம் விரசமாக, அசிங்கமாக, அருவருப்பாக இல்லை. ஏன், நான் ஒரு கேடுகெட்ட தட்டச்சுப்  ‘போராளீ’ கூட இல்லை. நான், வெ. ராமசாமி தான். வெறும் ராமசாமிதான். எனக்கு எந்த ஒரு அடைமொழியோ அவியல்பெயரோ தேவையில்லை. ஒரு சாதா ரணப்  பெயர் போதும் எனக்கு.

அய்யா தமிழ்இனமானத்திலகமே! ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து  ஒருங்கிணைந்து  எல்லாம் இந்த ’ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்ட்’ புகழ் பெறவில்லை. என் கணக்கில், முதல் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, 10-15 சதவிகிதம் பேர் கல்லெறிந்து கொண்டு, ஒரு வேளை  உண்ணாவிரதமிருந்திருந்தால் அதுவே அதிகம். என்னுடைய கணக்கில், எங்கள் பள்ளியில் இருந்து கடந்த 6 வருடங்களில் சுமார் 115 மாணவர்கள், படித்து முடித்து – மேற்படிப்புப் படிக்கின்றனர். கடந்த 10 நாட்களாக இவர்களில் சுமார் 90-95 பேர் தினமும் – பகல் வேளைகளில், விளையாட / படிக்க / பேச வருகின்றனர்; மதிய உணவு கட்டிக் கொண்டு வந்து உபயோககரமாக காலட்சேபம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, இந்த ஒரு சோறு பதம், ஒரு பானைக்கானதே.

மேலும், அந்தச் ‘சாயம் வெளுக்கும் நாள்’ வரும்போது, தேவரீர் சங்கர்லால் அவர்களே! என்னுடைய அழுக்குத் துணிகளையும் தருகிறேன். துணிவேதுணை என்று தயை கூர்ந்து, தமிழ்வண்ணானாகிய நீர், நீர்  கொண்டு உங்கள் சவுகரியப் படி, சவுக்காரம் உபயோகித்து வெளுத்துத் தர முடியுமா? நன்றி.

இன்னொரு விஷயம்: அய்யா, தமிழ் இனமானப் போராளீ அவர்களே! பார்ப்பான்களின் சாயம் வெளுத்து விடுவீர்கள், சரி. அவர்களுக்குக் குஷிதான். ஆனால், பாவப்பட்ட அந்த பார்க்கமாட்டான்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடும் பரிதாபம்  இல்லையா? அவர்களும் தங்கள் சாயம் வெளுக்க ஆசைப் படுபவர்கள்தானே? நம் போலக் கருப்பர்கள், பழுப்பர்கள் அனைவருடைய குவிந்த இச்சையும், எப்படியாவது தங்கள் தோற்சாயம் வெள்ளையாகாதா என்ற பரிதவிப்புதானே அய்யா!

… உண்மையில், இந்த வலைப்பூவினால் என்ன உபயோககரமாகச் செய்கிறேன் என்று சில சமயம் எனக்கும் தோன்றுகிறது, உபயோககரமைதுனமோ இது என்ற அடிப்படைச் சந்தேகமெல்லாம் வருகிறது என்பது உண்மையே – இந்த வலைப்பூக்கு அப்பாலும் என்ன முடி கொய்து கொண்டிருக்கிறேன் என்றும் எண்ணிப் பார்க்கிறேன். அது ஒரு சோகக் கதைதான்.

நீங்களும்தான் பாவம் – பிறந்ததில் இருந்து செய்து கொண்டிருப்பது இந்த முடி-கொய்தல்  மட்டுமே; பரிதாபமாகத்  தொலைதூரத்தில் இருந்து கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, உட்கார்ந்த இடத்திலிருந்து நகராமல் இணையவம்புகளைச் செரித்து அஜீர்ணம் வந்து கொண்டு – ஏதோ,  உங்கள் அளவில் தொலைதூரத் தமிழகத்தில் புரட்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால், நான் உங்களை விட்டு விடுகிறேன். பதிலுக்கு நீங்களும் என்னை விட்டு விடுங்கள். உங்கள் நன்மைக்காகவும்தான் இதைச் சொல்கிறேன்.

ஹ்ம்ம். ஆனாலும்  இந்த இளைஞர்களை, அவர்களுக்காகக் கரிசனப் பட்டு வாதாடும் நீங்களே இப்படி ’பகீர’ங்கமாகக் கிண்டல் செய்வது உங்களுக்கே அடுக்குமா? பொதுவாக boreகளான, boreஇளம் பருவத்தினரான இந்த இளைஞர்களை – ஒருவித விகசிப்பும், ஒளியும் இல்லாத வெள்ளை வெள்யாட்டுச் செச்சைகளை – boreக்குணமுடையவர் என்றுதானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்? இது உங்களுக்கே சற்று நக்கலாகத் தோன்றவில்லையா?

-0-0-0-0-0-

நான், என்னுடைய முற்கால அவதாரங்களில், சுமார் 11 வருடம் முன்பு வரையிலான அனுபவம் வரை – பலப்பலப்பல முறை, இந்தியாவின் குறுக்காகவும் நெடுக்காகவும் – பல பல்கலைக்கழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, வகுப்பறைகளுக்குச் சென்றிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலோ, நண்பர்கள் மூலமாகவோ, என் வேலைகள் தொடர்பாகவோ – ஏதோ ஒரு விதத்தில் – பல தரப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறேன். உயர்தர, மத்திம, அதம – மேலாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை, தொழிற்பயிற்சி, செவிலியர் பயிற்சி எனும் துறைகள் சார் கல்வியகங்கள் இவற்றில் அடக்கம். (நான் இதுவரை, மருத்துவ, சட்டக் கல்லூரிகளுக்குப் போனதில்லை).

இந்த க்ஷேத்திராடனங்களில், அத்தி பூத்தாற்போல – மிக அழகான. கோர்வையான சிந்தனைகளை உடைய, விசாலமான படிப்பறிவு உடைய இளைஞர்களையும் அறிய, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, கொடுத்து வைத்தவன் நான்.  நான் முன்னமே ஒரு பதிவில் எழுதியது போல், நான் இந்த விடிவெள்ளிகளைப் பற்றி எழுதவில்லை. ஆட்டுவித்தால் பேயாட்டம் ஆடும் ஆட்டு மந்தைகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்.

-0-0-0-0-0-

நம் அனைவரைப் போலவும் தான் – மாணவர்களுக்கும், பல விஷயங்களைப் பற்றிய அடிப்படை அறிவு என்று எதுவும் இல்லையென்றாலும் – பெரும்பாலான விஷயங்களைப் பற்றி ஒரு பாமரத்தனமான, சுயசிந்தனையற்ற கருத்து இருக்கும். நம் நாடே குப்பை, அரசியல் குப்பை, சமூகம் குப்பை, ஜாதி குப்பை என்று எல்லாவற்றிலும் குப்பையை மட்டும் தான் ‘சாக்கடை ஆய்வாளத்தனமாகப்’ பார்ப்பார்கள் – சினிமா என்கிற மாயாஜாலத்தைத் தவிர, க்ரிக்கெட் விளையாட்டைத் தவிர.

நம் அனைவரைப் போலவும் தான் – மாணவர்களும்,  இந்த வெளிக் குப்பைகளைச் சமூகம் (தாங்கள் அல்ல) சரி செய்ய வேண்டும் என விழைவார்கள். இது வரவேற்கப் படவேண்டிய எண்ணம்தான். எனக்கும் மற்றவர்கள் உழைத்து மேலெடுக்கும் ‘சமூகப் புர்ச்சி வால்க வாள்கவே’என்பதில் இரண்டு கருத்து இல்லை தான்.

அடுத்தவன் அவன் வீட்டை ஒழுங்கு மரியாதையாகச் சரி செய்ய வேண்டும் – அத்த வுட அவ்னுங்க்ளுக்கு இன்னாடா வேல?

மேலும், மற்றவர் நம் வீட்டை சரியாகச் சுத்தமாக வைக்க வேண்டும் – அவர்கள் உதவியெல்லாம் செய்யவேண்டாம், முழு பொறுப்பு எடுத்துக்கொண்டு நம் வீட்டைச் சரிசெய்தாலே போதுமானது – என்க்கு எவ்ளோவோ வெளி வேல கீதுடா, முட்டாப் பய நீ! ஒனக்குதாண்டா வெளீல ஒளைக்றேன் – நீ என் குண்டிய களுவ அவ்ளொ தய்க்கமா? ஒனக்கு இன்னாடா அப்டீ தல போற வேல?

நீ கொடுத்தால் நான் எடுத்துக் கொள்வேன். நான் எடுத்துக் கொள்ளவேண்டுமென்றால், நீ கொடுக்க வேண்டும்.

இவ்வளவு எளிமையான ப்ரபஞ்ச தத்துவத்தை ஏன்  நான் புரிந்து கொள்ள மறுக்கிறேன்?

-0-0-0-0-0-

பொதுவாக, நம் உயர்கல்வி நிறுவனங்களைச் சுற்றி ஒரே ப்லாஸ்டிக் குப்பை, காகிதக் குப்பை, ரப்பர் குப்பை. (சரி, இவற்றை நகரசபை ஆட்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், அல்லது பெயர் தெரியாத தன்னார்வ அமைப்புக்கள் செய்ய வேண்டும் – நம்முடைய வரிப்பணம் வாங்கறானுங்க இல்ல?)

அவற்றுக்குள்ளே, வளாகங்களில் – எங்கு நடந்தாலும் குப்பை. தடுக்கி விழுந்தாலும், விழாவிட்டாலும் குப்பை. (சரி, இவற்றை கல்வி நிறுவனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்தான் – பாவிகள், வானளாவிய ஃபீஸ் வாங்குகிறார்கள் அல்லவா?)

வகுப்பறைகளில் – பொறுக்கவே முடியாத அளவு குப்பை. மாதக் கணக்கில் பெருக்கப் படாத தரைகள், கிழிந்த தாள்கள், சாக்லேட், மிட்டாய், சூயிங்கம் ப்லாஸ்டிக் தாள்கள், உடைந்த சீப்புக்கள், கண்ணாடித் துண்டுகள், மூச்சு முட்டும், கந்தறகோளமாகத் தொங்கும் ஒட்டறை. மண், மணல், உடைந்த / விரிசல்விட்ட கரும்பலகைக்குக் கீழ் சாக்குக் கட்டிப் பொடிக் குன்றுகள், உடைந்த குழல் விளக்குகள், வளைந்த மின்விசிறிகள், அறுந்து தொங்கும் இரும்புக் கம்பிகள், வயர்கள், உடைந்த ஸ்விட்ச் போர்ட்கள், ஆசிரியரின் சிறிது உயர்த்திய மரமேடைக்குக் கீழ் பல வருட வயதாகியிருக்கும் பழங்காலக் குப்பைகள்…

நான் சென்றுள்ள கல்வியகங்களில், சுமார் 95% இதேகதை தான்.

… இந்த மாதிரி, குப்பைச் சூழலில், குப்பைப் படிப்பை, குப்பை ஆசிரியர்கள் புகட்டப் , படிக்கும் குப்பை ’ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்ட்’ புகழ் மாணவர்கள் – கேவலம் தாங்கள் 3-4 வருடம், நாளுக்கு 8 மணி நேரம் உட்கார்ந்து படிக்க வேண்டிய இடத்தை – அவர்கள் குண்டிகள் உட்கார்ந்த இடத்தைச் சுற்றி ஒரு 4 சதுர அடியைக் கூடச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தோன்றாத, குடிமையுணர்வு எனும் ஊரிலேயே பிறக்காத அரைகுறை தத்தாரிகள்உலகத்தைக் கேடுகளில் இருந்து காப்பாற்ற, சமூக சுத்திகரிப்பு செய்ய, தமிழினத்தைக் (!) காக்க (!!) – புத்த பிக்ஷுக்களை விரட்டுவது, பள்ளிப் பேருந்துகளின் மீது கல்லெறிவது, பொதுச் சொத்துக்களை நாசமாக்குவது, ஐ நா சபை, அமெரிக்க அரசு, இந்திய அரசு போன்றவற்றுக்கு டிவியில் அறிவுரை கொடுப்பது எல்லாம் — தமாஷ் என்ற அளவைத் தாண்டி – ஒரு துன்பியல் மாபுதினமாகத்தான் தோன்றுகிறது,

பாவம்  கருணாநிதி அவர்களும் – இந்த ’ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்ட்’ புகழ் மாணவக் கழிசடைகள் கிட்டவெல்லாம் ‘துரோகி’ பட்டம் வாங்க வேண்டிய, காலத்தின் கந்தறகோளம்… இந்த வயதில் இவருக்கு இது தேவையா என்று தோன்றுவதை, எனக்கே கூடத் தவிர்க்க முடியவில்லை.

-0-0-0-0-0-

… பொதுவாக, நான் கல்வியகங்களுக்குச் செல்லும் போது, கையில் / பையில், ஒரு மடக்கக் கூடிய வசதியுள்ள துடைப்பத்தை (நானே வடிவமைத்துச் செய்தது) எடுத்துக் கொண்டு செல்வேன். (இது அடிப்படையில் ஒரு தென்னந்துடைப்பமே. ஒன்றிற்குள் ஒன்று செல்லும், உள்ளடங்கும் பிவிஸி குழாய்களால் ஆன ‘டெலெஸ்கோப்’ வகை வடிவம், 11.5” நீள ஈர்க்குச்சிகள் சுமார் 60 அடங்கிய கடைசிக் குழாயில் ஒரு ஸ்ப்ரிங் வைத்த முள்ளம்பன்றியின் முட்கள் போல விரியும்/சுருங்கும் அமைப்பு. முக்கியமான விஷயம்: இது என் மடிக்கணினிப் பைக்குள் அழகாக மடிந்து, மூடியுடன் அடங்கிவிடும். 14” நீளம். 2.25” விட்டம். 450 கிராம் எடை. அவ்வளவே).

ஒவ்வொரு முறையும், வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் (கடைசியாக, இரண்டு மாதங்கள் முன் சென்ற கல்லூரியைத் தவிர) இந்தப் பரிசோதனையைச் செய்திருக்கிறேன்; சுமார் 30 முறையாவது இது நடந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஹெல்லோ சொல்லிவிட்டு –  மாணவர்களிடம் இரண்டு ஜோக் அடித்து, மேம்போக்காக உரையாடி அவர்கள் மீது கவிந்துள்ள அழுத்தத்தைத் தளர்த்தி, பின்னர், பொதுவாகச் சமூகப் பிரச்சினைகள் என்று அவர்கள் எதைப் பற்றி நினைக்கிறார்கள் எனக் கேட்பேன். அவர்கள் வழக்கமாக ஒரு ஜாபிதா வைத்திருப்பார்கள். எல்லாம் பரம ஸ்ரேஷ்டமாக, ’யாதும் ஊரே’ என்கிற அளவில் புல்லரிக்க வைக்கும்.

பின் அவர்களிடம் கேட்பேன். பின் யார் நீங்கள் உட்காரும் இடத்தைச் சுத்தம் செய்வார்கள்? இந்த அடிப்படைச் சுத்தம், சுகாதாரம் என்பது முக்கியமில்லையா? ஒரு அடிப்படை சமூகப் பிரச்சினை இல்லையா? நமக்கெல்லாம் இது ஒரு பரம குடிமையுரிமையும் கடமையும் இல்லையா?

அவர்களில் சிலர் துடுக்காக, அது சுத்தம் செய்யற ஆயாக்களோட வேலை என்பார்கள். இவர்களை விட்டு விடுவேன்.

சிலர் என்னையே, சிறிது சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பேன். சிலருடன் ஒரு சிறு உரையாடல் நடக்கும். வெகு சிலர் – நீங்கள் சொல்வது சரிதான், நாங்கள் தான் இதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பார்கள்.

சரி என்பேன். ஆக, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக கொண்டிருப்பார்கள். கொஞ்சம் சலசலப்புப் பேச்சு சில சமயம் இருக்கும். நாம் என்ன செய்ய வேண்டும், எனத் திரும்பிக் கேட்பேன்.

பின்னர், அவர்களுடைய சலனங்களைப் பொருட்படுத்தாமல், நான் அவர்களுடைய கண்களைப் பார்க்காமல், என் பையை, மெதுவாகத் திறந்து அந்த ’சொகுசு’ துடைப்பத்தை எடுத்து, விரிப்பேன். அவர்கள் கண்கள் நம்பவே முடியாத அளவு விரியும். அனைத்து மாணவர்களும் தங்கள் மூச்சை ஏறக்குறைய ஒரே சமயத்தில் உள்ளிழுத்துக் கொள்வார்கள்.

இந்த்ச் சமயம் – பொதுவாக,  கூட வந்திருக்கும் அந்த நிறுவனம் சார்ந்த ஆசிரியர்(கள்) / மேலாண்மைக்காரர்கள் கலவரப்பட்டு விடுவர். அவர்களுடைய ‘ஸார், என்ன இது’ போன்றவைகளை உடனே நிறுத்தி, முளையிலேயே கிள்ளி, அவர்களை அமைதி காக்கச் சொல்வேன். வேலை நடக்கும் போது யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்பேன்.

ஒரு நாடகத்தன்மையுடன், ஒரு பேச்சுப் பேசாமல் ஆசிரியர் பக்க மூலை ஒன்றிலிருந்து பெருக்கத் தொடங்குவேன். மாணவர் வரிசைகளில் முதலாவதுக்கு வரும் வரை பெரும்பாலும், நான் பெருக்கும் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்.

மாணவர்கள், தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் ஆசிரியர்களைப் பார்த்து என்னதான் செய்ய வேண்டும் நாங்கள்  என இறைஞ்சும் முகபாவங்களுடன் உறைந்திருப்பர்.

இப்போது – முதல் வரிசை மாணவர்களைப் பார்த்து – நீங்கள் தயவுசெய்து எழுந்து வெளியே போய்விட்டு ஐந்து நிமிடம் கழித்து வந்தால் உங்கள் அறையின் தரை மட்டும் நிச்சயம் சுத்தமாகிவிடும் என்பேன். பின் அனைவரும் தயங்கித் தயங்கி, வெளியே போவார்கள்.

தவிக்கும் ஆசிரியர்கள், வெளியே சில மாணவர்களுடன் பேசி வேறு எங்கிருந்தாவது துடைப்பங்கள் கொண்டுவந்து ஸாருக்கு உதவுங்கள் என்று அவர்களை விரட்டுவார்கள். நான் இப்படி, இன்னொருவர் சொல்லித்தான் வேலை செய்வேன் என்பவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெளியே நிறைய இடம் குப்பையாக இருக்கிறதே, அங்கே வேலை செய்யலாமே என்பேன்.

நான் அந்த அறையை,  நாற்காலி / பெஞ்ச் / மேடைகளை நகர்த்தி முழுவதுமாகச் சுத்தம் செய்வதற்கு சுமார் 15 – 20 நிமிடங்களாகும்.

 1. இதுவரை – ஒரு ஆசிரியர் கூட துடைப்பத்துடன் உதவிக்கு வரவில்லை.
 2. மாணவர்கள் – ஒருவரும் சொல்லாமல் தாமே ஓடிப்போய் துடைப்பத்தை எடுத்து வந்தவர்கள் – ஒரு சிலர் மட்டுமே – இவர்களிலும் பெண் குழந்தைகள் தான் அதிகம்.
 3. வெகுவெகு சிலரே, கூடமாட, நாற்காலிகளை நகர்த்தி எனக்கு உதவி செய்தவர்கள்.
 4. இதுவரை இரு மாணவர்கள் மட்டுமே என் ’சொகுசு’ துடைப்பத்தின் வடிவமைப்பு (டிஸைன்) பற்றி என்னிடம் பேசியிருக்கிறார்கள் / கேட்டிருக்கிறார்கள்.
 5. பெரும்பாலான நிகழ்வுகளில், அந்தக் கல்லூரியின் தாளாளர் / அறங்காவலர் / மேலாண்மைக்காரர்கள் என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்பர்.  அதுவும் என்னை ‘ஆசுவாசப்’ படுத்துவதற்காக மட்டுமே. ’இந்த நாடு சீரழிஞ்சுகிட்டு இருக்கு! நம்மால என்ன செய்ய முடியும். ஆசிரியன எவன் மதிக்கிறான்?’ அவ்வளவே.
 6. 2, 3, 4 வகை மாணவர்களுக்கு நான் நேர்காணலில் முன்னுரிமை அளிப்பேன். பின்புலத்தில் நேர்காணல் இல்லையென்றால் சில புத்தகங்கள் (பாபுஜியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ – அந்தனி பரேல் உருவாக்கம் – அதில் நிச்சயமாக இருக்கும்) அன்பளிப்பாகக் கொடுப்பேன். டிஸைன் பற்றிக் கேட்டவர்களுக்கு டொனல்ட் நார்மன் புத்தகமான – ’தினசரி உபயோகப்படும் பொருட்களின் வடிவமைப்பு’ புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுப்பேன்)
 7. மேற்கண்ட 2, 3, 4 வகை மாணவர்களில் இருவர் என்னுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள் (பாவம்தான், ஒப்புக் கொள்கிறேன்!)

சுபம்.

ஒரு சுவையான சமாச்சாரம் சொல்லவேண்டும்: என்னுடன் கூட வருபவர்கள் / சகாக்கள் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பிஎஸ் சோதனை – தேவையற்ற விஷயம். அதாவது என்னுடைய கிறுக்குத் தனங்களில் ஒன்று – இந்த Bull Shit; ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு அடிப்படை குடிமையுணர்ச்சிக்கான Broom Stick சோதனை. மிக முக்கியமானது, அந்த மாணவர்களில் ஒரு சிலரையாவது சிந்திக்க வைப்பது.

“Our deepest fear is not that we are inadequate. Our deepest fear is that we are powerful beyond measure. It is our light, not our darkness, that most frightens us. We ask ourselves, who are we to be brilliant, gorgeous, talented and fabulous? Actually, who are you not to be? As we let our light shine, we unconsciously give other people permission to do the same.
 
As we are liberated from our own fear, our presence automatically liberates others!”
– –ரோலிஹ்லஹ்லா  ‘நெல்ஸன்’ மன்டேலா  from the book ‘A Return To Love’ (1992) by Marianne Williamson.

-0-0-0-0-0-

விதிவிலக்கு மாணவர்கள் இருந்திருக்கின்றனர் – இருக்கின்றனர்தான். இது உண்மையிலேயே மிகவும் நம்பிக்கை தரும் விஷயம் தான்.

விதிவிலக்கு நிறுவனங்கள் இருக்கின்றன – அவை (நான் பார்த்தவரை): காந்திய நயிதலீம் நிறுவனங்கள், சில திருபாய் அம்பானி கல்வியகங்கள், வாராணசி ஹிந்து பல்கலைக்கழகம், அம்ரிதா, ஜக்கிவாசுதேவ், புட்டபர்த்தி சாய்பாபா, ஸ்ரீ அரோபிந்தோ சார்ந்த கல்வி நிறுவனங்கள் போன்றவை. இவற்றில், மாணவர்களும் – தங்கள் கல்விச் சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதில் – தங்கள் உரிமையையும் கடமையையும் நிலை நாட்டுகிறார்கள் என என் எண்ணம்.

நான் இதுவரை வேலை செய்துள்ள பள்ளிகளும் அப்படியே. என் குழந்தைகளும் அப்படியே. இதிலும் எனக்கு கர்வமே!

-0-0-0-0-0-

என்ன ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்ட்’  புகழ் ஐயன்மீர் நான் இவ்வளவு  வளவளா என்று எழுதியதற்குப் பதிலாக, உங்கள் வகுப்பறையை சுத்தப் படுத்தியிருக்கலாமா? சரிதான்.

ஓ, ஒங்களுக்கு ’ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்ட்’ செஞ்சு, கல்லெறி அறப் போராட்டம் போராடி, ஒரு வேளை உண்ணாவிரதமெல்லாமிருந்து – இந்த உலகை உய்விக்க, அவசரமாகப் போக வேண்டுமல்லவா? இதுவும் சரிதான்.

பெரியவர்கள் தயவு செய்து மன்னிக்க வேண்டும். கூரையேறிக் கோழி பிடிக்கப் பயிற்சி  கியிற்சி எடுக்கப் போகிறீர்களோ என்று தவறாக நினைத்துக் கலவரப்பட்டு விட்டேன். என்ன முட்டாள்   நான்!

பொலிக, பொலிக

-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

8 Responses to “மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா”


 1. The quote was excellent. Thanks. But it is attributed to Mandela. You might
  want to check out this Wiki entry. (Since I wanted to know more on this
  quote, read a bit on it).

  http://en.wikipedia.org/wiki/A_Return_to_Love

  Regards,

  Sriram

  Thanks so much dear Sriram, for pointing out my mistake; have corrected my error. Apparently it is from the book ‘A Return To Love’ (1992) by Marianne Williamson! To think that I have been carrying around this quote attributing it to Dear Mandela for the past 15 years! Urban Legends, here I come!
  (have removed your ph no)

  __r.

 2. poovannan Says:

  நான் கூட உங்களை மாதிரியே தான் .கார்ல நிறைய ஒரு ரூபாய் நாணயம் வைத்து இருப்பேன் .சிக்னலில் வண்டி நிற்கும் போது வெறுமே பிச்சை கேட்டால் தரமாட்டேன்.ஆனால் காரை துடைப்பது போல பாவலா காட்டினால் உடனே மனம் இளகி ஒரு ரூபாய் போடுவேன்.போட்டு விட்டு இப்படி தான் உழைத்து பெரிய ஆளாக வேண்டும் என்றும் வாழ்த்துவேன்.அப்படி வாழ்த்து பெற்ற பலர் இன்று உழைப்பால் உயர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம்.ஆனால் யார் கூடவும் எனக்கு தொடர்பு கிடையாது.உதவி செய்து விட்டு அதை உடனே மறந்து விடுவேன்
  என்னுடன் பணி புரிபவர்கள் காரில் வந்தால் என் செயலை பார்த்து அவர்கள் ஒரு வித குற்ற உணர்விற்கு ஆளாவர்கள் .ஆஹா யெப்படி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை திருத்தி,அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றுகிறார் என்று.
  எனனை பார்த்து பலரும் இன்று காரில் ஒரு ரூபாய் நாணயங்கள் நிறைய வைத்து கொண்டு உழைப்பை ஊக்குவிக்கும் சீரிய பணியில் ஈடுபட துவங்கி உள்ளனர்
  வகுப்பறையை பெருக்கி சுத்தம் பண்ணுவது இருக்கட்டும் முதலில் ஆய் போய் விட்டு ,கை இடுக்குகளில் மலம் மாட்டி கொள்ளாமல் (பல வியாதிகள் பரவ காரணம் ),சூற்றிலேயே ஒட்டி கொண்டு இருக்காமல் ஒழுங்கா கழுவ கத்துக்குங்கடா என்று மாணவர் முதல் முதுகிழவர் அனைவருக்கும் சொல்ல வேண்டும்
  முதலில் காகிதத்தில் துடைத்தால் விரல்களில் எங்கும் ஆய் படாது.தண்ணீர் வேகமாக் ஊற்றும் போது ஆய் தொடைகளில் ,புட்டத்தில் துணுக்குகளாக ஒட்டி கொண்டு கட்டிகள்,புண்கள்,fungal infection என்று பல வியாதிகளுக்கு காரணமாகும்.
  முதலில் காகிதத்தில் துடைத்து விட்டு பின்பு வேண்டுமானால் தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள் என்று பல ஆண்டுகளாக பல ஆயிரம் பேரிடம் (எல்லா வயதினரும் )சொல்லி வருகிறேன்.எவன் கேட்க்கிறான்.
  எனனை ஏதோ மதமாற்றம் செய்ய வந்த சதிகாரனாக ,அவர்களின் தொன்மையான கலாசாரத்தை ,அதில் முக்கியமான அவன் முன்னோர்கள் கழுவி வந்த முறையை இழிவு படுத்துபவனாக தானே பார்க்கிறார்கள்
  நாம முதல்ல மாணவர்களை ஒழுங்காக கழுவ சொல்லி கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் .பிறகு வகுப்பறைக்கு செல்லலாம் சார்

 3. ramasami Says:

  அய்யா பூவண்ணன், :-)

  நீங்கள், ‘டாய்! மொதல்ல ஒங்க குண்டிய ஒழுங்கா கழுவிக்கக் கத்துக்குங்கடா, அப்பால வகுப்பறய சுத்தம் பண்லாம்’ என்று நம் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் மாணவர்களை நோக்கி ஒரு முழு நீள ‘ஸீக்வெல் / ப்ரீக்வெல் கட்டுரையை எழுதினால் (நம்முடைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதான தினசரி தொடர் போராட்டப் பிரச்சினையை நானும் சரியாகப் புரிந்து கொண்டதற்குப் பிறகு) உலகத்தை உய்விக்க அதனை நானும் பதிப்பிக்கிறேன். ;-)

  இதுவும் மிக மிக முக்கியம்தான்.

  இன்னொன்று – என் கட்டுரைகளே (!) நீளமாக இருக்கின்றன என ஒரே புகார்களும் முறையீடுகளும் இருக்க – ஆனால் அவற்றை விட நீளநீளமாகப் பின்னூட்டமிடுவது, மன்னிக்கவும், தொடர்ந்து பின்னூட்டங்களிடுவது, உங்களுக்குத் தகுமா? 9-)

 4. சான்றோன் Says:

  @பூவண்ணன்…..

  நாங்கள்லாம் கழுவற கையால சாப்பிடறதில்லை…….ரெண்டுக்கும் வேற வேற கை தான் பயன்படுத்தறோம்………..அவ்விட‌த்தில் வேறு வழக்கம் போலிருக்கிறது…….[என்ன இருந்தாலும் பகுத்தறிவு அல்லவா?]

  • பூவண்ணன் Says:

   சான்றோன் ஐயா
   காலையில் தினம் எழுந்தவுடன்
   கிருத்துவன் கெட்டவன்
   துலுக்கன் துஷ்டன்
   பகுத்தறிவு பேசறவன் பொறம்போக்கு
   என்று ஆயிரம் முறை சொல்லி விட்டு பிறகு தான் மற்ற வேலைகளை செய்வீர்களா
   கழுவனும்ன்று எண்ணம் வந்ததே பகுத்தறிவு தான்
   நம்மை படைச்ச கடவுளுக்கு சுத்தபடுத்த தெரியாதா என்று பயங்கர பக்திமான் கூட கடவுள் பாத்துப்பார்ந்னு விடமாட்டார்கள்
   கழுவறுதுக்கு ஒரு கை துன்னறதுக்கு ஒரு கை ன்னு கடவுள் /மதகுருக்கள்/கலாசாரம் சொல்லிட்டதால பிரச்சினை ஒன்னும் வராதுன்னு நம்பறீங்க பாருங்க ,அதை கொஞ்சம் யோசித்து பாருங்கன்னு சொன்னா இவ்வளவு கோவம் வருவது ஞாயமா
   வாழைக்காய்,வெங்காயம் நறுக்கறது,சப்பாத்தி மாவு தட்டறது எல்லாம் நம்ம வீட்டுல ஒரே கையிலா
   குடிக்கிற தண்ணி புடிச்சிட்டு வர குடத்தை தொட கூடாதுன்னு பீச்சாங்கையை ஒதுக்கி வெச்சி இருக்கீங்களா என்ன

  • பூவண்ணன் Says:

   விடுதிகளில் லட்டு பிடிக்கிறவர்கள் ,உணவை பார்சல் செய்பவர்கள் எல்லாம் ஒரே கையில் செய்கிறார்களா
   கைய நல்லா கழுவு,கையில படாம சுத்தமாக்க காகிதத்தை பயன்படுத்து என்றால் நாங்க தொட்ட கையை ஒதுக்கி வெச்ச உண்மையான இந்து ,எனக்கு ஒன்னும் வராது ன்னு நிக்கறீங்க பாருங்க அது தான் ஹிந்துத்வம்

 5. பொன்.முத்துக்குமார் Says:

  பூவண்ணன்,

  கலக்கிட்டீங்க. இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன். காந்தி மாதிரி அடிப்படை விஷயத்துல கவனம் செலுத்தறீங்க பாருங்க, அங்கதான் நிக்கறீங்க நீங்க.

  நீங்க சொல்லுற dry cleaning followed by wet cleaning முறை ரொம்ப நல்லா இருக்கு. எப்போதும் இல்லைன்னாலும், குளிக்க போறதுக்கு முன்னாடி போகும்போதெல்லாம் இதே முறைதான் நான் பின்பற்றுறது. பாப்போம் எப்போதும் பின்பற்றமுடியுதான்னு.

  ஹ்ம்ம் அடுத்தது என்ன, மூச்சா போகும்போது எப்படி பிடிச்சிகிறது-ன்னா ? நடத்துங்க சார் நீங்க :)

 6. சரவணன் Says:

  ஏதோ Roal Dahl கதையைப் படிப்பதுபோல இருக்கிறது! அழைத்த கல்லூரி குப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். போய்ப் பார்த்தால் அப்படியே இருக்கிறது. (இதில் உங்களுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்படுகிறது என்று நான் சொல்லவில்லை!) அடுத்து, இதை எதிர்பார்த்து, கையோடு, இல்லை, பையோடு கொண்டு சென்றிருக்கும், இதற்கென்றே மெனக்கெட்டு செய்துவைத்திருக்கும், துடைப்பத்தை எடுக்கிறீர்கள்.. பிறகு நடப்பவை அனைத்தும் அச்சு அசலாக உங்களுக்குத் தெரிந்தவிதத்திலேயே நடக்கின்றன. வகுப்பறையைக் குப்பையாக வைத்திருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை நிற்க சவுக்கால் அடித்ததற்கு இணையான திருப்தியோடு, துடைப்பத்தில் உதிர்ந்த ஈர்க்குச்சிகளுக்கு வேறு குச்சிகளை நிரப்பிக்கொண்டு, அடுத்த கல்லூரி அழைப்புக்குக் காத்திருக்க ஆரம்பிக்கிறீர்கள்…

  நீங்கள் அந்தத் துடைப்பத்தை வெளியில் எடுக்கும் கணம், மயிர்கூச்செரிந்துவிட்டது!!

  சரியான பெர்வர்ட்யா நீங்கள்!!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s