ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!), விடுதலை (ஐயய்யோ!)

December 6, 2012

சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ  (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.

அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”

நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும்  மிக்க,  சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக்  களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?”

=-=-=-=

காலவெளியில் சிறிது பின்னோக்கி நகர்கிறேன்…

சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு வரை, கணினியியல், மின்னியல் கற்ற(!) நல்ல மதிப்பெண்கள் பெற்ற(!!) புத்துருக்கு(!!!)  இளைஞர்களை (பார்க்க: இதுதாண்டா தமிழ் இளைஞன்!) நேர்முகத்தேர்வுகள் நிமித்தம் சந்திக்கும்போது (கொடுமை, வன்கொடுமை), அவர்களில் பெரும்பாலோர் ரொபாட்டிக்ஸில் ஈடுபாடு அல்லது ஏஐயில் ஆர்வம் அல்லது பொத்தாம்பொதுவாக வெப் டெக்னாலஜீஸ் நன்றாகத் தெரியும் – என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

கொஞ்சம் தெரியாத்தனமாக, ஆர்வக் கோளாறில்,  சில அடிப்படைக் கேள்விகள் கேட்டால் தான் தெரிய வரும் அவர்கள் பெரும்பாலும் எந்தவிதமான உள்ளீடும் அற்றவர்கள் என்று. வெறுத்து, அலுத்து ஒதுக்கக் கூடிய வெற்று டப்பாக்கள் (சில டப்பிகளும் இருந்தன தான்) என்று.

இவர்கள் வினோத ஜந்துக்கள் தான், சந்தேகமே இல்லை! (10-20 வருடம் கழிந்த பின்னர், இப்போதும் இதே கதைதான் என நான் மிகவும் மதிக்கும், ‘அறிந்த’  நண்பர்கள் சொல்கிறார்கள்)

பல பலத்த ’மூச்சினை உள்ளிழுத்தல்’களுக்குப் பின் சம்பிரதாயத்துக்காக, யங் மேன், உனக்கு என்னவாக ஆசை, குறிக்கோள் என்ன என்று பெருந்தவறாகக் கேட்டுவிட்டோமானால், உளறிக் கொட்டி, அவர்கள் இலக்கே ‘யோசிக்கும் திறனுடைய ஒரு ரொபாட்டைக் கண்டுபிடிப்பதுதான்,’ அதற்காக ’நொபெல் பரிசு வாங்குவதுதான்’ போன்ற அரைக்கால்வேக்காட்டுத்தனத்தைக் கண்டு கொண்டு,  அவர்களுக்கு ரொபாட் பற்றியும் தெரியவில்லை, நொபெல் பரிசு எதற்குக் கொடுப்பார்கள் என்றும் தெரியவில்லை, ஏன், அவர்களுக்கு ‘யோசிப்பது’ எப்படியென்று கூடத் தெரியவில்லை என்று அதிர்ந்துணர்ந்து, விதிர்விதிர்த்து, அரைகுறைகளுக்கு இப்போதைக்கு விமோசனமே இல்லை என்று பசுமரத்தாணி போல எண்ணங்கள் தைத்த,  படுபயங்கர காலங்கள் அவை.

வேறு ஏதாவது திசையில், பாடுபொருட்களில் இவர்களுக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருக்கிறதா என்று தேடித் தேம்பிப் பார்த்தாலும், மூச்சுதான் முட்டும். மௌடீகத்தின்,  மெடா-காக்நிஷன் இல்லாமையின், அறியாமையின் உச்சாணிக்கிளையில் இருந்தாலும், இவர்கள் இறுமாப்பும் அகந்தையும் அஞ்ஞானச்செருக்கும் மிகுந்தவர்கள்.  சோம்பேறித்தனத்தில் புளகாங்கிதம் அடைபவர்கள். இவர்களே ஒருவிதத்தில் நடமாடும் நகைச்சுவைதான் போங்கள். (இருப்பினும் இவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது வேலை கிடைத்தது – என்னிடம் இல்லையென்றாலும் – இதுதான் சோகம்)

ஹ்ம்ம்… ஆனால் ஒன்று சொல்லவேண்டும் – இந்த அரைகுறை வெற்றுவேட்டு ஆர்பாட்டக்காரர்களின் மகாசமுத்திரத்தில், இவ்விளைஞர்களில், விதி விலக்குகளான சில  நன்மணிகளையும் பார்த்திருக்கிறேன், கூடவும் வேலை செய்திருக்கிறேன், இன்னமும் மகிழ்ச்சியாக அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.

இந்த சுவாரஸ்யம் தரும்  நன்மணி அ-ரொபாட்டுகளின் விகிதம், என்னைப் பொறுத்தவரை 800:7 இருக்கலாம் என எண்ணம் – எப்படியெனில், அறிமுக அளவில், பத்திருபது வருடங்களில், குறைந்த பட்சம் 800 முதல்வேலை தேடிக்கொண்டிருந்த இளம் எஞ்சினீயர் – கஞ்சிநீர்களுடன் பேசியிருப்பேன், என
நினைக்கிறேன் – இதில் ஏழே பேருடன் தான் தொடர்பு இப்பவும். இவர்களை நானே சுயநலமாகத் தேர்ந்தெடுத்து (பொறுக்கி?), பயிற்சி கொடுத்து, ஒரு சமயம், என் (எலீட்) உச்சாணித் தொழில்நுட்பக்  குழுவாக வைத்திருந்தேன். இதில் ஒரேயொருவர் தான் தமிழ் இளைஞர்,  நாஞ்சில் நாட்டுக்காரர்.

இம்மாதிரி அற்புதமான இளைஞர்களுடன் வேலை செய்வது ஒரு மகாமகிழ்ச்சி தரும் விஷயம். நான் எப்போதாவது மறுபடியும் தொழில் ஏதாவது முனைந்தால், அது எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, இவர்கள் வரத் தயார் என்பதே எனக்கு,  மிகுந்த பெருமிதம் தரும் விஷயம். நம்பிக்கை கொடுக்கும் நற்செய்தி.

=-=-=-=

நிற்க, அந்த எண்ணூற்றுச் சொச்சம் (எச்சம்?) பேர்களில் ஒருவர் தான் வீரமணி அவர்களின் விடுதலைக்கு அறிவியல்-அவியல்- தொழில்நுட்ப நிருபராகப் பணி செய்து கொண்டிருக்கிறாரோ என்ன இழவொ, அந்தச் சாத்தானுக்குத் தான் இருட்டு.

=-=-=-=

’விடுதலை’க்கும் அறிவியலுக்கும் ரொம்ப தூரம் என்று வெகு நாட்களாக எனக்குத் தெரியும், அவ்வப்போது இந்த திரா விடக் கழகச் சஞ்சிகையைப் படிப்பதனால்.

இருந்தாலும் ‘விடுதலை’ தான் உலகத்தின் ஒரேயொரு சுத்த சன்மார்க்க நாத்திகப் பத்திரிக்கை – அது அறிவியலைக் கூட நம்பாத அதி உன்னத நாத்திகம் சார்ந்தது என்பது கடந்த சில வருடங்களாகத் தான் என் குருவி மூளைக்கு உதிக்கிறது.

எடுத்துக் காட்டாக, புதன், 05 டிசம்பர் 2012 அன்று விடுதலை தளத்தில் வெளிவந்த இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

செயற்கை மனித மூளை தயாரிப்பு விஞ்ஞானிகள் சாதனை

டொரண்டோ, டிச. 5- மனித உடலுக்கு தேவை யான செயற்கை உறுப்பு களை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற் போது செயற்கை மனித மூளையும் உருவாக்கப் பட்டுள்ளது. இது மனித மூளையை போன்று நுண்ணறிவுடன் செயல் படுகிறது. சூப்பர் கம்ப் யூட்டரில் பொருத்தப் பட்டுள்ளது.

டிஜிட்டல் கண் மற் றும் ரோபோடிக்கையும் உருவாக்கப்பட்டு அதன்மூலம் வெற்றிகர மாக பரிசோதிக்கப்பட் டது. இந்த செயற்கை மூளை 25 லட்சம் நரம் பணுக்களால் தயாரிக்கப் பட்டுள்ளது. இதற்கு ஸ்பான் என பெயரிடப் பட்டுள்ளது.

இதை கனடாவில் உள்ள வாட்டார்லு பல் கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீ யர்கள் இணைந்து வடி வமைத்துள்ளனர்.

செயற் கையாக தயாரிக்கப்பட் டுள்ள இந்த மூளை மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படு கிறது. இது விஞ்ஞான உல கின் மிகப்பெரும் சாத னையாக கருதப்படுகிறது.

இப்போது படியுங்கள்: http://www.canada.com/technology/Canadian+scientists+create+functioning+virtual+brain/7628440/story.html

இதன் பின்னர் மேற்படி ஆய்வு(!) நடந்த இந்த டொரன்டோ பல்கலைக்கழக தளத்தையும் படியுங்கள்.

ரொபாட் என்றால் என்ன, மூளை என்றால் என்ன,  உருவகப்படுத்துதல் (ஸிமுலேஷன்) என்பது என்ன, ந்யூரான்கள் யாவை என்பவை பற்றிய அடிப்படை புரிதல்களோ, ஏன், கேள்விகளோ கூட அல்லது ‘ஆஹா’ எழுச்சிகளோ இல்லாத ஒரு கவைக்குதவாத, தப்பும்தவறுமான செய்தியளித்தல் இது.

இணையத்தில் தேடவும், தரவுகளைத் தேர்வு செய்யவும், விஷயங்களைதப் புரிந்து கொள்ளவும், அழகாக எழுதவும் எவ்வளவு சுலபம் இக்காலத்தில்? இருந்தாலும் சோம்பேறித்தனம் என்பது மிக மோசமான வியாதி…

=-=-=-=

… எது எப்படியோ, அறிவியலுக்கு முற்றாக விடுதலை கொடுத்து அதனைத் துரத்தி, அதனைப் பின்னங்கால் பிடறியில் பட, முன்னங்கால் முகரையில் பட விரட்டியடித்து வெற்றி வாகை சூடிக்கொள்ளும் விடுதலைவிகடனுக்கு என் மனமார்ந்த நன்றி.

அலுப்பும், அயர்வும், அவநம்பிக்கையும் துரத்திக் கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில், எனக்கு ஒரே அஞ்சால் நகைச்சுவை மருந்து – விடுதலை, வினவு போன்ற தளங்கள் மட்டுமே.

நன்றி, மறுபடியும்.

தொடர்புடைய நிதர்சன உண்மை: இதுதாண்டா தமிழ் இளைஞன்!

2 Responses to “ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!), விடுதலை (ஐயய்யோ!)”


  1. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னால் வார்த்தைகளை வைத்து சுய இன்பம் செய்து(பெற்று) கொள்கிறார் ஒருவர் கி கி கி :)

    800 பேரில் ஒருவனானன என்னையும் மனிதனாக ம(மி)தித்து ஒரு பதிவா. ஆஹா என்ன பேறு செய்தேன் !! (மற்றபடி அந்த 800 பேருக்கும் வாழவும் உயிர்வாழவும் நீங்கள் உரிமை அளித்ததை என்னி எண்ணி பேருவகைகொண்டுடிரும்பூதெய்துகிறேன்.


  2. […] அனுப்புதல், திட நிலை எரிபொருட்கள், ஆர்ட்வீனோ மூலம் விரைவீக்கத்தையும் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s